இன்றைய சூழலில் கல்வி – 2
ஆசிரியர்களே தேவையில்லை என்கிறார் ரூசோ, பள்ளிக்கூடமே அவசியமில்லை என்கிறார் ஜான்ஹோல்ட். நோய்த்தொற்றின் அச்சுறுத்தலும் ஊரடங்குச் சூழலும் இவர்கள் கூற்றை உண்மையாக்கியிருப்பது யதார்த்தம்.
குழந்தைகளுக்கான மூன்றாவது இடத்தைச் சிந்திப்பது குறித்து சென்ற இதழில் பேசினோம். ஆனால் இன்று வேறொரு பிரச்சனை நம்மைத் திசை திருப்பி யுள்ளது. ஆம், நமது கல்வி முறையில் பள்ளிக் கல்வியின் இறுதி வகுப்புகளாக அமைந்துள்ள 11 , 12 ஆம் வகுப்புகளின் சேர்க்கையில் இந்தக் கல்வியாண்டு முதல் கொண்டு வந்துள்ள மாற்றம்தான் அந்தப் பிரச்சனை.
மேல்நிலைக் கல்விப் பிரிவுகள்
குழப்பத்திற்கு வழி வகுக்கின்றனவா?
தற்போதைய மேல்நிலைக் கல்விப் பாட அமைப்புகள் புதியதாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. இவை உயர் கல்வி வாய்ப்புகளில் சிக்கல்களை விளைவிக்கும் வகையில் உள்ளன. கோத்தாரி கல்விக் குழுவின் பரிந்துரையின் பேரில் நம் தமிழகப் பள்ளிக் கல்வியில் 1977- 1978 கல்வியாண்டு முதல் 10+2 என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மேல்நிலைக் கல்வியில் பகுதி ஒன்று மற்றும் இரண்டில் மொழிப் பாடங்கள் தரப்பட்டிருக்கும். இவை தவிர பகுதி மூன்றில் சிறப்புப் பாடங் களாக கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், கணக்குப் பதிவியல், விவசாயம், மனையியல், பொருளியல், வணிகவியல், அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல்… இப்படி ஏறத்தாழ 30 பாடங்கள் உருவாக்கப்பட்டன. பகுதி மூன்றில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் நான்கு பாடங்களை மாணவர்கள் படிக்க வேண்டும். மொழிப் பாடங்களுடன் சேர்த்து அவர்கள் படிக்க வேண்டியது மொத்தம் 6 பாடங்கள், 1200 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களின் சுமையைக் குறைக்க கடந்த 2017-18 கல்வியாண்டு முதல் ஒவ்வொரு பாடத்துக்கும் நூறு மதிப்பெண் களுக்கு மட்டுமே தேர்வு என்ற அடிப்படையில் மொத்த மதிப்பெண் கள் 600 ஆகக் குறைக்கப் பட்டது.
இதை அடிப்படையாகக் கொண்டே கல்லூரி களில் உயர்கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் பெறும் நடைமுறை இருந்து வருகிறது. தமிழகத்தின் இந்த மேல்நிலைக் கல்வி முறை இந்திய மாநிலங்களிலேயே தனித்தன்மையுடன் திகழ்ந்து வருவதாகவும் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. ஏனெனில் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்த பாடப் பிரிவுகள் உயர்கல்வியில் வழங்கி வந்தன.
புதிய அரசாணை 166
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு புதிதாக அரசாணை ஒன்றை வெளி யிட்டது. பள்ளிக் கல்வித் துறை அரசாணை 166, 18.09.2019-ன் படி பகுதி 3 -இல் புதிய முறையை அறிமுகம்செய்தது. அதன்படி ஏற்கனவே ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஃபர்ஸ்ட் குரூப், செகன்ட் குரூப் என்ற வகையில் நான்கு பாடங்களைப் படிக்கும் மாணவன் இந்தப் புதிய முறையில் மூன்று பாடங்களை மட்டும் படித்தால் போதுமானது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பொருட்டும், உயர் கல்வி வேலை வாய்ப்புகளை அதிகமாக்கும் வகையிலும் இந்தப் புதிய முறை மேம்படுத்தப் பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மாணவர் விருப்பப்பட்டால் மூன்று பாடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது பழைய முறையான நான்கு பாடங் களுக்கான முறையையும் தேர்வு செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை நடப்புக் கல்வியாண்டி லிருந்து பின்பற்ற வழிகாட்டப் பட்டுள்ளது. இதன்படி 3 பாடங்களைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டிய மொத்தப் பாடங்கள் 5 மட்டுமே. இதில் 500 மதிப்பெண் களுக்கு தேர்வுகள் நடைபெறும். அல்லது மாணவன் 4 பாட முறையைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டியது 6 பாடங்கள், மொத்த மதிப்பெண்கள் 600.
உண்மையில் என்ன நடக்கிறது?
இந்தக் கல்வி ஆண்டில் கோவிட் 19 பொது முடக்கத்தால் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்தாகி விட்டது என்பதை நாம் அறிவோம். தேர்ச்சி முடிவுகள் அரசின் வழிகாட்டலால் கிரேடு முறையில் தரப்படும் என்பதை விரைவில் எதிர் பார்க்கலாம். ஏற்கனவே தனியார் பள்ளிகள் + 1 சேர்க்கையைத் தங்கள் வழியில் துவங்கிவிட்டன. அரசுப் பள்ளிகளில் அரசின் முறையான வழிகாட்டலுக்காகத் தலைமை ஆசிரியர்கள் காத்துக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து விபரம் கேட்டு வரும் பெற்றோர்களுக்கு இந்தப் புதிய முறை குறித்த விளக்கங்களையும் அளித்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியர்களிடம் பேசும்போது, பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் புதிய 5 பாட முறைகளைக் குறித்தே விளக்கி வருவதாகவும், அதை அடிப்படை யாகக் கொண்டு தான் சேர்க்கை நடை பெறும் என்றும் பரவலாகக் கூறுகின்றனர். அதற்கு நியாயமான காரணங்களையும் அவர்கள் முன் வைக்கின்றனர். அருகாமைப் பள்ளிகளில் ஒரு பள்ளியில் 5 பாடங்கள் இருந்து மற்றொரு பள்ளியில் 6 பாடங்கள் இருந்தால் குறைவாகப் படிக்க வேண்டும் என்று மாணவர்கள் 5 பாடமுறை உள்ள பள்ளிக்கே செல்கின்றனர். ஆகவே மாணவர் சேர்க்கை குறைவதால் நாங்களும் 5 பாடங்களைக் கொண்ட பாடப் பிரிவையே அறிமுகப்படுத்துகிறோம் என்கின்றனர்.
அதே போல 6 பாடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் இருந்தாலும் குறைந்த அளவில் மட்டுமே மாணவர் இருந்தால் அந்தப் பாடப் பிரிவை நடத்த பள்ளிகளால் இயலாது. எனவே நம் கண் முன்னாலேயே பாடப்பிரிவுகளும் பள்ளிகளும் காலாவதி யாவதை விரைவில் காணப்போகிறோம்.
உயர்கல்வி வாய்ப்பின் பல வழிகளை அடைக்கும் புதிய முறை
நான்கு பாடங்களை உள்ளடக்கிய முறையில் உதாரணமாக கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல் எனப் படிக்கும் போது ஒரு மாணவனுக்கு பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர் கல்வியில் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தற்போது உயிரியல் பாடத்தை நீக்கி அது மூன்று பாடமாகக் குறையும் போது பொறியியல் துறை மட்டுமே படிக்க இயலும். மருத்துவம் சார்ந்த உயிரியல் பாடப் பிரிவை நீக்கி, வழிகளை அடைத்து ஒரு வழிப் பாதையாக மாற்றும்போது அங்கும் மாணவர்கள் தன் வாய்ப்புகளை இழக்கிறார்கள்.
நீட் தேர்வில் CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே வினாக்கள் இடம்பெறுகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் பாடங்கள் கொண்ட முழு அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்புக்குப் பிறகு கணிதத்தோடு தொடர்பே இல்லாததால் இயற்பியல், வேதியியல் பாடங்களில் இடம்பெறும் கணக்குகளைத் தீர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. அதற்கே இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், மேலும் ஒரு பாடத்தைக் குறைப்பது என்பது, நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களை மேலும் பின்தங்கிவிடச் செய்யும். எனவே, தனியார் பள்ளி மாணவர்களுக்காகவே இந்தப் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
போலவே, புதிய முறையில், கணக்கு, இயற்பியல் பாடத்துடன் மட்டுமே கணினி அறிவியல் பாடம் இடம்பெறுகிறது. இந்தப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே இனி கணினி சார் கல்லூரிப் படிப்புக்குச் செல்ல முடியும். கலைப்பிரிவில் (ஆர்ட்ஸ் குரூப் ) Typography and Computer Application என்றொரு பாடத்தை ஒப்புக்காக இடம்பெறச் செய்கிறார்கள். கணினி அறிவியல் பாடம் இல்லை எனில் ஆர்ட்ஸ் குரூப் தேர்வு செய்யும் மாணவர்கள் கணினி சார்ந்த உயர் கல்வியைப் பெற முடியாமல் போய்விடும். அதேபோல, கணினி அறிவியலுடன் கணக்கு, இயற்பியல் மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வியில் பொறியியல், கணினித் துறைகள் மட்டுமே படிப்பதற்கு வாய்ப்பு உண்டு. வேதியியல் தொடர்பான எந்த மேற்படிப்பையும் இவர்கள் படிக்க முடியாது. இவ்வாறு பல குழப்பங்களை இப்புதிய முறை விளைவிப்பதோடு உயர்கல்வியில் மாணவர்களுக்கான எல்லா வழிகளையும் அடைப்பதற்கான ஆபத்துகளைத் தருகிறது.
தொடர்ந்து உரையாடுவோம்!
Comments (0)