கம்பெனி டைரக்டரா? டிரில் மாஸ்டரா?
நடக்கலாம் வாங்க – பகுதி 5
ஒருவர் நடக்க ஆரம்பிக்கும்பொழுது நிறைய சுவாரஸ்யங்களை அடுக்கிக்கொண்டே போனால், அவர்களது கண்களுக்கு நாம் மை டியர் மார்த்தாண்டன் ஐடியா மணி, கவுண்டமணி போல் தெரிவோம். இங்கு சில பிரச்சினைகள் உள்ளன. அது போல் சில புரிதல்களும் தேவைப்படுகின்றன.
ஒரு பிரச்சினை குறித்து ஒரு அனுபவசாலியிடம் போய்க் கேட்கும்பொழுது, அவர் தன் அனுபவத்தின் வாயிலாகப் பாடம் நடத்துவார். அது பிரச்சினையோடு இருப்பவனுக்கு எட்டாத தூரம் ஆகிவிடும். அவரிடம் கேட்டதன் நோக்கம் என்ன? பிரச்சினை தீரவேண்டும் என்பதுதான். அப்படியென்றால் பிரச்சினை இருப்பவரின் பார்வையில் இருந்து பார்க்கவேண்டும்.
புதிதாக நடக்க இருப்பவர்களுக்கு எங்கெல்லாம் அலுப்பு ஏற்படலாம்? அதை எப்படிக் களையலாம்? என்று விவாதிப்பதே சுவாரஸ்யங்களை ஏற்படுத்த முதல் படி. 
- காலையில் எழுவது சிலருக்கு முடியாத காரியமாக இருக்கலாம்.
உழைப்பாளி படத்தில் ரஜினி, “எனக்கு என் ட்ரஸ் வேணும்” என்று கடைக்காரரை பாடாய்ப் படுத்துவார். அதுபோல், காலையில் வேகமாக எழும்பினால்தான் நடப்பேன். இல்லாவிட்டால் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா” என்று கன்னம் தெறிக்க பக்கோடா சாப்பிடும் மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். நடப்பது என்று முடிவாகிவிட்டால் காலை, மாலை, மதியம், இரவு என்று எந்த நேரத்திலும் நடக்கலாம்.
எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் இருக்கிறார். இரவு நோயாளிகளைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப்போக இரவு 12 ஆகிறதாம். காலை எழ எட்டு ஆகிறதாம். ஒன்பது மணிக்கு மறுபடியும் நோயாளிகளைப் பார்க்க வருகிறார். கையில் ஸ்மார்ட் வாட்ச்சை அவரது மருமகள் கட்டிவிட்டிருக்கிறார். ஸ்டெப்ஸ் கவனிக்க ஆரம்பித்த பிறகு, அவர் சொல்கிறார், ” பழனிக்குமார், நடக்குறதுக்குனு எனக்கு தனி டைம் இல்ல. ஸோ, நோயாளிகளைப் பார்க்குற நேரத்துல நான் உட்காருறதே இல்ல. தூரமா நோயாளிகளை உட்காரவச்சுட்டு நானே போய்ப் பாக்குறேன். எனக்கு அது வசதியா இருக்கு. மதியம் 2 மணிக்குள்ள 2000 ஸ்டெப்ஸை முடிச்சிடறேன்” என்றார். 
எனக்குத் தெரிந்த ஒரு பிசினஸ் மேன் இருக்கிறார். காலை ஏழு மணிக்கெல்லாம் கல்லாவில் உட்கார்ந்துவிடுவார். மதியம் மூன்று மணிக்கு, கடையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து வருகிறார். வண்டி இல்லாமல் இல்லை, நடப்பதற்காக. 15000 ஸ்டெப்ஸ் எட்டவில்லை என்று இரவு பதினோரு மணிக்கு தோழர் கிருத்திகா தரன் இலக்கை எட்டும் நோக்கில் நடந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார். “மனசு இருந்தால் மார்க்கபந்து” என்று சொல்லிச் சென்றிருக்கிறார் தோழர் க்ரேஸி மோகனார். 
* கூட நடப்பவர் வேகமாக/ மெதுவாக நடக்கிறார்.
இது ஒரு தனிப் பிரச்சினை. குழுவாய் சேர்ந்து நடக்க ஆரம்பிப்பார்கள். அது ஒருவகையில் புது வகையான ஊக்கத்தைத் தரலாம். ஆனால், சமயத்தில் அதுவே கூட்டத்தில் ஒருவருக்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். ‘நம்மால் வேகமாக நடக்க முடியவில்லை, நம்மால் இவர்களது வேகம் தடைபடுகிறதே, நம்மால் அவர்களுக்கு இவ்வளவு சுமை வேண்டுமா?’ என்று விக்கிரமன் படத்து ஹீரோ போல் ஏகப்பட்ட சென்டிமெண்ட் மூளைகளை வைத்துக்கொண்டு இருப்பதால் இப்படிலாம் யோசிப்பார்கள். நடைப் பயிற்சியில் ஒத்த சிந்தனையோடு நடக்கக்கூட ஆள் கிடைப்பார்கள், ஒத்த வேகத்தில் நடக்கும் ஆள் கிடைக்கமாட்டார்கள். 
எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. வெளிநாட்டுக்காரன் சேர்ந்தே இருந்தா உருப்புடுவான். ஆனா பாரு டூர் ங்குற பேர்ல தனித்தனியா சுத்துவான். இந்தியாக்காரன் தனியா இருந்தாத்தான் உருப்புடுவான். ஆனா பாரு, உச்சா போகக் கூட ஆள் கூப்ட்டு திரியுறான்” என்பார்கள். அது தான் உண்மை. நடக்க ஆசைப்படுபவர்கள் உடன் நடந்து வருபவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாவிட்டால் உங்கள் பயிற்சியை நிறுத்த முயலாதீர்கள். அவரவர்களின் வேகம், அவர்வர்களின் உடல் நிலையைப் பொறுத்தது. நீங்கள் உங்கள் உடல்நிலைக்கேற்றபடி வேகத்தை நிகழ்த்தலாம்.
* நடப்பதற்குத் தோதான இடம் இல்லை
சின்னக் குழந்தைகளை முதல் நாள் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச்செல்லும் சில காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவர்களில் தர தரவென்று குழந்தைகளை இழுத்துச்செல்லும் பெற்றோர்களும் உண்டு. அப்படி மனதை நீங்கள் தயார்படுத்தி இழுத்துச்சென்றால் ஒழிய, இப்படி யோசிப்பவர்களால் நடக்க இயலாது. ஒரு விசயம் தானாய் நடக்காது. நடத்தித்தான் ஆக வேண்டும் என்று எங்கள் துறையில் சொல்வார்கள். அதைத்தான் நடப்பதற்கும் சொல்கிறேன். 
இவை எல்லாம் பொதுப்புத்தியில் உள்ளுக்குள் இருக்கும் தடைகளாகச் சொல்கிறேன். இவற்றிலிருந்து வெளியே வந்தால்தான் நடப்பதில் சுவாரஸ்யங்களைக் கூட்டமுடியும். ‘முதலில் படுக்கையிலிருந்து வெளியே வா நண்பா, பிறகு நடக்க பாதை பிறக்கும்’ என்பது தான் ஸ்கெட்ச்சே.
இப்பொழுது ஒரு வகையில் நடக்க சாலைக்கு வந்துவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இனி சுவாரஸ்யங்களை நீங்களே ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
என்னுடைய அனுபவத்திலிருந்து அதைத் தொடர்கிறேன்.
11 வருடங்களுக்கு முன் என் கம்பெனியின் இயக்குனரிடம் முக்கியமான விசயங்கள் பேச அனுமதி கேட்டால், வேலை நேரத்தில் தொந்தரவு வேண்டாம் என்று காலையில் அவர் நடைப்பயிற்சி நேரத்தில் அழைப்பார். அவர் நடப்பார்.பல ஆண்டுகளாக வாக்கிங் செல்பவரின் வேகத்திற்கு என்னால் நடக்க முடியாது. கிட்டத்தட்ட அவருடன் நான் ஓடியிருக்கிறேன்.
“என்னங்க, நடக்க முடியலையா உங்க வயசுக்கு?” என்பார். ‘என்னடா, இந்த மனுஷன் இப்படி நடக்குறாரு!’ என்று வியந்திருக்கிறேன் . நான் ஆலோசனை செய்யப்போகும் விசயத்தைவிட அவருடன் ஓடுவதே எனக்குப் பெரும் சாதனையாய் இருந்தது. காலையில் மீட்டிங் என்ற பெயரில் டிஷ்கஷனா? இல்லை உடற்பயிற்சி ஆசிரியரின் ட்ரில்லா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.
ஒரு கட்டத்தில் நான் நடைப் பயிற்சி செய்ய ஆசைப்பட்டபோது அதே இடத்தில் நடக்கச்செல்ல மனதில் ஒரு சங்கடம். ‘என் கூட நடக்க வா’ என்று அவர் அழைத்துவிட்டால், எப்படி அவர் வேகத்திற்கு ஈடுகொடுப்பது? என்று. அதற்காக சுவாரஸ்யமான ஒன்றைச் செய்தேன்.
சுவாரஸ்யங்களுக்காகக் காத்திருங்கள். இவை என் நடைக்குறிப்புகள்.
கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை.
படங்கள்: இணையத்திலிருந்து
தஞ்சிகுமார்
August 28, 2021நாமும் நடைபயிலலாம் என்ற எண்ணத்தை வெளிக்கொணர்ந்த கட்டுரை.’லெட்ஸ் ஸ்டார்ட் வாக்’
palanikumar pk
August 28, 2021நன்றி
ரேவ்ஸ்
August 29, 2021அருமையான தொடர்….சுவாரஸ்யங்களுக்கு காத்திருக்கிறேன்
Rathiraj
August 29, 2021நடக்க வைக்க கதையா கதை சொல்ல வேண்டியிருக்கு இல்ல.😊..So interesting kumar…
Nandini
August 29, 2021Semmmmma