நீலகண்ட பிரம்மச்சாரி – 4
காட்சி 4
(மேடையில் முந்தைய காட்சியில் ஓம்கார் சுவாமிகள் பேசிக்கொண்டிருந்த இடம் இருட்டாகவும் இன்னொரு பகுதி ஒளியிலும் இருக்க வேண்டும். ஒளி விழும் பகுதியில் காட்சிகள் விரிகின்றன)
காலம் : 1907ஆம் ஆண்டின் இறுதியில் ஒருநாள் முற்பகல் வேளை
களம் : சென்னையில் இந்தியா பத்திரிகை அலுவலகம்
பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர் மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை
(பாரதியார் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார். நீலகண்டர் படித்துக்கொண்டிருக்கிறார். வ.உ.சி. உள்ளே வருகிறார்)
வ.உ.சி : வணக்கம் மாமா..!
பாரதி : வாரும் மாப்பிள்ளை.. பட்டனத்திற்கு எப்போ வந்தீர்..?
வ.உ.சி : இன்னைக்குக் காலையிலேதான் மாமா..
பாரதி : சுதேசிக் கப்பல் ஓட்டமெல்லாம் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது..?
வ.உ.சி. : வழக்கம்போல நெருக்கடிதான். இருந்துமென்ன? தூத்துக்குடி வர்த்தகப் பெரியவர்களும் மக்களும் தரும் பேராதரவில் சுதேசிக் கம்பெனி நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது மாமா. அது விஷயமாகவும் உங்களைப் பார்க்க வந்தேன்.
பாரதி : ‘சொல்லுங்க பிள்ளைவாள்..
வ.உ.சி. : கம்பெனிக்கு இன்னும் பங்குகள் சேகரிக்க வேண்டும். தேசபக்தியும் வர்த்தக நிபுணத்துவமும் தெரிந்த இளைஞர் ஒருவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் மாமா.
பாரதி : கிடைச்சாச்சுன்னு வச்சுக்குங்க மாப்ளே.. (நீலகண்டரைப் பார்த்து) தம்பி.. இங்கே கொஞ்சம் வாரும். சிதம்பரம் பிள்ளையைத் தெரியுமல்லவா..?
நீலகண்டன் : பிள்ளைவாளைத் தெரியாமலா..? (வ. உ. சி. யைப் பார்த்து) “வணக்கம் அண்ணா..
பாரதி : (வ.உ.சி.யிடம்) இவர் நீலகண்டன். இங்கிருக்கும் பிரசித்தி பெற்ற வர்த்தகக் கம்பெனி ஒன்றில் கணக்கராகவும் சரக்குப் பிடிக்கிறவராகவும் வேலை பார்க்கிறார். விபின் சந்திரபாலர் இங்கே வந்தபோது, அவரது பேச்சினால் தேசபக்தராகி இந்தியாவுக்கும் வேலை பார்க்கிறார். இப்போ பார்க்கும் வேலையை விட்டுவிட்டு, முழுமையாக தேச வேலைக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். நான்தான் நேரம் வரட்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
வ.உ.சி. : ஆஹா..! சந்தோஷம். பாலரைக் கேட்ட பிறகும் ‘இந்தியாவுக்கு‘ வேலை செய்யாமல் போவாரா..?
பாரதி : (வ.உ.சி.யின் சிலேடையைக் குறித்து) சபாஷ்.. (நீலகண்டனைப் பார்த்து) இனிமேல் பிள்ளைவாளிடம் நீ வேலை பார்க்கலாம். சுதேசிக் கம்பெனிக்கு பங்குகளைச் சேகரித்துக் கொடுக்கவேண்டும். அப்படியே பிள்ளைவாளுக்குத் துணையாக தேச சேவையும் செய்யலாம். என்ன சொல்கிறாய் தம்பி..?
நீலகண்டன் : அண்ணா பேச்சுக்கு அட்டியேது..? இன்னைக்கே பிள்ளைவாளுடன் சேர்ந்துடறேன்.
வ.உ.சி. : இப்போது வேண்டாம் நீலகண்டன். நான் சூரத் காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் சேர்த்து அழைத்துப் போக வந்திருக்கிறேன். மாமாவைப் பார்க்க வந்த முக்கிய வேலையே அதுதான். நான் தூத்துக்குடி சென்றபிறகு ஒருநாள் அழைக்கிறேன். வந்து விடுங்கள்.
நீலகண்டன் : சரி அண்ணா..
வ.உ.சி. : (நீலகண்டனைப் பார்த்து) பாலரின் பேச்சைக் கேட்டிருப்பீர்கள்.. எப்படி இருந்தது..?
நீலகண்டன் : ஒரே நேரத்தில் வெயிலும் சாரலும் சேர்ந்ததுபோல.. ஒரே நேரத்தில் கள்ளும் தேனும் அருந்தியதுபோல.. ஒரே நேரத்தில் பிள்ளைவாளையும் பாரதியாரையும் கேட்பதுபோல..
வ.உ.சி. : பலே பலே.. மாமா.. தம்பிக்குக் கவிதையும் வரும்போல.. சகவாச வரமா..?
பாரதி : இவன் சிங்கம்.. உங்களிடம் சேர்ந்தால் தங்கமாகவும் மின்னுவான்.. பராசக்தி அருள் பொழிவாள்..!
வ.உ.சி. : கவி வாக்கு பலிக்க வேண்டும். இப்போ சூரத் காங்கிரஸ் வேலைகள் பற்றிப் பேசலாமா மாமா..?
(மேடையில் மூவரும் இருக்கும் பகுதியில் ஒளி மங்கி, ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருந்த பகுதியில் ஒளி பரவுகிறது)
சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. கவி வாக்கு பலித்ததா..?
ஓம்கார் சுவாமிகள் : ஆஹா..! பாதி பலித்தது.. பாதி பலிக்கவில்லை தம்பி.
சங்கர கிருஷ்ணன் : அது எப்படி சுவாமிஜி?
ஓம்கார் சுவாமிகள் : சிதம்பரம் பிள்ளையே பெரிய சிங்கம். நான் அவர் பக்கத்தில் மின்னுவதெப்படி..? ஆகவே பாரதியார் சொன்ன நீலகண்ட சிங்கம், வேறு தங்கங்களைத் தயார் செய்யப் போய்விட்டது. அதற்கும் பிள்ளைவாள் பாசறையில் கற்றதுதான் காரணம் தம்பி. அதுதான் பாதி பலித்தது என்றேன்.
சிதம்பரம் பிள்ளை ஒரு வசீகரமான தலைவர். கனவான்கள், தொழிலாளிகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என்று, எல்லாத் தரப்பாளர்களிடமும் அவருக்கு செல்வாக்கு இருந்தது. சுருக்கமாச் சொன்னால், அவர் பின்னால் தூத்துக்குடி நகரமே இருந்தது. அது மட்டுமல்ல; சூரத் காங்கிரசுக்குப் போய்விட்டு வந்தபிறகு, அவர் தமிழ்நாட்டின் தலைவருமாகிவிட்டார்.

சங்கர கிருஷ்ணன் : ஆஹா..! சுவாமிஜி, வ.உ.சி.யின் ஆளுமையை எத்தனை உணர்ச்சி பொங்க வர்ணிக்கிறீர்கள்..!
ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, பிள்ளைவாளின் ஆதர்சம் அப்படி.
(கொஞ்சம் நிறுத்துகிறார்)
சங்கர கிருஷ்ணன் : என்ன சுவாமி..?
ஓம்கார் சுவாமிகள் : (குரல் தழுதழுக்க) பாரதியார் சொன்னாரே.. “வேளாளன் சிறை புகுந்தான். தமிழகத்தார் மன்னனென மீள்வான்” என்று. அந்த வாக்கு, சிதம்பரம் பிள்ளைக்குப் பலித்திருக்க வேண்டும் தம்பி..
(சீடர் உள்ளே வருகிறார்)
சீடர் : சுவாமி.. கோவில் பூஜைக்கு நேரமாகிறது.
ஓம்கார் சுவாமிகள் : பூஜை முடித்து வந்தபிறகு பேசலாம் தம்பி..
(ஒளி மங்கித் திரை விழுகிறது)
நாளை பேசுவோம்.
- இரா.கோமதிசங்கர் – திருநெல்வேலி

Sankar T A B
August 18, 2023மேடை நாடகத்தை நேரில் பார்க்கும் உணர்வு, காட்சிக்குக் காட்சி இடபெயர்வின் ஒளி மாற்றங்கள்..
அருமை சார்..
Gomathi Sankar Gosar
August 18, 2023நன்றி சங்கர்
Anita Srikanth
August 19, 2023வ.உ. சி பேசும்போது எல்லாம் கப்பல் ஓட்டிய தமிழன் ல சிவாஜி பேசுரா மாதிரியே இருக்குண்ணா….
நினைவுகளுக்கு போயிட்டு வரதை அழகா எழுதி இருக்கீங்க…
உமாமகேஸ்வரி.சு
August 22, 2023படிக்கப் படிக்க சுவாரஸ்யம். இந்தியாவில் ஒரு காலத்தில் நடந்தவற்றை , பெரும் ஆளுமைகளின் வாழ்க்கையில் நடந்த உரையாடல்களை உங்கள் எழுத்தில் வாசிப்பதற்கு மகிழ்ச்சி.
Vimaladevi
August 22, 2023எனக்கு நீங்கள் பேசுவது போலவே தோன்றுகிறது…