திருப்பூர் எனும் திருப்புமுனை – 16

வங்கதேசச் சவால்

திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் தோற்றம், வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை குறித்து, தொடர்ந்து 15 அத்தியாயங்களாகப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் வங்கதேச வடிவில் எழுந்துள்ள நெருக்கடியைக் காண்போம்.

30 வருடங்களுக்கு முன் தையல் உற்பத்தி நிலையைத் தவிர்த்து, பெரும் உற்பத்தி அமைப்புகள் மிக மிகக் குறைவு. ஆனால் நாளது தேதியில் பஞ்சு இறக்குமதி செய்து ஆடைகளாக ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இந்தத் துறை அசாதாரணமாக வளர்ந்துள்ளது; தொடர்ந்து வளர்ந்தும் வருகிறது. வளர்ச்சி குன்றிய தேசம் என்கிற அடிப்படையில் உலகளவில், 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவைப் பெருமளவு நம்பியே வங்கதேசத்தின் ஆயத்த ஆடை உற்பத்தியும் ஏற்றுமதியும் நிகழ்ந்தது. வளர்ந்த பொருளாதார வல்லரசுகளிடம் பெற்ற மற்றும் பெறும் சலுகைகள், தொடர் முயற்சி, மற்றும் அரசின் பரிபூரண ஆதரவுடன் நாளது தேதியில் உலகளவில் அந்த நாடு 3ஆம் இடத்தில உள்ளது. இந்தியா 5ஆம் இடத்தில் உள்ளது.

அந்த வளர்ச்சி ஏன் தற்சமயம் இந்திய உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக திருப்பூருக்கு ஏன் அச்சறுத்தலாக உள்ளது என்பதைக் காண்போம்.

2011ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, நட்பு நாடு, எல்லைப் பாதுகாப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடு, நமக்கும் அவர்களுக்குமான வர்த்தகச் சமநிலை உள்ளிட்ட காரணங்களுக்காக 61 பொருட்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்கி வரியில்லா வர்த்தகச் சலுகையை அறிவித்தார். அதில் ஜவுளியும் ஒன்று. இங்குள்ள உற்பத்தியாளர்கள் இதன் பாதிப்பை உணர்ந்து அரசிடம் முறையிட, 2013ஆம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் கவுண்ட்டர் வெய்லிங் டூட்டி, அதாவது எந்தவொரு நாட்டின் உற்பத்தி, இறக்குமதியால் பாதிப்பிற்கு உள்ளாகிறதோ அவர்கள் இறக்குமதிக்கான வரியை விதிக்கலாம் என்ற வகையில் வங்கதேசத்திலிருந்து இறக்குமதியாகும் துணி மற்றும் ஆடைகளுக்கு 12 .6 % கவுண்ட்டர் வெய்லிங் டூட்டி விதிக்கப்பட்டது, இதன் காரணமாக இங்குள்ள உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரமும் முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் பாதுகாக்கபட்டன.

2017ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக 12 .6 % கவுண்டர் வெய்லிங் டூட்டி விலக்கப்பட்டு செலுத்திய வரிகளைத் திரும்பப் பெறும் முறை பின்பற்றிய காரணத்தால் எவ்வித வரியும் இன்றி ஆயத்த ஆடைகளும் துணிகளும் வங்கதேசத்திலிருந்து பெருமளவு இந்தியாவிற்குள் இறக்குமதியாகத் தொடங்கியது. குரல் எழுப்பும் இடங்களிலெல்லாம் அரசிற்கு ஆதரவு நிலைப்பாடு உடையவர்கள் இருப்பதாலும்,அதையும் கடந்து குரல் எழுப்பத் துணிந்தவர்களின் குரல் எட்டாமல் போனதன் காரணமாகவும் நாளது தேதியில் 8000 கோடி ரூபாய் அளவிற்கான ஜவுளி இங்கே இறக்குமதியாகிறது. பல்வேறு சில்லறை வர்த்தக அங்காடிகளுக்குச் சென்று பார்த்தால் வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏரளமான ஆடைகளைக் காணலாம்.

வங்கதேசத்திலிருந்து தைக்கப்படாத துணிகளும் தொடர்ந்து இங்கு வரத் தொடங்கியுள்ளன. உள்ளூர் உற்பத்தியாளர்களைக் காட்டிலும் கிலோவிற்கு 40 ரூபாய் வரை விலை குறைவாக துணி விற்பனை செய்யப்படுகிறது. அரசுத் தரப்பில் இதுகுறித்து முறையிட்டால், பிற பொருட்கள் அங்கே நாம் ஏற்றுமதி செய்கிறோம்; அது பாதிப்பிற்கு உள்ளாகும் என்கிற பதிலே கிடைக்கிறது. இது ஏற்புடையதல்ல. 2013 முதல் 2017 வரை வேறு பொருட்கள் எதுவும் ஏற்றுமதி செய்யப்படவில்லையா என்கிற கேள்வியும் ஒரு பிள்ளையைக் காப்பாற்ற இன்னொரு பிள்ளையைப் பலி கொடுக்கும் செயலுக்கு ஒப்பானது. அதுமட்டுமல்ல. என்றுமே ஒரு பொருளின் மதிப்பைக் கூட்டும்போது வேலை வாய்ப்பு, பொருளாதாரச் சுழற்சி மற்றும் வரி வருவாய் அதிகமாக இருக்கும் என்பதே அடிப்படை. அந்த வகையில் நாம் சிந்திக்க வேண்டும்.

இங்கிருந்து செல்லும் பருத்தி, பஞ்சு, நூல் வாயிலாக உற்பத்தி செய்யும் ஆடைகளே இறக்குமதி செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. சீனா, தைவான், கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளிலும் அதிகளவு ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறது. மறைமுகமாக சீனப் பொருட்களின் நுழைவு வாயிலாக வங்கதேசம் உள்ளது. திருப்பூரில் வர்த்தகம் மேற்கொள்ளும் உள்நாட்டு பிராண்டுகள், ஏறத்தாழ பாதியளவு உற்பத்தியை வங்கதேசத்திற்கு மாற்றிவிட்டனர். வரும் காலங்களில் இது இன்னும் உயரும் என்ற அச்சமும் உள்ளது.  

ஏற்கனவே பல அத்தியங்களில் உற்பத்தி நிலைகள், அதில் உள்ள முதலீடுகள், வேலை வாய்ப்புகள் குறித்தெல்லாம் எழுதியுள்ளேன். உதாரணத்திற்கு, பூஜ்ய நிலை சுத்திகரிப்பு செய்யும் திருப்பூரின் சாய ஆலைகள் வங்கதேசத்தில் அப்படியான எந்த முற்றுப்பெற்ற அமைப்பும் இல்லாமல் செயல்படும் ஆலைகளுடன் போட்டி போடுகின்ற நிலையும் ஐரோப்பிய ஏற்றுமதியில் நேரடியாக 10 % விலை குறைத்தே போட்டிபோட வேண்டிய நிலை, மறைமுகமான நெருக்கடிகள் உள்ளிட்டவற்றால் இங்குள்ள நிறுவனங்கள் திணறுகின்றன. உடனடியாக இதற்கான தீர்வு எட்டப்பட வேண்டும். குறைந்தபட்சம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சு மற்றும் நூலினால் தயாரான ஆடைகளை மட்டுமே வரி இல்லாமல் இறக்குமதி செய்யவும் மற்ற நாட்டுத் துணிகளின் ஆடைகளுக்குக் கடுமையான வரியையும் விதிக்கவேண்ண்டும். பஞ்ஜலா மற்றும் நூல் ஏற்றுமதி அளவிற்கான இறக்குமதியைக் கண்காணித்து அந்த அளவே ஆடைகள் இறக்குமதியாக அனுமதிக்க வேண்டும்.

செய்வதெல்லாம் சரி என்கிற பிம்பமும் கட்டமைப்பும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயலே தவிர வேறொன்றும் இல்லை என்பதே நிதர்சனம்.

மீண்டும் திங்களன்று புதிய தரவுகளோடு சந்திப்போம்.

  • குமார் துரைசாமி

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *