நீலகண்ட பிரம்மச்சாரி – 5
காட்சி 5
களமும் காலமும் : அதே களம், அதே காலம்
பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள் மற்றும் சங்கர கிருஷ்ணன்
(பூஜை முடித்து வந்த ஓம்கார் சுவாமிகள் தம் இடத்தில் அமர்ந்துகொள்கிறார். கூடவே வந்த சங்கர கிருஷ்ணன், தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே பாயில் அமர்கிறார்)
சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. இங்கே மாலை ஆறு மணிக்கெல்லாம் நல்லா இருண்டு விடுகிறதே?!
ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, மழைக்காலத்தில் இன்னும் சீக்கிரமாகவே இருண்டுவிடும்.
சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. வ.உ.சி.யைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தீர்கள்.
ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி.. பிள்ளைவாள் திருநெல்வேலியில் கைதாகும் வரை நான் அவருடன் பட்டும் படாமலும்தான் இருந்தேன். பிள்ளைவாளுடன் நான் இருந்த சொற்பக் காலம் மிக வேகமாக ஓடியது. என் பாதை வேறு, பிள்ளையின் பாதை வேறு என்பதை நான் அவரோடு சேர்ந்த கொஞ்சநாளிலேயே தெரிந்துகொண்டேன்.
சங்கர கிருஷ்ணன் : எப்படி சுவாமி?
ஓம்கார் சுவாமிகள் : அதைத் தெரிந்துகொள்ள காலத்தில் கொஞ்சம் பின்னால் போக வேண்டும். பாரதி சொன்னாரல்லவா? பாலர் பற்றி..
பாலரை நேரில் சந்தித்தேன். அப்புறம் அவரது செயலாளராக இருந்த குஞ்சு பானர்ஜி என்பவரைச் சந்தித்திருந்தேன். அவர்கள் மூலம் வங்கத்திலும் மராட்டியத்திலும் பஞ்சாபிலும் ரகசிய வேலைகளைச் செய்துவந்த, தீவிர தேசபக்த பலாத்கார இயக்கங்களை அறிந்துகொண்டேன்.
அவர்கள் என்னைத் தமிழ்நாட்டில் இந்த பலாத்கார இயக்கத்திற்குத் தகுந்த ஆட்களைத் தேர்வு செய்யப் பணித்தார்கள். நான் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டேன். இந்த விஷயம் பாரதிக்கும் சிதம்பரம் பிள்ளைக்கும் தெரியாது. என் ஆள் சேர்க்கும் பணிக்குப் பிள்ளைவாளோடு போவது பயனளிக்கும் என்றுதான் போனேன். ஆனால் சிதம்பரம் பிள்ளையின் தேசப் பணி வேறு; என் பாதை வேறாக இருந்தது.
சங்கர கிருஷ்ணன் : வ. உ. சி.க்கோ பாரதிக்கோ அல்லது திலகருக்கோ பலாத்கார வேலைகளில் நம்பிக்கை கிடையாதா..?
ஓம்கார் சுவாமிகள் : இருந்தது என்றுதான் நம்புகிறேன். ஆனால் அதற்குக் காலம் கனியவில்லை என்று அவர்கள் நினைத்தார்கள்.
‘நேரடி பலாத்கார வேலைகளைவிட, தேசபக்தியைப் பரப்புவதே உமது பணியாக இருக்கட்டும்‘ என்று, சகோதரி நிவேதிதா தமக்குக் கட்டளை இட்டதாக, பாரதியார் என்னிடம் ஒருமுறை சொன்னார்.
அதுபோக, பாரதியும் பிள்ளைவாளும் தமிழ்க் கலையிலும் இலக்கியத்திலும் பழக்கம் உடையவர்கள். பலாத்கார இரகசிய நடவடிக்கைகள், தமிழ் அரசியல் நெறிக்குப் பொருந்தி வரவில்லை என்று அவர்கள் நம்பினார்கள்.
(கொஞ்சம் நிறுத்திக்கொள்கிறார்)
சங்கர கிருஷ்ணன் : சிதம்பரம் பிள்ளையிடம் எவ்வளவு நாள் இருந்தீர்கள்?
ஓம்கார் சுவாமிகள் : மிகக் கொஞ்சமாத்தான். சென்னையிலும் தூத்துக்குடியிலுமாக ஒரு மூனு மாசமிருக்கலாம். ஆனா அவரு கூட இருந்ததனால, பின்னால திருநெல்வேலி ஜில்லாவுல எனக்கு நெறைய தொடர்பு கெடச்சுது. அவர் வக்கீலாக இருந்தார். நிறைய பேருக்கு உதவி செய்துவந்தார். சுதேசிப் பிரசாரம், பஞ்சாலைத் தொழிலாளர் கூட்டங்கள், சுதேசி பண்டகசாலைன்னு நிறைய பணிகளைச் செஞ்சு வந்தார்.
சுதேசிக் கப்பல் விட்டது பெரிய வேலை. இப்படியொரு யோசனை சிதம்பரம் பிள்ளைக்கு எப்படி வந்திருக்கும் என்பது அந்தக் காலத்தில் எல்லாருக்கும் ஆச்சர்யமாய் இருந்தது தம்பி.

அதை எப்படி வெள்ளைக்காரன் பொறுத்துக்கொள்வான்? அதுதான் அவரு மேல வெள்ளைக்கார அதிகாரிகளுக்குப் பகையைக் கொண்டுவந்தது. அப்புறம் அவரு நடத்துன மில் போராட்டம், வெள்ளைக்காரனுக்குப் புயலும் வெள்ளமும் சேர்ந்து தாக்குனது போல ஆச்சுது.
பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்காரங்களும் கோரல் மில் டைரக்டர்களும் உடன் பிறந்தவங்க மாதிரிதான். சிதம்பரம் பிள்ளை ரெண்டு பக்கமும் வந்தாரு. வணிகம், அரசியல்-ன்னு இரண்டு பக்கமும் கூர்மையான கத்தியோட சிதம்பரம் பிள்ளையை வெள்ளை நிர்வாகம் பார்த்தது தம்பி.
தொழிலாளிங்கன்னு ஒரு சக்தியை முதன்முதலா இந்தத் தமிழ்நாடு அப்போதுதான் கண்டது தம்பி. படிச்சவங்களே இருந்த அரசியல்ல, படிக்காத ஜனங்கல்லாம் அணி அணியா வந்ததைப் பார்த்து வெள்ளை அதிகாரம், வெலவெலத்துப் போனது. மில் தொழிலாளிகள் கூலியும் கேட்டார்கள். வந்தேமாதரமும் முழங்கினார்கள். இது 1908இல் மிகப்பெரிய அதிசயம் தம்பி.
(மீண்டும் சிறிய சிந்தனைக்குப் பிறகு தொடர்கிறார்)
ஆனா, பிள்ளை வேலைகள்ள இருந்த சூட்சும அரசியல் அப்போ எனக்குப் புரியல; பின்னாலதான் புரிஞ்சுது. அந்த அரசியலின் எதிர்வினை ரொம்ப நாள் மறையவே இல்லை. சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையின் எதிர்விளைவு, மூன்றாண்டுகள் கழித்து மணியாச்சியில் வெடித்தது. ஆகவே, என் வாழ்க்கையில் நான் நேரடியாக ஈடுபடாத ஆஷ் கொலையில் சிதம்பரம் பிள்ளையின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் பின்னணி இருந்தது.
1908இல் பிள்ளை செய்த வேலைகளுக்கும் எங்களோட பலாத்கார வழிமுறைகளுக்கும் இடைவெளி நெறைய. அதனால நான் சிதம்பரம் பிள்ளைக்கு வேலை செஞ்ச கையோடே, தனியா ரகசிய இயக்கத்திற்கும் திருநெல்வேலி ஜில்லா முழுசும் அலைஞ்சு ஆள் சேர்த்து வந்தேன். சிதம்பரம் பிள்ளையோட சுதேசி இயக்கத்துல வேலை செஞ்சவங்கள்ள இருந்து சில பேரை எங்க இயக்கத்திற்கும் சேர்த்துகிட்டேன்.
சங்கர கிருஷ்ணன் : வ.உ.சி. கைதானவுடன் நடந்த எழுச்சிகளில் உங்கள் நடவடிக்கைகள் ஏதுமில்லையே! அப்போது நீங்கள் திருநெல்வேலியில இல்லையா சுவாமி?
ஓம்கார் சுவாமிகள் : ‘ சொல்றேன். 1908 புது வருஷம் பிறந்தபோது, சூரத் காங்கிரஸ் முடிஞ்சு சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடி வந்தப்போ, அவருகூட நானும் வந்தேன். அப்போது, தூத்துக்குடி சுதேசி இயக்கச் சூட்டில் பொங்கிக்கொண்டிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து பத்மநாப அய்யங்கார் வந்திருந்து, தூத்துக்குடியில் பிரசங்கங்கள் செய்தார். தூத்துக்குடி எங்கிலும் பெரிய கிளர்ச்சி நிலை சூழ்ந்திருந்தது. அப்போ…
(மேடையில் ஒளி மங்கி இருளாகித் திரை விழுகிறது)
- இரா.கோமதிசங்கர் – திருநெல்வேலி

Anita Srikanth
August 19, 2023அருமையான இடத்தில நிறுத்திட்டீங்களே ண்ணா..
ரொம்ப விறுவிறுப்பா எழுதி இருக்கீங்க..
படிக்கும் போது ஏதோ நாம பழைய வருஷத்துக்கு போறா மாதிரி தோணுது…
Gomathi Sankar Gosar
August 19, 2023நன்றி அனிதா
உமாமகேஸ்வரி.சு
August 22, 2023மாறி மாறி அந்தக் காலத்துக்கும் இன்னொரு காலத்துக்கும் வரலாறு பயணிக்கிறது. திடீர்னு நின்று போச்சு…
தமிழன் காசி
August 23, 2023பழய வரலாறுகளை அவர்கள் உரையாடல்கள் மூலம் அறிய முடிகிறது… தொடருங்கள்.
Rasal
August 25, 2023வந்தே மாதரம் முழக்கம் ஒலிக்கட்டும்!!! அருமை Sir