”ஜெயமோகனிடம் இருந்து வருவது பாசிசத்தின் குரல்!”
இணையத்தில் பரவும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்கிறார் பா.செயப்பிரகாசம்

சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக பா.செயப்பிரகாசத்தின் ஆதரவாளர்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குமிடையில் சொற்போர் நடந்துவருகிறது. வெறுமனே சொற்போர் என்பதைக் கடந்து, கண்டன அறிக்கை, நீதிமன்றத்தில் வழக்கு தொடருதல் என அடுத்தடுத்த நகர்வுக்குச் சென்று பூதாகரமாகி உள்ளது.

இந்நிலையில் பா.செயப்பிரகாசத்தை சந்தித்தோம்.

பா.செயப்பிரகாசம் –ஜெயமோகன் மோதல் தனிமனித விரோதப் பின்னணியா?”

“இந்தக் கேள்வியே முதலில் பிழையானது; கணவன்–மனைவி, குடும்பம், சுற்றம், நண்பர்கள், ஒரு குழு அல்லது வட்டம், சாதி, மத, அரசியல் கட்சிகள் போன்றவைகளின்  இயங்குதலில்  தோற்றம் கொள்வது   தனிமனிதப் பகை. உரசல் ஆகி,  பிறகு திண்ம வடிவமாக   உருவெடுப்பது. எழுத்து, உரையாடல், சொற்பொழிவு  போன்ற அறிவார்ந்த தளத்தில் இதற்கு இடமில்லை. ஒருவேளை ஜெயமோகன் தனிமனிதப் பகை கொண்டிருக்கலாம்.

இரு துருவங்கள், இரு முனைகள், மானுட விடியலுக்கான  இருவேறு கொள்கைகள். கொள்கைகளில்   பொருத்தப்பாடு இல்லாததால், பிற எல்லாவற்றிலும் முரண் எழுவது இயல்புதானே!   

“ஜெயமோகன் படைப்புக்களை வாசிப்பதுண்டா? அவரது எழுத்துகள் பற்றிய தங்கள் பார்வை?”

“வாசித்திருக்கிறேன்; தொடர்ந்து வாசித்தும் வருகிறேன். ரப்பர், வெள்ளை யானை- நாவல்கள், அறம் சிறுகதைத் தொகுப்பு – இவை வாசிக்கப்பட வேண்டிய படைப்புகள். ஏனெனில்  யதார்த்த நிலையை சித்தரிப்பதுதான்  இதற்கான காரணம்; ஆயினும்  இந்த எழுத்துப் படைப்புகளினூடாக ஒரு நுண்ணரசியல் ஓடுகிறது என்பதைப் புறந்தள்ளி விடக் கூடாது. 

விஷ்ணுபுரம்  அவருடைய மகாகாவியம் என ஜெயமோகன் கருதுகிறார்; பாதிக்கு மேல் என்னால் நகர முடியவில்லை. தற்போதைய சாதிய அடுக்கு, மத அடுக்குகளை   விருப்பத்துக் குரிய ஒன்றாக்கும் படைப்பு இது. இச்சமூகத்தின் மீது கோபம் கொள்வதற்கு மாறாக விருப்புக் கொள்ளச் சொல்கிறார். இது மனித நேயத்தின் மீதான வெறுப்பாகத்  திரும்புகிறது என்பதை அவர் உணர்ந்தாரா? பொங்குமாக்கடல் போல் தனக்குள் கொந்தளிக்கும் திறனை வெளிப் படுத்த நினைத்தால், விஷ்ணுபுரத்திற்குள் போயிருக்க வேண்டாம்;  மும்பையின், இந்தியா வின் ஆகப்பெரும்  சேரியான தாராவிக்குள்   போயிருக்க வேண்டும்.

“யதார்த்தவாதம் செத்துப் போய்விட்டது. அது ஏற்படுத்திய வாணவேடிக்கை என்றோ பிசுபிசுத்து அணைந்து போயிற்று. இன்று புதிய கலாச்சார இலக்கிய முனைப்புகள் தேவைப் படுகின்றன. அவற்றை இயக்கமாக உருவாக்க வேண்டியுள்ளது” என்ற நோக்கில்   எழுதப் படுகிறது விஷ்ணுபுரம். எழுதிய கையோடு ’விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ என்ற ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்து, விருதுகளும்  வழங்கத் தொடங்கினார். பகுத்தறிவை நிராகரிக்கும் போக்கினை-   பழம் மரபைப் போற்றும் பணியை விஷ்ணுபுரத்தில் காணலாம். பகுத்தறிவையும் சிந்தனையையும் ஒருசேரப் புறந்தள்ளி, தன் சித்தத்தை மாத்திரம் முன்வைத்த நாவல் ’பின் தொடரும் நிழல் ’

அவருடைய சித்தம், உளப்போக்கு எத்தகையதாக வணையப் பட்டது என்பதின் இரு சான்றுகள் இவை.

 அவருடைய இலக்கிய மதிப்பீடு இவ்வாறாக இருக்கிறது:

“பொதுப் புத்தியாலும் புறவயமான தாக்கத்தாலும் (Reason)  அடையப் பெறும்  உண்மைகளுக்கு இலக்கியத்தில் பெரிய இடம் ஏதுமில்லை.” (நவீனத்துவத்தின் முகங்கள்- பக்கம் 105).

“மனித மனத்தின் இயல்பை வெளிப்படுத்துதல் என்றால் நவீனத்துவத்தைப் பொருத்தவரை இருளையும் தீமையையும் வெளிப்படுத்தல்”   (மேலது; பக்கம் 89)

சரி, எந்தக் குரலில் என்பதுதான் கேள்வி. அதிருப்திப் புகையா, எதிர்ப்புக்குரலா,  நியாயப் படுத்தலின் ஆராதனைகளா? நியாயப்படுத்தலின் ஆராதனைகள் தாம் விஷ்ணுபுரமும் பின் தொடரும் நிழலும்.

எதை வைத்து உங்களைச் சாதிவெறி ஆதர வாளர் எனக் குற்றம் சாட்டுகிறார் ஜெயமோகன்?”

“அவரிடம்தான் கேட்க வேண்டும். என்ன ஆதாரம் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.  முதலில் அவதூறைத் தொடங்கி வைத்தது அவர்தான். “ஒரு   முன்னாள் இடதுசாரியின் கடிதம்” என்ற அனாமதேயக் கடிதத்தை
29-05-2020ல்   அவருடைய இணையப்பக்கத்தில் பதிவு செய்தார்.    

“இதுதான் ஜெயமோகனின் இலக்கிய  அறமா?” – எனக் கேள்வி எழுப்பிய பதிவை எனது முகநூலில் 02-06-2020 அன்று பதிவிடுகிறேன். இதற்கு பதில் சொல்லாத ஜெயமோகன், தன் இணையப்பக்கத்தில் 07-06-2020ல் பா. செயப்பிரகாசம் என ஒரு பதிவும், பா.செயப்பிரகாசம் பற்றி என மற்றொரு  பதிவும் ஒன்பது பக்கங்களுக்கு இரு பதிவுகளை வெளியிட்டார்.  ஏற்கனவே அவர் என்ன சொன்னாரோ, அவைகளை   உறுதிப்படுத்திய தோடு  மேலும் பல அவதூறுகளைப் பொழிந் திருந்தார். இதன்பேரில்  சட்ட நடவடிக்கை அறிவிக்கை அனுப்பப்பட்டது. அவருடைய வழக்கறிஞர் அனுப்பிய பதில் கடிதத்தில் அதற்கு ஆதாரமாக இரண்டு இணைப்புகள் – அவை கீற்று இணையதளத்தில் 2010-இல் வெளியானவை. அவர் என்மீது வைத்த அவதூறுகளுக்கும் இந்த இணைப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கீற்று இணையதள  ஆசிரியர் நந்தன் இதனைத் தெளிவாக இவ்வாறு விளக்கியுள்ளார்:  “இரு கட்டுரைகளும் ஜெயமோகன் பரப்பிய அவதூறுகளுக்கு எந்தவிதத்திலும்  வலு சேர்ப்பவை அல்ல. அவர் மன்னிப்பு கேட்பதே முறையானது.”  

சாதியம், சாதி மறுப்பு இவற்றில் உங்களின் நிலைப்பாடு என்ன ?”

“சாதி என்ற சொல்லையே இழிவாகக் கருது கிறவன் நான். அந்த உணர்வை என் அருகில் கூட நான் வரவிட்டதில்லை.  சாதியை அதன் வேரோடும் வேரடி மண்ணோடும் சில்லு வேர்களோடும் பெயர்த்து வீசவேண்டும் என்று என் எழுத்தில், உரையில், செயலில் வெளிப் படுத்தி வருபவன் நான். இது என்னை அறிந்த வர்களுக்குத் தெரியும்.  நான் என் மகனுக்கு  சாதிமறுப்புத் திருமணம் செய்து வைத்திருக் கிறேன். அந்தக் காலத்திலேயே என் தங்கைக்கு சாதிமறுப்பு புரட்சிகரத் திருமணத்தை புரட்சி யாளர்கள்  முன்னிலையில் நடத்தியிருக்கிறேன். நிறைய சாதி மறுப்புத் திருமண நிகழ்வில் பங்கேற்றுள்ளேன். “கொலை செய்யும் சாதி” என்று அழுத்தமாக சாதியத்தை எதிர்த்து நான் எழுதிய நூல் இதற்கெல்லாம் ஒரு சாட்சி.    அவர் விடும் சாதிய அம்பு பூஞ்சையானது. சாதிக் கொடுமையைச் சாடி வருகிறவை எனது    எழுத்துக்கள். பள்ளிக்கூடம், மணல் என்ற எனது நாவல்களுக்கு சாதி எதிர்ப்பு அடிநாதம்தான் பேசுபொருள்.”

``சட்ட ரீதியான நடவடிக்கைக்குக் போயிருக்கக் கூடாது;   கருத்து மோதலை அந்தத் தளத்திலேயே  தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று  சிலர் கூறுகிறார்களே?”

நடந்தது கருத்து மோதல் அல்ல, அவதூறு. நடப்புச் சமுதாயத்தில் ஊழல் நிலவுகிறது  என்று சொல்வது ஒரு கருத்து;  பொதுவாக இன்றைய அரசியல் கலாச்சாரம் சமூகத்தின் பொதுக் கலாச்சாரம் ஆகியவை ஊழல் மயமாக ஆகிவிட்டது என்று  சொல்வது வேறு.  ஆதாரம் இல்லாமல் ஒருவரைச் சுட்டி இவர் ஊழல் செய்தார் என்று சொல்வது அவதூறு. இல்லாததை இருப்பதாகச் சொல்வதும், செய்யாததைச் செய்ததாகச் சொல்வதும் அவதூறு. இந்த அமில வீச்சு அறிவார்ந்த இலக்கியத் தளத்துக்குத் தேவையில்லை. 

முக்கியமாக என் முகநூல் பார்வையாளர் களான பதிவர்களிடம் கருத்துக் கேட்டிருந்தேன். ஏறத்தாழ அனைவரும் சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்தனர்.”

உங்களுக்கு ஆதரவளித்து கையெழுத்திட்ட தமிழ்ப் படைப்பாளிகளின் கண்டன அறிக்கை உங்களது தூண்டுதலா? அல்லது அவர்களின் தன்னெழுச்சியா?”

“உண்மையில் நான் எந்த இடது சாரிக் குழுவுக்கும் தலைமையில் இருந்ததில்லை: புனைப்பெயரில் இருப்பதாக ஒரு பிதற்றல்,  இது கூட உளவுத்துறைக்கு தெரியாதா என்று உளவுத்துறை மீது ஒரு எள்ளல், சாதி வெறி பிடித்த உயர் அதிகாரியாய் இருந்தவர் என்ற குத்தல் – இத்தியாதிகள்  குமைச்சலும் எரிச்சலும்  எழுப்ப, எழுத்தாளர்கள் கண்டன அறிக்கை வெளியிட முடிவெடுத்தனர்.  தஞ்சை இலக்கிய வட்டத்தின் பொறுப்பாளர்
செ.சண்முகசுந்தரம் கண்டன அறிக்கையை வரைவு செய்து நண்பர்களுடன் கலந்து அனைவருக்கும் அனுப்பி ஒருங்கிணைத்தார். ஏறக்குறைய இருநூறு பேர்   ஒப்பமிட்டுள்ளனர்.

“ஒரு கும்பல் கூடி ஓர் எழுத்தாளனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லி பத்திரிக் கைகளுக்கு அனுப்பலாம் என்பதுதான் அவதூறு” என, கண்டன அறிக்கையில் ஒப்பம் கொடுத்த அத்தனை பேர் மீதும் பாய்ந்தார் ஜெயமோகன்.  ஒப்பம் இட்ட அனைவர் மீதும் வழக்குத் தொடுப்பேன் என அறிவித்தார். தன்னை விமர்சிக்கிற   ஒரு எழுத்து,  பேச்சு, ஊடகம் எதுவென்றாலும்  குளிர் ஜுரம் கண்டது  போல் எதிர்கொள்ளும் அவர் இயல்பு,  இதிலும் அம்பலப்பட்டது.”     

“அரசு அதிகாரியாக இருந்துகொண்டு, இடதுசாரி எழுத்தாளராக இருப்பது  குற்றமா?”

“ஐயையோ, இருக்கலாமா, கூடவே கூடாது!

ஜெயமோகன் என்ற ‘மாஸ்டர்’ நோக்கில் இது மாபெரும் குற்றம். அரசுப் பணியில் அவர் மாதிரி படைப்பாளிகளாய் இருக்கலாம் என்பது உள்ளோடும் ஒப்புதல்.  அவரும் நடுவணரசின் தொலைபேசித் துறையில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அரசு அலுவலராக இருந்துகொண்டு அரசை விமர்சிப்பதில், எதிர் எழுத்துக்கள் வடிப்பதில்  என்ன தவறு? அரசுத் துறையில் இருப்பவர்கள் அரசை விமர்சிக்கக் கூடாது என்பதும், ஒரு முதலாளியின் கீழ் வேலை செய்பவர்கள் அவரைப் பற்றிய ஆதங்கத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பதும்  ஒடுக்குமுறைக்கான வரையறை. இதுதான் பாசிசத்தின் குரல். அது ஜெயமோகனிடம் இருந்து வருவதில் வியப்பு இல்லை.”  

இன்றைய உலகமயமாக்கல் கால அரசியல் நீரோட்டத்தில் புரட்சிகர இடதுசாரி இலக்கியப் படைப்புகள் பின்தங்கி விட்டனவா?

“சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அது முதலாளியம்; பிறகு அதன் பெயர் ஏகாதிபத்தியம்; அந்நூற்றாண்டு இறுதிகளில், இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் அது உலகமயம்.   இந்தப் பேய் கண்ணுக்குத் தெரியவே அழிம்பு செய்கிறது. உலகப் பரப்பில் உள்ள ஒவ்வொரு  மனித உயிரும், இனம் மொழி பண்பாடு வாழ்வியல்  என சுய சுவாசம் அற்றுப்போன எலும்புக்கூடு களாய்   நடமாடச் செய்துள்ளது.  சுவாசிக்க, என் மூச்சுப் பறைய “காற்றே வா” எனக் கை உயர்த்திக் கேட்கும் உருவங்கள் எங்கெங்கும்   காணும்படியாகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு கழுத்து நெரிப்போ அத்தனை அளவுக்கு   எதிர்ப்புக் குரல்கள். இக்குரல்களின் தொகுப்புத் தத்துவமாக,   சமூக விஞ்ஞானமான மார்க்சியம்  மனித விடுதலையை முன்வைத்தது.   அதனடியான  இடதுசாரிக் கருத்துக்கள் எங்கும் பரவி வருகிறது. நோம் சாஸ்கி போல் முதலாளித்துவ நாடுகளில் வாழும்  அறிஞர்கள் உலகமய எதிர்ப்புப் பரப்புரைக்கு கூர் ஏற்றி வருகின்றனர். கலை இலக்கியம்  போன்ற அனைத்து ஊடகங்கள் வழியாகவும் இது மேலெடுக்கப்படுகிறது; முடிந்து போய்விட்டது என்று எண்ணப்பட்ட மக்கள் கலை இலக்கியப் படைப்புகள் இப்போது  மீள்பதிப்பு காணத் தொடங்கியுள்ளன.

பகுத்தறிவையும் மனித நேயத்தையும் இணைத்து வெளிவரும் படைப்புகளை முற்றாக இலக்கிய நிகழ்வு நிரலிலிருந்து அகற்றுவது, அதை அதிநவீனத்துவப் போக்காகக்  தமிழில் ஜெயமோகன் & கூட்டத்தால் முன்னெடுத்து நிலைப்படுத்தப்படுகிறது. இது இந்த இலக்கிய மாஸ்டர்களின் திருவினையல்ல, உண்மையில் பகுத்தறிவையும் மனிதநேயத்தையும் உலக வாழ்வியல் அகராதியிலிருந்து அகற்றும் உலகமயத்தின்  நிகழ்வுநிரலில் காணக்கூடியது தான்.”


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *