இந்தியாவில் எந்தவொரு அரசியல்வாதியும் இவ்வளவு விமர்சனங்களை எதிர்கொண்டதாகச் சரித்திரம் இல்லை. எந்தக் காரியத்தில் இறங்கினாலும் எதிர் விமர்சனம் இன்றி கருணாநிதி வென்றதாக வரலாறும் இல்லை. ஒருவேளை இவரின் வெற்றிக்கு இந்த விமர்சனங்கள் தான் ஊன்றுகோலாக இருந்தனவோ என்ற எண்ணம் அவ்வப்போது எழுவதுண்டு.

தனது அரசியல் பிரவேசம் முதல் கட்சியின் தலைவர் பொறுப்பு, முதல்வர் பதவி மற்றும் கடைசித் தருணம் வரை இவரின்  ஒட்டுமொத்த செயல்பாட்டையும் அக்குவேறு ஆணிவேறாக விமர்சனம் செய்வதற்கென்றே ஒரு வலைப் பின்னல் கட்டமைக்கப்பட்டிருந்தது கருணாநிதி எனும் தனிமனிதனைச் சுற்றி. அவரின்  தமிழும், காந்தக்குரலும், தளராத நம்பிக்கையும் தன் கீழ் இயங்கும் எல்லோரையும் அடையாளம் கண்டு பிடித்துவிடும் கருணாநிதியின் அரசியல் முகத்தையும் தாண்டி, அவருடைய மற்ற பரிமாணங்களைக் காணும் பட்சத்தில் இவரின் தொலைநோக்குப் பார்வை தற்போதைய அரசமைப்பின் தலைமைகளையே ஆச்சரியப்பட வைக்கிறது. ஆம், அமெரிக்காவில் நடைமுறை யில் உள்ள,  விவசாயிகள் மற்றும் மக்களிடையே இடைத்தரகர்கள் இல்லா வணிகம் மூலமாக நேரடி வணிகச் சங்கிலி ஏற்படுத்தி, உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சூட்சுமத்தை அறிந்து, தமிழகத்தில் உழவர் சந்தை என்ற திட்டத்தைத் தொடங்கி தாங்கள் விளைவிக்கும் உணவுப் பொருட்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் விவசாயிகள் நட்டமின்றி வருமானம் ஈட்டுவதற்கு வழிவகை ஏற்படுத்தினார். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இடைத்தரகள் மூலம் சந்தையில் விற்பனை செய்வதால், தரகர்கள் பலனடைந்து விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் வாடி வந்த வேளையில், தமிழகத்தில் விவசாயிகளுக்கான நேரடி விற்பனைச் சந்தையை உருவாக்கிய விதம் வியப்பின் சரித்திரக் குறியீடு. 

2000 ஆண்டுகளின் துவக்கத்தில் கணினிகளை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மற்ற மாநிலங்களுக்கு மத்தியில், தகவல் தொழில்நுட்பச் சேவை துறையில்தான்  எதிர்காலம் உள்ளது என்பதை நன்கு உணர்ந்த கருணாநிதி, 2000ஆம் ஆண்டே சென்னையைத் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகரமாக மாற்ற அன்று அவர் தூவிய டைடல் பார்க் எனும் விதைதான் இன்று பழைய மகாபலிபுரம் சாலையின் இருமருங்கிலும் புற்றீசல் போலப் பெருகியுள்ள ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப நிறுவனங்களாக வளர்ந்து நிற்கிறது. அதற்கு அடுத்ததாக சிறுசேரியில் அமையப்பெற்ற ஒன்றிணைந்த தகவல் தொழில்நுட்பக் கூட்டமைப்புகள் மூலமாக தமிழகம் மட்டுமின்றி நாடுமுழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் வளர்ச்சியடைந்த பிரதேசமாக மாற்றியுள்ளது.

இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி, இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய  நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம் என இவர் கொண்டுவந்த திட்டங்கள் பலப்பல.

ஆசியாவின் முதல் வேளாண் பல்கலைக்கழகம், ஆசியாவின் முதல் கால்நடைமருத்துவக் கல்லூரி, இந்தியாவின் முதல் சட்டப்பல்கலைக்கழகம், இந்தியாவின் முதல் கல்வியியல் (B.Ed.,M.Ed) பல்கலைக்கழகம் மற்றும் நாட்டின் முதல் கடல்சார் பல்கலைக்கழகத்தைக் கொண்டு வந்த கலைஞர் கருணாநிதி நவீன தமிழகத்தின் சிற்பி என்றால் அது மிகையாகாது.

தோல்விகளைக் கண்டு துவளாமல் மீண்டெழுந்து ஐந்துமுறை தமிழகத்தின் முதல்வராக இருந்ததோடு, தி.மு.க என்னும் இயக்கத்தைக் கட்டிக் காத்தவர் என்றப் பெருமைக்குச் சொந்தக்காரர் இவர்.

நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களால் கலைஞர் எனும் அடைமொழிக்குப் பாத்திரமான கருணாநிதி அவர்களின் 97வது பிறந்தநாள் ஜூன் 3 அன்று கொண்டாடப்பட உள்ளது.


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *