எங்கே போகிறது கல்வி?

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி

நாடாளுமன்ற விவாதம் ஏதுமின்றி, கடந்த 2020ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிற நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் அடிப்படைப் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு அகில இந்தியா கல்விப் பாதுகாப்புக் கமிட்டி (AISEC) தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் முதலாவது அமர்வில் பேராசியரியர் யோகராஜன் ஆற்றிய உரையின் தொகுப்பை முன்பு சுவடு இதழில் வெளியிட்டிருந்தோம்.

அடுத்ததாக, அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து அலசுவதற்காக அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் கூட்டத்தில் பேராசியர் ஹோசிமின் திலகர் சிறப்புரை ஆற்றிய நிகழ்வின் முழுத் தொகுப்பை தொடராக சுவடு வெளியிடுகிறது.

அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS)

மெய்நிகர்க் கூட்டத்தைத் தொகுத்தளித்த தோழர் ரெங்கையா முருகன் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி குறித்த ஓர் அறிமுகத்துடன் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். 1986ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கைக் குறித்து, அதன் நன்மை தீமைகளை ஆய்வு செய்யும் பொருட்டு ஒரு அமைப்பு உருவானது. உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் இந்த அமைப்பின் தலைவராகவும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுஷில் குமார் முகர்ஜி உள்ளிட்ட சிலரும் இணைந்து அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியை உருவாக்கினர். இதன் தமிழ்நாடு பிரிவும் அப்போதிருந்தே செயல்பட்டு வந்தது.

1986இல், அக்கல்விக் கொள்கை குறித்து MIDS (Madras Institute of Development Studies) நிறுவனரும் உலகப் புகழ்பெற்ற கல்வியாளருமான மால்கம் ஆதிசேஷய்யா, யோஜனாவில் மிகச் சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதினார். “அய்யோ… அதனை ஒரு முனைப்படுத்தாதீர்” என்ற கட்டுரைதான் அது. அதாவது, ‘நீங்கள் டெல்லியில் உட்கார்ந்துகொண்டு தமிழ்நாட்டில் இருக்கும் வேலூருக்குத் தேவையான கல்வித் திட்டத்தை வகுக்காதீர்கள்’ என்றார். அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்குத் தேவையானவற்றை உள்ளடக்கிய கல்வியைப் பரவலாக்க வேண்டும் என்றார். ‘கல்வி என்பது வேறு, கல்வி முறை என்பது வேறு. கல்வி என்பது கற்கின்ற செயலை அடிப்படையாகக் கொண்டிருப்பது எனவும் கல்வி முறை என்பது ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நூலகங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கிய தொகுப்பு என்றும் அவர் கூறினார்.

ஆனால் தற்போது நடைமுறையிலிருக்கும் கல்விக் கொள்கையை யார் வகுக்கின்றனர் என்றால், ஆளும் அரசுதான் வகுக்கிறது. இன்றுள்ள பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறும் இந்த அபிவிருத்திக்குத் தகுந்தவாறும் உருவாக்கப்பட்டுள்ளதே தேசிய கல்விக் கொள்கை 2020. இதன் அபாயங்கள் குறித்தும் கல்வி வணிகப் பண்டமாக மாறப்போவதையும் இந்தியா பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும்போது எவ்வாறு ஓரிடத்தில் அமர்ந்து கல்விக் கொள்கையை உருவாக்க முடியும் என்றும் அப்போதே ஆதிசேஷயா தனது கட்டுரையில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக உரை: பேராசிரியர் சிவக்குமார்

1986இல் அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (AlSEC) அமைப்பு எனக்கு அறிமுகமாயிற்று. மாநிலக் கல்லூரியில் இயற்பியல் துறைப் பேராசிரியராக நான் இருந்தேன். 1986இல் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, கல்விக் கொள்கை குறித்து ஒரு அருமையான தொகுப்பை வெளியிட்டது. அந்த வரலாற்றை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

1986இலிருந்து இந்தக் கல்விக் கொள்கைகள் எவ்வாறு கல்வியை வணிகமயத்துக்கு, கார்ப்பரேட் மயத்துக்குக் கொண்டுசெல்கிற அளவுக்கு வளர்ந்திருக்கின்றன என்று நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். எந்த ஒரு கல்விக் கொள்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. ராஜீவ் காந்தி கல்விக் கொள்கை, பிர்லா – அம்பானி கல்விக் கொள்கை, தற்போது அமலாகிக்கொண்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020 உள்ளிட்ட அனைத்துமே தமிழ்நாட்டின் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் திறன் மேம்பாடு (Skill Development) என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்துகிற கார்ப்பரேட் கல்விக் கொள்கையாகத்தான் உருவாகியுள்ளன.

முந்தைய மெய்நிகர்க் கூட்டத்தில் பழம்பெருமை, பாரம்பரியம் இரண்டையும் எவ்வாறு பாஜக அரசு கையிலெடுத்து மிக நாசூக்காக வேலை செய்துகொண்டுள்ளது என்று பேராசிரியர் யோகராஜன் மிக அருமையாக எடுத்துரைத்தார். NCF குறித்த விவரங்களை AISEC அமைப்பு தமிழில் வெளிக்கொண்டு வருகிறது. பள்ளிக் கல்வி, உயர்கல்வி என எல்லாவற்றிலும் மிக அழகாகத் திட்டமிட்டு, பாஜகவினர் செயல்படுத்திக்கொண்டுள்ளனர் என்பதை அதன்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

ஹிட்லர் உயிரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். எதற்காக என்றால், கண், இமை, முடி இவற்றையெல்லாம் வைத்து ஒரு பாசிச வெறியை, வெறுப்புணர்வை யூதர்கள் மேல் வைத்து, அவர்களைக் கொலை செய்யும் அளவிற்குத் தூண்டும் வகையில் உயிரியல் பாடம் கற்பிக்கப்பட்டது. நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று ஜெர்மானியர்களுக்குப் போதிக்கப்பட்டது.

முந்தைய கூட்டத்தில் யோகராஜன் அவர்கள் ஆற்றிய உரையை நாம் மிகச் சாதராணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. NCFஇன் அடிப்படை என்பது மிகவும் ஆபத்தானது. அத்தியாயம் 3இல் மொழிக்கொள்கை பற்றியும் அத்தியாயம் 4இல் கல்வியியல் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் ஹோசிமின் திலகர், இன்று நம்மிடையே அவற்றின் பின்னணியையும் பேசவுள்ளார். நான் இதை வாசிக்கும்போது மூன்றாம் அத்தியாயத்தில் ஒரு ஆபத்தான சொல்லாடலைக் கையாள்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்டேன். காந்தியடிகள், தாகூர் போன்றவர்களெல்லாம் தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்தியது பற்றி நமக்குத் தெரியும். 1966 கோத்தாரி கல்விக் கொள்கை குறித்து யோகராஜன் தனது உரையில் குறிப்பிட்டார். அக்கோத்தாரிக் குழு அறிக்கையில் தாய்மொழி வழிக் கல்வி குறித்து வலியுறுத்தப்பட்டது.

தாய்மொழி வழிக்கல்வி என்று சொன்னார்களே தவிர, வீட்டு மொழி (Home Language) என்று அங்கே சொல்லப்படவில்லை. தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கோத்தாரி கூறினார். கல்லூரி வரையிலும் – பட்ட வகுப்புகள் வரை அது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 1970களில் பட்ட வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று அது முடங்கிப் போயிருக்கிறது. நான் தமிழ் வழியிலேயே இயற்பியல் பாடம் கற்பித்தேன். தமிழ் வழியிலேயே முதுநிலை வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்கள் எல்லாம் எழுபதுகளில் இருந்தன. இன்று எல்லாமே வணிகமயமாகவும் தாய்மொழிக் கல்வியைப் புறந்தள்ளும் நிலைக்கும் மாறியுள்ளன.

NCFஐ உற்றுநோக்கினால், இதன் அடிப்படையாக மூன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் உள்ள குழந்தைகளுக்கு என்ன சொல்லிக்கொடுக்க வேண்டும், எவ்வாறு உருவாக்க வேண்டும், பிறந்த உடனேயே அந்தக் குழந்தைகள் எதைச் சொல்ல வேண்டும், எதை உச்சரிக்க வேண்டும்? எந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்? என்று அழுத்தம் கொடுக்கப்பட இருக்கிறது. இவை குறித்தெல்லாம் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

மூன்று வயதிலிருந்தே பள்ளிக்கூடம், வகுப்புகள், பாடமுறை என்று பேசுவதைக் குழந்தைகள் மீதான வன்முறையாகப் பார்க்கிறேன். முக்கியமாக, மொழியைப் பொறுத்தவரை L1, L2, L3 என்று பிரிக்கிறார்கள். Home Language, Mother tongue பின்பு Familiar language என்று குறிப்பிடுவது விந்தையாக உள்ளது. Home Language என்பதை ஹிந்தி என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறிவிடலாம். தாய்மொழிக்கு இரண்டாமிடம் கொடுக்கிறார்கள். இந்த மூன்று மொழிகளையும் கற்றுக் கொடுக்கக்கூடிய அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டுமென்று மூன்றாவது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. இதற்காகப் பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகிறார்கள். அடுத்து, கல்வியியல் திட்டங்கள், அவற்றின் அமலாக்கங்கள், கலைத் திட்டங்கள் குறித்தும் பேசப்படுகிறது.

நாம் மிக ஆபத்தான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 1986 கல்விக் கொள்கை தொடங்கி, தனியார்மயத்துக்கு எதிராகப் போராடிய அமைப்பு கல்விப் பாதுகாப்புக் கமிட்டி. Delinking degree from job என்பதைப்பற்றி அன்று நாம் விரிவாகப் பேசியிருக்கின்றோம். ஹோசிமின் திலகர், யோகராஜன், சுதாகர் மற்றும் மூத்த தோழர்களுக்கெல்லாம் நன்கு தெரியும். அந்த Delinking degree from job இப்போது நடந்துவிட்டது.

திறன் மேம்பாட்டுப் பாடம் (Skill Development Course) இல்லாத, பரவாத, வேரூன்றாத இடமே இல்லை. மக்கள் கல்விக் கூட்டியக்க மாநாடு குறித்துப் பேச நாங்கள் இரண்டு கல்லூரிகளுக்குச் சென்றோம். இரண்டுமே அரசுக் கல்லூரிகள். அதில் ஒரு கல்லூரிப் பேராசிரியர் எங்களிடம் குறைபட்டுக்கொண்டார். அது கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறது. பொதுப் பாடத்திட்டத்தை மக்கள் கல்விக் கூட்டியக்கம் எதிர்த்தது. அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியும் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தது. பொதுப் பாடத்திட்டத்தைக் கலை அறிவியல் கல்லூரிகளில் அமல்படுத்தியுள்ளார்கள்.

அவர் கூறியது என்னவென்றால், ‘தனியார் தன்னாட்சிக் கல்லூரிகளெல்லாம் அவர்கள் விருப்பம்போல் பாடத்திட்டத்தை அமைத்துக்கொள்ளலாம்’ என்று அமைச்சர் சொன்னபடி அமைத்துக் கொண்டுவிட்டார்கள். ஆனால் அரசுக் கல்லூரிகளில் இது வலிந்து புகுத்தப்படுகிறது. குறிப்பாக, முதல்நிலைப் பாடத்தில் 4 கோர் (Core) பாடங்கள், உதாரணமாக அறிவியல் பாடத்தை எடுத்துக்கொண்டால் 4 பாடங்கள் வெளியேற்றப்பட்டு திறன் மேம்பாட்டுப் பாடங்கள் உள்ளே நுழைக்கப்பட்டுள்ளன. ஒன்று தெளிவாக இருக்கிறது. ஆளுகின்ற அரசு வேலையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் கல்வியையும் பாடங்களையும் பிரித்தல் (Delink degree from job, Delink Subject from Society) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சமூகத்தைவிட்டு இந்தப் பாடங்கள் விலகி இருக்க வேண்டும். சமூக உணர்வையோ சிந்தையையோ உருவாக்குகின்ற வகையில் பாடங்கள் இருக்கக்கூடாது என்று கருதுகிறது.

இயற்பியலைக் கற்பிக்கும்போது நீ செய்ய வேண்டியதெல்லாம், அவர்களுக்கு அணுகுண்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமே தவிர, அணு சோதனைகள் பற்றியோ அது குறித்து ஐன்ஸ்ட்டீன் பின்னாளில் வருந்தி வெளியிட்ட அறிக்கை குறித்தோ சொல்லக் கூடாது. இவற்றைப் பேசுவதற்கு வகுப்பறைகளில் இடம் இருக்கக்கூடாது. திறன், திறன் (Skill, skill) என்றுதான் பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை வந்தபோது நாம் கூட்டம் போட்டிருக்கின்றோம். அதற்கு முன்னால் கஸ்தூரி ரங்கன் அறிக்கை வந்தபோதும் கூட்டம் நடத்தியுள்ளோம். 2016இல் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அறிக்கை வந்தபோதும் கூட்டம் போட்டுள்ளோம். அந்தத் திட்டங்களை ஒவ்வொன்றாக அமுலாக்குவதற்கான மறைமுகமான சட்டங்கள்தான் இந்தக் கட்டமைப்பு (Frame Work) என்றுகூட நான் சொல்வேன்.

இந்த ஒன்றிய அரசின் பல திட்டங்களை எதிர்ப்பதாக மாநில அரசாங்கம் இப்போது தமிழ்நாட்டை ஆண்டுகொண்டுள்ள திராவிட அரசாங்கம் சொல்கிறது. அவர்கள் சனாதனத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு நமது முந்தைய கூட்டத்தில் யோகராஜன் அவர்கள் பேசிய அந்தப் பாரம்பரியத்தைப் பற்றித் தெரியுமா என்றால், நாம்தான் சொல்லவேண்டியிருக்கிறது. மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறுகிறார்கள். அதுபற்றித்தான் மூன்றாவது அத்தியாயத்தில் இப்போது நாம் விவாதிக்க உள்ளோம். எனவே, இவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திட்டம் தீட்டுவதற்கான வழிமுறைகளை ஆர்.எஸ்.எஸ் (RSS) சித்தாந்தவாதிகள் இவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

டைம்ஸ் ஆம் இன்டியாவைப் பார்த்தால், ‘Social media’ finds a place in UGC‘s Life Skill Education என்று சொல்லப்பட்டுள்ளது. ‘Managing Personal Finance, Constitution Values and Patriotism என்ற தலைப்புகளெல்லாம் கொண்டுவரப்பட வேண்டும் என்று UGC ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி இனிமேல் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.

நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்? இந்தக் கொள்கையானது படிப்படியாக அமலாகிக்கொண்டுள்ளது. எனவே இத்தகைய கூட்டங்கள் அவசியம். மக்கள் கல்விக் கூட்டியக்கம் ஏற்பாடு செய்துள்ள கல்வி இயக்க மாநாடும் இதைப் போன்றதே.

பகுதி நேர ஆசிரியர் பிரச்சினையாக இருந்தாலும் கெளரவ விரிவுரையாளர் பிரச்சனையாக இருந்தாலும் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர் பிரச்சனையாக இருந்தாலும், அவற்றுக்குப் பின்னால் ஒரு பொருளாதார அடிப்படை உள்ளது. இவற்றைத் திட்டமிடுவதற்கு அரசாங்கங்கள் செய்யும் முயற்சிகள் எல்லாம் வெறும் செலவினங்களைக் குறைப்பது மட்டுமல்ல, ஒட்டு மொத்தக் கல்வியையும் சீர்குலைத்து, பொதுமக்களுக்கான, அடித்தட்டு மக்களுக்கான கல்வியாக இருப்பதிலிருந்து தகர்த்து,
வசதி படைத்தோருக்கான கல்வியைத் தர முயன்று வரும் அரசும் விஸ்வகர்மா திட்டங்கள் அமல்படுத்துவதற்கான சூழ்நிலையும் கொண்டுள்ள காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். எனவே இத்தகைய விவாதங்களை AISEC முன்னெடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து பயணித்து, போராட்டத்திற்குத் தயாராவோம்.

தொடரும்

  • கட்டுரையாக்கம்: உமா மகேஸ்வரி, கல்விச் செயல்பாட்டாளர்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *