முகிலோடும் முகடோடு…

இந்தப் புவியின் ஒட்டுமொத்த இயற்கை அழகையும் ரசித்து முடிக்க ஒரு பிறவி போதாது. உலகம் முழுக்க புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் பல இருந்தாலும் இந்தியாவுக்குள்ளேயே நாம் இதுவரை கண்டிராத பேரழகு கொட்டிக் கிடக்கிறது. அதிலும், ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் உலகிலேயே வேறெங்கும் காணக்கிடைக்காத  அற்புதங்கள் ஏராளம்… ஏராளம்…! அந்த அற்புதக் காட்சிகளைக் கண்கள் குளிரக் கண்டு, உள்ளம் குளிர உலா வந்தது எங்களுக்கு அமைந்த நல்வாய்ப்பு.

ஏழு சகோதரிகள் (Seven Sisters) என அழைக்கப்படும் மாநிலங்கள் அசாம், அருணாச் சலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகியவை. 2016 நவம்பர் 10ஆம் தேதி முதல் 17 நாட்கள், என் இரு மகன்களுடன், என் தங்கையும் நானும் சென்று வந்த மறக்க முடியாத பயண அனுபவங்களைச் சுவடு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

மகன்களின் புவியியல் அறிவும், இயற்கையின் மேல் அவர்கள் கொண்ட காதலும், என் கணவர் வர இயலாத சூழலிலும் எங்கள் பயணத்தை மிக அழகாக்கியது. நவம்பர் 10 அன்று காலை சென்னையிலிருந்து எங்கள் பயணம் துவங்கவிருந்த நிலையில் எட்டாம் தேதி இரவு அறிவிக்கப்பட்ட திடீர் பண மதிப்பிழப்பையும் மகன்களின் திறமையால் சமாளித்து, திட்டமிட்டபடி பயணத்தைத் துவக்கினோம்.

அசாம் மாநிலம் பர்மா மற்றும் பூட்டானுடனும்,  திரிபுரா, நாகலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்கள் பர்மாவுடனும், மேகாலயா பங்காளாதேசுடனும், அருணாச்சலப் பிரதேசம் சீனாவுடனும் தங்கள் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

மிக அதிக அளவு மழை, மிதமான குளிர், கோடையில் வெப்பம், சில இடங்களில் கடும் பனி என அனைத்து வகையான தட்பவெப்ப நிலை, ஆணிவேரிலிருந்து பிரியும் கிளை வேர்களைப்போல பிரம்மபுத்திரா  நதியிலிருந்து பிரிந்து மலைகளினூடே வளைந்து நெளிந்து ஓடும் கிளை நதிகள் என, ஓடி ஓடி உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை வழங்கவும், இயந்திர வாழ்விலிருந்து விடுபட்டு சற்றே இளைப்பாறவும் இங்கே இயற்கை அன்னை தன் மடியில் நமக்கு இடமளிக்கிறாள்.

அசாமின் பெரிய நகரமான கவுஹாத்தியில் செல்ப் டிரைவிங் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, திகட்ட திகட்ட காரிலேயே மலையெங்கும் சுற்றியது, அருணாச்சல பிரதேசத்தில் 13,700 அடி உயரத்தில் சீன எல்லையில் இருக்கும் ‘தவாங்’ என்னும் கடுங்குளிர் இடத்துக்கு சென்றது, மலையெல்லாம் மஞ்சள் மலராய் எங்களை வரவேற்ற கோஹிமா – இம்பால் மலைப்பகுதியில் உலவியது, இம்பாலில் முழுப் புல்வெளியும் தண்ணீரில் மிதக்கும் அதிசயத்தைக் கண்டது, அங்கே பெண்களே நடத்தும் உலகில் பெரிய ‘இம்மா’ மார்க்கெட்டில் வலம் வந்தது, க்ரங்சூரி, தவ்கி ஆறு, சிரபுஞ்சி, உலகின் சுத்தமான கிராமம், வேர்ப் பாலம் என மேகாலயாவின் அழகை அத்தனை எளிதாக எழுத்தில் வடித்துவிட முடியாது.

திரிபுராவுக்கு 12 மணி நேரம் இயற்கையோடு இணைந்த ரயில் பயணமும், உன்னக்கோட்டியின் மலை சிற்பமும், காசிரங்காவின் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களும் தவாங் போகும் போது கடந்த “செலா பாஸும்” என காணுமிடமெல்லாம் பரந்துகிடக்கும் பேரழகில் எதைச் சொல்ல? எதை விட?

பயணத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், பாஸ்போர்ட் விசா தேவையின்றி உலகின் பேரழகைத் தரிசிக்க விரும்புவோருக்கும், இயற்கையோடு சில நாட்கள் இன்புற்று வாழ நினைப்போருக்கும் எங்கள் பயண அனுபவம் சிறிதேனும் பயன்படக்கூடும். வாருங்கள், ஏழு சகோதரிகளை இனி வரும் ஏடுகளில் சந்திப்போம்.

தொடரும்


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *