நீலகண்ட பிரம்மச்சாரி – 24

நீலகண்ட பிரம்மச்சாரி – 24

காட்சி 24 காலமும் இடமும் பாத்திரங்களும் : முந்தைய காட்சியின் தொடர்ச்சி (ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் உரையாடலைத் தொடர்கிறார்கள்) ஓம்கார் சுவாமிகள் : குமரப்பா விருந்தினர் விடுதிக்குப் போனதும் சர்தார் பட்டேலிடமும் மகாதேவ தேசாயிடமும் என்னைப்பற்றிச் சொல்லிவிட்டு, ‘நீங்கள் இவரைச் சந்திக்க வேண்டும். தவறினால் நீங்கள் வருத்தமடைவீர்கள்’ என்று சொல்ல, ஆர்வம் கொண்ட அவர்கள் என்னை வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போனார்கள். என் சந்திப்பு பற்றிய விவரம் காந்தியடிகளிடம் சொல்லப்பட்டது. காந்திஜி என்னைப்பற்றி முன்னமே கேள்விப்பட்டிருந்தார். ஆகவே, என்னைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அவரது உடல் நலம் கருதி, அவரை நானே பார்க்க வருகிறேன் என்று சொல்லிவிட்டு, காந்தியடிகளை நான் சென்று சந்தித்தேன். காந்தியடிகளின் சந்திப்பு எனக்கும் அவருக்குமே மன நிறைவாக இருந்தது. நாங்கள் அரசியல் ஏதும் பேசவில்லை. அவர் எனது ஆன்ம சோதனைகள் பற்றியே அதிகம் விசாரித்தார். சுமார் ஒரு மணி நேரம் பேசிவிட்டு விடைபெற்று வந்தேன். சங்கர கிருஷ்ணன் : சுவாமி.. நான் இங்கிருந்த சில நாட்களில், இந்த ஆசிரமத்தில் நான் கண்ட காட்சிகளும் உங்களைப் பற்றி நீங்கள் சொன்ன செய்திகளும் மிகுந்த வியப்பையும் பிரமிப்பையும் தந்தன. ஆனால் தன்னடக்கம் கருதியோ அல்லது வேறெந்தக் காரணத்தினாலோ நீங்கள் சொல்லாத செய்திகளையும் நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவை உங்கள் மேல் நான் கொண்டிருக்கும் மரியாதையை இன்னும் உயர்த்தி வைக்கின்றன. ஓம்கார் சுவாமிகள் : அப்படி என்ன கேள்விப்பட்டீர்கள் இந்த சாமியாரைப்பற்றி? சங்கர கிருஷ்ணன் : உங்கள் மாசு மருவற்ற நல்லொழுக்கம் பற்றி, எந்தப் பொருளையும் உரிமை கொள்ளாது ஆசிரமவாசிகளிடமும் மக்களிடமும் பகிர்ந்துகொள்வது பற்றி, ஏழைகளின் மீது நீங்கள் கொண்டுள்ள பரிவையும் கருணையையும் பற்றி, உங்கள் பிரசங்கங்கள் பற்றி, பள்ளிக் குழந்தைகளின் மீது அக்கறை கொண்டு அவர்களுக்குச் செய்யும் உதவிகள் பற்றி, பலப்பல செய்திகளை ஆசிரமத்திலும் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கேட்க முடிந்தது சுவாமி. ஓம்கார் சுவாமிகள் : (சிரிக்கிறார்) இதெல்லாம்தான் துறவியின் குணங்கள். (மீண்டும் சிரித்துவிட்டு) நான் நல்ல சாமியார்தான் அல்லவா? சங்கர கிருஷ்ணன் : (தானும் சேர்ந்து சிரித்துவிட்டு) கணக்கு எழுதுபவர், சரக்கு பிடிக்கும் ஏஜெண்ட், பத்திரிகைக்காரர், பிரசங்கி, புரட்சிக்காரர், எழுத்தாளர் என்ற பல முகங்களைக் கொண்ட நீங்கள், துறவியாக மாறிவிட்டபோதிலும் உங்களைப் பற்றிய புரட்சி முகமே எனக்குப் பிடிக்கிறது. ஏனெனில், ஒரு துறவிக்கு வேண்டிய தன்னலம் கருதாமை என்ற பண்பு நலன் உங்களிடத்தில் நிறைந்திருப்பதை, பழைய புரட்சிகரப் பாத்திரத்தின் தொடர்ச்சியாகத்தான் நான் பார்க்கிறேன். உங்கள் வரலாற்றில் வந்து போனவர்கள் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கும் சித்திரங்கள் மிகச் சொற்பமானவை என்பதுதான் மிகப் பெரிய விசித்திரம். இன்று நான் விடைபெற்றுக் கொள்கிறேன் சுவாமி. இந்த ஆசிரமவாசிகளின் உபசரிப்பையும் உங்கள் அன்பையும் என்றும் நினைவில் வைத்திருப்பேன். மீண்டும் ஒரு நாள் வாய்த்தால் உங்களைக் காண வருவேன். ஓம்கார் சுவாமிகள் : நீங்கள் வரும்போது உங்களை உபசரிக்க நான் இருப்பேனா என்று தெரியாது தம்பி. என் ஞாபகமாக நான் எழுதியிருக்கும் புத்தகத்தைத் தருகின்றேன். பெற்றுக்கொள்ள வேண்டும்.(சொல்லிவிட்டு, தயாராக எடுத்து வைத்திருக்கும் புத்தகத்தைதின் தலைப்பை வாசித்துவிட்டுத் தருகிறார்.) Confessions, Upadesh and Talks – இது நான் எழுதிய மூன்று நூல்களின் தொகுப்பு. Confessions on the way towards Peace – சாந்தியின் மார்க்கத்தில் மெய்ஒப்புதல் என்ற தலைப்பில் எனது புரட்சிக் காலத்திய நினைவுகளை எழுதியிருந்தேன். இதற்கு அரவிந்தர் முன்னுரை எழுதியிருக்கிறார். இந்தப் பழைய நினைவுகள், நான் துறவியாவதற்கு முன் எழுதியவை. துறவியானபின் இந்நூலை வெளியிட என் மனம் ஒப்பவில்லை. உங்களிடம் தந்த புத்தகத்தில் Confessions என்ற பகுதி அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அன்பர்களால் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு மட்டுமே. Upadesh – உபதேஷ், என் ஆன்மீக சாதனங்களைப் பற்றியது. 1946இல் வெளியானது. Talks – பொறுக்கியெடுக்கப்பட்ட உரைகள் என்ற என் சொற்பொழிவுகளின் தொகுப்பு 1971இல் வெளியானது. சங்கர கிருஷ்ணன் : வந்தனம் சுவாமி.. வருகிறேன். (கும்பிட்டு விடைபெறுகிறார்) (திரை விழுகிறது. பின்னணியில் குரல் ஒலிக்கிறது) குரல் : நூறாண்டுக்கு முன்பு ‘தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறி, கெட்டுப் பாழ்பட்டு’ நின்ற இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் வந்தவர்களின் வழிமுறைகளும் சுயநலமில்லாத செயல்பாடுகளும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்கின்றன. சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டுத் தண்டனை பெற்றவர்கள், பொது வாழ்க்கையில் தங்கள் இருப்பினைத் தொடர, ஒவ்வொருவராக ஆன்மீகத்தில் சென்று ஆசிரம வாழ்க்கையை ஒரு மாற்றாகக் கொண்டிருக்கின்றனர். அரவிந்தர், வ.வே.சு.அய்யர், சுப்பிரமணிய சிவா ஆகியோர் இந்த வரிசையில் வந்தனர். பாரதி மறைந்தபோது, அவர் தீவிர அரசியலில் இல்லை. வ.உ.சி.யின் கடைசி நாட்கள் எவ்வாறு இருந்தன என்பதை அறிவோம். ஆனால் 16 ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்தபின், துறவியான நீலகண்டர் பற்றி, அவர் காலத்தில் அவருடன் வாழ்ந்தவர்கள் சொல்லும் குறிப்புகள், அவர் மீதான ஏதோ ஒரு வெறுப்பு தடவிக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டிலிருந்து பல மைல்கள் தாண்டித் தனது துறவு வாழ்க்கையை அவர் வைத்துக்கொண்டதைப் பார்த்தால், அவரும் அதை உணர்ந்திருந்தாரோ என்று தோன்றுகிறது. அவரது ஆசிரம வாழ்க்கை பற்றிய குறிப்புகள் அரிதாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டின் முதல் புரட்சிக்காரன் என்று சொல்லுக்குத் தகுதியான நீலகண்ட பிரமச்சாரியிடமிருந்தும் மக்கள் தொண்டுக்காகத் தனது ஆசிரம வாழ்க்கையை விதித்துக்கொண்ட ஓம்கார் சுவாமிகளிடமிருந்தும் நாம் விடைபெற்றுக்கொள்வோம். தியாகமும் தொண்டும் எந்தக் காலத்திலும் நினைவு கூரப்படும். வணக்கம். (நிறைவு) நிறைவும் நன்றியும் சுவடு நேயர்களுக்கு வணக்கம். 24 காட்சிகளாக தினமும் நான் எழுதிய நாடகத்தில், உடன் பயணம் செய்து உற்சாகப்படுத்திய வாசக நண்பர்களுக்கு நன்றி நவிலும் தருணம் இது. பாரதி ஆய்வாளர் ரா.ஆ. பத்மநாபன் அவர்கள் எழுதிய சித்திர பாரதி படித்தபோது, நீலகண்ட பிரம்மச்சாரி பற்றி அதில் அவர் எழுதியிருந்த ஒருபக்கக் கட்டுரைதான் எனது நாடகத்தின் ஆரம்பம் என்று சொல்வேன். அதிலிருந்து, இந்தப் புரட்சிக்கார நீலகண்டர் பற்றிய குறிப்புகளைப் பல நூல்களில் தொடர்ந்து வந்தேன். சிறு துளிகளாகக் கிடைத்த அவற்றைக் கோர்த்து இந்த நாடகத்தை உருவாக்கி முடித்தேன். இதை உருவாக்கும் முன் எனக்குச் சில யோசனைகளை வழங்கிய பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு என் முதல் நன்றி. வ.உ.சி. ஆய்வாளர் ரெங்கையா முருகன் மற்றும் அவரிடம் என்னை ஆற்றுப்படுத்திய நெல்லை ஓவியர் வள்ளிநாயகம் ஆகியோருக்கும் எனது நன்றி. AITUC தமிழ் மாநிலத் தலைவர் தோழர் காசிவிசுவநாதன் நிறைய தகவல்களைத் தந்துதவினார். அவருக்கு எனது நன்றி. நாடகம் வளர்ந்துகொண்டிருந்தபோது சில தகவல்களை பகிர்ந்துகொண்ட கோவை வழக்கறிஞர், தோழர் ஞானபாரதி அவர்களுக்கும் எனது நன்றி. எப்போதும் என்னுடன் இருந்து, நாடக உருவாக்கத்தில் பயணித்த என் அன்புத் தோழன் கோவை பிரசன்னாவுக்கும் நாடக ஆக்கத்தில் தொடர்ந்து ஊக்கப்படுத்திய சுவடு ஆசிரியர் நல்லுவுக்கும் என் நன்றி. நாடகப் பக்கத்தின் முகப்புப் படத்தைத் வடிவமைத்துத் தந்த வாலறிவன் பதிப்பக நண்பர் கார்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி. நாடகத்தைத் தினந்தோறும் வாசித்தும் பகிர்ந்தும் நிறைகளைப் பாராட்டியும் குறைகளைச் சுட்டியும் என்னை உற்சாகப்படுத்திய சுவடு வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நன்றிகள் பல. நாடகம் உருவாகத் துணைபுரிந்த நூற்பட்டியல் :

நீலகண்ட பிரம்மச்சாரி – 22

நீலகண்ட பிரம்மச்சாரி – 22

காட்சி 22 இடம் : ஓம்கார் ஆசிரமம், நந்தி மலை.பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமிகள் : இந்த நந்திமலை வனத்திற்குள் ஒரு சுனை இருக்கிறது சங்கர கிருஷ்ணன். தட்சிணப் பிநாகினி இங்கிருந்து கிளம்பி ஓடுகிறாள். இவள் தமிழ்நாட்டுத் தென்பெண்ணை. இங்கிருந்து கிளம்பித் தமிழ்நாட்டுக்குப் போகிறாள். நான் தமிழ்நாட்டிலிருந்து கிளம்பி இவள் மடிக்கு வந்து சேர்ந்தேன்.இந்த நதி கடலில் சேரும் இடத்திற்கும் எனது சொந்த ஊரான எருக்கூருக்கும் சுமார் நாற்பது மைல்கள் இருக்கலாம். ஏதோ ஒரு தொந்தம்போல, நான் பிறந்த இடத்துக்கு அருகே பாயும் பெண்ணை நதியின் உற்பத்தி ஸ்தானத்தில் என் வாழ்க்கை நிலைபெற்றது. இன்னும் கொஞ்ச காலத்தில் இவள் மடியிலேயே என் வாழ்க்கையும் முடிந்து போகலாம். (சற்று அமைதிகொள்கிறார்) சங்கர கிருஷ்ணன் : (சில கணங்கள் காத்திருந்து) சுவாமி.. ஓம்கார் சுவாமிகள் : நான் சென்னையிலிருந்து கிளம்பிய பிறகு, இந்த நாட்டின் பல பிரதேசங்களில் அலைந்து திரிந்தபின் இந்த நந்தி மலைக்கு 1933இல் வந்து சேர்ந்தேன். சங்கர கிருஷ்ணன் : அப்போ இரண்டு வருடமாக அலைச்சல்தானா சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : இங்கு வரும் முன்பு, ஆனகுந்தி சமஸ்தானத்தில் சிலநாட்கள் இருந்தேன். துறவியாக மாறி நிலைகொள்ளத் தொடங்கிய இடம் அது. சென்னையை விட்டுக் கிளம்பிய நான், மத்திய பாரதம் வரை பல ஊர்களில் பரதேசியாகத் திரிந்தேன். கன்னட தேசத்தின் துங்கபத்ரா நதிக்கரையோரம் சிலநாள் சாதுவாக அலைந்துகொண்டிருந்தபோது அங்கு வந்தார் ஆனகுந்தி சமஸ்தானத்தின் ராணி குப்பம்மா. சங்கர கிருஷ்ணன் : ராணி குப்பம்மாவா? ஓம்கார் சுவாமிகள் : விஜயநகர அரசின் கடைசிக் கிளை வழியில் வந்தவர் அவர். அந்த சமஸ்தானத்தின் சிவன் கோவிலில் பூஜகராக இருக்குமாறு என்னை அழைத்தார்.அவருடைய வலிந்த அழைப்பைத் தட்டமுடியாமல் அங்கு சிலகாலம் ஒரு குடிலில் எனது ஆசிரமத்தை அமைத்தேன். அது சிந்தாமணி ஆசிரமம். (மேடை அமைப்பு மாறுகிறது) காலம் : 1932ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் ஒருநாள்இடம் : துங்கபத்திரை நதிக்கரை ஆசிரமக் குடில்பாத்திரங்கள் : ராணி குப்பம்மா, நீலகண்ட பிரம்மச்சாரி (கன்னடத்தில் உரையாடுகிறார்கள்) ராணி குப்பம்மா : சுவாமி, நீங்கள் இங்கு வந்த பிறகு நானும் இந்தப் பிரதேசத்து மக்களும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறோம். நீலகண்ட பிரம்மச்சாரி : ஆனால் நான் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. இப்படிச் சொன்னதற்கு மன்னிக்க வேண்டும் மகாராணி. இந்த ஆசிரமத்தில் இப்போது மக்கள் கூட்டம் அதிகமாகி விட்டது. நான் தனிமையை விரும்புகிறேன். அது இப்போது கிடைப்பதே இல்லை. ராணி குப்பம்மா : மன்னிக்க வேண்டும் சுவாமி, பக்தர்கள் உங்களைச் சந்திப்பதில் காட்டும் ஆர்வத்திற்கு எங்களால் அணை போட முடியவில்லை. இப்போது உங்களிடம் ஒரு உதவி கோரி வந்துள்ளேன். நீலகண்ட பிரம்மச்சாரி : சொல்லுங்கள் மகாராணி.. ராணி குப்பம்மா : பக்கத்து சமஸ்தானத்து ராஜகுமாரியின் பெயர் லால்குமாரி. அவரது குடும்பத்தினரும் உங்கள் பக்தர்கள்தான். அவரை எங்கள் குடும்பத்திற்கு மணம் பேச விரும்புகிறோம். ஏனோ அவர்கள் தரப்பில் தயக்கம் காட்டுகிறார்கள். நீங்கள் சென்று பேசினால் நடக்கும். தாங்கள் இந்த உதவியைச் செய்ய வேண்டும். நீலகண்ட பிரம்மச்சாரி : தாயே, நான் துறவி. என்னிடம் இந்த வேலைகளைச் செய்யச் சொல்வது சரியல்ல. மன்னிக்க வேண்டும். ராஜகுமாரி குடும்பத்தார் என்னிடம் வைத்திருக்கும் மரியாதைக்காக நான் தலையிட்டு இப்படிச் சம்பந்தம் பேசுவதெல்லாம் தவறாகப் போய்விடும். இது என் வேலையல்ல. ராணி குப்பம்மா : கொஞ்சம் யோசியுங்கள் சுவாமி. நீங்கள் சென்றால் இரண்டு சமஸ்தானங்களும் நன்மை பெறும். நீலகண்ட பிரம்மச்சாரி : நீங்கள் கிளம்புங்கள் மகாராணி. இது என்னால் முடியாது. (ராணி கிளம்புகிறார். மேடை அமைப்பு மீண்டும் மாறுகிறது) ஓம்கார் சுவாமிகள் : அப்போது நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் தேடி வந்த ஆத்மானுபவம் எங்கே? ஆனால் நான் எங்கு வந்து நிற்கிறேன்?! இந்தத் தொந்தரவுகள் என்னை எங்கே கொண்டு சேர்க்கும் என்றெல்லாம் நீண்ட நேரம் யோசித்தேன். அன்று இரவே வெளியேறினேன். 1933ஆம் வருடம் டிசம்பர் மாதம் இந்த நந்தி மலை அடிவாரத்தில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் படுத்துக்கொண்டேன். அந்தத் தனிமை எனக்கு பிடித்துப் போனது. அந்த மண்டபமே எனது எளிய ஆசிரமம் ஆனது. காய் கிழங்குகளையும் இந்த நதி நீரையும் ஆகாரமாகக் கொண்டு அந்த மண்டபத்திலேயே தவசியாக வசிக்கத் தொடங்கினேன். சங்கர கிருஷ்ணன் : அந்த மண்டபம் எது சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : கீழே ஒரு கோவில் இருக்கிறதல்லவா? சிவன் கோவில். இந்த ஆசிரமம் அந்தக் கோவிலை மையமாக வைத்தே நடக்கிறது தம்பி. அந்தக் கோவில்தான் 1933இல் பாழடைந்த மண்டப மாக இருந்தது. சங்கர கிருஷ்ணன் : எப்படி சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : இப்போது நான் சொல்லப் போவதை நம்புவீர்களா என்று தெரியாது. அந்த மண்டபத்தின் பக்கத்தில் ஒரு புற்று இருந்தது. பெரிய கரையான் புற்று. இங்குள்ள மக்களுக்கோ எனக்கோ அதனால் எந்தத் தொந்தரவும் இல்லை. ஆனாலும் அந்தப் புற்று என்னை ஏனோ உறுத்திக்கொண்டே இருந்தது. அதற்குள் இருந்து என்னை யாரோ அழைப்பது போல. அது 1934ஆம் வருடம். அந்த வருடத்துப் பருவ மழை இந்தப் பிராந்தியத்தில் அடித்துப் பெய்தது. தென்பெண்ணை பிரவாகத்தில் இந்தப் பக்கமெல்லாம் ஒரே வெள்ளக் காடு. ஒரு வார காலம் வானம் உடைத்துக்கொண்ட பிறகு நிர்மலமானது. உயிர்கள் நிம்மதி கொண்டன. வெள்ளமும் வந்த வேகத்தில் வடிந்து போனது. போகும்போது புற்றையும் சேதப்படுத்திவிட்டுப் போனது. சற்றே சிதைந்திருந்த புற்றில் சிவலிங்கம் ஒன்று எட்டிப் பார்த்து அந்த மழைக்காலச் சூரிய ஒளியில் மின்னியது. நான் இங்குள்ள குடிகளோடு சேர்ந்து சிவலிங்கத்தை புற்றிலிருந்து வெளியேற்றி மண்டபத்தில் கொண்டு வைத்துப் பிரதிஷ்டை செய்தேன். அவருக்கு ஓம்காரேஸ்வரர் என்று நாமம் சூட்டினேன். அவர் பெயரையே எனக்கும் சூட்டிக்கொண்டேன். 1934ஆம் வருடம் ஜூலை மாதம் இந்த ஆசிரமம் கோவில் பக்கத்தில் உருவானது. இந்த வருடத்தோடு நாற்பது ஆண்டுகள் முடிந்துபோய்விட்டன. (கண்களை மூடிக்கொண்டு ஏதோ யோசிக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : ஆசிரமத்தில் என்னவெல்லாம் செய்து வருகிறீர்கள் சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : பார்த்திருப்பீர்களே.. கூட்டுப் பிரார்த்தனை மற்றும் ஆன்மீகப் பிரசங்கங்கள், ஆத்ம சோதனைகள் இதெல்லாம் பிரதானமானவை. தவிர, பக்தர்களும் தரும சிந்தனை உள்ள தனவான்களும் கனவான்களும் தரும் பொருளுதவி கொண்டு மக்களுக்கு எளிய தொண்டுகள் செய்து வருகிறோம். எளிய கைத்தொழில்களில் இங்குள்ள பெண்களை ஈடுபடுத்தி, அவர்கள் தயாரிக்கும் பொருட்களை ஆசிரமத்தின் மூலமாகவே விற்பனை செய்து உதவுகிறோம். ஆசிரமவாசிகள் கதரைத்தான் இப்போது வரை அணிகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாங்களே நூற்கவும் செய்தோம். மலைக் குடிகளுக்குச் சட்டபூர்வ உதவிகள் செய்வது, மருத்துவ உதவி செய்வது, பசித்து வரும் ஏழைகளுக்கும் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கும் ஆசிரமத்தில் மதிய உணவு தருவது..ஒன்று தெரியுமா? நான் இதைச் சிங்காரவேலர் நினைவாகச் செய்து வருகிறேன். ஏனெனில், ஏழைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு தரவேண்டும் என்பது அவர் விருப்பமாக இருந்தது. அவர் சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தபோது 1925இலேயே இதைச் செய்திருக்கிறார் என்று நான் சிறையில் இருந்தபோது பத்திரிகை வாயிலாகத் தெரிந்து வைத்திருந்தேன். ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் – இங்குவாழும் மனிதருக்கெல்லாம்பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப்பாரை உயர்த்திட வேண்டும்‘ என்று பாரதியார் சொன்னாரல்லவா தம்பி? சங்கர கிருஷ்ணன் : ஆசிரமத்திற்கு காந்தியடிகள் வந்தாரென்று சொன்னீர்களே.. அது எப்போது சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : சொல்கிறேன், ஆசிரமத்துக்கு வரவில்லை. இந்த நந்திமலை அடிவாரத்து விருந்தினர் விடுதிக்கு வந்திருந்தார். என்னைப் பார்க்க விரும்பிய அவரை நான் சென்று தரிசித்தேன். அதற்கு முன்பு ஜே.சி. குமரப்பா வந்ததைச் சொல்ல வேண்டும். அவர்தான் காந்திஜி வருகைக்குக் கட்டியம் கூறுவதுபோல ஆசிரமத்திற்கு வந்தார். வாருங்கள் ஆகாரம் முடித்த பிறகு பேசலாம். (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 20

நீலகண்ட பிரம்மச்சாரி – 20

காட்சி 20 காலம் : 1928ஆம் வருடத்தில் ஒருநாள் காலைஇடம் : ரங்கூன் சிறைச்சாலை, பர்மாபாத்திரங்கள் : சிறை அதிகாரி, நீலகண்டர் சிறை அதிகாரி : நீலகண்ட பிரம்மச்சாரி.. மதராசி.. Age thirty nine.. தமிழன்.. நீலகண்டர் : நீங்கள் தமிழ் அறிவீரா? சிறை அதிகாரி : ஆம், நன்றாகத் தெரியும். records பார்த்தேன். ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை. நல்ல பிள்ளையா மாறிட்டு வாறீங்க. continue பண்ணுங்க. இன்னும் நாலு வருசம் இருக்கு, நன்னடத்தை continue ஆச்சுன்னா தண்டனை குறையலாம். என்ன man? நீலகண்டர் : இப்படியே இருக்கத்தான் விரும்புகிறேன். சிறை அதிகாரி : உமக்கு help ஏதும் வேண்டுமானால் கேளுங்கள். நீலகண்டர் : என் எண்ணங்களைக் குறிப்புகளாக எழுதி வைக்க வேண்டும். அதற்கு உதவ முடியுமா? சிறை அதிகாரி : முடியும், உதவுகிறேன். நீலகண்டர் : வந்தனம். (அவருக்கான தனியறையில் அடைக்கப்படுகிறார். சிறிது நேரம் கழித்துக் காவலர் ஒருவர் வந்து பழுப்புக் காகிதங்களால் கெட்டி அட்டை வைத்துத் தைக்கப்பட்ட குறிப்பேடு ஒன்றையும் பென்சில் ஒன்றையும் கொடுத்துவிட்டுப் போகிறார். மேடையில் ஒளி குறைந்து மீண்டும் ஒளி வருகிறது. மாலை வேளை. சிறை அதிகாரி பார்வையிட்டுக்கொண்டே வருகிறார். நீலகண்டர் அறை முன்பு நிற்கிறார்) சிறை அதிகாரி : என்ன மிஸ்டர் நீலகண்டன், note book வந்ததா? Are you happy? நீலகண்டர் : ஆம், கிடைத்தது. நன்றி. சிறை அதிகாரி : ஏதேனும் எழுதினீரா? நான் பார்க்கலாமா? நீலகண்டர் : (குறிப்பேட்டை அவரிடம் நீட்டியபடி) போலீஸ்காரர் சந்தேகமா? சிறை அதிகாரி : இல்லை நீலகண்டரே, really I’m interested to see. (குறிப்பேட்டின் அட்டையைப் புரட்டியவுடன் முதல் தாளில் ‘பாரதி வாழ்க’ என்று எழுதியிருந்தது. அதைப் பார்த்துவிட்டு) சிறை அதிகாரி : யார் பாரதி? நீலகண்டர் : உங்களுக்குத் தெரியாதா? பாரதியார் தமிழ்நாட்டின் தவமாக வந்த மகா கவிஞர் அவர். சிறை அதிகாரி : ஓ..! ஓய்வு நேரம் கிடைக்கும்போது அவரைப்பற்றிக் கேட்டுக் கொள்கிறேன். Can You sing a song written by him? நீலகண்டர் :என்று தணியும் இந்த சுதந்திர தாகம்என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்என்று எமது அன்னை கை விலங்குகள் போகும்என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும் சிறை அதிகாரி : ஓ..! சுதந்திர தாகம்.. நீர் இன்னும் மாறவில்லை. But, this song creates pity in my mind! Is it really pity or disability or angry? (அடுத்த தாளைப் புரட்டி எழுதியிருப்பதை வாசிக்கிறார்) துக்கம் அமைதியைத் தருகிறதுதுக்கம் ஒன்றே சத்தியத்தின் உட்பொருளைஉள்வந்து ஊட்டுகிறதுதுக்கம் இனியது; துக்கம் நல்லது. (வாசித்துவிட்டுக் குறிப்பேட்டை நீலகண்டரிடம் நீட்டியபடி) Good  Mr. நீலகண்டர். நாளை பேசுவோம். (மேடையில் ஒளிமாறி ஓம்கார் ஆசிரமத்தில் காட்சி தொடர்கிறது) சங்கர கிருஷ்ணன் : ரங்கூன் சிறை அதிகாரி மிகவும் உதவியாக இருந்தாரா? ஓம்கார் சுவாமிகள் : நான் சந்தித்த அத்தனை சிறை அதிகாரிகளும் என் மீதுள்ள அச்சத்தால் முதலில் என்னிடம் கெடுபிடியாகவே இருந்தனர். நாளடைவில் என்னிடம் இணக்கமாக மாறியிருக்கிறார்கள். ரங்கூனில் இருந்தவர், முதலிலேயே என்னிடம் நட்பாகப் பேசினார். தொடர்ந்து தொந்தரவில்லாமல் என்னால் இருக்க முடிந்தது. சங்கர கிருஷ்ணன் : எந்தச் சிறைவாசம் உங்களுக்கு மிகுந்த கஷ்டத்தைத் தந்தது? ஓம்கார் சுவாமிகள் : மூல்தான் சிறைவாசத்தைச் சொல்லலாம். கம்பளி ரோமத்தைப் பிரிக்கிற வேலையை எனக்குக் கொடுத்துச் சிரமப்படுத்தினார்கள். ஆனாலும் அந்த வேலையின் நுட்பத்தைப் புரிந்துகொண்டேன். விடுதலையான பிறகு, ‘இந்தியாவின் கம்பளிக் கைத்தொழில்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதினேன். சங்கர கிருஷ்ணன் : ரங்கூன் சிறைச்சாலையில்தான் ஆன்மீகப் பாதைக்குள் மனம் சென்றதா? ஓம்கார் சுவாமிகள் : அப்படியும் சொல்லலாம். ஆனால் அரவிந்தர் போன்றோரிடம் ஏற்பட்ட தொடர்புதான் அதன் ஆரம்பம் என்று சொல்ல வேண்டும். நீண்ட தனிமைச் சிறை என்னிடம் இருந்த அரசியல் தீவிரத்தைக் குறைத்துக்கொண்டே வந்தது. சங்கர கிருஷ்ணன் : ரங்கூன் சிறையிலிருந்து எப்போது விடுதலை ஆனீர்கள்? ஓம்கார் சுவாமிகள் : தண்டனைக் காலத்தைக் குறைத்தார்கள். எட்டாம் ஆண்டு சிறைவாசம் முடிந்து வெளியே வந்தேன். 1930ஆம் வருடம் ஜூன் மாதம் 30ஆம் தேதி விடுதலையானேன். சங்கர கிருஷ்ணன் : விடுதலையின்போது உங்கள் உளப்பாங்கு எவ்விதம் இருந்தது? ஓம்கார் சுவாமிகள் : நான் வெளியே வந்தபோது மனதளவில் முழுப் பக்குவம் கொண்ட திடபுருஷனாக விளங்கினேன். உடலிலும் உள்ளத்திலும் சோர்வுகளில்லை. எனது குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து போயிருந்தன. மனதிலிருந்த மாசு மருவெல்லாம் அகன்று போயிருந்தன. சங்கர கிருஷ்ணன் : மொத்தமாக 16 ஆண்டுகள் சிறைவாசம். பழைய புரட்சிகர இயக்கத்தில் செயல்பட்டவர்களில் சிறையில் நெடுங்காலம் கழித்தவர் நீங்கள்தான் அல்லவா? ஓம்கார் சுவாமிகள் : நான் வெளிவந்தபோது சுப்பிரமணிய சிவா இறந்து போயிருந்தார். சிதம்பரம் பிள்ளை அரசியலிலிருந்து விலகியிருந்தார். கம்யூனிசத்தில் எனக்கு ஆர்வம் குறைந்து போனது. உண்மையில் சிங்காரவேலரிடம் இருக்கும்போதுகூட தாமரை இலைத் தண்ணீர்போல ஒரு ஒட்டாமையே இருந்து வந்தது. காந்தியடிகள் தண்டி யாத்திரை தொடங்கிக் கைதாகி இருந்தார். என் பாதை என் மனதில் வந்திருந்தது. செயலில் வர மேலும் ஒரு ஆண்டு ஆனது. சாது வாழ்க்கை 1931ஆம் ஆண்டு ஆங்கிலப் புது வருஷத் தொடக்கத்தில் தொடங்கியது. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 19

நீலகண்ட பிரம்மச்சாரி – 19

காட்சி 19 இடம் : ஓம்கார் ஆசிரமம்(ஓம்கார் சுவாமிகள் – சங்கர கிருஷ்ணன் உரையாடல் தொடர்கிறது) ஓம்கார் சுவாமிகள் : ஆசிரமத்தின் பக்கத்தில் ஓடும் தென்பெண்ணை நதியைப் பார்த்தீர்கள் அல்லவா சங்கர கிருஷ்ணன்..? ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் அமைதியாக ஓடுகிறது. மலைச் சரிவில் ஆர்ப்பரிக்கும் புனல், சமவெளியில் அமைதியாகப் போவது போல, என் வாழ்க்கை காட்டாற்று வெள்ளமாகப் பிரவாகித்து வயலுக்குப் பொசியும் வாய்க்கால் போல அமைதி ஆனது. இங்கு வந்தபோது நான் இந்த நதியைப் போல அமைதியாக இருந்தேன். எனக்குள் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த அரசியல் சிந்தனைகளிலிருந்து நான் விடுதலை பெற்றிருந்தேன். ஆனால், தொண்டு செய்வதை விட்டுவிடவில்லை. இப்போது வரை 41 வருடங்களாக இங்குள்ள எளிய மக்களுக்குத் தொண்டு செய்து வருகிறேன். எனது ஆன்மீக சாதனைகள் மட்டுமல்ல இந்த ஆசிரம வாழ்க்கை. தொண்டின் மீது நான் கொண்ட தணியாத தாகத்தின் ஒரு பாகமும்தான். தேசத் தொண்டு என்பது, தேச மக்களுக்காக நாம் செய்வதுதான் என்பதை எனக்குப் போதித்தவர்கள் சிதம்பரம் பிள்ளையும் சிங்காரவேலரும்தான். சங்கர கிருஷ்ணன் : சிங்கார வேலரின் கம்யூனிஸ்ட் இயக்க வேலைதானே உங்களை இரண்டாவது சிறைவாசத்திற்குக் கொண்டு சென்றது..? ஓம்கார் சுவாமிகள் : என் கூடவே பிறந்தது போன்ற முரட்டுத்தனம்தான் அதற்குக் காரணம். சிறு வயதிலிருந்து நான் முரடனாகவே இருந்திருக்கிறேன். ஒரு நிலைகொள்ளாத உள்ளம் என்னை உந்தித் தள்ளி வந்திருக்கிறது. அடிக்கடி வீட்டைவிட்டு ஓடிப் போயிருக்கிறேன். பாலர் சந்திப்புக்குப் பிறகு, முற்றிலுமாக ஒரு பரதேசி போலச் சுற்றல் வாழ்க்கைதான். புரட்சி இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பது என்பது ஒரு சாக்கு போலத் தொடர்ந்து வந்தது.பாய்ந்து வரும் காட்டாறு, பள்ளம் கண்டால் தங்கிவிடும் அல்லவா? அதுபோலத் தங்கியிருக்கிறேன். பள்ள மனது நிறைவானதும் பயணப்பட்டு விடும் அல்லவா? அதுபோல தங்குதலும் தாவிப் போவதுமாக ஓடிக் கொண்டிருந்தேன். மேடுகள் பிரவாகத்திற்கு லட்சியமில்லை. தள்ளிச் சரித்துவிட்டுத் தன் பாதையை அமைத்துக்கொள்ளும். அந்த ஓட்டத்தில் ஒரு புரட்சியாளனுக்கு இருக்க வேண்டிய விவேக மனோபாவம் எனக்குக் கைகூடவில்லை. நான் ஏற்றுக்கொள்ளாத எந்த விஷயத்தோடும் நான் சமரசம் கொள்ளவில்லை. அதுவே எனது அடையாளம். அதுவே என் பலமும் பலவீனமும். நான் இரண்டாம் தடவை சிறைப்பட்டதைச் சொல்கிறேன்; உங்களுக்கே புரியும். சங்கர கிருஷ்ணன் : சொல்லுங்கள் சுவாமி.. ஓம்கார் சுவாமிகள் : அது 1922ஆம் வருடம் ஜூலை மாதம். அப்போது சிங்காரவேலர், கயாவில் நடக்கப்போகும் காங்கிரசில் கம்யூனிஸ்ட்கள் செய்ய வேண்டிய உத்திகளை வகுத்துக்கொண்டிருந்தார். நிறைய பயணங்களைச் செய்துகொண்டிருந்தார். அந்தக் காங்கிரசில்தான் பூரண சுயராஜ்யத் தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கம்யூனிஸ்ட்கள் முனைப்பாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஏனென்றால், காங்கிரசின் திட்டம் அப்போது பூரண சுயராஜ்யம் இல்லை. உங்களுக்குத் தெரியுமா..? அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது சிங்காரவேலர்தான். அந்தக் காங்கிரஸ் நிகழ்ச்சிகளெல்லாம் நான் சிறை சென்ற பின்பு நிகழ்ந்தவை. நான் பத்திரிகை பார்த்துத் தெரிந்துகொண்டவை. ஆகவே சென்னை வேலைகளை நாங்களாகவே செய்துகொண்டிருந்தோம். அப்போது, நான் தயாரித்த பிரசுரம் ஒன்று போலீஸ் உளவாளிகளிடம் சென்றது. அதை தயாரித்தவன் நான் என்பதும், நான் ஆஷ் கொலை வழக்கின் பிரதானக் குற்றவாளி என்பதும், பழைய சிறைப் பறவை என்பதும் அவர்களைப் பதற வைத்தன.இவன் இன்னும் இயங்குகிறான் என்பதும் அதுவும் கம்யூனிஸ்ட் பிரசாரகன் என்பதும் தெரிந்தவுடன் சுறுசுறுப்பானார்கள். அந்தப் பிரசுரத்தை ராஜதுவேசப் பிரசுரம் என்று கொண்டு, அதைப் பிரசுரித்த என்மீது வாரண்ட் கொண்டுவந்தார்கள். நான் தலைமறைவானேன். சங்கர கிருஷ்ணன் : ஏன் தலைமறைவானீர்கள்..? உங்கள் தோழர்களிடம் ஆலோசிக்கவில்லையா..? ஓம்கார் சுவாமிகள் : அதுதான் என் விவேகமின்மை. போலீஸ் என்னைத் தேடினார்கள். 1922 ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, திருவல்லிக்கேணி இடுகாட்டில் மறைந்திருந்த என்னைக் கைது செய்யச் சுற்றி வளைத்தார்கள். (மேடையில் ஓம்கார் சுவாமிகள் அறையில் இருள் பரவி மறுபக்கம் ஒளிர்கிறது) காலம் : 1922ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதிஇடம் : விசாரணை நீதிமன்றம், சென்னைபாத்திரங்கள் : விசாரணை அதிகாரி, நீலகண்டர் விசாரணை அதிகாரி : மிஸ்டர் நீலகண்டர், உம்மீது மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.முதலாவது, நீர் ராஜ துவேஷப் பிரசுரங்கள் அச்சிட்டு, மக்களிடம் அரச விரோதத்தைத் தூண்டியுள்ளீர்.இரண்டாவது, நீர் உரிமம் இல்லாமல் கைத் துப்பாக்கி வைத்திருந்தீர்.முன்றாவதாக, அந்தத் துப்பாக்கியால் உம்மைக் கைது செய்ய வந்த போலீஸ் ஜவான்களில் ஒருவரைச் சுட்டீர். அந்தத் துப்பாக்கி சரியாக வேலை செய்யாததால் அந்த ஜவான் தப்பித்தார். இருப்பினும் அது கொலை முயற்சியே.இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உமது பதில் என்ன? நீலகண்டர் : பிரிட்டிஷார் சட்டத்தையும் கோர்ட்டையும் நான் மதிப்பதில்லை. இந்தியர்கள் உருவாக்காத சட்டங்களுக்குக் கீழ்ப்படிய எனக்கு விருப்பமில்லை.உங்கள் சட்டத்தின் முன்பு ராஜதுவேஷமாகச் சொல்லப்படும் எமது அறிக்கை, எமது மக்களின் எதிர்கால விடுதலைக்கானது. அந்த விடுதலைக்காக அவர்களை அணி சேர்ப்பதற்கானது. மற்ற குற்றச்சாட்டுகளில், நானே என் நடத்தையின் மீது விளக்கம் சொல்வது அவசியம் என்று தோன்றவில்லை. நீங்கள் உங்கள் தீர்ப்பைக் கூறலாம். எதுவாயினும் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன். (மேடையில் ஒளி இடம் மாறி ஓம்கார் ஆசிரமத்தில் விரிகிறது) ஓம்கார் சுவாமிகள் : எனக்குப் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அளித்தார்கள். பழைய புரட்சிக்கார குற்றவாளி என்பதாலும் என் பழைய சிறை வரலாறுகள் கலகச் சாயையைக் கொண்டிருப்பதும் சிறையிலும் நான் மற்ற கைதிகளின் உரிமைகளைப் பேசுபவன் என்பதை அடையாளப்படுத்தி நின்றன என்பதாலும் சிறை அதிகாரிகள் என்னைக் குறித்து அச்சத்தில் இருந்தனர். ஆகவே என்னை இந்தியாவுக்கு வெளியே அனுப்பிவைத்தார்கள். ஆனால் சிறைவாசத்தில் அமைதியானவனாக மாறிக்கொண்டு வந்தேன். என் மனப் புயல்கள் ஓய்ந்து வந்தன. சங்கர கிருஷ்ணன் : உங்கள் வாழ்க்கைமீது மிகுந்த மரியாதை வருகிறது சுவாமி.. உங்கள் தற்போதைய ஆசிரம வாழ்க்கையின்மீதுகூட என்னால் விளக்க முடியாத பிரியம் வருகிறது. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 5

நீலகண்ட பிரம்மச்சாரி – 5

காட்சி 5 களமும் காலமும் : அதே களம், அதே காலம் பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள் மற்றும் சங்கர கிருஷ்ணன் (பூஜை முடித்து வந்த ஓம்கார் சுவாமிகள் தம் இடத்தில் அமர்ந்துகொள்கிறார். கூடவே வந்த சங்கர கிருஷ்ணன், தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே பாயில் அமர்கிறார்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. இங்கே மாலை ஆறு மணிக்கெல்லாம் நல்லா இருண்டு விடுகிறதே?! ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, மழைக்காலத்தில் இன்னும் சீக்கிரமாகவே இருண்டுவிடும். சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. வ.உ.சி.யைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி.. பிள்ளைவாள் திருநெல்வேலியில் கைதாகும் வரை நான் அவருடன் பட்டும் படாமலும்தான் இருந்தேன். பிள்ளைவாளுடன் நான் இருந்த சொற்பக் காலம் மிக வேகமாக ஓடியது. என் பாதை வேறு, பிள்ளையின் பாதை வேறு என்பதை நான் அவரோடு சேர்ந்த கொஞ்சநாளிலேயே தெரிந்துகொண்டேன். சங்கர கிருஷ்ணன் : எப்படி சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : அதைத் தெரிந்துகொள்ள காலத்தில் கொஞ்சம் பின்னால் போக வேண்டும். பாரதி சொன்னாரல்லவா? பாலர் பற்றி.. பாலரை நேரில் சந்தித்தேன். அப்புறம் அவரது செயலாளராக இருந்த குஞ்சு பானர்ஜி என்பவரைச் சந்தித்திருந்தேன். அவர்கள் மூலம் வங்கத்திலும் மராட்டியத்திலும் பஞ்சாபிலும் ரகசிய வேலைகளைச் செய்துவந்த, தீவிர தேசபக்த பலாத்கார இயக்கங்களை அறிந்துகொண்டேன். அவர்கள் என்னைத் தமிழ்நாட்டில் இந்த பலாத்கார இயக்கத்திற்குத் தகுந்த ஆட்களைத் தேர்வு செய்யப் பணித்தார்கள். நான் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டேன். இந்த விஷயம் பாரதிக்கும் சிதம்பரம் பிள்ளைக்கும் தெரியாது. என் ஆள் சேர்க்கும் பணிக்குப் பிள்ளைவாளோடு போவது பயனளிக்கும் என்றுதான் போனேன். ஆனால் சிதம்பரம் பிள்ளையின் தேசப் பணி வேறு; என் பாதை வேறாக இருந்தது. சங்கர கிருஷ்ணன் : வ. உ. சி.க்கோ பாரதிக்கோ அல்லது திலகருக்கோ பலாத்கார வேலைகளில் நம்பிக்கை கிடையாதா..? ஓம்கார் சுவாமிகள் : இருந்தது என்றுதான் நம்புகிறேன். ஆனால் அதற்குக் காலம் கனியவில்லை என்று அவர்கள் நினைத்தார்கள்.‘நேரடி பலாத்கார வேலைகளைவிட, தேசபக்தியைப் பரப்புவதே உமது பணியாக இருக்கட்டும்‘ என்று, சகோதரி நிவேதிதா தமக்குக் கட்டளை இட்டதாக, பாரதியார் என்னிடம் ஒருமுறை சொன்னார்.அதுபோக, பாரதியும் பிள்ளைவாளும் தமிழ்க் கலையிலும் இலக்கியத்திலும் பழக்கம் உடையவர்கள். பலாத்கார இரகசிய நடவடிக்கைகள், தமிழ் அரசியல் நெறிக்குப் பொருந்தி வரவில்லை என்று அவர்கள் நம்பினார்கள்.(கொஞ்சம் நிறுத்திக்கொள்கிறார்) சங்கர கிருஷ்ணன் : சிதம்பரம் பிள்ளையிடம் எவ்வளவு நாள் இருந்தீர்கள்? ஓம்கார் சுவாமிகள் : மிகக் கொஞ்சமாத்தான். சென்னையிலும் தூத்துக்குடியிலுமாக ஒரு மூனு மாசமிருக்கலாம். ஆனா அவரு கூட இருந்ததனால, பின்னால திருநெல்வேலி ஜில்லாவுல எனக்கு நெறைய தொடர்பு கெடச்சுது. அவர் வக்கீலாக இருந்தார். நிறைய பேருக்கு உதவி செய்துவந்தார். சுதேசிப் பிரசாரம், பஞ்சாலைத் தொழிலாளர் கூட்டங்கள், சுதேசி பண்டகசாலைன்னு நிறைய பணிகளைச் செஞ்சு வந்தார். சுதேசிக் கப்பல் விட்டது பெரிய வேலை. இப்படியொரு யோசனை சிதம்பரம் பிள்ளைக்கு எப்படி வந்திருக்கும் என்பது அந்தக் காலத்தில் எல்லாருக்கும் ஆச்சர்யமாய் இருந்தது தம்பி. அதை எப்படி வெள்ளைக்காரன் பொறுத்துக்கொள்வான்? அதுதான் அவரு மேல வெள்ளைக்கார அதிகாரிகளுக்குப் பகையைக் கொண்டுவந்தது. அப்புறம் அவரு நடத்துன மில் போராட்டம், வெள்ளைக்காரனுக்குப் புயலும் வெள்ளமும் சேர்ந்து தாக்குனது போல ஆச்சுது. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்காரங்களும் கோரல் மில் டைரக்டர்களும் உடன் பிறந்தவங்க மாதிரிதான். சிதம்பரம் பிள்ளை ரெண்டு பக்கமும் வந்தாரு. வணிகம், அரசியல்-ன்னு இரண்டு பக்கமும் கூர்மையான கத்தியோட சிதம்பரம் பிள்ளையை வெள்ளை நிர்வாகம் பார்த்தது தம்பி. தொழிலாளிங்கன்னு ஒரு சக்தியை முதன்முதலா இந்தத் தமிழ்நாடு அப்போதுதான் கண்டது தம்பி. படிச்சவங்களே இருந்த அரசியல்ல, படிக்காத ஜனங்கல்லாம் அணி அணியா வந்ததைப் பார்த்து வெள்ளை அதிகாரம், வெலவெலத்துப் போனது. மில் தொழிலாளிகள் கூலியும் கேட்டார்கள். வந்தேமாதரமும் முழங்கினார்கள். இது 1908இல் மிகப்பெரிய அதிசயம் தம்பி. (மீண்டும் சிறிய சிந்தனைக்குப் பிறகு தொடர்கிறார்) ஆனா, பிள்ளை வேலைகள்ள இருந்த சூட்சும அரசியல் அப்போ எனக்குப் புரியல; பின்னாலதான் புரிஞ்சுது. அந்த அரசியலின் எதிர்வினை ரொம்ப நாள் மறையவே இல்லை. சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையின் எதிர்விளைவு, மூன்றாண்டுகள் கழித்து மணியாச்சியில் வெடித்தது. ஆகவே, என் வாழ்க்கையில் நான் நேரடியாக ஈடுபடாத ஆஷ் கொலையில் சிதம்பரம் பிள்ளையின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் பின்னணி இருந்தது. 1908இல் பிள்ளை செய்த வேலைகளுக்கும் எங்களோட பலாத்கார வழிமுறைகளுக்கும் இடைவெளி நெறைய. அதனால நான் சிதம்பரம் பிள்ளைக்கு வேலை செஞ்ச கையோடே, தனியா ரகசிய இயக்கத்திற்கும் திருநெல்வேலி ஜில்லா முழுசும் அலைஞ்சு ஆள் சேர்த்து வந்தேன். சிதம்பரம் பிள்ளையோட சுதேசி இயக்கத்துல வேலை செஞ்சவங்கள்ள இருந்து சில பேரை எங்க இயக்கத்திற்கும் சேர்த்துகிட்டேன். சங்கர கிருஷ்ணன் : வ.உ.சி. கைதானவுடன் நடந்த எழுச்சிகளில் உங்கள் நடவடிக்கைகள் ஏதுமில்லையே! அப்போது நீங்கள் திருநெல்வேலியில இல்லையா சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : ‘ சொல்றேன். 1908 புது வருஷம் பிறந்தபோது, சூரத் காங்கிரஸ் முடிஞ்சு சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடி வந்தப்போ, அவருகூட நானும் வந்தேன். அப்போது, தூத்துக்குடி சுதேசி இயக்கச் சூட்டில் பொங்கிக்கொண்டிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து பத்மநாப அய்யங்கார் வந்திருந்து, தூத்துக்குடியில் பிரசங்கங்கள் செய்தார். தூத்துக்குடி எங்கிலும் பெரிய கிளர்ச்சி நிலை சூழ்ந்திருந்தது. அப்போ… (மேடையில் ஒளி மங்கி இருளாகித் திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 2

நீலகண்ட பிரம்மச்சாரி – 2

காட்சி 2 (திரை எழவில்லை. மெல்லிய செவ்வொளி பரவி நிற்கிறது.பின்னணியில் குரல் மட்டும் ஒலிக்கிறது) குரல் : “பாரதியார் சொன்னதுபோல, தேசபக்தச் செம்மல்கள் பசி தாகம் மறந்து, சொந்த வாழ்க்கை பற்றிய நினைவே இல்லாமல் பட்டினியாக அலைந்ததெல்லாம் எமது நாட்டின் விடுதலைக்காகவே வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்பகுதி. அது தமிழ்நாட்டு விடுதலைப் போர் வரலாற்றில், உன்னதமான காலமாக இருந்தது. விடியும்போது வீட்டில் இருந்தால், இருட்டும்போது வீடா அல்லது சிறையா என்று அவர்களுக்குத் தெரிந்திராது. பேச வாய்ப்பூட்டு; எழுதினால் தணிக்கை; நடந்தால் கண்காணிப்பு. இப்படி வாழ்ந்தவர்கள் இருபதாம் நூற்றாண்டின் அடுத்த கால்பகுதியில் என்னவானார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவர்களில் சிலபேரின் வரலாற்றையேனும் நமது இளையதலைமுறைக்குச் சொல்லிவைக்கலாம் என்பதால், இந்த நீலகண்ட பிரம்மச்சாரியை இங்கு அழைத்து வந்துள்ளோம். கால வெள்ளத்தில் நாம் நூறு ஆண்டுகள் பின்னாலிருந்து பார்க்கப் போவதால், முன் பின்னாக, நம் வசதிக்கேற்றார் போலவே பார்க்கப் போகிறோம். நாம் சந்திக்கப்போகும் நிகழ்ச்சிகளும் நண்பர்களும் நமக்கு காலப் பிரமாணத்தை உணர்த்தி, உதவியாக இருப்பார்கள்.” (ஒளி மங்கி இருளாகிறது. மீண்டும் ஒளி பரவ, திரை விலகுகிறது) காலம்: 1974 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் ஒருநாள் காலைகளம்: சத்குரு ஓம்கார் ஆசிரமம். மைசூர் நந்தி மலை அடிவாரம்பாத்திரங்கள்: சத்குரு ஓம்கார் சுவாமிகள், சீடர், பத்திரிகையாளர் சங்கர கிருஷ்ணன் பத்திரிகையாளர் சங்கர கிருஷ்ணன், நந்திமலை அடிவார ஆசிரமம் முன்பு வந்து, வாசலில் நிற்கும் சீடரிடம் பேசும்போது காட்சி தொடங்குகிறது. கட்டட முகப்பில் ‘SATHGURU OMKAR ASHRAM, NANDHI HILLS’ என்ற பழைய போர்டு தொங்குகிறது. சங்கர கிருஷ்ணன்: “நான் ஒரு பத்திரிகையாளன். சென்னையில் இருந்து வருகிறேன். சுவாமிஜியைப் பார்க்கவேண்டும்..” சீடன் : “தங்கள் பெயர்?” சங்கர கிருஷ்ணன் : “சங்கர கிருஷ்ணன்” சீடன் : “கொஞ்சம் பொறுங்கள்.. சுவாமிஜியிடம் அனுமதி கேட்டு வருகிறேன்.” (உள்ளே சென்று சில கணங்களில் திரும்புகிறார்.) சீடன் : “வாங்க.. சுவாமிஜி அழைக்கிறார்..” (இருவரும் உள்ளே போகிறார்கள்.மேடை இருளுக்குள் போய், ஒளி திரும்பும்போது, ஆசிரம உள் அறையாகத் தெரிகிறது. சுவாமிகள் ஒரு பாயில் அமர்ந்திருக்கிறார். படித்துக்கொண்டிருந்த ஆங்கில செய்தித்தாளைக் கீழே வைத்துவிட்டு, சுவாமிகள் உள்ளே வரும் சங்கர கிருஷ்ணனைப் பார்க்கிறார். செய்தித்தாளின் தலைப்பில் பீஹார் மாணவர் போராட்டங்கள் பற்றிய செய்தியும் ஜெயப்ரகாஷ் நாராயணன் இந்திரா காந்தி அரசைக் கண்டித்திருப்பதும் பெரிய எழுத்துகளில் தெரிகிறது.) ஓம்கார் சுவாமிகள் : “வாங்க தம்பி.. அமருங்கள்.” (சுவாமிகளின் எதிரில் விரிக்கப்பட்டிருக்கும் இன்னுமொரு பாயில் சங்கர கிருஷ்ணன் உட்கார்ந்துகொள்கிறார்.) சங்கர கிருஷ்ணன் : “வணக்கம் சுவாமிஜி..” ஓம்கார் : “வணக்கம். உங்கள் பெயர், எனக்குப் பழைய நினைவுகளை இழுத்து வருகிறது..” சங்கர கிருஷ்ணன் : “என் பெயரா சுவாமி?” ஓம்கார் : “ஆமாம்.. அது இருக்கட்டும்.. பிரயாணம் பத்திரமாக இருந்ததா..? ஜெயப்பிரகாஷ் கிளர்ச்சி பலமா இருக்கே..!” சங்கர கிருஷ்ணன் : “இங்கே எல்லாம் அவ்வளவு தீவிரம் இல்லை சுவாமிஜி..” ஓம்கார் : “நல்லது.. என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்தீர்கள்?” சங்கர கிருஷ்ணன் : “பத்து நாள் முன்னாலதான் உங்களைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன். தலைவர் காமராசர் உங்களப் பத்தி பேசின செய்தி, எல்லாப் பத்திரிகையிலேயும் வந்தது. உங்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரருக்கான தாமிரப் பட்டயம் கொடுக்கணுமின்னு அரசாங்கத்தக் கேட்டிருந்தாரு காமராசர்..” ஓம்கார் : “காமராசருக்கு ரொம்ப நல்ல மனசு.. ஆனா அவரே பெரிய தியாகி ஆச்சே.. இப்படியெல்லாம் சலுகை கொடுப்பதற்கும் கேட்பதற்கும் தந்தா வாங்குறதுக்கும் அவருக்கே வெட்கமா இருந்திருக்கும். இப்போ விடுபட்டவங்களுக்குக் கேக்குறாரு. நான் இரண்டாம் தடவை ஜெயிலுக்குப் போகும்போது, அவருக்கு இருபது இருபத்தஞ்சு வயசு போல இருக்கும். சத்தியமூர்த்திகூட ஒரு தடவை பாத்திருக்கேன்..” சங்கர கிருஷ்ணன் : “நீங்களும் தாமிரப் பட்டயத்தை வேண்டாமுன்னு சொல்லிட்டதா செய்தி கேள்விப்பட்டேன்.” ஓம்கார் : “அதுகூட தெரிஞ்சிடுத்தா..? காமராசருக்கிட்ட போயி என் தம்பிதான் சிபாரிசு பண்ணிருக்கான். அவனை சத்தம் போட்டு, போன மாசம்தான் கடிதம் எழுதியிருந்தேன்..” சங்கர கிருஷ்ணன் : “ஏன் சுவாமி?” ஓம்கார் : “அது அவசியமில்ல தம்பி. நாட்டுக்காக செஞ்ச வேலை. நாங்க ஆரம்பிச்சு வச்சோம். காந்தி வந்து முடிச்சு வச்சார். எங்க கோளாறு எங்களுக்குத் தெரியல. பெருசா யோசிச்சோம். நாங்க செஞ்சுட்டா, ஜனங்க எங்க பின்னால வந்துருவாங்கன்னு நெனச்சிட்டோம். ஆனா, ஜனங்கள தன் வேலைக்குத் தயார் பண்ணிட்டுத்தான் காந்தி தம்மோட வேலையெல்லாம் செஞ்சார்.” (பேச்சை நிறுத்திவிட்டு, கண் மூடி ஏதோ யோசனையில் ஆழ்ந்து போகிறார். சில நொடிகள் சென்ற பின்னே..) சங்கர கிருஷ்ணன் : “சுவாமி..” ஓம்கார் : “பழைய யோசனை தம்பி..” சங்கர கிருஷ்ணன் : “அதெல்லாம் கேட்கணுமின்னுதான் உங்களைப் பார்க்க வந்திருக்கேன் சுவாமி..” ஓம்கார் : “அந்தப் பழைய கதையை எல்லாம் இப்போ நான் யாருக்கும் சொல்றதில்ல தம்பி..” சங்கர கிருஷ்ணன் : “அப்படி இல்லை சுவாமிஜி. உங்கள் கதை எல்லாருக்கும் தெரிய வேணும். ரொம்ப தூரத்திலிருந்து அதை எல்லாம் தெரிஞ்சுக்கிடத்தான் வந்திருக்கேன். நீங்க சொல்றத பத்திரிகைல போட உங்க அனுமதியும் வேணும் சுவாமிஜி..” ஓம்கார் : “முரட்டுத்தனமா முடியாதுன்னு சொல்ல முடியலயே தம்பி.. இது எனக்கே ஆச்சர்யமா இருக்கு. நான் சிறுபிள்ளையிலே இருந்தே ரொம்ப முரண்டு தம்பி. உங்க பெயரில எனக்கு ஏதோ வசீகரம் வருது. உங்ககிட்டே சொல்றேன். ஆனா, பத்திரிகையிலே கட்டாயம் வேண்டாம்..” சங்கர கிருஷ்ணன் : “ரொம்ப சந்தோஷம் சுவாமி. உங்க அனுமதி இல்லைன்னா உங்க கதை பத்திரிகையில வராது சுவாமி..” ஓம்கார் : “அந்தப் பழைய கதையை உன் பெயர் கொண்ட என் தோழனிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்..கடைய நல்லூர் சங்கர கிருஷ்ணன்..! அவன் ரொம்பத் தீவிரமான ஆளு. சிதம்பரம் பிள்ளைக்காக வேலை செஞ்சிக்கிட்டிருந்தான். சிதம்பரம் பிள்ளை வேலைக்காகவே நானும் அலைஞ்சபோது பழக்கமானான். பின்னால நாங்க இயக்கம் தொடங்கினப்போ, வாஞ்சிநாதனயும் இன்னும் சில பேரையும் அவன்தான் கொண்டு வந்தான். வாஞ்சி ஐயர் ஆஷ் கலெக்டர சுட்டப்போ, கூடப் போனது இவன்தான்..” (கதையை நிறுத்திவிட்டு..) “சங்கர கிருஷ்ணா, முதலில் ஆகாரம் செய்யுங்கள்.. நிதானமாகப் பேசலாம்..” (சீடனைப் பார்த்து..) “அழைத்துப் போய் ஆகாரம் பண்ணி வைப்பா..” (சங்கர கிருஷ்ணன் செல்ல, சுவாமிஜி மீண்டும் செய்தித்தாளைக் கையில் எடுத்துக்கொள்கிறார். மெல்ல இருள் பரவ, திரை விழுகிறது) (நாளை தொடர்வோம்)