ஆசிரியர்களிடம் 10 கேள்விகள்

ஆசிரியர்களிடம் 10 கேள்விகள்

ஆசிரியர் தினம் என்றால் எனக்கு சில ஆசிரியர்களை ஞாபகம் வருகிறது. முதல் வகுப்பெடுத்த கீதா டீச்சரையும் மூன்றாம் வகுப்பு எடுத்த விஜயா டீச்சரையும் ஐந்தாம் வகுப்பு எடுத்த ஞானவேல் ஐயாவையும் என்றுமே மறக்க முடியாது. மஞ்சள் தேய்த்துக் குளித்த முகத்தோடு வருவார் கீதா டீச்சர். நெற்றி வகுட்டில் நீண்டிருக்கும் குங்குமம். எடுப்பான ஏதாவது ஒரு வண்ணத்தில் சேலையுடுத்தியிருப்பார். விஜயா டீச்சர் தெத்துப்பல்லுடையவர். அவர் சிரிக்கும்போது காற்றில் புளியம்பூக்கள் உதிர்வது போலிருக்கும். இன்றும்கூட பாண்ட்ஸ் பவுடரின் வாசத்தை நுகரும்போதெல்லாம் அவருடைய பிம்பம் நினைவுக்கு வந்துவிடும். அதுபோலவே ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஓவிய டீச்சராக பணிபுரிந்தவரையும் (அவர் என் அப்பாவுடன் படித்த சக தோழி)மீனா டீச்சராக பணிபுரிந்த சமூக அறிவியல் ஆசிரியையும் மறக்கமுடியாது. இந்த மீனா டீச்சர் தான் இதற்கு முன்பாக “ஜெயப்பிரதா டீச்சர் போய்க் கொண்டிருக்கிறார்” எனும் என்னுடைய கவிதையில் பிரதிபலித்தார். மேலே விடுபட்ட நான்காம் வகுப்பெடுத்த அல்போன்ஸ் டீச்சர் மிகவும் பிரபல்யமானவர். எங்கள் ஊரில் அவர் எல்லோருக்கும் பரிச்சயமானவர். தேர்தல் நேரத்திலும் வருடத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் ஒவ்வொரு வீடாகக் கணக்கெடுக்க வருவதால் எல்லாருடைய வீடும், ஆட்களும் மிகப் பரிட்சயம். ஞானவேல் ஐயாவும் அப்படித்தான் அவருக்கும் எனக்கும் உள்ள உறவை எழுத இப்பதிவு போதாது. ஒன்பதாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்ட எனக்கு ஃபேஸ்புக் வழியே பல ஆசிரியர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். செப்டம்பர் 5, ஆசிரியர் தினத்தில் நான் எதையாவது செய்ய வேண்டும் அல்லது அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்படித் தோன்றியதுதான் இந்தப் பேட்டி. ஆசிரியப் பணியில் இருக்கும் மூவரிடம் ஒரே மாதிரியான பத்துக் கேள்விகளை முன்வைத்தேன். அதற்கு அவர்கள் தந்த பதில்கள் இதோ: முதலாவதாக திருமதி. கமலவள்ளி சுப்பிரமணியம் (எம்.ஏ.பி. எட்) அவர்கள். பணியிடம்: ஞானாம்பிகா உதவி தொடக்கப்பள்ளி. கருப்பம்புலம் வடகாடு, வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம். பணி அனுபவம்: 29 ஆண்டுகள். இந்தக் கொரோனோ காலத்திலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு வீடு வீடாகச் சென்று மாணவர்களின் நலனுக்காக பல நல்லுதவிகளைப் புரிந்தவர். லாக்டவுன் தீவிரமான காலத்தில் தன்னுடைய சம்பளத்தை, சுயநலமின்றி ஏழை மாணாக்கர்களின் குடும்பத்திற்காகச் செலவு செய்தவர். இவருக்கெல்லாம் நல்லாசிரியர் விருது கிடைத்ததா என்று தெரியவில்லை. கிடைக்கவில்லை என்றால் உடனடியாக அரசு கொடுக்க வேண்டும். இனி அவரிடம் பத்துக் கேள்விகளும் அவரது பதில்களும்: 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? நான் பணியேற்றதே மறக்க இயலா நிகழ்வுதான். 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? என்னை வியக்க வைத்த மாணவர் சோமசுந்தரம் மகாலிங்கம். தொடக்கப்பள்ளியை விட்டு சென்றதும் அவருடன் அதிகம் தொடர்பில்லை. கஜா புயல் பாதிப்பின் பொழுது என்னை மெஜஞ்சரில் தொடர்பு கொண்டு பள்ளி பாதிப்பைச் சரி செய்ய 60000 ரூபாய் அனுப்பினார். பேருதவி அது. 3. ஆசிரியப் பணியால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன? அடைந்தது நிறைய. இழந்தது ஏதுமில்லை. 4. என்றாவது இந்த வேலை போதுமென நினைத்திருக்கிறீர்களா? அப்படி நினைத்ததில்லை. ஆனா, ‘இந்தப் பணி கிடைக்காதிருந்தால் என்னவாகி இருப்பேன்?’ என யோசித்திருக்கிறேன். பணி ஓய்வை மனம் எப்படி எதிர்கொள்ளும் என யோசித்திருக்கிறேன். 5. இவ்வேலைக்கு வரவில்லையெனில் வேறு என்ன வேலைக்குச் சென்றிருப்பீர்கள்? தெரியவில்லை. காலத்திடம் கேட்க வேண்டிய கேள்வி. 6. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியராக மாறிவிடும் நீங்கள் வீட்டில் எவ்வாறு இருப்பீர்கள்? வீட்டில் இல்லத்தரசி. பள்ளி எப்படியோ, வீடும் அப்படித்தான். 7. சக ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ நீங்கள் முன்மாதிரியாக  இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடமிருந்து  இன்னும் கற்றுக் கொள்கிறீர்களா? ஒருபோதும் நான் என்னை முன்மாதிரி என நினைத்ததில்லை. எல்லோரிடமும் நான் கற்றுக்கொள்பவளாகவே இருக்கிறேன். சிலர் எப்படி இருக்க வேண்டும் எனக் கற்பிக்கிறார்கள். சிலர் எப்படி இருக்கக்கூடாது எனக் கற்பிக்கிறார்கள். 8. நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த பாடமுறைகளிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள். இது சுலபமாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா? பாடமுறை, கற்பிக்கும் முறை இவற்றில் மாற்றம் வந்திருக்கிறது. தொடக்கநிலையில் முன்பு தமிழ் அகரவரிசை கற்பிப்போம். இப்போது கோட்டெழுத்துக்கள் முதலில் கற்பிக்கச் சொல்கிறார்கள். அடிப்படையைக் கற்பிப்பவர்கள் நாங்கள் என்பதால் பாடத்திட்டம் மாறாது. முழு அடைவுக்கு என்ன செய்யலாம் என்பதை எங்கள் பணி அனுபவம் உணர்த்தி இருக்கிறது. 9. பெரும்பான்மையாகக் கல்வியறிவு பெற்றுவிட்ட இன்றைய சமூகம் இன்னும் மாற்றிக்கொள்ளாத விசயமாக எதைப்பார்க்கிறீர்கள்? புறம் பேசுதல். பொறாமை. இவற்றின் சதவீதம் குறையவேயில்லை. 10. இறுதிக் கேள்வி. இன்றைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? சூழ்நிலையை எதிர்கொண்டு வெற்றி பெறுபவராக இருக்க வேண்டும். ——— அடுத்து, முனைவர் சி.சங்கீதா அவர்கள். ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராக எட்டு ஆண்டுகளாக பணிபுரிகிறார். பாடம் மட்டுமின்றி இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் புலமையுடையவர். “தொல்காப்பியப் பெயர்த்தி” இவரது கவிதை நூலாகும். இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், கபிலர் மலை. என்னுடைய அன்புத்தோழியான அவரிடமும் இதே கேள்விகளை முன் வைத்தோம். 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? 2009-இல் தனியார் கல்லூரியில் பணியாற்றியபோது முதன்முதலாக தேர்வு கண்காணிப்புப் பணி. அதுவும் ஆங்கிலத் தேர்வு. மிகுந்த கவனத்தோடு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு தேர்வு அறைக்குச் சென்றேன். ஆனால் மனதுக்குள் கொஞ்சம் பயமாகவே இருந்தது. மாணவர்களுக்கு முக்கியமான சில அறிவிப்புகளை கொடுத்தேன். குறிப்பாக, யாரும் பிட் வைத்திருக்கக் கூடாது. இருந்தால் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு எல்லாருக்கும் வினாத்தாளையும் விடைத்தாளையும் கொடுத்தேன். பின்  ஒவ்வொரு மாணவிக்கும் கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தேன். எல்லோரையும் பரிசோதித்துவிட்டுதான், நான் கையெழுத்து போட்டேன். சிறிது நேரம் கழித்து பறக்கும்படை வந்தார்கள். வகுப்பு முழுக்க சுற்றிப் பார்த்தார்கள். திடீரென்று ஒரு மாணவியின் விடைத்தாளை வாங்கிப் பார்த்தால், உள்ளே தூண்டுச் சீட்டு. எனக்கோ பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அப்பொழுதுதான் அந்த மாணவியை நான் பரிசோதனை செய்துவிட்டு  கையெழுத்து போட்டேன். கையெழுத்து போட்ட பின்பு bit வைத்து எழுதிய அந்த மாணவியை என்னால் இன்று வரை மறக்க முடியாது.   என் வாழ்க்கையில் முதன் முதலில் மெமோ வாங்குவதற்குக் காரணமாக இருந்தது அந்த மாணவிதான். 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? தலையணை அளவில் நாவல்களை வாசித்த மாணவர்கள்தான் நான் வியந்தவர்கள். 3. ஆசிரியப்பணியால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன? பேராசிரியர் என்ற முகவரியால் நிறைய மனிதர்களைச் சம்பாதித்து இருக்கிறேன். வாழ்க்கையில் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் நிலையை எட்டியிருக்கிறேன். படிப்பிற்காகவும் பணிக்காகவும் இழந்தது குடும்பத்தின் பிரிவு மட்டும்தான். 4. என்றாவது இந்த வேலை போதுமென நினைத்திருக்கிறீர்களா? என்றைக்கும் நினைத்ததேயில்லை. எப்போதும் இளைஞர்களோடு பணியாற்றுகிற சவாலான வாழ்க்கையை  வாழவே ஆசை. 5. இவ்வேலைக்கு வரவில்லையெனில் வேறு என்ன வேலைக்குச் சென்றிருப்பீர்கள்? ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான ஆசையிருக்கும். ‘சின்ன வயதில் டாக்டர் ஆகணும், பத்தாங்கிளாஸ் படிக்கும் போது கேட்ரிங் படிக்கனும், பன்னிரெண்டாங் கிளாஸ் முடிச்சதும்  வேதியியல் படிக்கவேண்டும்’ என ஆசைப்பட்டேன். குறைந்தபட்சம் ஆங்கில இலக்கியமாது படிக்கவேண்டுமென ஆசைப்பட்டேன். அதுவும் நடக்கவில்லை. பி. ஏ. முடித்தவுடன் வழக்கறிஞருக்குப் படிக்க ஆசைப்பட்டேன். விண்ணப்பக்கட்டணம் 400 ரூபாய் இல்லாததால் எம். ஏ. படித்தேன். நானும் என் தோழி மஞ்சுவும் வழக்கறிஞர் படிக்க ஆசைப்பட்டோம். அவர் இன்று புகழ்பெற்ற வழக்குரைஞராக வலம் வருகிறார். எம். ஏ. படிக்கவில்லை எனில் அவரோடு நானும் வழக்கறிஞர் ஆயிருப்பேன். 6. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியராக மாறிவிடும் நீங்கள் வீட்டில் எவ்வாறு இருப்பீர்கள்? வீட்டிலும் அவ்வப்போது பேராசிரியர் மனநிலை வந்துகொண்டேதான் இருக்கும். 7. சக ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ நீங்கள் முன்மாதிரியாக  இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடமிருந்து  இன்னும் கற்றுக் கொள்கிறீர்களா? நான் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் செய்கிற பணியை சிறப்பாகச் செய்தாலே நாம் மற்றவர்களுக்கு உதாரணமாக மாறிவிடுவோம். நமக்குத் தெரியாததை சக ஆசிரியர்களிடமிருந்து கற்றுக் கொள்வதில்தான் நம் உயரம் இருக்கிறது. எனது பேச்சிற்கும் தைரியத்திற்கும் அதைவிட அன்பிற்கும் என்னை முன்மாதிரியாக கொள்ளும் மாணவர்களும் நட்பு வட்டங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 8. நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த பாடமுறைகளிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள். இது சுலபமாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா? காலத்திற்கேற்றவாறு இலக்கியம் தன்னைத் தகவமைத்துக் கொள்வது போல நாமும் இந்த இணைய உலகில் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். கடினமென்று எதுவுமில்லை. கற்றலில்தான் இந்த வாழ்வு பயணிக்கிறது. 9. பெரும்பான்மையாகக் கல்வியறிவு பெற்றுவிட்ட இன்றைய சமூகம் இன்னும் மாற்றிக்கொள்ளாத விசயமாக எதைப் பார்க்கிறீர்கள்? சமூகம் வளர்ச்சி பெற்று வந்தாலும் மனிதர்கள் இன்னும் மாறாமல் இருப்பது என்றால் சாதி, மதம் என்ற பாகுபாட்டில் வாழ்வது. வாழ்க்கை நிலையானதல்ல என்பதை உணராமல் குரோதம், பொறாமை, பேராசை முதலிய எண்ணத்தோடு வாழ்வது. 10. இறுதிக் கேள்வி. இன்றைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? உலகை வெல்லக்கூடிய ஆயுதம் கல்வி. கல்வி என்பது அறிவை விரிவுசெய்து பகுத்தறிவோடு நடக்க வழிகாட்டுகிறது. இந்தக்கால இளைஞர்கள் கல்வி கற்பதோடு,  மனிதநேயத்தோடும் யாவற்றையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தோடும் இருக்க வேண்டும். அதோடு, நல்ல நூல்களை வாசிப்பதோடு நல்ல மனிதர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.——— நிறைவாக, அனுராதா.எஸ். நான் ‘அனுக்கா’ என அன்போடு அழைக்குமளவிற்கு நெருக்கமானவர். மாணவர்களை நண்பர்களாகக் கையாளும் வித்தை தெரிந்தவர். கடந்த பதினோரு வருடங்களாக சென்னை வேல்டெக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவருடைய சொந்த ஊர் சென்னை. அவரிடமும் அதே பத்துக் கேள்விகளை முன்வைத்தோம். 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரியில்  மண் பானையில் விறகடுப்பில் பொங்கல் வைத்ததை மறக்க முடியாது. 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? நிறைய

”ஜெயமோகனிடம் இருந்து வருவது பாசிசத்தின் குரல்!”

”ஜெயமோகனிடம் இருந்து வருவது பாசிசத்தின் குரல்!”

இணையத்தில் பரவும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்கிறார் பா.செயப்பிரகாசம் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக பா.செயப்பிரகாசத்தின் ஆதரவாளர்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குமிடையில் சொற்போர் நடந்துவருகிறது. வெறுமனே சொற்போர் என்பதைக் கடந்து, கண்டன அறிக்கை, நீதிமன்றத்தில் வழக்கு தொடருதல் என அடுத்தடுத்த நகர்வுக்குச் சென்று பூதாகரமாகி உள்ளது. இந்நிலையில் பா.செயப்பிரகாசத்தை சந்தித்தோம். “பா.செயப்பிரகாசம் –ஜெயமோகன் மோதல் தனிமனித விரோதப் பின்னணியா?” “இந்தக் கேள்வியே முதலில் பிழையானது; கணவன்–மனைவி, குடும்பம், சுற்றம், நண்பர்கள், ஒரு குழு அல்லது வட்டம், சாதி, மத, அரசியல் கட்சிகள் போன்றவைகளின்  இயங்குதலில்  தோற்றம் கொள்வது   தனிமனிதப் பகை. உரசல் ஆகி,  பிறகு திண்ம வடிவமாக   உருவெடுப்பது. எழுத்து, உரையாடல், சொற்பொழிவு  போன்ற அறிவார்ந்த தளத்தில் இதற்கு இடமில்லை. ஒருவேளை ஜெயமோகன் தனிமனிதப் பகை கொண்டிருக்கலாம். இரு துருவங்கள், இரு முனைகள், மானுட விடியலுக்கான  இருவேறு கொள்கைகள். கொள்கைகளில்   பொருத்தப்பாடு இல்லாததால், பிற எல்லாவற்றிலும் முரண் எழுவது இயல்புதானே!    “ஜெயமோகன் படைப்புக்களை வாசிப்பதுண்டா? அவரது எழுத்துகள் பற்றிய தங்கள் பார்வை?” “வாசித்திருக்கிறேன்; தொடர்ந்து வாசித்தும் வருகிறேன். ரப்பர், வெள்ளை யானை- நாவல்கள், அறம் சிறுகதைத் தொகுப்பு – இவை வாசிக்கப்பட வேண்டிய படைப்புகள். ஏனெனில்  யதார்த்த நிலையை சித்தரிப்பதுதான்  இதற்கான காரணம்; ஆயினும்  இந்த எழுத்துப் படைப்புகளினூடாக ஒரு நுண்ணரசியல் ஓடுகிறது என்பதைப் புறந்தள்ளி விடக் கூடாது.  விஷ்ணுபுரம்  அவருடைய மகாகாவியம் என ஜெயமோகன் கருதுகிறார்; பாதிக்கு மேல் என்னால் நகர முடியவில்லை. தற்போதைய சாதிய அடுக்கு, மத அடுக்குகளை   விருப்பத்துக் குரிய ஒன்றாக்கும் படைப்பு இது. இச்சமூகத்தின் மீது கோபம் கொள்வதற்கு மாறாக விருப்புக் கொள்ளச் சொல்கிறார். இது மனித நேயத்தின் மீதான வெறுப்பாகத்  திரும்புகிறது என்பதை அவர் உணர்ந்தாரா? பொங்குமாக்கடல் போல் தனக்குள் கொந்தளிக்கும் திறனை வெளிப் படுத்த நினைத்தால், விஷ்ணுபுரத்திற்குள் போயிருக்க வேண்டாம்;  மும்பையின், இந்தியா வின் ஆகப்பெரும்  சேரியான தாராவிக்குள்   போயிருக்க வேண்டும். “யதார்த்தவாதம் செத்துப் போய்விட்டது. அது ஏற்படுத்திய வாணவேடிக்கை என்றோ பிசுபிசுத்து அணைந்து போயிற்று. இன்று புதிய கலாச்சார இலக்கிய முனைப்புகள் தேவைப் படுகின்றன. அவற்றை இயக்கமாக உருவாக்க வேண்டியுள்ளது” என்ற நோக்கில்   எழுதப் படுகிறது விஷ்ணுபுரம். எழுதிய கையோடு ’விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ என்ற ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்து, விருதுகளும்  வழங்கத் தொடங்கினார். பகுத்தறிவை நிராகரிக்கும் போக்கினை-   பழம் மரபைப் போற்றும் பணியை விஷ்ணுபுரத்தில் காணலாம். பகுத்தறிவையும் சிந்தனையையும் ஒருசேரப் புறந்தள்ளி, தன் சித்தத்தை மாத்திரம் முன்வைத்த நாவல் ’பின் தொடரும் நிழல் ’ அவருடைய சித்தம், உளப்போக்கு எத்தகையதாக வணையப் பட்டது என்பதின் இரு சான்றுகள் இவை.  அவருடைய இலக்கிய மதிப்பீடு இவ்வாறாக இருக்கிறது: “பொதுப் புத்தியாலும் புறவயமான தாக்கத்தாலும் (Reason)  அடையப் பெறும்  உண்மைகளுக்கு இலக்கியத்தில் பெரிய இடம் ஏதுமில்லை.” (நவீனத்துவத்தின் முகங்கள்- பக்கம் 105). “மனித மனத்தின் இயல்பை வெளிப்படுத்துதல் என்றால் நவீனத்துவத்தைப் பொருத்தவரை இருளையும் தீமையையும் வெளிப்படுத்தல்”   (மேலது; பக்கம் 89) சரி, எந்தக் குரலில் என்பதுதான் கேள்வி. அதிருப்திப் புகையா, எதிர்ப்புக்குரலா,  நியாயப் படுத்தலின் ஆராதனைகளா? நியாயப்படுத்தலின் ஆராதனைகள் தாம் விஷ்ணுபுரமும் பின் தொடரும் நிழலும். “எதை வைத்து உங்களைச் சாதிவெறி ஆதர வாளர் எனக் குற்றம் சாட்டுகிறார் ஜெயமோகன்?” “அவரிடம்தான் கேட்க வேண்டும். என்ன ஆதாரம் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.  முதலில் அவதூறைத் தொடங்கி வைத்தது அவர்தான். “ஒரு   முன்னாள் இடதுசாரியின் கடிதம்” என்ற அனாமதேயக் கடிதத்தை29-05-2020ல்   அவருடைய இணையப்பக்கத்தில் பதிவு செய்தார்.     “இதுதான் ஜெயமோகனின் இலக்கிய  அறமா?” – எனக் கேள்வி எழுப்பிய பதிவை எனது முகநூலில் 02-06-2020 அன்று பதிவிடுகிறேன். இதற்கு பதில் சொல்லாத ஜெயமோகன், தன் இணையப்பக்கத்தில் 07-06-2020ல் பா. செயப்பிரகாசம் என ஒரு பதிவும், பா.செயப்பிரகாசம் பற்றி என மற்றொரு  பதிவும் ஒன்பது பக்கங்களுக்கு இரு பதிவுகளை வெளியிட்டார்.  ஏற்கனவே அவர் என்ன சொன்னாரோ, அவைகளை   உறுதிப்படுத்திய தோடு  மேலும் பல அவதூறுகளைப் பொழிந் திருந்தார். இதன்பேரில்  சட்ட நடவடிக்கை அறிவிக்கை அனுப்பப்பட்டது. அவருடைய வழக்கறிஞர் அனுப்பிய பதில் கடிதத்தில் அதற்கு ஆதாரமாக இரண்டு இணைப்புகள் – அவை கீற்று இணையதளத்தில் 2010-இல் வெளியானவை. அவர் என்மீது வைத்த அவதூறுகளுக்கும் இந்த இணைப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கீற்று இணையதள  ஆசிரியர் நந்தன் இதனைத் தெளிவாக இவ்வாறு விளக்கியுள்ளார்:  “இரு கட்டுரைகளும் ஜெயமோகன் பரப்பிய அவதூறுகளுக்கு எந்தவிதத்திலும்  வலு சேர்ப்பவை அல்ல. அவர் மன்னிப்பு கேட்பதே முறையானது.”   “சாதியம், சாதி மறுப்பு இவற்றில் உங்களின் நிலைப்பாடு என்ன ?” “சாதி என்ற சொல்லையே இழிவாகக் கருது கிறவன் நான். அந்த உணர்வை என் அருகில் கூட நான் வரவிட்டதில்லை.  சாதியை அதன் வேரோடும் வேரடி மண்ணோடும் சில்லு வேர்களோடும் பெயர்த்து வீசவேண்டும் என்று என் எழுத்தில், உரையில், செயலில் வெளிப் படுத்தி வருபவன் நான். இது என்னை அறிந்த வர்களுக்குத் தெரியும்.  நான் என் மகனுக்கு  சாதிமறுப்புத் திருமணம் செய்து வைத்திருக் கிறேன். அந்தக் காலத்திலேயே என் தங்கைக்கு சாதிமறுப்பு புரட்சிகரத் திருமணத்தை புரட்சி யாளர்கள்  முன்னிலையில் நடத்தியிருக்கிறேன். நிறைய சாதி மறுப்புத் திருமண நிகழ்வில் பங்கேற்றுள்ளேன். “கொலை செய்யும் சாதி” என்று அழுத்தமாக சாதியத்தை எதிர்த்து நான் எழுதிய நூல் இதற்கெல்லாம் ஒரு சாட்சி.    அவர் விடும் சாதிய அம்பு பூஞ்சையானது. சாதிக் கொடுமையைச் சாடி வருகிறவை எனது    எழுத்துக்கள். பள்ளிக்கூடம், மணல் என்ற எனது நாவல்களுக்கு சாதி எதிர்ப்பு அடிநாதம்தான் பேசுபொருள்.” ``சட்ட ரீதியான நடவடிக்கைக்குக் போயிருக்கக் கூடாது;   கருத்து மோதலை அந்தத் தளத்திலேயே  தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று  சிலர் கூறுகிறார்களே?” நடந்தது கருத்து மோதல் அல்ல, அவதூறு. நடப்புச் சமுதாயத்தில் ஊழல் நிலவுகிறது  என்று சொல்வது ஒரு கருத்து;  பொதுவாக இன்றைய அரசியல் கலாச்சாரம் சமூகத்தின் பொதுக் கலாச்சாரம் ஆகியவை ஊழல் மயமாக ஆகிவிட்டது என்று  சொல்வது வேறு.  ஆதாரம் இல்லாமல் ஒருவரைச் சுட்டி இவர் ஊழல் செய்தார் என்று சொல்வது அவதூறு. இல்லாததை இருப்பதாகச் சொல்வதும், செய்யாததைச் செய்ததாகச் சொல்வதும் அவதூறு. இந்த அமில வீச்சு அறிவார்ந்த இலக்கியத் தளத்துக்குத் தேவையில்லை.  முக்கியமாக என் முகநூல் பார்வையாளர் களான பதிவர்களிடம் கருத்துக் கேட்டிருந்தேன். ஏறத்தாழ அனைவரும் சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்தனர்.” “உங்களுக்கு ஆதரவளித்து கையெழுத்திட்ட தமிழ்ப் படைப்பாளிகளின் கண்டன அறிக்கை உங்களது தூண்டுதலா? அல்லது அவர்களின் தன்னெழுச்சியா?” “உண்மையில் நான் எந்த இடது சாரிக் குழுவுக்கும் தலைமையில் இருந்ததில்லை: புனைப்பெயரில் இருப்பதாக ஒரு பிதற்றல்,  இது கூட உளவுத்துறைக்கு தெரியாதா என்று உளவுத்துறை மீது ஒரு எள்ளல், சாதி வெறி பிடித்த உயர் அதிகாரியாய் இருந்தவர் என்ற குத்தல் – இத்தியாதிகள்  குமைச்சலும் எரிச்சலும்  எழுப்ப, எழுத்தாளர்கள் கண்டன அறிக்கை வெளியிட முடிவெடுத்தனர்.  தஞ்சை இலக்கிய வட்டத்தின் பொறுப்பாளர்செ.சண்முகசுந்தரம் கண்டன அறிக்கையை வரைவு செய்து நண்பர்களுடன் கலந்து அனைவருக்கும் அனுப்பி ஒருங்கிணைத்தார். ஏறக்குறைய இருநூறு பேர்   ஒப்பமிட்டுள்ளனர். “ஒரு கும்பல் கூடி ஓர் எழுத்தாளனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லி பத்திரிக் கைகளுக்கு அனுப்பலாம் என்பதுதான் அவதூறு” என, கண்டன அறிக்கையில் ஒப்பம் கொடுத்த அத்தனை பேர் மீதும் பாய்ந்தார் ஜெயமோகன்.  ஒப்பம் இட்ட அனைவர் மீதும் வழக்குத் தொடுப்பேன் என அறிவித்தார். தன்னை விமர்சிக்கிற   ஒரு எழுத்து,  பேச்சு, ஊடகம் எதுவென்றாலும்  குளிர் ஜுரம் கண்டது  போல் எதிர்கொள்ளும் அவர் இயல்பு,  இதிலும் அம்பலப்பட்டது.”      “அரசு அதிகாரியாக இருந்துகொண்டு, இடதுசாரி எழுத்தாளராக இருப்பது  குற்றமா?” “ஐயையோ, இருக்கலாமா, கூடவே கூடாது! ஜெயமோகன் என்ற ‘மாஸ்டர்’ நோக்கில் இது மாபெரும் குற்றம். அரசுப் பணியில் அவர் மாதிரி படைப்பாளிகளாய் இருக்கலாம் என்பது உள்ளோடும் ஒப்புதல்.  அவரும் நடுவணரசின் தொலைபேசித் துறையில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அரசு அலுவலராக இருந்துகொண்டு அரசை விமர்சிப்பதில், எதிர் எழுத்துக்கள் வடிப்பதில்  என்ன தவறு? அரசுத் துறையில் இருப்பவர்கள் அரசை விமர்சிக்கக் கூடாது என்பதும், ஒரு முதலாளியின் கீழ் வேலை செய்பவர்கள் அவரைப் பற்றிய ஆதங்கத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பதும்  ஒடுக்குமுறைக்கான வரையறை. இதுதான் பாசிசத்தின் குரல். அது ஜெயமோகனிடம் இருந்து வருவதில் வியப்பு இல்லை.”   “இன்றைய உலகமயமாக்கல் கால அரசியல் நீரோட்டத்தில் புரட்சிகர இடதுசாரி இலக்கியப் படைப்புகள் பின்தங்கி விட்டனவா? ” “சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அது முதலாளியம்; பிறகு அதன் பெயர் ஏகாதிபத்தியம்; அந்நூற்றாண்டு இறுதிகளில், இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் அது உலகமயம்.   இந்தப் பேய் கண்ணுக்குத் தெரியவே அழிம்பு செய்கிறது. உலகப் பரப்பில் உள்ள ஒவ்வொரு  மனித உயிரும், இனம் மொழி பண்பாடு வாழ்வியல்  என சுய சுவாசம் அற்றுப்போன எலும்புக்கூடு களாய்   நடமாடச் செய்துள்ளது.  சுவாசிக்க, என் மூச்சுப் பறைய “காற்றே வா” எனக் கை உயர்த்திக் கேட்கும் உருவங்கள் எங்கெங்கும்   காணும்படியாகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு கழுத்து நெரிப்போ அத்தனை அளவுக்கு   எதிர்ப்புக் குரல்கள். இக்குரல்களின் தொகுப்புத் தத்துவமாக,   சமூக விஞ்ஞானமான மார்க்சியம்  மனித விடுதலையை முன்வைத்தது.   அதனடியான  இடதுசாரிக் கருத்துக்கள் எங்கும் பரவி வருகிறது. நோம் சாஸ்கி போல் முதலாளித்துவ நாடுகளில் வாழும்  அறிஞர்கள் உலகமய எதிர்ப்புப் பரப்புரைக்கு கூர் ஏற்றி வருகின்றனர். கலை இலக்கியம்  போன்ற அனைத்து ஊடகங்கள் வழியாகவும் இது மேலெடுக்கப்படுகிறது; முடிந்து போய்விட்டது என்று எண்ணப்பட்ட மக்கள் கலை இலக்கியப் படைப்புகள் இப்போது  மீள்பதிப்பு காணத் தொடங்கியுள்ளன. பகுத்தறிவையும் மனித நேயத்தையும் இணைத்து வெளிவரும் படைப்புகளை முற்றாக இலக்கிய நிகழ்வு நிரலிலிருந்து அகற்றுவது, அதை அதிநவீனத்துவப் போக்காகக்  தமிழில் ஜெயமோகன் & கூட்டத்தால் முன்னெடுத்து நிலைப்படுத்தப்படுகிறது. இது இந்த இலக்கிய மாஸ்டர்களின் திருவினையல்ல, உண்மையில் பகுத்தறிவையும் மனிதநேயத்தையும் உலக வாழ்வியல் அகராதியிலிருந்து அகற்றும் உலகமயத்தின்  நிகழ்வுநிரலில் காணக்கூடியது தான்.”