திருப்பூர் எனும் திருப்புமுனை – 18

வங்கிகள் இணைப்பால் முடங்கும் தொழில் துறை

கடந்த அத்தியாயத்தில் தொழில் முனைவோர்கள் தரப்பில் உள்ள தரவுகளைப் பார்த்தோம். இந்த அத்தியாயமும் அதையே பேசுகிறது.

திருப்பூரைப் பொறுத்தமட்டில் இங்குள்ள நிறுவனங்கள் அனைத்துமே எல்லாவிதமான பின்னலாடைகளையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதே. அதுவே பலமும் பலவீனமும். ஏனெனில், தொழில் துவஙகிய காலத்தில் எல்லாவிதமான ஆடைகளை உற்பத்தி செய்கிறோம் என்கிற அடிப்படையில் இங்கே வாடிக்கையாளரக்ள் வரத் தொடங்கினர். ஒரு காலகட்டத்தில் பிரத்யோகமாக ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ந்தன. எல்லாவிதமான ஆடைகளையும் உற்பத்தி செய்த நிறுவனங்கள், நாளடைவில் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் தொழிலிருந்தே விலகின.

ஆயத்த ஆடைகளைப் பொறுத்தமட்டில், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், குழந்தைகள் எனப் பிரிக்கப்பட்டு, அதில் விளையாட்டுக்கான உடைகள், சாதாரணப் பயன்பாட்டு (கேசுவல்) உடைகள், இரவு உடைகள் எனப் பிரிவுகளாக வகைப்படுத்துவர். குறிப்பிட்ட பாலினத்தில், குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ள உற்பத்திகளை மேற்கொண்ட நிறுவனங்கள் படிப்படியாக வளர்ந்தன. இதற்கான காரணம், தொடர் பயிற்சி மற்றும் தொடர் தாகவமைப்பு மற்றும் புதிய நுட்பங்களைப் புகுத்துவது, சரியான தரம் மற்றும் குறித்த நேரத்தைக் கடைபிடிப்பதால் மேலும் மேலும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று அதிக அளவு வியாபார வாய்ப்புகளைப் பெறுகின்றனர். நிறுவனத்தில் நிர்வாகப் பணிகளில் இருப்பவர்கள் முதல் தொழிலாளர்கள் வரை சீரான நடைமுறைக்குத் தங்களை ஆட்படுத்திக்கொள்வது, நிறுவனத்தை வளரச் செய்கிறது.

மேற்கொண்டு, நிலை இல்லாமல் எல்லாவிதமான ஆடைகளையும் தயாரிக்கும் நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதிய வகைகள், புதிய நுட்பங்கள், அதற்கான ஆய்வுகள், அதில் வரும் ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைக் களைந்து, உற்பத்தியை முன்னெடுக்கும் நேரத்தில் ஆர்டர் கெடு தேதி கடந்துவிடுவதால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழப்பதும் பொருளாதார இழப்பும்  ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் முதலீடுகள் காலியாகி நிறுவனம் மூடும் நிலைக்குச் செல்லும்.

நான் மேலே சொன்ன இரு நிலைகளை உணர்த்த பல நிறுவனங்கள், நாளது தேதியில், குறிப்பிட்ட பிரிவு உற்பத்தியை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. இந்த மாற்றமே பல்வேறு நிறுவனங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.

இனி மற்றுமொரு சிக்கலையும் பார்ப்போம். பருத்தி ஆடை உற்பத்திக்கே பெயர் பெற்ற திருப்பூர், அந்த எல்லைக்குள்ளேயே தன்னை வரையறுத்துக் கொண்டது இன்று பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் செயற்கை நூலிழை ஆடைகளே பருத்தி ஆடைகளைக் காட்டிலும் அதிகஅளவில் விற்பனையாகக்கூடியது.

இதை எதிர்பார்த்த சில நிறுவனங்கள், ஏற்கனவே அதற்கான கட்டமைப்பை உருவாக்கிக்கொண்டதால், நூல் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற காரணங்களால் எந்தப் பின்னடைவையும் சந்திக்காமல், தொடர்ந்து தொழிலில் வளர்ந்து வரும் நிலையை நாம் காணலாம். இனி வரும் காலங்களில், பருத்தி சார்ந்த ஆடை உற்பத்தியை மட்டுமே சார்ந்திராமல், ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தது 25 முதல் 40 % வரை செயற்கை நூலிழை ஆடை உற்பத்திக்கு மாறுவதற்கு சாத்தியக்கூறுகளை ஆய்ந்து, அதை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

திருப்பூரின் தொழில் பின்னடைவில் அடுத்த பிரச்சனையாகப் பார்ப்பது, நிதி மேலாண்மை. உற்பத்தி முதலீடே இல்லாமல் கடனுக்கு மூலப் பொருட்களைப் பெற்றே தொழிலை மேற்கொள்ளும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. நாளது தேதியில் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக அவ்வாறான நிலை மாறி, இன்றைய தேதியில் மொத்த உற்பத்தி மதிப்பில் குறைந்தபட்சம் 70 % உற்பத்தி முதலீடு இருந்தால் மட்டுமே தொழிலை சிறப்பாக முன்னெடுக்க இயலும். இல்லையெனில் பல்வேறு தடைகள், தாமதங்கள் காரணமாகப் பலவேறு சிக்கல்கள் ஏற்பட்டுப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும். நிதி மேலாண்மைக்கு இக்கட்டு ஏற்படும் வகையில், தற்சமயம் வங்கிகள் இணைப்பு, பேசேல்-3 அமலாக்கம் ஆகியவை, சிறு குறு நடுத்தர நிறுவனங்களை மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன.

கார்பொரேட் நிறுவனங்களுக்கான நடைமுறைகளை சிறு குறு நடுத்தர நிறுவனங்களையும் பின்பற்றச் செய்வதில் பல்வேறு சிக்கல்கல் ஏற்பட்டு, குறித்த நேரத்தில் கடன் உதவி பெற இயலாமல் வர்த்தக வாய்ப்புகளை இழக்கும் நிலை உள்ளது. ஏனெனில் வங்கிக் கிளைகளில் உள்ள அதிகாரிகளின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு, எங்கோ வேறு மாநிலத்தில் அமர்ந்திருக்கும் அதிகாரியின் ஒப்புதலைப் பெறவேண்டிய நிலை. அந்த அதிகாரிக்கு இங்குள்ள வியாபார அடிப்படை புரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் விதிமுறைகளைப் பின்பற்றியே செயல்படுவார். சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், முறை சாரா இயக்கத்திற்குள்தான் வரும். ஒவ்வொரு தொழிலுக்கும் கட்டமைப்புகள், உற்பத்தித் திறன், கால அவகாசம் உள்ளிட்டவை மாறும். ஏனெனில், கிளை மேலாளரால் மட்டுமே அதைப் புரிந்துகொண்டு செயலாற்ற இயலும். தொழில் சிறப்பாக வளர்ந்ததும் இன்று பின்னடைவைச் சந்திப்பதற்கும் இது ஒரு காரணமாக அமைகிறது.

நமது போட்டி நாடுகளைப் பொறுத்தமட்டில், ஆடை வடிவமைப்பை ஒவ்வொரு நிறுவனமும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. அதுமட்டுமல்ல; இறக்குமதியாளர்கள் பணி எளிமையாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்ட பல நூறு ஆடைகளிலிருந்து தேர்வு செய்து, சிறு மாற்றங்களுக்கு உட்படுத்தி, தங்களின் தேவைக்கு ஏற்ப ஆர்டர்களை வழங்குகின்றனர். இதனால் வர்த்தக வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தித் திட்டமிடல் சிறப்பாகச் செய்வதற்கு வழிவகை ஏற்பட்டு, தொழில் மேலும் வளர்கிறது. அந்த நிலையை நோக்கித் திருப்பூரும் பயணிக்கவேண்டும்.

அடுத்ததாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது. தொழிலாளர் மேலாண்மை. இது குறித்துத் தனி அத்தியாயமே எழுதவேண்டிய தேவை உள்ளது. அடுத்து வரும் அத்தியாயத்தில் அது குறித்துக் காண்போம்.

மீண்டும் திங்களன்று சந்திப்போம்.

  • குமார் துரைசாமி

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *