நீலகண்ட பிரம்மச்சாரி – 19

நீலகண்ட பிரம்மச்சாரி – 19

காட்சி 19 இடம் : ஓம்கார் ஆசிரமம்(ஓம்கார் சுவாமிகள் – சங்கர கிருஷ்ணன் உரையாடல் தொடர்கிறது) ஓம்கார் சுவாமிகள் : ஆசிரமத்தின் பக்கத்தில் ஓடும் தென்பெண்ணை நதியைப் பார்த்தீர்கள் அல்லவா சங்கர கிருஷ்ணன்..? ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் அமைதியாக ஓடுகிறது. மலைச் சரிவில் ஆர்ப்பரிக்கும் புனல், சமவெளியில் அமைதியாகப் போவது போல, என் வாழ்க்கை காட்டாற்று வெள்ளமாகப் பிரவாகித்து வயலுக்குப் பொசியும் வாய்க்கால் போல அமைதி ஆனது. இங்கு வந்தபோது நான் இந்த நதியைப் போல அமைதியாக இருந்தேன். எனக்குள் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த அரசியல் சிந்தனைகளிலிருந்து நான் விடுதலை பெற்றிருந்தேன். ஆனால், தொண்டு செய்வதை விட்டுவிடவில்லை. இப்போது வரை 41 வருடங்களாக இங்குள்ள எளிய மக்களுக்குத் தொண்டு செய்து வருகிறேன். எனது ஆன்மீக சாதனைகள் மட்டுமல்ல இந்த ஆசிரம வாழ்க்கை. தொண்டின் மீது நான் கொண்ட தணியாத தாகத்தின் ஒரு பாகமும்தான். தேசத் தொண்டு என்பது, தேச மக்களுக்காக நாம் செய்வதுதான் என்பதை எனக்குப் போதித்தவர்கள் சிதம்பரம் பிள்ளையும் சிங்காரவேலரும்தான். சங்கர கிருஷ்ணன் : சிங்கார வேலரின் கம்யூனிஸ்ட் இயக்க வேலைதானே உங்களை இரண்டாவது சிறைவாசத்திற்குக் கொண்டு சென்றது..? ஓம்கார் சுவாமிகள் : என் கூடவே பிறந்தது போன்ற முரட்டுத்தனம்தான் அதற்குக் காரணம். சிறு வயதிலிருந்து நான் முரடனாகவே இருந்திருக்கிறேன். ஒரு நிலைகொள்ளாத உள்ளம் என்னை உந்தித் தள்ளி வந்திருக்கிறது. அடிக்கடி வீட்டைவிட்டு ஓடிப் போயிருக்கிறேன். பாலர் சந்திப்புக்குப் பிறகு, முற்றிலுமாக ஒரு பரதேசி போலச் சுற்றல் வாழ்க்கைதான். புரட்சி இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பது என்பது ஒரு சாக்கு போலத் தொடர்ந்து வந்தது.பாய்ந்து வரும் காட்டாறு, பள்ளம் கண்டால் தங்கிவிடும் அல்லவா? அதுபோலத் தங்கியிருக்கிறேன். பள்ள மனது நிறைவானதும் பயணப்பட்டு விடும் அல்லவா? அதுபோல தங்குதலும் தாவிப் போவதுமாக ஓடிக் கொண்டிருந்தேன். மேடுகள் பிரவாகத்திற்கு லட்சியமில்லை. தள்ளிச் சரித்துவிட்டுத் தன் பாதையை அமைத்துக்கொள்ளும். அந்த ஓட்டத்தில் ஒரு புரட்சியாளனுக்கு இருக்க வேண்டிய விவேக மனோபாவம் எனக்குக் கைகூடவில்லை. நான் ஏற்றுக்கொள்ளாத எந்த விஷயத்தோடும் நான் சமரசம் கொள்ளவில்லை. அதுவே எனது அடையாளம். அதுவே என் பலமும் பலவீனமும். நான் இரண்டாம் தடவை சிறைப்பட்டதைச் சொல்கிறேன்; உங்களுக்கே புரியும். சங்கர கிருஷ்ணன் : சொல்லுங்கள் சுவாமி.. ஓம்கார் சுவாமிகள் : அது 1922ஆம் வருடம் ஜூலை மாதம். அப்போது சிங்காரவேலர், கயாவில் நடக்கப்போகும் காங்கிரசில் கம்யூனிஸ்ட்கள் செய்ய வேண்டிய உத்திகளை வகுத்துக்கொண்டிருந்தார். நிறைய பயணங்களைச் செய்துகொண்டிருந்தார். அந்தக் காங்கிரசில்தான் பூரண சுயராஜ்யத் தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கம்யூனிஸ்ட்கள் முனைப்பாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஏனென்றால், காங்கிரசின் திட்டம் அப்போது பூரண சுயராஜ்யம் இல்லை. உங்களுக்குத் தெரியுமா..? அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது சிங்காரவேலர்தான். அந்தக் காங்கிரஸ் நிகழ்ச்சிகளெல்லாம் நான் சிறை சென்ற பின்பு நிகழ்ந்தவை. நான் பத்திரிகை பார்த்துத் தெரிந்துகொண்டவை. ஆகவே சென்னை வேலைகளை நாங்களாகவே செய்துகொண்டிருந்தோம். அப்போது, நான் தயாரித்த பிரசுரம் ஒன்று போலீஸ் உளவாளிகளிடம் சென்றது. அதை தயாரித்தவன் நான் என்பதும், நான் ஆஷ் கொலை வழக்கின் பிரதானக் குற்றவாளி என்பதும், பழைய சிறைப் பறவை என்பதும் அவர்களைப் பதற வைத்தன.இவன் இன்னும் இயங்குகிறான் என்பதும் அதுவும் கம்யூனிஸ்ட் பிரசாரகன் என்பதும் தெரிந்தவுடன் சுறுசுறுப்பானார்கள். அந்தப் பிரசுரத்தை ராஜதுவேசப் பிரசுரம் என்று கொண்டு, அதைப் பிரசுரித்த என்மீது வாரண்ட் கொண்டுவந்தார்கள். நான் தலைமறைவானேன். சங்கர கிருஷ்ணன் : ஏன் தலைமறைவானீர்கள்..? உங்கள் தோழர்களிடம் ஆலோசிக்கவில்லையா..? ஓம்கார் சுவாமிகள் : அதுதான் என் விவேகமின்மை. போலீஸ் என்னைத் தேடினார்கள். 1922 ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, திருவல்லிக்கேணி இடுகாட்டில் மறைந்திருந்த என்னைக் கைது செய்யச் சுற்றி வளைத்தார்கள். (மேடையில் ஓம்கார் சுவாமிகள் அறையில் இருள் பரவி மறுபக்கம் ஒளிர்கிறது) காலம் : 1922ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதிஇடம் : விசாரணை நீதிமன்றம், சென்னைபாத்திரங்கள் : விசாரணை அதிகாரி, நீலகண்டர் விசாரணை அதிகாரி : மிஸ்டர் நீலகண்டர், உம்மீது மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.முதலாவது, நீர் ராஜ துவேஷப் பிரசுரங்கள் அச்சிட்டு, மக்களிடம் அரச விரோதத்தைத் தூண்டியுள்ளீர்.இரண்டாவது, நீர் உரிமம் இல்லாமல் கைத் துப்பாக்கி வைத்திருந்தீர்.முன்றாவதாக, அந்தத் துப்பாக்கியால் உம்மைக் கைது செய்ய வந்த போலீஸ் ஜவான்களில் ஒருவரைச் சுட்டீர். அந்தத் துப்பாக்கி சரியாக வேலை செய்யாததால் அந்த ஜவான் தப்பித்தார். இருப்பினும் அது கொலை முயற்சியே.இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உமது பதில் என்ன? நீலகண்டர் : பிரிட்டிஷார் சட்டத்தையும் கோர்ட்டையும் நான் மதிப்பதில்லை. இந்தியர்கள் உருவாக்காத சட்டங்களுக்குக் கீழ்ப்படிய எனக்கு விருப்பமில்லை.உங்கள் சட்டத்தின் முன்பு ராஜதுவேஷமாகச் சொல்லப்படும் எமது அறிக்கை, எமது மக்களின் எதிர்கால விடுதலைக்கானது. அந்த விடுதலைக்காக அவர்களை அணி சேர்ப்பதற்கானது. மற்ற குற்றச்சாட்டுகளில், நானே என் நடத்தையின் மீது விளக்கம் சொல்வது அவசியம் என்று தோன்றவில்லை. நீங்கள் உங்கள் தீர்ப்பைக் கூறலாம். எதுவாயினும் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன். (மேடையில் ஒளி இடம் மாறி ஓம்கார் ஆசிரமத்தில் விரிகிறது) ஓம்கார் சுவாமிகள் : எனக்குப் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அளித்தார்கள். பழைய புரட்சிக்கார குற்றவாளி என்பதாலும் என் பழைய சிறை வரலாறுகள் கலகச் சாயையைக் கொண்டிருப்பதும் சிறையிலும் நான் மற்ற கைதிகளின் உரிமைகளைப் பேசுபவன் என்பதை அடையாளப்படுத்தி நின்றன என்பதாலும் சிறை அதிகாரிகள் என்னைக் குறித்து அச்சத்தில் இருந்தனர். ஆகவே என்னை இந்தியாவுக்கு வெளியே அனுப்பிவைத்தார்கள். ஆனால் சிறைவாசத்தில் அமைதியானவனாக மாறிக்கொண்டு வந்தேன். என் மனப் புயல்கள் ஓய்ந்து வந்தன. சங்கர கிருஷ்ணன் : உங்கள் வாழ்க்கைமீது மிகுந்த மரியாதை வருகிறது சுவாமி.. உங்கள் தற்போதைய ஆசிரம வாழ்க்கையின்மீதுகூட என்னால் விளக்க முடியாத பிரியம் வருகிறது. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 18

நீலகண்ட பிரம்மச்சாரி – 18

காட்சி 18 (திரை விலகும்முன் மேடையில் செவ்வொளி பரவியிருக்க குரல் மட்டும் கேட்கிறது) குரல் : மீண்டும் ஒருமுறை உங்களிடம் பேசவேண்டியதாகிவிட்டது. நீலகண்டரின் கதையில் பாரதியின் இறுதி நாளில் அவர் அங்கிருந்தார் என்பதாலேயே, பாரதியின் பிரிவை நாடகத்தில் விரிவாகக் காட்டவேண்டி வந்தது. இந்த நாடகம் தொடங்கிய பாரதி வீட்டிலேயே முடிந்தும் போனால் நன்றாகத்தான் இருக்கும். ஒரு காவியப் பூச்சுகூடக் கிடைத்து விடும். ஆனால், இன்னும் கொஞ்சதூரம் நாம் போய்த்தான் ஆக வேண்டும். (திரை விலகி ஓம்கார் ஆசிரம அறையில் காட்சி தொடங்குகிறது. சங்கர கிருஷ்ணனும் ஓம்கார் சுவாமிகளும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) ஓம்கார் சுவாமிகள் : எனக்கு அப்போது பெரிய பலம் பாரதியார்தான். என் மீது கடைசி வரை பிரியம் காட்டியவர். அவருடைய மறைவால் நான் நிராதரவாக உணர்ந்தேன். பதினாறு வயதில் தேச விடுதலை இயக்கத்திற்கு வந்த எனக்கு, அப்போது 32 வயது. என் எதிர்காலம் குறித்த கவலை என்னை அலைக்கழித்தது. சங்கர கிருஷ்ணன் : புரிகிறது சுவாமிஜி, அப்புறம் என்னாச்சு..? ஓம்கார் சுவாமிகள் : சிங்காரவேலரிடம் சென்றேன். அவருடன் கொஞ்சகாலமே இருக்க முடிந்தது. சுமார் ஒரு வருடம் போலத்தான். (மேடையில் ஒளி மாறியதில் ஒரு வீட்டின் வரவேற்பறை) காலம் : 1921ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் ஒருநாள்இடம் : சிங்காரவேலர் இல்லம்பாத்திரங்கள் : சிங்காரவேலர், நீலகண்டர் சிங்காரவேலர் : நீலகண்டரே, எம்மோடு இருப்பதை நீர் எவ்வாறு உணர்கிறீர்..? நீலகண்டர் : இதுவரை நான் அறிந்திருந்த உலகத்திற்கு இப்போது புதிய விளக்கங்களைக் காண்கிறேன். தேச விடுதலை என்பது தொழிலாளர், விவசாயிகள், கற்றவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள் எல்லாருடைய ஐக்கியமான போராட்டத்தில் உருவாக வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு வருகிறேன். படைப்பில் மேல் – கீழ் என்பதும் ஆண்டான் – அடிமை என்பதும் கீழ்மைச் சிந்தனைகள் என்பதை பாரதி பாடல்கள் மூலம் தெரிந்திருந்த எனக்கு, உங்கள் பழக்கம் வந்தபிறகு அவற்றின் பொருள் சார்ந்த காரணங்கள் புரியவந்தன. சிறிய குழுக்களாக வேலை செய்து வந்தவன், இப்போது கட்டற்ற விடுதலையை உணர்கிறேன். தொழிலாளர் சங்கங்களில்,தலைவரும் உறுப்பினர்களும் வெளிப்படையாகப் பேசி, பெரும்பான்மை முடிவை அமுல்படுத்தும் பாங்கு எனக்குப் பிடித்திருக்கிறது. சிங்காரவேலர் : நல்லது.. உம்மைப் பிரசாரக் குழுவில் வேலை செய்யச் சொன்னோம். மற்ற உறுப்பினர்களோடு சேர்ந்து செய்து வாரும். நாம் தயாரிக்கும் பிரசுரங்களை நீரும் கவனமாகப் படித்து, போகிற இடங்களில் தெளிவாக விளக்கிப் பேச வேண்டும். எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இயங்க வேண்டும். நாம் காங்கிரசு இயக்கத்தில்தான் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. காங்கிரசில் காந்தியாரின் தலைமை விரைவில் வரும். வருகிற டிசம்பரில் குஜராத்தின் அகமதாபாத்தில் நடக்கப்போகும் காங்கிரசில், திலகர் விட்டுப்போயிருக்கிற இடமும் செல்வாக்கும் காந்தியாருக்குப் போய்விடலாம். சம்பாரண் விவசாயிகளுக்காக நான்காண்டுகளுக்கு முன்பு அவர் நடத்திய போராட்டம், அதைத் தெளிவாக இந்த ஏழை தேசத்திற்குப் புரிய வைத்திருக்கிறது. நீலகண்டர் : அப்படியானால் அது தேசத்திற்கு என்ன மாற்றத்தைக் கொண்டுவரும்..? சிங்காரவேலர் : இப்போ எதையும் சொல்லிவிட முடியாது. ஆனால் மக்களை பேரலையாக இயக்கத்தில் கொண்டு வரும் சக்தி, காந்தியாரிடம் உண்டு. அரசியல் என்பது மக்களின் பங்களிப்போடு, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பற்காகப் போராடுவது என்பதை, காங்கிரசில் கொண்டு வந்தது காந்தியார்தான்.இந்த நாட்டில் இப்போது தேவைப்படும் இந்து – முஸ்லீம் ஒற்றுமை, சாதி பேதம் கடந்த மக்களின் ஐக்கியம், தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பது என்று, பல்வேறு பிரச்சினைகளைக் கையாள்கிற சக்தியும் அவரிடம்தான் இருப்பதாக, காங்கிரசில் பெரிய நம்பிக்கை வந்திருக்கிறது. அகமதாபாத் காங்கிரசில் காந்தியார் தமது பாதையை அறிவிக்கலாம். இனிமேல் அந்நிய ஆட்சியை எதிர்ப்பதோடு, காந்தியாரோடும் பயணிக்கிற கடினமான பணி நமக்குக் காத்திருக்கிறது. பார்ப்போம்.. (மேடையில் ஒளி மாறி ஓம்கார் அறையில் காட்சி தொடர்கிறது) சங்கர கிருஷ்ணன் : காங்கிரசில்தான் இருப்பதாக சிங்காரவேலர் சொன்னாரே, அப்படியானால் 1921இல் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகவில்லையா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம். கட்சியாக உருவாகவில்லை. ஆனால் ‘இந்தியப் பொதுவுடமை நிறுவனங்களின் இணைப்பு’ என்ற அமைப்பாக இயங்கினார்கள். வங்காளத்திலும் மராட்டியத்திலும் பஞ்சாபிலும் மத்திய பாரதத்திலும் சென்னை மாகாணத்திலுமாகக் குழுக்களாக இயங்கி வந்தார்கள். காங்கிரசுக்குள்ளே இருந்துகொண்டே இயங்கினார்கள். சங்கர கிருஷ்ணன் : உங்கள் வேலை என்னவாக இருந்தது? ஓம்கார் சுவாமிகள் : கம்யூனிஸ்ட் பிரசாரப் பிரசுரங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வது.. சங்கர கிருஷ்ணன் : பழைய பயங்கரவாத இயக்கத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் கண்ட வேறுபாடுகள் என்ன சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : பழைய இயக்கத்தில் மக்களின் பங்களிப்பு இல்லை; மக்களோடு ஐக்கியமும் இல்லை. இயக்கம் செய்யும் வேலைகளால் வரும் பின்னடைவைச் சரி செய்யவே முடியாமல் போனது. ஆனால், அந்தப் பழைய குழுக்களின் தோழர்களே பெரும்பாலும் புதிய இயக்கத்திற்கு மாறிக்கொண்டார்கள். அவர்களின் புரட்சிகர குணாம்சங்களைக் குறை சொல்ல முடியுமா..? சங்கர கிருஷ்ணன் : சிங்காரவேலர் பற்றிய உங்கள் அபிப்பிராயம் எப்படி இருந்தது? ஓம்கார் சுவாமிகள் : அவர் பேரறிஞர்.. நிரம்பிய நூல் பழக்கம் கொண்டிருந்தார். அவர் வீட்டில் இருந்த நூல்களின் சேகரத்தைப் பார்த்து வியந்து போனேன். கடினமான உழைப்பாளி. தொழிலாளர் மேன்மை பற்றியே சிந்தித்து வந்தார். மார்க்சிய வழியில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொன்னார். சங்கர கிருஷ்ணன் : காந்தியின் வருகையைக் கம்யூனிஸ்டுகள் தீவிரமாகப் பரிசீலித்தார்கள் என்பது அவர் பேச்சில் தெரிகிறதே..! ஓம்கார் சுவாமிகள் : காந்தியின் பாதையைக் கம்யூனிஸ்டுகள் போல யாரும் தெரிந்திருக்க மாட்டார்கள் தம்பி. சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, உங்கள் பேச்சு மிக வியப்பாக இருக்கிறது. இத்தனை தூரம் கம்யூனிஸ்ட்கள் பற்றிப் பேசுகிற நீங்களா சாமியாராக மாறினீர்கள்..?! பெரிய புதிராக இருக்கிறது சுவாமி. ஓம்கார் சுவாமிகள் : கம்யூனிஸ்ட்களோடு, அதுவும் சிங்காரவேலர் போன்ற ஒரு சிலரோடு ஒரு வருட காலமே என் தொடர்பு. அதற்குப் பிறகு இன்னுமோர் நெடிய சிறைவாசம் என் மனப்போக்கை மாற்றி, இப்போதைய வாழ்வுக்கு என்னைக் கொண்டு வந்து சேர்த்தது. (திரை விழுகிறது) நாளை தொடரும்.

                 நீலகண்ட பிரம்மச்சாரி – 16

                 நீலகண்ட பிரம்மச்சாரி – 16

காட்சி 16 காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர் சுரேந்திரநாத் ஆர்யா : தீர்ப்புக்கு அப்பீல் முயற்சிகள் செய்தீர்களா..? நீலகண்டர் : என்வரையில் அன்றும் சரி, இன்றும் சரி, பிரிட்டிஷ்காரன் கோர்ட்டை நான் நம்புவதில்லை.. ஆகவே என்னைத் தவிர எல்லாரும் அப்பீல் செய்தார்கள். நான் எதிர்பார்த்தது போலவே அப்பீல் மனுக்களை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது. பாரதியார் : உமது செயலால் நீர் தனித்துத் தெரிகிறீர்..! சிங்காரவேலர் : வெள்ளைக்காரன் கோர்ட்டைப் பற்றிய உமது அபிப்பிராயம் சரிதான். அதிலும் இது வெள்ளை அதிகாரியைக் கொன்ற கொலை வழக்கு. அப்பீலை எப்படி ஏற்பார்கள்..? நீலகண்டர் : அதிலும் சங்கர கிருஷ்ணய்யர் உள்ளிட்ட எல்லாரும் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றே வாதாடினார்கள். அதிலும் மணியாச்சி சம்பவத்தில் வாஞ்சியுடன் இருந்ததாக அடையாளம் குறிக்கப்பட்ட சங்கர கிருஷ்ணய்யர், ‘வாஞ்சியுடன் கடிதத் தொடர்பு இருந்ததை வைத்து என்னைக் குற்றத்தில் சேர்த்திருக்கிறீர்கள். ஆனால் வாஞ்சியின் கொலைத் திட்டங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மணியாச்சியில் அவருடன் நான் இருக்கவில்லை’ என்றும் வாக்குமூலம் கொடுத்தார். ‘என்னுடனும் அவருக்குப் பழக்கமில்லை’ என்று நீதிமன்றத்தில் கூறினார். அவர்களின் நிலையைக் குறித்து நான் இரக்கம் கொண்டேன். தீர்ப்பளித்த நீதிபதிகளில் இந்தியரான சங்கரன் நாயர், வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனியைச் சீர்குலைத்த காரணத்திற்காகவும் தேசபக்தர்களுக்கு கலெக்டர் ஆஷின் மீது கோபம் இருந்ததைக் குறித்திருக்கிறார். ஆனால் வாஞ்சியின் கடிதம் அதை தேசம் தழுவிய பயங்கர இயக்கத்தின் வேலை எனக் குறித்தது. சனாதன விரோதிகள் என்று ஆங்கிலேயரைப் பொதுவாகக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையிலேயே வெள்ளை நீதிபதிகள் இதனைச் சதி என்றும் அதன் சூத்திரதாரி நான் என்றும் குறிப்பிட்டனர். ஆர்யா : சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் கொலையுண்ட செய்தி, ஜெயிலில் சொல்லப்பட்டபோது அவர் மகிழ்ந்திருக்கிறார். நெறி சார்ந்த மனிதரான அந்த மகானுக்குக்கூட, இந்தக் கொலை ‘நல்லதோர் செய்தி’யாகப் பட்டிருக்கிறது. பாரதியார் : சரி அன்பர்களே, நேரமாகிவிட்டது. இந்த வாரக் கடைசியில் நான் ஈரோடு செல்லப் போகிறேன். போய்விட்டு வந்து நாம் சந்திக்கலாம். ஆர்யா : பாரதி, சென்ற மாதம் உன்னை யானை தள்ளிவிட்டதிலிருந்தே நீ சீக்கிரம் சோர்வடைந்துவிடுவதாகத் தெரிகிறது. உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள். பாரதியார் : உடம்பு இருக்கட்டும்.. பராசக்தி துணை வருவாள். காலன் என்னிடம் வரப் பயப்படுவான். பாரேன், யானை என்னைத் தள்ளியதோடு நின்றுவிட்டதல்லவா..! ஈரோட்டில்கூட ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில்தான் பேசப்போகிறேன். சிங்காரவேலர் : பாரதி, உமது நம்பிக்கையும் உத்வேகமும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன. நீர் இந்த தேசத்தின் சொத்து. உமது தேக நிலை குறித்து அஜாக்கிரதையாக இருக்கவேண்டாம். பத்திரமாகப் பயணம் செய்யுங்கள். ஆர்யா : பாரதி, நீ கிளம்பு. நிலவு காய்கிறது; நாங்கள் சற்று நேரம் இருந்துவிட்டு வருகிறோம். சிங்காரவேலர் : நானும் பாரதியுடனேயே செல்கிறேன். நீலகண்டரே, எனது வீட்டுக்கு வாருங்கள். (ஆர்யாவைப் பார்த்து) நீர் அவரை அழைத்து வாரும். (பாரதியாரும் சிங்காரவேலரும் விடைபெற்றுச் செல்கின்றனர்) நீலகண்டர் : (ஆர்யாவைப் பார்த்து) ரொம்ப நேரமாய்க் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நீர் கிறித்தவப் பாதிரி உடையில் வந்ததைப் பார்த்தவுடன் திடுக்கிட்டுப் போனேன். இது பாரதிக்குத் தெரிந்திருப்பதால் அவரை வைத்துக்கொண்டு கேட்பதற்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. ஆர்யா : அது பெரிய கதை; சுருங்கச் சொல்கிறேன். சிதம்பரம் பிள்ளைக்கு ஜெயில் தண்டனை கொடுத்ததை எதிர்த்து மூர் மார்க்கெட்டில் பேசியது உமக்குத் தெரியும் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம். அதனால் உன்னைக் கைது செய்து கொண்டு போனார்கள். ஆர்யா : சிறைச்சாலைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளவும் முயன்றேன். ஆனால் பிழைத்துக்கொண்டேன். வெளியே வந்த பிறகு, வைதீகர்களுடன் எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் கிறித்தவத்தைத் தழுவினேன்; வெளிநாடு சென்றேன்; திருமணம் ஆனது. என் மனைவி ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்தவள். நீலகண்டர் : வைதீகத்தின் தீமைகளை மதம் மாறி எதிர்க்க முடியாது. மதத்திற்குள்ளேயே இருந்துகொண்டுதான் போராட வேண்டும். ஆர்யா : இதையேதான் பாரதியும் சொன்னார். சரி போகட்டும்.. அடுத்தாற்போல் என்ன செய்யப் போகிறீர்? நீலகண்டர் : இன்னும் ஒன்றும் தோன்றவில்லை. ஆர்யா : சரி, யோசிக்கலாம். சிங்காரவேலரிடம் அழைத்துப் போகிறேன். உமது சிறைவாசம் எப்படி இருந்தது..? நீலகண்டர் : சிறையிலும் நான் கலகக்காரனாகத்தான் இருந்தேன். அரசியல் கைதிகளுக்கான முறையில் நான் நடத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.மற்றவர்களுக்கும் சிறைச் சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல். பல சிறைகளுக்கு மாற்றினார்கள். இறுதியில் பெல்லாரிக்குக் கொண்டு போனார்கள். 1914இல் ஒருமுறை சிறையிலிருந்து தப்பவும் செய்தேன். ஆர்யா : சிறையிலிருந்து தப்பினீரா?! எப்படி நீலகண்டரே..?! நீலகண்டர் : 1914இல் உலகப்போர் மூண்டதல்லவா..? அப்போதுதான் நாங்கள் புரட்சியைத் திட்டமிட்டிருந்தோம். இந்தச் சமயத்தில் சிறையில் இருப்பதா என்று தப்பித்தேன். அங்குள்ள ஆட்களையே தப்பிக்கும் திட்டத்திற்குப் பயன்படுத்திக்கொண்டேன். மூன்றாம் நாள் என்னைப் பிடித்துவிட்டார்கள். (மேடை ஒளிமாற்றத்தில் ஓம்கார் அறை ஒளியில் வருகிறது) சங்கர கிருஷ்ணன் : பாரதியாருடன், அதுதான் நீங்கள் கடைசியாகப் பேசியதா..? ஓம்கார் : அவர் ஈரோடு சென்று வந்த பிறகும் அவரைத் தினமும் சந்தித்து வந்தேன். சிலசமயம் ஆர்யாவும் வருவார். தமது ஈரோடு பிரயாணம் பற்றி, பாரதி ஒரு கட்டுரையும் எழுதினார். அவரது கடைசி நாளில்.. (திரை விழுகிறது )

நீலகண்ட பிரம்மச்சாரி – 15

நீலகண்ட பிரம்மச்சாரி – 15

காட்சி 15 காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்.இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர். ஆர்யா : நீலகண்டரே, சரணடையும் முடிவைக் கல்கத்தா போய் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது..? நீலகண்டர் : நான் இயங்கி வந்த இயக்கத்தின் நண்பர்கள் வங்கத்தில்தான் இருந்தார்கள். உண்மையில் நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். புதுச்சேரி நண்பர்கள் ஏதோ செய்யப்போகிறார்கள் என்று அறிந்திருந்தேன். அவர்களின் இலக்கு ஆஷ் என்பது தெரியாது.புதுச்சேரியைவிட்டு வெளியேறிய நான், திருநெல்வேலிக்குச் சென்று தோழர்களைப் பார்த்து என் நிலைமையை விளக்கி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது எத்தனைத் தவறாகப் போய்விட்டது..?!என்மேல் அவர்களுக்கிருந்த சந்தேகங்களையேனும் நிவர்த்தி செய்திருக்கலாம். இந்தக் கொலையைப்பற்றித் தெரிய வந்திருந்தால் தடுக்க ஒரு முயற்சியும் எடுத்திருக்கலாம். ஆஷ் கொலையுண்டதைப் பத்திரிகைகளில் பார்த்த நான், என் பெயர் தேடப்படும் சதிகாரர்கள் பட்டியலில் இருப்பதை அறிந்ததும், இதுபற்றி யோசித்துத் தெளிவு பெற எனக்குக் கல்கத்தா நண்பர்களே உதவமுடியும் என்பதால், நான் அங்கு சென்றேன். சரணடைந்துவிடலாம் என்று அங்குதான் முடிவு செய்தோம். ஆர்யா : சரணடைவது உமது குணமில்லையே நீலகண்டர்..? நீலகண்டர் : சரணடைவதைத் தவிர வேறு இரண்டு வழிகளை யோசித்தோம்..முதலாவது, நண்பர்கள் உதவியைப் பெற்று எங்கேனும் வெளிநாட்டுக்குத் தப்பிவிடுவது. இரண்டாவது, நமது தேசத்திலேயே தலைமறைவாக வாழ்வது. முதல் வழியில் போனால் இந்தியா விடுதலை பெறும்வரை தேசத்திற்குள் வர முடியாது. சுதந்திரம் பெறப் பல காலம் ஆகலாம். அதுவரை தேச சேவைக்கு வரவே முடியாது. இரண்டாம் வழியில் தேசத்தில் இருக்கலாம். ஆனால் பல காலம் ஒளிந்து வாழ வேண்டும். பயந்துகொண்டே தேச சேவை செய்ய வேண்டும். அது ஆபத்தானது. ஆஷ் கொலையில் எனக்கு நேரடித் தொடர்பு இல்லாததாலும் சதியின்போது நான் திருநெல்வேலியில் இல்லாததாலும் வழக்கிலிருந்து தப்பிக்க சரணடைவதே சரியாக இருக்கும் என்று யோசித்தோம். சிறைத் தண்டனை என்றாலும் சிறிய காலமே அமையும் என்பதால் சீக்கிரம் வெளியே வந்து தேசப் பணியைத் தொடரலாம் என்று கருதியதால், கல்கத்தாவிலேயே சரணடைந்து வாக்குமூலம் கொடுத்தேன். ஆர்யா : (பாரதியாரைப் பார்த்து) ஏன் பாரதி.. கடலூரில் உன்னைக் கைது செய்தபோது, ஆஷ் கொலை வாரண்டில் உன் பெயர் இருந்ததைச் சாக்காக வைத்துக்கொண்டார்கள் என்கிறார்களே? பாரதியார் : 1908இல் நான் புதுச்சேரி வந்தபோது, என் பேரில் எந்த வாரண்டும் இல்லை. ஆஷ் கொலைச் சதியில் புதுவையில் இருந்தவர்களுக்குத் தொடர்பு இருந்தது என்பதை வாஞ்சிநாதன் மற்றும் அவரது சகாக்களின் கடிதங்கள் வாயிலாகத் தெரிந்துகொண்ட பிரிட்டிஷ் அரசு, எங்கள் மீது 1911இல் வாரண்ட் பிறப்பித்தது. பல ஆண்டுகள் சென்றபின்னும் அதற்கு உயிர் இருந்தது, கடலூரில்தான் தெரியவந்தது. ஆர்யா : அப்போ நீலகண்டர் வாக்குமூலத்திற்கு முன்பே பாண்டிச்சேரியின் தொடர்பு பிரிட்டிஷ் அரசுக்கு தெரிந்திருக்கிறதே.. அப்படியானால் நீலகண்டர் புதுவைச் சுதேசிகளை காட்டிக்கொடுத்தார் என்ற பேச்சு வந்தது எப்படி..? நீலகண்டர் : என் வாக்குமூலம் திருநெல்வேலியில் இரண்டு நாட்களாகப் பெறப்பட்டது. ஆனால் இரண்டாவது நாள் வாக்குமூலத்தை என்னை நிர்ப்பந்தித்து வாங்கினார்கள். ஜூலை 12 அன்று, முதல் வாக்குமூலத்தில், நான் அறிந்த விவரங்களையே சொன்னேன். இதில் எனது புதுச்சேரித் தொடர்புகள் பற்றிச் சொல்லவேண்டியிருந்தது. பாரதியார் : உண்மையில், புதுச்சேரி தர்மாலயத்தில் என்ன நடந்தது என்றே எனக்கும் அரவிந்தருக்கும் தெரியாது. எங்களைத் தவிர்த்தே எல்லாம் செய்தார்கள். நீலகண்டரும் அப்போது அங்கு இல்லை என்பதால் அவருக்கும் திட்டங்கள் தெரிந்திராது. (மேடையில் ஒளி மாறி ஓம்கார் அறை வருகிறது. ஓம்கார் அறையில் சங்கர கிருஷ்ணனும் ஓம்கார் சுவாமிகளும் பேசிக்கொண்டிருக்கின்றனர்) சங்கர கிருஷ்ணன் : உங்களிடம் ஏன் நிர்ப்பந்திக்க வேண்டும்..? ஓம்கார் சுவாமிகள் : அவர்கள் வழக்கில் ஒரு உருவத்திற்கு வந்திருக்க வேண்டும். என்னைத் தனியாகவே வைத்திருந்தார்கள். வழக்கு என்ன, யார் என்ன சொல்லியிருப்பார்கள் என்பது எதுவும் எனக்குத் தெரியாது. நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். இரண்டாம் நாள் வாக்குமூலத்தை அதிகாரிகள் ஒருபக்கம் அச்சம் காட்டியும் மறுபக்கம் விடுதலைக்கு ஆசை காட்டியும் தயார் செய்து வாங்கினார்கள். மாஜிஸ்டிரேட் தம்பு என்பவர் முன்னிலையில் அப்ரூவர் தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை கொடுத்த வாக்குமூலத்திற்கு ஒத்துப்போகிற மாதிரி என் வாக்குமூலத்தை மாற்றினார்கள். என் குழப்பத்தாலும் எனக்குச் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மை என்று நம்பியும் அப்படிக் கொடுக்கவேண்டியதாயிற்று. ஆனாலும் முழுமையாக எதுவும் சொல்லிவிடவில்லை. சங்கர கிருஷ்ணன் : அப்புறம் என்னாச்சு..? ஓம்கார் சுவாமிகள் : உயர்நீதிமன்றத்தின் விசாரணையின்போது நீதிபதியிடம் நடந்த உண்மையைக் கூறினேன். என்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்து அவ்வாறு பொய் சொல்ல நேர்ந்த என் பலவீனத்தை நீதிமன்றத்திலேயே குறிப்பிட்டேன். இப்போது நினைத்தாலும் அதை வெட்கப்படும் செயலாகவே உணர்கிறேன். நீதிமன்றம் என் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால் தீர்ப்பு என்னவோ அப்ரூவர் வாக்குமூலத்தை ஒட்டியதாகவே அமைந்தது. அதுவும் கொலை வழக்கின் தீர்ப்பில் நான் காசிக்குப் போனதை, எனது திருநெல்வேலி நண்பர்களிடம் வசூல் செய்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்ட திருடனாகச் சித்தரித்துச் சொல்லியிருந்தார்கள். புதுச்சேரியிலிருந்து நானாக வெளியேறினேனா அல்லது மற்றவர்கள் என்னை வெளியேற்றினார்களா என்பதைச் சந்தேகமாகக் குறிப்பிட்டிருந்தார்கள். சங்கர கிருஷ்ணன் : தீர்ப்பை எதிர்த்து நீங்கள் அப்பீலுக்குப் போகவில்லையா சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : (புன்னகைக்கிறார்) (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி -14

நீலகண்ட பிரம்மச்சாரி -14

காட்சி 14 காலம் : 1921ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள்இடம் : திருவல்லிக்கேணி கடற்கரைபாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர். (பாரதியாரும் நீலகண்டரும் கடற்கரையில் அமர்ந்திருக்கின்றனர். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கவிதையை பாரதியார் படித்துக் காட்டுகிறார்.) பாரதியார் : கேள்! விடை கூறினள் மாதா! நம்மிடையாவனே யிங்கு தோன்றினன்? இவன் யார்?உலகப் புரட்டர் தந்திர உரையெலாம்விலகத் தாய்சொல் விதியினைக் காட்டுவான்.மலைவு செய்யாமை; மனப்பகை யின்மை ;நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை ;தீச்செயல் செய்யும் அரசினைச் சேராமை;ஆச்சரியப்பட உரைத்தனன் -அவையெலாம்.வருக காந்தி ! ஆசியா வாழ்வே !தரும விதிதான் தழைத்திட உழைப்பாய்.ஆன்மா அதனால் ஜீவனை யாண்டுமேனெறிப் படுத்தும் விதத்தினை யருளினாய்.. நீலகண்டர் : (குறுக்கிட்டு) அண்ணா நிறுத்துங்கள். பாரதியார் : என்ன பாண்டியா? நீலகண்டர் : என்ன பாட்டு இது..? பொருள் தெரிகிறது. காந்தி மகான் தோன்றியதை பாரத மாதா சொல்வது போல அமைத்திருக்கிறீர்கள். ஆனால் சந்தக் கட்டு ஏதும் இல்லாமல் வழக்கமான உங்கள் நயம் எதுவுமில்லாமல் இருக்கிறதே..! பாரதியார் : (சிரிக்கிறார்) பலே.. சரியாகத்தான் சொன்னீர் நீலகண்டர். இது என் பாட்டு இல்லை. அமெரிக்கா தேசத்தில் வாழ்ந்து வரும் ஸ்ரீமதி மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்ற மாது எழுதிய ஆங்கிலக் கவிதை. தமிழில் மொழிபெயர்த்து எழுதினேன். சுதேசமித்திரனுக்கு போகப் போகிறது. நீலகண்டர் : அண்ணா, சாகாவரம் பெற்ற பாடல்களை வடித்தவர் நீங்கள். ஆனால் உங்கள் கற்பனை சௌந்தர்யம் இந்த மொழிபெயர்ப்பில் வரவில்லையே.. சுதேந்திரநாத் ஆர்யா : (சிங்காரவேலருடன் வந்துகொண்டே) அது எப்படி அமையும் நீலகண்டரே.. மூலத்தின் ஜீவன் எத்தகையதோ, அதுதான் மொழிபெயர்ப்பிலும் வரும். இதே காந்தியைப் பற்றி ‘வாழ்க நீ எம்மான்‘ என்று பாரதி பாடியது எத்தனை ஜீவன் ததும்பியதாக இருந்தது..? பாரதியார் : ஏதேது, நீங்கள் இருவரும் எனக்கு மொழிபெயர்க்கவே வராது என்று சொல்வது போல இருக்கிறது.. (எல்லாரும் சிரிக்கிறார்கள்) ஆர்யா : ‘வந்தேமாதரம்’ மொழிபெயர்ப்பு ஒன்று போதுமே, பாரதி பெயரைச் சொல்வதற்கு..பாரதி, உன்னைக் கேலி செய்து எவ்வளவு நாள் ஆச்சு?! கோபம் இல்லையே..? சிங்காரவேலர் : ஆர்யா, இந்தக் கவிதையின் கூர்மையைக் கவனியுங்கள். இதில் பாரதி, காந்தியின் அரசியல் பாதையைச் சுட்டிக் காட்டுகிறார். வெளிநாட்டார் வியாக்கியான உலகம், காந்தியின் வருகையை ஆசியாவின் எழுச்சியாகப் பார்ப்பதைக் கவனியுங்கள். காந்தியின் வழியை திலகர் வழி வந்தவர்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். என்ன பாரதி சரிதானே..? பாரதியார் : நாட்டின் வருங்கால அரசியலில் காந்தியின் பாத்திரம் தவிர்க்க முடியாதது சிங்காரவேலரே.. கவிதையை நீங்கள் யோசிக்கும் விதத்தை வியக்கிறேன். அது போகட்டும் ஆர்யா. நீலகண்டரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தாயே.. ஆர்யா : ஆமாம் பாரதி.. நீலகண்டரே நீர் வந்திருப்பதை பாரதி சொன்னார். சிறைவாசம் முடிந்து எத்தனை நாள் ஆயிற்று..? நீலகண்டர் : இரண்டாண்டுகள் ஆயிற்று. பல இடங்கள் அலைந்து திரிந்தேன். சென்னைக்கு வந்தும் நாலைந்து நாட்கள் திக்குத் தெரியாது அலைந்தேன். சாப்பாட்டுக்கு வழியில்லை. கோயிலில் பிரசாதம் வாங்கிப் பசி ஆறினேன். வெட்கத்தைவிட்டு யாசகமும் பெற்றேன். ரயிலடியிலும் கடற்கரையிலும் கோயில் மண்டபங்களிலும் படுத்துக்கொண்டேன். சிலநாள் முன்புதான் பாரதி அண்ணா வீட்டைக் கண்டுபிடித்தேன். பாரதியார் : பார் ஆர்யா, இவர் ஒரு சிம்மம். ஒரு தடவை இயக்கத்திற்கு நன்கொடை தருவேன் என்று இவரை அலையவைத்த ஒரு பெரிய மனிதரைத் துப்பாக்கியைக் காட்டிப் பணியவைத்தவர். பெரிய விவேகி.. அப்படிப்பட்டவர் பட்டினியாய் அலைந்திருக்கிறார் பார்.. சிங்காரவேலர் : அதற்கும், காலத்தை வென்று நிற்கப் போகிற நவ கவிதை ஒன்று உம்மிடம் பிறந்து வந்ததே.. நீலகண்டர் : அண்ணா, இவர் யார்..? இதற்கு முன்பு நான் பார்த்ததில்லையே.. இவர் என்ன சொல்கிறார்..? நான் பட்டினியாய் அலைந்ததில் கவிதை வந்ததா..? எப்படி…? பாரதியார் : இவர் சிங்காரவேலர்.. பெரிய மேதை.. தொழிலாளர் மேன்மைக்காக உழைத்து வருகிறார். அவர்களை ஐக்கியப்படுத்தி வருகிறார். ருஷ்யாவின் போல்ஸ்விக் கட்சியைப் போல் நமது நாட்டிலும் சமதர்மக் கட்சியொன்றை ஏற்படுத்த முயன்று வருகிறவர்களில் இவரும் ஒருவர்.நீர் பட்டினியாய் என் வீட்டுக்கு வந்த அன்று ஒரு பாட்டு வந்தது. அதைக் கடற்கரைக் கூட்டத்தில் பாடினேன். சிங்காரவேலர் அந்த விருத்தாந்தத்தை அறிந்தவர்..அதைத்தான் சொன்னார். (சிங்காரவேலரைப் பார்த்து) இவர்தான் நீலகண்டர்.. நீலகண்ட பிரம்மச்சாரி. உமது தொழிலாளர் சங்கங்களில் வேலை செய்யக்கூடிய திறமை வாய்ந்தவர். தொண்டால் சிறை அளந்து வந்திருக்கிறார். சிங்காரவேலர் : பாரதியிடம் இத்தனை புகழ்ச் சொல் பெறுவது கடினம் தம்பி.. நீ விரும்பினால் என்னுடன் வந்து உதவி செய்யலாம். நீலகண்டர் : அண்ணா, இப்படித்தான் சிதம்பரம் பிள்ளையிடம் அனுப்பி வைத்தார். அவரிடம் நான் தேறவில்லை. இப்போது உங்களுடன் அனுப்புகிறார். சிங்காரவேலர் : ஆஷ் கொலை வழக்கில் அதிக நாள் தண்டனை பெற்றவர் நீர்தான் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம், சதிக் குழுவை உருவாக்கியவன், சதியைத் திட்டமிட்டவன் என்றெல்லாம் சொல்லிக் குற்றப் பத்திரிக்கை வாசித்தார்கள். ஆனால் இந்தத் திட்டத்தில் நான் இல்லவே இல்லை. ஆர்யா : நீர் சரணடைந்தபோது இதைக் குறிப்பிட்டிருந்தீர் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம்.. பத்தாண்டுகளுக்கு முன்னால் இதே மாதத்தில்தான் கல்கத்தாவில் நானாக முன்வந்து சரணடைந்தேன்; வாக்குமூலமும் கொடுத்தேன். 1911ஆம் வருடம் ஜூலை 11ஆம் தேதி திருநெல்வேலிக்குக் கொண்டுவந்தார்கள். (மேடை இருளில் போய் ஒளியில் வரும்போது ஓம்கார் அறை) சங்கர கிருஷ்ணன் : ஆஷ் கொலையின்போது காசியில் இருந்தேன் என்று சொன்னீர்களே.. கல்கத்தாவுக்கு எப்போது போனீர்கள்.? ஓம்கார் : சொல்கிறேன். (திரை விழுகிறது)