காட்சி 2

(திரை எழவில்லை. மெல்லிய செவ்வொளி பரவி நிற்கிறது.
பின்னணியில் குரல் மட்டும் ஒலிக்கிறது)

குரல் : “பாரதியார் சொன்னதுபோல, தேசபக்தச் செம்மல்கள் பசி தாகம் மறந்து, சொந்த வாழ்க்கை பற்றிய நினைவே இல்லாமல் பட்டினியாக அலைந்ததெல்லாம் எமது நாட்டின் விடுதலைக்காகவே வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்பகுதி. அது தமிழ்நாட்டு விடுதலைப் போர் வரலாற்றில், உன்னதமான காலமாக இருந்தது. விடியும்போது வீட்டில் இருந்தால், இருட்டும்போது வீடா அல்லது சிறையா என்று அவர்களுக்குத் தெரிந்திராது.

பேச வாய்ப்பூட்டு; எழுதினால் தணிக்கை; நடந்தால் கண்காணிப்பு. இப்படி வாழ்ந்தவர்கள் இருபதாம் நூற்றாண்டின் அடுத்த கால்பகுதியில் என்னவானார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவர்களில் சிலபேரின் வரலாற்றையேனும் நமது இளையதலைமுறைக்குச் சொல்லிவைக்கலாம் என்பதால், இந்த நீலகண்ட பிரம்மச்சாரியை இங்கு அழைத்து வந்துள்ளோம்.

கால வெள்ளத்தில் நாம் நூறு ஆண்டுகள் பின்னாலிருந்து பார்க்கப் போவதால், முன் பின்னாக, நம் வசதிக்கேற்றார் போலவே பார்க்கப் போகிறோம். நாம் சந்திக்கப்போகும் நிகழ்ச்சிகளும் நண்பர்களும் நமக்கு காலப் பிரமாணத்தை உணர்த்தி, உதவியாக இருப்பார்கள்.”

(ஒளி மங்கி இருளாகிறது. மீண்டும் ஒளி பரவ, திரை விலகுகிறது)

காலம்: 1974 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் ஒருநாள் காலை
களம்:
சத்குரு ஓம்கார் ஆசிரமம். மைசூர் நந்தி மலை அடிவாரம்
பாத்திரங்கள்: சத்குரு ஓம்கார் சுவாமிகள், சீடர், பத்திரிகையாளர் சங்கர கிருஷ்ணன்

பத்திரிகையாளர் சங்கர கிருஷ்ணன், நந்திமலை அடிவார ஆசிரமம் முன்பு வந்து, வாசலில் நிற்கும் சீடரிடம் பேசும்போது காட்சி தொடங்குகிறது. கட்டட முகப்பில் ‘SATHGURU OMKAR ASHRAM, NANDHI HILLS’ என்ற பழைய போர்டு தொங்குகிறது.

ஓம்கார் சுவாமிகள் ஆசிரமம், நந்தி மலை

சங்கர கிருஷ்ணன்: “நான் ஒரு பத்திரிகையாளன். சென்னையில் இருந்து வருகிறேன். சுவாமிஜியைப் பார்க்கவேண்டும்..”

சீடன் : “தங்கள் பெயர்?”

சங்கர கிருஷ்ணன் : “சங்கர கிருஷ்ணன்”

சீடன் : “கொஞ்சம் பொறுங்கள்.. சுவாமிஜியிடம் அனுமதி கேட்டு வருகிறேன்.”

(உள்ளே சென்று சில கணங்களில் திரும்புகிறார்.)

சீடன் : “வாங்க.. சுவாமிஜி அழைக்கிறார்..”

(இருவரும் உள்ளே போகிறார்கள்.மேடை இருளுக்குள் போய், ஒளி திரும்பும்போது, ஆசிரம உள் அறையாகத் தெரிகிறது. சுவாமிகள் ஒரு பாயில் அமர்ந்திருக்கிறார். படித்துக்கொண்டிருந்த ஆங்கில செய்தித்தாளைக் கீழே வைத்துவிட்டு, சுவாமிகள் உள்ளே வரும் சங்கர கிருஷ்ணனைப் பார்க்கிறார். செய்தித்தாளின் தலைப்பில் பீஹார் மாணவர் போராட்டங்கள் பற்றிய செய்தியும் ஜெயப்ரகாஷ் நாராயணன் இந்திரா காந்தி அரசைக் கண்டித்திருப்பதும் பெரிய எழுத்துகளில் தெரிகிறது.)

ஓம்கார் சுவாமிகள் : “வாங்க தம்பி.. அமருங்கள்.”

(சுவாமிகளின் எதிரில் விரிக்கப்பட்டிருக்கும் இன்னுமொரு பாயில் சங்கர கிருஷ்ணன் உட்கார்ந்துகொள்கிறார்.)

சங்கர கிருஷ்ணன் : “வணக்கம் சுவாமிஜி..”

ஓம்கார் : “வணக்கம். உங்கள் பெயர், எனக்குப் பழைய நினைவுகளை இழுத்து வருகிறது..”

சங்கர கிருஷ்ணன் : “என் பெயரா சுவாமி?”

ஓம்கார் : “ஆமாம்.. அது இருக்கட்டும்.. பிரயாணம் பத்திரமாக இருந்ததா..? ஜெயப்பிரகாஷ் கிளர்ச்சி பலமா இருக்கே..!”

சங்கர கிருஷ்ணன் : “இங்கே எல்லாம் அவ்வளவு தீவிரம் இல்லை சுவாமிஜி..”

ஓம்கார் : “நல்லது.. என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்தீர்கள்?”

சங்கர கிருஷ்ணன் : “பத்து நாள் முன்னாலதான் உங்களைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன். தலைவர் காமராசர் உங்களப் பத்தி பேசின செய்தி, எல்லாப் பத்திரிகையிலேயும் வந்தது. உங்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரருக்கான தாமிரப் பட்டயம் கொடுக்கணுமின்னு அரசாங்கத்தக் கேட்டிருந்தாரு காமராசர்..”

ஓம்கார் : “காமராசருக்கு ரொம்ப நல்ல மனசு.. ஆனா அவரே பெரிய தியாகி ஆச்சே.. இப்படியெல்லாம் சலுகை கொடுப்பதற்கும் கேட்பதற்கும் தந்தா வாங்குறதுக்கும் அவருக்கே வெட்கமா இருந்திருக்கும். இப்போ விடுபட்டவங்களுக்குக் கேக்குறாரு. நான் இரண்டாம் தடவை ஜெயிலுக்குப் போகும்போது, அவருக்கு இருபது இருபத்தஞ்சு வயசு போல இருக்கும். சத்தியமூர்த்திகூட ஒரு தடவை பாத்திருக்கேன்..”

சங்கர கிருஷ்ணன் : “நீங்களும் தாமிரப் பட்டயத்தை வேண்டாமுன்னு சொல்லிட்டதா செய்தி கேள்விப்பட்டேன்.”

ஓம்கார் : “அதுகூட தெரிஞ்சிடுத்தா..? காமராசருக்கிட்ட போயி என் தம்பிதான் சிபாரிசு பண்ணிருக்கான். அவனை சத்தம் போட்டு, போன மாசம்தான் கடிதம் எழுதியிருந்தேன்..”

சங்கர கிருஷ்ணன் : “ஏன் சுவாமி?”

ஓம்கார் : “அது அவசியமில்ல தம்பி. நாட்டுக்காக செஞ்ச வேலை. நாங்க ஆரம்பிச்சு வச்சோம். காந்தி வந்து முடிச்சு வச்சார். எங்க கோளாறு எங்களுக்குத் தெரியல. பெருசா யோசிச்சோம். நாங்க செஞ்சுட்டா, ஜனங்க எங்க பின்னால வந்துருவாங்கன்னு நெனச்சிட்டோம். ஆனா, ஜனங்கள தன் வேலைக்குத் தயார் பண்ணிட்டுத்தான் காந்தி தம்மோட வேலையெல்லாம் செஞ்சார்.”

(பேச்சை நிறுத்திவிட்டு, கண் மூடி ஏதோ யோசனையில் ஆழ்ந்து போகிறார். சில நொடிகள் சென்ற பின்னே..)

சங்கர கிருஷ்ணன் : “சுவாமி..”

ஓம்கார் : “பழைய யோசனை தம்பி..”

சங்கர கிருஷ்ணன் : “அதெல்லாம் கேட்கணுமின்னுதான் உங்களைப் பார்க்க வந்திருக்கேன் சுவாமி..”

ஓம்கார் : “அந்தப் பழைய கதையை எல்லாம் இப்போ நான் யாருக்கும் சொல்றதில்ல தம்பி..”

சங்கர கிருஷ்ணன் : “அப்படி இல்லை சுவாமிஜி. உங்கள் கதை எல்லாருக்கும் தெரிய வேணும். ரொம்ப தூரத்திலிருந்து அதை எல்லாம் தெரிஞ்சுக்கிடத்தான் வந்திருக்கேன். நீங்க சொல்றத பத்திரிகைல போட உங்க அனுமதியும் வேணும் சுவாமிஜி..”

ஓம்கார் : “முரட்டுத்தனமா முடியாதுன்னு சொல்ல முடியலயே தம்பி.. இது எனக்கே ஆச்சர்யமா இருக்கு. நான் சிறுபிள்ளையிலே இருந்தே ரொம்ப முரண்டு தம்பி. உங்க பெயரில எனக்கு ஏதோ வசீகரம் வருது. உங்ககிட்டே சொல்றேன். ஆனா, பத்திரிகையிலே கட்டாயம் வேண்டாம்..”

சங்கர கிருஷ்ணன் : “ரொம்ப சந்தோஷம் சுவாமி. உங்க அனுமதி இல்லைன்னா உங்க கதை பத்திரிகையில வராது சுவாமி..”

ஓம்கார் : “அந்தப் பழைய கதையை உன் பெயர் கொண்ட என் தோழனிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்..
கடைய நல்லூர் சங்கர கிருஷ்ணன்..! அவன் ரொம்பத் தீவிரமான ஆளு. சிதம்பரம் பிள்ளைக்காக வேலை செஞ்சிக்கிட்டிருந்தான். சிதம்பரம் பிள்ளை வேலைக்காகவே நானும் அலைஞ்சபோது பழக்கமானான். பின்னால நாங்க இயக்கம் தொடங்கினப்போ, வாஞ்சிநாதனயும் இன்னும் சில பேரையும் அவன்தான் கொண்டு வந்தான். வாஞ்சி ஐயர் ஆஷ் கலெக்டர சுட்டப்போ, கூடப் போனது இவன்தான்..”

(கதையை நிறுத்திவிட்டு..)

“சங்கர கிருஷ்ணா, முதலில் ஆகாரம் செய்யுங்கள்.. நிதானமாகப் பேசலாம்..” (சீடனைப் பார்த்து..) “அழைத்துப் போய் ஆகாரம் பண்ணி வைப்பா..”

(சங்கர கிருஷ்ணன் செல்ல, சுவாமிஜி மீண்டும் செய்தித்தாளைக் கையில் எடுத்துக்கொள்கிறார். மெல்ல இருள் பரவ, திரை விழுகிறது)

(நாளை தொடர்வோம்)

  • இரா.கோமதிசங்கர் – திருநெல்வேலி

Comments (9)


Anita Srikanth
Anita Srikanth
August 16, 2023

நேத்து திரை விழுந்திச்சு..
இன்னிக்கு அதோட தொடங்கும் னு நினைச்சேன் அண்ணா..
ஆனால் செம திருப்பு முனையா வேற ஒரு பக்கமா வந்திருக்கீங்க…
சுவாமிஜி யாரு..அவர் சொல்லுர கதைக்கு வெயிட்டிங் அண்ணா…

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 16, 2023

நன்றி அனிதா

சுதாகரன்
சுதாகரன்
August 16, 2023

பேச வாய்ப்பூட்டு, எழுதினால் தணிக்கை. நடந்தாலே கண்காணிப்பு .. நடை நல்ல இருக்கு சார் உரைநடை

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 16, 2023

நன்றி சுதாகர்

S JEYAKUMAR
S JEYAKUMAR
August 16, 2023

எதிர் பார்ப்பதை அதிகரிக்க செய்கிறது தங்கள் நடை.

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 16, 2023

நன்றி ஜெயகுமார்

Sankar T A B
Sankar T A B
August 16, 2023

முதல் இரண்டு காட்சிகளிலும், இது ஒரு நல்ல பயணமாக இருக்கும் என நினைக்கிறேன். பாராட்டுகள்..

தமிழன் காசி
தமிழன் காசி
August 16, 2023

உங்களை நாங்கள் தொடர தொடரத்தான் எங்கள் முன் இருந்த சொல்லப்படாத திரைகள் விலகி இந்த நாட்டின் விடுதலை வீரர்களை உங்கள் மூலம் தரிசிக்க வந்துக்கொண்டிருக்கிறோம்.

உமாமகேஸ்வரி.சு
உமாமகேஸ்வரி.சு
August 22, 2023

//நாங்க செஞ்சுட்டா, ஜனங்க எங்க பின்னால வந்துருவாங்கன்னு நெனச்சிட்டோம். ஆனா, ஜனங்கள தன் வேலைக்குத் தயார் பண்ணிட்டுத்தான் காந்தி தம்மோட வேலையெல்லாம் செஞ்சார்.”// எத்தனை முக்கியமான செய்தி இது…

அருமை அருமை உங்க இந்த இரண்டாவதில் பாரதியையும் நீலகண்டரையும் தேடி வந்தால் வேற எடத்துக்குக் கூட்டிட்டுப் போய்ட்டீங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *