அறம் காக்கும் விருந்தோம்பல் தூதுவர்கள்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

தனக்கு கிடைத்த பொருட்களைப் பகிர்ந்து கொடுத்து, தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும் என்கிறது வள்ளுவரின் வாக்கு.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவத் தொடங்கியபோது, ஒருபுறம் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் மூடப்பட்டுவிட, மனித சக்திக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை என்று  கிட்டத்தட்ட 90 நாட்களுக்கும் மேலாக இரவு பகல் உறக்கம் இன்றி பம்பரமாகச் சுழன்று வருகின்றனர் சென்னையின் சமூக ஆர்வலர்கள் சிலர். அவர்களில் சிலருடன் உரையாடினோம். 

லயோலா மணி:-

“கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப் பட்ட முதல் நாளிலிருந்து சென்னை யின் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் பொருளாதாரம் சார்ந்த உதவிகளை செய்து வருகின்றேன். ஒருநாள் சாலையோர மக்களுக்கு உணவு கொடுத்து விட்டுத்  திரும்பி வரும் வழியில் பல்லவன் இல்லம் அருகில் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோவிலுக்கு முன்னதாக உள்ள மேம்பாலத்தின் சுவற்றில் முதியவர் ஒருவர் பரிதாபமான நிலையில் நின்றிருந்தார். அவர் அருகில் சென்று “ஐயா, சாப்பாடு எதும் வேணுமா?”என்று கேட்டேன்.

ஒரு கணம் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர், திடீரென எனது காலில் விழுந்து விட்டார். ஒருகணம் திகைத்துப் போய்விட்டேன் நான்!

ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி என்னிடமிருந்த உணவுப் பொட்டலங்களைக் கொடுத்தபோது “கடந்த 3 நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை, தற்போது கூட பாலத்தில் இருந்து கீழே குதித்து இறந்து விடலாம் என்ற எண்ணத்தில்தான் இங்கே நின்றிருந்தேன். கடவுள் போல நீங்க வந்திருக்கிங்க” என்று அவர் சொன்னபோது எனது கண்கள் கலங்கி விட்டன. ஈரோட்டைச் சேர்ந்த அவர் அடையாறில் உள்ள ஒரு வீட்டில் தோட்டத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இரண்டு மகன்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிப் போனதால் தினசரி அவர்கள் தரும் தொல்லைகளைத் தாங்க முடியாமல் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு சென்னைக்கு வந்துவிட்டார். இவர் வேலை பார்த்து வந்த வீட்டு உரிமையாளர் தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட, கையில் காசு இல்லாத இவர் என்ன செய்வது என்று தெரியாமல் சென்ட்ரல் ரயில் நிலையத்தை மூன்று நாட்கள் சுற்றி வந்துள்ளார். மற்றவர்களிடம் உதவி கேட்கக் கூச்சப்பட்டு, தண்ணீரை மட்டுமே குடித்து வந்துள்ளார். தற்செயலாக அன்று நான் அவரைச் சந்தித்து அந்த உணவுப் பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தபின்னர், அன்று இரவு முழுவதும் உறக்கம் இன்றித் தவித்தேன்.

இது ஒரு உதாரணம் தான். கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரத்தை, பொருளா தாரத்தை இழந்த பலரைச் சந்தித்து வருகிறேன். இந்த நிலை மாறவேண்டும், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்” என்று கூறுகிறார் லயோலா மணி.

காக்கை மணிகண்டன்:-

“சென்னை J4 காவல்நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் கொத்தனார் அப்துல்லா. சுமார் 28 வயதுடைய இவரின் பூர்வீகம் கொல்கத்தா.  அவரை இங்கு வேலைக்கு அழைத்து வந்த முகவர், அவரின்  சம்பளப் பணத்தை எடுத்துக் கொண்டு சென்று விட, இரண்டு மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்காததால் வீட்டு உரிமையாளர் இவரை வெளியே அனுப்பி விட்டார்.  J4 காவல்நிலை யத்தின் ஆய்வாளர், நமது காக்கை அறக்கட்டளை யிடம் உதவி செய்யக் கேட்க நாமும் களத்தில் இறங்கி “நல்ல உணவு” அறக்கட்டளையின் தலைவர் வேதன் சிவக்குமார் அவர்களின் இல்லத்தில் தங்க வைத்துவிட்டு மீண்டும் திருவான்மியூர் நோக்கி பயணப்பட்டபோது, அந்த வட மாநில இளைஞர் அப்துல்லா ஓடி வந்து என்னை கட்டிப் பிடித்து தனது அன்பைப் பறிமாறியது இன்னமும் நினைவில் உள்ளது. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி 5 முறை அறுவைசிகிச்சை செய்து கொண்டவர். இவரது மகளுக்கும் கேன்சர். இவரது மகனோ விபத்தொன்றில் சிக்கி 2 கண்களிலும் பார்வையிழந்த பரிதாப நிலை. இவர்கள் சாப்பிட்டு 3 நாள்கள் ஆகின்றன என்று காக்கை அறக் கட்டளைக்கு அழைப்பு வர. அடுத்த 1 மணி நேரத்திற்குள் 2 மாதங்களுக்குத் தேவையான மளிகை மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கினோம். அவருக்கு ஸ்கேன் செய்ய வேண்டிய அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, எங்களது கையில் இருந்த கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டு வந்தோம். கடந்த 4 மாதங்களில் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, வருத்தம், சோகம் என அனைத் தையும் ஒருசேர நமக்குச் சொல்லி வருகிறது மக்களின் அன்றாட வாழ்க்கை” என்று தான் கண்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை விளக்குகிறார் மணிகண்டன்.

சுந்தரபாண்டியன் :-

“இராமநாதபுரத்திலிருந்து ஒரு பெண்ணும் அவர் கணவரும் கடந்த மார்ச் 21ம் தேதி சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மருக்கு  வந்துள்ளனர்.  ஊரடங்கில் சிக்கிய அவர்கள் இப்பொழுது விழுப்புரத்தில் இருக்கிறார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் விழுப்புரம் வரை வந்தவர்களுக்கு அதற்குமேல் பேருந்துப் பயணம் முடக்கப்பட்டதால், கடந்த மூன்று மாதங்களாக விழுப்புரம் பேருந்து நிலையம் அருகிலேயே தங்கி உள்ளனர்.  அவர்களிடம் விசாரித்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தது.

கடந்த இருபது நாள்களாக அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி வருகிறோம். 20 நாட்களுக்கும் மேலாக ஒரே சேலையை அணிந்து உள்ளதாகவும், மாற்றுத் துணியாக ஒரு நைட்டி வாங்கித்தர முடியுமா என அந்தப் பெண்மணி கேட்க, அங்கே இங்கே விசாரித்து, வீடு வீடாக துணிமணிகள் விற்கும் ஒருவரைக் கண்டறிந்து ஒரு நைட்டி வாங்கிக் கொடுத்தோம்.

இரவு வேலை முடித்துவிட்டு விழுப்புரம் சிக்னல் அருகேயுள்ள டீக்கடையில் நண்பர் களுடன் அரட்டையடிப்பது, புதிய பேருந்து நிலையம் வரை நடந்தே சென்று அங்கிருக்கும் ஆவின் கடையில் பாலும் பன்னும் சாப்பிடுவது, ரயில் நிலையம், மீன் மார்க்கெட் என விழுப்புரத்தில் பகலைவிட இரவில் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்திருக்கிறேன்.

மேற்சொன்ன எல்லா இடங்களிலும் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆங்காங்கு கண்ணில் படுவதுண்டு. அவர்களை அநேக நேரம் அவதானித்திருக்கிறேன். பசிக்கிது, ஏதாவது சாப்பிடக் குடு என்று வாயைத் திறந்து பசியுணர்வை வெளிப்படுத்த இயலாது டீக்கடையின் முன் நிற்பார்கள்.

அவர்களின் உணர்வைப் புரிந்து கொண்டு டீக்கடைக்காரரோ அல்லது அங்கிருக்கும் வாடிக்கையாளரோ தாமாக முன்வந்து அவர்களுக்கு ஏதாவது வழங்கினால்தான் உண்பார்கள். ஏதும் கிடைக்காத பட்சத்தில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாது அங்கிருந்து நகர்ந்து விடுவர். கண்ணில் படும் அனைவரிடமும் அவர்கள் கையேந்துவதில்லை. அவர்களுக்குப் பசிக்கும்போது கண் எதிரே யார் இருக்கிறார்களோ அவர்கள் முன் நிற்பார்கள். அவ்வளவே.

ஊரடங்கில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் யாரெனில் சாலையோர மனநலம் பாதிக்கப் பட்டவர்கள்தான். இதில் கொடுமை என் வெனில், எதனால் ஊரடங்கு? டீக்கடை ஏன் மூடியுள்ளது? டீக்கடைக்காரர் ஏன் வரவில்லை? மக்கள் நடமாட்டம் ஏன் குறைந்துள்ளது? என்பதை உணர இயலாத மனநிலையில் அவர்கள் இருப்பதுதான்.

இதுபோன்ற சூழலில் இவர்களைப் பாதுகாப்பது அரசின் கடமையல்லவா? என்று கேள்வியெழுப்பு பவர்களைப் பார்த்து ‘அடேய்! பைத்தியக்காரா’ என்றுதான் அழைக்கத் தோன்றுகிறது. இயல்பு வாழ்க்கையின்போதே சாலையோர மனிதர்கள் குறித்துக் கவலைப்படாத அரசு, ஊரடங்கிலா அக்கறை கொள்ளப் போகிறது?

பொது அமைதிக்கும், பொதுவெளியிலும் குந்தகம் விளைவிக்காமல் கிடைத்ததை உண்டு, கண்ணில் கண்டதையெல்லாம் பார்த்து, மகிழ்ந்து, சிரித்து தன் போக்கில் ஆனந்தமாய்த் திரியும் அவர்களை எனக்குப் பிடித்திருக்கிறது. அவர்களிடம் உரையாடுவது எனக்கு விருப்பமானதாக இருக்கிறது. அவர்களுக்கு என்னால் ஆன உதவிகளை எல்லா நேரத்திலும் செய்திருக்கிறேன். அதைத்தான் இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறேன்.

முதல் இரண்டு நாள்கள் தனிப்பட்ட முறையில் உணவளித்த எனக்கு அடுத்தடுத்த நாள்களில் உறுதுணையாக, உழைப்பையும் உதவியையும் சில நல்லுள்ளங்கள் தாமே முன்வந்து அளித்தனர். மனநலம் பாதிக்கப் பட்டோருக்கு உதவும் சூழல் என்னைத் தேடி வரும்போது, அதற்கு ஒத்துழைக்க நண்பர்களும் முன்வரும்போது அதைத் தட்டிக் கழிக்க விரும்பாமல் இதைத் தொடர்கிறேன்.

இந்த ஊரடங்கு சூழலில் நீங்கள் அத்தியாவசியத் தேவையை முன்னிட்டு வெளியே வரும்போது ஓரிரு பாட்டில்களில் நீரும், சிறிது உணவும், குறைந்தபட்சம் ஒரு பிஸ்கட் பாக்கெட்டாவது எடுத்து வந்து சாலையோர மனநலம் பாதிக்கப்பட்டோரின் அருகே வைத்து வாருங்கள். கசக்கி எறியப்பட்ட ஒரு மலரின் மனதுக்குள் புன்னகை பூக்கும். ஒரு ஞானியையொத்த அவர்களுடைய மனம் தேவைக்கு மேல் எதையும் விரும்பாது” என்று கூறுகிறார் திரு சுந்தரபாண்டியன்.

நசிந்து சிதைவுற்று வரும் விருந்தோம்பல் பாதையில் மனிதத்தின் தேடல் தொடர்கிறது.


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *