பொது சிவில் சட்டம்தேவையா?
ஆய்வரங்க நிகழ்வுத் தொகுப்பு
சுவடு இணைய இதழ் மற்றும் இந்திய சமூக நீதி ஊடக மையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘பொது சிவில் சட்டம் தேவையா?’ என்ற ஆய்வரங்கம், கடந்த ஆகஸ்டு 12, சனிக்கிழமையன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள MEET அரங்கத்தில் நடைபெற்றது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியர் அரிபரந்தாமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், சமூக சமய ஆய்வாளர் ஹமீது ஹுசைன் ஆகியோர் இந்த ஆய்வரங்கில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய தோழர் ஹமீத் ஹூசைன், இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்பட்ட வரலாறு, அதன் பின்னணி, பொது சிவில் சட்டம் என்று கூறப்படுவதன் அரசியல் நோக்கங்கள், பசுவதைத் தடுப்புச் சட்டம், முத்தலாக், பாபர் மசூதி, ஞானவாபி மசூதி போன்ற பிரச்சினைகளைப் பற்றியும் சமகாலத்தில் முஸ்லீம்கள் சந்தித்து வரும் ஒடுக்குமுறைகள் பற்றியும் ஒன்றிய அரசு இசுலாமிய மக்களைக் குறிவைத்துத்தான் இந்த மாதிரியான சட்டங்களைக் கொண்டுவருகிறது, சில சட்டங்களைத் திருத்துகிறது என்றும் இத்தகைய வேலைகளில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்துகிறது என்று தமது உரையில் குறிப்பிட்டுப் பேசி, இன்றைய சூழலில் பொது சிவில் சட்டத்தை எந்தக் காலத்திலும் ஏற்க முடியாது என்ற கருத்தை முன் வைத்துப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் வாலாசா வல்லவன் பேசும்போது, 1939ஆம் ஆண்டு முதல், சுதந்திர இந்தியாவில் அண்னல் அம்பேத்கர் ஆற்றிய சட்டச் செயல்முறைகள் பற்றிய செய்திகளையும் அன்றைய காலகட்ட நிகழ்வுகளின் வரலாறுகளையும் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்கான சட்டங்களை இயற்றுவதற்கு அம்பேத்கர் முன் நின்ற பெரும் சவால்கள், அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகியது வரை பல வரலாற்றுச் செய்திகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிப் பேசியதுடன், பாஜகவின் மூன்று முக்கிய நோக்கங்களான காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, ராமர் கோயில் கட்டுவது ஆகிய இரு நோக்கங்களை நடைமுறைப்படுத்திவிட்டார்கள் என்பதையும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து அவர்களின் மூன்றாவது நோக்கமான பொது சிவில் சட்டத்தையும் கையில் எடுத்திருக்கிறார்கள் என்ற கருத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.

அடுத்து உரையாற்றிய தோழர் தியாகு, இந்து கூட்டுக் குடும்பச் சட்டம், அதனை முன்வைத்து நிகழ்த்தப்படும் வரி ஏய்ப்புகள் என பொருளியல் பின்புலத்தில் இயங்கும் சட்ட நடைமுறைகள் மீதான விமர்சனத்துடன் தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து, பிற மதத்தினருக்கு கூட்டுக் குடும்பச் சட்டம் இல்லாமை, குற்றவியல் சட்டங்களும் திருமணம், சொத்துரிமை தவிர்த்த இதர சிவில் சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவாக இருப்பதையும் சட்டம் குறித்த கருத்து கேட்கும்போதே பழங்குடிகளுக்குச் சட்ட விலக்கு என்ற உள்துறை அமைச்சரின் வாக்குறுதி ஆகியவற்றையும் சுட்டிக்காட்டிக் காட்டியதுடன் இதைப்போன்ற செயல்பாடுகளின் பின்னணியில் உள்ள, சமூகப் பொருளியல் அழுத்த விளைவுகள் ஆகியவற்றையும் அழுத்தமாக எடுத்து வைத்து, இசுலாமியர்களின் வாழ்க்கையையும் இன்றைய அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பேசி, இந்து ராஜ்ஜியம் என்ற நோக்கத்தின் வெளிப்பாடே இந்தப் பொதுசிவில் சட்டம் என்று பேசினார்.

நிறைவாகப் பேசிய நீதியர் அரிபரந்தாமன், பொது சிவில் சட்டம் குறித்துத் தொடர்ந்து பேசுபவர்கள், அதற்கான வரைவுகூட முன்வைக்கபடாத நிலையிலேயே விலக்கு குறித்துப் பேசுவதையும் வடகிழக்கு மாநிலங்களில் குடியேற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் இசுலாமியர்கள் மீது மட்டும் பாகுபாடு காட்டப்படுவதையும் சிறுபான்மை மக்களுக்குள்ளும் இசுலாமியர்கள் தனித்துக் குறி வைக்கப்படுவதையும் குடும்பம், சொத்து தொடர்பான வழக்குகளிலும்கூட நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குகள் பொதுச் சட்டங்களின் அடிப்படையிலேயே விசாரிக்கப்படுகின்றன என்பதையும், சிறுபான்மையினர் தொடர்பான சில வழக்குகளில் பெரும் முரண்பாடாக மனுநீதி கோலோச்சுவதையும் அம்பலப்படுத்திப் பேசினார். திருமணச் சட்டங்களில்கூட வயது வரம்பு, வரதட்சணை போன்ற அம்சங்கள் ஒப்பீட்டளவில் இந்துக்களால்தான் அதிகம் மீறப்படுகின்றன என்ற புள்ளிவிவரங்களையும் முன்வைத்தார். உலகின் பல்வேறு நாடுகளிலும் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட நடைமுறைகளையும் குறிப்பிட்டு, சிறுபான்மையினருக்கு இருக்கும் அச்ச உணர்வுகள் நீங்கி, காலப்போக்கில் உருவாகும் சமூக மாற்றங்களால், அனைத்து சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய (inclusive) சமூகமாக இந்தியச் சமூகம் மாறும் காலத்தில், பொது சிவில் சட்டம் இயல்பாகவே நடைமுறைக்கு வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு, நமது இலக்கு அத்தகைய நல்லிணக்கச் சமுதாயத்தை உருவாக்க வேண்டியதாக இருக்க வேண்டுமேயன்றி, வலிந்து திணிக்கும் சர்வாதிகாரத்தால் பொது சிவில் சட்டம் என்ற கருத்துக்குக்கூட ஆதரவு பெற முடியாது என்று கூறி முடித்தார்.

சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவையின் தலைவரும் சுவடு இணைய இதழின் நிர்வாக ஆசிரியருமாகிய சுவடு மன்சூர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். சுவடு இணைய இதழின் ஆசிரியர் நல்லு இரா. லிங்கம், இந்திய சமூக நீதி ஊடக மையத்தின் நிறுவனத் தலைவர் பவா சமத்துவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவிஞர் ஆர்க்காடு ராஜா முஹம்மது நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். பத்திரிகையாளர் பீட்டர் பால்ராஜ் நன்றிகூறி நிகழ்வை நிறைவு செய்தார். நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
- ஆர்க்காடு ராஜா முகம்மது

Comments (0)