திரு தாய் அவளே…
இலக்கியங்களில் எத்தனையோ தமிழ்ச் சமூகங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஆனால் மனித சமூகங்களின் ஆண் பெண் எனும் இரு பிரிவுகளிலும் சேராமல் வாழ்ந்து வருகின்ற திருநங்கைகளுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் “திரு தாய் அவளே…” எனும் குறும்படம் அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது.
போராட்டமே வாழ்க்கையெனப் பயணிக்கும் திருநங்கைகளுக்கு எதிரான கௌரவக் கொலைகளும், பாலியல் வன்முறைகளும் நிகழ்ந்து வந்தாலும் சமகால வாழ்வியலில் இவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும், உணர்வுகளின் அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் சிறப்பாகப் பேசுகிறது இந்தக் குறும்படம். தற்போதைய சூழலில் தங்களுக்கென ஒரு அங்கீகாரம் வேண்டும் எனக் கடுமையாகப் போராடி வரும் இவர்களின் வாழ்விலும் தற்போதைய சூழலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. பல்வேறு ஊர்கள், சின்னஞ்சிறு அறைகள்; வாடைகைக்குக்கூட எளிதில் கிட்டாத வீடுகள், தன் மனதுக்குப் பிடித்த குடும்பம் அமையுமா? என்ற ஏக்கம் என எப்போதும் மன அழுத்தத்துடனே வாழும் வாழ்வு அவர்களுடையது.
மக்கள் மத்தியில் நிலவி வந்த தவறான கண்ணோட்டத்தை உடைத்தெறிந்து, தங்களாலும் இந்தச் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று இவர்கள் சமீப காலமாக நிரூபித்து வருகிறார்கள். வனங்களில் சுற்றித் திரியும் பறவைகள் கூட இளைப்பாறும் வேளையில், மனிதராகப் பிறப்பெடுத்த திருநங்கைகளின் எண்ண ஓட்டங்களுக்கு ஓய்வே இல்லை என்றே கூறலாம். அதன் காரணமாக, தற்போதைய சமூகத்தின் செவிலியர், அழகுக் கலை நிபுணர், காவல்துறை ஆய்வாளர் என பல தடைகளை தாண்டி தங்களுக்கென்று தனி அடையாளத்தைப் பதித்து வரும் இவர்கள் நிலவொளியில் உருவான கிறுக்கல்கள் என்றால் மிகையாகாது.

பொது இடங்களில் திருநங்கைகள் இழிவாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. இக் குறும்படத்தின் முதல் காட்சியில் குழந்தை ஒன்று காணமல் போய்விட, அதன் பெற்றோர் மற்றும் நண்பர்கள் தெருத்தெருவாக தேடி வருகின்றனர். ஓரிடத்தில் அந்தக் குழந்தையைக் காணும் படத்தின் நாயகி ஜீவா சுப்ரமணியம், அந்தப் பெண் குழந்தையுடன் விளையாடுவது போன்று கதை துவங்குகிறது.
அங்கும் இங்குமாகக் குழந்தையைத் தேடும் பெற்றோர், தங்கள் குழந்தை திருநங்கையுடன் விளையாடுவதைக் காண்கிறார்கள். அதனைக் கண்ட குழந்தையின் தாய் “உங்களுக்கெல்லாம் கைதட்டிக் காசு வாங்கத்தான் தெரியும், குழந்தையைப் பெத்து வளர்த்திருந்தால்தானே ஒரு தாயின் வலி தெரியும்” என்று கோபமாகப் பேச, அந்தப் பெண்ணிடம் இருந்து வெளிப்படும் பாலின வெறுப்பு வார்த்தைகளால் கலங்கிப் போகிறார் நாயகி.

தனக்குச் சம்பந்தமில்லாத ஒரு குழந்தைக்காக வசவுகள் வாங்கியது எண்ணி மனம் நொந்து அந்த இடத்தை விட்டு நகர்கிறாள் ஜீவா.
அன்று இரவு முழுவதும் உறக்கமின்றி தவிக்கும் அவள் மறுநாள் டாக்டரிடம் சென்று தனக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக உள்ளதாகக் கூறுகிறார்.
டாக்டர் மட்டுமல்ல, பார்க்கும் நமக்கும் இது அதிர்ச்சியையும் இது சாத்தியமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. திருநங்கைகளின் வாழ்வியலில் நமது சமூகம் இதுவரை சந்திக்காத மறுபக்கங்களை மையப்படுத்துகிறது இதன் தொடர்ச்சி.
தாய்மை எனும் தகுதியைப் பெறத் துடிக்கும் ஒரு திருநங்கையின் உணர்வை மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளது இந்தக் குறும்படம். தனக்கு தானே சீமந்தம் செய்து கொள்ளும் காட்சியில் ஜீவாவின் நடிப்பு நமது கண்களைக் குளமாக்குகிறது.
தாய்மை என்பது பெண்களுக்கான தனித்துவ மான அடையாளம் என்பதை இந்தக் குறும்படம் மூலமாக உணர்த்தியுள்ளார் இதன் இயக்குநர் பிரவீன் குமார். வாடகைத் தாயாக பரிணாமம் பெறும் ஜீவாவின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
சிவகாசியைச் சேர்ந்த ஜீவா சுப்பிரமணியன் திருநங்கைகள் எதிர் கொள்ளும் கேலி கிண்டல்களை எதிர்கொண்டு வளர்ந்தவர். முன்னதாக கவண், தர்மதுரை, அயிரா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
படத்தின் இசை பல இடங்களில் படத்திற்கு ஒவ்வாத சூழலை உண்டாக்கினாலும், நாயகியின் நளினம் இந்தக் குறையை நிவர்த்தி செய்து விடுகிறது. ஒளிப்பதிவு அருமை என்று தான் கூற வேண்டும். வெளியிடப்பட்டதில் இருந்து சுமார் 31 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ள இந்தக் குறும்படம், தேசிய அளவில் 23 விருதுகளை வென்றுள்ளது.
ஒட்டுமொத்த சமூகத்தாலும் ஒரு காலத்தில் ஓரங்கட்டி வைக்கப்பட்ட திருநங்கைகள் இன்று தங்களது தனியாத உணர்வுகள் வரிசையில் முதலிடத்தில் உள்ள தாய்மை உணர்வை அடையமுடியும் என்பதை இந்த வாடகைத்தாய் முறையை வெளிப்படுத்துவதன்மூலம் சமூகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முயலும் “திரு தாய் அவளே” குறும்படம், எதிர்காலக் குறும்பட இயக்குனர்களுக்கு ஒரு ஆவணக் காப்பகம் என்று தான் கூற வேண்டும்.
Comments (0)