எங்கே போகிறது கல்வி..? பகுதி 4

எங்கே போகிறது கல்வி..? பகுதி 4

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி நிறைவுப் பகுதி அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர்க் கூட்டத்தில், பேராசியர் ஹோசிமின் திலகர் அவர்களின் நிகழ்த்திய உரையின் நிறைவுப் பகுதியைப் பார்க்கலாம். அத்தியாயம் : 4 – கல்வியைக் கற்றுத் தரும் முறைமைகள் (Pedagogy): கல்வியைக் கற்றுத் தருவதற்குப் பல்வேறு முறைமைகள் என்பது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்கத் தோன்றியிருக்கின்றன. வரலாற்று ரீதியிலே கல்வி கற்பிக்கப்படும் முறைமைகள் நிறைய இருக்கின்றன. அதைப்பற்றி இந்த அறிக்கையில் விளக்கமாகப் பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை இந்த அறிக்கையை வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. கல்வி என்பது செயல்வழிக் கற்றலாக இருக்க வேண்டும் என்று இந்த அறிக்கை சொல்கிறது. கல்வி என்பது ஒரு குழந்தையை உற்சாகப்படுத்திப் படிக்க வைக்க வேண்டும், அப்படிப்பட்ட சூழலை ஒரு வகுப்பறையும் ஆசிரியரும் ஏற்படுத்த வேண்டும், ஆசிரியர் மாணவர்களை வரவேற்கக்கூடியவராக இருக்க வேண்டும், வகுப்பறை என்பது செயல்வழிக் கற்றல் இடமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் இந்த அறிக்கை விளக்கமாகக் கூறுகிறது. இதைப் படிக்கும்போது மிக மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆகா! மிக அருமையான ஒரு அறிக்கையாக இருக்கிறதே, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதைவிடச் சிறந்த ஒன்றைச் சொல்லமுடியாதே என்ற எண்ணம் தோன்றும்படி இருக்கிறது. அதுபோன்ற கட்டமைப்பு, கற்பித்தல் முறைகளைப் பின்பற்ற சிறப்பான வழிகளைக் கூறுகிறார்கள். ஆனால் இங்கு அடிப்படையாகக் கவனிக்க வேண்டியது, கற்றுத் தருவதற்கு நூறு அல்ல, ஆயிரம் அல்ல, பல்லாயிரக்கணக்கான முறைகளையும் வழிகளையும் ஆசிரியர்களே நாள்தோறும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படிப்பட்ட முறைமைகளையெல்லாம் பின்பற்றினால் மாணவர்கட்கு அறிவைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை ஆசிரியர்களே யோசித்து, பல்வேறு விசயங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அடிப்படையான உண்மை. இந்த அறிக்கையை நாம் வாசித்துப் பார்த்தால் பல்வேறு அம்சங்களை நாம் பார்க்க முடியும். ஆனால் அவர்கள் சொல்வதைத்தான் நாடு முழுவதும் ஒவ்வொரு பள்ளியிலும் பின்பற்ற வேண்டும் என்று இவர்கள் கூறுவதைத்தான் நாம் கொஞ்சம் உற்றுக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா போன்ற ஒரு பரந்து விரிந்த நாட்டில், இத்தனை மாநிலங்கள் இத்தனை மொழிகள் பேசக்கூடிய நாட்டில், இத்தனைக் கலாச்சாரப் பின்னணிகள் உள்ள நாட்டில், இவர்கள் சொல்லக்கூடிய இந்தக் கல்வி முறைமைகளைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று எப்படிக் கூற முடியும் என்பதுதான் இங்கே அடிப்படைக் கேள்வியாக இருக்கிறது. அந்தக் கேள்விக்கும் அவர்கள் ஓரிடத்தில் விடை வைத்திருக்கிறார்கள். என்ன வைத்திருக்கிறார்கள் என்றால், ஆசிரியர்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது, ஆசிரியர்களும் அவர்களாகவே யோசித்து அவர்களாகவே பல விசயங்களைச் செய்ய வேண்டும் என்றுகூடச் சில இடங்களில் குறிப்பிடுவதை நாம் பார்க்க முடியும். ஆசிரியர்கள் பாடல்களின் மூலமாக, விளையாட்டின் மூலமாக, செயல்வழிக் கற்றலின் மூலமாக என்று பல்வேறு முயற்சிகள் வழியாக மாணவர்களுக்கு அறிவைக் கொண்டுபோய்ப் சேர்க்கலாம் என்று பலப்பல யோசனைகளை முன் வைத்திருக்கிறார்கள். இதை ஆசிரியர்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்றெல்லாம்கூடச் சொல்கிறார்கள். ஒரு உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஆசிரியர்கள் போதனா முறையில் என்ன சொல்லித்தர வேண்டும்? மாணவர்களிடம் எப்படிப்பட்ட திறனைக் (Competency) கொண்டுவர வேண்டும்? கல்வி விளைவுகள் (learning outcomes) எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று முன்கூட்டியே ஆசிரியர்கள் யோசித்து, தங்கள் திட்டங்களில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றார்கள். ஆசிரியர்கள் பாடத்தின் இலக்கைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இங்கே ஆசிரியர்கள் வழிகாட்டி சொல்லித் தர வேண்டிய பாடங்கள், மாணவர்களே செய்து பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் என்றெல்லாம் பல வகையாகப் பிரித்துப் பிரித்துச் சொல்லியிருக்கின்றார்கள். இதெல்லாம் படிப்பதற்கு நன்றாகவும் பாராட்டத்தக்கதாகவும்தான் இருக்கின்றன என்பது உண்மை. மற்றொரு இடத்தில் அவர்கள் சொல்வதுபோன்று ஐந்து கட்டங்களாகப் பாடங்கள் சொல்லித்தர வேண்டும். அது அறிமுகம், ஒரு கோட்பாட்டை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், நடைமுறையில் தொடர்புபடுத்துவது, அதை எங்கே கொண்டுசென்று (Application) பயன்படுத்துவது, அதற்கு வெவ்வேறு அம்சங்களில் பொருத்திப் பார்ப்பது, அதை விரிவாக்குவது என்று பல வகைகளிலும் விளக்கங்களை முன் வைத்துள்ளனர். அதேபோல, ஆசிரியர்கள் போதிப்பதில், தான் செய்து காட்டுவதும், ஆசிரியர்களுடன் சேர்ந்து செய்வதும், இறுதியில் மாணவரையே செய்ய வைப்பதும் என்ற வகையில் – I do it , We do it , You do it and you do it alone – பல்வேறு கட்டங்களில் அறிவைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதெல்லாம் குறித்து அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கின்றனர் என்பதெல்லாம் உண்மைதான். ஆக, மாணவர்களுக்குக் கற்கும் பொறுப்பு எப்படியெல்லாம் இருக்கிறது என்று கூறுகின்றனர். ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுடன் உகந்த உறவை வைத்துக்கொள்வதோடு பெற்றோர்களோடும் நல்ல உறவை வளர்த்துக்கொண்டு மாணவர் – பெற்றோர் இருவருடனும் இயைந்து பழகி அவர்கள் மனத்தில் இடம்பெற வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அதேபோல எண்களை அறிவித்தல், எழுத்துகளை அறிவித்தல் குறித்து நாம் அறிவோம். அதில் எழுத்தை அறிவித்தல் என்பதில் Oral language Development, Word Recognition, Reading and writing என்ற நான்கு கட்டங்களாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதேபோல எண்களைக் கற்பிப்பதில் வாய்மொழி வழியாகக் கணக்கைக் கற்றுத் தருவது (Oral Math talk), பல்வேறு செயல்வழிக் கற்றல் வழியாகக் கணக்கைக் கொண்டு சேர்ப்பது, ஒரு குழந்தைக்கு எளிதாகப் புரியக்கூடிய கணக்கிலிருந்து படிப்படியாக சிக்கலான கணக்கு விஷயங்களை எப்படிக் கொண்டு சேர்ப்பது, விளையாட்டு வழியாகக் கணக்கை எடுத்துச் செல்வது (Math game) என அனைத்து வழிகளையும்பற்றிக் கூறியிருப்பது உண்மைதான். இங்கு நமக்கு அடிப்படையான சில கேள்விகள் தோன்றுகின்றன. எண்ணை அறிவித்தலும் எழுத்தை அறிவித்தலும் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்கு மிகமிக அடிப்படையான விஷயங்கள் என்று அறிவோம். Basic Building Block என்று சொல்வார்கள். மிக அடிப்படையான விஷயத்தை, மிகத் திறமையாக, தெளிவாக மாணவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது அடிப்படையான தேவையாக இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதற்கு எத்தனை விதமான கற்பித்தல் முறைகள் இருக்கின்றனவோ அவற்றில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று பலவாறு கூறியுள்ளதும் சரிதான். ஆனால் என்னுடைய கேள்வி, அப்படிப்பட்ட சூழலைத்தான் பள்ளிகளிலே மத்திய, மாநில அரசாங்கங்கள் ஏற்படுத்தித் தந்து இருக்கின்றனவா? எத்தனைப் பள்ளிகளிலே மாணவர்களுடன் உரையாடக்கூடிய நிலையில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்?போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்களே இல்லை, போதுமான எண்ணிக்கையில் பள்ளிகளும் இல்லை. ஒருவேளை அரசுப் பள்ளிகள்தான் இப்படி இருக்கின்றன என்று சொன்னால், தனியார் பள்ளிகள் கட்டணக்கொள்ளை நடத்தக்கூடிய இடங்களாக இருக்கின்றன. இப்படிப்பட்ட அடிப்படைப் பிரச்சனைகளுக்குக்கூடத் தீர்வு கொடுக்காமல், இப்படிப்பட்ட ஒரு அறிக்கையில் நேர்த்தியாக விஷயங்களை விளக்கியிருக்கிறார்களே ஒழிய, இதையெல்லாம் எங்கே போய் இவர்கள் அமல்படுத்தப்போகிறார்கள் என்ற கேள்விதான் நமக்குள் எழுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்பறையில் உரையாட முடியாத வகையில் ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை கொடுத்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் கூடுதலாக ஆசிரியர்களுக்குப் பணிச்சுமையைக் கொடுத்து, எதிர்த்துக் கேள்விகூடக் கேட்க முடியாத நிலையில் வைத்திருக்கின்றார்கள். இதற்கான தீர்வை NEP 2020 எங்கே முன்வைத்துள்ளது? அல்லது NCFFSதான் இதற்கான தீர்வை எங்கே முன்வைத்துள்ளது? இவற்றையெல்லாம் தாண்டி, இன்று ஆசிரியர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள்? ஒரு பள்ளிக்கு நாம் சென்றோமானால் அவர்கள் உட்காருவதற்கு மேசை, நாற்காலிகூடக் கிடையாது. உட்காரக் கூடாது, உட்கார முடியாது. அவர்களுக்கு என்ன பணிக்கப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் மாணவர்களுடன் சேர்ந்து உட்கார வேண்டும். நல்ல விஷயம்தான். மூன்று வயது, நான்கு வயது, ஐந்து வயது வரை மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர் இருப்பது மிக மிக நன்மையான விஷயம், சரியான விஷயம்தான். ஆனால் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு வந்ததற்குப் பிறகு ஆசிரியர் எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போது, அங்கு கரும்பலகை இருக்க வேண்டும், கரும்பலகையில் எழுதிக் கற்பிக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவை. அதற்கு இவர்கள் என்ன தீர்வு வழங்குகின்றார்கள் என்று பார்த்தால், அந்த வகுப்பறையில் கீழே உயரம் குறைந்த இடத்திலே மாணவர்கள் எழுதிப் பார்க்கும் வகையில், கரும்பலகையை அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நாம் காலம் காலமாகப் பார்த்து வருவது என்னவென்றால் ஆசிரியர்தான் எண்களையும் எழுத்துக்களையும் அறிவிப்பவராக இருப்பார். ஆசிரியர்தான் பயிற்சியளிப்பவராக இருப்பார். அப்படி இருக்கும்போது, கரும்பலகை என்பது மாணவர் உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதும் அங்கே மாணவர்களுடன் இணைந்து அமர்ந்து கொண்டு கற்றுத்தர வேண்டும் என்று சொல்வதும் ஆசிரியர்களை எந்தவொரு நிலையில் கொண்டு சென்று வைத்துவிட்டது என்பதைப் பார்க்க வேண்டும். ஆசிரியர் என்பவர் சொல்லித்தரக்கூடிய, கற்றுத்தரக்கூடியவராக இருக்கும் நிலையை மாணவர்கள் பார்க்க வேண்டும். இவர்கள் கூட குரு குரு என்று சொல்கிறார்களே தவிர, அங்கே ஆசிரியரை எண்ணையும் எழுத்தையும் கற்றுத்தரக்கூடியவராக இவர்கள் வைக்கவில்லை. இப்போது நடைமுறையிலிருக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக இவ்வளவு சிரத்தை எடுத்து எண்ணையும் எழுத்தையும் அறிமுகம் செய்தால்கூட, இங்கு ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கே எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியவில்லை. அவர்களால் கணக்குப்போட முடியவில்லை என்ற சூழலைத்தான் உருவாக்கி வைத்துள்ளனர். அப்படி இருக்கும்போது இந்த எண்ணும் எழுத்தும் திட்டம் மிகப்பெரிய தோல்வியில்தான் முடிந்துள்ளது. அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். முதலாவது காரணம், கற்றுத் தரக்கூடிய நிலையில் இருக்கும் ஆசிரியரை மாணவருக்கு நண்பர்களாக ஆக்குவோம் என்ற பெயரிலே ஆசிரியர் நிலையை வைத்தது. மற்றொரு காரணம், முதலாம் வகுப்பிலிருந்தே தேர்ச்சி – தோல்வி என்ற நிலையே இல்லை. இது வந்தபிறகு முதலாம் வகுப்பில் சேர்ந்தவுடன் எட்டாம் வகுப்பு வரை தொடர்ச்சியான தேர்ச்சிதான் என்ற நிலை வந்தபிறகு பள்ளியில் ஒரு சிரத்தையான சூழல் இல்லை. ஆகவேதான் இன்றைய நிலையில் எண்ணையும் எழுத்தையும் அறிவித்தல் என்பது தோல்வியில் முடிந்துள்ளது. இது கடந்த பதினைந்து / இருபது ஆண்டுகளுக்குள்ளாக நடந்துள்ளதேயன்றி அதற்கு முன்பாக இந்நிலை தமிழ்நாட்டில் இல்லை. ஆக, Pedagogy என்று இவர்கள் சொல்லும் கற்றுத்தரும் முறைமைகள் என்பதும் ஒரு பெரிய தோல்வியில்தான் போய் முடிந்திருக்கிறது. மாணவர்களோடு உட்கார்ந்துகொண்டுதான் ஆசிரியர்கள் சொல்லித் தர வேண்டும் என்ற நிலையும் பாடப் புத்தகங்களே வேண்டாம் என்று அறிவிக்கும் நிலையும் அப்படியே பாடப் புத்தகங்கள் இருந்தாலும் அதற்கான பாடத் திட்டத்தை என்.

எங்கே போகிறது கல்வி..? பகுதி 3

எங்கே போகிறது கல்வி..? பகுதி 3

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர் கூட்டத்தில், பேராசியர் ஹோசிமின் திலகர் நிகழ்த்திய உரைத் தொகுப்பின் தொடர்ச்சியைப் பார்க்கலாம். கற்பித்தலைப் பாழாக்கும் எமிஸ் (EMIS – Education Management Information System): அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களது நிலையையும் பார்க்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பல தொடர்ச்சியான பணிச்சுமைகளுக்கு ஆசிரியர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். EMIS (Education Management Information System) என்ற கல்வி மேலாண்மைத் தகவல் முறையைக் கையாளும் நபர்களாக ஆசிரியர்களாக நடத்தப்படுகின்றனர். மாணவர் விபரங்களை நாள்தோறும் சேகரித்து, இந்த EMIS செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இது மட்டுமல்ல, எண்ணிறைந்த பணிகளான, வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, தேர்தல் வந்துவிட்டால் வாக்குச் சீட்டை வீடுவீடாகத் தேடிச்சென்று கொடுத்துக் கையெழுத்து வாங்குவது, முதியோர் கல்வி வளர்ப்பது, இது போதாதென்று இல்லம் தேடிக் கல்வி என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதையெல்லாம் ஆசிரியர்களின் பணிகளாகத் தருகிறார்கள். ஆசிரியர்கள் எந்தவொரு பணியும் இல்லாமல் வெறுமனே அமர்ந்து இருப்பதைப்போல நினைத்து மற்ற பணிகளை எல்லாம் வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் பள்ளிகளில் மாணவர்களைத் தொடர்ச்சியாக நாள்தோறும் சந்திக்கக்கூடிய வாய்ப்பையே இன்றைய ஆசிரியர்கள் பெற முடியாத ஒரு சூழல்தான் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாகப் பள்ளிக்குச் செல்ல விரும்பக்கூடிய ஆசிரியர்கள், மாணவர்கட்குக் கற்றுத் தர ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அங்கே மாணவர்களைத் தொடர்ச்சியாக சென்று பார்ப்பது, அவர்களோடு இருப்பது என்ற நிலையே இல்லாத ஒரு சூழலை உருவாக்கிவிட்டார்கள். இதுதான் இன்று அரசுப் பள்ளிகளிலே நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம் தனியார் பள்ளிகளை எடுத்துக்கொண்டால், அங்கே கடுமையான பணிச்சுமையை ஆசிரியர்களுக்கு வழங்கி, 8 மணி நேரம் என்பதெல்லாம் தாண்டி, 10 மணி நேரம், 12 மணி நேரம் என்று பள்ளிகளிலேயே இருந்து அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு மிகவும் களைப்பாக வீடுகளுக்குச் செல்லும் நிலைமையில், எந்தவிதமான பணிச்சுமை குறித்தும் கேள்வி கேட்க முடியாமல் ஒரு அடிமை நிலையில்தான் ஆசிரியர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஆசிரியர்களைப் பற்றியோ அவர்கள் பணிச்சூழல் பற்றியோ தேசிய கல்விக் கொள்கை 2020 ஆவணமோ அல்லது NCFFS ஆவணமோ வாயே திறக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த ஆவணத்தின் அனைத்து அம்சங்களையும் தொடர்ச்சியாக வாசித்தால் ஆங்கிலத்தில் Rosy Picture என்று ஒன்றைச் சொல்வார்கள். அதாவது மிகவும் அருமையாகப் படம் காட்டுவது. அதுபோலத்தான் இவர்களும் ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர்களுக்கு என்னவெல்லாம் வசதி வாய்ப்புகள் இருக்க வேண்டும்? இதையெல்லாம் தாண்டி மாணவர்களுக்கு எப்படியெல்லாம் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்? என்று மிகவும் அழகான காட்சியை இந்த ஆவணத்தில் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் அரசுப் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பார்த்தோமானால் அங்கே அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் மாணவர்கள் தத்தளித்துக்கொண்டிருப்பதும் கடுமையான பணிச் சுமையில் ஆசிரியர்கள் வைக்கப்பட்டிருப்பதும் அப்படியே நேர் எதிரான ஒரு நிலையை – கிட்டத்தட்ட அடிமைத்தனமான ஒரு நிலையை அங்கே நாம் காணமுடிகிறது. இதைப்பற்றியெல்லாம் இந்த அறிக்கைகள் வாயைத் திறக்க மறுப்பது ஏன் என்ற கேள்விதான் இங்கு எழுகிறது. மொழிக் கொள்கை: மொழிக்கல்வி குறித்து NCFFS என்ன கூற வருகிறது மற்றும் மாணவர்களுக்கு எண்களைக் அறிவித்தல் குறித்தும் எழுத்தை அறிவித்தல் குறித்தும் எப்படிப்பட்ட இலக்கை அது நிர்ணயித்திருக்கிறது என்பதை அடுத்து காணலாம். இங்கு ஏற்கனவே நம்மிடையே அறிமுக உரையாற்றிய பேராசிரியர் சிவக்குமார் அவர்கள், இந்த ஆவணத்தில் கூறப்பட்டிருக்கும் L1, L2, L3 குறித்துப் பேசினார். அதென்ன L1 , L2, L3? ஒரு குழந்தை, தான் வாழக்கூடிய வீட்டில் தனது பெற்றோர்கள் எந்த மொழியைப் பேசுகிறார்களோ அதைத்தான் அவர்கள் L1 என்று கூறுகிறார்கள். அதைத்தான் வீட்டு மொழி (Home Language) அல்லது தாய் மொழி (Mother tongue) அல்லது Familiar Language என்று சொல்கிறார்கள். இங்கே ஒரு உதாரணத்திற்காக, வீட்டிலே பேசுவதைத் தாய்மொழி என்று வைத்துக்கொண்டால், அதையே அவர்கள் L1 என்கின்றனர். பிறகு ஏன் அதை Home Language என்று சொல்ல வேண்டும்? அல்லது Familiar Language என்று சொல்ல வேண்டும்? என்று அதை நாமாகச் சற்று யூகித்துத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை அவர்கள் வேற்று மாநிலத்திலிருந்து வந்து பிறிதொரு மாநிலத்தில் வாழக்கூடியச் சூழலிலே, அங்கே அந்தத் தாய்மொழியை எழுத்து வடிவிலோ அல்லது வாசித்தல், எழுதுதல் போன்ற விஷயங்களைச் செய்யமுடியாத ஒரு சூழலிலே, அந்த மொழி என்பது அங்கே வீட்டில் பேச்சில் வழங்கக்கூடிய மொழியாக மட்டும்தான் இருக்கிறது. ஆனால் பள்ளிக்குச் சென்றால் அந்த மொழி என்பது அங்கே இருக்காது. இது வேற்று மாநிலங்களிலிருந்து வந்து ஒரு மாநிலத்தில் குடியேறியவர்களின் நிலையாக இருக்கும் என்று யூகிக்கத் தோன்றுகிறது. இதைத்தான் அவர்கள் L1 என்று சொல்கிறார்கள். ஆகவே L1 என்ற, வீட்டில் பேசப்படும் இந்த மொழியை மாணவர்களுக்கு உகந்த மொழியாக அறிவித்து, அந்த வகையிலே பள்ளிகளில் அந்த மொழியைப் பிரதானமாக சொல்லித் தரவும் அதன்மூலமாக மற்ற பாடங்களை மாணவர்களுக்குப் போதிக்கவும், அதாவது பயிற்று மொழியாக L1 என்ற அந்த மொழியைப் பயன்படுத்தவும் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு L1 மொழியைப் பாடங்களைச் சொல்லித்தரக்கூடிய மொழியாகக் கூறுகிறார்கள். அடிப்படையில் தர்க்கரீதியாக இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கிறது. அடுத்து L2, L3 என்று சொல்லக்கூடிய மொழிகளைப்பற்றி எடுத்துக்கொண்டால், மாணவர்கள் ஒரே நேரத்தில் தாய் மொழியையோ வீட்டிலே வழங்கப்படும் மொழியையோ பள்ளிகளில் கற்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி, அங்கே கற்க வேண்டும் என்று முதலாவதாகக் கூறிவிட்டு, இரண்டாவதாக, ஒரு குழந்தை – அதாவது முதல் வயதிலிருந்து எட்டு வயது வரை அதிகப்படியான மொழிகளைக் கற்றுத் தேறக்கூடிய வாய்ப்பை அக்குழந்தையினுடைய மூளையின் வளர்ச்சி வழங்குகிறது என்று கூறுகிறார்கள். தர்க்கரீதியில் யோசித்துப் பார்த்தால் உண்மைதான். ஆரம்பக் காலகட்டத்தில், ஒரு குழந்தை தனது எட்டு வயது வரை பல மொழிகளைக் கற்கக்கூடிய மிகச் சிறந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. அத்தகைய மூளை வளர்ச்சி அங்கே நடக்கிறது என்பது விஞ்ஞான ரீதியில் உண்மையாக இருக்கலாம். ஆனால் இங்கு எழக்கூடிய கேள்வி என்னவென்றால், அதற்காக நடைமுறையில் ஒரு குழந்தையால் எத்தனை மொழிகளைக் கற்க முடியும்? ஒரு குழந்தையைச் சுற்றி எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன என்பதுதான் அடிப்படைக் கேள்வியாக இருக்கிறது. ஒரு குழந்தையைச் சுற்றி அக்குழந்தை தெரிந்துகொள்வதற்காக இயற்கையாக அத்தனை மொழிகள் பேசப்படுகின்றனவா? அது இல்லை என்று சொன்னால், வகுப்பறையிலே இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி, நான்கு, ஐந்து என்று பல மொழிகளை போதனையின் மூலம் சொல்லித் தர முடியுமா என்றால், நடைமுறையில் அதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன. இவர்களே பல இடங்களில் இந்த ஆவணத்தில் கூறுவதுபோல, ஒரு குழந்தை இயற்கையாகத்தான் மொழிகளைக் கற்றுக்கொள்ளும். குழந்தையின் மூளை வளர்ச்சி என்பது ஒன்று முதல் எட்டு வயது வரை படுவேகமாக இருந்தாலும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறன் இயற்கையான முறையில்தான் நடக்கும் என அவர்களே கூறிவிட்டு, ஆனால் பள்ளிகளில் இரண்டாவது மொழி, மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவர்கள் சொல்வது அவர்களுடைய தர்கத்திற்கே புறம்பாகச் செல்வதைக் காட்டுகிறது. ஆகவே, ஒரு குழந்தை இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி எல்லாம் கற்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று பார்த்தால் தர்க்கரீதியில் அது இல்லை என்பதே பதில். ஏனென்றால் அது இயற்கையாக நடக்க வேண்டும். அப்படி என்றால் ஒரு குழந்தை வேறு மொழிகளே கற்றுக்கொள்ளக்கூடாது என்று நாம் சொல்கிறோமா? நிச்சயமாகக் கிடையாது. ஒரு குழந்தை, வாய்ப்பு இருந்தால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் கற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவது – இயற்கைச் சூழலுக்கு மாறாக நடந்துகொள்வது என்பதைத்தான் நாம் மறுக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, ஒரு குழந்தை எதார்த்தமாகத் தனது தாய் மொழியை தன் வழக்கத்திலிருக்கக்கூடிய மொழியைக் கற்றுக்கொள்வது, அதன்மூலமாகப் பிற அறிவைப் பெறுவது என்பதுதான் எதார்த்தமாக இருக்க முடியும். இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி என்பதெல்லாம் அந்தக் குழந்தைக்கு அந்த வயதில் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு வர வேண்டுமா என்றால், தேவையில்லை என்பதே நாம் கூற வருவது. ஒரு குழந்தைக்கு ஆறு வயதுக்குப் பின்னர், தாய்மொழி மட்டுமல்லாது பிறிதொரு மொழியையும் சொல்லித் தரக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்பதை நாம் கூறுகிறோம். இதே புத்தகத்திலே L 1, L 2, L 3 என்று கூறிவிட்டு, பிறிதொரு இடத்தில் R 1, R 2, R 3 என்று கூறுகிறார்கள். இவற்றுக்கிடையில் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது. எந்த மொழியை வீட்டில் வழங்குகிறார்களோ அந்த மொழியை ட1 என்று வைத்துக் கொண்டால், அந்த மொழியை ஒரு குழந்தை எழுத்து வடிவிலோ அல்லது வாசிப்பதிலோ கற்க முடிந்தால் அதை R1 என்கின்றனர். R என்றால் இங்கே Read and Write என்று குறிப்பிடுகிறார்கள். எனவே எந்த மொழியில் பேசுகிறதோ அதை எழுத்து வடிவில் எழுதினாலும் படித்தாலும் அதை R1, R2, R3 என்று சொல்கிறார்கள். ஆகவே L1, L2, L3 என்பதும் R1, R2, R3 என்பதும் ஒன்றுதான். ஆனால் ஒரு சில நேரங்களில் வீட்டில் பேசக்கூடிய மொழி ஒன்றாகவும் பள்ளிகளில் சென்று படிக்கக் கூடிய மொழி வேறாகவும் இருக்கலாம். வேற்று மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து பிறிதொரு மாநிலத்தில் வசிப்பவராக இருந்தால் அவர்களுடைய குழந்தைகளுக்கு அந்தச் சூழல் ஏற்படலாம். இப்போது மற்றொரு விசயத்தையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. என்னவென்றால், ஒரு குழந்தை வீட்டில் பேசக்கூடிய L1 மொழி, அது தாய்மொழியாக இருக்கும் பட்சத்தில், அந்தத் தாய் மொழியில் நல்ல பயிற்சியைப் பெற்றுவிட்ட பின்பு, L2 L3 என்ற அடுத்தடுத்த மொழிகளையும் அந்தக் குழந்தை கற்றுத் தேர்ச்சி பெற பள்ளி வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரு வாதத்திற்காக அது சரி என்று நாம் வைத்துக்கொண்டால்கூட, இங்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்று பார்த்தால், L2 அல்லது

எங்கே போகிறது கல்வி?  பகுதி 2

எங்கே போகிறது கல்வி? பகுதி 2

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி (நேற்றைய முதல் பகுதியின் தொடர்ச்சி) ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை அமுல்படுத்துகிற அபாயமான நடவடிக்கைகள் குறித்து, அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி நடத்திய இரண்டாவது விழிப்புணர்வுக் கூட்டம் குறித்த கட்டுரைத் தொகுப்பு இது. அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர் கூட்டத்தில், பேராசிரியர் சிவகுமார் ஆற்றிய உரையை முந்தைய பகுதியில் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக பேராசியர் ஹோசிமின் திலகர் அவர்கள் நிகழ்த்திய உரையின் தொகுப்பைப் பார்க்கலாம். அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு சிறப்புரை: பேரா. சீ. ஹோசிமின் திலகர் நமது அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் சார்பாக NEP 2020இன் முன்மொழிவாக இருக்கக்கூடிய, அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற ஆவணத்தைப் பற்றிய ஆய்வின் இரண்டாவது கூட்டத்தில் இணைந்திருக்கிறோம். இதில் மொழிக்கல்வி குறித்த அணுகுமுறையும் கல்வி அறிவும் (அத்தியாயம்-3), பாடத்திட்ட முறைமை (அத்தியாயம்- 4) ஆகியவை குறித்து எனது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புத் தந்தமைக்கு மிக்க நன்றி. முதல் இரண்டு அத்தியாயங்களின் சாராம்சம்: இந்தியாவின் பாரம்பரியத்தையும் இந்தியாவின் அரசியல் சாசன மதிப்புகளையும் அதனுடைய அடிப்படைக் கடமைகளையும் பெறக்கூடிய வகையில், ஒரு சிறந்த கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்கான நோக்கத்தை NEP 2020 கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்துவதற்காக ECCE – அதாவது, குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு எப்படிப்பட்ட கல்வியை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF) குறிப்பாகச் சொல்லவருவது இந்தியப் பாரம்பரியத்தில் கல்வி வேர் விட்டுள்ளது (It is rootedness in Indian traditions) என்பதாகும். அதாவது, முன்பருவ மழலையர் கல்வியானது இந்தியாவின் பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு குழந்தை, கல்வி பெறும் போக்கில் அடையும் வளர்ச்சியில் அந்தக் குழந்தைக்கு உள்ளேயும் வெளியேயும் எப்படிப்பட்ட ஆழமான இந்தியக் கருத்தாக்கத்தைத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஒருபுறம் இந்தியப் பாரம்பரியத்தைப் பேசும் இந்த NCFFS ஆவணம், மறுபுறம் குழந்தையின் உள்ளேயும் வெளியேயும் இந்தியாவின் கருத்தாக்கம், இந்தியாவின் பார்வை குழந்தைக்குள் செல்ல வேண்டும் என்று விரும்புகிறது. இங்கேதான் அடிப்படையான ஒரு கேள்வி எழுகிறது. கல்வியின் நோக்கம் என்பது முதலில் எழுத்தை அறிவித்தல், எண்களை அறிவித்தலில் தொடங்க வேண்டும் என்பதை அறிவோம். ஆனால், இந்தியாவின் பாரம்பரியத்தையும் இந்தியாவின் பார்வை, அதனுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், இந்தியா எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதையெல்லாம், ஒரு குழந்தை தனக்கு உள்ளேயும் வெளியேயும் பார்க்க வேண்டும் என்று சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அத்தியாயம் : 3 – மொழிக்கல்வி குறித்த அணுகுமுறையும் கல்வி அறிவும் தேசிய கல்விக் கொள்கை 2020 குழந்தைப் பருவக் கல்வியில் இரண்டு கட்டங்கள் அமைய வேண்டும் என்று கூறுகிறது. முதலில் 3 வயது முதல் 6 வயது வரை ஒரு கட்டமாகவும் பிறகு 6 வயது முதல் எட்டு வயது வரை மற்றொரு கட்டமாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. உலகில் எந்தவொரு நாட்டிலும் மூன்று வயதில் கல்வி என்பது கட்டாயமாக இருக்க வேண்டும் என்று எந்தவொரு கல்வி அமைப்பும் கூறியதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், முதன்முதலாக இந்தியாவில், தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரிலே மூன்று வயதுக் குழந்தை கல்வி அமைப்புக்குள் வர வேண்டும் என்று ஒரு கல்விக் கொள்கை கூறியிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர்கள் ECCE-இல் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னால், அங்கன்வாடிகள் அல்லது பால்வாடிகள் அல்லது முன் பருவ மழலையர் கல்வி (Pre-schools) என்று வரையறுக்கிறார்கள். அதாவது 3 வயது முதல் 6 வயது வரை நிச்சயமாக ஒரு குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஏற்கனவே அங்கன்வாடிகளும் பால்வாடிகளும் நம் நாடு முழுவதும் இருக்கின்றன. இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதைக் கல்வி அமைப்புக்குள் வரையறுப்பதுதான் இங்கே புதிதாக இருக்கிறது. அதுதான் இங்கே பல நெருடல்களை ஏற்படுத்துகிறது. ஆரம்பகாலக் கல்வி இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் இந்த அறிக்கை, ஒரு குழந்தை ஆறு வயது முடிந்த பிறகுதான் முதலாவது வகுப்பு செல்ல வேண்டும் என்று NCFFS வரையறுக்கிறது. ஆறிலிருந்து ஏழு வயது வரை முதலாம் வகுப்பும் ஏழு வயது முதல் எட்டு வயது வரை இரண்டாம் வகுப்பு என்று அது வரையறுத்துள்ளது. இப்போது இன்னொரு கேள்வி எழுகிறது. ஒரு குழந்தை மூன்று வயது முதல் ஆறு வயது வரை படிக்காமல் விட்டுவிட்டால், அதாவது அங்கன்வாடிக்குச் செல்லாமல் இருந்துவிட்டால் என்ன நேரும் என்பதற்கு இந்த அறிக்கையில் எந்த பதிலும் கிடையாது. நாம் யூகித்துதான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிகிறது. ஒருவேளை அதுபோன்று ஒரு குழந்தை 3 வயது முதல் 6 வயது வரை அங்கன்வாடிப் பள்ளிகளுக்குச் செல்லாமல் விட்டுவிட்டால் நேரடியாக, ஆறு வயதுக்குப் பின்பாக முதலாம் வகுப்பில்தான் சேர முடியும் என்று தோன்றுகிறது. இதுவும் மிகவும் ஒரு புதிரான விஷயம்தான். ஏனெனில், ஒரு பெற்றோரோ ஒரு குழந்தையோ பள்ளிக்கு முன்பருவக் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். குழந்தை தீர்மானிக்க முடியாவிட்டாலும்கூட, அதன் பெற்றோருக்குத்தான் தீர்மானிக்கும் பொறுப்பை வழங்க வேண்டும். அப்படியிருக்கும்போது, நிச்சயமாக மூன்று வயதிலே சேர்த்தே ஆக வேண்டும் என்பதெல்லாம் மிகவும் வேடிக்கையாகவும் புதிராகவும் இருக்கிறது. மேலும் அதைக் கட்டாயப்படுத்துவதென்பது, மிகவும் ஒரு ஆரோக்கியமற்ற போக்காக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இப்போது ECCE குறித்து நாம் மேலும் ஆழமாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் பள்ளிகளின் நிலையும் கல்வியின் நிலையும் மாணவர்கள் நிலையும் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். அரசுப் பள்ளிகள் மூடலும் வேகமெடுக்கும் தனியார்மயமும் தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை 58,897ஆக இருக்கிறது. இதில் 35,621 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும் 9392 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் 5788 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 8,096 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை 24,310 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் 7,024, அதே போல உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 3,135 ஆக இருக்கின்றன. 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 பள்ளிகள் இருக்கின்றன. தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என்று மொத்தம் 12,382 பள்ளிகள் இருக்கின்றன. அதேபோன்று அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று பார்த்தால், தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி மேல்நிலைப் பள்ளிகள் வரை 8,328 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆசிரியர்கள் விபரங்களைப் பார்தோமானால், 5.6 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 2.27 லட்சம் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளிலும் 77 ஆயிரம் ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 2.53 லட்சம் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். மற்ற பிரிவுகளில் 4,552 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மொத்தம் 37,579 பள்ளிகளில், அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்கள்தான் பணிபுரிகின்றனர். ஆனால் 12, 382 தனியார் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதை எதைக் காட்டுகிறது என்று சொன்னால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்கிறது. ஆனால் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாக இருக்கிறது. அடுத்ததாக, கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு மேலாக, தேசிய கல்விக் கொள்கை 1986 நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பின்னால் – அதற்கு முன்பாகவும் தனியார் பள்ளிகள் வளர்ந்து வந்தாலும் – தமிழ்நாட்டில் பள்ளிகள் தனியார்மயம் என்பது படுவேகமாக நடந்திருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாணவ மாணவிகளைப் பொறுத்தவரை ஒரு கணக்கெடுப்பு செய்தால், அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவர்கள் பயில்கின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 22,25,308 மாணவர்களும் தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவர்களும் மற்ற பள்ளிகளில் 83,755 மாணவர்களும் படிக்கின்றனர். 35,579 பள்ளிகள் கொண்ட அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவர்கள்தான் பயில்கின்றனர். ஆனால், வெறும் 12,382 எண்ணிக்கையே உள்ள தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவர்கள் பயில்கின்றனர். (புள்ளி விவரங்கள் உதவி: 2022 மே மாதம் 28 அன்று தினமணியில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை, முன்னாள் கல்வி அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன் எழுதியது). இது மீண்டும் எதைக் காட்டுகிறது என்றால், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவது மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் கடுமையாகக் குறைந்துள்ளது. பள்ளிகளில் தனியார்மயம் என்பது மிக வேகமாக நடைபெறுகிறது. கல்வியை மறுக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009 இப்போது சில அடிப்படையான கேள்விகள் நம் முன் எழுகின்றன. அவை என்னவென்றால், நாம் தேசிய கல்விக் கொள்கை 1986ஐ எடுத்துப் பார்த்தாலும் சரி, தேசிய கல்விக் கொள்கை 2020ஐ எடுத்துப் பார்த்தாலும் சரி, சமுதாயத்தில் வாழும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கல்வி உரிமைச் சட்டம் 2009, 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கூறியதை நாம் அறிவோம். அது உண்மையென்று சொன்னால், அரசுப் பள்ளிகளின் நிலை ஏன் இப்படிச் செல்கிறது? அரசுப் பள்ளிகளிலிருந்து விலகி, தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் ஏன் செல்கின்றனர் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடவேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக அனைவருக்குமான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE-2009) என்ன சொல்கிறது என்றால், அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் போய்ச் சேர்ந்து கொள்ளலாம். தனியார் பள்ளிகளின் மொத்த மாணவர்களில் 25% மாணவர்கள் இதுபோல் சேர்ந்து படிக்க அரசே முன்வந்து வாய்ப்பளிக்கும். அவர்கள் கட்டவேண்டிய கல்விக் கட்டணத்தையும் அரசே கட்டும் எனச் சொல்கிறது. இந்தக் கல்வி உரிமைச் சட்டம் குறித்தும் 25% தனியார் பள்ளிச் சேர்க்கைக்கு அரசாங்கமே நிதி வழங்குவது குறித்தும் SRM கல்வி நிறுவன மாணவர்

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் CBSE

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் CBSE

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை இன்னமும் அறிவிக்கவில்லை. தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்ட அமைப்பின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு, 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கான  பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதமே வெளியிடப்பட்டுவிட்டன. 11 ஆம் வகுப்புக்கான சேர்க்கை முடிந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுகள் பெறப்பட்டு கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி சேர்க்கைக்காகக் காத்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலான தனியார்  கல்லூரியில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முதல் பட்டியல், இரண்டாம் பட்டியல் என மாணவர்களுக்கான சேர்க்கைப் பட்டியல்களும் வெளிவந்து கொண்டுள்ளன. உண்மையில் பெரும்பாலான கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்துவிட்டதாகவே தகவல்கள் வருகின்றன. ஆனால், இன்னமும் தேர்வு முடிவுகள் வெளியாகாத இந்தச் சூழலில், ‘எங்கள் குழந்தைகளுக்குக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா?’ என CBSE பள்ளிகளில் படித்த குழந்தைகளின் பெற்றோர்கள் கவலையுடன் கேட்கின்றனர்.  மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக அவர்களது ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்ல, பெரும்பாலான  CBSE பள்ளிகளில் பத்தாம் வகுப்புத்  தேர்வு முடிவுகள் வராமலேயே, பதினொன்றாம் வகுப்புப் பாடங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் சில பள்ளிகளில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு இடைத்தேர்வுகூட நடத்தி முடிக்கப்பட்டதுவிட்டது என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு இரண்டுக்குமே MCQ (Multiple Choice Questions) என்றழைக்கப்படும்  கொள்குறிவகைத் தேர்வில் எடுத்த முடிவுகளை மட்டும் பிரிண்ட் அவுட் எடுத்து  பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.  சிபிஎஸ்சி பள்ளிகளைப்  பொறுத்தவரை, இருபருவங்களாக நடத்தப்பட்ட பொதுத் தேர்வுகளில், முதல் பருவத்தின் இந்தத் தேர்வு முடிவுகளை வைத்து பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையை நடத்தி உள்ளனர். மாணவர்களுக்கான பாடப் பிரிவுகளையும் பெற்றோர்களிடம் பேசி அவர்களாகவே தெரிவு செய்து 11 ஆம் வகுப்பு சேர்க்கை முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாநில அரசுப் பாடத்திட்டத்திற்கான  தேர்வு விடைத்தாட்கள்  திருத்தும் பணி, ஜூன் முதல் வாரத்தில்  முடிந்து தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டுவிட்டன. ஆனால் மத்திய  இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் வரக்கூடிய சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான விடைத்தாட்கள் திருத்தும் பணி ஜூன் 5 ஆம் தேதியே முடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், எதற்காகத் தேர்ச்சி முடிவுகளை இன்னும் வெளியிடாமல் இருக்கின்றனர் என்ற கேள்வி, ஆசிரியர் மற்றும் பெற்றோர் தரப்புகளிலிருந்து வருகின்றன.  கொரோனா காலத்தில் கடந்த இரண்டு கல்வியாண்டுகளும் மாணவர்களுக்கு முறையான கல்வி கிட்டாத சூழல் நிலவியது. ஆனால், தற்போது எல்லா இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்தச் சூழலில் மாணவர்கள் சரியான காலத்தில் உயர் வகுப்புகளுக்குச் சென்று முறையான கல்வியைத் தொடர வேண்டிய அவசியம் உண்டல்லவா? அதை முறைப்படி செயல்படுத்த வேண்டிய கடமை அரசுகளுக்கும் அரசு சார்பு அமைப்புகளுக்கும் உண்டல்லவா? ஆனால் இதுவரை, ஒன்றிய அரசோ, மாநில அரசோ, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளோ இது குறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. நம் நாட்டில் கல்வியில் சமமின்மை நிலவுவது குறித்து நாம் நன்கறிவோம். குறிப்பாக நம்  தமிழகத்தில், மாநிலப் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என்று பல்வேறு வகையான, பாடத்திட்டங்கள் சார்ந்தும் கட்டமைப்பு சார்ந்தும் வேறுபட்ட மன நிலையை உருவாக்கக்கூடிய கல்விச் சூழலே அதிகரித்து வருகிறது. இங்கு சமத்துவம் பேசுகிறோம்; சமமான கல்வி என்று கூறுகிறோம்; வாய்ப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் என்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கிடையே கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வு, பொருளாதாரம் சார்ந்த வியாபாரமாகப் பல வருடங்களாகத் தொடர்ந்து வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெருகிவிட்ட அண்மைக் காலங்களில், கல்விச் சூழலில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. அதிகப் பணம் செலவழித்துப் படிக்கவைக்கக் கூடிய பள்ளிகள்தான் தரத்தில் உயர்ந்த பள்ளிகள் என்ற மனப்போக்கும் நிலவுகிறது. அதன் அடிப்படையிலேயே பத்தாண்டுகள் முன்பு வரை கோலோச்சிய பெரும்பாலான மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சமச்சீர் கல்வி முறை வந்தபிறகு,  தங்களை மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ள, CBSE பள்ளிகளாக மாறின. இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத சூழலில் இப்பள்ளிகள் CBSE அமைப்புக்கு எதிராக எந்தக் குரலும் எழுப்பாமல், மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலை ஏதும் இல்லாமல் மௌனமாக உள்ளனர். தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், உடனடியாக, மாணவர்கள் நலனைப் பொருட்படுத்தாமல், சட்டத்துக்குப் புறம்பாக வேலை நிறுத்தம் அறிவிக்கும் தனியார் பள்ளிகள், மாணவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் CBSE-ஐ எதிர்த்துப் போராட்டம் நடத்தாது ஏன்? ஒரே மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் தேர்ச்சி முடிவுகள் வரப்பெற்று உயர் வகுப்புகளுக்குச் சென்றுவிட்ட சூழலில், சக வகுப்பு சிபிஎஸ்இ பள்ளிக் குழந்தைகளை இன்னமும் தேர்வு முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழலில் வைத்திருப்பது, மாணவர்கள் எதிர்காலத்தையும் மனநிலையையும் பாதிக்கும், பாழாக்கும் செயலாகும். எந்தக் கல்வி முறையில் பயின்றாலும், பயிலும் மாணவர்கள் அனைவரும் நமது குழந்தைகளே. இங்குள்ள கல்வி மற்றும் மனித வளத்துறைகள் இது குறித்து உரையாடல் நடத்தி இருக்க வேண்டும். சிபிஎஸ்இ-இடம் உரிய விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. மாறாக, CBSE அமைப்பு தேர்வு முடிவுகளை வெளியிடும்வரை, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கச் சொல்வது என்ன நிர்வாக முறை? என்பது விளங்கவில்லை. மாநில அரசு எப்போது உறக்கம் கலைக்கும்? இந்தச் சூழலிலாவது, நம் குழந்தைகளுக்கு ஏற்ற பள்ளிகள் அரசுப் பள்ளிகள், ஏற்ற பாடத்திட்டம் மாநிலப் பாடத்திட்டம் என்ற புரிதல் பெற்றோர்களிடம் உருவாக வேண்டும். கல்வி என்பது நம் குழந்தைகளின் அடிப்படை உரிமை. அதை  ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் கேட்டுப் பெற வேண்டியது நம் கடமை. நாம் தொடர்ந்து வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வர வேண்டும். கல்வி உள்ளூர் வளம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கல்வி கற்பார்கள். தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, அலங்கார முகமூடிக்கு ஆசைப்பட்டு CBSE பின்னால் ஓடினால், நமது குழந்தைகளின் கல்வியும் எதிர்காலமும்தான் பாழாகும் என்பதைப் பெற்றோர்களும் இந்த அரசும் உணர வேண்டும். கல்வி முதலாளிகள் தங்கள் மேட்டிமை மனப்பான்மையை மாற்றிக்கொண்டு மாநிலப் பாடத்திட்டத்திற்குத் திரும்ப வேண்டும். ஏனெனில், நுகர்வோர் உரிமைச் சட்டப்படி, ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனமும் மாணவர்களின் கல்விக்குப் பொறுப்பேற்க வேண்டியது கட்டாயம். பெற்றுக்கொண்ட பயணத்துக்கு உரிய சேவை வழங்காவிட்டால் அந்தந்தக் கல்வி நிறுவனங்கள்தான் குற்றவாளிகள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழக அரசும் மெத்தனப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு CBSE பள்ளிகளில் படித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும். உமா மகேஸ்வரி, கல்வியாளர்

ஆசிரியர்களிடம் 10 கேள்விகள்

ஆசிரியர்களிடம் 10 கேள்விகள்

ஆசிரியர் தினம் என்றால் எனக்கு சில ஆசிரியர்களை ஞாபகம் வருகிறது. முதல் வகுப்பெடுத்த கீதா டீச்சரையும் மூன்றாம் வகுப்பு எடுத்த விஜயா டீச்சரையும் ஐந்தாம் வகுப்பு எடுத்த ஞானவேல் ஐயாவையும் என்றுமே மறக்க முடியாது. மஞ்சள் தேய்த்துக் குளித்த முகத்தோடு வருவார் கீதா டீச்சர். நெற்றி வகுட்டில் நீண்டிருக்கும் குங்குமம். எடுப்பான ஏதாவது ஒரு வண்ணத்தில் சேலையுடுத்தியிருப்பார். விஜயா டீச்சர் தெத்துப்பல்லுடையவர். அவர் சிரிக்கும்போது காற்றில் புளியம்பூக்கள் உதிர்வது போலிருக்கும். இன்றும்கூட பாண்ட்ஸ் பவுடரின் வாசத்தை நுகரும்போதெல்லாம் அவருடைய பிம்பம் நினைவுக்கு வந்துவிடும். அதுபோலவே ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஓவிய டீச்சராக பணிபுரிந்தவரையும் (அவர் என் அப்பாவுடன் படித்த சக தோழி)மீனா டீச்சராக பணிபுரிந்த சமூக அறிவியல் ஆசிரியையும் மறக்கமுடியாது. இந்த மீனா டீச்சர் தான் இதற்கு முன்பாக “ஜெயப்பிரதா டீச்சர் போய்க் கொண்டிருக்கிறார்” எனும் என்னுடைய கவிதையில் பிரதிபலித்தார். மேலே விடுபட்ட நான்காம் வகுப்பெடுத்த அல்போன்ஸ் டீச்சர் மிகவும் பிரபல்யமானவர். எங்கள் ஊரில் அவர் எல்லோருக்கும் பரிச்சயமானவர். தேர்தல் நேரத்திலும் வருடத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் ஒவ்வொரு வீடாகக் கணக்கெடுக்க வருவதால் எல்லாருடைய வீடும், ஆட்களும் மிகப் பரிட்சயம். ஞானவேல் ஐயாவும் அப்படித்தான் அவருக்கும் எனக்கும் உள்ள உறவை எழுத இப்பதிவு போதாது. ஒன்பதாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்ட எனக்கு ஃபேஸ்புக் வழியே பல ஆசிரியர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். செப்டம்பர் 5, ஆசிரியர் தினத்தில் நான் எதையாவது செய்ய வேண்டும் அல்லது அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்படித் தோன்றியதுதான் இந்தப் பேட்டி. ஆசிரியப் பணியில் இருக்கும் மூவரிடம் ஒரே மாதிரியான பத்துக் கேள்விகளை முன்வைத்தேன். அதற்கு அவர்கள் தந்த பதில்கள் இதோ: முதலாவதாக திருமதி. கமலவள்ளி சுப்பிரமணியம் (எம்.ஏ.பி. எட்) அவர்கள். பணியிடம்: ஞானாம்பிகா உதவி தொடக்கப்பள்ளி. கருப்பம்புலம் வடகாடு, வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம். பணி அனுபவம்: 29 ஆண்டுகள். இந்தக் கொரோனோ காலத்திலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு வீடு வீடாகச் சென்று மாணவர்களின் நலனுக்காக பல நல்லுதவிகளைப் புரிந்தவர். லாக்டவுன் தீவிரமான காலத்தில் தன்னுடைய சம்பளத்தை, சுயநலமின்றி ஏழை மாணாக்கர்களின் குடும்பத்திற்காகச் செலவு செய்தவர். இவருக்கெல்லாம் நல்லாசிரியர் விருது கிடைத்ததா என்று தெரியவில்லை. கிடைக்கவில்லை என்றால் உடனடியாக அரசு கொடுக்க வேண்டும். இனி அவரிடம் பத்துக் கேள்விகளும் அவரது பதில்களும்: 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? நான் பணியேற்றதே மறக்க இயலா நிகழ்வுதான். 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? என்னை வியக்க வைத்த மாணவர் சோமசுந்தரம் மகாலிங்கம். தொடக்கப்பள்ளியை விட்டு சென்றதும் அவருடன் அதிகம் தொடர்பில்லை. கஜா புயல் பாதிப்பின் பொழுது என்னை மெஜஞ்சரில் தொடர்பு கொண்டு பள்ளி பாதிப்பைச் சரி செய்ய 60000 ரூபாய் அனுப்பினார். பேருதவி அது. 3. ஆசிரியப் பணியால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன? அடைந்தது நிறைய. இழந்தது ஏதுமில்லை. 4. என்றாவது இந்த வேலை போதுமென நினைத்திருக்கிறீர்களா? அப்படி நினைத்ததில்லை. ஆனா, ‘இந்தப் பணி கிடைக்காதிருந்தால் என்னவாகி இருப்பேன்?’ என யோசித்திருக்கிறேன். பணி ஓய்வை மனம் எப்படி எதிர்கொள்ளும் என யோசித்திருக்கிறேன். 5. இவ்வேலைக்கு வரவில்லையெனில் வேறு என்ன வேலைக்குச் சென்றிருப்பீர்கள்? தெரியவில்லை. காலத்திடம் கேட்க வேண்டிய கேள்வி. 6. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியராக மாறிவிடும் நீங்கள் வீட்டில் எவ்வாறு இருப்பீர்கள்? வீட்டில் இல்லத்தரசி. பள்ளி எப்படியோ, வீடும் அப்படித்தான். 7. சக ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ நீங்கள் முன்மாதிரியாக  இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடமிருந்து  இன்னும் கற்றுக் கொள்கிறீர்களா? ஒருபோதும் நான் என்னை முன்மாதிரி என நினைத்ததில்லை. எல்லோரிடமும் நான் கற்றுக்கொள்பவளாகவே இருக்கிறேன். சிலர் எப்படி இருக்க வேண்டும் எனக் கற்பிக்கிறார்கள். சிலர் எப்படி இருக்கக்கூடாது எனக் கற்பிக்கிறார்கள். 8. நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த பாடமுறைகளிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள். இது சுலபமாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா? பாடமுறை, கற்பிக்கும் முறை இவற்றில் மாற்றம் வந்திருக்கிறது. தொடக்கநிலையில் முன்பு தமிழ் அகரவரிசை கற்பிப்போம். இப்போது கோட்டெழுத்துக்கள் முதலில் கற்பிக்கச் சொல்கிறார்கள். அடிப்படையைக் கற்பிப்பவர்கள் நாங்கள் என்பதால் பாடத்திட்டம் மாறாது. முழு அடைவுக்கு என்ன செய்யலாம் என்பதை எங்கள் பணி அனுபவம் உணர்த்தி இருக்கிறது. 9. பெரும்பான்மையாகக் கல்வியறிவு பெற்றுவிட்ட இன்றைய சமூகம் இன்னும் மாற்றிக்கொள்ளாத விசயமாக எதைப்பார்க்கிறீர்கள்? புறம் பேசுதல். பொறாமை. இவற்றின் சதவீதம் குறையவேயில்லை. 10. இறுதிக் கேள்வி. இன்றைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? சூழ்நிலையை எதிர்கொண்டு வெற்றி பெறுபவராக இருக்க வேண்டும். ——— அடுத்து, முனைவர் சி.சங்கீதா அவர்கள். ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராக எட்டு ஆண்டுகளாக பணிபுரிகிறார். பாடம் மட்டுமின்றி இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் புலமையுடையவர். “தொல்காப்பியப் பெயர்த்தி” இவரது கவிதை நூலாகும். இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், கபிலர் மலை. என்னுடைய அன்புத்தோழியான அவரிடமும் இதே கேள்விகளை முன் வைத்தோம். 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? 2009-இல் தனியார் கல்லூரியில் பணியாற்றியபோது முதன்முதலாக தேர்வு கண்காணிப்புப் பணி. அதுவும் ஆங்கிலத் தேர்வு. மிகுந்த கவனத்தோடு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு தேர்வு அறைக்குச் சென்றேன். ஆனால் மனதுக்குள் கொஞ்சம் பயமாகவே இருந்தது. மாணவர்களுக்கு முக்கியமான சில அறிவிப்புகளை கொடுத்தேன். குறிப்பாக, யாரும் பிட் வைத்திருக்கக் கூடாது. இருந்தால் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு எல்லாருக்கும் வினாத்தாளையும் விடைத்தாளையும் கொடுத்தேன். பின்  ஒவ்வொரு மாணவிக்கும் கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தேன். எல்லோரையும் பரிசோதித்துவிட்டுதான், நான் கையெழுத்து போட்டேன். சிறிது நேரம் கழித்து பறக்கும்படை வந்தார்கள். வகுப்பு முழுக்க சுற்றிப் பார்த்தார்கள். திடீரென்று ஒரு மாணவியின் விடைத்தாளை வாங்கிப் பார்த்தால், உள்ளே தூண்டுச் சீட்டு. எனக்கோ பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அப்பொழுதுதான் அந்த மாணவியை நான் பரிசோதனை செய்துவிட்டு  கையெழுத்து போட்டேன். கையெழுத்து போட்ட பின்பு bit வைத்து எழுதிய அந்த மாணவியை என்னால் இன்று வரை மறக்க முடியாது.   என் வாழ்க்கையில் முதன் முதலில் மெமோ வாங்குவதற்குக் காரணமாக இருந்தது அந்த மாணவிதான். 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? தலையணை அளவில் நாவல்களை வாசித்த மாணவர்கள்தான் நான் வியந்தவர்கள். 3. ஆசிரியப்பணியால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன? பேராசிரியர் என்ற முகவரியால் நிறைய மனிதர்களைச் சம்பாதித்து இருக்கிறேன். வாழ்க்கையில் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் நிலையை எட்டியிருக்கிறேன். படிப்பிற்காகவும் பணிக்காகவும் இழந்தது குடும்பத்தின் பிரிவு மட்டும்தான். 4. என்றாவது இந்த வேலை போதுமென நினைத்திருக்கிறீர்களா? என்றைக்கும் நினைத்ததேயில்லை. எப்போதும் இளைஞர்களோடு பணியாற்றுகிற சவாலான வாழ்க்கையை  வாழவே ஆசை. 5. இவ்வேலைக்கு வரவில்லையெனில் வேறு என்ன வேலைக்குச் சென்றிருப்பீர்கள்? ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான ஆசையிருக்கும். ‘சின்ன வயதில் டாக்டர் ஆகணும், பத்தாங்கிளாஸ் படிக்கும் போது கேட்ரிங் படிக்கனும், பன்னிரெண்டாங் கிளாஸ் முடிச்சதும்  வேதியியல் படிக்கவேண்டும்’ என ஆசைப்பட்டேன். குறைந்தபட்சம் ஆங்கில இலக்கியமாது படிக்கவேண்டுமென ஆசைப்பட்டேன். அதுவும் நடக்கவில்லை. பி. ஏ. முடித்தவுடன் வழக்கறிஞருக்குப் படிக்க ஆசைப்பட்டேன். விண்ணப்பக்கட்டணம் 400 ரூபாய் இல்லாததால் எம். ஏ. படித்தேன். நானும் என் தோழி மஞ்சுவும் வழக்கறிஞர் படிக்க ஆசைப்பட்டோம். அவர் இன்று புகழ்பெற்ற வழக்குரைஞராக வலம் வருகிறார். எம். ஏ. படிக்கவில்லை எனில் அவரோடு நானும் வழக்கறிஞர் ஆயிருப்பேன். 6. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியராக மாறிவிடும் நீங்கள் வீட்டில் எவ்வாறு இருப்பீர்கள்? வீட்டிலும் அவ்வப்போது பேராசிரியர் மனநிலை வந்துகொண்டேதான் இருக்கும். 7. சக ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ நீங்கள் முன்மாதிரியாக  இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடமிருந்து  இன்னும் கற்றுக் கொள்கிறீர்களா? நான் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் செய்கிற பணியை சிறப்பாகச் செய்தாலே நாம் மற்றவர்களுக்கு உதாரணமாக மாறிவிடுவோம். நமக்குத் தெரியாததை சக ஆசிரியர்களிடமிருந்து கற்றுக் கொள்வதில்தான் நம் உயரம் இருக்கிறது. எனது பேச்சிற்கும் தைரியத்திற்கும் அதைவிட அன்பிற்கும் என்னை முன்மாதிரியாக கொள்ளும் மாணவர்களும் நட்பு வட்டங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 8. நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த பாடமுறைகளிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள். இது சுலபமாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா? காலத்திற்கேற்றவாறு இலக்கியம் தன்னைத் தகவமைத்துக் கொள்வது போல நாமும் இந்த இணைய உலகில் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். கடினமென்று எதுவுமில்லை. கற்றலில்தான் இந்த வாழ்வு பயணிக்கிறது. 9. பெரும்பான்மையாகக் கல்வியறிவு பெற்றுவிட்ட இன்றைய சமூகம் இன்னும் மாற்றிக்கொள்ளாத விசயமாக எதைப் பார்க்கிறீர்கள்? சமூகம் வளர்ச்சி பெற்று வந்தாலும் மனிதர்கள் இன்னும் மாறாமல் இருப்பது என்றால் சாதி, மதம் என்ற பாகுபாட்டில் வாழ்வது. வாழ்க்கை நிலையானதல்ல என்பதை உணராமல் குரோதம், பொறாமை, பேராசை முதலிய எண்ணத்தோடு வாழ்வது. 10. இறுதிக் கேள்வி. இன்றைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? உலகை வெல்லக்கூடிய ஆயுதம் கல்வி. கல்வி என்பது அறிவை விரிவுசெய்து பகுத்தறிவோடு நடக்க வழிகாட்டுகிறது. இந்தக்கால இளைஞர்கள் கல்வி கற்பதோடு,  மனிதநேயத்தோடும் யாவற்றையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தோடும் இருக்க வேண்டும். அதோடு, நல்ல நூல்களை வாசிப்பதோடு நல்ல மனிதர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.——— நிறைவாக, அனுராதா.எஸ். நான் ‘அனுக்கா’ என அன்போடு அழைக்குமளவிற்கு நெருக்கமானவர். மாணவர்களை நண்பர்களாகக் கையாளும் வித்தை தெரிந்தவர். கடந்த பதினோரு வருடங்களாக சென்னை வேல்டெக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவருடைய சொந்த ஊர் சென்னை. அவரிடமும் அதே பத்துக் கேள்விகளை முன்வைத்தோம். 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரியில்  மண் பானையில் விறகடுப்பில் பொங்கல் வைத்ததை மறக்க முடியாது. 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? நிறைய

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

செப்.1 : தமிழ்நாடு முழுவதும் பல மாத இடைவெளிக்குப் பின்னர், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்காக நாம் எடுத்த முயற்சிகளும் கொடுத்த அழுத்தங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. சிலர் நம்மீது கோவப்படவும் சிலர் வருந்தவும் செய்தார்கள். ஆனால், அனைத்தும் கடந்து நம்மாலான முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தோம். பள்ளிகள் திறக்கப்பட்டதில் மிகச் சிறிய அளவில் நாமும்‌ பங்காற்றியிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியே. மகிழ்வான இந்த வேளையில், அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் ஹோசிமின் திலகர், தோழர் க.யோகராஜன், பேராசிரியர் ச.மாடசாமி, ஊடகவியலாளர் தோழர் அ. குமரேசன், NORDIC FORUM தலைவர் தோழர் விஜய் அசோகன் ஆகியோரின் பங்களிப்பும் ஆதரவும் நன்றியுடன் நினைவுகூறத்தக்கவை. மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் மீண்டும் நேரடிக் கற்றல் அனுபவத்தைப் பெற்று சிறப்புற அன்புமிக்க வாழ்த்துகள்! சுவடு பதிப்பகம்A3 ஆசிரியர் குழு அரசுக்கு நாம் அனுப்பிய கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய முழுமையான கடிதத்தை இங்கே வாசிக்கலாம்.

தண்டச்சோறு தின்னும் ஆசிரியர்கள்

தண்டச்சோறு தின்னும் ஆசிரியர்கள்

[குழந்தைகளின் கல்வி நலனில் கவலையும் அக்கறையும் கொண்டு, ஏதேனும் ஒரு வகையில் அவர்களுக்கான கற்பித்தல் பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களை சுவடு இதழ் மனதாரப் பாராட்டுகிறது. இந்தக் கட்டுரை அவர்களைக் குறித்தது அல்ல.] ‘உலகெங்கும் கொரோனா தாக்கத்தால் கோடிக்கணக்கான குழந்தைகள் கல்வியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அதனால் பல வருடங்கள் பின் தங்கிய சூழலுக்குப் போய் விட்டோம்’ என்று யூனிசெஃப் குழந்தைகள் அமைப்பு உட்பட பல தனியார் அமைப்புகள் ஆய்வு செய்து, தங்கள் ஆய்வு முடிவுகளை ஊடகங்கள் வழியே தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இவை தமிழகத்திற்கும் பொருந்தும். கூடுதலாக இங்கு தனியார் மயமும் தலைவிரித்தாடுகிறது. பெண் குழந்தைகள் திருமணம் எல்லா மாவட்டங்களிலும் நடப்பது பற்றிய புள்ளி விபரங்கள் வெளியாவது தொடர்கிறது. அதைக்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆசிரியைகளைப் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. நமது சுவடு இதழ் A3 ஆசிரியர்கள் அமைப்புடன் இணைந்து நடத்திய கருத்தரங்கில், இவற்றையெல்லாம் விரிவாக விவாதித்து அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.  அடித்தட்டு மக்களின்  பிரதிநிதியாகவும், கல்வி வரி, தொழில் வரி, வருமான வரி, சாலை வரி உள்ளிட்ட பலப்பல வரிகளைக் கட்டி வரும் சாதாரண குடிமகன்கள் சார்பாகவும், கல்வி மீதும் எதிர்காலத் தலைமுறை மீதும் அக்கறையும் பொறுப்பும் கொண்டவர்களாகவும் இங்கு சில நியாயங்களைக் கேள்விகளாக முன் வைக்கிறோம்.  அரசுப் பள்ளி ஆசிரியர்களே, வேலையே செய்யாமல் சம்பளம் மட்டும் வாங்க வெட்கமாக இல்லையா? தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டு முழுவதுமே ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று பாடம் நடத்தும் பணியை மேற்கொள்ளவில்லை. இன்று வரை ஒவ்வொரு அரசுப்பள்ளி ஆசிரியரும் பல லட்சங்களை சம்பளமாகப் பெற்றுள்ளீர்கள். ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ என்று ஒரு பழமொழி உண்டு. ‘உறவினர் வீடே என்றாலும் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது, அது தன்மானத்துக்கு இழுக்கு’ என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி அது. ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களோ  கடந்த 15 மாதங்களாக  சும்மா இருந்து கொண்டே சம்பளம் வாங்குவது எந்த விதத்தில் நியாயமானது?  பல்லாயிரம் ஆசிரியர்கள் பணி புரியும் நமது கல்வி அமைப்பில் மிகச் சொற்ப விழுக்காடு ஆசிரியர்கள்தான்  குழந்தைகளுக்காக ஏதாவது ஒரு வகையில் பேசிக்கொண்டும் இயங்கிக்கொண்டும் இருக்கின்றனர். மீதமுள்ள பெரும்பான்மை ஆசிரியர்கள் வேலையே செய்யாமல் அரசு வழங்கும் சம்பளத்தைக் கொஞ்சமும் கூச்சமின்றி வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பலர் சொந்தமாக  ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து கொண்டும் விவசாயம் பார்த்துக் கொண்டும்  வேறு ஏதாவது  சொந்தத் தொழில் செய்துகொண்டும் ஏதோ ஒரு வகையில் இன்னும் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு இருப்பதோடு அரசு தரும் மாத ஊதியத்தை ஒரு பைசா குறையாமல் வாங்கி அனுபவித்து வருகிறார்கள்.  ஆனால் மறுபக்கம் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பொது மக்கள், வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து, வருமானமே இல்லாமல் வாழ்வா சாவா எனப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பலப்பல சிக்கல்களைச் சந்தித்து வரும் அந்த மக்களின் வரிப்பணத்தையும் உள்ளடக்கியதுதான் நீங்கள் வாங்கும் சம்பளம். ஆனால், அந்த மக்களின் குழந்தைகளது கல்வி குறித்து அக்கறை எதுவுமின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு, ‘அரசு பள்ளியைத் திறக்கவில்லை, அரசாங்கம் சொல்வதை நாங்கள் கேட்கிறோம்’ என்று சொல்லி அரசின் மீதே பழியைச் சுமத்தி தப்பித்துக் கொண்டு வருகின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த உணர்வே இல்லாமல் கற்பித்தல் பணியையே அவமதிக்கும் இந்த ஆசிரியர்களுக்கு தங்கள் பணி குறித்த பொறுப்புணர்வும் சொரணையும் என்று வரும்? தண்டச்சோறு தின்னும் ஆசிரியர் சங்கங்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கும், பதவி உயர்வு, சம்பளப் பற்றாக்குறை, மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு போன்ற தங்களது சொந்த நலன் சார்ந்து அரசை எதிர்க்கும், போராட்டங்கள் நடத்தும் ஆசிரியர் சங்கங்கள், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சமாவது கவனத்தில் கொண்டு குறைந்தபட்சம் இந்தக் கல்வியாண்டாவது பள்ளிகளைத் திறக்க எங்காவது குரல் கொடுத்தீர்களா? முதல்வரிடம் நல்ல பேர் வாங்க கொரோனா நிதியை (குழந்தைகளின் கல்விக்காக வாய் திறக்காத ஆசிரியர்களிடம் இருந்து) வசூலித்து அரசிடம் கொடுக்கத் தெரிந்த சங்கங்களுக்கு, தங்கள் வாழ்வதாரத்திற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் பள்ளிக் குழந்தைகளது கல்வி நலன் பேணப்பட வேண்டும் என்று கொஞ்சமும் தோன்றவில்லையா?  குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லையென்றால் உங்களுக்கு வேலை ஏது? சம்பளம் ஏது?  உங்கள் சங்கங்களின் உறுப்பினராக இருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வகுப்பறைகளில் பயின்ற லட்சக் கணக்கான குழந்தைகள் இப்போது எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள்? குழந்தைத் தொழிலார்களாகப் போய்விட்டனரா?  திருமணம் செய்துகொண்டு போய்விட்டனரா? போன்ற தகவல்கள் ஏதாவது தெரியுமா? அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்குள் கொண்டு வர ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டீர்களா?  கொரோனா சூழல் இப்படியே நீடித்தால், அரசு உங்களுக்கு வாழ்நாள் முழுக்க தண்டச்சோறு போட்டுக்கொண்டிருக்கும் என்ற கனவில் மிதக்கிறீர்களா? இதனால் அரசுப் பள்ளிகள் நிரந்தரமாக மூடப்படும்  அபாயம் உள்ளதை உணர முடியவில்லையா? இந்தச் சூழலில் மாற்று வழிகள் குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கும் பொறுப்பு உங்களுக்குக் கொஞ்சம்கூட இல்லையா? உழைக்காமல் ஓசிச்சோறு தின்ன உங்களுக்குக் கூசவில்லையா?  கல்வி அதிகாரிகளே, நீங்கள் பூம்பூம் மாடுகளா? ஆசிரியர்களாவது கற்பித்தல் பணியைச் செய்கின்றனர். ஆனால் நமது தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை முன்னேற்றத் திட்டமிடும் இடத்தில் இருக்கும் நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குப் பதிவேடுகளைப் பராமரிக்கும் பணியை மட்டும் சுற்றறிக்கைகளாக அனுப்பிக்கொண்டு இருப்பீர்கள்? ஆசிரியர்களை விட ஒன்றிரண்டு மடங்கு அதிக ஊதியம் பெறும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்களும் கடந்த 15 மாதமாக வேலை செய்யாமல்தானே சம்பளம் வாங்குகிறீர்கள்? உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட எல்லைகளில் எத்தனைக் குழந்தைகள் வேலைக்குப் போய், அவர்களின் கல்வி நாசமாகப் போய்விட்டது என்று தெரியுமா? மாநிலமெங்கும் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை நிர்வகிக்கும் அலுவலுக்காகத்தானே அத்தனை சம்பளமும் பெறுகிறீர்கள்? கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா உங்களுக்கு? இன்னும் எத்தனைக் காலம் கொரோனாவைக் காரணம் காட்டி பள்ளிக்கூடங்களை மூடி வைத்து, குழந்தைகளைக் கற்றலில் இருந்து விலக்கி வைத்து மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்? படிக்காத குழந்தைகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து புத்தகம் அச்சடிப்பது எதற்காக? கமிஷன் அடிக்கவா? பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளாக மூடிக்கிடக்கின்றன. எப்போது திறக்கப்படும் என்ற எந்த விவரமும் இல்லை. இந்தச் சூழலில் மாற்று வழி குறித்து கொஞ்சமாவது நீங்கள் சிந்திக்க வேண்டாமா? ஆட்சியாளர்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சொல்வதற்குத் தலையாட்டும் பூம்பூம் மாடுகளா நீங்கள்?  லட்சக்கணக்கான குழந்தைகள் இந்த ஆண்டு தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு வந்திருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் ஆங்கில வழியில் படித்தவர்கள் அல்லவா? கல்வித் தொலைக்காட்சியில், பாடங்களைத் தமிழ் வழியில் மட்டும்தானே ஒளிபரப்புகிறீர்கள்? எனில், ஆங்கில வழியில் சேர்ந்த மாணவர்களின் நிலை என்ன? இதுகூடத் தெரியாமல்தானே அதிகாரிகளாக அமர்ந்துகொண்டு இருக்கிறீர்கள்? எந்த அடிப்படையில் கல்வித் தொலைக்காட்சி பாடத்திட்டத்தை எழுதச் சொல்லி சுற்றறிக்கை அனுப்புகிறீர்கள்? சம்பளம் பெறுவதற்கு உங்களுக்குப் பதிவேடுகள் வேண்டும். குழந்தைகள் படித்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன? பள்ளிகள் திறந்தால் என்ன? திறக்காவிட்டால் உங்களுக்கு என்ன? 8ஆம் வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்பது இந்த வருடம்தான் மக்களுக்குத் தெரிய வந்துள்ளது. அது கல்வி உரிமைச் சட்டம் 2010-லிருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழ்நாடு முழுமையும் 9 , 10 , 11 வகுப்பு முடித்து,  கல்விக் கட்டணம் கட்ட முடியாததால் தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெற முடியாமலும் அரசுப் பள்ளியில் சேர முடியாமலும் தத்தளிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பற்றிய தரவுகள் எடுத்து அரசுக்கு அனுப்பினீர்களா? இந்தப் பிரச்சினை குறித்து அரசுக்கு ஏதேனும் வழிகாட்டினீர்களா?  கொரோனா காலத்தில் எத்தனைக் குழந்தைகள் கல்வியை விட்டு விலகிச்சென்றுவிட்டார்கள் என்றும் அவர்களை எப்படி மீட்டு பள்ளிக்குள்  கொண்டுவருவது என்றும் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? இந்தப் பணிகள் எல்லாம் நடக்கிறதா இல்லையா என்று மக்களுக்குத் தெரிய வேண்டாமா? மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் நீங்கள் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டாமா? எந்தப் பணியும் செய்யாமல் கல்வித் துறையின் வட்டார, ஒன்றிய, மாவட்ட, மாநிலக் கல்வித்துறை அதிகாரிகள் எதற்காக இருக்கிறீர்கள்? அரசும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகமும் உறங்குகிறதா?  சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்துக்கும் அடிப்படை கல்வி வாய்ப்புகள்தான். ஆனால் அது தற்போது எதிர்த்திசையில் பயணிக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அவர்களே, தமிழக முதல்வர் அவர்களே, கடந்த ஆண்டு நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போதே கொரோனா தாக்கம், பள்ளிகள் மூடல் என்ற நிலை இருந்ததே? அது அடுத்த வருடமும் தொடர்ந்தால் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் ஏன் உங்களிடம் இல்லாமல் போனது? அது கூடப் பரவாயில்லை. உழைக்கும் மக்களிடமிருந்து வாங்கும் வரிப்பணத்தில் ஆசிரியர்களை வேலையின்றி உட்கார வைத்து ஓசிச் சம்பளம் கொடுப்பது ஒரு புறம் இருக்கட்டும். இன்னும் எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் கொரானா நீடிக்கும் எனத் தெரியாத சூழலில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் கல்வியிலிருந்து விலகிச் செல்வதைத் தடுக்க வேண்டாமா? இதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டாமா? சிறந்த கல்வியாளர்களை அழைத்து ஆலோசிக்க வேண்டாமா?  குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாமல், தங்கள் மன உணர்வுகளை, அழுத்தத்தை வெளிப்படுத்த வழியில்லாமல் தவறான  நடத்தை மாற்றங்களுக்கும் உளவியல் சிக்கல்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். இந்தக் கோணத்தில் பள்ளிக் கல்வித்துறை இப்பிரச்சினைகளை அணுகியதா? சமூகத்தைப் பல வருடங்கள் பின்னுக்கு தள்ளும் ஆபத்தை உருவாக்கும் சூழலையே தற்போது வளர்த்து வருகிறீர்கள் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்? தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலை இழந்து தங்கள் உயிரையே இழந்து வரும் செய்திகள் கூட வருகின்றன. இணையவழிக் கல்வி பெருகி வருகிறது. இது நம் எதிர்கால சந்ததிக்கு நல்லதல்ல. பள்ளிகள் மூடல் தொடர்ந்தால் படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகள் அருகிவிடும். பள்ளிகள் வெறும் பாடம் கற்பிக்கும் இடமல்ல, குழந்தைகளின் நடத்தை மாற்றங்களைச் செதுக்கும் சிற்பக் கூடங்கள். தயவு செய்து பள்ளிகள் திறப்பில் மாற்று முறைகளைக் கையாளுங்கள்.  எங்கே போயின எதிர்க்கட்சிகள்?  பள்ளிகள் நிரந்தரமாக மூடிக் கிடக்கின்றன. குழந்தைகளின் வாழ்க்கை வீணாகிறது. ஆசிரியர்கள்  வேலையே செய்யாமல் ஒன்றரை ஆண்டு காலமாக

பள்ளிக் கல்வியில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள்

பள்ளிக் கல்வியில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள்

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவற்றுக்கு அடுத்து முக்கியத் தேவை கல்வியும் சுகாதாரமும்தான். இதில் சுகாதாரமும் கல்வியின் அடிப்படையிலேயே அமைவதால் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமான ஒன்றாகவே கல்வி விளங்குகிறது. ஒரு சமூகத்தின் மேம்பாட்டுக்கு அடித்தளமாக அமைவது கல்வி மட்டுமே. அப்படிப்பட்ட கல்வியானது நம் சமூகத்தில் முற்காலங்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சொந்தமானதாகக் கைக்கொள்ளப்பட்டு, பெரும்பான்மை சமூகத்திற்குக் கல்வி மறுக்கப்பட்டு வந்தது. பலகட்டப் போராட்டங்களை அடுத்து, சமூக நீதிக் கொள்கை நடைமுறைக்கு வந்த காலம் முதல் கல்வி அனைத்து சமூக மக்களுக்கும் உரியதாக மாறி இருப்பினும், அனைத்து மக்களையும் இன்னமும் கல்வி சென்றடையவில்ல என்பது பெருங்குறை. இந்த இருபத்து ஓராம் நூற்றாண்டில்கூட பள்ளிக்கல்வியைக்கூடத் தாண்டாத, ஏன், பள்ளிக் கல்வியே கிடைக்காத பல இலட்சம் குழந்தைகள் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதை அத்தனை எளிதாக நாம் கடந்து சென்றுவிட முடியாது. கடந்து சென்றுவிடவும் கூடாது. இந்த சமூகத்திலிருந்து நாம் பெற்றவற்றுக்கான பலனை சிறிதளவேனும் திருப்பிச் செலுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. பள்ளிக்கல்விதான் அனைத்து உயர் கல்விக்கும் அடித்தளமாக இருப்பதால், பள்ளிக் கல்வியை நாம் வலுவானதாகவும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிதாகவும், ஏற்றத்தாழ்வு இல்லாத வகையிலும் கிடைக்கச் செய்ய வேண்டும். தற்போதுள்ள கல்வி முறையின் வாயிலாக நாம் குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றம் கண்டிருந்தாலும், காலச் சூழலுக்கேற்ப நமது கல்வி முறையிலும் கல்வித் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அவ்வகையில், பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, கல்வியாளர் உமா அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துகள்: 1. வகுப்புக்கு ஒரு ஆசிரியர்  ஓராசிரியர் அல்லது ஈராசிரியர் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு மொத்தமுள்ள 23 பாடங்கங்களையும் அவர்களே நடத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த இருவரிலும் ஒருவர் தலைமை ஆசிரியராக இருப்பதால், அவருக்குப் பெரும்பாலும் மாவட்டக் கல்வி அலுவலகத்தின்  அல்லது ஏதேனும் ஒரு கல்வி அலுவலகத்தின் கடிதப் போக்குவரத்து, அலுவலகம் செல்லுதல் இப்படியான பணிகள் இருப்பதால் அப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வி மறைமுகமாக மறுக்கப்படுகிறது. எனவே, அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமித்தல் மிகவும் அடிப்படையான தேவை. 2. கற்பித்தல் அல்லாத பணிகளுக்கான அலுவலர்களை நியமித்தல் பெரும்பாலான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அலுவலகப் பணிகள், கணினிப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், மாணவர்களுக்கான கற்பித்தலில் பெரும் பாதிப்பு உண்டாகிறது. வருடத்தின் பெரும்பான்மை நாட்களோ அல்லது முழுமையும்கூட  ஆசிரியர்கள் வகுப்பிற்குச் செல்வதே இல்லை. வளர்ந்த மாணவர்கள் அவர்களாகவே படித்துக் கொள்வார்கள் என்று விட்டுவிடுகிறார்கள். இதனால் தரமான கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு பள்ளியிலும் கற்பித்தல் அல்லாத பணிகளுக்கான அலுவலர்களைத் தனயே நியமிக்க வேண்டும்.   3. கற்றலை மையப்படுத்தும் கல்வி இன்றைய சூழலில், கற்பித்தல் பணிகள் பெரும்பாலும் தேர்வை மையமாக வைத்தே நடைபெறுகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தனியார் பள்ளிகளைப் போலவே தேர்ச்சி சதவீதத்தை மட்டும் கணக்கில் கொண்டு அரசுப் பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து கற்பிக்கப்படுகிறது. அந்தக் கற்பித்தலும் பெரும்பான்மையாக பத்தாம் வகுப்பில் 35 மதிப்பெண்கள், பன்னிரண்டாம் வகுப்பில் 70 மதிப்பெண்கள் என்ற கணக்கீட்டின்படி, அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சி (கோச்சிங்)  மட்டுமே தரப்படுகிறது என்றே கூறலாம். இந்த நிலை மாறவேண்டும். குழந்தைகளுக்குப் பெரும்பாலும் பாடப்பொருள் அறிவு இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தது போல தற்போது கற்பிக்கப்படுவது இல்லை. அதனால், கற்பித்தல் என்பது மதிப்பெண் சார்ந்து இல்லாமல் அறிவு சார்ந்து இருக்க வேண்டும். 4. திறன்சார் கல்வி ஊக்குவிப்பு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாட்டு, ஓவியம், நெசவு, கைத்தொழில் முதலான ஆசிரியர்கள் நியமனம் முன்பு இருந்தது. தற்போது சில காலமாக பணியில் இருப்பவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றால் அவர்களோடு சேர்ந்து பணியிடமும் காணாமல் போய்விடுகிறது. புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. தையல் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர் அதைச் செய்யாமல், அங்கு தமிழாசிரியர் பற்றாக்குறை இருந்தால் அதைச் செய்கிறார். இப்படி அவரவர் பணியை அவரவர் செய்யும் நிலை இல்லை. பாடங்கள் கடந்த இதர திறன்களை மாணவர்களிடம் உருவாக்குவதும் இல்லை. ஊக்குவிப்பதும் இல்லை. இந்தச் சூழல் தமிழக அரசுப் பள்ளிகளில் மாற வேண்டும். 5. கல்வி மதிப்பீட்டு முறை தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிகளில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்ற CCE – Continuous and  Comprehensive  Evaluation முறை கல்வி உரிமைச் சட்டத்தின் வழிகாட்டுதலால் 2013 லிருந்து பின்பற்றப்படுகிறது. மிகச்சிறப்பான மதிப்பீட்டு முறை என்றாலும் ஆசிரியர்களுக்கும் இது குறித்த முழுமையான புரிதல் இல்லை. வழிகாட்ட வேண்டிய அதிகாரிகள் வழி காட்டுவதே இல்லை. வெறுமனே 40 மதிப்பெண்கள் இலவசமாகப் போடப்படுவதுபோல் இங்கு ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டு முறையின் மற்றொருபுறம் பள்ளிக்கல்வி மிகவும் சவாலான விஷயங்களைச் சந்தித்து வருகிறது. இந்த மதிப்பீட்டு முறை குறித்து பெற்றோர்கள் யாருக்கும் எந்தவிதப் புரிதலும் கிடையாது. ஏனென்றால், அரசுப் பள்ளிகளுக்கு வரும் 90 சதவீத குழந்தைகள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் வசதியற்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பெற்றோருக்கு வாழ்வாதாரத்தைத் தேடுவதற்கே நேரம் போதுமானதாக இருக்கும்பொழுது, குழந்தைகளின் கல்வி குறித்து ஆய்வு செய்யவோ அக்கறை கொள்ளவோ  அவர்களுக்கு நேரமோ புரிதலோ கிடையாது என்பதுதான் நிதர்சனம். இதனை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இங்கு நடப்பதோ வேறு. “எங்களது கைகளைக் கட்டிப் போட்டுவிட்டார்கள். மாணவர்களை அடிக்கக்கூடாது, திட்டக்கூடாது என்கிறார்கள். பெற்றோர்களும் சொல்லித் தருவது கிடையாது. அதனால் அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை” என்று ஆசிரியர்கள் அரசின் பக்கம் கை காட்டுகின்றனர். ஆனால், உண்மையாகவே எதுவுமற்ற குழந்தைகளுக்கு கற்பித்தலின் பொருட்டுதான் நாம் சம்பளம் பெறுகிறோம். ஆகவேதான்  ஆசிரியப்பணி அர்ப்பணிப்பு மிக்க பணி என்று கூறுகிறோம். ‘இந்தப் புரிதலுடன் ஆசிரியர்கள் தற்போது உருவாக்கப்படுகிறார்களா?’ என்று பார்த்தால் அதுவும் கிடையாது. ஆகவே, இந்த மதிப்பீட்டு முறையில் இருக்கக்கூடிய இடைவெளியை நிரப்ப அரசு முனைய வேண்டும். கற்றுத்தேர்ந்த , இது குறித்து புரிதல் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்க வேண்டும். இது குறித்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வெளிப்படையாக வரவேற்று இதனைச் சரி செய்ய வேண்டும். நமது கல்வியில் மிகப்பெரிய ஒரு பின்னடைவு இருப்பது மதிப்பீட்டினால் மட்டும்தான். ஏனென்றால், அனைத்து மதிப்பீடுகளும் பதிவேடுகளை அடிப்படையாகக் கொண்டே பார்க்கப்படுவதால், குழந்தைகளின் உண்மையான கற்றல் திறன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது கிடையாது. இந்த முறையை மிக மிக மிக அவசியமாக, அவசரமாக அரசு கையில் எடுக்க வேண்டும். ஏனென்றால், கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் இப்படியே போய் விட்டது. பள்ளிக் கல்வியை முடிக்கக்கூடிய குழந்தைகள் அத்தனை லட்சம் பேரும் இதில் மிகவும் பின்னடைவைச் சந்தித்து வெளிவரக்கூடிய, வெளிவந்து இருக்கக்கூடிய ஒரு சூழல் இங்கு நிலவுகிறது. 6. நிதி ஒதுக்கீடு    SSA, RMSA திட்டங்கள் தற்போது  சமகிரா சிக்‌ஷ அபியானாக மாறிப் போன திட்டங்களின் அடிப்படையில் கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் கல்விக்காக  ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதி மிகச் சரியாக வந்து சேர்கிறதா என்றால் அதில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. ஒவ்வொரு திட்டத்திலும் ஆயிரக்கணக்கான கோடி கல்வி நிதி தமிழகப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டாலும் ஆசிரியர்கள் பெரும்பாலும் மற்றவர்களிடம் கையேந்தி அவரவர் பள்ளித்தேவையை நிறைவு செய்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் கற்பித்தல் பணியை முழுமையாகக் கையிலெடுக்க வேண்டும். கட்டமைப்பு சார்ந்த மற்ற நிதி நிலை சார்ந்தவற்றை அரசு மட்டுமே செய்யவேண்டும். குறிப்பிட்ட திட்டங்களுக்காக மட்டுமே நிதி ஒதுக்காமல், ஒவ்வொரு பள்ளிக்குமான தேவைக்கேற்ப நிதியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட தேவைக்காக ஒரு பள்ளிக்கு நிதி ஒதுக்கப்பட்டு ஏற்கனவே அந்தப் பள்ளியில் அந்தத் தேவை நிறைவடைந்திருந்தால், அந்த நிதியை வேறு பள்ளிக்குக் கொடுக்கலாம். திட்டங்களுக்காக செலவிடப்பட கூடிய தொகையை வேறுமாதிரியாக செயல்படுத்த முனையலாம். உதாரணமாக, வரும் கல்வி ஆண்டில், பள்ளிகள் தற்போது மூடப்பட்டு இருப்பதால் அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள் பாடங்கள் குறைக்கப்பட்டு, குறைவான அளவு அச்சடிக்கப்பட வேண்டும். பல கோடிக்கணக்கில் செலவு செய்து புத்தகங்களை அச்சிட்டு மாணவர்களுக்குக் கொடுக்கிறார்கள். ஆனால் பள்ளிகள் செயல்படாததால் மாணவர்கள் படிப்பது இல்லை. கற்பித்தலும் கற்றலும் நடைபெறவே இல்லை. ஆகவே, பாடங்களைக்  குறைத்து சிறிய அளவில் புத்தகங்களை அச்சடித்து வழங்குவது  மிகவும் நல்லது. 7. மழலையர் கல்வி  தமிழகப் பள்ளிகளில் ஏறக்குறைய  2800  பள்ளிகளில் மட்டுமே மழலையர் கல்வி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கினால் அரசுப் பள்ளிகளை நோக்கி மக்கள் வருவார்கள். மேலும் மழலையர் பள்ளிக்கான கட்டமைப்பு வசதிகளையும் முறையாகச் செய்து தர வேண்டும். மழலையர் வகுப்புகளுக்கான  ஆசிரியர் நியமனம் என்பது தற்போது அவசர காலமாக இடைநிலை ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்து மழலையர் வகுப்பு குழந்தைகளை கவனிக்க ஆணை பிறப்பித்து அனுப்பினர். இதற்கு மாற்றாக மாண்டிசோரி கல்வி முடித்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளையும் மாண்டிசோரி கல்வி முறையைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை உருவாக்கும் பணியிலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஏற்கனவே மாண்டிசோரி கல்வி முடித்து பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தமிழகத்தில் இருப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மழலையர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் திரும்பக் கிடைக்கும். அதனால் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற இலக்கையும் எட்ட முடியும். அங்கன்வாடிப் பள்ளிகளை தொடக்கக் கல்வித்துறையுடன் இணைத்தால், இந்த இடைவெளியில் இருக்கும் சில சிக்கல்கள் தீரும். அதோடு சத்துணவு திட்டமும் பள்ளிக்குள் இருந்தாலும், பள்ளி நிர்வாகக் கட்டமைப்பிற்குள் இல்லாததால் அங்கும் பிரச்சனை வருகிறது. அதையும் பள்ளிக்கல்வித் துறைக்குள் இணைக்க வேண்டும்.  தொடரும்… கட்டுரையாளர்: உமா, கல்வியாளர்

கல்வி வளர்ச்சி நாள்

கல்வி வளர்ச்சி நாள்

காமராசர் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை தமிழகத்தில் 9 ஆண்டு காலம் மட்டுமே முதலமைச்சராகப் பொறுப்பு வகித்திருந்தாலும், கல்வியில் மிகப் பெரிய மாற்றங்களை சாதாரண குடிமக்களுக்காகக் கொண்டு வந்த தலைவர் நமது காமராசர் என்பதை அனைவரும் அறிவோம். 2006-ஆம் ஆண்டிலிருந்து அவரது பிறந்தநாளான ஜூலை 15, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  இங்கு கொண்டாட்டம் என்பது வெற்றுப் புகழும் ஆடம்பரமும்தான் என்றால் மிகையாகாது. துறையின் சுற்றறிக்கைக்கு இணங்க பள்ளிகளில் காமராசரின் படம் வைத்து மாலை போடுவது, மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவது, இவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி கோப்புகள் தயாரித்து வைத்துக்கொள்வது – இவற்றுக்குப் பெயர்தான் இங்கு கல்வி வளர்ச்சிநாள். மாறாக, இந்த 15 ஆண்டுகளில் கல்வியின் தரம் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளது என்ற தரவுகளைக் கண்டடைந்தால் நமக்கு அதிர்ச்சிகளே மிஞ்சும்.  பள்ளிக்கல்வி என்பது அவசர சிகிச்சைக்குப் போனது இந்த பதினைந்து ஆண்டுகளில்தான்.  கல்வி தனியார்மயமாகிப் போகவா காமராசர் பாடுபட்டார்? “பிச்சை எடுத்தாவது படிக்கச்சொல்லி ஔவையார் சொன்னாங்களாம். நீங்க ஏன் பிச்சை எடுக்கணும்ங்கேன்? நான் கையேந்திப் பிச்சை எடுத்தாவது படிக்கவைக்கிறேன். நீங்க படிங்க” என்று சொல்லி ஏழை மாணவருக்குப் பள்ளிகளை உருவாக்கிக் கொடுத்தாரே, அது இதற்காகவா?  ஊழல் நிறைந்த துறையாக மாறிப்போகவா இத்தனை பாடுபட்டார்?  உண்மையான கல்வியை வழங்க, எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க, இல்லாமை வறுமை என்பதால் ஒரு குழந்தை கல்வி கற்கும்  வாய்ப்பை இழந்துவிடாது இருக்கவே, அரசால் பள்ளிகளை உருவாக்க இயலா இடங்களில்  மக்களின் இடங்களை வழங்கக் கூறி அரசு உதவி பெறும் பள்ளிகளையும் உருவாக்க வாய்ப்பு கொடுத்தார் என்கிறது வரலாறு.  ஆனால்    அவரது நோக்கம் சிதைந்து தனியார் பள்ளிகள் காளான்கள் போல உருவாகி, இன்று எங்கு பார்த்தாலும் தனியார் பள்ளிகள் ஆதிக்கம் செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து இங்கு பேசப்படுகிறதா? மாணவர்களுக்கு இன்றைய சமூகத்தின் கல்விச்சூழல் உணர்த்தப்படுகிறதா? என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறி. இப்படிப்பட்ட கல்வி வளர்வதைத்தானா காமராசர் எதிர்பார்த்து அவ்வளவு தூரம் உழைத்தார்? கல்விகே கண் திறந்த காமராசர் என்று போற்றப்படக்கூடிய அவரது பிறந்தநாளில் கல்வியின் கண்களை அழித்து, கரிய துணி கொண்டு கட்டி அதை மறைத்து, பார்வையைக் குருடாக்கிவிட்ட  ஒரு சூழலை அல்லவா இன்றைய சமூகம் உருவாக்கி வைத்துள்ளது? காமராசரின் பிறந்ததினத்தை நேர்மையுடன் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டுமென்றால், இங்குள்ள உண்மையைப் புரிந்து  கொள்ளக்கூடிய, அதை விமர்சனம் செய்யக்கூடிய, கேள்வி கேட்கக் கூடிய மனநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் முதலில் உருவாக வேண்டும். அவர்கள் தங்களை அவ்வாறு உருமாற்றிக் கொண்டால்தான், அவர்களின் வழிகாட்டலில் உருவாகும் எதிர்காலத் தலைமுறை, காமராசர் நினைத்த கல்விக்கண் திறக்கக்கூடிய நல்ல சமுதாயமாக மலரும். அதைவிடுத்து வெறும் கொண்டாட்டமாக அவரது படத்திற்கு மாலை அணிவித்து, பூக்களால் அலங்காரம் செய்து, வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்ட சொற்களால் போட்டிகள் நடத்தும்  வெற்று செயல்பாடுகளால் இந்த சமூகத்தின் கல்வித்தரம் மேலும் மேலும் நசுங்கிச் சீரழியும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, ‘அரசுப் பள்ளிகள்தான் மக்களின் பள்ளிகள்’ என்ற தாரக மந்திரத்தை அனைவரும் உணரும்படியாக அனைத்துத் தரப்பிலும் கல்வியைத் தரமுள்ள சாதனமாக, அரசுப் பள்ளிக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்லவும் அரசுப்பள்ளியை நோக்கி மக்கள் வரவும் தேவையான சூழலை உருவாக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், கல்வி அதிகாரிகள் போன்ற பொறுப்புகளில் இடம்பெறும் அளவில் தமிழகத்தின் கல்விச் சூழல்  மாறவேண்டும். அன்றுதான் நமக்கு உண்மையான கல்வி வளர்ச்சி நாள். கட்டுரையாளர்: உமா, கல்வியாளர்