காட்சி 14

காலம் : 1921ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள்
இடம் : திருவல்லிக்கேணி கடற்கரை
பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர்.

(பாரதியாரும் நீலகண்டரும் கடற்கரையில் அமர்ந்திருக்கின்றனர். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கவிதையை பாரதியார் படித்துக் காட்டுகிறார்.)

பாரதியார் :

கேள்! விடை கூறினள் மாதா! நம்மிடை
யாவனே யிங்கு தோன்றினன்? இவன் யார்?
உலகப் புரட்டர் தந்திர உரையெலாம்
விலகத் தாய்சொல் விதியினைக் காட்டுவான்.
மலைவு செய்யாமை; மனப்பகை யின்மை ;
நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை ;
தீச்செயல் செய்யும் அரசினைச் சேராமை;
ஆச்சரியப்பட உரைத்தனன் -அவையெலாம்.
வருக காந்தி ! ஆசியா வாழ்வே !
தரும விதிதான் தழைத்திட உழைப்பாய்.
ஆன்மா அதனால் ஜீவனை யாண்டு
மேனெறிப் படுத்தும் விதத்தினை யருளினாய்.
.

நீலகண்டர் : (குறுக்கிட்டு) அண்ணா நிறுத்துங்கள்.

பாரதியார் : என்ன பாண்டியா?

நீலகண்டர் : என்ன பாட்டு இது..? பொருள் தெரிகிறது. காந்தி மகான் தோன்றியதை பாரத மாதா சொல்வது போல அமைத்திருக்கிறீர்கள். ஆனால் சந்தக் கட்டு ஏதும் இல்லாமல் வழக்கமான உங்கள் நயம் எதுவுமில்லாமல் இருக்கிறதே..!

பாரதியார் : (சிரிக்கிறார்) பலே.. சரியாகத்தான் சொன்னீர் நீலகண்டர். இது என் பாட்டு இல்லை. அமெரிக்கா தேசத்தில் வாழ்ந்து வரும் ஸ்ரீமதி மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்ற மாது எழுதிய ஆங்கிலக் கவிதை. தமிழில் மொழிபெயர்த்து எழுதினேன். சுதேசமித்திரனுக்கு போகப் போகிறது.

நீலகண்டர் : அண்ணா, சாகாவரம் பெற்ற பாடல்களை வடித்தவர் நீங்கள். ஆனால் உங்கள் கற்பனை சௌந்தர்யம் இந்த மொழிபெயர்ப்பில் வரவில்லையே..

சுதேந்திரநாத் ஆர்யா : (சிங்காரவேலருடன் வந்துகொண்டே) அது எப்படி அமையும் நீலகண்டரே.. மூலத்தின் ஜீவன் எத்தகையதோ, அதுதான் மொழிபெயர்ப்பிலும் வரும். இதே காந்தியைப் பற்றி ‘வாழ்க நீ எம்மான்‘ என்று பாரதி பாடியது எத்தனை ஜீவன் ததும்பியதாக இருந்தது..?

பாரதியார் : ஏதேது, நீங்கள் இருவரும் எனக்கு மொழிபெயர்க்கவே வராது என்று சொல்வது போல இருக்கிறது..

(எல்லாரும் சிரிக்கிறார்கள்)

ஆர்யா : ‘வந்தேமாதரம்’ மொழிபெயர்ப்பு ஒன்று போதுமே, பாரதி பெயரைச் சொல்வதற்கு..
பாரதி, உன்னைக் கேலி செய்து எவ்வளவு நாள் ஆச்சு?! கோபம் இல்லையே..?

சிங்காரவேலர் : ஆர்யா, இந்தக் கவிதையின் கூர்மையைக் கவனியுங்கள். இதில் பாரதி, காந்தியின் அரசியல் பாதையைச் சுட்டிக் காட்டுகிறார். வெளிநாட்டார் வியாக்கியான உலகம், காந்தியின் வருகையை ஆசியாவின் எழுச்சியாகப் பார்ப்பதைக் கவனியுங்கள். காந்தியின் வழியை திலகர் வழி வந்தவர்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். என்ன பாரதி சரிதானே..?

பாரதியார் : நாட்டின் வருங்கால அரசியலில் காந்தியின் பாத்திரம் தவிர்க்க முடியாதது சிங்காரவேலரே.. கவிதையை நீங்கள் யோசிக்கும் விதத்தை வியக்கிறேன். அது போகட்டும் ஆர்யா. நீலகண்டரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தாயே..

ஆர்யா : ஆமாம் பாரதி.. நீலகண்டரே நீர் வந்திருப்பதை பாரதி சொன்னார். சிறைவாசம் முடிந்து எத்தனை நாள் ஆயிற்று..?

நீலகண்டர் : இரண்டாண்டுகள் ஆயிற்று. பல இடங்கள் அலைந்து திரிந்தேன். சென்னைக்கு வந்தும் நாலைந்து நாட்கள் திக்குத் தெரியாது அலைந்தேன். சாப்பாட்டுக்கு வழியில்லை. கோயிலில் பிரசாதம் வாங்கிப் பசி ஆறினேன். வெட்கத்தைவிட்டு யாசகமும் பெற்றேன். ரயிலடியிலும் கடற்கரையிலும் கோயில் மண்டபங்களிலும் படுத்துக்கொண்டேன். சிலநாள் முன்புதான் பாரதி அண்ணா வீட்டைக் கண்டுபிடித்தேன்.

பாரதியார் : பார் ஆர்யா, இவர் ஒரு சிம்மம். ஒரு தடவை இயக்கத்திற்கு நன்கொடை தருவேன் என்று இவரை அலையவைத்த ஒரு பெரிய மனிதரைத் துப்பாக்கியைக் காட்டிப் பணியவைத்தவர். பெரிய விவேகி.. அப்படிப்பட்டவர் பட்டினியாய் அலைந்திருக்கிறார் பார்..

சிங்காரவேலர் : அதற்கும், காலத்தை வென்று நிற்கப் போகிற நவ கவிதை ஒன்று உம்மிடம் பிறந்து வந்ததே..

நீலகண்டர் : அண்ணா, இவர் யார்..? இதற்கு முன்பு நான் பார்த்ததில்லையே.. இவர் என்ன சொல்கிறார்..? நான் பட்டினியாய் அலைந்ததில் கவிதை வந்ததா..? எப்படி…?

பாரதியார் : இவர் சிங்காரவேலர்.. பெரிய மேதை.. தொழிலாளர் மேன்மைக்காக உழைத்து வருகிறார். அவர்களை ஐக்கியப்படுத்தி வருகிறார். ருஷ்யாவின் போல்ஸ்விக் கட்சியைப் போல் நமது நாட்டிலும் சமதர்மக் கட்சியொன்றை ஏற்படுத்த முயன்று வருகிறவர்களில் இவரும் ஒருவர்.
நீர் பட்டினியாய் என் வீட்டுக்கு வந்த அன்று ஒரு பாட்டு வந்தது. அதைக் கடற்கரைக் கூட்டத்தில் பாடினேன். சிங்காரவேலர் அந்த விருத்தாந்தத்தை அறிந்தவர்..அதைத்தான் சொன்னார். (சிங்காரவேலரைப் பார்த்து) இவர்தான் நீலகண்டர்.. நீலகண்ட பிரம்மச்சாரி. உமது தொழிலாளர் சங்கங்களில் வேலை செய்யக்கூடிய திறமை வாய்ந்தவர். தொண்டால் சிறை அளந்து வந்திருக்கிறார்.

சிங்காரவேலர் : பாரதியிடம் இத்தனை புகழ்ச் சொல் பெறுவது கடினம் தம்பி.. நீ விரும்பினால் என்னுடன் வந்து உதவி செய்யலாம்.

நீலகண்டர் : அண்ணா, இப்படித்தான் சிதம்பரம் பிள்ளையிடம் அனுப்பி வைத்தார். அவரிடம் நான் தேறவில்லை. இப்போது உங்களுடன் அனுப்புகிறார்.

சிங்காரவேலர் : ஆஷ் கொலை வழக்கில் அதிக நாள் தண்டனை பெற்றவர் நீர்தான் அல்லவா..?

நீலகண்டர் : ஆமாம், சதிக் குழுவை உருவாக்கியவன், சதியைத் திட்டமிட்டவன் என்றெல்லாம் சொல்லிக் குற்றப் பத்திரிக்கை வாசித்தார்கள். ஆனால் இந்தத் திட்டத்தில் நான் இல்லவே இல்லை.

ஆர்யா : நீர் சரணடைந்தபோது இதைக் குறிப்பிட்டிருந்தீர் அல்லவா..?

நீலகண்டர் : ஆமாம்.. பத்தாண்டுகளுக்கு முன்னால் இதே மாதத்தில்தான் கல்கத்தாவில் நானாக முன்வந்து சரணடைந்தேன்; வாக்குமூலமும் கொடுத்தேன். 1911ஆம் வருடம் ஜூலை 11ஆம் தேதி திருநெல்வேலிக்குக் கொண்டுவந்தார்கள்.

(மேடை இருளில் போய் ஒளியில் வரும்போது ஓம்கார் அறை)

சங்கர கிருஷ்ணன் : ஆஷ் கொலையின்போது காசியில் இருந்தேன் என்று சொன்னீர்களே.. கல்கத்தாவுக்கு எப்போது போனீர்கள்.?

ஓம்கார் : சொல்கிறேன்.

(திரை விழுகிறது)

  • இரா. கோமதிசங்கர் – திருநெல்வேலி


Comment (1)


Rasal

சிங்காரவேலரை முன்பு பார்த்ததில்லை… புதிய அறிமுகம் நன்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *