கு. அழகிரிசாமியின் குழந்தைகள் உலகம் ஜூலை 5, கு. அழகிரிசாமி நினைவு நாள் சிறப்புக் கட்டுரை “உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய அன்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள்“. குழந்தைகள் உலகை, தமிழிலக்கியத்தில் புனைவுகளாக நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், வண்ணதாசன், பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன், கோணங்கி, ஜெயமோகன், கி.ராஜநாரயணன், எஸ்.ராமகிருஷ்ணன், என்று குழந்தைகளை மையப்படுத்திய கதைகளை எழுதி சாதனை செய்திருக்கிறார்கள். குழந்தைகளின் உளவியல், இயல்புகளைப் பற்றிப் பெரியவர்கள் புரிந்து கொள்கிற கதைகளாக அவை வெளிப்பாடடைந்திருக்கின்றன. சிறார் இலக்கியத்தின் முக்கியமான மூன்று வகைமைகளாக, குழந்தைகள் வாசிப்பதற்காக பெரியவர்கள் எழுதும் இலக்கியம், குழந்தைகளே எழுதுகிற இலக்கியம், குழந்தைகளைப் புரிந்து கொள்வதற்காகப் பெரியவர்கள் எழுதுகிற இலக்கியம் என்று சொல்கிறார்கள் சிறார் இலக்கிய ஆய்வாளர்கள். அதில் குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் எழுதியுள்ள ஏராளமான கதைகளில் கு.அழகிரிசாமியின் கதைகளான ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, தெய்வம் பிறந்தது, போன்ற கதைகள் உச்சத்தைத் தொடுகின்றன. கு. அழகிரிசாமியின் எளிமையான கலை வெளிப்பாடு குழந்தைகளின் எளிமையான உலகத்துடன் மிகச் சரியாகப் பொருந்தி அந்தக் கதைகளை கலையின் பூரணத்துவத்துக்கு அருகில் கொண்டு போய் விடுகிறது. கு.அழகிரிசாமியின் தனித்துவமான வெளிப்பாடு என்று எதைச் சொல்லலாமென்றால், அன்றாட வாழ்க்கையின் அன்றாடக் காட்சிகளிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்கிறார். அதில் தன் கருத்தைத் திணிக்காமல் அதே நேரம் அந்தக் காட்சியில் தன் கருத்துக்கு ஏற்ற இயல்பை, வண்ணத்தீற்றலை அல்லது கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து வளர்த்தெடுக்கிறார். குழந்தைகள் வரையும் ஓவியம் போல அவ்வளவு இயற்கையாக இருக்கிறது. முதலில் அதன் எளிமை நம்மை ஏமாற்றி விடுகிறது. ஆனால், உற்று நோக்க நோக்க, அந்த ஓவியத்தின் அழகும் ஆழமும் கடலென விரிவு கொள்கிறது. அதை உணர்ந்துகொள்ளும்போது வாசகன் திடீரென, தான் ஒரு பெருங்கடலுக்கு நடுவே நிற்பதை உணர்வான். தன்னைச்சுற்றி வண்ணவண்ண முத்துகள் கீழே கொட்டிக் கிடப்பதைப் பார்ப்பான். ஒரு ஒளி, வாழ்க்கை மீது ஊடுருவி பேருணர்வின் தரிசனத்தைக் கொடுக்கும். அதுவரை கெட்டிதட்டிப் போயிருந்த மானுட உணர்வுகளின் ஊற்றுக்கண் உடைந்து உணர்ச்சிகள் பெருகும். விம்மலுடன் கூடிய பெருமூச்சு எழுந்து வரும். கண்களில் ஈரம் பொங்கும். தன்னையும் அந்தச் சித்திரத்துக்குள் ஒரு கதாபாத்திரமாக உணரவைக்கும். அப்போதுதான் வாசகன் கு.அழகிரிசாமியெனும் மகாகலைஞனின் மானுட அன்பை உணர்வான். அவருடைய கலைக்கோட்பாட்டை உணர்வான். அவருடைய கலை விதிகளைத் தெரிந்து கொள்வான். அவருடைய அரசியலை புரிந்து கொள்வான். அந்தச் சித்திரம் வாசக மனதில் அவர் ஏற்படுத்த நினைக்கும் தாக்கத்தைத் துல்லியமாக ஏற்படுத்தியதை உணர்ந்து கொள்வான். கு.அழகிரிசாமியின் கதைகளில் பெரிய தத்துவ விசாரமோ, ஆன்மீக விசாரமோ செய்வதில்லை. ஆனால் அப்படியொரு வாய்ப்பு அந்தக் கதைகளுக்குள் வருமென்றால், அதை ஒதுக்கித் தள்ளுவதுமில்லை. பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல வாசிப்பு இருந்தாலும், ஏராளமான கவிதைகளை எழுதியிருந்தாலும் கதைகளில் எளிய மொழியையே கையாண்டார். இதழியல் துறையில் வேலை பார்த்ததாலோ என்னவோ, யாருக்கு எழுதுகிறோம் என்ற போதம் இருந்தது. தமிழ்ச் சிறுகதைகளின் வரலாற்றில் பல உச்சங்களைத் தொட்டிருந்தார் கு.அழகிரிசாமி. குறிப்பாக, குழந்தைகளை மையமாக வைத்து அவர் எழுதிய, ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, என்ற நான்கு கதைகளிலும் குழந்தைகளின் அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, அறியாமையை, குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதியிருப்பதை வாசிக்கும் போது உணரமுடியும். ஒருவகையில், ராஜா வந்திருக்கிறார் கதை, கு.அழகிரிசாமியின் மையம் என்று கூடச் சொல்லலாம். அவர் இந்த வாழ்க்கையின் அவலத்தை, எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், துன்பதுயரங்கள் வந்தாலும் தாயம்மாளைப் போலத் தாங்கிக் கொள்ளவும் மங்கம்மாளைப் போல நம்பிக்கையுடன் கடந்து செல்லவும், தான் வாழும் வாழ்க்கையை வம்புக்கிழுக்கவும், அதில் வெற்றி பெறவும் முடியும் என்பதைச் சொல்கிற மிக முக்கியமான மானுட அரசியல் கதை. இந்த ஒரு கதைக்காகவே கு.அழகிரிசாமி உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டிய எழுத்தாளராகிறார். 1950–ல் சக்தி இதழில் வெளியான ராஜா வந்திருக்கிறார் கதையின் தொடக்கமே, மங்கம்மாளின் குழந்தைகளின் போட்டி விளையாட்டுடன்தான் தொடங்குகிறது. சிறுகுழந்தைகள் அணிந்திருக்கும் சட்டையில் தொடங்கும்போதே, இரண்டு வர்க்கங்களை அறிமுகப்படுத்தி விடுகிறார் கு.அழகிரிசாமி. மங்கம்மாளும் அவளுடைய மூத்த சகோதரர்களான செல்லையாவும் தம்பையாவும் ஏழ்மையில் உழலும் குடும்பம் என்பதும், அந்த ஊரிலேயே பெரியதனக்காரரின் மகனான ராமசாமி சில்க் சட்டை போடுகிற, ஆறு பசுக்களை வைத்திருக்கிற வசதியான குடும்பத்தினர் என்பதும் தெரிந்து விடுகிறது. புத்தகத்தில் பதிலுக்குப் பதில் படம் காண்பிக்கும் விளையாட்டிலிருந்து என் வீட்டில் ஆறு பசு இருக்கிறது, உன்வீட்டில் இருக்கிறதா? என்று வளர்ந்து, பதில் பேச முடியாத ராமசாமியை மங்கம்மாளும், செல்லையாவும், தம்பையாவும், சேர்ந்து தோத்தோ நாயே என்று கேலி செய்வதில் முடிகிறது. இரண்டு குடும்பத்தினரும் வெவ்வேறு சாதியினர் என்பதை, கோழி அடித்துத் தின்பதைப் பற்றிக் கேலியாக ராமசாமி சொல்வதன் மூலம் காட்டி விடுகிறார். செல்லையாவையும் தம்பையாவையும் விட, மங்கம்மாளே துடிப்பான குழந்தையாக அறிமுகமாகிறாள். ராமசாமியின் வீட்டு வேலைக்கராரால் விரட்டப்பட்டு குடிசைக்கு வரும் குழந்தைகளில், மங்கம்மாள் அவளுடைய தாயாரான தாயம்மாளிடம், ‘ஐயா வந்து விட்டாரா?’ என்று கேட்பதிலிருந்து வேறொரு உலகம் கண்முன்னே விரிகிறது. எங்கோ தொலைதூரத்தில் வேலை பார்த்து, அரைவயிறும் கால்வயிறுமாகக் கஞ்சி குடித்து, எப்படியோ மிச்சப்பட்ட காசில் தீபாவளிக்கு குழந்தைகளுக்கு மல் துணியில் இரண்டு பனியன்களும், இரண்டு டவுசர்களும், ஒரு பாவாடையும், பச்சைநிறச் சட்டையும், ஒரு ஈரிழைத் துண்டும் இருக்கின்றன. அம்மாவுக்குத் துணியில்லை. அப்பாவுக்கு அந்தத் துண்டை வைத்துக்கொள்ளலாம் என்று அம்மா சொல்கிறார். ‘அம்மாவுக்கு இல்லாத துணி அப்பாவுக்கு எதுக்கு?’ என்று மங்கம்மாள் கேட்கிறாள். இருட்டில் அவர்கள் குடிசைக்குப் பின்னாலிருந்த வாழை மரத்துக்குக் கீழே ஒரு சிறுவன் எச்சில் இலையை வழித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவனை அழைத்து விவரம் கேட்கிறார் தாயம்மாள். அப்பா, அம்மா இல்லாத, அநாதையான, சிரங்கும் பொடுகும் நாற்றமும் எடுக்கும், தன் அரையில் கோவணம் மட்டுமே கட்டியிருந்த அந்தச் சிறுவனுக்குக் கூழு கொடுத்து, தன் குழந்தைகளோடு படுக்க வைக்கிறாள். இரவில் பெய்யும் மழைக்கூதலுக்கு, தான் மறுநாள் தீபாவளியன்று உடுத்தலாம் என்று எடுத்து வைத்திருந்த பீத்தல் புடவையை எல்லாருக்குமாகப் போர்த்தி விடுகிறார். மறுநாள் விடிகாலையிலேயே குழந்தைகளை எழுப்பி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விடுகிறார். ராஜா என்ற அந்தச் சிறுவனுக்கும் எண்ணெய் தேய்த்து, சீயக்காய் பொடி போட்டு பக்குவமாகக் குளிப்பாட்டி விடுகிறார். குளிக்கும்போது சிரங்குப்புண்களால் ஏற்பட்ட வேதனையினால் ராஜா அழும்போது, ‘சரியாயிரும் சரியாயிரும்.. புண் ஆறிரும்’ என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். அந்தப் பகுதியை வாசிக்கும்போது மனம் இளகாமல் இருக்கமுடியாது. பரிவின் சிகரத்தில் தாயம்மாளைப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி. மற்ற குழந்தைகள் புதுத்துணி உடுத்தும்போது, ‘ராஜாவுக்கு என்ன செய்ய?’ என்று தாயம்மாள் குழம்பி நிற்கும்போது, மங்கம்மாள்தான் அப்பாவுக்கென்று வைத்திருந்த அந்த ஈரிழைத்துண்டைக் கொடுக்கச் சொல்கிறாள். அவள் சொன்னதும் தயக்கமில்லாமல் அந்தத் துண்டை எடுத்து ராஜாவுக்குக் கட்டி விடுகிறாள். ஒரு வகையில் தாயம்மாளையும் மங்கம்மாளையும் ஒரே உருவின் இரண்டு பிறவிகளாகப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி என்று சொல்லலாம். புதுத்துணி உடுத்திய குழந்தைகள் தெருவுக்கு வரும்போது, பெரிய வீட்டு ராமசாமி வருகிறான். அவனுடைய அக்காவைத் திருமணம் முடித்த ஜமீன் ராஜா அவர்களுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார் என்பதை,“எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்..” என்று சொல்லும்போது, மங்கம்மாள் பழைய பள்ளிக்கூடப் போட்டியை நினைத்துக் கொண்டு,“ ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கிறார்…? எங்க வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கிறான்.. வேணும்னா வந்து பாரு..”என்று சொல்வதோடு கதை முடிகிறது. இந்த வரிகளை வாசிக்கும்போது கண்ணில் நீர் துளிர்க்கிறது. இந்தக் கதையை வாசிக்க வாசிக்க, வாசக மனதில் பேரன்பு ஒன்று சுரந்து பெருகி இந்த மனிதர்களை, உலகத்தை, பிரபஞ்சத்தை, அப்படியே சேர்த்தணைப்பதை உணரமுடியும். எளியவர்களின் மனவுலகை, அவர்கள் இந்த வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையை, இதைவிடச் சிறப்பாக யாரும் சொல்லவில்லை. எல்லாவிதமான இல்லாமைகளுக்கும் போதாமைகளுக்கும் நடுவில் தாயம்மாளிடம் அன்புக்குக் குறைவில்லை. தாய்மையுணர்வு குறையவில்லை. பொங்கித் ததும்பும் இந்த அன்பின் சாயலையே குமாரபுரம் ஸ்டேஷன் கதையிலும் வரைந்திருப்பார். முன்பின் தெரியாதவர்களிடம் ஏற்படும் உறவுகளின் தார்மீக நேசத்தைச் சொல்லியிருப்பார். கு.அழகிரிசாமி ‘ராஜா வந்திருக்கிறார்’ கதையில், தன்னுடைய அம்மாவுக்குக் கோயில் கட்டியிருப்பதாக கி.ரா. சொல்லியிருந்தார். உண்மையில் ஒரு இந்திய கிராமத்தின் ஆத்மாவினைத் தொட்டுக் காட்டுகிற கதையாக ராஜா வந்திருக்கிறார் கதையைச் சொல்லலாம். தமிழ்ச் சிறுகதைச் சிகரங்களில் ஒன்று ராஜா வந்திருக்கிறார். வாழ்வின் எந்தக் கட்டத்திலாவது புறக்கணிப்பின் துயரை அனுபவிக்காதவர்கள் இருக்கமுடியாது. அந்தத் துயரே அவர்களை வாழ்க்கை முழுவதும் வேட்டையாடிக் கொன்று தீர்த்துவிடும். நிராகரிப்பின் கொடுக்குகளால் கொட்டப்பட்ட ஒருவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் எவ்வளவு கசப்பானதாக இருக்குமென்பது அதை அனுபவித்தவர்கள் உணர்வார்கள். ஆனால், குழந்தைகள் தங்களுக்கு நேர்கிற புறக்கணிப்பை எப்படி அவர்கள் வழியிலேயே ஈடுகட்டி மகிழ்கிறார்கள் என்பதை நேர்த்தியாகச் சொல்கிற கதை அன்பளிப்பு. கதையின் ஒவ்வொரு கணமும் நம்முடைய வாழ்வில் நாம் அனுபவித்த, நாம் பங்கேற்ற கணமாகவே இருப்பதை வாசிக்கும்போது உணரலாம். கதையின் இறுதிக்காட்சியில் நம்மை அறியாமல் நாம் மூச்சு விடக்கூட மறந்து போவோம். அந்தக் கடைசி வரியில் புறக்கணிப்பின் துயர் மொத்தமாக நம்மீது மிகப்பெரிய பளுவாக இறங்கி நசுக்குவதை உணர்ந்து கொள்ளமுடியும். ஒரு புதிய பாதை, ஒரு புதிய வெளிச்சம் நம் கண்ணுக்கு முன்னால் தெரியும். நமக்கு அழுகை வரும்; சிரிப்பும் வரும். நாம் அழுதுகொண்டே சிரிக்கவோ, சிரித்துக்கொண்டே அழவோ செய்வோம். இதுதான் கு.அழகிரிசாமி நம்மிடம் ஏற்படுத்துகிற மாயம். மிகச்சாதாரணமாக ஆரம்பிக்கிற கதை, எப்படி இப்படியொரு மனித அடிப்படை உணர்வுகளில் ஊடாடி நம்மை அசைக்கிறது, வாழ்க்கை குறித்த மகத்தான ஞானத்தை நம்மிடம் ஏற்படுத்துகிறது என்பதுதான் கலை. மகத்தான கலை எளிமையாகவே இருக்கிறது. அந்தக் கலை ஏற்படுத்தும் உணர்வு, மானுடம் முழுவதற்கும் பொதுமையானது. அன்பளிப்பு கதை அந்த உணர்வை அளிக்கும் அற்புதத்தைச் செய்கிறது. பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் கதாநாயகன், பக்கத்து வீடுகளிலிருக்கும் குழந்தைகளோடு மிக அன்னியோன்யமான பாசத்தையும் நேசத்தையும் கொண்டிருக்கிறான்.