திருப்பூர் எனும் திருப்புமுனை – 19
தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் அவர்களின் தேவைகளும் சுயம்புவாக உருவான திருப்பூரின் பின்னலாடைத் தொழில் வெற்றிக்குப் பின்னணியில் முக்கியக் காரணமாக இன்றளவும் விளங்குவது தொழிலாளர்களின் உழைப்பு. உலகில் வேறு எங்கும் காண இயலாத ஒரு வழக்கம், இங்குள்ள தொழிலாளர்கள் அனைவரும் பணிபுரியும் நிறுவனத்தைத் தங்களின் நிறுவனமாகக் கருதி உரிமையுடன் பணியாற்றும் காரணமே இங்குள்ள ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பின்னணியில் உள்ள காரணங்களில் ஒன்று. இங்குள்ள பெரும்பாலான நிறுவனங்களின் வரலாற்றுப் பின்னணியில் நிச்சயம் அதன் உரிமையாளர்களும் பங்குதாரர்களும் ஏதேனும் ஒருவகையில் தொழிலாளியாகப் பணிபுரிந்து உழைப்பினால் முன்னேறி ஒரு நிறுவனத்தைக் கட்டமைத்து பல நூறு தொழிலாளிகளுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கும் நிலைக்கு உயர்ந்திருப்பதைக் காணலாம். தொழிலாளிகளைப் பொறுத்தமட்டில், மிக ஆரம்பக் காலகட்டங்களில் உள்ளூர்த் தொழிலாளர்களே தேவையான அளவு அனைத்து நிலை உற்பத்திகளிலும் பணியாற்றினர். ஒருகட்டத்தில் தொழில் அபரிதமாக வளர, வெளி மாவட்டத் தொழிலாளர்கள், குறிப்பாக தென் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலிருந்து புலம்பெயர்ந்து இங்கே பணிபுரியத் தொடங்கினர். பருவமழை பொய்த்துவிட்டது, வேளாண்மை சாத்தியம் இல்லை, வேலை இல்லை, குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் போன்ற பல்வேறு தேவைகளில் உள்ளவர்களின் புகலிடமாகத் திருப்பூர் திகழ்ந்தது, வந்தார் யாரையும் கைவிடாமல் அரவணைத்துக்கொண்டது திருப்பூர். இன்று இங்குள்ள பல முதலாளிகள் புலம்பெயர்ந்து, பிழைப்பிற்காகத் தொழிலாளியாக இங்கே வந்தவர்கள். ஒரு தலைமுறை தொழிலாளியாகப் பணியாற்றி, வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணித்தது. வாழ்வின் அடுத்த படிநிலை அவர்களை ஒரு தொழில் முனைவோர், அரசுப் பணியாளர், தனியார் நிறுவனங்களில் நிர்வாகி, அயல்நாட்டில் பணிபுரிவோர் என முன்னேறிச் செல்ல, ஒருபுறம் ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியும் பிற மாவட்டத் தொழிலாளர்களைச் சொந்த மாவட்டத்தை நோக்கித் திரும்பச் செய்தது. ஏனெனில் திருப்பூரில் ஈட்டும் வருவாய் அவர்களின் ஊரில் ஈட்ட இயலாத காரணத்தால் இங்கு வந்ததும் தற்சமயம் அவர்களின் மாவட்டத்திலும் இதே அளவு வருவாய் ஈட்டும் வாய்ப்புகள் உருவானது ஒருபுறம்; மற்றொருபுறம் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவீனங்கள் திருப்பூரில் அதிகரித்தது போன்ற காரணங்களால் பல ஆயிரம் தொழிலாளர்கள் சொந்த மாவட்டத்தை நோக்கித் திரும்பினர். இந்த நிலையில் வட மாநிலத் தொழிலார்களின் வரவு அதிகரித்தது. ஆரம்பக் கட்டத்தில் வீடுகளுக்குப் பளிங்குக் கற்கள் பதிக்க, அவற்றிற்குப் பாலிஷ் செய்வதற்கான பணிகளுக்கு இங்கே வந்த வடமாநிலத் தொழிலாளர்கள், இங்குள்ள வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு, தங்களின் உற்றார், உறவினர், நண்பர்கள் என ஏரளாமானோரை இங்கு கொண்டுவந்து சேர்த்தனர். நாளது தேதியில், திருப்பூரின் தொழிலாளர்களில் 45 விழுக்காட்டுக்கும் அதிகமாக 19 வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு உற்பத்திப் படிநிலைகளில் பணியாற்றுகின்றனர். தொழிற்சங்கங்களைப் பொறுத்தமட்டில், பிரதான கட்சிகளின் 8 தொழிற்சங்கங்கள் வலுவாக இயங்குகின்றன. 1984ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சப்படிப் போராட்டம் என்றென்றும் திருப்பூரின் வரலாற்றில் அழியா இடம் பிடித்த ஒன்றாகும். 1990க்குப் பிறகு, தொழில்முனைவோர்கள் சங்கங்களின் சார்பில் ஒரு கூட்டமைப்பு, தொழிற்சங்கங்களின் சார்பில் ஒரு கூட்டமைப்பு, அரசாங்கம் என முத்தரப்பும் இணைந்து தொழிலார்களுக்கான சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகள் குறித்துப் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துகின்றனர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தை வாயிலாகப் புதுப்பிக்கப்படும். அந்தவகையில் கடந்த 30 ஆண்டு காலத்தில் சம்பளம் உள்ளிட்ட எந்தவொரு சலுகைகள் குறித்த சிறு சலசலப்போ போராட்டமோ இங்கு நடந்ததில்லை. அதற்குக் காரணம், தொழிற்சங்கங்களின் மனம் நிறைந்த ஒத்துழைப்பு மட்டுமல்ல; இந்தத் தொழிலுக்குச் சிக்கல் வந்தபோதெல்லாம் போராட்டக் களத்தில் முன் வரிசையில் நின்று நியாயம் பெற்றுத் தந்ததில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு அளப்பரியது. நாட்டிலேயே தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் சேம நல நிதிப் பங்களிப்பில் அதிகப் பங்களிக்கும் தொழில் நகரங்களில் திருப்பூரும் ஒன்று என்றாலும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இங்கு ESI மருத்துவமனையின் கட்டுமானம் நடைபெறுகிறது. தொழிலாளர்கள் அடர்ந்து காணப்படும் தொழில் நகரத்தில், தொடர்ந்து தொழில் வளர, மாதாந்திரச் செலவுகள் உயர்ந்துகொண்டே வருவதும் வருவாயின் பெரும் பகுதி அதற்கே செல்வதும் தற்சமயம் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதேசமயம், பெரும் நிறுவனங்கள் விடுதிகளை அமைத்து தொழிலார்களைத் தங்க வைத்துள்ளனர். ஒவ்வொரு மனிதனின் கனவு, வசிக்க ஒரு வீட்டை வாழ்நாளில் சொந்தமாகக் கட்டிவிட வேண்டும் என்பதே. அந்த வகையில், இங்குள்ள தொழிலாளர்களின் அந்தக் கனவினை நிறைவேற்ற, அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் இன்று வரை அதற்கான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தொழிலாளர் பங்களிப்பு ஒரு பங்கு, பிரதமரின் வீட்டு வசதி மானியம் ஒரு பங்கு, மற்றவை எளிய தவணையில் கடனாக வங்கிகள் வாயிலாக அந்தத் தொழிலார்கள் பணிபுரியும் இங்குள்ள நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய, மாநில அரசு உரிய இடத்தை ஒதுக்கிக் கொடுத்தால் ஏரளமான குடும்பங்கள் பயன்பெறும். ஏனோ ஆட்சியாளர்கள் அது குறித்த சிந்தனையின்றி இருப்பது பெரும் ஏமாற்றமே. தொழிலாளர்களின் நிலையைப் பார்த்தோம். நாளது தேதியில் கள எதார்த்தம் என்ன? தொழிலார்களுக்கான சிக்கல் என்ன? அதைக் களையவேண்டிய திட்டங்கள் என்ன? வரும் வெள்ளியன்று விரிவாகக் காண்போம்.