திருப்பூர் எனும் திருப்புமுனை – 8
கடினக் காலங்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்கள்
இதுவரை திருப்பூரில் பின்னலாடைத் தொழிலின் தோற்றம், உள்கட்டமைப்பு, கடந்துவந்த பாதை, தொழிலாளர்கள், பொருளாதாரக் கட்டமைப்பு, தொழில் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பார்த்தோம். இனி இந்தத் தொழிலில் உள்ள பிரச்சனைகளைக் குறித்துக் காண்போம்.
1980களில் துவங்கிய ஏற்றுமதி 1984இல் 9 கோடி ரூபாய் என்ற அளவிலிருந்து படிப்படியாக வளர்ந்து, இன்று 37 ,500 கோடி ரூபாய் என்ற அளவினை எட்டி உள்ளது. ஏறத்தாழ 2000க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் இங்கு உள்ளன. இதில் 200 நிறுவனங்கள் 23000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. மீதமுள்ள 11500 கோடி ரூபாயை 1800 நிறுவனங்கள் முன்னெடுக்கின்றன.
1991ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் பல்வேறு உலகளாவியச் சந்தை வாய்ப்புகளைத் திறந்துவிட்டது. இருப்பினும் கோட்டா முறை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்திய நிலையில், 2004ஆம் ஆண்டுக்குப் பின் கோட்டாமுறை ஒழிந்து மேலும் வாய்ப்புகள் எளிதாகின. இந்நிலையில் போட்டி நாடுகளின் தொடர் வளர்ச்சி, நமக்கான வாய்ப்புகளைப் பெறுவதில் கடும் சவால்களை உருவாக்கியுள்ளது. வளர்ந்த பொருளாதார வல்லரசுகளான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறைமுகமான தடைகளால் ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து நெருக்கடியைக் கொடுத்தே வந்தன. அதையும் கடந்து தொழிலில் சீரான முன்னேற்றங்களைப் பெற்றாலும் இங்குள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தொடர் தகமைப்பில் பின்தங்கின. அதேசமயம் இறக்குமதி நிறுவனங்களின் தேவைக்கேற்பத் தங்களைத் தகவமைத்து, புதிய நுட்பங்களுக்கு உடனடியாக முதலீடுகளைச் செய்து பயணித்த நிறுவனங்கள் இன்றளவும் தொடர்ந்து முன்னேறியே வருகின்றன. 10 முதல் 20% வரை ஒவ்வோரு வருடமும் அந்த நிறுவனங்கள் வளர்கின்றன.
அதேபோல் குறிப்பிட்ட ஆடைகள், அதாவது உள்ளாடைகள் மட்டும், இரவு உடைகள் மட்டும், ஆண்களுக்கான மேலாடைகள் மட்டும், பெண்களுக்கான மேலாடைகள் மட்டும், பிறந்த மற்றும் சிறுவர்களுக்கான உடைகள் மட்டும் எனக் கவனம் பதித்து அதற்கேற்பத் தங்களின் தொழிற்சாலைக் கட்டமைப்புகளை அமைத்துப் பயணிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து முன்னேறுவதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கவனச் சிதறல் இல்லாத காரணத்தால், தலைமை மேலாளர் முதல் கடைநிலை அலுவலர் வரை எல்லா நிலைகளிலும் நன்கு பயிற்சி பெற்று, தரம் மற்றும் குறித்த நேரத்தில் சரக்குகளை அனுப்பி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றதோடு அடுத்தடுத்த வர்த்தக அளவுகளில் அவர்கள் வளர்ச்சி காண்கின்றனர். எல்லா விதமான ஆடைகளையும் தயார் செய்யும் அணுகுமுறையைக் கொண்ட நிறுவனங்கள் வளர்ச்சியில் பின்தங்குவதும் ஒருகட்டத்தில் இழப்பைச் சந்தித்துத் தொழிலிருந்து விலகிய சூழல் ஏற்பட்டதும் உண்டு. அதேசமயம் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு எல்லா விதமான ஆடைகளை உற்பத்தி செய்யும் கட்டமைப்புகளைத் தனித்தனியாக ஏற்படுத்திப் பயணிக்கும் நிறுவனங்கள் அபார வளர்ச்சியையும் அடைந்துள்ளன.
இந்தியா பருத்தி உற்பத்தியில் உலகளவில் இரண்டாம் இடத்தை வகிப்பது குறித்து ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். பருத்தியை நூலாக மாற்றும் நூற்பாலைகள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்தாலும் இந்திய நூற்பாலைகளில் 55% தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. இங்கிருந்து உற்பத்தியாகும் நூல், உள்நாட்டுத் தேவைகள் மற்றும் ஏற்றுமதித் தேவையைப் பூர்த்தி செய்கிறது. பருத்தியாலான ஆடைகளே திருப்பூரில் 95% அளவுக்கு உற்பத்தியாகின்றன. குதிரைக்குக் கடிவாளம் இட்டதுபோல், அதை நோக்கியே இந்தத் துறை பயணித்தது இன்றைய தேதியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பருத்தி ஆடைகள் மிருதுவானவை; கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்றவை. குளிர்காலத்தில் பருத்தி ஆடைகளின் பயன்பாடு மிகக் குறைவே. நமது ஏற்றுமதிச் சந்தை 90% ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளைச் சார்ந்துஉள்ளது. அங்குள்ள பருவநிலை என்பது, ஆண்டுக்கு 4 முதல் அதிகபட்சம் 5 மாதங்களே கோடைக்காலம். மீதமுள்ள மாதங்களில் பருத்தி ஆடைகளின் தேவை என்பது மிகக் குறைவு. பருத்தித் துணியில் குளிர்கால ஆடைகளை மிகக் குறைவாகவே இறக்குமதியாளர்கள் வாங்குவர். ஏனெனில் பருத்தியைவிட செயற்கை நூலிழைகளான பாலியஸ்டர், நைலான் போன்றவற்றில் தயாராகும் ஆடைகளே உடலைக் கதகதப்பாக வைப்பதற்கு உதவும் என்பதால், இந்த வகை ஆடைகளையே அவர்கள் அதிகம் இறக்குமதி செய்வர்.
செயற்கை நூலிழை ஆடைகளைத் தயாரிப்பதில் நாம் கவனத்தைச் செலுத்தாமல் விட்டதை மிகப்பெரிய இழப்பாகத் தற்சமயம் உணர்கிறோம். நுகர்விலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நமது வாழ்க்கை முறையை ஒட்டியே ஒரு தகவலைச் சொல்கிறேன். 25 -30 வருடங்களுக்கு முன் பள்ளிக்குச் சென்று வந்தபின், சீருடைகளைக் களைந்து, இருக்கும் உடைகளை அணிந்து விளையாடச் செல்லும் பழக்கம் இருந்தது. இன்றைய தேதியில், என்ன விளையாட்டை மேற்கொள்கிறோமோ அதற்கேற்ப ஆடைகளை அணியும் பழக்கத்திற்கு அது மாறியுள்ளது. இது ஒரு மிகப் பெரிய வர்த்தக வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் விளையாட்டுகளுக்கென்றே தயாராகும் ஆடைகள் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதையும் அதற்கான பிரத்தியோக சில்லறை வர்த்தகப் பெரும் நிறுவனங்கள் வளர்ந்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இது தவிர இரவு உடை, பார்ட்டி வெர் என, ஒரு நாளில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று விதமான ஆடைகளை அணிவதால், நுகர்வு அதிகரித்துள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள தரவுகளை நாம் உள்வாங்கத் தவறிவிட்டதாகவே நான் கருதுகிறேன். பருத்தி ஆடை உற்பத்தி என்னும் வசதியான வட்டத்திற்குள் நம்மை நாமே அடைத்துக்கொண்டோம். பஞ்சு விலையின் கடும் உயர்வு, நூல் தட்டுப்பாடு, நூல் ஏற்றுமதி, உள்ளிட்ட பிரச்சனைகள் ஒவ்வொன்றாகத் தொழிலுக்கான நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்படுத்துவது; அதனால் பெரும் பாதிப்பிற்கு இந்தத் தொழில் உள்ளவதற்கான காரணம், மாற்று ஏற்பாடுகள் இல்லாததும் அதை நோக்கி நமது கவனத்தைச் செலுத்தாததுமே. இதைச் சரியாக உள்வாங்கிய சீனா, பங்களாதேஷ், வியட்நாம், கொரியா, தைவான் போன்ற நாடுகள் தொடர்ந்து தொய்வின்றிப் பயணிக்கின்றன.
உலகளவில் சந்தைக்கு வரும் விளையாட்டு தொடர்பான ஆடைத் தயாரிப்பில் பருத்தி ஆடைகள் 21% மட்டுமே. மீதமுள்ள 79% ஆடைகள் செயற்கை நூலிழையில் தயாரிக்கப்படுபவையே. பருத்தி ஆடை உற்பத்தியில் நமது போட்டி உற்பத்தி நாடுகளான வங்கம், வியட்நாம், சீனா உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பைக் கழித்தால் நமது பங்களிப்பு 3 முதல் 4% மட்டுமே. செயற்கை நூலிழை ஆடைகளில் நாம் போட்டியிலேயே இல்லை என்பதே கசப்பான உண்மை. இதற்கான காரணம், பருத்தித் துணிகள் தயாரிக்கும் அளவிற்கான நுட்பமும் சூழலும் செயற்கை நூலிழைத் தயாரிப்பில் இல்லை என்பதே.
ஒவ்வொரு வருடமும் செயற்கை நூலிழை ஆடைகளுக்கான தேவை அதிகரித்தவண்ணமே உள்ளது. தற்சமயம் இந்தியாவின் விளையாட்டு தொடர்பான ஆடை வர்த்தகம் 8% என்ற அளவிற்கு உள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த ஆடையை வேண்டுமெனாலும் அணிந்துகொண்டு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, இதர விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தவர்கள், தற்சமயம் அந்தந்த விளையாட்டுகளுக்கெனத் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியத் தொடங்கியுள்ளதை நம்மால் காணமுடியும். நம்மைச் சுற்றியே அதற்கான சான்றுகள் உள்ளன. மிகச் சமீப வருடங்களில் விளையாட்டு ஆடைகள் மற்றும் உபகரணங்களுக்காகவே பிரத்தியோகமாகத் தங்களது சில்லறை வர்த்தக மையங்களை இந்தியாவில் அமைத்த டெக்காதலோன் (Decathlon) நிறுவனம் நாளது தேதியில் மிக விரிவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்களின் கடைகளையும் அமைத்துவருவதைக் கண்கூடாகக் காணலாம்.
பருத்தி ஆடைகள் உற்பத்தி என்கின்ற வட்டத்தைக் கடந்து, செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியையும் நாம் கைகொள்ளவேண்டிய நிலையை உணர்ந்து அதை நோக்கிப் பயணிக்கவேண்டும். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதுவொன்றும் பெரும் விடயமும் அல்ல. பருத்தி ஆடைத் தயாரிப்பிற்கான கட்டமைப்பில் பல்வேறு சிறு மாற்றங்களையும் அதற்கான முதலீடுகளையும் செய்தால் அடுத்தடுத்த வருடங்களில் நமது ஆடைத் தயாரிப்பில் குறைந்தது 25% முதல் 30% செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியை எட்டலாம். அதற்கான முயற்சிகளைப் பல்வேறு தளங்களில் பல்வேறு நிறுவனங்கள் துவங்கியுள்ளன என்கிற நற்செய்தியையும் இங்கே பகிரக் கடமைப்பட்டுள்ளேன்.
கடினக் காலங்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் மகத்தானவை. அந்த விதத்தில் மகத்தான படங்களுடன் திருப்பூர் தொழில்துறை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த பகுதிகளில் மேலும் பல விபரங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன்.
- குமார் துரைசாமி

Comments (0)