மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 12

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 12

13. கர்ணனின் மனத்தூய்மை கர்ணனை அங்கதேச மன்னனாக துரியோதனன் அறிவித்ததிலும் ஒரு சட்டப்பிரச்சனை இருக்கிறது. அஸ்தினாபுரத்தில் நடக்கும் வில்வித்தையில் அர்ச்சுனன் தன் ஆற்றலைக் காண்பித்தபின், மைதானத்தில் அமர்ந்திருந்தவர்களின் மத்தியிலிருந்து ஆயிரம் சூரியனின் தேஜஸோடு ஒரு அழகான வாலிபன் எழுந்து வந்தான். தன்னையும் வில்வித்தையில் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அவன் கிருபாச்சாரியாரைக் கேட்டான். அவன் பெயர் கர்ணன் என்பதோ அவன் தேரோட்டி மகன் என்பதோ யாருக்கும் தெரியாது. ஆனால் கிருபாச்சாரியார், அந்த இளைஞனை வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்தார். அதனால் அவர், “நீ யார்? நீ சத்ரியனா? நீ எந்த நாட்டு மன்னன்? சத்ரியர்கள் மட்டும்தான் இந்த வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள முடியும். அதனால் நீ யார் என்பதைச் சொல்” என்று அந்த இளைஞனிடம் கேட்டார். அந்த இளைஞன் கிருபாச்சாரியாரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தயங்கி நின்றான். அப்போது அந்தப் பக்கமாக வந்த தேரோட்டி அதிரதன், “கர்ணா, நீ இங்கே என்ன செய்கிறாய் மகனே?” என்று கேட்டதும், அவன் தேரோட்டி அதிரதனின் மகன் என்பதையும் சூத்திரன் என்பதையும் கிருபாச்சாரியாரும் மற்றவர்களும் தெரிந்துகொண்டனர். அவர்கள் கர்ணனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தனர். “இது சத்திரியர்களுக்கான வீரப் போட்டி. தேரோட்டியின் மகனான நீ போய் தேரோட்டும் வேலையைப் பார்” என்று கிருபாச்சாரியாரும் பாண்டவர்களும் கர்ணனின் மனம் நோகப் பேசினார்கள். கர்ணன் பதில் பேசமுடியாமல் தலைகுனிந்து நின்றான். அர்ச்சுனனை எதிர்க்க, அவனுக்கு இணையான வில்லாளியாகக் கர்ணனைப் பார்த்த துரியோதனன், “நான் இப்போதே கர்ணனை அங்க தேச மன்னனாக்குகிறேன்” என்று பிரகடனம் செய்து, அங்கேயே மகுடம் சூட்டி, கர்ணனைக் கௌரவித்தான். “இந்த உதவிக்கு, என் உயிரைத் தந்து கைம்மாறு செய்வேன்” என்று கர்ணன் நெகிழ்ச்சியோடு துரியோதனனுக்கு சத்தியம் செய்து கொடுத்தான். அதன்பின்பு அவர்களுடைய நட்பு, எந்தவொரு இதிகாசத்திலும் காணக்கிடைக்காத அபூர்வமான காவிய நட்பாக நீடித்தது என்பதை அனைவரும் அறிவோம். இந்தச் சர்ச்சைகளின் காரணமாக, அன்று தொடர இருந்த வில்வித்தைப் போட்டி அத்தோடு நின்றுபோய்விட்டது. கலைந்துபோன மக்கள், கர்ணனைப்பற்றியே பேசிக்கொண்டு வீடு திரும்பினார்கள். இதில் உள்ள சட்ட நிலைப்பாடு என்னவென்றால், கர்ணன் துரியோதனனால் அங்கதேச மன்னனாக்கப்பட்டுவிட்டதால், அவன் அந்தஸ்து உயர்ந்ததே தவிர, அவன் தேரோட்டியின் மகன் என்பதும் சூத புத்ரன் என்பதும் அப்போதும் மாறவில்லை என்பதுதான். அதாவது, அங்கதேச மன்னாகிவிட்டதால் கர்ணன் சத்திரியனாகிவிடவில்லை என்பதுதான் மகாபாரதக் கால சட்ட நிலைப்பாடு. வில்வித்தைப் போட்டி என்பது மன்னர்களுக்கானது என்பது கிருபாச்சாரியரின் வாதம் அல்ல. அது சத்ரியர்களுக்கானது என்பதுதான் கிருபாச்சாரியரின் நிலைப்பாடு.அதனால், அங்கதேசத்தின் மன்னனாக்கப்பட்டாலும் சூத புத்திரனான கர்ணன் கிருபாச்சாரியாரின் பார்வையில் சத்ரியனாகிவிடவில்லை. அதனால், வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ளும் உரிமை உள்ளவனாகவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. .அதனால், துரியோதனின் செயலானது, கர்ணனை சாதிய இடரிலிருந்து நிரந்தரமாக மீட்டு எடுத்துவிட்ட உபாயம் என்று சொல்லமுடியாது. அதனால் மற்றவர்கள், அங்கதேச மன்னனான கர்ணனை சூத புத்ரனாகவே பார்த்தார்கள். இன்னொரு கோணத்தில் பார்த்தால், சத்திரியர்கள் மட்டுமே அரசாளத் தகுதியுடையவர்கள் என்று பீஷ்மர் சொன்ன சட்ட நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில், ஒரு சூத புத்திரன் அரசனாக்கப்பட்ட நிகழ்ச்சி நடக்கிறது. அதனால் கர்ணனின் முடிசூட்டு விழாவானது, மகாபாரதத்தின் சத்ரியர்கள் பற்றிய மையக் கருத்து மற்றும் சட்ட நிலைப்பாட்டைத் தகர்த்தெறிந்துவிடுவதைக் கவனிக்க முடிகிறது. சூத புத்ரனான கர்ணன், அங்கதேச மன்னாக முடியும் என்றால், அதே கர்ணனும் அவன் மகன் விருஷகேதுவும் ஏன் அஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்திகளாக முடிசூட்டிக்கொள்ள முடியாது என்ற கேள்விக்கு விடையில்லை. உலகம் போற்றும், நிகரில்லா ஒரு இதிகாசத்தில் சொல்லப்படும் இந்த ஒரு சம்பவம், இதிகாசத்தின் கதைப்போக்கு சரியானதுதானா என்று சிந்திக்க வைத்துவிடுகிறது என்றால் மிகையல்ல. கர்ணனை ஆற்றில் கண்டெடுத்தது அதிரதன். அவன் பீஷ்மரின் தேரோட்டி, அவனுடைய மனைவியின் பெயர் ராதா. அவர்கள் தன்னுடைய தந்தையும் தாயும் இல்லை என்பது கர்ணனுக்குத் தெரியும். ஏனெனில், அவனை ஆற்றிலிருந்து மீட்டெடுத்தபோது அவனை வைத்திருந்த ஆடம்பரமான பேழையையும் அதனுள் இருந்த அரச வம்சச் சேலையையும் விலைமதிப்பில்லாத அணிமணிகளையும் அவர்கள் கர்ணனிடம் ஒப்படைத்துவிட்டார்கள். அதனால், தன்னைப் பெற்ற தாய், பெற்றெடுத்தவுடன் தன்னை ஆற்றில் விட்டுவிட்டாள் என்பது கர்ணனுக்குத் தெரியும். கர்ணனின் வளர்ப்புத் தாய் ராதாவின் பெயராலேயே, கர்ணன் ராதேயன் என்றும் அழைக்கப்பட்டான். தன்னுடைய தந்தை ‘சூரிய தேவன்’ என்பது கர்ணனுக்குத் தெரியுமா, தெரியாதா என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி, இதிகாசத்தை வியாசர் அற்புதமாய் நகர்த்துகிறார். சூரிய தேவன்தான் தன்னுடைய தந்தை என்று கர்ணனுக்குத் தெரிந்திருந்தால், சூரிய தேவனிடமே, ‘தன் தாய் யார்?’ என்பதைக் கர்ணன் கேட்டறிந்திருக்கமுடியும்.அதிலும் கர்ணனின் கவசகுண்டலத்தை யாசகம் பெற்றுப்போக, இந்திரன் பார்ப்பன வேதியன் வடிவத்தில் வந்தபோது, ‘வந்திருப்பவன் இந்திரன்’ என்று கர்ணனை எச்சரிக்கை செய்த சூரியதேவனிடம் தன் தந்தை பற்றிக் கேட்டிருந்தால், கர்ணனைத் தன் ‘பிறப்பறியா மர்மத்தினால்’ புழுவைப் போலத் துடிதுடித்து வாழ சூரிய தேவன் அனுமதித்திருக்க மாட்டான் என்பது தெளிவு. அதனால்தான் சூரிய தேவன்தான் தன் தந்தை என்பது கர்ணனுக்குக் கடைசிவரை தெரியாது என்பதை நாம் யூகித்துக்கொள்ள முடிகிறது. கர்ணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதனின் பெயருக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.அதிரதன் என்றால் யுத்தத்தில் தரையில் கும்பலோடு கும்பலாய் நின்று எதிரிகளுடன் சண்டை செய்யும் சாதரணமான காலாட்படைப் போர் வீரன் என்ற அர்த்தமும் உண்டு.அதனால், அதிரதன் என்ற தேரோட்டியின் மகன் என்ற அர்த்தத்தில் கர்ணனைக் கேவலப்படுத்திய பலர், கர்ணனை ‘சூத புத்திரன்’ என்று அழைத்தார்கள். ‘சூத புத்ரன்’ என்றழைத்தாலே கர்ணன் மனம் சோர்ந்து போவான். அதிரதனும் ராதாவும் தன் சொந்தத் தாய் தந்தையர் இல்லை என்பது கர்ணனுக்குத் தெரியும் என்பதால், அவனை ‘சூத புத்திரன்’ என்று அழைத்தவர்களை எதிர்த்துப் பேசி, ‘தான் சூத புத்திரன் அல்ல’ என்பதை நிறுவி, அவ்விதம் அழைத்தவர்களின் வாயை அடைத்திருக்க முடியும். ஆனால் மகாபாரதத்தில் எந்தவொரு இடத்திலும், கர்ணன் ‘சூத புத்ரன்’ என்று தன்னை அழைத்தவர்களிடம் வாதம் செய்ததாக ஒரு நிகழ்வுகூட இல்லை. ‘சூத புத்ரன்’ என்றழைத்து அவமானப்படுத்தினால், தலைகுனிந்துகொண்டு வாயடைத்து நின்றுவிடுவான். அதற்குப் பிரதான காரணம், கர்ணன் தன்னுடைய வளர்ப்புப் பெற்றோரைக் கடைசிவரையில் தன் சொந்தப் பெற்றோரைப்போல மதித்ததுதான் என்கிறார் வியாசர். அதனால் அவர்களைத் தன் சொந்தப் பெற்றோர்கள் இல்லை என்று சொல்லி அவமானப்படுத்துவதைக் கர்ணன் செய்யவில்லை என்கிறார் வியாசர். ‘சூத புத்ரன்’ என்ற பதத்திற்கு என்ன அர்த்தம் என்பதை இணையத்தில் தேடினால், ‘பிரமாணத் தாய்க்கும் சூத்திரத் தந்தைக்கும் பிறந்த மகன்’ என்று காட்டுகிறது. அது முற்றிலும் தவறான அர்த்தம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அது தவறுதலான புரிதலின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள தவறான அர்த்தம் என்பதில் சந்தேகமில்லை. ‘சூத புத்ரன்’ என்பதற்கு ‘தேரோட்டியின் மகன்’ என்று கூகுள் இன்னொரு அர்த்தம் சொல்கிறது. எது எப்படியிருப்பினும், சாதிய அமைப்பில் கீழடுக்கில் உள்ளவர்களையே சூத புத்ரன் என்று அழைத்தார்கள் என்று நாம் அர்த்தம் கொள்ள முடியும். ‘அதிரதன்’ என்ற சொல்லும் ‘கீழடுக்கில் உள்ள மனிதனையே அது குறிப்பிடுகிறது’ என்பதை உறுதிப்படுத்துகிறது. இதை ஏன் இவ்வளவு விரிவாகச் சொல்ல நேர்ந்தது என்றால், சாதிய அமைப்பின் கீழடுக்கைச் சேர்ந்த மனிதன் என்று கருதப்பட்டதால், நாளும் பொழுதும் கர்ணனைப் போன்றவொரு மகாரதனே, எந்த அளவிற்கு உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சொல்லொணா அவமானத்திற்கு உள்ளானான் என்பதை விளக்குவதற்குத்தான். குந்திதேவிக்குக் கர்ணன் என்றொரு மகன் பிறந்த விஷயம் பாண்டுவிற்கே தெரியாது. அனைத்தும் அறிந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு மட்டுமே இந்த ரகசியம் தெரியும். பீஷ்மருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது என்பதைத் தவிர, அதை உறுதியாகச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. எனவே, ராஜமாதாவான குந்திதேவி தன்னுடைய தாயாக இருகக்கூடும் என்ற சந்தேகம் கர்ணனுக்குக் கனவில்கூடத் தோன்றவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. இதிலும் மாறுபட்ட கதைகள் சொல்லப்படுகின்றன. அஸ்தினாபுரத்தில் வில்வித்தை நடந்தபோதே மைதானத்தில் கவச குண்டலத்தோடு ஆயிரம் சூரியனின் தேஜஸோடு அர்ச்சுனனுக்கு சவால் விட்டபடி வந்த இளைஞனைப் பார்த்ததும், தான் ஆற்றில்விட்ட தன் மகன் கர்ணன்தான் இவன் என்பதைத் தெரிந்துகொண்ட குந்திதேவி, மயக்கமுற்று கீழே சரிந்துவிட்டாள் என்று, ராஜாஜி தனது மகாபாரத (வியாசர் விருந்து) நூலில் கூறுகிறார். அது சரியாக இருக்குமெனில், அதன்பின் கர்ணனைக் குந்திதேவி நேரில் சந்திக்க ஏன் முயலவில்லை என்பதற்கும் அவன் பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்ற வகையில் பாண்டவர் அணியில் சேர்ந்துகொள்ள அவனை ஏன் வற்புறுத்தவில்லை என்பதற்கும் ராஜாஜியின் நூலில் விளக்கம் இல்லை. இன்னொரு கதையின்படி, குருக்ஷேத்ர யுத்தம் தொடங்குவதற்குச் சற்று முன்புதான் கிருஷ்ணன், கர்ணன்தான் அவள் ஆற்றில் விட்ட மகன் என்ற ரகசியத்தைக் குந்திதேவிக்குச் சொல்லி, அவளுக்கு சில ஆலோசனைகள் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. எது எப்படியாயினும், குந்திதேவிதான் தன் உண்மையான தாய் என்பது தெரிந்ததும் கர்ணன் மகிழ்ச்சிக் கடலிலும் துன்ப சாகரத்திலும் ஒரே நேரத்தில் மூழ்கிப்போனான். தான் சத்ரியன் என்று தெரிந்துகொண்டதால் மகிழ்ச்சி. தான் அஷ்தினாபுரத்துக்கே மன்னனாகத் தகுதியுள்ள தன்னை, ‘சூத புத்ரன்’ என்று சொல்லி, தன் பிறப்பறியா மர்மத்தைச் சுட்டிக் காட்டி அவமானத்தில் மனம் நோக வைத்ததால் துன்பம். கர்ணனின் ஜீவகாருண்யச் சிந்தனை பற்றியும் மனிதாபிமானக் கண்ணோட்டம் பற்றியும் ஒவ்வொரு மாநிலத்திலும் பல சுவாரசியமான உபகதைகள் இருக்கின்றன. அதில் ஒருசில உபகதைகளை இங்கே எடுத்துக்காட்டாகச் சொன்னால் மட்டுமே, அந்த மகாரதன் எவ்வளவு மென்மையான உன்னதமான மனிதன் என்பதும் சாதியப் புறக்கணிப்பின் காரணமாக அவன் எவ்வளவு நொந்து நொடிந்து வாழ்ந்தான் என்பதும் புரியும். துரோணர் தொடக்கத்தில், கர்ணனை சீடனாக ஏற்றுக் கொள்ளலாமா என்று சோதிக்க எண்ணி, கர்ணனை அதிகாலையில் அவரை வந்து சந்திக்கச் சொல்கிறார். அவரின் சீடனாவது கர்ணனின் நீண்ட காலக் கனவு என்பதால், துரோணரை அவர் சொன்னபடியே அதிகாலையில் போய்ப் பார்த்து வணங்கி நின்றான். அப்போது, கர்ணனின் குறி வைக்கும் திறனை அறிந்துகொள்ள அந்த நேரத்தில் வானத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு பறவையைக் காட்டி, அதை அம்பெய்தி வீழத்தும்படி கர்ணனை துரோணர் பணித்தார். ஆனால் கர்ணன், அந்தப் பறவையை வீழ்த்த வில் வளைக்காமல் நின்றுவிட்டான். ஆச்சரியமடைந்த துரோணர், “ஏன் நான் சொன்னபடி அந்தப் பறவையை அம்பெய்து வீழ்த்தவில்லை?” என்று கர்ணனைக் கேட்டார். ஏனெனில் வேறு யாராக

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 10

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 10

11. மகாபாரதத்தில் தாசியும் நவீன பாரதத்தில் கொத்தடிமையும் திருதராஷ்டிரன் ஏன் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாகப் பிறந்தான் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் சொன்ன வியாசர், அதற்கு திருதராஷ்டிரனின் தலைவிதியோ கர்மாவோ காரணம் என்று சொல்லி மழுப்பவில்லை. திருதராஷ்டிரன் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாகப் பிறந்தததற்கு, அவனுடைய தாய் அந்நியருடன் உறவு கொள்வதை எண்ணி, கண்ணை மூடிக்கொண்டதால் ஏற்பட்ட எதிர்பாரத விபத்து என்று கூறிக் கதையை நகர்த்துகிறார். முதல் நாள் இரவு, நன்கு அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் தள்ளப்பட்ட அம்பிகை, பயங்கரமான உருவத்தில் இருந்த வேறொரு ஆணுடன் கலவி முடியும்வரை, கண்ணை இறுக மூடிக்கொண்டுவிட்டாள். அம்பிகை, கலவியின்போது கண்ணை இறுக மூடிக்கொண்டதால், திருதராஷ்டிரன் பார்வை  இல்லாத மாற்றுத்திறனாளியாகப் பிறந்தான் என்கிறார் வியாசர். அம்பாலிகையும் வியாசருடன் சகஜமாக உறவில் ஈடுபடவில்லை. மிகுந்த கூச்சத்துடன் நடந்துகொண்டதால் உடல் வெளுத்தும் மலடனாகவும் பாண்டு பிறந்தான் என்கிறது மகாபாரதம். ஆகவே, இரண்டு மனைவியர் இருந்தும் சாபத்திற்கு முன்பே அவனுக்கு குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. இதுபோகவும் அம்பிகையின் சேடிப் பெண்ணாக வேலை பார்த்த ஒரு பெண்ணையும் வியாசருடன் உறவு கொள்ள வைத்தார்கள். அந்த வேலைக்காரப் பெண்ணிற்குப் பிறந்தவன்தான் விதுரன். இந்தச் சம்பவங்களின்படி பார்த்தால், திருதராஷ்டிரனும் பாண்டுவும் சத்ரியர்களாக மாட்டார்கள்.  ஆனால் அவர்கள் விசித்ர வீரியனின் வாரிசுகளாக அரச பதவி பெற்றனர். அவர்களுடைய சகோதரன் விதுரன் மட்டும் சூத்திரனாகவே நடத்தப்பட்டான். திருதராஷ்டிரனும் பாண்டுவும் விதுரனும் வியாசருக்குப் பிறந்தவர்கள் என்பதால், ஒன்றுவிட்ட சகோதரர்கள் ஆவார்கள். ஆனால், விதுரனின் தாய் வேலைக்காரி (தாசி) என்பதால், மற்ற இருவரும் விசித்திர வீரியனின் புதல்வர்களாக ஒப்புக்கொள்ளப்பட்ட போதும், விதுரனை விசித்ரவீரியனின் மகனாக அன்றைய உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவும் ஏறத்தாழ, கர்ணன் பாண்டுவின் புத்திரனாகக் கருதப்படமாட்டான் என்ற சட்ட நிலைப்பாட்டோடு ஒத்த நிலைப்பாடாகும். விதுரன், பெரிய நீதிமான் என்று கொண்டாடப்பட்டவன். கிருஷ்ண பரமாத்மாவின் பரம பக்தன். அவன் கையில் இருந்த சிவதனுசு, உலகை வெல்லக்கூடியது. விதுரனால் சொல்லப்பட்ட சமூக நீதிகளை ‘விதுர நீதி’ என்ற பெயரில் தொகுத்துள்ளார்கள். திருதராஷ்டிரன் அரசவையில் முக்கிய அமைச்சராக இருந்த விதுரன், பல சமயங்களில் பாண்டவர்களை ஆதரித்துப் பேசும் வழக்கமுள்ளவனாக இருந்தான். அது துரியோதனனை எரிச்சலடைய வைத்தது. கிருஷ்ணன் ஊசிமுனை நிலம் கேட்டு சமாதானத் தூதுவனாக வந்தபோது, ‘நீ என்ன இருந்தாலும் தாசி மகன் (வேலைக்காரியின் மகன்)தானே’ என்று விதுரனை துரியோதனன் கடுமையாக வசை பாடினான். கர்ணனுக்குத் தன் தாய் யார் என்று தெரியாததால் ஏற்பட்ட அவமானத்தைவிட, தன் தாய் யார் என்பது தெரிந்ததால் விதுரன் சொல்லொணா அவமானப்பட்டான். பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி என்ற காரணத்திற்காக, அரசாட்சிப் பொறுப்பேற்கும் உரிமையைத் தன் தந்தை இழந்ததும் மூத்தவன் இருக்கும்போது இளையவன் மன்னனானதும் துரியோதனனை நிலைதடுமாற வைத்த மோசமான சட்ட நிலைப்பாடுகள். இவை ஒருபுறமிருக்க, ‘தாசி மகன்’ (வேலைக்காரியின் மகன்) என்றழைக்கப்பட்ட விதுரனின் தாயையும் அவளைப் போல அந்தப்புரங்களில் பணியாற்றிய வேலைக்காரப் பெண்களைப் பற்றியும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் அடிமைச் சமுதாயம் ஒருபோதும் இருந்ததில்லை என்பது சில தத்துவ ஆசிரியர்களின் கருத்து. அடிமைச் சமுதாயத்தைக் கடந்துதான் நிலப் பிரபுத்துவ சமுதாயம் ஏற்பட்டது என்று வாதிடுவோரும் உண்டு. இந்தச் சர்ச்சை இன்றும் முடிவில்லாத சர்ச்சையாக இருக்கிறது. அந்தப்புரப் பெண்களுக்குப் பணிவிடை செய்து அந்தப்புரத்திலேயே வாழும் பெண்களை, வேத வியாசர் ‘தாசி’ என்ற பெயரில்தான் அழைக்கிறார். ‘தாசி’ என்ற சொல்லுக்கு, வேலைக்காரி என்ற அர்த்தம் மட்டுமின்றி அடிமை என்ற அர்த்தமும் உண்டு. ஆனால், மகாபாரதத்தில் சொல்லப்படும் யயாதியின் கதையில், அசுர குருவின் (பிராமணர்) மகள் தேவயானியை, யயாதி மணந்தபோது அசுரர்களின் அரசனின் மகளான சர்மிஷ்டை, அவளுடைய தீய செயலுக்கு (வேறொன்றுமில்லை.. அசுர குருவின் மகள் தேவயானியை அரசனின் மகள் என்ற நிலையில் அவமதித்தாள்) தண்டனையாக தேவயானியின் ‘தாசி’யாக அனுப்பப்படுகிறாள் என்கிறது  மகாபாரதம். அதுமட்டுமன்றி, பின்ளாளில் யயாதி, சர்மிஷ்டையை தேவயானிக்குத் தெரியாமல் மணந்துகொண்டதால், தேவயானியை சமாதானம் செய்வதற்காக அசுர குரு சுக்கிராச்சாரியார், ‘உன்னுடைய யௌவனம் இப்போதே அழிந்து நீ முதுமை எய்துவாயாக’ என்று யயாதிக்கு சாபம் கொடுத்ததாகவும் மகாபாரதம்  சொல்கிறது. யயாதியின் கதை தனிக்கதை. அதை ‘தாசி’ பற்றிய பதப் பிரயோகத்தை விளக்குவதற்காக இங்கே குறிப்பிட நேர்ந்தது. தாசி என்பவள் ஒரு மணப்பெண்ணுக்கு தரப்படும் சீர்வரிசைப் பொருளைப்போல, எந்த உரிமையும் இல்லாத ஒரு அஃறிணைப் பொருளாக நடத்தப்படுவதை மகாபாரதத்தில் பார்க்கிறோம். அதனால் ‘தாசி’யை விரும்பி மணந்த யயாதி, சபிக்கப்பட்டான். விதுரனின் தாய் அவளுடைய விருப்பமின்றியே வியாசருடன் உடலுறவு கொள்ளும்படி செய்யப்பட்டாள். இந்த அடிமைமுறை, இப்போது இந்தியாவில் சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ‘கொத்து’ என்றால் உணவு என்று அர்த்தம். ‘கொத்தடிமை’ என்றால் உணவை மட்டும் கொடுத்து அடிமையைப் போல 24 மணி நேரமும் முதலாளிகளுக்கு உழைக்க வைக்கப்படுபவர்கள் என்று பொருள். கொத்தடிமை முறை இப்போது பெரும்பாலும் செங்கல் சூளைகளில்தான் இருக்கிறது. அங்கே, பள்ளிக்கூடம் போகவேண்டிய மாணவர்கள் வறுமையின் காரணமாக, ‘கொத்தடிமை’ ஆக்கப்படுகிறார்கள். அவர்கள் விலங்குகளைவிடக் கேவலமான வாழ்க்கை முறைக்கு உள்ளாக்கப்படுவதுடன், ஒரு சுதந்திர நாட்டில் எந்த மனித உரிமையும் இல்லாமல் ஒட்ட சுரண்டப்படுகிறார்கள். இப்போது இந்த முறை ‘சுமங்கலித் திட்டம்’ என்பதுபோல, பல்வேறு பெயர்களில் நூற்பாலை முதல் பல்வேறு தொழில்களில் கால் பதித்துவிட்டது. எங்கே இந்தக் கொத்தடிமை முறை வழக்கில் இருக்கிறதோ, அங்கே பெண்கள் எஜமானர்களின் காமப் பசிக்கு இரையாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. ‘கொத்தடிமை’ முறை குற்றம் என்று சட்டம் அறிவித்துவிட்டாலும் மகாபாரதக் காலத்தில் இருந்ததைப்போல், இன்றும் அது வழக்கில் இருப்பதைப் பார்த்து ரத்தக்கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது. இப்போது, ‘தொழில் வளர்ச்சியின்’ மூலம் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துகிறோம் என்ற சாக்கில், அந்நிய முதலாளிகளை இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அழைக்கும் அரசுகள், அவர்கள் தொழில் நடத்த சாதகமான சூழலை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில், இதுவரை 8 மணி  நேரமாக இருந்த வேலை நேரத்தை 12 மணி நேரமாக்க முயல்கிறார்கள். 8 மணி நேர வேலை – 8 மணி நேர ஓய்வு – 8 மணி நேர ஆக்கப்பூர்வமான செயல்பாடு என்று, ரத்தம் சிந்தியும் உயிர்த் தியாகம் செய்தும் மே தினத் தியாகிகள் பெற்றுத்தந்த மனித உரிமையைப் பறிப்பதற்கு, எல்லாவிதமான பசப்பு வார்த்தைகளையும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பேசுகின்றன. 12 மணி நேர வேலை என்பது, வேறு வடிவத்திலான கொத்தடிமை முறை என்பதை இந்தியத் தொழிலாளர் வர்க்கம் அறியும். எனவே, வேலை நேரத்தை அதிகரித்து அதிக உபரி மதிப்பை லாபமாகப் பெற, தொழிலாளர் வர்க்கத்தைக் கொடும் சுரண்டலுக்கு உள்ளாக்கி, தொழிலாளியை குடும்பம், சமூகம்,அறிவியல் மற்றும் கலையில் ஈடுபாடு முதலான எல்லா அம்சங்களில் இருந்தும் அந்நியப்படுத்த முன்னெடுக்கப்பட்ட முயற்சி, இப்போது தற்காலிகமாக முறியடிக்கப்பட்டுவிட்டாலும், அந்த அபாயம் முழுமையாக நீங்கிவிடவில்லை என்பதால், அதை எதிர்க்க சதா விழிப்புணர்வோடு இருக்கவேண்டியது அவசியமாகிறது. அன்றாடம் காய்ச்சிகளான கட்டடத் தொழிலாளர்கள், வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘கூலிமுக்குகள்’ அதிகரித்துக்கொண்டே போகின்றன. அந்தத் துறையில் வேலைநேரம் முறைப்படுத்தப்படாமல், கடும் உடல் உழைப்பினால் மாடமாளிகைகளைக் கட்டவேண்டியுள்ளது. அவர்களுக்கு தினந்தோறும் வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதமுமில்லை. அந்தக் கூலி முக்குகள் கடும் போட்டியின் காரணமாக, ‘கொத்தடிமைச் சந்தைகளாக மாறிவருவதை, ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பொய் பேசும் அரசியல்வாதிகள், கருத்திலேயே கொள்வதில்லை என்பது வேதனையான விஷயம். அதனால் மகாபாரதக் காலத்தில் ‘அடிமை முறை’ இருந்ததா? இல்லையா? என்பது ஒருபுறமிருக்க, இன்றைய சமுதாயத்தில் ‘நவீனக் கொத்தடிமை முறை’ இந்தியாவில் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. (வரும் புதன்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 9

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 9

10. துரியோதனின் புகழ் துரியோதனன் பிறந்தபோது நரிகள் ஊளையிட்டதாகவும் கோட்டான்கள் கூவியதாகவும் கழுதைகள் கத்தியதாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் துரியோதனனின் வருகையைப் பல்வேறு கெட்ட சகுனங்களோடு தொடர்புபடுத்தி அவன் பிறப்பை அறிமுகப்படுத்துகிறார் வியாசர். ஆனால், துரியோதனன் சத்ரியனைப் போல வீரமரணம் எய்தியபோது பலமுறை வானில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்ததாகச் சொல்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ‘நான் சத்ரியனாக வீர மரணம் எய்தி, என் சுற்றத்தாரோடும் என் நண்பன் கர்ணனோடும் மகிழ்வோடு இருக்க சொர்க்கம் போகிறேன். பாவிகளான நீங்கள் இந்தப் பாவபூமியில் நீண்டகாலம் வாழ்ந்து ஆட்சி புரிந்து மாளாத துன்பமுற்று, பின்பு மேலுலகம் வருவீர்களாக. சத்ரியனாக மரணமடைவதில் நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு, புலம்பிட எதுவுமில்லை’ என்று மரணத் தருவாயில் துரியோதனன் சொன்னபோதெல்லாம் தேவர்கள் பூமாரி பொழிந்து அவனை கௌரவப்படுத்தினார்கள் என்கிறார் வியாசர். எதையும் தட்டையாகச் சொல்லாமல் சுவாரசியமான நிகழ்வாகச் சொல்வது மகாபாரதத்தை இணையில்லாத இதிகாசமாக்குகிறது என்பதற்கு இவையும் எடுத்துக்காட்டு. அந்த கௌரவம் இரண்டு தரப்பிலும், துரியோதனனைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். தேவர்கள் பூமாரி பொழிந்ததற்குப் பிரதான காரணம், திரௌபதி செய்த சபதமே. யுத்த நெறிகளுக்குப் புறம்பாக, சட்டவிரோதமாக, பீமன் துரியோதனைனைக் கொல்வதற்குக் காரணமாய் அமைந்தது அந்த சபதம். துகிலுரிதல் நிகழ்ச்சிக்குப் பின்பு, திரௌபதி தன் கருங்கூந்தலை அவிழ்த்துவிட்டு, “துரியோதனா, பீமனின் கதாயுதத்தினால் பிளக்கப்படும் உன் தொடையின் ரத்தத்தை இந்த அவிழ்ந்த கூந்தலில் பூசாமல் என் கூந்தலை முடிந்திடமாட்டேன்” என்று சபதம் செய்தாள். துரியோதனனும் பீமனும் கதாயுதத்தில் சமமானவர்கள். இருவருக்குமே கிருஷ்ணனின் அண்ணனான பலராமன்தான் குரு. கதாயுத யுத்தத்தில் இடுப்பிற்குக் கீழே அடிக்கக்கூடாது என்பது சட்ட நியதி. ஆனால், திரௌபதி சபதம் செய்யும்போதே ‘பீமனின் கதாயுதத்தால் பிளக்கப்பட்ட உன் தொடை ரத்தம்’ என்று யுத்த நியதிக்குப் புறம்பாகச் சபதம் செய்கிறாள். வேறு வார்த்தைகளில் சொன்னால், திரௌபதியின் அந்தச் சபதமே அப்போதைய யுத்த நெறி சம்பந்தமான சட்ட நிலைப்பாட்டிற்குப் புறம்பான சபதம். இறுதியில், துரியோதனனுடன் பீமசேனன் கதை யுத்தம் செய்தபோது, இருவரும் சமமாகப் போரிட்டனர் என்கிறார் வியாசர். அவர்கள் யுத்தம் செய்துகொண்டிருந்தபோது, தீர்த்த யாத்திரை போயிருந்த கிருஷ்ணனின் அண்ணன் பலராமன், யுத்தம் நடந்துகொண்டிருந்த இடத்திற்கு வந்துவிடுகிறார். யுத்தத்தை அவரும் கிருஷ்ணனோடு கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். கதாயுத யுத்தம் நீண்ட நேரம் நீடித்தது. யார் வெல்வார் என்று சொல்ல முடியாத நிலை இருந்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா, தன் தொடையைத் தட்டி பீமனுக்கு சமிக்ஞை கொடுத்தார். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட பீமசேனன், துரியோதனன் எதிர்பார்க்காத சமயத்தில் துரியோதனின் தொடையில் அடித்து, துரியோதனின் தொடையைப் பிளந்தான். துரியோதனன் நிலை தடுமாறி நிலத்தில் விழுந்தான். அப்போது பீமசேனன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தரையில் கிடந்த துரியோதனின் தலையைத் தன் கால்களால் மிதித்துத் துவைத்தான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த பலராமனின் கோபம் உச்சத்தைத் தொட்டது. யுத்த நியதிகளுக்குப் புறம்பாகத் தொடையில் அடித்ததுமில்லாமல், கீழே விழுந்த துரியோதனின் தலையைக் கால்களால் மிதித்துத் துவைத்ததை பலராமனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பீமசேனனைப் பார்த்து, பலராமன் காறி உமிழ்ந்தான்.பலராமனுக்கு ‘ஹலாயுதன்’ என்று ஒரு பெயர் உண்டு. ஹலாயுதம் என்பது, உழவர்கள் பயன்படுத்தும் ஏர் என்கிற மேழி. முறையற்ற செயல் செய்த பீமனைத் தாக்குவதற்காக, பலராமன் ஹலாயுதத்தைத் தூக்கிக்கொண்டு பீமனைத் தாக்கத் தயரானபோது, கிருஷ்ணன், “நீ தீர்த்த யாத்திரை போயிருந்தபோது நடந்த யுத்தத்தில், இரண்டு பக்கத்திலும் ஏராளமான முறைகேடுகளை இரு தரப்பினரும் தெரிந்தே செய்துள்ளனர். மேலும், திரௌபதி துரியோதனின் தொடை ரத்தத்தைப் பூசிக் குழல் முடிப்பேன் என்று சபதம் செய்துள்ளதால், பீமனுக்கு துரியோதனின் தொடையில் அடித்துப் பிளப்பதைத் தவிர வேறு வழியில்லை. இல்லையேல் திரௌபதி, அவள் செய்த சபதத்தின்படி கடைசிவரை குழல் முடிக்க முடியாமலே போயிருக்கும். எனவே, கோபத்தை அடக்கிக்கொண்டு மதுராபுரிக்குப் போ” என்று சொல்லி, பலராமனை சமாதானம் செய்து அனுப்பினான். அந்த நொடி முதல் துரியோதனனின் பேச்சு, செயல் எல்லாமே ஒரு மாவீரனின் பேச்சு மற்றும் செயலை ஒத்திருந்ததாலேயேதான், தேவர்கள் அவன் இறந்தபோது பூமாரி பொழிந்து அவனை வாழ்த்தினார்கள். “நான் சக்ரவர்த்தி. நான் இறந்த பிறகு, என் தலையைக் காக்கைகள் மிதிக்கும். அதை பீமா, என் மரணத் தருவாயில் நீ செய்தாய். அதனால் நீ காக்கைக்கு நிகரானாவன்தான். நான் சக்ரவர்த்தியாகவே இறப்பேன்” என்று முழங்கினான். துரியோதன வதமானது பாண்டவர்களுக்கும், குறிப்பாக கிருஷ்ண பரமாத்மாவிற்கும் பீமசேனனுக்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்திய சம்பவமாகவும் அமைந்துவிட்டது. (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)