ஆயிஷா
திரை விமர்சனம்
சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள மாசூம் எனும் செல்வந்தர் வீட்டிற்கு, ஒரு பணிப் பெண்ணாகக் கேரளாவில் இருந்து செல்லும் ஆயிஷா, சில சிரமங்களைத் தாண்டி, அரண்மனை போன்ற அந்த வீட்டின் நடைமுறைகளை அறிந்துகொண்டு, நாளடைவில் குடும்பத்தின் தலைவி மமாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார். விளைவு, சக பணியாளர்களின் மகிழ்ச்சிக்கு உகந்தவராகவும் அதுவரை மமாவின் முதன்மைப் பணியாளர்களாக இருந்த பெண்களுக்கு எதிரியாகவும் ஆகிவிடுகிறார்.
மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த வாழ்வில், ஆயிஷா குறித்த ஒரு உண்மை வெளிப்பட, நிலைமை தலைகீழாகிறது. மமாவுடனான ஆயிஷாவின் பிணைப்பு இளக, அவள் கேரளா திரும்புகிறாள். அடுத்து, ஆயிஷாவின் வாழ்க்கைப் பயணம் எப்படிச் செல்கிறது என்பதுதான், ஆஷிப் கக்கோடி அழகான திரைக்கதை எழுதி, அமீர் பள்ளிக்கல் அருமையாக இயக்கி, அரபிக் மற்றும் மலையாள மொழிகளில் தயாரிக்கப்பட்டு, அமேசான் பிரைம் வீடியோவில், ஆங்கிலத் திரை வசனங்களுடன் வெளியாகி உள்ள ‘ஆயிஷா’ திரைப்படத்தின் மீதிக் கதை.




ஆயிஷாவாக மஞ்சு வாரியார், உழைப்பாளர்களைச் சுரண்டும் இடங்களில் எல்லாம் சீற்றம் கொள்ளும்போதும், “நான் எவ்வளவு அதிகாரம் மிக்கவன்னு உனக்குத் தெரியாது” என்று சொல்லும் சாராவிடம், “சாரா, என்னைப் பத்தி உனக்குத் தெரியாது. என்னோட விளையாடாத; உன்னோட விளையாட்டை நீயே நிறுத்திக்கோ. அதுதான் உனக்கு நல்லது” என்று புன்முறுவலுடன் சொல்லும்போதும், மமாவின் முதல் சந்திப்பில் நிகழும் சிறுசிறு தவறுகளை அதற்கடுத்த முறை சரி செய்துகொள்வதும் அவர்களுக்கு இணைப்பு இறுகவும் விலகவுமான நிகழ்வுகளின்போதும் முந்தைய வாழ்க்கை நினைவுகளில் லயிக்கும்போதும் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். நடனக் காட்சிகளிலும் கவர்கிறார்.
ஆயிஷா பாத்திரத்திற்கு இணையான மமா பாத்திரத்தில் மோனா டவில், அதியற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளார். செல்வந்தர் வீட்டில், குடும்பத் தலைவியாகக் காட்டும் கண்டிப்பும் பணக்கார மிடுக்கும் தோரணையும் ஆயிஷாவிடம் காட்டும் அன்பும் அவளிடம் தன் சொந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளும் பாங்கும் அவளைச் சொந்த ஊருக்கு அனுப்பச் செய்யும் நாடகமும் பிரிவை ஜீரணிக்க முடியாத தவிப்பும் திரும்பப் பார்த்ததும் பெறும் உற்சாகமும் மன வலியும் உடல் வலியும் ஒரு சேர அழுத்த அவற்றின் வெளிப்பாடாய் முகப் பிரதிபலிப்பும் காதல் கணவர் நாசருடன் சென்ற அனுபவங்களை, அந்த இடங்களுக்கெல்லாம் விரும்பியவாறு பயணிக்க அவரது உடல்நிலை இடம் தராத நிலையில், அந்த நினைவுகளை ஆயிஷா நாடக வடிவில் உருவகித்ததைக் காணும்போதான நெகிழ்வும் என நடிப்பில் அற்புதங்கள் செய்கிறார்.




நிஷா (ராதிகா), அபித் (எஸ் வி கிருஷ்ண சங்கர்), சாரா (லத்தீஃபா), ஹார்வா (சல்மா), அப்துல்லா (இஸ்லாம் அப்துல் கவாத்), அகீஃப் (பாரா அல் நிஜாமீ), ஹம்சா (சம்சுதீன்), நர்ஸ் மெரினா குரியன் (மினி அல்போன்ஸ்) போன்ற துணைப் பாத்திரங்களும் சோடை போகவில்லை.
அரபு நாடுகளுக்கு வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் பல விதங்களில் அவமரியாதையும் கொடுமையும் படுத்தப்படுவதாகத்தான் செய்திகளும் ஏன், படங்களும்கூட வந்திருக்கின்றன. இந்தப் படம் அவற்றையெல்லாம் மறுதலிக்கும் விதத்தில் உள்ளதே என்கிற சிந்தனைக்கு, “எந்த வீட்டுக்கு நாம அனுப்பப்படறோமோ அதப் பொருத்து நம்ம நெலம அமையும்” என்று வீட்டு வேலைக்கு ரியாத்திற்கு வரும் பெண்மணிகளில் ஒருவர் ஆயிஷாவிடம் சொல்வதில் விடை கிடைத்துவிடுகிறது.
“பெண்கள மதிக்கறவங்கதான் அரேபியர்கள்”
“வீட்டுக்கு வந்த விருந்தினர்ங்க மூனு நாள் தங்க இடமும் விருந்தும் கொடுத்ததுக்கு அப்புறம்கூட, எதுக்கு வந்தீங்கன்னு கேட்காததுதான் அரேபியாவோட பாரம்பரியம்” என்று நிமிஷா, ஆயிஷாவிடம் சொல்வதும் அதற்கு வலு சேர்க்கிறது.
“மமாவோட நினைவு மங்கி வருது. பழசுதான் ஞாபகம் இருக்கு. ஆனா அவங்க மறந்துபோன பட்டியல்ல ஆயிஷா பேர் இல்ல” (சாரா)
“எவரெஸ்ட் மலைய தாண்டறதவிடக் கஷ்டம் மனுஷங்களோட மனச ஜெயிக்கிறது, இல்ல?” (நிமிஷா)
போன்ற வசனங்களும் ஆயிஷா மமா இடையிலான உரையாடல்களும் நயம்.




இயற்கை அழகு கொஞ்சும் கேரளாவையும் பரந்த பாலைவனத்தில் ஆங்காங்கே பிரமிக்க வைக்கும் அரண்மனை வீடுகளையும் ஒருங்கே அழகுற வழங்கிய ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மாவின் திறன் பாராட்டுக்குரியது. கதைக் களத்தோடு இயைந்த பின்னணி இசையையும் பாடல்களுக்கான துள்ளலான இசையையும் அற்புதமாக வழங்கி உள்ளார், எம் ஜெயச்சந்திரன். படத்தொகுப்பைப் பழுதில்லாமல் செய்துள்ளார், அப்பு என் பட்டாத்திரி.
இடதுசாரி இயக்கங்களோடு பணியாற்றி, இஸ்லாமியப் பெண்ணாக இருந்தாலும் சமூகத் தடைகளைத் தாண்டி, கருத்தியலைப் பிரதிபலிக்கும் நாடகங்களில் நடித்ததால், எதிர்ப்புகளையும் கல்லடிகளையும் ஏன், துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொண்டு துணிவுடன் நடித்து, ஒரு கட்டத்தில் அரபு நாட்டிற்குப் பணிப் பெண்ணாகச் சென்று திரும்பிய நிலாம்பூர் ஆயிஷாவின் சுய வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் ‘ஆயிஷா’.
திரைப்படத்தில், அவர் நாடகக் கலைஞராக இருந்த வாழ்க்கை சுருங்கிப் போயிருந்தாலும், சவுதி அரேபியாவில் பணிப் பெண்ணாக வாழ்ந்த காலம் விரிவாகவும் அவருக்கும் மமாவுக்கு இடையிலான பாசத்தின் பரிமாணத்தை மிகவும் அழகாகவும் நயமாகவும் சொல்லப்பட்டதற்காகவும் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கத்தக்க வகையில் ‘ஆயிஷா’ திரைப்படத்தை வழங்கியதற்காகவும் இயக்குநர் ஆமீர் பள்ளிக்கல் பாராட்டுக்குரியவர்.
மதிப்பெண் : 7/10
- மது ராஜேந்திரன்

Comments (0)