விடியலை நோக்கி…

வந்த வழிகளின்

வனப்புகள் அனைத்துமே

வளங்களை மட்டும்

பறைசாற்றவே இல்லை…

நெளிவு சுளிவுகளைக்

கடந்தே வந்தாலும்

வாழ்க்கை வழி மட்டும்

இதுவரை வாய்க்கவே இல்லை…

முகம் மட்டும் சிரிக்க

அகமனைத்தும் அழ

வயிறெனும் நிலம் மட்டும்

பசிக்களையில் நிறைந்தே…

களை பிடுங்க யாரும்

வருவாரில்லை இங்கே

வார்த்தைகளில் பொட்டிட்டு

வாழ்க்கை மட்டும் தொலைந்தது…

என் வாழ்வின் வழியையே

தீர்மானிக்க உரிமையில்லை

சுவடுகளைத் தீர்மானிக்க மட்டும்

சிந்தனைகள் ஆயிரமாயிரம்…

என் வலியறிந்தோர்

வசமில்லை எதுவுமிங்கே

வறுமையின் வரலாறுகளை

சுருக்கங்களில் வரைந்தேன்…

உழுத நிலத்தின் சுருக்கங்களில்

அமிழ்ந்து புதைந்த விதைகளாய்

வாழ்க்கை மட்டும் வரலாறாய்

விடியலை எதிர்நோக்கியே…கோ.கார்த்திகேயன்,

கோவில்பட்டி


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *