கேலிச் சிரிப்பு
சென்னை பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த போக்குவரத்திலிருந்து சற்றே ஒதுங்கி இருந்த வங்கியின் வாசலுக்கு அருகாமையில் இடம் தேடி வண்டிகள் வரிசையாகவும் , நெரிசலாகவும் இருந்த ஓர் இடத்தில் இரண்டு வண்டிகளுக்கு இடையில் தன் ஸ்கூட்டியை சொருகி நிறுத்தினாள்.
அவசரத்துக்கு பேங்குக்கு வந்துபோக முடியுதா? பார்க்கிங் எப்பவும் புல்லாதான் இருக்கு. இப்படி பார்க்கிங் வசதியில்லாத இடத்தில் எதுக்காக பேங்கை நடத்து றாங்க என ஒருவகை சலிப்புடன் தனக்குத் தானே புலம்பியபடியே வண்டியின் சீட்டை தூக்கி அதற்குள்ளே தன் தலைக்கவசத்தை வைத்து சீட்டை மறுபடியும் அழுத்தி மூடி வேகவேகமாக வங்கியின் கண்ணாடி கதவைத் தள்ளி உள்ளே சென்றாள்.
முழுமையாக குளிரூட்டப்பட்ட வங்கியி னுள்ளே நுழைந்தவள் முகத்தில் சில்லென்று குளிர் காற்று பட்ட சுகத்தைக் கூட பொருட்படுத்தாமல் எதிரே இருந்த கேஷியர் அறையைப் பார்த்தாள்.
ஐந்தாறு பேர் வரிசையில் நின்றிருந் தார்கள்.
அதைக் கண்டதும் இவளுக்குப் படபடப்பு அதிகரித்தது. ‘ச்சே’ இந்த பேங்கில் எப்பவும் கூட்டம்தான். அவசரத்துக்கு வந்தமா போனோமான்னு இருக்க முடியாது என்று தன் புலம்பலை உதடுகள் வழியாக முணுமுணுத்தாள்.
அருகிலிருந்த மேசையின் கீழ் அலமாரி யில் கலர் கலராய் அடுக்கி வைக்கப் பட்டிருந்த ஒரு காகிதக் கட்டிலிருந்து ஒரு தாளை உருவி எடுத்து மேசைமீது வைத்தாள்.
காலையில் வேலைக்குப் போகும் போது இது போன்ற சில எக்ஸ்ட்ரா வேலைகளை செய்வதெல்லாம் மிக கொடுமையானது. இந்த டிராபிக்கில் வண்டியை ஓட்டிக்கொண்டு வருவதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது. அப்படி வந்தாலும் வந்த வேலை சீக்கிரம் முடியாம போகுது.
வேலைக்கு கொஞ்சம் லேட்டா போனாலும் மேனேஜர் கத்துகிறான். அவனிடம் கொஞ்சம் லேட்டா யிடுச்சி சார்னு வழியனும் . பெண்களுக்குத்தான் காலையில் எவ்வளவு வேலை இருக்கிறது .
ஆண்களைப் போல் பேப்பர் படிச்சிட்டு ஊர்க் கதையை பேசிட்டு உட்கார்ந்த இடத்திலேயே காப்பி, பலகாரம் எல்லாம் வரவழைச்சி சாப்பிட்டுவிட்டு நாம தயாரா கட்டிவச்ச சாப்பாடு பாக்சை எடுத்து ஆபிசுக்கு கிளம்பிடுதுங்க. அப்படி நோகாம வேலைக்கு கிளம்பி வந்துட்டு நம்ம உயிர எடுக்குதுங்க.
பெண்களுக்குத் தான் உட்கார நேரமில்லாம எவ்வளவு வேலை. எல்லாவேலையையும் முடிச்சுட்டு நாமளும் வேலைக்குக் கிளம்பனும். ஆனால் அவர்களைப்போல சரியான நேரத்துக்கு வந்து நிற்கனும்னு நினைக்கிறாங்க.
இதில் மாதாமாதம் அதுக்கு இதுக்குனு EMI தேதி தவறாமல் நாமதான் கட்டணும். எல்லாம் நம் தலை எழுத்து என்று அலுத்துக்கொண்டபடி தன் தோள் பட்டையில் குறுக்காக மாட்டியிருந்த பையிலிருந்து பேனாவைத் தேடி எடுத்து எடுத்து எழுத துவங்கிய வளின் பார்வை கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த பெரியவரைக் கண்டது.
பழுப்பேறிப்போன வேஷ்டி, அதற்கு சம்மந்தமே இல்லாத கட்டம் போட்ட சட்டையில் மேல் இரண்டு பட்டன்களை போடவில்லை, காலில் பல ஆண்டுக்கு முன் வாங்கி தேய்ந்துபோன ரப்பர் செருப்பு, எண்ணெய் தேய்த்து படியவாரிய தலை, நெற்றியில் சின்னதாக விபூதிக் கோடு. நரைத்த தலையில் இடைஇடையே கருத்த முடி. ஷேவ் பண்ணாத முகம், மொத்தத்திற்கு பாத்ததும் படிப்பறிவில்லாதவர் என பளிச்செனத் தெரிந்த அறுபது வயதைத் தாண்டிய உருவம்.
இப்படி எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் வங்கிக்குள் வந்தாலே பலருக்கு டென்ஷன் ஏறும். இவளுக்கும் அதேபோல் எரிச்சலாக வந்தது.
‘ச்சே’ வேலைக்கு நேரமாயிடிச்சி, கேஷ் கவுண் டரிலும் ஜனங்கள் அதிகமாகிட்டாங்க. வரிசை நீண்டு இருக்கு. இதில் எப்போது பணத்தை கட்டிவிட்டு வேலைக்கு போவது…
போதாக்குறைக்கு இவரைப் போன்றவர்கள் பேங்குக்கு வந்து ‘அம்மா கொஞ்சம் இந்த செலானை எழுதிக்கொடு’ என்று நம் உயிரை எடுப்பார்கள்.
‘படிக்காதவங்கள பேங்குக்கு அனுப்பி அதுங்க நம்ம உசுர எடுக்குதுங்க’ என்று அலுத்தபடி ஒரு வகையான எரிச்சலுடன் ஓரக்கண்ணால் அந்த வயதானவரைப் பார்த்தாள். அவர் நேராக இவளை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அதைக் கண்டதும் உடனே அருகில் வேறு யாராவது நம்மைபோல் எழுதுகிறார்களா என்று பார்த்தாள். அப்படி யாரும் அவளருகில் இல்லை. எழுதிக்கொண்டிருந்த ஒன்று இரண்டு பேரும் கேஷ் கவுண்டருக்கு போய் லைனில் நின்று கொண்டிருந் தார்கள்.
அவர் அருகில் வரவர இவளின் உள்ளம் படபடத்தது.
உள்ளே வந்தவர் சற்று நின்று பார்வையை சுழல விட்டவர் அவளைப் பார்த்து ஒரு வகையான தயக்கத்துடன் நெருங்கி வந்தார்.
அதை ஓரக்கண்ணால் பார்த்தவள் தலையை வலதுபுறமாகத் திரும்பி அவரை கவனிக்காதது போலவும், மிக டென்ஷனாக இருப்பது போன்றும் காட்டிக்கொள்ள முயற்சித்தாள்.
ஆனாலும் அந்த முதியவர் அவளருகில் வந்து… ‘‘ஏம்மா” என்று மெல்லமாக அழைத்ததைக் கவனிக்காததுபோல் பாவனை செய்தாள். மீண்டும் அவர் ‘‘என்னம்மா! உன்னைத்தான்’’ என குரலை உயர்த்திக் கூப்பிட்டார்.
இதற்கு மேல் எதுவும் செய்யமுடியாது என்று அவளுக்குத் தோன்றியது.
பெரியவரை நிமிர்ந்து பார்த்து சற்று எரிச்சலான முகத்துடன் ‘‘என்னங்க’’ என்றாள்.
பெரியவர் தயங்கித் தயங்கி ‘‘அம்மா! பேங்க் வாசலில் இந்தச் சாவி கீழே விழுந்துகிடந்தது. இது உங்களதுதானே?’’ என்ற கேள்வியுடன் சாவியை அவளிடம் நீட்டினார்.
பெரியவரின் தயக்கம் இப்போது இவளிடத்தில் ஒட்டிக்கொண்டது. அந்த தயக்கத்தோடு அதை வாங்கிப் பார்த்தவள் ‘‘ஆமாம், இது என்னுடைய வண்டிச் சாவிதான்’’ என்றாள்.
‘‘இது பேங்க் வாசலில் கிடந்தது. உங்க அவசரத்துல சாவியை இப்படி எங்கேயாவது தொலைச்சுட்டு தேடிட்டுருப்பிங்க பாவம். அதான் யாரு எவருன்னு பார்த்து கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன் பத்திரமா வச்சுக்கங்க’’ என்று கூறிவிட்டு பதில் நன்றியைக்கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டார்.
ஒரு கணம் எதுவும் தோன்றாமல் பெரியவரின் முதுகையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள் சில நிமிடங்கள் கழித்து கையில் இருந்த சாவியைப் பார்த்தாள்.
சாவிக் கொத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஜோக்கர் பொம்மை அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
Comments (0)