ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்
திருப்பூர் எனும் திருப்புமுனை – 5
முந்தைய 4 பகுதிகளில் திருப்பூரின் அடிப்படைத் தொழில் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் இந்தத் தொடருக்குக் கிடைத்துவரும் ஆதரவுக்கும் சமூக ஊடகத் தொடர்புத் தளங்கள் வாயிலாக கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோருக்கும் நன்றிகளும் பேரன்பும். இந்தப்ப பகுதியில் திருப்பூரில் தயாராகும் ஆடைகள் சர்வதேச அளவில் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன, அங்குள்ள வர்த்தகக் கட்டமைப்பு குறித்தான விவரங்களைக் காண்போம்.
திருப்பூரிலிருந்து ஏற்றுமதிக்குத் தயாராகும் ஆயத்த ஆடைகள், ஐரோப்பிய, அமெரிக்க, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இவற்றில் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு 85% அளவிலும் இதர நாடுகளுக்கு 15% அளவிலும் ஏற்றுமதி நடைபெறுகிறது.
இறக்குமதி நாடுகளின் வர்த்தகக் கட்டமைப்பை, இறக்குமதியாளர்கள், சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள் என்று பிரிக்கலாம். இவற்றைக் குறித்து தனித்தனியே காண்போம்.
இறக்குமதியாளர்கள்
இறக்குமதி நிறுவனங்கள், அங்குள்ள நிகழ்நேரத் தேவைகளுக்கேற்ப ஆடை வடிவமைப்பளர்களைக் கொண்டு பல்வேறு வடிவங்களில், வண்ணங்களில், டிசைன்களை அமைத்து, அவற்றை இங்குள்ள தங்களுடைய வர்த்தகத் தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பி, ஆடை மாதிரிகளைப் பெற்று, அவற்றை அங்குள்ள பல்வேறு சிறிதும் பெரிதுமான சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு எடுத்துச்சென்று, அவர்கள் தேர்ந்தெடுக்கும் மாதிரிகளில் ஆர்டர்களைப் பெற்று, அவற்றை மொத்தமாகத் தொகுத்து, இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மொத்த ஆர்டர்களாக வழங்குவர்.
குறித்த காலக்கெடுவுக்குள் அந்த ஆர்டர்களை இங்குள்ள நிறுவனங்களுக்கு அனுப்பி, தயாரிப்புப் பணிகளை முடித்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளைப் பெற்று சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுப்பிவைப்பார்கள். பல இறக்குமதியாளர்கள், தாங்களே நிகழ்நேரத் தேவைக்கேற்ப டிசைன்களை உருவாக்கி, அதை மொத்த ஆர்டர்களாக இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து பெற்று, விற்பனை செய்வர். இந்தச் சூழலில் இறக்குமதியாளர்களுக்கும் ஏற்றுமதியளர்களுக்கும் மட்டுமே தொடர்பு இருக்கும். தரக் கட்டுப்பாடு, விலை நிர்ணயம், ஏற்றுமதிக்கான பணப் பரிவர்த்தனை அனைத்திற்கும் இறக்குமதி நிறுவனமே பொறுப்பு.
சில்லறை வர்த்தக நிறுவனங்கள்
இறக்குமதியாளர்கள் அல்லாது, சில்லறை வர்த்தக நிறுவனங்களே நேரடியாக இங்குள்ள ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தகம் செய்வதும் உண்டு. நிகழ்நேரத் தேவைகளுக்கு ஏற்ப ஏற்றுமதி நிறுவனங்களிடம் ஆர்டர்களை வழங்கி, குறித்த காலக்கெடுவுக்குள் உற்பத்தி செய்யப்பெற்று, தங்களின் வர்த்தகச் சங்கிலியில் உள்ள ஆடையகங்களில் விற்பனை செய்வர். இதில், ஆடைகளை மட்டுமே விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் கொண்ட நிறுவனங்கள், பல்வேறு நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் கொண்ட நிறுவனங்கள் என இரண்டு விதமான சில்லறை வர்த்தக நிறுவனங்கள் உண்டு. சுருக்கமாகச் சொன்னால், முதலாம் வகைக்கு உதாரணமாக நமது நாட்டில் உள்ள ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற நிறுவனங்களையும் இரண்டாம் வகைக்கு உதாரணமாக பிக் பஜார், டி மார்ட் போன்ற நிறுவனங்களையும் குறிப்பிடலாம். (பிக் பஜார் நிறுவனம் தற்போது மூடப்பட்டுவிட்டது).
பிராண்டுகள்
இவை பிரத்தியோகமாக உருவாக்கப்படும் ஆடைகள். நிகழ்நேரத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, ஒவ்வொரு பிராண்டும் தங்களுக்கான தனித்துவமான கொள்கை வடிவமைப்புக்களின் அடிப்படையில், தங்களின் ஆடை வடிவமைப்புக்கென்றே உள்ள குழுவின் வாயிலாக டிசைன்களை உருவாக்கி, அவற்றை இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் ஆடைகளாகத் தயாரித்து ப்ராண்டுகளுக்கென்றே பிரத்தியோகமாக அமைக்கப்பெற்ற கடைகளிலும் பல்வேறு பிராண்டுகள் விற்பனை செய்யும் வர்த்தகச் சங்கிலி அமைப்புகளின் வாயிலாகவும் விற்பனை செய்வர். ப்ராண்டுகளுக்கான உதாரணமாக யூ.எஸ் போலோ, லெவிஸ், கேப், கேஸ், பெனட்டன் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இறக்குமதியாளர்களைத் தவிர்த்து, சில்லறை வர்த்தக நிறுவனங்களும் ப்ராண்டுகளும் இணையத்தின் வாயிலாகவும் தங்களின் விற்பனையை மேற்கொள்கின்றன.
மேற்சொன்ன மூன்று வகை இறக்குமதி அமைப்புகள், இங்குள்ள நிறுவனங்களில் நேரடியாகவோ முகவர்கள் வாயிலாகவோ அல்லது இந்தியாவில் அமையப்பெற்ற தங்களின் சொந்த அலுவலகத்தின் வாயிலாகவோ வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் வகுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் தரக்கட்டுப்பாடு, ஆடைகள் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்களின் அமைப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றனர்.
இவை தவிர, ஆடைகளைத் தரச் சோதனை செய்வதற்கான சர்வேதேசப் பரிசோதனைக் கூடங்கள் உள்ளிட்ட தங்களின் அமைப்புகளை இந்தியாவில் ஆடை ஏற்றுமதி அதிகமாக நடைபெறும் நகரங்களில் ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில், திருப்பூரில், பல்வேறு நிறுவனங்கள், சர்வதேச ஆடை தொடர்பான பரிசோதனைக் கூடங்களை இங்கு நிர்மாணித்து, தரச் சோதனைகளை மேற்கொள்கின்றன. இந்தக் கூடங்களில், ஆடைகளின் எடை, அதில் உள்ள சாயத்தின் தன்மை, ஆடைகளின் நிலைத்தன்மை, ஆடைகளைத் தயாரிக்கும்போது உபயோகித்த பலவகை ரசாயனங்கள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டதா, ஆடைகளின் சுருங்கும் தன்மை என, பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த முடிவுகள் இறக்குமதி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, அம்முடிவுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும்.
ஏற்றுமதிக்குத் தயார் நிலையில் இருக்கும் ஆடைகளில் குறிப்பிட்ட சதவீதத்தை இறக்குமதி நிறுவனங்களால் நியமனம் செய்யப்பட்ட தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அல்லது சொந்த அலுவலகத்தின் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களைக் கொண்டு சோதனை மேற்கொள்வர். இதில், ஆர்டர்கள் பெறப்பட்டபோது ஏற்றுமதி நிறுவனங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட தரத்தின் அடிப்படையில் ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளதா? அடிப்படைக் குறைபாடுகள் உள்ளதா? என்றெல்லாம் சோதித்து, அந்தச் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் தவறும்பட்சத்தில் ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி மறுக்கப்படும்.
இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், எவ்வாறு வர்த்தக வாய்ப்புகளைப் பெறுகின்றனர் என்கிற கேள்வி இந்தத் தொழிலில் இல்லாதோருக்கும் இந்தத் தொழிலின் மீதான ஈர்ப்பு உள்ளவர்களுக்கும் இயல்பாகவே எழும். வர்த்தகம் சார்ந்த வெளிநாட்டுப் பயணங்கள், அங்கு நடைபெறும் கண்காட்சிகளில் பங்கு பெறுவது, முகமை அலுவலகங்கள், முகவர்கள், இறக்குமதி நிறுவனங்களின் தேடல், இணையம், உற்பத்தி நிறுவனங்களின் பின்னணி போன்ற பல்வேறு வகைகளில் வர்த்தக வாய்ப்புகள் பெறப்படுகின்றன.
திருப்பூரைப் பொறுத்தமட்டில், நிட்டட் கார்மெண்ட்ஸ் என்னும் பின்னலாடை மட்டுமே பிரதானமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு குழந்தைகள், சிறுவர், பெரியவர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிற்குமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், டி ஷர்ட், ஸ்போர்ட்ஸ் வேர், இரவு உடைகள், உள்ளாடைகள் உள்ளிட்டவை இங்கு பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. இது குறித்து விரிவாகப் பதிவு செய்யவேண்டுமெனில் இன்னும் சில அத்தியாயங்கள் தேவைப்படும்.
திருப்பூர் என்னும் சுயம்புவாக உருவாகிய தொழில் நகரத்தின் அடிப்படைகளைப் பற்றிப் பார்த்துவருகிறோம். இன்னும் இந்தக் கட்டுரைத் தொடரின் மையப்புள்ளிக்கு நாம் செல்லவில்லை. நேரடியாக அந்தப் புள்ளியிலிருந்து எழுத இயலும் என்றாலும், இந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கும் பெரிய புரிதல் தேவை இருக்கும் என்பதை உணர்ந்தே, தோற்றம் முதல் கடந்துவந்த பாதைகளை விவரித்து வருகிறேன். அடுத்து, பொருளாதாரக் கட்டமைப்புகளைப் பற்றிப் பார்த்த பிறகு, இன்றைய தடுமாற்றம், அதற்கான காரணங்கள், அவற்றைக் களைவதற்கான வழிகள் குறித்து எழுத விழைகிறேன். பொறுமையுடன் அடுத்தடுத்து வரும் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டுகிறேன். இனிவரும் காலங்களில், தவிப்பைத் தவிர்த்து தளராமல் முன்னேற வேண்டும் என்ற நோக்கமே இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுவதற்கான ஊக்கத்தை அளித்துள்ளது.
வெள்ளியன்று மீண்டும் சந்திப்போம்
- குமார் துரைசாமி

GOMATHISANKARR
August 16, 2023சுவடு இதழில் வரும் முக்கியமான கட்டுரை ஐயா.. திருப்பூர் பற்றியும் அதன் பிரமாண்டமான துணி வணிகம் பற்றியும் இதற்குமுன் இத்தனை விரிவாக படித்ததில்லை.. மெதுவாகவே மையப் புள்ளிக்கு வாருங்கள்..
தொடர்ந்து படித்து வருகிறோம்..நன்றி.