யாழ்
பீரியட் படம் எடுப்பதில் உள்ள சவால், வரலாறு தெரியாதவர் களுக்கும், வரலாற்றை உணர்த் துமாறு எடுக்க வேண்டியிருப்பது தான்! ஆஸ்திரேலியாவில் சினிமா பயின்று, தமிழகம் வந்து, ஈழப் பின்னணியில், கதை திரைக்கதை வசனம் எழுதி, எம் எஸ் ஆனந்த் இயக்கி, தயாரித்து, நேரடியாக யூட்யூபில் வெளியாகியுள்ள படம் தான், யாழ் ! காதல், நேசம், பாசம், அன்பு ஆகிய உணர்வுகளின் அடிப்படையில் இயங்கும் பல்வேறு மாந்தர்கள், அவர்களின் நியாயமான விருப்பங்களின்படி வாழ இயலாத நிலையை, அவர்களது வாழ்வின் நிச்சயமின்மையை, ஈழத்தில் நிகழ்ந்த ஆகக் கொடுமையான இனவழிப்பு நிகழ்வுக்கு ஓராண்டிற்கு முந்தைய காலக்கட்டத்தின் பின்னணியில், இந்தப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களின் வலியை, முழுவதுமாக இல்லையென்றாலும், ஓரளவு அழுத்தமாக யாழ் திரைப்படம் புலப்படுத்தவே செய்துள்ளது. எல்லாளன் காலம் (திமு130)துவங்கி, பல்லா யிரம் ஆண்டுகளாக, பண்பாடுகளை, சைவசித்த வேதாந்தங் களை, யாழ் இசை மூலமாக ஈழத் தமிழர்களான பாணர் கள், அந்தக் காலத்தில் உலகம் எங்கும் பரப்பி வந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு யாழ்ப்பாணம் என்கிற பெயர் வந்தது. ஆனால், காலப்போக்கில் யாழும், பாணர்களும் மறைந்து போனார்கள். இருப்பினும், அவர்களின் வாரிசுகள், இன்றும் உலகமெங்கும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மீண்டும் யாழை மலரச் செய்யும் முயற்சியில் ஒரு சிலர்… என்று ஆதி வரலாற்றைச் சொல்லி கதை துவங்குகிறது ! சுதன் (வினோத் கிஷன்) நிலா (லீமா பாபு) காதல், அம்மாவை பிரிந்த சிறுமி அமுதினி (ரக்சனா), யாழினி (மிஷா கோஷல்) சசி (சசிகுமார் சுப்ரமணி) வாழ்க்கைப் போராட்டம், சிங்கள காவல்துறை அதிகாரி (டேனியல் பாலாஜி) மனப்போராட்டம், கைக்குழந்தையுடன் சந்தேகத்தின் பேரில் அவனிடம் சிக்கித் தவிக்கும் செல்வி (நீலிமா அசிம்) என அனை வருமே தத்தம் பாத்திரத்தை குறைவில்லாமல் செய்துள்ளனர். தாயும் சிறுமியும் பிரியக் காரணமான நிகழ்வு, அத்துணை வலுவுள்ளதாக அமையப் பெறவில்லை. அதே சமயம், அருகில் விழுந்த குண்டுச் சத்தத்தால், காதில் குருதி வடிய, செவித்திறன் அற்றுப் போன சிறுமியின் சோகம், மனதைப் பிசைய செய்து விடுகிறது! பாடல் காட்சிகளில், பாடல்களின் வரிகளா கட்டும், பின்னணி குரல்களாகட்டும், படமாக்கிய விதமாகட்டும், பங்குகொண்ட கலைஞர்களின் முகபாவங்களாகட்டும், அனைத்துமே அருமை! என்.எஸ்.அருணகிரியின் இசையும்,எல்.வி.கே. தாஸ் படத்தொகுப்பும் பாராட்டுக் குரியவை! ஆதி கருப்பையா ஒளிப்பதிவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இதைத் தாண்டி, இனரீதியான அடக்கு முறைகளை சந்திக்க வேண்டி வந்த நிலை யையும், நியாயமான கோரிக்கைகள் செவி சாய்க்காத நிலையில், ஜனநாயக ரீதியான போராட்டங்கள் பொய்த்த பின், ஆயுதமேந்திய நிலைக்கு ஈழ இளைய தலைமுறை தள்ளப்பட்ட வரலாற்றையும், கதைமாந்தர்கள் வழியே சற்று புலப்படுத்தி இருந்தால், ஒரு முழுமை பெற்ற ஈழப் பின்னணியைக் கொண்ட வரலாற்றுச் சித்திரமாக பரிமளித்திருந்திருக்கும் ! இது தவறிய நிலையில், கண்ணிவெடிகள் புதைப்பை ஒரு பொருளாக்கி, அதைச் செய்தது சிங்கள ராணுவமா, விடுதலைப்புலிகளா என்பதில் தெளிவில்லாத, காரணம் புரிபடாத தோற்றத்தை ஏற்படுத்தியதை தவிர்த்திருக்கலாம்! இந்த கொரோனா நோயின் கொடுமையையும், ஊரடங்கு காரணமாக இயல்பான வாழ்க்கை யற்று, வீட்டினுள்ளே உள்ளடங்கி இருக்கும் வேதனையையும், உணர்ந்துள்ள நம்மால், ஈழத்தமிழர்களின் முடங்கிப்போன வேதனை யான வாழ்க்கையை ஓரளவுக்கேனும் உணர்ந்து கொள்ள, யாழ் படத்தை அவசியம் பாருங்கள்!