சூர்யபுத்திரனும் கிருஷ்ணையும்

சூர்யபுத்திரனும் கிருஷ்ணையும்

நூல் அறிமுகம் மகாபாரதம், ராமாயணம், பாகவதம் எனும் வார்த்தைகள் பார்வையிலும் காதுகளிலும் விழும்போதெல்லாம் அவை சட்டென்று என் மனதில் துலக்கும் முகங்கள் சில உண்டு. கிராமத்தில் பொட்டுத் தாத்தா, அம்மா வழித் தாத்தா சின்ன ராமசாமி (நாங்கள் ‘வண்டித் தாத்தா’ என்று கூப்பிடுவோம்), பெரியப்பா வெங்கடாஜலபதி, பெருமாள் கோவில் அர்ச்சகர் ராஜர் (நம்பியின் அப்பா), சீனிவாசன் மாமா (தமிழாசிரியர்; மாமாவின் பெண் விஜயராணி என் வகுப்பு), திருமங்கலத்தில் உயர்நிலைப் பள்ளிப்பருவத்தில் நண்பன் நாராயணமூர்த்தி மூலம் அறிமுகமாகி அன்பின் நெருக்கமான சாமிப் பாட்டி அனைவரும் அப்புராணக் கதைகளை என் மனதிற்கு அறிமுகப்படுத்தி, ஆழ் மனத்தில் பதியச் செய்தவர்கள். பால்யத்தில் எத்தனை நூறு கதைகள் கேட்டிருப்பேன் அவர்களிடம்! கிராமத்தில் வண்ணமயில் கடைக்கு முன்னாலிருக்கும் காளியம்மன் கோயிலில், முன்னிரவுகளில் சுற்றிலும் கிராமத்து ஜனங்கள் அமர்ந்திருக்க தமிழ் பண்டிட் சீனிவாசன் மாமா சத்தமாய் ராகமாய் சுந்தரகாண்டம் படிக்கும் காட்சி இன்னும் பசுமையாய் நினைவுகளில் இருக்கிறது. நம்பியின் வீடு, வசந்தா அத்தையின் வீட்டிற்கு முன்னால். நம்பியின் அப்பா ராஜர் தினமும் பாரதம் தொடர்ந்து சொல்ல (பாரதக் கதை சொல்லத் தொடங்கிய நாளிலும் முடிக்கும் நாளிலும் பூஜை செய்து பிரசாதங்கள் தருவார்), நாங்கள் சிறுவர்களும் அத்தையும் பாட்டியும் (வசந்தா அத்தையின் அம்மா) இன்னும் பலரும் சுற்றி உட்கார்ந்து கேட்போம். தேவி பாகவதத்தை எனக்கு நெருக்கமாக்கியது பொட்டுத் தாத்தாவும் திருமங்கலம் சாமிப்பாட்டியும். பாரதமும் பாகவதமும் என்றும் வற்றாத கதைகளின் ஊற்று. இன்றும் வியப்பளிக்கும் பிரம்மாண்டம். பி.கே.வின் இனி ஞான் உறங்கட்டே – கனவுகளில்/முன் வெளிகளில் உலாவச் செய்யும், மயக்கும், சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தந்த அபாரமான நாவல். ஆ.மாதவனின் அற்புதமான மொழிபெயர்ப்பு. மொழியின் இனிப்பிலும் அந்த எழுத்தின் வசீகரத்திலும் இன்னும் கட்டுண்டுதான் கிடக்கிறேன்! ஆரம்பத்தில் விலகி நின்று புன்னைகத்த மொழியிடம் மனம் குவித்து வேண்டிக் கொண்டேன், “என்னை உடன் அழைத்துப் போ” என்று. அதன்பின் அது கைப்பிடித்துக் கொண்டது. பிரமாதமான, சுவாரஸ்யமான, விறுவிறுப்பான, மனம் நெகிழ்த்தும் பயணம். செவ்வியல் (கிளாஸிக்) நாவல்களுக்கு வாசிப்பனுபவம் எழுதுவது இடர் தருவது. என்ன எழுதினாலும், எத்தனை எழுதினாலும் மனம் திருப்தி அடையாது. மனம் அந்நாவலின் ஆழத்தில், ஆன்மாவில் திளைத்துக் கிடக்கும். அது குறித்து எழுதுவதெல்லாம் மேலோட்டமாகவே அமைந்து/உணர்ந்து விசனப்பட வைக்கும்; எழுதாமல் தப்பிக்கலாம் என்றாலும் விடாது. அந்த எழுத்திலிருந்து கிடைத்தவற்றைத் தொகுத்துக் கொள்ள, சுவையின் ஒரு துளியையாவது பற்றிக்கொள்ள, பதிந்துவைக்க மனம் விழையும். *** ‘இனி ஞான் உறங்கட்டே’ நாவலில் மகாபாரதத்தின் முக்கியப் பாத்திரங்கள் பெரும்பாலானோர் வந்தாலும், முக்கியமாய் இது கர்ணனின் கதை; திரௌபதியின் கதையும் கூட. மனக் கொந்தளிப்புகளின் நாவல் என்று இந்நாவலைச் சொல்லலாமா? மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வுகளின்போது மனதில் உருவாகும் தவிர்க்க முடியாத கேள்விகளை நாவலுக்குள் எழுப்பி, அதற்கான விடைகளை அதன் பாத்திரங்கள் வாயிலாகவே எழுத்தினூடே கண்டடையும் ஒரு கவித்துவ நவீன மனத்தின் படைப்பு ‘இனி ஞான் உறங்கட்டே’. யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரையும் போர்க்களத்தில் கொல்லும் வாய்ப்புகள் கிடைத்தும், தான் தாய்க்குத் தந்த வாக்குறுதியால் அவர்களைக் கொல்லாமல் விடுகிறான் கர்ணன். கர்ணனிடம் நால்வரும் தோற்று, போரில் உயிர்ப் பிச்சை பெற்றுப் பின்வாங்கும் காட்சிகள் நாவலில் அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. நாவலில் வரும் ஹஸ்தினாபுரத்தின் ஆயுத வித்தை அரங்குக் காட்சிகள், நாரதர்-யுதிஷ்டிரன் சந்திப்பு, குந்தி-கர்ணன் சந்திப்பு, கர்ணன்-கிருஷ்ணன் சந்திப்பு, இந்திரன்-கர்ணன் சந்திப்பு, சபையில் கிருஷ்ணையின் துகிலுறியப்படும் காட்சிகள், போர்க் களத்தில் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கர்ணன் சந்திக்கும் காட்சி,  பீமனின் துச்சாதன வதம், அர்ஜுனனின் கர்ண வதம் அனைத்தும் மிக அபாரமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. போர்க்களக் காட்சிகள் ஒரு விஷூவல் ட்ரீட். நாவலில் எனக்குப் பிடித்த காட்சிகளைச் சொல்லவேண்டுமென்றால் பல பதிவுகள் எழுதவேண்டியிருக்கும். உதாரணத்திற்கு ஒன்று மட்டும். போர்க்களத்தில், போரின் நடுவில், அர்ஜுனனைப் பார்த்துவரும்படி யுதிஷ்டிரன் சொல்ல, பீமன் கௌரவர் சேனை நடுவே ரதத்தில் பாய்ந்து விரைகிறான். எதிரில் கர்ணன். உக்கிரமான போர் இருவரிடையிலும். வெற்றிக் களிப்பில் மனதைக் கட்டுப்பாட்டில் நிறுத்திய ராதேயன் கர்ணன் சின்ன சின்ன சரங்களைத் தொடுத்துவிட்டு பீமனை வேடிக்கையாக கிச்சுக்கிச்சு மூட்டினான். தாயிடம் செய்துகொண்ட ஒப்பந்தம் நினைவில் வரப்பெற்றவனானான். வீமன் அருகே போய் வில்முனையால் தொப்பையில் கிசுகிசுப்பு மூட்டி வாய்விட்டுச் சிரித்தான். சகிக்கவொன்னாத அவமானத்தால் சிலிர்த்த வீமன், அந்த வில்லினைப் பறித்தெடுத்து, கர்ணனது உச்சிமேல் அடித்தான். விலகிக்கொண்ட கர்ணன் கேலியாக பின்னும் நகை செய்தான். “தொப்பை வயிற்றுக்காரனாகிய அடேய் கௌந்தேயா, விருந்து மண்டபம்தான் உனக்குத் தகுதியான இடம். நீ எதற்காகப் போர்க்களம் வரவேண்டும்? வில் வீரத்தில் அஞ்ஞானி நீ. மரத்தைப் பிடுங்கி அடித்துக் கொன்றிட இது, கிர்மீரனும், பகனுமல்ல. இது கர்ணன் என்பதை நன்றாக நினைவில் வை. கானகத்தில் அலைந்து திரிந்து காய்கனிகளைத் தின்று வயிற்றை நிரப்புவதல்ல போர் என்பதை அறியவில்லை நீ. உனக்குப் போரிட ஆசையாயின் உனக்குத் தகுந்தவரிடம் போய்ப் போரிடு. அல்லது கிருஷ்ணார்ஜுனர்களின் நிழலில் போய் மறைந்துகொள். அவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள். அல்லது வேகமாக வீட்டை நோக்கி ஓடிவிடு. அதுதான் உனக்கு நல்லது…” மாஸ்டர் பி.கே.விற்கும் தமிழில் தந்த ஆ.மாதவனுக்கும் நன்றியும் வணக்கங்களும் என்றென்றும் அன்பும். இனி நான் உறங்கட்டும் – நாவல்மலையாள மூலம்: பி.கே.பாலகிருஷ்ணன்தமிழில்: ஆ.மாதவன்வெளியீடு : சாகித்ய அகாடமி

தொலைந்த நூலகம்

தொலைந்த நூலகம்

அறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு அஞ்சலி ஒரு பல்கலைக் கழகம் கலைந்துவிட்டதுஒரு நூலகம் தொலைந்துவிட்டது ஓர் அவை ஒரு சபை என்றால்அதில் ஔவை இருந்தால்அதற்கு ஒரு கௌரவம் கடற்கரையோபுகைவண்டி நிலையமோஅவர் இருக்கும் இடம்தமிழ்ச்சங்கம் ஆகிவிடும் அங்கே தமிழ் விளையாடும்அங்கே கவிதை பூத்துக்குலுங்கும்கலைகள் அங்கே களைகட்டும் அறிஞர்களின் அறிஞரைஇழந்துவிட்டது தமிழ்புலவர் கோபோய்விட்டார் நம்மை விட்டு ஒரு பாடலுக்கு அவர் உரை சொல்வதைமூல ஆசிரியன் நேரில் கேட்டால்நிச்சயம் அவரைமுத்தமிட்டு உச்சிமுகர்வான் இயல் இசை நாடகம்மூன்று தமிழும் அறிந்தவர் தமிழின் ஈராயிரம் ஆண்டு இலக்கியம்அவரது நுனிநாக்கில் இருந்தது ஆங்கில இலக்கியம்தோதறிந்துதுணைவரும் அவருக்கு தரையே மேடை, பேச்சே உரைமேடை தேவை என்றால்சம்பிரதாயத்துக்காகப் போடலாம் 24 மணி நேர அறிஞர்உலக வரலாறு, தமிழ்ப் பண்பாடுஇரண்டும் இணையும் புள்ளியைத்துல்லியமாக ஆய்ந்தறிந்த பேராசிரியர் இலக்கணம் எனும் இரும்புக் கடலைஇவருக்கு மட்டும்பஞ்சு மிட்டாயாக இளகும்திருக்குறளும் சிலம்பும்அந்நியோனியமாய் அவர் நாவில் பழகும் மேடையேறிப் பேசும்போதுஎங்கிருந்தோ யார் யாரோபொருத்தமான நூல்களைநம் கண்ணுக்குத் தெரியாமல்அவருக்கு நீட்டுவார்கள்அபூர்வமான மேற்கோள்களைஅவர் கண்களில் காட்டுவார்கள் கம்பனோடு ஷேக்ஸ்பியரைக்கைகுலுக்க வைப்பார்கபிலரையும் கீட்சையும்தோளோடு தோள்கைபோட்டு நடக்கவைப்பார் தொல்காப்பியர் திருவள்ளுவர் எல்லாம்அவரது தோழர்களோகம்பன் இளங்கோ பாரதி எல்லாம்அவருக்கு நண்பர்களோஎன்று நினைக்கத் தோன்றும் நேற்றைய பெருமையை மட்டும் அல்லஇன்றின் அருமையும் அறிந்தவர் இன்றைய இலக்கியம் வரைக்கும்அவரது பார்வை படர்ந்ததுஆனால் இந்த நாள்ஏன் இப்படி முடிந்தது? எங்கு காண்போம் இனிஇவர் போல் ஒருவரை?எக்காலம் அடைவோம்இவர் போல் ஓர் அறிஞரை?

பொன்னியின் செல்வன் – 15

பொன்னியின் செல்வன் – 15

மூன்றாம் பாகம் – கொலை வாள் நாகப்பட்டின புத்த பிட்சுகள் சுந்தர சோழரைச் சந்திக்க வந்தபொழுது, ‘இலங்கை அரசுரிமையை அத்தீவின் புத்த சங்கம் ஒன்று இளவரசர் அருள்மொழி வர்மருக்குக் கொடுக்க விரும்புகிறது’ எனக் கூறியதைச் சாதகமாக்கி, பெரிய பழுவேட்டரையர் இளவரசரைக் கைது செய்யும் ஆணையை வாங்கியிருந்தார். அரசரும் அருள்மொழியிடம், ‘மதுராந்தகருக்கே பட்டத்தைக் கொடுத்து விடலாம்’ என்ற தன் விருப்பத்தை நேரில் சொல்லி ஏற்கச் செய்யலாம் என்ற காரணத்தினால்தான் அதற்குச் சம்மதித்தார். அருள்மொழிக்கு மக்களின் ஆதரவு அதிகமாய் இருந்ததால் அவரைக் கைது செய்து கொண்டுவரும்பொழுது, அது தனக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற அச்சம் பெரிய பழுவேட்டரையருக்கு இருந்தது. மேலும், வந்தியத்தேவன் மூலம் குந்தவை ஓலை அனுப்பியதும் அவன் யார் கையிலும் சிக்காமல் இலங்கைக்கு சென்றுவிட்டதும் அதை அதிகப் படுத்தியிருந்தன. எனவே, இலங்கையிலிருந்து இளவரசர் வரும்போதே யாரும் அணுகாவண்ணம் தஞ்சைக்குக் கூட்டி வந்துவிட வேண்டும் என்று யோசித்து கோடியக்கரைக்குக் கிளம்பினார். நந்தினியும் உடன்வருவதாகச் சொல்லவும் அவளுடன் சேர்ந்து பிரயாணம் செய்யும் ஆசையுடன் சம்மதித்தார். இருவரும் பரிவாரங்களுடன் கிளம்பினார்கள். நந்தினிக்கு ‘ரவிதாஸன் இலங்கை சென்ற காரியத்தை வெற்றியுடன் முடித்தானா?’ என்று தெரிந்து கொள்வதும் வந்தியத்தேவன் மூலம் குந்தவை இளவரசருக்கு அனுப்பிய செய்தியைத் தெரிந்துகொள்வதும் நோக்கமாய் இருந்தன. நாகப்பட்டினத்தில் தனாதிகாரியாக தன் கடமைகளை முடித்துவிட்டு கோடியக்கரை வந்து, அவருக்காகக் கடற்கரையில் அமைக்கப்பட்ட  கூடாரத்தில் பெரிய பழுவேட்டரையர் நந்தினியுடனும் தன் பரிவாரங்களுடனும் தங்கினார். அப்போதுதான் சுழற்காற்று அடித்து ஓய்ந்திருந்தது. அச்சமயத்தில் பார்த்திபேந்திரனுடைய மரக்கலம் வந்து சேர்ந்தது. ஒரு படகில் பார்த்திபேந்திரன் கூடாரத்துக்கு வந்தான். பெரிய பழுவேட்டரையர் விசாரிக்குமுன் நந்தினி  முன்வந்து பேசினாள். பார்த்திபேந்திரன் அந்தக் கணத்தில் அவளின் செளந்தர்யத்தில் மதிமயங்கிப் போனான். அதைக்கண்டு பெரிய பழுவேட்டரையர் எரிச்சலடைய, நந்தினி இளவரசரைப் பற்றிக் கேட்க, சுய நினைவடைந்த பார்த்திபேந்திரன் வந்தியத்தேவனைக் காப்பாற்ற இளவரசர் கடலில் குதித்ததையும்,  காப்பாற்றியபின் அந்தப் படகு உடைந்து அனைவரும் மூழ்கிவிட்டதையும் பாதி உயிராய் தான் ஒருவன் மட்டுமே திரும்பியதாகவும் கூறினான்.  இளவரசர் மூழ்கிவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதுமே பெரிய பழுவேட்டரையர் வேரற்ற மரம் போலத் தரையில் வீழ்ந்தார். நந்தினி நீர்கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்த, தன் கையால் இளவரசரைத் தூக்கி  வளர்த்ததை நினைவுபடுத்திக்கொண்டு கலங்கியபடி பார்த்திபேந்திரனை வெகுவாகக் கோபித்துக் கொண்டார். இளவரசர் கோடிக்கரையில் கரையொதுங்க வாய்ப்பிருப்பதாக பார்த்திபேந்திரன் கூறவும், காஞ்சியிலிருந்து கிளம்பியது முதல் நடந்தது வரை அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். நந்தினி வேண்டுமென்றே, ‘ஒருவேளை அவன் வந்த மரக்கலத்தில் இளவரசரை மறைத்து வைத்திருக்கலாம்’ என ரகசியமாகக் கூற, பழுவேட்டரையர் அவனை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு மரக்கலத்தை சோதனை செய்ய ஆட்களுடன் விரைந்தார். அவனுடன் தனியே பேச வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட நந்தினி, தன் சாகசத்தை பார்த்திபேந்திரனிடம் தொடங்கினாள். ஆதித்த கரிகாலனிடம் நந்தினி பற்றி அறிந்திருந்த பார்த்திபேந்திரன், அவளிடம் தாங்க முடியாத வெறுப்பை உமிழ்வதற்குக் காத்திருந்தவன், அவளைப் பார்த்த்தும் தன்வயம் இழந்து மகுடிமுன் ஆடும் பாம்பைப் போல் ஆகியிருந்தான். நந்தினி பல்வேறு சொற்களால் அவன் இதயத்தில் தன் மீதான பரிதாபத்தை வளர்த்தெடுத்தாள். பார்த்திபேந்திரன் அவளை பழுவேட்டரையரிடமிருந்து விடுவித்து, தன்னுடன் கூட்டிச் சென்றுவிடலாம் என்று நினைக்குமளவுக்கு அவனை மயக்கமூட்டியும் பரிதாபத்துகுரியவளாகத் தன்னைக் காட்டிக்கொண்டும் பேசினாள். அவன் அப்படி மயங்கியிருந்த சந்தர்ப்பத்தில் ஆதித்த கரிகாலனை சம்புவரையர் மாளிகைக்கு அழைத்து வர வேண்டுமென நந்தினி கேட்டுக் கொண்டாள். ‘ஆதித்த கரிகாலனுக்கு சம்புவரையர் மகளான மணிமேகலையை மணம் செய்து வைத்துவிட்டால் தான் நிம்மதி அடைந்துவிடுவேன்’ எனவும் பார்த்திபேந்திரனிடம் பசப்பினாள். கலத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பெரிய பழுவேட்டரையர் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து முறைத்தார். பார்த்திபேந்திரனைக் கைது செய்ய ஆணையிட்டார். ஆனால், கைது செய்ய வந்தவரகளைத் தாக்கிவிட்டு பழுவேட்டரையர் என்ன சொன்னாலும் தான் கேட்பதாகப் பணியவும், பார்த்திபேந்திரன் மேல் அவருக்கு நல்ல எண்ணம் வந்தது. ‘அரசரிடம் இளவரசரைப் பற்றிச் சொல்லும்போது, கூடவே பார்த்திபேந்திரன் இருந்தால் நம்பகத்தன்மை அதிகரிக்கும்’ என நந்தினி எடுத்துச் சொல்ல, பழுவேட்டரையர் அதற்குச் சம்மதித்தார். அதற்குள் மந்திரவாதியின் ஆந்தைக் குரல் கேட்டதால், ‘ஒருநாள் இருந்து இளவரசர் கரையொதுங்குகிறாரா என்பதைத் தெரிந்து கொண்டு போகலாம் எனக் கூறினாள் நந்தினி. கரையோரமாய் ஆட்களை நிறுத்தி தேடிப் பார்க்கவும் தனாதிகாரி ஆணையிட்டார். பூங்குழலி படகை வலிக்க, வந்தியத்தேவன் இளவரசரிடம், ‘கோடியக்கரை போனால் பழுவேட்டரையர்கள் கைது செய்யும் அபாயம் இருப்பதால், குந்தவையின் ஆணைப்படி பழையாறைக்கு செல்ல வேண்டு’மென வலியுறுத்தினான். ஆனால், இளவரசருக்குக் குளிர்க்காய்ச்சல் அதிகமாக, தூரத்திலிருந்து கலங்கரை விளக்கின் மேலே ஆட்கள் நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் பூங்குழலி சொல்ல, கோடியக்கரையில் இருந்து நாகை செல்லும் ஒரு வாய்க்காலில் ஓடத்தை மறைத்து நிறுத்திவிட்டு ஊருக்குள் சென்று விஷயங்களை அறிந்து வந்தபின் பயணத்தை முடிவு செய்யலாம் என இருவரும் திட்டமிட்டனர். அதன்படி, பூங்குழலி அங்கிருந்த குழகரின் கோவிலை அடைந்தாள். கோவிலில் பட்டரைச் சந்தித்து பிரசாதங்களையும் பாலையும் பெற்றுக்கொண்டு, பழுவேட்டரையரும் நந்தினியும் வந்திருப்பதை அறிந்து கொண்டு திரும்பினாள். நந்தினியை, பூங்குழலின் அண்ணியான ராக்கம்மாள் சந்தித்து பாண்டியர் ரகசிய முத்திரையைக் காண்பித்து தானும் ஆபத்துதவி என்று தெரிவித்துக் கொண்டாள். மந்திரவாதியுடன் பேச குழகர் கோயிலுக்குக் கூட்டிச் செல்வது போல் கூட்டிச் சென்றாள்.  அப்போது சேந்தன் அமுதன் இங்கு வந்திருப்பதையும் இருவரும் கலங்கரை விளக்கின் மேல் இருந்தபொழுது ஒரு படகு வந்து பின் கண்ணுக்கு மறைந்து விட்டதையும் கூறினாள். பின்னர் நந்தினியின் உருவம் ஊமைராணியை ஒத்திருப்பதாகக் கூற, இனி ஊமைராணியை கண்டால் தன்னிடம் கூட்டி வருமாறு நந்தினி கேட்டுக் கொண்டாள். அவளை அவ்வளவு சீக்கிரம் யாரும் சந்திக்க முடியாதெனவும் பூங்குழலிக்கு அவளை நன்கு தெரியுமெனவும் இராக்கம்மாள் கூறினாள். இருவரும் மந்திரவாதியிடம் வந்து சேர்ந்தனர். மந்திரவாதியும் நந்தினியும் பேசுவதை பூங்குழலி திரும்பிப்போகும் வழியில் கேட்க நேரிட்டது. இளவரசர் இறந்துவிட்தாக வந்த செய்தியை நந்தினி நம்பவில்லை. பூங்குழலியைப் பற்றிச் சொல்லி மண்டபத்தில் ஒளித்து வைத்திருக்கலாம் என ராக்கம்மாள் மந்திரவாதியிடம் சொல்ல, பூங்குழலிக்கு அச்சம் பரவியது. இளவரசரைச் சுற்றி நாலாபக்கமும் சூழ்ந்திருந்த ஆபத்தை உணர்ந்து கொண்டாள். எப்பாடுபட்டாவது அவரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் தனக்கு இருப்பதை உணர்ந்து மறைவிடம் நோக்கி விரைந்தாள். ஆனால், விட்டுவிட்டு வந்த இடத்தில் ஓடமும் இளவரசரும் இல்லாதிருப்பதைக் கண்டு மேலும் கலவரமடைந்தாள். மண்டபத்தில் ஒளிந்து இருக்கலாம் என்று நினைத்தால் மந்திரவாதி அங்கு வருவதாகச் சொன்னது நினைவுக்கு வர, எச்சரிப்பதற்காக காட்டு வழியில் வேகமாக ஓடினாள். நடுவில் சேந்தன் அமுதன் பாடுவது போல் நடித்து, மந்திரவாதி அங்கிருப்பதை உணர்த்த, இருவரையும் மந்திரவாதி ரவிதாசன் ‘இளவரசர் எங்கே?’ எனக் கேட்டு மிரட்டினான்.  பூங்குழலி இளவரசர் இறந்து விட்டதாகக் கூற ரவிதாசன் அதை நம்பவில்லை. பூங்குழலி கடற்கரைப் பக்கம் ஓடுவது போல போக்குக்காட்டி ரவிதாசனைப் புதைமணலில் விழுமாறு செய்தாள். ரவிதாசன் காப்பாற்றுமாறு கதற, சேந்தன் அமுதனின் துண்டை வாங்கி அவனைக் கட்டிவிட்டு, ‘காலையில் யாரேனும் வந்தால் அவிழ்த்து விடுவார்கள்’ எனக் கூறி இருவரும் மண்டபத்துக்கு விரைந்தனர். இளவரசரை நாகப்பட்டினத்திலுள்ள சூடாமணி விஹாரத்திற்கு கூட்டிச் செல்லுமாறு குந்தவை சொல்லி அனுப்பியதாக சேந்தன் அமுதன் கூற, வந்தியத்தேவன் பழையாறைக்குச் செல்வதாக ஏற்பாடாயிற்று. சுரவேகத்தில் மயக்கமடைந்திருந்த அருள்மொழிவர்மரைப் படகில் ஏற்றினர். அப்போது நரிகளின் ஊளைக் குரல் கேட்டது. இளவரசர் அபாயத்திலிருக்கும் மனிதனைக் காப்பாற்ற வேண்டும் எனக் கூறிக்கொண்டே மறுபடியும் மயங்கி விழ, பூங்குழலி ரவிதாசனைக் காப்பாற்ற புதைகுழிக்கு விரைந்தாள். வந்தியத்தேவனும் உடன் சென்றான். அதற்குள் ராக்கம்மாள் ரவிதாசனை விடுவித்து விட்டிருந்தாள். இவர்கள் கால்வாய்க் கரையை நோக்கி வரும் வழியில் ரவிதாசனும் ராக்கம்மாளும் மறைந்திருப்பதைப் பார்த்து விட்டார்கள். அவர்களும் இவர்களைக் கவனித்து விட்டார்கள். வந்தியத்தேவன் வேண்டுமென்றே அவர்கள் காதில் விழும்படி, ‘ஆதித்த கரிகாலன் அரசாள்வதற்காக பொன்னியின் செல்வரை, தான் கடலில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டதாகவும் பூங்குழலி அதைப்பற்றி வாய்திறந்தால் ரவிதாசனைப் புதைசேற்றில் தள்ளிக் கொன்றதை நந்தினியிடம் சொல்லி விடுவேன்’ என்றும் மிரட்டி நடித்தான். அவளுடைய மாமன் மகன் கொண்டுவரும் ஓடத்தில் ஏறி இலங்கை போய்விடுமாறும் பூங்குழலியை மிரட்டினான். அதன்படியே பூங்குழலி ஓடத்தில் ஏறிக்கொள்ள, படகை நாகப்பட்டினம் நோக்கி செலுத்தினார்கள். மந்திரவாதியும் ராக்கம்மாளும் இதைத் தொடர்ந்து மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பின் மந்திரவாதி வெளிப்பட, வந்தியத்தேவன் ‘பிசாசு, பிசாசு’ எனக் கத்திக்கொண்டே ஓடி மந்திரவாதி பார்வையில் இருந்து மறைந்தான். சேந்தன் அமுதன் சொன்ன இடத்தில் தன் குதிரையைக் கண்டுகொண்டான். பழையாறை பாதையில் குதிரையை நடத்தினான். சுரத்தில் பாதிக்கப்பட்டிருந்த இளவரசரைக் கனிவுடன் கவனித்துக் கொண்டும் இடைப்பட்ட கிராமங்களில் சேந்தன் அமுதன் கொண்டுவந்த  உணவைப் பகிர்ந்துண்டும் மூவருமாக நாகப்பட்டின சூடாமணி விஹாரத்தை அடைந்தனர். பூங்குழலி இளவரசருக்கு சேவை செய்வதில் தனி உவகை கொண்டிருந்தாள். இவர்கள் சூடாமணி விஹாரத்தை அடைந்தபொழுது அங்கே இளவரசரைக் கடல் கொண்டுவிட்ட செய்தி கிடைத்து அல்லோல கல்லோலமாயிருந்தது. சேந்தன் அமுதன் தலைமைப் பிட்சுவிடம் சென்று விஷயங்களைச் சொல்லி விஹாரத்தின் பின்பகுதியில் நிறுத்தியிருந்த படகிடம் அழைத்து வந்தான். அவரும், குந்தவை தேவி ஏற்கனவே அவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டதை மனதில் வைத்துக்கொண்டு, ரகசியமாகவே இளவரசரை உள்ளே அழைத்துச் சென்றார்.  ‘மறுபிறவியிலேனும் அருள்மொழி வர்மரை மறுபடி சந்திக்க முடியுமா?!” என்ற ஏக்கத்துடன் பூங்குழலி கதவு மூடும்வரை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 14

பொன்னியின் செல்வன் – 14

மண்டபத்திலிருந்து அருள்மொழி வர்மன் குழுவினர் வெளியேறி நடந்தனர். வழியிலேயே பார்த்திபேந்திரனும் கொடும்பாளூர் பெரிய வேளாரும் சைன்யத்துடன் வந்து கொண்டிருந்தனர். பூங்குழலியும் அவர்களுடன் வந்திருந்தாள். அனைவரும் சாலையோரமிருந்த மண்டபத்திற்குச் சென்று பேசலாமென முடிவெடுத்தனர். போகும் வழியில், பூங்குழலி உதவி கேட்டது வந்தியத்தேவனுக்கு ஞாபகம் வர இளவரசரிடம், “சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?” எனக் கேட்க, அவர் “சரிவர நினைவில்லை” என பதிலளித்தார். வந்தியத்தேவன் பூங்குழலியைத் திரும்பி பார்க்க, அவள் தன் வழக்கத்திற்கு மாறாக நாணத்துடன் கடைக்கண்களால் இளவரசரையே பார்த்துக்கொண்டு நிற்பதைக்கண்டு சிரித்துக் கொண்டான். திருக்கோவலூர் சிற்றரசரும் இளவரசரின் பாட்டனாருமான மலையமானும் ஆதித்த கரிகாலனும் இளவரசன் அருள்மொழி காஞ்சிக்கு வந்து பழுவேட்டரையரின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பார்த்திபன். இளவரசர் கொடும்பாளுர் வேளாளரிடம், குந்தவை பழையாறைக்கு அழைப்பதையும், முதன்மந்திரி அநிருத்தர்தான் இலங்கையிலேயே இருக்கச் சொல்லி இருப்பதையும் கூறி ஆலோசனை கேட்டார். அவரோ பூங்குழலி கொண்டு வந்திருக்கும் சேதியைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கும்படி கூறினார். சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரில் இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டுவருவதற்காக பழுவேட்டரையர்கள் இரண்டு மரக்கலங்கள் நிறைய போர்வீரர்களை அனுப்பியிருப்பதாக பூங்குழலி கூறினாள். அனைவரும் அதைக் கேட்டு கோபப்பட, இளவரசர் அருள்மொழிவர்மரோ தன்னுடைய தந்தையின் ஆணைக்கு கீழ்ப்பட்டு கலபதியிடம் தம்மை ஒப்புக்கொடுப்பதே முறை எனக் கூறினார். பூங்குழலியிடம் தன்னை அங்கே சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார். கொடும்பாளூர் வேளார், பழுவேட்டரையர்களின் சூழ்ச்சியையும் நந்தினி யார் என்பதையும் பார்த்திபேந்திரன் மூலம் அறிந்து கொண்டதை எடுத்துக் கூறி, போகவேண்டாமெனத் தடுத்தார். இளவரசர் அதையும் மறுத்துக் கிளம்ப, தானும் தொடர்ந்து வருவேன் என சைன்யத்துடன் கிளம்பினார். ஆனால், சைன்யத்துடன் கிளம்பிச் சென்றால் தாமதத்தை ஏற்படுத்தி, தன்னை பார்திபேந்திரனுடன் அனுப்பி விடலாம் என்ற சேநாதிபதியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டார் அருள்மொழிவர்மர். யானையின் காதில் ஏதோ ஓதி அதை வெகுவேகமாக ஓடச்செய்தார். யானையின் மேல் இளவரசருடன் அமர்ந்திருந்த பூங்குழலி, நடப்பது கனவா நனவா எனத் திகைத்து மகிழ்ந்திருந்தாள். நடுவில் அருள்மொழிவர்மர் ஊமை ராணியைப் பற்றி விசாரிக்க, பூங்குழலி அவள் தன் குருவெனக் கூறினாள். ஊமைராணியே தன் பெரிய தாயார் என்றும், அவர் இறந்துவிட்டதாகத் தன் தகப்பனார் நினைத்துக்கொண்டு வருந்தியிருப்பதாகவும், ஒருவேளை தான் சொல்ல முடியாமல் போனால் பூங்குழலி அதைச் சொல்லவேண்டுமென்ற உறுதிமொழியை இளவரசர் அவளிடமிருந்து பெற்றுக்கொண்டார். படைக்கலங்கள் இறங்கியிருந்த துறையை அவர்கள் அடைந்தபோது ஒரு மரக்கலம் தரை தட்டிக் கிடந்ததை கண்டார்கள். என்ன நடந்ததென்றே தெரியாமல் குழப்பமாய் இருந்தது. பூங்குழலி உணவு அருந்தாமல் சோர்வுற்றிருந்தாள். அப்போது அந்தக் கலத்தருகே ஊமைராணி அவர்களுக்காக சமைத்து உணவிட்டாள். இருவரையும் உறங்கச் சொல்லிவிட்டு ஊமைராணி காவல் இருந்தார். உறக்கத்தில் பூங்குழலி ‘அலைகடல்தான் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்’ என்று முணுமுணுக்க, இளவரசர் அவள் மீது பரிவு கொண்டார். விடிந்தவுடன் ஒரு ஓடத்தில் சேநாதிபதியும் ஆழ்வார்க்கடியானும் வந்து சேர்ந்தனர். வரும் வழியில் ஒரு பெரிய மரக்கலம் செல்வதைக் கண்டு அதில் இளவரசர் சென்றிருக்கலாம் என்று கருதி நீரில் குதித்து நீந்தி அந்தக் கலம் நோக்கிச் சென்ற படகொன்றில் ஏறி வந்தியத்தேவன்  சென்றுவிட்டதாகக் கூற இளவரசர் பெரிதும் வருந்தினார். அப்போது ஊமைராணி குதிரையில் வந்து அவர்களை ஒரு இடத்திற்கு வருமாறு சைகை செய்தாள். அங்கு சென்றபோது, இளவரசரைக் கைது செய்ய வந்த மாலுமிகளும் வீரர்களும் இறந்து கிடந்ததைக் கண்டனர். அப்போது கலபதி மட்டும் குற்றுயிரோடு இருக்க, இளவரசர் அவரை மடியில் ஏந்தினார். இளவரசரைக் கைது செய்யும் விவரம், கூட வந்த வீரர்களுக்கு தெரிந்தவுடன் அதற்கு அவர்கள் உடன்பட மறுத்தனர் என்றும், அப்போது வந்த அரபுநாட்டு வீர்கள் தங்களைத் தாக்கிக் கொன்றுவிட்டு மரக் கலத்தையும்  ஓட்டிக்கொண்டு போய்விட்டதாகவும் வருந்திய கலபதி, ‘இளவரசரைக் கைது செய்ய வந்த துரோகத்தினாலேயே இவ்வாறு நிகழ்ந்தது, மன்னிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டு உயிர் விட்டார். பின் இளவரசர் அங்கிருந்த சோழ வீரர்களின் உடல்களை எல்லாம் தக்க மரியாதையுடன் தகனம் செய்தார். சேநாதிபதியிடம் மிகவும் வருந்திய இளவரசர், தன் பொருட்டு வந்தியத்தேவன் அரேபியக் கப்பல் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொண்டதால் அவனைக்  காப்பாற்ற என்ன செய்வதென்று யோசித்தார். அப்போது பூங்குழலியும் ஊமைராணியும் பூங்குழலியின் தமயனைக் கூட்டிக் கொண்டு வந்தனர். அவள் தமயன், அவர்கள் இளவரசரைக் கொல்ல வந்த பாவிகள் என்பது தெரியாமல் அவர்களை இலங்கைக்குக் கூட்டி வந்ததாகவும், இப்போது அரபுக்கப்பலில் அவர்களுடன் வந்தியத்தேவனையும் கூட்டிப் போய் விட்டதாகவும் மன்னிப்புக் கோரி நின்றான். அப்போது பார்த்திபேந்திரனின் கப்பலைக் கண்ட இளவரசர் சற்றும் தாமதியாமல் படகில் ஏறிக் கப்பலை அடைந்து வந்தியத்தேவனைக் காப்பாற்ற கப்பலைத் திசை திருப்புமாறு கட்டளையிட்டார். பார்த்திபேந்திரனும் கப்பலை விரைந்து செலுத்துமாறு கலபதிக்கு ஆணையிட்டான். கடலில் கொந்தளிப்பு எழுந்தது. ஒரு பெரும்புயல் தோன்றத் தொடங்கியிருந்தது. எனவே கப்பல் நகரவேயில்லை. இளவரசர் வந்தியத்தேவனை எண்ணிக் கவலையுற்றார்.  வந்தியத்தேவன் குந்தவையின் ஆணையின் பேரில், ‘இளவரசர் இல்லாமல் நாம் திரும்பக்கூடாது’ என்று உறுதி பூண்டுதான் கடலில் குதித்துப் படகை அடைந்து கப்பலுக்குச் சென்றான். ஆனால் அங்கு இளவரசர் இல்லை என்பதும், படகில் கூட வந்தவர்கள் அபாயகரமானவர்கள் என்பதையும் கப்பலுக்குச் சென்ற பிறகே புரிந்து கொண்டான். அவனை கப்பலின் அடிப்பகுதியில் கட்டிப் போட்டிருந்தார்கள். கடம்பூரில் தேவராட்டம் ஆடிய தேவராளனும் மந்திரவாதி ரவிதாசனும் கப்பலில் வந்தனர். அவர்கள் பேசிக்கொண்டதில், அவர்களின் தலைவி இளையராணி நந்தினி என்பதைத் தெரிந்து கொண்டான். மேலே சத்தம் கேட்க, தன் கட்டுகளை விடுவித்துக்கொண்டு வந்தபோது, அராபியர்களை ரவிதாசனும் தேவராளனும் தாக்கிக் கடலில் எறிவதைக் கண்டு தானும் அவர்களைத் தாக்கலானான். அரேபியர்கள் அனைவரையும் மூவரும் தீர்த்து முடித்தனர். ரவிதாசன் அவனை, தன் கூட்டத்தில் சேரவேண்டும், இல்லையானால் கடலில் தூக்கிப் போட்டுவிடுவேன் என மிரட்ட, வந்தியத்தேவன் அவர்களை யார் எனக் கேட்டான். தாங்கள் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் எனவும், சோழர் குலத்தைப் பூண்டோடு அழிக்க சபதம் எடுத்துச் செயல்படுபவர்கள் எனவும் அவனை தங்களோடு சேர்ந்துவிடும்படியும் கூறினர். வந்தியத்தேவன் மறுக்க, அவனைக் கொன்றுவிட முடிவெடுத்தனர். ஆனால் அவன் அவர்களைத் தாக்கத் தயாராய் இருக்க, அவனைத் தந்திரமாக ஏமாற்றிவிட்டு கப்பலோடு இருந்த படகை எடுத்துக் கொண்டு தப்பித்தனர். நடுக்கடலில் தன்னந்தனியாக மரக்கலத்தில் வந்தியத்தேவன் மாட்டிக் கொண்டான். புயலும் மழையும் ஆரம்பித்தது. சுற்றிலும் இருட்டு பரவியது. கல் மழை, அதைத் தொடர்ந்து பேய் மழை, இடி, மின்னல் என எல்லாம் சேர்ந்து வந்தது. வந்தியத்தேவன், தன் ஆயுள் இங்கேயே முடிந்து போகுமோ, தாம் இறந்ததை குந்தவைக்கு யார் சொல்லுவார்கள் என்றெல்லாம் பரிதவித்தான். அப்போது ஒரு பெரும் இடி அவன் கப்பலில் இருந்த பாய்மரத்தில் விழுந்து பாய்மரத்தில் தீப்பற்றிக் கொண்டது. தன் விதி அத்துடன் முடிந்து விட்டதென வந்தியத்தேவன் நினைத்துக் கொண்டான்.  அதே சமயத்தில் பார்த்திபேந்திரனின் கலத்தில் இருந்து வந்தியத்தேவனைக் கண்டுவிட்ட இளவரசர் இரண்டு வீரர்களை அழைத்துக்கொண்டு அவனைக் காப்பாற்றப் படகில் கிளம்பினார். பார்த்திபேந்திரன் தடுத்தும் கேட்கவில்லை. புயல் மழையில் கொந்தளிக்கும் அலைகளின் நடுவே மிகுந்த சிரமத்திற்கிடையில் கலத்தின் அருகில் படகை எடுத்துச்சென்று வந்தியத் தேவனிடம் ‘குதி குதி’ எனக் கத்தினார். வந்தியத்தேவன் இளவரசரைக் கண்டவுடன் கடலில் குதிக்க, அலையால் உந்தப்பட்ட படகு, கப்பலிருக்கும் திசையை விட்டு விலகிச் சென்றது. இளவரசர் நீரில் குதித்து வந்தியத்தேவனைப் பற்றிக்கொண்டு படகில் சிரமப்பட்டு ஏற்றினார். தீப்பற்றிய கப்பல் பெரிதாய் எரிய ஆரம்பித்து மூழ்கத் தொடங்கியது. வேகவேகமாய்ப் படகை செலுத்திய பின்னும் உடைந்த பெரிய பாய்மரத் துண்டு ஒன்று படகில் மோத, படகு இரண்டாய் உடைந்தது. உடைந்த பாய்மரத்துண்டை இளவரசரும் வந்தியத்தேவனும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். மழையும் இடியும் புயலும் நின்று அமைதி சூழ்ந்தது. ஆனால், இருளில் படகோ, கப்பலோ சென்ற திசை தெரியவில்லை. கரையில், இளவரசர் சென்ற பின் ஆழ்வார்க்கடியானிடம் சேநாதிபதி, ‘நடந்தது கூட நல்லதற்குத்தான். இளவரசர் பார்த்திபேந்திரனின் கலத்தில் ஏறி காஞ்சிக்குச் சென்றுவிட்டால் தானும் கிளம்பித் தஞ்சைக்குச் செல்வதாகக் கூறினார். ஆழ்வார்க்கடியான், ஊமை ராணியைப் பார்த்தால் கையோடு அழைத்து வரும்படி அநிருத்தர் ஆணையிட்டிருப்பதாகக் கூறிவிட்டு ஊமை ராணியை நோக்கிச் சென்றான். பூங்குழலியை அருகில் அழைத்த சேநாதிபதி அவளிடம், ‘இளவரசர் பற்றிப் பகல்கனவு காணாதே; அவருக்கு என் மகள் வானதிதான் மணப்பெண்’ எனக் கூறி எச்சரிக்க, பூங்குழலி சினமுற்று அங்கிருந்து வேகமாக அகன்றாள். தன் படகை எடுத்துக்கொண்டு புயலின் அல்லோலகங்களுக்கு நடுவே பூதத்தீவில் ஒதுங்கி, புயலின் ஆவேசத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது கடலின் ஓரத்தில் பாய்மரத்தில் ஒருவனைக் கண்டு அவனை கரையேற்றினாள். அவன் முதல்நாள் இடிவீழ்ந்ததில் ஒரு மரக்கலம் எரிந்ததைச் சொல்லி, அதில் பலர் காயப்பட்டிருக்கலாம் எனக் கூறினான். சேநாதிபதியின் வார்த்தையால் பெரிதும் வருந்தியிருந்த பூங்குழலி, தன் ஓடத்தை வைத்துக்கொண்டு ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றவாவது செய்யலாம் என நினைத்து கடலுக்குள் இறங்கினாள். இளவரசர் அவளை சமுத்திரகுமாரி என்று அழைத்ததை நினைத்துக் கொண்டாள். இன்னேரம் அவர் கோடியக்கரை சென்றிருப்பார், அரச குடும்பங்கள் அனைத்தும் இப்படித்தான் என்று நினைத்துக்கொண்டு  பாட ஆரம்பித்தாள். ‘இடி இடித்து எண்திசையும்வெடிபடும் அவ்வேளையிலேநடனக் கலை வல்லவர் போல்நாட்டியந்தான் ஆடுவதேன்?’ ஒரு இரவு முழுவதும் கடலில் பாய்மரத்தைப் பற்றி மிதந்து கொண்டிருந்த வந்தியத்தேவன், முழுவதுமாய் நம்பிக்கை இழந்திருந்தான். இளவரசர் நான்கு நாட்கள் வரை மிதந்து  உயிர் பிழைத்தவரகள்கூட உண்டு என அவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தன்னால் அல்லவா இளவரசருக்கு இவ்வாறு ஆனது என வந்தியத்தேவன் வருந்திக் கொண்டிருந்தான். அப்போது பூங்குழலியின் பாட்டு இனிமையாக அவர்கள் காதில் விழுந்தது. பூங்குழலி  இவர்களைக் கண்டு அதிசயித்து நின்றாள். இளவரசர் வந்தியத்தேவனைப் படகில் ஏற்றி, தானும் ஏறினார். இரண்டாம் பாகம் முற்றிற்று.

கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு

கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு

வ. உ. சி. நினைவுநாளில் அவர் புகழ் பாடும் கவிதை நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனகடலிலும் நீசுதந்திரக் கொடிபறக்கவிட்டாய் கப்பல் ஓட்டிய உன் கம்பீரம்இன்னும் பட்டொளி வீசிப்பறக்கிறது பாரெங்கும் நீதிமன்றத்தில் மட்டும்வழக்காடி வாழ்ந்திருந்தால்கப்பல் கப்பலாய் நீபொருள் ஈட்டியிருக்கலாம் மக்கள் மன்றம் வந்துஉரிமைக் குரல் கொடுத்ததால்நீதிமன்றம் கொண்டுபோய்நிறுத்தினார்கள் உன்னை ஆம்…வழக்கறிஞராகப் போகவேண்டியநீதிமன்றத்துக்குகுற்றவாளியாகக் கொண்டு போய்நிறுத்தியது காலம் கண்ணை மூடிக்கொண்டுதண்டனையும் கொடுத்தாள்அன்று கோலோச்சியஆங்கில நீதி தேவதை நீதி தேவதையா?அநீதி தேவதையானஅவள் வழங்கியதோஇரட்டை தீவாந்திரம் அத்தோடு மூழ்கியதுஉன் வாழ்க்கைக் கப்பல் முள்ளை முள்ளால்தான்எடுக்க வேண்டும் என்பதால்கப்பலில் வந்த வெள்ளையனைகப்பலோட்டியே கப்பலேற்றலாம்என நீ நினைத்தாய் சட்டம் படித்த உன் நெஞ்சில்இருந்தது நீதிஅதனால் உன் முள் கூடதராசு முள்ளாகத்தான் இருந்தது வணிகம் செய்ய வந்துஆட்சியைப் பிடித்தவெள்ளையன் வைத்திருந்ததோவிஷம் தடவிய முள் ஆயுள் தண்டனை விதித்துசிறையில் அடைத்துஉன் சிறகுகளைப் பிய்த்து எறிந்ததுஆங்கில ஏகாதிபத்தியம் செக்கிழுத்து செக்கிழுத்துசிறையிலேயே நீசிதைந்து போனாய் விடுதலை அடைந்து வெளியே வந்ததும்உன் துடுப்புகளையும்உடைத்துப் போட்டதுஎமது அலட்சியம் ஏற்கனவே உடல் தேய்ந்திருந்த நீஅதனால் உள்ளமும்ஓய்ந்து போனாய் அடியோடு வீழ்ந்துபோனதுஅரசோடு போட்டி போட்ட உன்அகண்ட பொருளாதாரம் அன்றாட வாழ்க்கைக்கேதள்ளாடும் நிலைக்குப் போனதுஉன் வாழ்வாதாரம் பின் உயிர் வாழ்ந்த நாளெல்லாம்கொடும் வெயிலானதுகடன்காரர்கள் பட்டியலேஉன் உயிலானது கடிதம் எழுதி எழுதியேகாலாவதி ஆனதுன் காலம் கணக்குப் பார்த்தாதீர்க்க முடியும் உன் தியாகத்தை? கடலில் கரைத்த பெருங்காயமானதுஉன் தியாகம்கண்ணீராலும் ஆறாத பெருங்காயமானதுஎங்கள் இயலாமை காந்தி கணக்கானதுஉன் வாழ்வு மன்னிக்கச் சொல்லிஉன் முன் மன்றாடுவதன்றிவேறொன்று தோன்றவில்லை எனக்கு இவ்வளவு நெருக்கடிகளுக்கிடையேஎப்படி உனக்குள்அப்படி ஒரு இலக்கிய தாகம்? கடலையே குடித்துவிடுவதுபோல்எழுதித் தள்ளியிருக்கிறாய்! பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தாய்ஆங்கில நூல்களை மொழிபெயர்த்தாய்கவிதை எழுதினாய்உரை எழுதினாய்சிறையிலும் எழுதினாய் எங்கள் பாரதியின் தோழனேஉன்னை எழுதாமல் இன்று நான்வேறு யாரை எழுதிஎன்ன பயன்? கப்பலால் கவிழ்ந்தகலங்கரை விளக்கேஒன்றை மட்டும் யாரும்மறைக்கமுடியாது எங்கே எப்போதுகப்பலைப் பார்த்தாலும்உன் ஞாபகம்தான்எங்கள் நெஞ்சில் எழுகிறது ஏனெனில்தேசத்தின் முதல் சுதந்திரக் கப்பல்உன்னுடையதல்லவா?அதில் பட்டொளி வீசிப் பறந்ததுஇந்த மண்ணின் மானம் அல்லவா? அதிகாரத்துக்கு அஞ்சாமல்நெஞ்சு நிமிர்த்திய வீரனேசட்டத்தால் போராடிய சூரனே சதி காரத்தால் நீ வீழ்ந்திருந்தாலும்இந்திய விடுதலை வரலாற்றில்என்றென்றும் ஒளிவீசும் அத்தியாயம்உன் சரித்திரம் காலக் கடலில் கரைந்து போகும்எத்தனையோ மனித வாழ்க்கையில்என்றென்றும் கரையாமல் வாழும்கப்பல் ஓட்டிய உன் கம்பீரம் இந்தியப் பெருங்கடல் அலைகள்உன் பெயரை ஓயாமல்பாடிக்கொண்டே இருக்கும் எங்கள் நெஞ்சின் அலைகளும்.

ஒரு தேசியக் குடும்பம்

ஒரு தேசியக் குடும்பம்

விடியுமா? நூல் அறிமுகம் 1942. பூர்ணியா மத்தியச் சிறைச்சாலையில் மூன்றாம் வகுப்பு கைதியான (கைதி எண் 1109), முப்பத்தி மூன்று வயது “பூர்ணா” எனும் பீலி பாபுவிற்கு நாளை வைகறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. பீலிக்கு இத்தண்டனை கிடைக்கக் காரணமானவன், நீதிமன்றத்தில் அவனுக்கு எதிராய் சாட்சி சொன்ன அவன் மிகவும் நேசிக்கும் அவனின் அருமைத் தம்பி “நீலு”. பீலு, நீலுவின் பெற்றோர்களும் அதே சிறையில்தான் இருக்கிறார்கள். பூர்ணியா அரசுப்பள்ளியின் முன்னால் தலைமையாசிரியரான அவர்களின் அப்பா “மாஸ்டர் ஸாஹப்” ஸன்யால், சிறையின் முதல் வகுப்பு வார்டில் இருக்கிறார். அம்மா பெண்கள் வார்டில். நீலு இப்போது அவன் பெரியம்மா வீட்டில் தங்கியிருக்கிறான். அண்ணன் பீலு ஒரு காங்கிரஸ் சோஷியலிஸ்ட். தம்பி நீலு ஒரு கம்யூனிஸ்ட். அவர்களின் பெற்றோர் முதிர்ந்த காங்கிரஸ்வாதிகள்; காந்தியை தெய்வமாகத் தொழுபவர்கள். அப்பா ஸன்யால், பீலு, நீலு சிறுவர்களாயிருக்கும்போது தன் தலைமையாசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தவர் (அவரின் அந்த முடிவு தவறென்று அவரின் நெருக்கமான உறவினர்கள் சிலர் அறிவுறுத்துகின்றனர். ஆனால் ஸன்யால், காங்கிரஸில் சேருவதான தன் முடிவிற்கு தன் மனையிடம் மட்டும்தான் சம்மதம் கேட்கிறார்). பீலுவும், நீலுவும் சிறுவர்களாக இருந்தபோது/வளர்பருவத்தில் காங்கிரஸ் அபிமானிகள்தான். பீலு சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று காந்தியை ஒருமுறை சந்தித்திருக்கிறான். ஆனால் வளர வளர பீலுவிற்கும், நீலுவிற்கும் அவர்களின் அரசியல் நோக்குகளில் மாற்றம் உண்டாகிறது. ஆகஸ்ட் 8, 1942 – பாம்பேயின் “கோவாலியா டேங்க்” மைதானத்தில் காந்தி அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் முழக்கத்தை அறிவிக்கிறார். அதன்பின்பு… பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளின் வங்க நாவல்களையும், எழுத்தாளர்களையும், அவர்களின் பாணிகளையும் அருமையாக அலசி அவ்வரலாற்றில் ஸதீநாத்தின் ஜாகரி (விடியுமா?) எங்கு அமர்கிறது, அதன் தனித்துவம் என்னென்ன என்பதைப் பிரமாதமான முன்னுரையாகக் கொடுத்திருக்கிறார் ஸரோஜ் பந்தோபாத்யாய. முன்னுரையிலிருந்து…ஸதீநாத் பாதுரியின் ஜாகரி வங்காள அரசியல் நாவல், இலக்கியத்துக்கு ஒரு புதுப் பரிமாணம் கொடுத்துள்ளது. 1942-ம் ஆண்டிலேயே பாரத அரசியல் விழிப்புணர்வின் ஒருமை சிதறி, வேற்றுமைகள் தனித்துவம் பெற்று வளர ஆரம்பித்துவிட்டன. காங்கிரஸ் இசைத்து வந்த கோஷ்டிகான அமைப்பில், சி.எஸ்.பி, அதாவது காங்கிரஸ் ஷோசியலிஸ்ட் பார்ட்டி, கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆகியோர் தங்கள் தனி ஸ்வரங்களை மீட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆகஸ்ட் இயக்கத்தின் உசிதத்தைப் பற்றியே காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கடும் கருத்து மோதல்கள் எழுந்தன. காங்கிரஸுக்கும் சி.எஸ்.பி.க்கும் இடையே இயக்கத்தின் கதிவிதிகளைப் பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஜாகரி-யில் வர்ணிக்கப்படும் மாஸ்டர் ஸாகிப்பின் குடும்பம் அன்றைய அரசியல் சூழலின் ஒரு நுணுக்க ஓவியமாக அமைந்திருக்கிறது. முந்தைய நாள் மாலையிலிருந்து பீலு தூக்கிலிடப்படப் போகும் அடுத்த நாள் விடிகாலை வரையிலான பத்து/பனிரெண்டு மணி நேரங்கள்தான் முழு நாவலுமே. சிறையிலிருக்கும் அம்மா, அப்பா, பீலு, தூக்கிற்குப் பின் அண்ணன் பீலுவின் உடலை வாங்கிச்செல்ல அந்த இரவில் சிறையின் கேட்டருகே காத்திருக்கும் நீலு, ஆகிய நால்வரின் நினைவோடையாக நாவல் விரிகிறது. அருமையான நாவல்! அற்புதமான மொழிபெயர்ப்பு! நிறைவான வாசிப்பின்பம்! சிறிதும் வாசிப்பின் வேகம் குறைக்காத அபாரமான சுவாரஸ்யமான எழுத்து!. நிகழ்வுக்கும் நினைவுகளுக்கும் இயல்பாய் வழுக்கி மாறும் அந்த லாவகம் அபாரம்! முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே வெளிவந்த நாவலின் தனித்துவமான அந்த உத்தியும், துளியும் செயற்கையற்ற இயல்பான அதன் நடையும், கையாளப்பட்ட விஷயங்களின் புதுமைத் தன்மையும், சமூக அக்கறைகளும், எழுப்பிக்கொள்ளும் வினாக்களின் வழியே இழைந்தோடும் மனிதமும், அக்காலகட்டத்தின் உண்மை பொலியும் யதார்த்தச் சித்திரமும் மனதை வெகுவாக வசீகரித்தன. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்தியாவில் 1942 ஆகஸ்ட் கிராந்தி இயக்கத்தின் (வெள்ளையனே வெளியேறு) கொந்தளிப்பான காலகட்டத்தில், அந்த அரசியல் சூழல் ஒரு தேசியக் குடும்பத்தை எங்கனம் அலைக்கழித்தது என்பதை ஆழமாகப் பேசுகிறது நாவல். நாற்பதுகளின் இந்திய அரசியல் சூழலை நுண்ணி அறிய விரும்பும் இலக்கிய வாசகர்களும், வரலாற்றாய்வில் விருப்பமானவர்களும் தவறவிடக் கூடாத முக்கியமான நாவல் விடியுமா? நாற்பதுகளின் சமூக அரசியல் சூழல் நாவலில் ஆழமாய் அறியக் கிடைக்கிறது. சிறைச்சாலை நடவடிக்கைகளும், அக்காலத்தில் சிறைகளின் இயங்கு முறைகளும், சிறைச்சாலையின் உட்புறக் கட்டமைப்பும், அதிகாரப் படிகளும், கைதிகளின் அன்றாடங்களும், பல்வகைக் கைதிகளின் மனோநிலைகளும் நடவடிக்கைகளும் நாவலில் நுணுக்கமாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தன் பதினான்கு வருட சிறை வாசத்திற்குப் பின் ஹஸாரிபாக் ஜெயிலிலிருந்து விடுதலையாகும் ஆங்கிலோ இந்தியன் வில்லியம்ஸ், ஜெயிலில் தான் நட்டு வளர்த்த கொய்யா மரத்தையும், ஜாமூன் மரத்தையும், அசோக மரத்தடியில் தான் கட்டிய மேடையையும் பார்த்து விம்மி விம்மி அழுகிறான். முன்னுரையில் ஸரோஜ் குறிப்பிடுவது போல் விடியுமா?-வின் மூலப்பொருள் கட்சித் தொண்டனல்ல – மனிதன். விடியுமா? – ஸதீநாத் பாதுரிவங்க நாவல்; மூலம்: Jagari 1945தமிழில்: என்.எஸ். ஜகந்நாதன்நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு

பொன்னியின் செல்வன் – 13

பொன்னியின் செல்வன் – 13

சின்ன பழுவேட்டரையரிடம் பாதாளச் சிறையின் சாவியைப் பெற்றுக்கொண்ட குந்தவை, வானதியை அழைத்துக்கொண்டு வைத்தியர் மகனைக் காணச் சென்றாள். பொற்காசுகள் வார்ப்படம் செய்யும் தங்கச்சாலையின் பின்புறமாகப் பாதாளச் சிறைச்சாலை இருந்ததால் அதற்கான கட்டுக்காவலும் அதிகமாக இருந்தது. அங்கு சென்றபோது சேந்தன் அமுதன் தேவாரப் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தான். அவன் யார் என்பதையும், அவன் வந்தியத்தேவனுக்குச் செய்த உதவியையும் பற்றி குந்தவை தெரிந்து கொண்டாள். வைத்தியர் மகனைப் பழுவூர் இளையராணியின் ஆட்கள் அழைத்துப் போனதையும், வந்தியத்தேவன் காவலர்களிடம் இருந்து தப்பி இலங்கைக்குச் சென்றுவிட்டான் என்பதையும் தெரிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். சேந்தன் அமுதன் விடுதலை செய்யப்பட்டான். பல்வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், முக்கியமான நிருபம் (கடிதம்) ஒன்றை ஆதித்த கரிகாலனுக்கு எழுதி முடித்தாள் நந்தினி. அதில், ‘அரசிளங்குமரா! தயங்கி, பயந்து இந்த நிருபம் எழுதத் துணிந்தேன். இராஜ்யத்தின் நிலைமையைப் பற்றிப் பலவிதமான செய்திகள் காதில் விழுகின்றன. தாங்கள் எதையும் கவனிப்பதில்லை. நோயினால் மெலிந்திருக்கும் தங்கள் தந்தை பலமுறை சொல்லி அனுப்பியும், தாங்கள் தஞ்சைக்கு வரவில்லை. இதற்குக் காரணம் நான்தானோ என்ற எண்ணம் என்னை வதைக்கிறது. தங்களை ஒருமுறை சந்தித்தால் எல்லாச் சந்தேகங்களையும் போக்கி விடுவேன். அதற்குத் திருவுளம் இரங்குவீர்களா? தஞ்சைக்கு வர விருப்பமில்லாவிட்டால், கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சந்திக்கலாம். நான் இன்று தங்கள் பாட்டியின் ஸ்தானத்தில் இருக்கிறேன். நாம் சந்தித்துப் பேசுவதில் என்ன ஆட்சேபம் இருக்க முடியும்? இதைக் கொண்டுவரும் வீர இளைஞர், சம்புவரையர் குமாரரைத் தாங்கள் பூரணமாக நம்பி அவரிடம் எந்தச் செய்தியும் சொல்லி அனுப்பலாம் – இங்ஙனம், துரதிர்ஷ்டத்தின் கூடப் பிறந்த அபாக்கியவதி நந்தினி’ என்று எழுதி இருந்தது. அந்த நிருபத்தை, அவளது கவர்ச்சியில் ஏற்கெனவே மயங்கிப் போயிருந்த கந்தமாறனிடம் கொடுத்து, அதைக் கரிகாலரிடம் சேர்ப்பிக்கும்படியும், எப்படியும்  அவரைக் கடம்பூருக்கு அழைத்து வரும்படியும் வேண்டிக் கொண்டாள். வந்தியத்தேவன் கந்தமாறனை முதுகில் குத்தியிருக்கமாட்டான் என்றும் அன்று நிலவறைச் சந்திப்பின்போது தன்னை பழுவேட்டரையர் மகளாக அழைத்ததையும் நினைவுபடுத்தினாள். கந்தமாறன் யோசித்து முடிக்குமுன் பெரிய பழுவேட்டரையர் ஆங்காரத்துடன் வந்து சேர்ந்து கந்தமாறனை கேள்விகளால் துளைத்தார். நந்தினி பொறுமையாக அதற்கெல்லாம் பதில்சொல்லி அவரை சமாளித்து, கந்தமாறன் ஆதித்த கரிகாலனுக்கு ஓலை கொண்டுசெல்வதைப் பற்றிக் கூற, பழுவேட்டரையாரால் நந்தினியை எதிர்த்து எதுவும் சொல்ல முடியவில்லை. கந்தமாறன் சென்றபிறகு, தன்னை அவன் எதிரில் சந்தேகப்பட்டுப் பேசியதற்காகப் பழுவேட்டரையரிடம் பெரிதாய் வருந்தி, தன்மேல் சந்தேகம் உள்ளதானால் வாளெடுத்துக் கொன்றுவிடுங்கள் என்றெல்லாம் கூறி இளக வைத்தாள். பின் பழுவேட்டரையர் அவளை சமாதானப்படுத்தத் தொடங்கினார். அங்கே இலங்கையில்.. வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் இளவரசரைத் தேடிச் சென்றுகொண்டிருந்தபோது வழியில், பார்த்திபேந்திரப் பல்லவனைச் சந்திக்க நேர்ந்தது. வந்தியத்தேவன், தான் வந்த காரணத்தைத் தெரிவிக்காமல் பேச்சை முடித்துக்கொண்டான். ஆழ்வார்க்கடியான் பார்த்திபேந்திரனுடன் வந்திருந்த ஆட்களைக் கூர்ந்து பார்த்தான். பார்த்திபேந்திரன் சென்றவுடன், அந்த ஆட்கள் திருப்பியம்புறம் பள்ளிப்படையில் சோழர் குலத்தை அழிக்க சபதம் எடுத்துக் கொண்டவர்கள் என்று வந்தியத்தேவனிடம் கூறினான். வந்தியத்தேவன் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு பூங்குழலியின் தமையன் இலங்கைக்குச் சென்றதைப்பற்றி அவள் தந்தை குறிப்பிட்டதை  நினைத்துக்கொண்டான். இலங்கையின் சில பகுதிகள் சிங்கள மன்னன் மகிந்தனிடம் இருப்பதாகவும், சோழப் படை கைப்பற்றிய பகுதிகளில் இளவரசர் அருள்மொழி வர்மர் கருணையுடன் இலங்கை மக்களிடம் நடந்து கொள்வதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறினான். அப்போது வீதியில் பெரிய யானை மீதான அம்பாரியில் சீன யாத்ரிகர்கள் அமர்ந்திருக்க, அதன் மீதிருந்த பாகனை ஆழ்வார்க்கடியான் கூர்ந்து கவனித்து அது இளவரசர் அருள்மொழிவர்மர்தான் என்பதைப் புரிந்து கொண்டான். ஆனால் வந்தியத்தேவன் அதைக் கவனித்திருக்கவில்லை. ஒரு காவலாளி கொடும்பாளூர் முத்திரை மோதிரத்தைச் சரிபார்த்து அவர்களை அழைத்துச் சென்றான். காவலாளியும் ஆழ்வார்க்கடியானும் இரு குதிரைகளில் ஏறிக்கொள்ள, வந்தியத்தேவனுக்குக் குதிரை வழங்கப்படவில்லை. கோபமடைந்த வந்தியத்தேவன் காவலாளியைத் தள்ளிவிட்டு, தாண்டிப்போன குதிரைகளைப் பின் தொடர ஆரம்பித்தான். வெகுதூரம் சென்றபிறகு சோழர் சைன்யத்துடன் தாவடிகள் காணப்பட்டது. அப்போது முன்சென்ற குதிரைகளிலிருந்து ஒருவர் மட்டும் வேகமாக வந்து வந்தியத்தேவனின் முகத்தில் குத்திக் கீழே தள்ளி அவன் இடுப்பிலிருந்த ஓலையை எடுத்துப் படிக்கத் தொடங்கினார். வந்தியத்தேவனால் அசையவே முடியவில்லை. அப்போது சுற்றியிருந்த அனைவரும் அந்த வீரனின் முகத்தைக் கண்டு ‘பொன்னியின் செல்வர் வாழ்க’ எனக் கோஷமிட, வந்தியத்தேவன் திகைத்தான். பின் அனைவரும் விலகிச் செல்ல, அருள்மொழிவர்மர் விஷயங்களைக் கேட்டறிந்தார். ‘பார்த்திபேந்திரன் ஆதித்த கரிகாலனைக் காஞ்சிக்கு அழைத்து வரும் தூதனாக வந்திருப்பதை அறிந்தே, உங்களைச் சந்திக்கும் முன்பு அவரைச் சந்திப்பதைத் தவிர்த்தேன்’ என இளவரசர் கூறினார். ஆழ்வார்க்கடியான் தன்னை இலங்கையிலேயே இருக்கும்படி அநிருத்த பிரம்மராயர் சொல்லி அனுப்பியதாகக் கூறினான். மூன்று பேரிடமும் இருந்து வெவ்வேறு விதமான செய்திகளை அடைந்த இளவரசர் அமைதி காத்தார். பின்னர் பார்த்திபேந்திரனைச் சந்திப்பதற்காக அநுராதபுரம் கிளம்பிய அருள்மொழிவர்மருக்கு, செல்லும் வழியில் புத்தரின் பாதங்களில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு செய்தி கிடைத்தது. அன்று இரவில் ஒரு படித்துறை தடாகத்தின் அருகே மூவரும் சென்றனர். அங்கு ஒரு பிட்சு வந்து அவர்களை ரகசிய வழியொன்றில் நிலவறை விகாரம் ஒன்றின் உள்ளே அழைத்து சென்றார். அங்கு ஒரு கருங்கல் மண்டபத்தில் தங்க சிங்காதனம், மணிமகுடம், உடைவாள், செங்கோல் அனைத்தும் இருந்தன. அங்கிருந்த தலைமைப் பிட்சு இளவரசரை அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து இலங்கை அரசுரிமையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அருள்மொழி வர்மர், தான் அவருடைய வேண்டுகோளுக்காகப் பெருமைப்படுவதாகவும் தன் தந்தையும் அரசருமான சுந்தர சோழருக்கு, தான் கீழ்ப்பட்டவன் என்பதால் அவரின் சொல்லின்றி எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி மறுத்தார். வந்தியத்தேவன் இளவரசரின் பெருந்தன்மையை எண்ணிப் பெருமிதப்பட்டவாறே இருக்க, மூவரும் வெளிவந்தனர். அதைப்பற்றிப் பேசிக்கொண்டே வீதியில் நடந்தபொழுது கைதட்டும் ஓசை கேட்க, திரும்பிப் பார்க்கையில் ஓர் உருவம் நின்றிருந்தது. அதை நோக்கி இருவரையும் அழைத்துக் கொண்டு இளவரசர் நகர, அவர்கள் இருந்த இடத்தில் இருந்து மேல் மாட முகப்பு இடிந்து வீழ்ந்தது. ஒரு நிமிடம் தாமதித்திருந்தால்கூட மூவரும் இறந்திருக்கக் கூடும். காப்பாற்றிய அந்த உருவத்தைக் கண்ட வந்தியத்தேவன் திகைத்தான். ஏனெனில் அந்தப் பெண் பழுவூர் இளையராணி நந்தினியின் உருவ அமைப்பில் இருந்தார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த உருவம் மறைந்து விட, சித்தப் பிரமையோ எனக் குழம்பினான். ஒரு மண்டபத்தை அடைந்து அங்கு இரவைக் கழிப்பதற்காக மூவரும் தங்கினர். அப்போது வந்தியத்தேவன் அந்தப் பெண்மணியைப் பற்றிக் கேட்க, அருள்மொழி வர்மர் அவளைப்பற்றிச் சொல்லலானார். ‘சிறு வயதில் என்னைப் பொன்னி நதியில் இருந்து காப்பாற்றிய பெண்மணி இவர்தான். நான் இலங்கைக்கு வந்தபிறகு, ஒரு சமயம் இரவில் எழும் விசித்திரமான குரலைக் கேட்டு என் வீரர்கள் அச்சப்பட, அது இந்தப் பெண்மணியின் குரல்தான் என்பதை நான் கண்டுகொண்டேன். அவரால் பேச முடியாது என்றும், அவர் என்மீது அளப்பரிய பாசம் கொண்டவர் என்பதையும் அறிந்து கொண்டேன். அப்போது அங்கு குளிர்காய்ச்சல் பரவி இருந்ததால், உடனே அங்கிருந்து நாங்கள் கிளம்பி விட வேண்டும் என அந்த மாதரசி கேட்டுக்கொள்ள நாங்கள் அங்கிருந்து கிளம்பி விட்டோம். அது மட்டுமல்லாமல் என்னைத் தொடரும் மறைமுக எதிரிகள், வனவிலங்குகள், மலைப்பாம்புகள் போன்ற பல அபாயங்களிலிருந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறார்’ என்று கூறியவர், அவர்களை படுத்துக்கொள்ளும்படி கூறினார். அப்பொழுது அந்த மூதாட்டி அங்கு வந்து, அவர்களைப் பின் தொடருமாறு சைகை செய்ய மூவரும் அங்கிருந்து கிளம்பினர். அவர்களை ஒரு ரகசிய  குகைக்கு அழைத்துச்சென்று, குகையின் சுவர்களில் தான் வரைந்திருந்த  சித்திரங்களைக் காட்டினாள். அந்தச் சித்திரங்களில் இருந்து,  ஒரு பெண்ணைப் பார்த்து ஒரு வாலிபன் காதல் கொள்வதும், அவர்கள் மகிழ்ந்திருப்பதும், ஒரு தருணத்தில் அந்த வாலிபன் பிரிந்து செல்ல, இந்தப் பெண் தொடர்ந்து சென்று அவனை ஒரு நகரத்தில் பார்த்தபோது, அவ்வாலிபன் அரசனாகப் பட்டம் சூடி நிற்பதைக் கண்டு அந்தப் பெண் மனமுடைந்து கலங்கரை விளக்கில் இருந்து விழுவதையும், அவளை ஒருவர் காப்பாற்றியதையும் அறிந்து கொண்டார்கள். பின் அந்தப் பெண் மனநிலை சரியில்லாத வெறியளாகவும் கர்ப்பமுற்றும் இருப்பதையும், அங்கிருந்த ராணி ஒருத்தியும் அப்போது கர்ப்பமாக இருப்பதையும்,  அந்தப் பெண்ணுக்கு இரு குழந்தைகள் பிறப்பதையும், ராணி அந்தக் குழந்தைகளில் ஒன்றை வளர்க்கக் கேட்பதையும், இந்தப் பெண் இரண்டு குழந்தைகளையுமே விட்டுவிட்டு ஓடிவந்து விட்டதையும், தூரமாய் இருந்து இரு குழந்தைகளையும் அவ்வப்போது பார்ப்பதுவுமான பல செய்திகளை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். பின்பொரு நாள் காவிரியில் விழுந்த குழந்தையை அப்பெண் காப்பாற்றுவது  போன்ற சித்திரத்தைப் பார்த்ததும்,  ‘அந்தப் பெண் நீங்கள்தான்’ என அருள்மொழி வர்மர் சுட்டிக்காட்ட, அந்த மூதாட்டி இளவரசரை அணைத்துக்கொண்டு கண்ணீர் பெருக்கினாள். பின் இன்னொரு சுவரில் வரவிருக்கும் அபாயங்களை சித்திரத்தில் எழுதி அருள்மொழிவர்மரிடம் காட்டினாள். குகையின் மேல் நின்று பார்த்தபொழுது இவர்கள் படுத்திருந்த இடம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தொடரும்.

எழுவர் விடுதலையும் விதை போட்டவரும்

எழுவர் விடுதலையும் விதை போட்டவரும்

ராஜீவ் கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த எழுவரும் இன்று (11.11.2022) உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பு போன்றவற்றில் நம்மைப் பின்னோக்கி இழுக்கும் அதே நீதிமன்றம், இப்படியான தீர்ப்புகளையும் அவ்வப்போது வழங்குவதே நமக்கான ஆறுதலாகவும் நீதிமன்றத்தின் மீதான பிடிப்பாகவும் இன்னும் நீடிக்கிறது. எழுவர் விடுதலையின் கிரெடிட்டை எடுத்துக்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், தனி நபர்கள் இப்படி ஏராளனமானோர் வரிசையில் இருக்கிறார்கள். ஆனாலும்கூட, இந்த விடுதலைக்கு – தீர்ப்புக்கு ஒட்டுமொத்தமாக எவரொருவரும் உரிமை கோர முடியாது. இருப்பினும், எந்த ஒன்றுக்கும் தொடக்கப்புள்ளி என்ற ஒன்று வேண்டுமல்லவா? ஒரு கட்டடம் கட்ட முதல் கல், ஒரு கோலம் போட முதல் புள்ளி, ஒரு காடு வளர்க்க முதல் விதை.. இந்த வரிசையில், எழுவர் விடுதலைக்கு முதல் விதை போட்டவர் யார்? ஒருவேளை,  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்குத் தூக்கு உறுதி செய்யப்படாமல், அவர்களின் கருணை மனு ஜனாதிபதியால் ஏற்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டிருந்தால், இந்த ஏழு பேரும் வாழ்நாள் முழுக்க சிறையிலே கிடந்துக்கூட மரணம் எய்தியிருக்கக்கூடும். ஆனால், கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மூவரையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்ட நிலையில், மீண்டும் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டி, ராம் ஜெத்மலானியை அழைத்துவந்து வாதாடி, அவர்கள் தூக்கிலிடப்படுவதைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் நீண்ட நெடிய சட்டப் போராட்டங்கள் நடத்தி, உச்சநீதிமன்றத்தின் வழியே நிரந்தரமாக அவர்களின் தூக்குக் கயிற்றை அறுத்தெறிந்தவர் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ. மூவரின் தூக்கை ரத்து செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அவர்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்யும் முடிவையும் மாநில அரசே எடுக்கலாம் என்றும் கூறியது. அந்தத் தீர்ப்புதான்  பேரறிவாளன் முதலான எழுவரின் விடுதலைக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது. அந்தத் தீர்ப்பை முன்வைத்துதான் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன; அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பியது. அம்முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்ததால்தான், இன்றைய தீர்ப்பில், ஆளுநர் தன் கடமையைச் செய்யத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதை முன்வைத்தே இன்று அறுவர் விடுதலை பெற்றுள்ளனர். இதில் இன்னொரு கூடுதல் மகிழ்ச்சியாக, மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் விதமாக, சட்டமன்றமும் அமைச்சரவையும் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல், சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்ளும் ஆளுநர்களுக்கும் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு, மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி மட்டுமன்று. எதிர்காலத்தில் எந்த ஒரு ஆளுநரும் இவ்வாறு நடந்துகொண்டால், அதை முறியடிக்க உதவும் வழிகாட்டுதலாகவும் அமைந்துள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சட்டப் போராட்டங்களுமே இன்றைய விடுதலையைச் சாத்தியப்படுத்தியுள்ளன. நளினியின் தாயார் தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டதைப் போல, இந்த விடுதலையானது ஒரு கூட்டு முயற்சியே. அந்த முயற்சியில் மேலே குறிப்பிட்டதைப்போல, பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தலைவர்கள், வழக்கறிஞர்கள், பொருளாதார ரீதியாகவும் தார்மீக அடிப்படையிலும் உதவியவர்கள் என்று அனைவரின் பங்களிப்பும் உள்ளது. 30 ஆண்டுகளாக சிறையில் வாடியவர்கள் விடுதலை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மூவர் தூக்கை எதிர்த்து மீண்டும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறியதன் வழியே, ‘இன்றைய மகிழ்ச்சிக்கான விதையை அன்றே ஊன்றியவர் வைகோ’ என்பதை யாரும் மறுத்துவிட முடியாது என்பதே உண்மை, தேவர் மகன் திரைப்படத்தில், “நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ; பிறகு உன் மகன் சாப்பிடுவான், அதன்பிறகு அவன் மகன் சாப்பிடுவான். ஆனா விதை.. நான் போட்டது” என்று சொல்வாரே அதைப் போல.   

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் – பிருந்தா சாரதி

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் – பிருந்தா சாரதி

சாகித்திய அகாடமியும் சென்னை லயோலா கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து, எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை நவம்பர் 4, 5 தேதிகளில் மழைக்கு ஊடாகவும் சிறப்பாக நடத்தின. அகிலனின் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் அவரது பன்முகப் படைப்புகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. அவற்றுள், திரையில் அகிலனின் நாவல்கள் என்ற அமர்வில் கலந்துகொண்ட கவிஞரும் திரை இயக்குனருமான பிருந்தா சாரதி ஆற்றிய உரை மிக முக்கியத்துவம் வாய்ந்தது.   ஒரு எழுத்தாளன் என்பவன் வாசக மனங்களில் கனவுகளை விதைக்கிறவன். அதுவும் பெருந்திரளான மக்களால் வாசிக்கப்படும் ஓர் எழுத்தாளனால் பகிர்ந்துகொள்ளப்படும் கருத்துக்கள், சமூக மனதில் ஆழமாக விதைக்கப்பட்டு பெரும் விளைச்சலை வழங்குகின்றன. இங்கே நேற்றைய அமர்வில் பேசிய எழுத்தாளர் திலகவதி அவர்கள், தான் மாணவப் பருவத்தில் படித்த அகிலனுடைய பெண் கதாபாத்திரங்கள் தன்னை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்று கூறினார். அதேபோல, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கைது செய்யப்பட்ட சமயத்தில், தான் அவரைச் சந்தித்தபோது, அகிலனின் ‘பொன்மலர்’ நாவலை வாங்கி வருமாறு கேட்டதைக் குறிப்பிட்டார். பிறகு கலைஞரை மருத்துவமனையில் சந்தித்தபோதும் தலைமாட்டில் அந்நூலைக் கண்டதாகக் கூறினார். ஒரு முதலமைச்சர் முதல் சிற்றூரில், கிராமத்தில் படிக்கிற மாணவி வரை அகிலனின் எழுத்துக்களால் கவரப்பட்டு இருக்கிறார்கள். எழுத்தாளர் அகிலன் அவர்கள், ஏறக்குறைய 20 நாவல்கள், 200 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள்,  சிறுவர் கதைகள், நாடகம், வாழ்க்கை வரலாறு, திரைக்கதை என, தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். சாதாரண மனிதர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு, எதார்த்தமான கதைகளை, மானுடத்தின் மாபெரும் லட்சியமான அன்பை முன்வைத்து காந்திய வழியில் தன் கதைகளை எழுதியவர் அகிலன். எளிய மொழி அவரது மொழி. கதை கூறும் முறையிலும் பெரிய சிக்கல் எதுவும் அற்றவை அவரது கதைகள். ஆனந்த விகடன், கலைமகள், கல்கி முதலான பெரும் பத்திரிகைகளில் அவர் கதைகள் வெளிவந்தபோது, பலரும் வாசித்து அதன்மூலம் தங்கள் வாழ்க்கையையே சீரமைத்துக் கொள்ளும் உந்துவிசை பெற்றதைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவருடைய கதைகளின் நாயகர்கள், நாயகிகள் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். ஏன், அவர் பெயரையே குழந்தைகளுக்குச் சூட்டியவர்களும் உண்டு. அந்த அளவிற்கு ஆக்கபூர்வமான விளைவுகளை சமூகத்தில் உருவாக்கியவர் அவர். அகிலனின் கதைகள் ஒரு காலகட்டத்தின் முகம் என்றும் கூறலாம். சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமான 50 ஆண்டுகளின் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களைத் தன் கதைகளில் எழுதினார் அகிலன். பெண்ணுரிமை, பொருளாதாரச் சமத்துவம்,  போலித்தனங்களைத் தோலுரித்து உண்மையைத் தேடுதல் போன்ற கருப்பொருட்களை காந்திய நெறியில் எழுதியவர். தமிழில் முதன்முதலாக ஞானபீட விருது பெற்றவர். சாகித்திய அகாடமி, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பெற்றவர். கவிஞர்களை, எழுத்தாளர்களைக் கொண்டாடுகிற சமூகம்தான் வளர்ச்சி பெறுகிற ஒரு சமூகமாக முன்னேற முடியும் என்பதை நாம் எல்லோருமே ஏற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன். ஆகவே எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டை, குறைந்தபட்சம் 100 இடங்களிலாவது கொண்டாட வேண்டும் என்று இக்கருத்தரங்கின் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன். சாகித்ய அகாடமி தொடங்கி வைத்து விட்டது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு ஊரிலும் இருக்கிற இலக்கிய அமைப்புகள் அகிலனின் படைப்புகள் குறித்துக் கூட்டங்கள் நடத்தி விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இளைய மனங்களில் நல்ல நெறிகளையும் நம்பிக்கையையும் விதைப்பதற்கு இது உதவியாக இருக்கும் என்பது என் கருத்து. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

பொன்னியின் செல்வன் – 12

பொன்னியின் செல்வன் – 12

இலங்கையில் நிலைமை அவ்வாறிருக்க, பழையாறையிலிருந்து குந்தவையும் வானதியும் தஞ்சைக்குக் கிளம்பினார்கள்.  நாட்டில் அரசியல் சூழ்ச்சி நடைபெறுவதை வந்தியத்தேவன் மூலம் கேட்டதிலிருந்து, உடல்நலம் சரியில்லாத தன் தந்தையுடன், சகோதரர்களும் அருகே இல்லாத சூழ்நிலையில், தான் அங்கே இருப்பதுதான் நியாயம் என குந்தவைக்குத் தோன்றிவிட்டது. செல்லும் வழியில் வானதி, அருள்மொழிக்கு ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயர் வந்த காரணத்தைக் குந்தவையிடம் கேட்க, அவள் சொல்லலானாள். ‘”ருள்மொழிவர்மன் குழந்தையாக இருக்கையில் படகில் குடும்பத்துடன் பொன்னி நதியில் செல்கையில், தவறி நதியில் விழுந்து விட்டான். அனைவரும் பதற, வீரர்கள் நதியில் குதித்துத் தேட, குழந்தை கிடைக்காமல் எல்லோரும் பயந்து விட்டனர். அப்போது படகிலிருந்து சற்று தூரத்தில் ஒரு பெண்ணுருவம் குழந்தையை ஏந்தியபடி தோன்றியது. உடனே சுந்தரசோழர் குதித்து குழந்தையைப் பெற்றுக்கொண்ட வினாடியில் அந்தப் பெண்ணுருவம் சடாரென்று மறைந்து விட்டது. குழந்தையைப் படகில் கொண்டு வந்து சேர்த்த சுந்தரசோழரோ மூர்ச்சையுற்றுப் போனார். பின் அந்தப் பெண் யாரெனத் தெரிந்து கொள்ள முடியாததால் சோழநாட்டின் தெய்வமான பொன்னித் தாயே காப்பாற்றிக் கொடுத்தாள் என்ற பொருளில் ‘பொன்னியின் செல்வன்’ என அருள்மொழிவர்மனை அழைக்கத் தொடங்கினர்” என குந்தவை சொல்லி  முடித்தாள். இருவரும் தஞ்சையை அடைந்தார்கள். வரவேற்ற நந்தினியிடமும் பழுவேட்டரையர்களிடமும் குந்தவை பூடகமாக வார்த்தைப் போர் நிகழ்த்த ஆரம்பித்தாள். நந்தினியும் அதைப் புரிந்து கொண்டு திருப்பி அடிக்க, அந்தச் சொற்போரில் கலந்துகொள்ள முடியாமலும் புரியாமலும் வானதி தவித்தாள். அன்றைய முன்னிரவில் வானதி தவிர, அனைத்துப் பெண்களும் நவராத்திரி விசேஷ பூஜைக்காக துர்க்கை கோவிலுக்குச் சென்று விட, வானதி தனித்து மாடத்தில் நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு அழுகுரலும் புலம்பலும் கேட்க, கேட்ட இடத்தை நோக்கி நடந்தாள். “என்னை ஏன் உயிருடன் சித்ரவதை செய்கிறாய்? உன்னைத் தெரியாமல் கொன்று விட்டதற்கு ஏன் இப்படிப் பழிவாங்குகிறாய்?” என்றெல்லாம் சொல்லிப் புலம்பியும் அழுதும் கொண்டிருந்தது சுந்தர சோழர்தான் என்று தெரிந்து வானதி திகைத்துப் போனாள். அப்படி அவர் பார்த்து புலம்பிக் கொண்டிருந்த உருவம் எதுவென எட்டிப் பார்த்தபொழுது, பழுவூர் இளையராணியின் உருவம் போல மங்கலாகத் தெரியவும் வானதி அங்கிருந்து நகர்ந்து செல்ல முயற்சித்து மூர்ச்சையடைந்தாள். அடுத்த நாள் காலையில் சுந்தர சோழர் குந்தவையை அழைத்து வானதியைப் பற்றி விசாரித்துவிட்டு,  தஞ்சை அரண்மனை இளம்பெண்களுக்கு ஏற்றதல்ல. இங்கு பேய் நடமாடுகிறது என்றெல்லாம் சொல்ல, குந்தவை  அவரின் உடல் தேறும் வரை இங்குதான் இருப்பேன் என மறுமொழி கூறினாள். பெருமூச்செறிந்த சுந்தரசோழர், இனி தான் உடல்நிலை தேற வாய்ப்பில்லை என்றும் அதற்கு தன் மனக்கவலை மட்டுமே காரணம் எனவும் கூறினார். நடக்கும் சதிகளைப் பற்றி குந்தவை லேசாக எடுத்துரைத்து, மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன என்று கூற, சுந்தரசோழர் மகிழ்ந்து செம்பியன் மாதேவியை அழைத்து முதலில் அவர் சம்மதம் கேட்டு மதுராந்தகனுக்கே பட்டம் கட்டி விடலாம் எனக் கூறினார். குந்தவை துணுக்குற்று, “இது உங்கள் வாரிசுக்கு நீங்கள் செய்யும் துரோகமில்லையா?” என்று கேட்க, “இல்லை, என் சாபக்கேட்டை என் புதல்வர்களுக்குக் கடத்த விரும்பவில்லை” என்று சுந்தரசோழர் சொல்லவும் குந்தவை அதிர்ந்தாள். மேலும் சொல்லும்படி அவள் வற்புறுத்த, சுந்தரசோழர் அவளிடம் பின்வரும் கதையைக் கூறினார். “என் வாலிப பிராயத்தில், இலங்கையில் போருக்குச் சென்றிருந்தேன். போர் தோல்வியில் முடியவே, மனம் குமைந்து யாரும் அறியாமல் கடலில் குதித்து ஒரு தீவில் கரை ஒதுங்கினேன். எதிர்பாராத ஒரு தருணத்தில் என்னைக் கொல்ல வந்த கரடி ஒன்றிடமிருந்து என்னைக் காப்பாற்றினாள் கரையர் குலப் பெண்ணொருத்தி. அவள் வாய் பேச முடியாத ஊமைப் பெண். நான் அவளுடன் அந்தத் தீவில் சில நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தேன். ஒருநாள் என்னைத் தேடிக் கொண்டு நம் நாட்டினர் கப்பல்களில் வந்து இறங்கினர். அந்தப் பெண்ணிடம் கண்டிப்பாகத் திரும்பி வருவதாக வாக்களித்துவிட்டு நான் நம் நாட்டுக்குத் திரும்பினேன். உடனே நான் ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்பொழுது என் பாட்டனார் பராந்தக சோழன் சாகும் தருவாயில் இருந்தார். சோழநாட்டின் மேன்மையை நிலை நாட்ட வேண்டும் என்று என்னிடம் உறுதி வாங்கிக் கொண்டார். அவருக்குப் பின் என் பெரியப்பா கண்டராதித்தர் சக்ரவர்த்தியானார். அப்போதுதான் அவர் மழவரையர் மகளான செம்பியன் மாதேவியை மணந்திருந்தார். ஆனபோதும் அவர் என்னையே யுவராஜனாக பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். இருவரும் பட்டாபிஷேகம் முடித்து மக்களுக்கு அரண்மனை மேன்மாடத்தின் முன்றிலில் காட்சிதர நின்றிருந்தோம். வாழ்த்துத் தெரிவித்த மக்களுக்கிடையே கண்ணீருடன் அந்த ஊமைப் பெண்ணின் முகம் தெரிய, நான் திகைத்து மயங்கி விழுந்தேன். மயக்கம் நீங்கி எழுந்தவுடன் என் நண்பன் அநிருத்தனை அழைத்து அந்தப் பெண்ணின் அடையாளங்களைச் சொல்லி, கண்டுபிடிக்க வேண்டுமெனக் கண்டிப்புடன் கேட்டிருந்தேன். கோடியக்கரையில் நான் சொன்ன அடையாளங்களுடன் ஒரு பெண் இருப்பதாகவும் அழைத்தால் வர மறுத்துவிட்டதாகவும் அநிருத்தன் கூற, நான் நேரடியாகவே சென்றேன். ஆனால், அங்கு சென்று விசாரித்தபொழுது அவள் கலங்கரை விளக்குத் தூணின் மீது ஏறி விழுந்து விட்டதாகவும் பொங்கி வந்த கடலின் சீற்றத்தில் மூழ்கிவிட்டிருக்கலாம் எனவும் கூறினார்கள். நான் அளவுகடந்த துன்பம் அடைந்தாலும், தஞ்சைக்கு அவளை அழைத்து வந்தால் நேரும் சங்கடங்கள் இல்லாமல் போனதை எண்ணி ஒருவகையில் அமைதியும் அடைந்து தஞ்சைக்குத் திரும்பி ராஜ்யப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்தேன். ஆனால், அவளின் உருவம் என் கனவுகளில் வந்து அலைக்கழிக்கும்.  நாளடைவில் அதையெல்லாம் மறந்துவிட்டிருந்தாலும் பின்பொருநாள் அருள்மொழிவர்மன் காவிரியில் விழுந்த நாளன்று காவிரியம்மனே வந்து காத்து நின்றதாக  நீங்கள் கருதினீர்கள். ஆனால், வந்தது அவள்தான்.  அதேபோல, ஆதித்த கரிகாலன் இளவரசப் பட்டம் ஏற்றதும் தாய்மார்களின் ஆசி பெற அந்தப்புரம் சென்ற அவனுடன் நான் சென்றபோது, தாய்மார்களுடன் அவளது ஆவியும் நின்றிருந்ததிகைக்க கண்டு அன்றும் நான் மூர்ச்சையுற்றேன். அப்போதெல்லாம்கூட என் குற்றவுணர்வும் சித்தப்பிரமை காரணமாகவும் இப்படி எண்ணிக் கொள்கிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போது நள்ளிரவில் நாலைந்து முறையாக வந்து இம்சை செய்கிறாள். அதைப் பார்த்துதான் வானதி மயங்கி வீழ்ந்திருக்க வேண்டும். அதனால்தான் சொல்கிறேன், இந்த சாபமுள்ள சோழ சாம்ராஜ்யம் என் பிள்ளைகளுக்கு வேண்டாம். மதுராந்தகனுக்குக் கொடுத்து விடலாம்” என சுந்தர சோழர் சொல்லவும், குந்தவை குறுக்கிட்டு “இதற்கு செம்பியன் மாதேவி பாட்டி ஒத்துக்கொள்வாரா? உலகம் என்ன சொல்லும்? அரசாள்வதற்கென எந்தத் தகுதியும் வேண்டாமா?” என்றெல்லாம் கேட்டாள். சுந்தரசோழர் அனைத்தையும் மறுத்து வாதிட்டு, உடனடியாக செம்பியன் மாதேவியை அழைத்து வருமாறு குந்தவையிடம் வலியுறுத்தினார். அப்போதைக்கு சுந்தரசோழரை சமாதானம் செய்து, தன் அன்னையைத் தனியே அழைத்து, “ஒரு கணமும் அரசரைத் தனிமையில் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று குந்தவை எச்சரித்தாள். ஆதுர சாலை எனப்படும் தர்ம வைத்தியசாலை ஒன்றைத் தஞ்சையில் துவக்கி வைத்தாள் குந்தவை. தனக்குரிய சர்வமானிய நிலங்களை அந்த ஊர் விவசாயிகளே சகல உரிமைகளுடன் அனுபவித்துக்கொண்டு, ஆதுரசாலை வைத்தியருக்கு ஆண்டு தோறும் நெல்லும், தினமும் பசும்பாலும்,  ஆட்டுப்பாலும்,  இளநீரும் அனுப்ப வேண்டியது என தான சிலா சாஸனம் செய்து கொடுத்தாள் குந்தவை. அந்த விழாவில் சுந்தர சோழர் பிள்ளைகளுக்கு மக்கள் கொடுத்த ஆசி முழக்கங்கள் பெரிய பழுவேட்டரையருக்கு எரிச்சலை அளித்தன. காயமுற்று சிகிச்சை பெற்றுக் கொண்டு, நந்தினி அரண்மனையில் இருந்து வந்த கந்தன்மாறனைப் பார்க்கக் குந்தவை சென்றாள். குந்தவை வந்த குதூகலத்தில், கந்தன்மாறன் இன்னும் அதிகமான குற்றச்சாட்டுகளை வந்தியத்தேவன் மீது  புனைந்தான். அப்போது வைத்தியர் மகனை கோடிக்கரையில் இருந்து ஒற்றனென்று பிடித்துக் கொண்டு வந்ததை மூவரும் பார்த்தனர். நந்தினி சூழ்ச்சியாகப் பேசி, வந்தியத்தேவனை இலங்கைக்கு அனுப்பிய விஷயத்தைக் குந்தவையிடமிருந்து வரவழைத்தாள். வந்தியத்தேவனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லி குந்தவையை வருத்தினாள் நந்தினியிடம் சொற்போரில் தோற்றுப்போன குந்தவை, சினத்துடன் சின்ன பழுவேட்டரயரைச் சந்தித்தாள். தான் சக்கரவர்த்திக்கு மூலிகை தேடி வர அனுப்பித்த வைத்தியர் மகனை ஒற்றனென்று சிறைப் பிடித்தது தவறென்று கூறி விடுதலை செய்ய வேண்டினாள். சின்ன பழுவேட்டரையர் பாதாளச் சிறையின் சாவியைக் குந்தவையிடம் கொடுத்து, “நீங்களே விடுதலை செய்து அதற்குப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். குந்தவை அதை ஏற்றுக்கொண்டு சாவியுடன் சிறைச்சாலையை நோக்கி நடந்தாள்.  சின்ன பழுவேட்டரையர் அதிருப்தியுடன் விலகி நடக்கலானார்.

பொன்னியின் செல்வன் – 11

பொன்னியின் செல்வன் – 11

முடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே நூறு அக்கினிக் குண்டங்கள் தோன்றி அணைந்தன. புகையோ விறகோ எதுவுமில்லாது ஒளிர்ந்து பின் அணைந்து பின் புதிதாகத் தோன்றின. ஆனால் வெகுசீக்கிரத்தில் அவன் புத்தி வேலை செய்து, கந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் அந்த வாயு வெளிவரும்போது ஏற்படும் தோற்றம் என்று உணர்தியது. பின் வந்தியத்தேவன் பூங்குழலியை வீடு திரும்பும்படி அழைத்துக்கொண்டு, திரும்பும் வழியில் இலங்கைக்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு பூங்குழலியை வந்தியத்தேவன் கேட்க, அவள் பதிலேதும் அளிக்கவில்லை.மறுநாள், தியாகவிடங்கக் கரையரை கோவிலில் சந்தித்தபொழுது அவரும் பூங்குழலியை அழைத்துச் செல்லும்படி கேட்குமாறும், ஆனால் அவளிடம் எந்த ஆசை வார்த்தைகளைப் பேசியும் கோபப்படுத்திவிட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார். அங்கிருந்து கடலுக்குச் சென்று குளிக்கலாம் என்று கடலுக்குள் இறங்கியவன், தான் கழற்றி வைத்திருந்த தன் துணிகளில் இருந்து ஓலையை எடுத்துக்கொண்டு பூங்குழலி ஓடுவதைப் பார்த்து அதிர்ந்துபோய் ஓடி வந்தான். பூங்குழலி வெகு வேகமாக விரைந்து காட்டுப் பகுதியில் மறைந்து கொள்ள, வெகுதூரம் அவளைத் தேடி காட்டுக்குள் வந்தியத்தேவன் அலைந்தான். ஒரு இடத்தில் பூங்குழலி ஓலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, வந்தியத்தேவனைச் சிறைப்பிடிக்க வைத்தியர் மகன் பழுவேட்டரையரின் ஆட்களைக் கூட்டி வந்திருப்பதாகக் கூறி, அதில் இருந்து தப்புவிப்பதற்காகவே திசைதிருப்பி வேகமாகக் காட்டுப்பகுதிக்குக் கூட்டி வந்ததாகக் கூறினாள். பூங்குழலியின் புத்திசாலித்தனத்தை நினைத்து ஆச்சரியப்பட்டு நன்றி சொல்லிவிட்டு, இலங்கைக்கு கூட்டிச் செல்லும்படி மறுபடியும் வேண்ட, பதிலாக பூங்குழலி, தான் கேட்கும் உதவியைச் செய்ய வேண்டும் என்ற சத்தியத்தை வாங்கிக்கொண்டாள். அவனை அங்கேயே மறைந்து இருக்குமாறும் இரவு வரும் வரை வெளியே வரவேண்டாமெனவும் சொல்லி ஒரு மண்டபத்தில் மறைந்து இருக்கச் சொன்ன பூங்குழலியிடம் ஆபத்தான மிருகங்கள் வருமே என வந்தியத்தேவன் தன் பயத்தை வெளிப்படுத்தினான். வஜ்ராயுதம் போன்ற ஒரு ஆயுதத்தை எடுத்துக் கொடுத்து ஒரு சிறுத்தையை அதில்தான் கொன்றேன் எனக் கூறிக் கிளம்பிய பூங்குழலியை வந்தியத்தேவன் பிரமிப்புடன் பார்த்தான். காரணம், அது திருக்கை மீனின் எலும்பு. இரவில் முன்னேற்பாடுடன் வந்து பூங்குழலி கொடுத்த சமிக்ஞையின் பேரில் வெளிவந்து இருவரும் ஓசைப்படாமல் படகைத் தள்ளிக் கிளம்பினர். அவள் படகைக் கையாளும் லாவகம் குறித்துப் பாராட்டி அவளின் தந்தை அவளை அழைத்துச் செல்லச் சொன்னதைக் கூறிய வந்தியத்தேவனிடம், கடலுக்கு வந்துவிட்டால் சமுத்திர ராஜனே அவளது தந்தை எனவும் அவள் சமுத்திரகுமாரி எனவும் பூங்குழலி கூறினாள். வந்தியத்தேவன் அவளிடம் பேசித் தெரிந்து கொண்டதில் அவள் சாதாரண பெண்களைப் போல அல்ல என்றும் பொன்னியின் செல்வனான அருள்மொழிவர்மரின் பெயரைச் சொன்னால் அவளின் முகத்தில் நாணமும் உடலில் குழைவும் ஏற்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டான். கடலில் ஏற்படும் ஆபத்துகளைப் பூங்குழலி சொல்லச்சொல்ல, வந்தியத்தேவன் அதைக் கேட்டுக் குழம்பி கடலில் குதித்து விட, பூங்குழலி பெரும்பாடுபட்டு அவனைக் காப்பாற்றிப் படகில் ஏற்றினாள். மறுபடியும் கண்விழித்த போது அவள் பாடிக் கொண்டிருந்தாள். ‘வாரிதியும் அடங்கி நிற்கமாருதமும் தவழ்ந்து வரகாரிகையென் உள்ளந்தனிலேகாற்று சுழன்றடிப்பதேன்?அலை கடலும் ஓய்ந்திருக்கஅகக்கடல்தான் பொங்குவதேன்?வந்தியத்தேவன் அவள் மனதில் ஏதோ சோகமும் ஏமாற்றமும் சஞ்சலப் படுத்திக் கொண்டிருக்கின்றன என்று எண்ணினான். அவளை சந்தேகப்பட்டது மிகவும் தவறெனவும் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டான். பூங்குழலி அதை ஒன்றும் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் இலங்கையில் நாகத்தீவில் இறக்கிவிடுவதாகக் கூறவும், இளவரசர் எங்கு தங்கியிருக்கிறார் என்று கண்டுபிடிப்பதைப் பற்றிய பேச்சு வந்தது. பூங்குழலி நாகத்தீவுக்கு முன் பூதத்தீவு என்று ஒன்று உள்ளதாகவும் இவன் படகிலேயே இருந்தால் அவள் போய் விஷயம் சேகரித்து வருவதாகவும் சொல்ல, வந்தியத்தேவன் அதற்குச் சம்மதித்தான். பூதத்தீவில் இறங்கி சொன்ன மாதிரியே ஒரு நாழிகைக்குள் விஷயத்தைத் தெரிந்து கொண்டு வந்தவள் முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயரை மாதோட்டத்தில் சந்திக்க இளவரசர் சென்றிருப்பார் எனக் கூறினாள். கரை நெருங்க பூங்குழலி கேட்ட சத்தியத்தை நினைவுபடுத்தி என்ன உதவி வேண்டும் என வந்தியத்தேவன் கேட்க, சில நிமிடங்கள் சிந்தித்தவள், பொன்னியின் செல்வனைச் சந்தித்து ஓலையெல்லாம் கொடுத்தான பிறகு ‘சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?’ என்று கேட்க வேண்டுமென்றும், அதற்கு அவர் சொல்லும் பதிலை மாறாமல் தன்னிடம் சொல்ல வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டாள். பூங்குழலியின் மனதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன் திகைத்து, ‘அவ்வளவு உயரத்தில் பறக்கவா இந்த ஓடக்காரப் பெண்ணுக்கு ஆசையிருக்கிறது!’ என்று மனதோடு எண்ணிக்கொண்டு, உன் உதவிக்காகவே இதைக் கண்டிப்பாகச் செய்வேன் என உறுதி பூண்டு அவளிடமிருந்து விடைபெற்றான். பூங்குழலி ஓடத்தில் சாய்ந்து அவளுலகில் சஞ்சாரிக்க ஆரம்பித்தாள். கடற்கரையோரமாக நடந்து சென்று இலங்கையின் மாதோட்டத்தில் சோழ சைன்யம் தங்கியிருந்த இடத்துக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கும் கடம்பூரைப் போலக் கெடுபிடிகள் நடக்கவும், வந்தியத்தேவனைச் சிறைப்பிடித்தனர். அவன் சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாளரைச் சந்திக்க வேண்டுமெனச் சொல்லவும் அவனிடமிருந்த முத்திரை மோதிரம், ஓலை எல்லாவற்றையும் பரிசோதித்து எடுத்துக் கொண்டார்கள். அப்போது சேனாதிபதி, முதன்மந்திரி அநிருத்த ப்ரும்மராயரை ராமேசுவரம் வரை வழியனுப்பச் சென்றிருந்ததனால் அவர் வரும் வரை அவனைக் காவலில் வைத்திருந்தனர். பிரயாணத்தில் களைத்திருந்த வந்தியத்தேவன் முதல்நாள் முழுக்க நன்கு தூங்கி ஓய்வெடுத்தான். இரண்டாம் நாளின் இறுதியில் பக்கத்து அறையிலிருந்து ஆழ்வார்க்கடியானின் குரல் கேட்கவே ஆச்சர்யமடைந்தான். பிறகு விசாரித்ததில் அவன் சேனாதிபதியுடன் இங்கு வந்ததாகக் கூறினான். குந்தவையும் வந்தியத்தேவனும் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டிருந்த ஆழ்வார்க்கடியான், அங்கிருந்து மதுரை சென்று சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு இராமேசுவரத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு முதன்மந்திரி அநிருத்த பிரும்மராயர் இலங்கையில் அருள்மொழிவர்மரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்த வணிகர்களைச் சந்தித்து நடப்பு நிலவரங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அங்குதான் இதுவரை தெரிந்துகொண்ட விஷயங்களைத் தன் எஜமானனான அநிருத்த பிரும்மராயரிடம் ஆழ்வார்க்கடியான் முழுவதுமாகக் கூறினான். அநிருத்த பிருமராயர் சேனாதிபதியுடன் இருந்தபோது வந்தியத்தேவனைப் பற்றிச் செய்தி வந்ததால் ஆழ்வார்க்கடியான் விரைந்து இலங்கைக்குச் சென்று வந்தியத்தேவனைப் பற்றி எடுத்துச் சொல்லி இளவரசரிடம் தன் ஓலையைக் கொடுக்குமாறு ஆணையிட்டார். அவரின் ஆணையைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்குப் பயணம் செய்து சேனாதிபதியுடன் திரும்பியிருந்தான். வந்தியத்தேவனிடமிருந்து எடுக்கப்பட்ட ஓலை, மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இளவரசர் அநுராதபுரம் சென்றுவிட்டதாகவும், இருவரும் சேர்ந்து அவரைத் தேடிக் கண்டுபிடித்து ஓலையைச் சேர்க்கும்படி சேனாதிபதி சொன்னதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறினான். இருவரும் இணைந்து சேனாதிபதியைச் சந்தித்தார்கள். முதல் சந்திப்பிலேயே அவருக்கு வந்தியத்தேவனை மிகவும் பிடித்து விட்டது. வந்தியத்தேவன் புத்திசாலித்தனமாக, அவரது அண்ணன் மகளான வானதியைப் பற்றியும் குந்தவை அவள் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றியும் பேச சேனாதிபதி மகிழ்வுற்றார். இருவரும் ஒருவரையொருவர் பிரியக்கூடாதெனவும் ஒற்றுமையுடன் சென்று இளவரசரைச் சந்திக்கும்வரை சண்டையிடாமல் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்த, அவரை வணங்கி விடைபெற்று இருவரும் இளவரசரைத் தேடித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். தொடரும்.

பொன்னியின் செல்வன் 10 – பாகம் 2 – சுழல்காற்று

பொன்னியின் செல்வன் 10 – பாகம் 2 – சுழல்காற்று

இரண்டாம் பாகத்திற்குள் நுழையும் முன்பு முதற் பாகத்தின் சுருக்கம்:இராஜராஜன் என்று பிற்காலத்தில் பட்டமேற்ற சோழ இளவரசன் அருள்மொழி வர்மன் இலங்கையில் போர் நடத்திக் கொண்டிருந்தான். அவனது அண்ணன் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன். இவர்கள் இருவருக்கும் நடுவில் பிறந்த குந்தவை அப்போது பழையாறையில் இருந்தாள். ஆதித்த கரிகாலன் காஞ்சியில் பொன் மாளிகை ஒன்றைக் கட்டி, தன் தந்தையும் சோழ அரசருமான சுந்தர சோழரை அங்கு வந்து தங்கியிருக்க வேண்டி, வாணர் குலத்தில் வந்த தனது நண்பன் வந்தியத்தேவனிடம் ஓலை கொடுத்து அனுப்பினான். வழியில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நடந்த சிற்றரசர்களின் ரகசியக் கூட்டத்தில், சுந்தர சோழரின் பெரிய தந்தை கண்டராதித்த சோழரின் புதல்வனான மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட அவர்கள் முடிவு செய்ததை வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.கண்டராதித்தர் இறந்தபோது மதுராந்தகன் சிறுவனாக இருந்தபடியால் சுந்தர சோழர் அரசராகி இருந்தார். மதுராந்தகனை ஆதரித்த சோழ நாட்டு சிற்றரசர்களுக்குத் தலைமை வகித்தவர் சோழ நாட்டு நிதியமைச்சர் பெரிய பழுவேட்டரையர். இவரது தம்பி சின்ன பழுவேட்டரையர்தான் தஞ்சைக் கோட்டையின் காவலர். பெரிய பழுவேட்டரையர் தனது முதிர்ந்த வயதில் நந்தினி என்ற பெண்ணை மணந்து கொண்டிருந்தார். நந்தினியின் மீதான மோகத்தில் கட்டுண்டு கிடந்த பெரிய பழுவேட்டரையரை நந்தினி ஆட்டி வைத்துக் கொண்டிருந்தாள். நந்தினியும் ஆதித்த கரிகாலனும் இளமையில் காதலர்கள். இவர்கள் காதலை குந்தவையும் கண்டராதித்தர் மனைவி செம்பியன் மாதேவியும் விரும்பவில்லை. பாண்டியருடன் நடந்த இறுதிப் போரின்போது நந்தினியின் வேண்டுகோளைப் புறம்தள்ளி, வீரபாண்டியன் தலையைக் கொய்தான் ஆதித்தன். வீரபாண்டியன் கொலைக்குப் பழிவாங்க சபதம் பூண்ட நந்தினி, பழுவூர் இளைய ராணியாகி பாண்டி நாட்டு ஆபத்துதவிகளுக்கு உதவி செய்து வந்தாள்.வந்தியத்தேவன் வழியில் நந்தினியைச் சந்தித்து அவள் தந்த முத்திரை மோதிரத்தைக் காட்டி அரசரைச் சந்தித்து ஆதித்தன் ஓலையைக் கொடுக்கிறான். தன்மீது ஐயம் கொண்ட சின்னப் பழுவேட்டரையரை ஏமாற்றி கோட்டையை விட்டு வெளியேறுகிறான். தஞ்சையில் அவன் சந்தித்த சேந்தன் அமுதன், வந்தியத்தேவனுக்கு உதவுகிறான். அவன் கோடிக்கரையில் இருக்கும் தன் மாமன் மகள் பூங்குழலியை ஒருதலையாகக் காதலிக்கிறான் என்பது தெரிய வருகிறது. வந்தியத்தேவனை ஒற்றன் என்று கருதி பழுவேட்டரையர் ஆணை ஒருபுறம் துரத்த, ஆபத்துதவிகள் கூட்டத்தைச் சேர்ந்த மந்திரவாதி ரவிதாசன் ஒருபுறம் துரத்த, அனைத்தும் கடந்து, பழையாறை வந்து ரகசியமாக இளவரசி குந்தவையைச் சந்தித்து விவரங்களைக் கூறுகிறான் வந்தியத்தேவன். இலங்கையில் உள்ள அருள்மொழி வர்மனைப் பழையாறைக்கு வரும்படி அழைத்து ஒரு ஓலை எழுதி, வந்தியத்தேவன் மூலம் அதை அனுப்பி வைக்கிறாள் குந்தவை. காஞ்சியில் இருந்தே வந்தியத் தேவனைத் தொடர்கிறான் ஆழ்வார்க்கடியான் என்ற திருமலை. பாண்டி நாட்டு ஆபத்துதவிகளின் ரகசியமும் அவன் தெரிந்திருக்கிறான். அவன் முதன்மந்திரி அநிருத்த பிரமராயரின் ஆள் என்பதை வந்தியத்தேவன் அறியவில்லை. வானத்தில் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றியிருந்தது பற்றிப் பலரும் பலவாறு பேசிக் கொண்டிருந்தனர். இனி இரண்டாம் பாகம்.. பொன்னியின் செல்வன் – 10இரண்டாம் பாகம் – சுழல்காற்று கோடியக்கரையின் கடலோரத்தில் மிதந்த சிறிய படகிலிருந்து நெஞ்சை உருகச் செய்யும் ஒரு பாடல் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருந்த இளம்பெண், நீண்ட கருங்குழலில் தாழம்பூவின் ஒரு மடலைச் சூடிக்கொண்டு தன்னில் ஆழ்ந்துகொண்டு அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள்.‘அலைகடலும் ஓய்ந்திருக்கஅகக்கடல்தான் பொங்குவதேன்?நிலமகளும் துயிலுகையில்நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்? அவளின் மனதில் இருந்த சோகத்தையெல்லாம் வெளிப்படுத்திய அந்தப் பாடல், கேட்பவரின் நெஞ்சம் விம்மி வெடித்து விடுவது போன்ற உணர்ச்சியோடிருந்தது.ஆழம் அதிகமில்லாத அந்தக் கடற்கரையோரம் தன் ஓடத்தை நிறுத்திக் கரையிறங்கிய அந்தப் பெண், சேந்தன் அமுதன் மணக்க விரும்பும் முறைப்பெண்ணான பூங்குழலிதான். கலங்கரை விளக்கின் தீபம் ஏற்றப்பட்டிருந்ததைப் பார்த்த பூங்குழலி கோடியக்கரை குழகர் கோவிலில் சேமங்கலம் அடிக்கும் ஒலி கேட்கவே கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்தாள். கோடியக்கரை கடற்கரையை ஒட்டி அடர்ந்த காடு. முழுவதும் மணற்பரப்பும் மணல்மேடுகளின் மீது செடிகளும் மரங்களூம் முளைத்ததினால் கெட்டிப்பட்ட குன்றுகளும் பள்ளங்களும் நிறைந்த அந்தக் காட்டில் வழிகண்டுபிடித்துப் போவது கடினம். திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருப்பதைப் போல பிரமை தோன்றக்கூடிய அபாயமான காட்டுவழி. பூங்குழலி அந்த வழியாகச் சென்று கோவிலில் தரிசித்துவிட்டு, பட்டர் அளித்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு மதில் மேல் அமர்ந்து உண்ணலானாள். அப்பொழுது வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும் இரு குதிரைகளில் வருவதைப் பார்த்தவள், என்னவென்று விவரிக்க முடியாத உணர்ச்சியினால் கடல் பக்கமாக ஓடலானாள். அந்தக் காட்டில் வழி கண்டுபிடித்துப் போக முடியாமல் பூங்குழலியைப் பார்த்ததும் வழிகேட்கலாம் எனக் குதிரையிலிருந்து இறங்கிய வந்தியத்தேவன், அவள் ஓடுவதைக் கண்டு திகைத்து பின் அவனும் துரத்த, பாதி வழியிலேயே சேந்தன் அமுதன் குறிப்பிட்ட பெண் இவள்தான் எனப் புரிந்து கொண்டு மேலும் துரத்தலானான். அந்தக் கடற்கரை மணற்வெளியைப் பற்றி அறிந்திராத வந்தியத்தேவன் ஓடுகிற வேகத்தில் அதிலிருந்த புதைகுழியில் மாட்டிக்கொண்டு, தன்னைக் காப்பாற்றுமாறு கத்த, பூங்குழலி விரைந்து செயல்பட்டாள். அங்கு தேங்கிப்போயிருந்த சேற்றில் ஓடத்தை ஓட்டிக் கொண்டு வந்து தன் வலிய கரங்களை வந்தியத்தேவனுக்குக் கொடுத்து மேலிழுத்தாள். பின் சேற்றைக் கடலில் கழுவிக்கொண்ட வந்தியத்தேவன் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, ‘சேந்தன் அமுதனின் காதலிதானே நீ?’ எனக் கேட்க, பூங்குழலி மறுத்தாள். பேசிக்கொண்டே இருவரும் நடந்தபோது முதல்நாள் இருவர் தன் அண்ணனுக்கு நிறைய காசு கொடுத்து இலங்கைக்குச் சென்றதைப் பூங்குழலி சொல்ல, அவள் சொன்ன அடையாளத்தை வைத்து அது மந்திரவாதி ரவிதாஸனாக இருக்கும் என வந்தியத்தேவன் எண்ணிக் கொண்டான். வழக்கமாக தான் பெண்களிடம் கடைபிடிக்கும் வழக்கப்படி பூங்குழலியிடம் வந்தியத்தேவன் பேச, அவள் தனக்கு நிறைய காதலர்கள் இருப்பதாகவும் சந்தேகமாய் இருந்தால் நள்ளிரவில் அவர்களைச் சந்திக்கச் செல்லும்போது பின் தொடர்ந்து வந்து பார்த்துக் கொள்ளுமாறும் சொல்லிச் சிரிக்க, பூங்குழலிக்கு சித்தப் பிரமையோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. பேசிக்கொண்டே வைத்தியர் மகனையும் அழைத்துக் கொண்டு பூங்குழலியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். கோடியக்கரை கலங்கரை விளக்கக் காவலரும் பூங்குழலியின் அப்பாவுமான தியாகவிடங்கக் கரையரிடம் தாங்கள் வந்த சேதியைச் சொல்லி, தான் மட்டும் இலங்கை செல்ல ஏற்பாடு செய்யுமாறு வந்தியத்தேவன் கேட்டான். அவர் தன் மருமகளின் பணத்தாசை காரணமாக தன் மகன் யாரோ இருவரை இலங்கைக்கு ஏற்கெனவே ஒரு படகில் அழைத்துச் சென்றதைக் கூறி வருத்தப்பட்டுவிட்டு, உணவு உண்டு அங்கேயே தங்குமாறும், தான் வேறு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.வந்தியத்தேவன் நன்கு உண்டுவிட்டு உறங்கிக்கொண்டிருந்தபோது திடீரென விழிப்பு தட்டி தன்னைத் தாண்டிச் சென்ற பூங்குழலியைத் தொடர்ந்து சென்றான். அடர்ந்த இருளில் பயந்துகொண்டே வந்தியத்தேவன் செல்ல, பூங்குழலி அழுகையுடன் அந்தப் பாடலை மறுபடி கடற்கரையில் பாடலானாள். வந்தியத்தேவனைப் பார்த்தவள், சிரித்தபடி அவனைத் திரும்பி பார்க்கச் சொல்ல, அங்கு பார்த்தவன் நடுநடுங்கிப் போனான். தொடரும்.