சின்ன பழுவேட்டரையரிடம் பாதாளச் சிறையின் சாவியைப் பெற்றுக்கொண்ட குந்தவை, வானதியை அழைத்துக்கொண்டு வைத்தியர் மகனைக் காணச் சென்றாள். பொற்காசுகள் வார்ப்படம் செய்யும் தங்கச்சாலையின் பின்புறமாகப் பாதாளச் சிறைச்சாலை இருந்ததால் அதற்கான கட்டுக்காவலும் அதிகமாக இருந்தது. அங்கு சென்றபோது சேந்தன் அமுதன் தேவாரப் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தான்.

அவன் யார் என்பதையும், அவன் வந்தியத்தேவனுக்குச் செய்த உதவியையும் பற்றி குந்தவை தெரிந்து கொண்டாள். வைத்தியர் மகனைப் பழுவூர் இளையராணியின் ஆட்கள் அழைத்துப் போனதையும், வந்தியத்தேவன் காவலர்களிடம் இருந்து தப்பி இலங்கைக்குச் சென்றுவிட்டான் என்பதையும் தெரிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். சேந்தன் அமுதன் விடுதலை செய்யப்பட்டான்.

பல்வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், முக்கியமான நிருபம் (கடிதம்) ஒன்றை ஆதித்த கரிகாலனுக்கு எழுதி முடித்தாள் நந்தினி. அதில்,

‘அரசிளங்குமரா! தயங்கி, பயந்து இந்த நிருபம் எழுதத் துணிந்தேன். இராஜ்யத்தின் நிலைமையைப் பற்றிப் பலவிதமான செய்திகள் காதில் விழுகின்றன. தாங்கள் எதையும் கவனிப்பதில்லை. நோயினால் மெலிந்திருக்கும் தங்கள் தந்தை பலமுறை சொல்லி அனுப்பியும், தாங்கள் தஞ்சைக்கு வரவில்லை. இதற்குக் காரணம் நான்தானோ என்ற எண்ணம் என்னை வதைக்கிறது. தங்களை ஒருமுறை சந்தித்தால் எல்லாச் சந்தேகங்களையும் போக்கி விடுவேன். அதற்குத் திருவுளம் இரங்குவீர்களா? தஞ்சைக்கு வர விருப்பமில்லாவிட்டால், கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சந்திக்கலாம். நான் இன்று தங்கள் பாட்டியின் ஸ்தானத்தில் இருக்கிறேன். நாம் சந்தித்துப் பேசுவதில் என்ன ஆட்சேபம் இருக்க முடியும்? இதைக் கொண்டுவரும் வீர இளைஞர், சம்புவரையர் குமாரரைத் தாங்கள் பூரணமாக நம்பி அவரிடம் எந்தச் செய்தியும் சொல்லி அனுப்பலாம் – இங்ஙனம், துரதிர்ஷ்டத்தின் கூடப் பிறந்த அபாக்கியவதி நந்தினி’ என்று எழுதி இருந்தது.

அந்த நிருபத்தை, அவளது கவர்ச்சியில் ஏற்கெனவே மயங்கிப் போயிருந்த கந்தமாறனிடம் கொடுத்து, அதைக் கரிகாலரிடம் சேர்ப்பிக்கும்படியும், எப்படியும்  அவரைக் கடம்பூருக்கு அழைத்து வரும்படியும் வேண்டிக் கொண்டாள். வந்தியத்தேவன் கந்தமாறனை முதுகில் குத்தியிருக்கமாட்டான் என்றும் அன்று நிலவறைச் சந்திப்பின்போது தன்னை பழுவேட்டரையர் மகளாக அழைத்ததையும் நினைவுபடுத்தினாள்.

கந்தமாறன் யோசித்து முடிக்குமுன் பெரிய பழுவேட்டரையர் ஆங்காரத்துடன் வந்து சேர்ந்து கந்தமாறனை கேள்விகளால் துளைத்தார். நந்தினி பொறுமையாக அதற்கெல்லாம் பதில்சொல்லி அவரை சமாளித்து, கந்தமாறன் ஆதித்த கரிகாலனுக்கு ஓலை கொண்டுசெல்வதைப் பற்றிக் கூற, பழுவேட்டரையாரால் நந்தினியை எதிர்த்து எதுவும் சொல்ல முடியவில்லை. கந்தமாறன் சென்றபிறகு, தன்னை அவன் எதிரில் சந்தேகப்பட்டுப் பேசியதற்காகப் பழுவேட்டரையரிடம் பெரிதாய் வருந்தி, தன்மேல் சந்தேகம் உள்ளதானால் வாளெடுத்துக் கொன்றுவிடுங்கள் என்றெல்லாம் கூறி இளக வைத்தாள். பின் பழுவேட்டரையர் அவளை சமாதானப்படுத்தத் தொடங்கினார்.

அங்கே இலங்கையில்.. வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் இளவரசரைத் தேடிச் சென்றுகொண்டிருந்தபோது வழியில், பார்த்திபேந்திரப் பல்லவனைச் சந்திக்க நேர்ந்தது. வந்தியத்தேவன், தான் வந்த காரணத்தைத் தெரிவிக்காமல் பேச்சை முடித்துக்கொண்டான். ஆழ்வார்க்கடியான் பார்த்திபேந்திரனுடன் வந்திருந்த ஆட்களைக் கூர்ந்து பார்த்தான். பார்த்திபேந்திரன் சென்றவுடன், அந்த ஆட்கள் திருப்பியம்புறம் பள்ளிப்படையில் சோழர் குலத்தை அழிக்க சபதம் எடுத்துக் கொண்டவர்கள் என்று வந்தியத்தேவனிடம் கூறினான். வந்தியத்தேவன் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு பூங்குழலியின் தமையன் இலங்கைக்குச் சென்றதைப்பற்றி அவள் தந்தை குறிப்பிட்டதை  நினைத்துக்கொண்டான்.

இலங்கையின் சில பகுதிகள் சிங்கள மன்னன் மகிந்தனிடம் இருப்பதாகவும், சோழப் படை கைப்பற்றிய பகுதிகளில் இளவரசர் அருள்மொழி வர்மர் கருணையுடன் இலங்கை மக்களிடம் நடந்து கொள்வதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறினான். அப்போது வீதியில் பெரிய யானை மீதான அம்பாரியில் சீன யாத்ரிகர்கள் அமர்ந்திருக்க, அதன் மீதிருந்த பாகனை ஆழ்வார்க்கடியான் கூர்ந்து கவனித்து அது இளவரசர் அருள்மொழிவர்மர்தான் என்பதைப் புரிந்து கொண்டான். ஆனால் வந்தியத்தேவன் அதைக் கவனித்திருக்கவில்லை.

ஒரு காவலாளி கொடும்பாளூர் முத்திரை மோதிரத்தைச் சரிபார்த்து அவர்களை அழைத்துச் சென்றான். காவலாளியும் ஆழ்வார்க்கடியானும் இரு குதிரைகளில் ஏறிக்கொள்ள, வந்தியத்தேவனுக்குக் குதிரை வழங்கப்படவில்லை. கோபமடைந்த வந்தியத்தேவன் காவலாளியைத் தள்ளிவிட்டு, தாண்டிப்போன குதிரைகளைப் பின் தொடர ஆரம்பித்தான். வெகுதூரம் சென்றபிறகு சோழர் சைன்யத்துடன் தாவடிகள் காணப்பட்டது. அப்போது முன்சென்ற குதிரைகளிலிருந்து ஒருவர் மட்டும் வேகமாக வந்து வந்தியத்தேவனின் முகத்தில் குத்திக் கீழே தள்ளி அவன் இடுப்பிலிருந்த ஓலையை எடுத்துப் படிக்கத் தொடங்கினார். வந்தியத்தேவனால் அசையவே முடியவில்லை.

அப்போது சுற்றியிருந்த அனைவரும் அந்த வீரனின் முகத்தைக் கண்டு ‘பொன்னியின் செல்வர் வாழ்க’ எனக் கோஷமிட, வந்தியத்தேவன் திகைத்தான். பின் அனைவரும் விலகிச் செல்ல, அருள்மொழிவர்மர் விஷயங்களைக் கேட்டறிந்தார்.

‘பார்த்திபேந்திரன் ஆதித்த கரிகாலனைக் காஞ்சிக்கு அழைத்து வரும் தூதனாக வந்திருப்பதை அறிந்தே, உங்களைச் சந்திக்கும் முன்பு அவரைச் சந்திப்பதைத் தவிர்த்தேன்’ என இளவரசர் கூறினார். ஆழ்வார்க்கடியான் தன்னை இலங்கையிலேயே இருக்கும்படி அநிருத்த பிரம்மராயர் சொல்லி அனுப்பியதாகக் கூறினான். மூன்று பேரிடமும் இருந்து வெவ்வேறு விதமான செய்திகளை அடைந்த இளவரசர் அமைதி காத்தார். பின்னர் பார்த்திபேந்திரனைச் சந்திப்பதற்காக அநுராதபுரம் கிளம்பிய அருள்மொழிவர்மருக்கு, செல்லும் வழியில் புத்தரின் பாதங்களில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு செய்தி கிடைத்தது.

அன்று இரவில் ஒரு படித்துறை தடாகத்தின் அருகே மூவரும் சென்றனர். அங்கு ஒரு பிட்சு வந்து அவர்களை ரகசிய வழியொன்றில் நிலவறை விகாரம் ஒன்றின் உள்ளே அழைத்து சென்றார். அங்கு ஒரு கருங்கல் மண்டபத்தில் தங்க சிங்காதனம், மணிமகுடம், உடைவாள், செங்கோல் அனைத்தும் இருந்தன. அங்கிருந்த தலைமைப் பிட்சு இளவரசரை அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து இலங்கை அரசுரிமையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அருள்மொழி வர்மர், தான் அவருடைய வேண்டுகோளுக்காகப் பெருமைப்படுவதாகவும் தன் தந்தையும் அரசருமான சுந்தர சோழருக்கு, தான் கீழ்ப்பட்டவன் என்பதால் அவரின் சொல்லின்றி எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி மறுத்தார். வந்தியத்தேவன் இளவரசரின் பெருந்தன்மையை எண்ணிப் பெருமிதப்பட்டவாறே இருக்க, மூவரும் வெளிவந்தனர்.

அதைப்பற்றிப் பேசிக்கொண்டே வீதியில் நடந்தபொழுது கைதட்டும் ஓசை கேட்க, திரும்பிப் பார்க்கையில் ஓர் உருவம் நின்றிருந்தது. அதை நோக்கி இருவரையும் அழைத்துக் கொண்டு இளவரசர் நகர, அவர்கள் இருந்த இடத்தில் இருந்து மேல் மாட முகப்பு இடிந்து வீழ்ந்தது. ஒரு நிமிடம் தாமதித்திருந்தால்கூட மூவரும் இறந்திருக்கக் கூடும். காப்பாற்றிய அந்த உருவத்தைக் கண்ட வந்தியத்தேவன் திகைத்தான். ஏனெனில் அந்தப் பெண் பழுவூர் இளையராணி நந்தினியின் உருவ அமைப்பில் இருந்தார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த உருவம் மறைந்து விட, சித்தப் பிரமையோ எனக் குழம்பினான்.

ஒரு மண்டபத்தை அடைந்து அங்கு இரவைக் கழிப்பதற்காக மூவரும் தங்கினர். அப்போது வந்தியத்தேவன் அந்தப் பெண்மணியைப் பற்றிக் கேட்க, அருள்மொழி வர்மர் அவளைப்பற்றிச் சொல்லலானார்.

‘சிறு வயதில் என்னைப் பொன்னி நதியில் இருந்து காப்பாற்றிய பெண்மணி இவர்தான். நான் இலங்கைக்கு வந்தபிறகு, ஒரு சமயம் இரவில் எழும் விசித்திரமான குரலைக் கேட்டு என் வீரர்கள் அச்சப்பட, அது இந்தப் பெண்மணியின் குரல்தான் என்பதை நான் கண்டுகொண்டேன். அவரால் பேச முடியாது என்றும், அவர் என்மீது அளப்பரிய பாசம் கொண்டவர் என்பதையும் அறிந்து கொண்டேன். அப்போது அங்கு குளிர்காய்ச்சல் பரவி இருந்ததால், உடனே அங்கிருந்து நாங்கள் கிளம்பி விட வேண்டும் என அந்த மாதரசி கேட்டுக்கொள்ள நாங்கள் அங்கிருந்து கிளம்பி விட்டோம். அது மட்டுமல்லாமல் என்னைத் தொடரும் மறைமுக எதிரிகள், வனவிலங்குகள், மலைப்பாம்புகள் போன்ற பல அபாயங்களிலிருந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறார்’ என்று கூறியவர், அவர்களை படுத்துக்கொள்ளும்படி கூறினார்.

அப்பொழுது அந்த மூதாட்டி அங்கு வந்து, அவர்களைப் பின் தொடருமாறு சைகை செய்ய மூவரும் அங்கிருந்து கிளம்பினர். அவர்களை ஒரு ரகசிய  குகைக்கு அழைத்துச்சென்று, குகையின் சுவர்களில் தான் வரைந்திருந்த  சித்திரங்களைக் காட்டினாள்.

அந்தச் சித்திரங்களில் இருந்து,  ஒரு பெண்ணைப் பார்த்து ஒரு வாலிபன் காதல் கொள்வதும், அவர்கள் மகிழ்ந்திருப்பதும், ஒரு தருணத்தில் அந்த வாலிபன் பிரிந்து செல்ல, இந்தப் பெண் தொடர்ந்து சென்று அவனை ஒரு நகரத்தில் பார்த்தபோது, அவ்வாலிபன் அரசனாகப் பட்டம் சூடி நிற்பதைக் கண்டு அந்தப் பெண் மனமுடைந்து கலங்கரை விளக்கில் இருந்து விழுவதையும், அவளை ஒருவர் காப்பாற்றியதையும் அறிந்து கொண்டார்கள்.

பின் அந்தப் பெண் மனநிலை சரியில்லாத வெறியளாகவும் கர்ப்பமுற்றும் இருப்பதையும், அங்கிருந்த ராணி ஒருத்தியும் அப்போது கர்ப்பமாக இருப்பதையும்,  அந்தப் பெண்ணுக்கு இரு குழந்தைகள் பிறப்பதையும், ராணி அந்தக் குழந்தைகளில் ஒன்றை வளர்க்கக் கேட்பதையும், இந்தப் பெண் இரண்டு குழந்தைகளையுமே விட்டுவிட்டு ஓடிவந்து விட்டதையும், தூரமாய் இருந்து இரு குழந்தைகளையும் அவ்வப்போது பார்ப்பதுவுமான பல செய்திகளை அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.

பின்பொரு நாள் காவிரியில் விழுந்த குழந்தையை அப்பெண் காப்பாற்றுவது  போன்ற சித்திரத்தைப் பார்த்ததும்,  ‘அந்தப் பெண் நீங்கள்தான்’ என அருள்மொழி வர்மர் சுட்டிக்காட்ட, அந்த மூதாட்டி இளவரசரை அணைத்துக்கொண்டு கண்ணீர் பெருக்கினாள். பின் இன்னொரு சுவரில் வரவிருக்கும் அபாயங்களை சித்திரத்தில் எழுதி அருள்மொழிவர்மரிடம் காட்டினாள்.

குகையின் மேல் நின்று பார்த்தபொழுது இவர்கள் படுத்திருந்த இடம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

தொடரும்.

  • சவிதா

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *