எங்கே போகிறது கல்வி..? பகுதி 4

எங்கே போகிறது கல்வி..? பகுதி 4

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி நிறைவுப் பகுதி அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர்க் கூட்டத்தில், பேராசியர் ஹோசிமின் திலகர் அவர்களின் நிகழ்த்திய உரையின் நிறைவுப் பகுதியைப் பார்க்கலாம். அத்தியாயம் : 4 – கல்வியைக் கற்றுத் தரும் முறைமைகள் (Pedagogy): கல்வியைக் கற்றுத் தருவதற்குப் பல்வேறு முறைமைகள் என்பது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்கத் தோன்றியிருக்கின்றன. வரலாற்று ரீதியிலே கல்வி கற்பிக்கப்படும் முறைமைகள் நிறைய இருக்கின்றன. அதைப்பற்றி இந்த அறிக்கையில் விளக்கமாகப் பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை இந்த அறிக்கையை வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. கல்வி என்பது செயல்வழிக் கற்றலாக இருக்க வேண்டும் என்று இந்த அறிக்கை சொல்கிறது. கல்வி என்பது ஒரு குழந்தையை உற்சாகப்படுத்திப் படிக்க வைக்க வேண்டும், அப்படிப்பட்ட சூழலை ஒரு வகுப்பறையும் ஆசிரியரும் ஏற்படுத்த வேண்டும், ஆசிரியர் மாணவர்களை வரவேற்கக்கூடியவராக இருக்க வேண்டும், வகுப்பறை என்பது செயல்வழிக் கற்றல் இடமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் இந்த அறிக்கை விளக்கமாகக் கூறுகிறது. இதைப் படிக்கும்போது மிக மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆகா! மிக அருமையான ஒரு அறிக்கையாக இருக்கிறதே, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதைவிடச் சிறந்த ஒன்றைச் சொல்லமுடியாதே என்ற எண்ணம் தோன்றும்படி இருக்கிறது. அதுபோன்ற கட்டமைப்பு, கற்பித்தல் முறைகளைப் பின்பற்ற சிறப்பான வழிகளைக் கூறுகிறார்கள். ஆனால் இங்கு அடிப்படையாகக் கவனிக்க வேண்டியது, கற்றுத் தருவதற்கு நூறு அல்ல, ஆயிரம் அல்ல, பல்லாயிரக்கணக்கான முறைகளையும் வழிகளையும் ஆசிரியர்களே நாள்தோறும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படிப்பட்ட முறைமைகளையெல்லாம் பின்பற்றினால் மாணவர்கட்கு அறிவைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை ஆசிரியர்களே யோசித்து, பல்வேறு விசயங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அடிப்படையான உண்மை. இந்த அறிக்கையை நாம் வாசித்துப் பார்த்தால் பல்வேறு அம்சங்களை நாம் பார்க்க முடியும். ஆனால் அவர்கள் சொல்வதைத்தான் நாடு முழுவதும் ஒவ்வொரு பள்ளியிலும் பின்பற்ற வேண்டும் என்று இவர்கள் கூறுவதைத்தான் நாம் கொஞ்சம் உற்றுக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா போன்ற ஒரு பரந்து விரிந்த நாட்டில், இத்தனை மாநிலங்கள் இத்தனை மொழிகள் பேசக்கூடிய நாட்டில், இத்தனைக் கலாச்சாரப் பின்னணிகள் உள்ள நாட்டில், இவர்கள் சொல்லக்கூடிய இந்தக் கல்வி முறைமைகளைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று எப்படிக் கூற முடியும் என்பதுதான் இங்கே அடிப்படைக் கேள்வியாக இருக்கிறது. அந்தக் கேள்விக்கும் அவர்கள் ஓரிடத்தில் விடை வைத்திருக்கிறார்கள். என்ன வைத்திருக்கிறார்கள் என்றால், ஆசிரியர்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது, ஆசிரியர்களும் அவர்களாகவே யோசித்து அவர்களாகவே பல விசயங்களைச் செய்ய வேண்டும் என்றுகூடச் சில இடங்களில் குறிப்பிடுவதை நாம் பார்க்க முடியும். ஆசிரியர்கள் பாடல்களின் மூலமாக, விளையாட்டின் மூலமாக, செயல்வழிக் கற்றலின் மூலமாக என்று பல்வேறு முயற்சிகள் வழியாக மாணவர்களுக்கு அறிவைக் கொண்டுபோய்ப் சேர்க்கலாம் என்று பலப்பல யோசனைகளை முன் வைத்திருக்கிறார்கள். இதை ஆசிரியர்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்றெல்லாம்கூடச் சொல்கிறார்கள். ஒரு உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஆசிரியர்கள் போதனா முறையில் என்ன சொல்லித்தர வேண்டும்? மாணவர்களிடம் எப்படிப்பட்ட திறனைக் (Competency) கொண்டுவர வேண்டும்? கல்வி விளைவுகள் (learning outcomes) எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று முன்கூட்டியே ஆசிரியர்கள் யோசித்து, தங்கள் திட்டங்களில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றார்கள். ஆசிரியர்கள் பாடத்தின் இலக்கைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இங்கே ஆசிரியர்கள் வழிகாட்டி சொல்லித் தர வேண்டிய பாடங்கள், மாணவர்களே செய்து பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் என்றெல்லாம் பல வகையாகப் பிரித்துப் பிரித்துச் சொல்லியிருக்கின்றார்கள். இதெல்லாம் படிப்பதற்கு நன்றாகவும் பாராட்டத்தக்கதாகவும்தான் இருக்கின்றன என்பது உண்மை. மற்றொரு இடத்தில் அவர்கள் சொல்வதுபோன்று ஐந்து கட்டங்களாகப் பாடங்கள் சொல்லித்தர வேண்டும். அது அறிமுகம், ஒரு கோட்பாட்டை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், நடைமுறையில் தொடர்புபடுத்துவது, அதை எங்கே கொண்டுசென்று (Application) பயன்படுத்துவது, அதற்கு வெவ்வேறு அம்சங்களில் பொருத்திப் பார்ப்பது, அதை விரிவாக்குவது என்று பல வகைகளிலும் விளக்கங்களை முன் வைத்துள்ளனர். அதேபோல, ஆசிரியர்கள் போதிப்பதில், தான் செய்து காட்டுவதும், ஆசிரியர்களுடன் சேர்ந்து செய்வதும், இறுதியில் மாணவரையே செய்ய வைப்பதும் என்ற வகையில் – I do it , We do it , You do it and you do it alone – பல்வேறு கட்டங்களில் அறிவைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதெல்லாம் குறித்து அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கின்றனர் என்பதெல்லாம் உண்மைதான். ஆக, மாணவர்களுக்குக் கற்கும் பொறுப்பு எப்படியெல்லாம் இருக்கிறது என்று கூறுகின்றனர். ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுடன் உகந்த உறவை வைத்துக்கொள்வதோடு பெற்றோர்களோடும் நல்ல உறவை வளர்த்துக்கொண்டு மாணவர் – பெற்றோர் இருவருடனும் இயைந்து பழகி அவர்கள் மனத்தில் இடம்பெற வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அதேபோல எண்களை அறிவித்தல், எழுத்துகளை அறிவித்தல் குறித்து நாம் அறிவோம். அதில் எழுத்தை அறிவித்தல் என்பதில் Oral language Development, Word Recognition, Reading and writing என்ற நான்கு கட்டங்களாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதேபோல எண்களைக் கற்பிப்பதில் வாய்மொழி வழியாகக் கணக்கைக் கற்றுத் தருவது (Oral Math talk), பல்வேறு செயல்வழிக் கற்றல் வழியாகக் கணக்கைக் கொண்டு சேர்ப்பது, ஒரு குழந்தைக்கு எளிதாகப் புரியக்கூடிய கணக்கிலிருந்து படிப்படியாக சிக்கலான கணக்கு விஷயங்களை எப்படிக் கொண்டு சேர்ப்பது, விளையாட்டு வழியாகக் கணக்கை எடுத்துச் செல்வது (Math game) என அனைத்து வழிகளையும்பற்றிக் கூறியிருப்பது உண்மைதான். இங்கு நமக்கு அடிப்படையான சில கேள்விகள் தோன்றுகின்றன. எண்ணை அறிவித்தலும் எழுத்தை அறிவித்தலும் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்கு மிகமிக அடிப்படையான விஷயங்கள் என்று அறிவோம். Basic Building Block என்று சொல்வார்கள். மிக அடிப்படையான விஷயத்தை, மிகத் திறமையாக, தெளிவாக மாணவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது அடிப்படையான தேவையாக இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதற்கு எத்தனை விதமான கற்பித்தல் முறைகள் இருக்கின்றனவோ அவற்றில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று பலவாறு கூறியுள்ளதும் சரிதான். ஆனால் என்னுடைய கேள்வி, அப்படிப்பட்ட சூழலைத்தான் பள்ளிகளிலே மத்திய, மாநில அரசாங்கங்கள் ஏற்படுத்தித் தந்து இருக்கின்றனவா? எத்தனைப் பள்ளிகளிலே மாணவர்களுடன் உரையாடக்கூடிய நிலையில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்?போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்களே இல்லை, போதுமான எண்ணிக்கையில் பள்ளிகளும் இல்லை. ஒருவேளை அரசுப் பள்ளிகள்தான் இப்படி இருக்கின்றன என்று சொன்னால், தனியார் பள்ளிகள் கட்டணக்கொள்ளை நடத்தக்கூடிய இடங்களாக இருக்கின்றன. இப்படிப்பட்ட அடிப்படைப் பிரச்சனைகளுக்குக்கூடத் தீர்வு கொடுக்காமல், இப்படிப்பட்ட ஒரு அறிக்கையில் நேர்த்தியாக விஷயங்களை விளக்கியிருக்கிறார்களே ஒழிய, இதையெல்லாம் எங்கே போய் இவர்கள் அமல்படுத்தப்போகிறார்கள் என்ற கேள்விதான் நமக்குள் எழுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்பறையில் உரையாட முடியாத வகையில் ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை கொடுத்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் கூடுதலாக ஆசிரியர்களுக்குப் பணிச்சுமையைக் கொடுத்து, எதிர்த்துக் கேள்விகூடக் கேட்க முடியாத நிலையில் வைத்திருக்கின்றார்கள். இதற்கான தீர்வை NEP 2020 எங்கே முன்வைத்துள்ளது? அல்லது NCFFSதான் இதற்கான தீர்வை எங்கே முன்வைத்துள்ளது? இவற்றையெல்லாம் தாண்டி, இன்று ஆசிரியர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள்? ஒரு பள்ளிக்கு நாம் சென்றோமானால் அவர்கள் உட்காருவதற்கு மேசை, நாற்காலிகூடக் கிடையாது. உட்காரக் கூடாது, உட்கார முடியாது. அவர்களுக்கு என்ன பணிக்கப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் மாணவர்களுடன் சேர்ந்து உட்கார வேண்டும். நல்ல விஷயம்தான். மூன்று வயது, நான்கு வயது, ஐந்து வயது வரை மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர் இருப்பது மிக மிக நன்மையான விஷயம், சரியான விஷயம்தான். ஆனால் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு வந்ததற்குப் பிறகு ஆசிரியர் எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போது, அங்கு கரும்பலகை இருக்க வேண்டும், கரும்பலகையில் எழுதிக் கற்பிக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவை. அதற்கு இவர்கள் என்ன தீர்வு வழங்குகின்றார்கள் என்று பார்த்தால், அந்த வகுப்பறையில் கீழே உயரம் குறைந்த இடத்திலே மாணவர்கள் எழுதிப் பார்க்கும் வகையில், கரும்பலகையை அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நாம் காலம் காலமாகப் பார்த்து வருவது என்னவென்றால் ஆசிரியர்தான் எண்களையும் எழுத்துக்களையும் அறிவிப்பவராக இருப்பார். ஆசிரியர்தான் பயிற்சியளிப்பவராக இருப்பார். அப்படி இருக்கும்போது, கரும்பலகை என்பது மாணவர் உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதும் அங்கே மாணவர்களுடன் இணைந்து அமர்ந்து கொண்டு கற்றுத்தர வேண்டும் என்று சொல்வதும் ஆசிரியர்களை எந்தவொரு நிலையில் கொண்டு சென்று வைத்துவிட்டது என்பதைப் பார்க்க வேண்டும். ஆசிரியர் என்பவர் சொல்லித்தரக்கூடிய, கற்றுத்தரக்கூடியவராக இருக்கும் நிலையை மாணவர்கள் பார்க்க வேண்டும். இவர்கள் கூட குரு குரு என்று சொல்கிறார்களே தவிர, அங்கே ஆசிரியரை எண்ணையும் எழுத்தையும் கற்றுத்தரக்கூடியவராக இவர்கள் வைக்கவில்லை. இப்போது நடைமுறையிலிருக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக இவ்வளவு சிரத்தை எடுத்து எண்ணையும் எழுத்தையும் அறிமுகம் செய்தால்கூட, இங்கு ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கே எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியவில்லை. அவர்களால் கணக்குப்போட முடியவில்லை என்ற சூழலைத்தான் உருவாக்கி வைத்துள்ளனர். அப்படி இருக்கும்போது இந்த எண்ணும் எழுத்தும் திட்டம் மிகப்பெரிய தோல்வியில்தான் முடிந்துள்ளது. அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். முதலாவது காரணம், கற்றுத் தரக்கூடிய நிலையில் இருக்கும் ஆசிரியரை மாணவருக்கு நண்பர்களாக ஆக்குவோம் என்ற பெயரிலே ஆசிரியர் நிலையை வைத்தது. மற்றொரு காரணம், முதலாம் வகுப்பிலிருந்தே தேர்ச்சி – தோல்வி என்ற நிலையே இல்லை. இது வந்தபிறகு முதலாம் வகுப்பில் சேர்ந்தவுடன் எட்டாம் வகுப்பு வரை தொடர்ச்சியான தேர்ச்சிதான் என்ற நிலை வந்தபிறகு பள்ளியில் ஒரு சிரத்தையான சூழல் இல்லை. ஆகவேதான் இன்றைய நிலையில் எண்ணையும் எழுத்தையும் அறிவித்தல் என்பது தோல்வியில் முடிந்துள்ளது. இது கடந்த பதினைந்து / இருபது ஆண்டுகளுக்குள்ளாக நடந்துள்ளதேயன்றி அதற்கு முன்பாக இந்நிலை தமிழ்நாட்டில் இல்லை. ஆக, Pedagogy என்று இவர்கள் சொல்லும் கற்றுத்தரும் முறைமைகள் என்பதும் ஒரு பெரிய தோல்வியில்தான் போய் முடிந்திருக்கிறது. மாணவர்களோடு உட்கார்ந்துகொண்டுதான் ஆசிரியர்கள் சொல்லித் தர வேண்டும் என்ற நிலையும் பாடப் புத்தகங்களே வேண்டாம் என்று அறிவிக்கும் நிலையும் அப்படியே பாடப் புத்தகங்கள் இருந்தாலும் அதற்கான பாடத் திட்டத்தை என்.

எங்கே போகிறது கல்வி..? பகுதி 3

எங்கே போகிறது கல்வி..? பகுதி 3

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர் கூட்டத்தில், பேராசியர் ஹோசிமின் திலகர் நிகழ்த்திய உரைத் தொகுப்பின் தொடர்ச்சியைப் பார்க்கலாம். கற்பித்தலைப் பாழாக்கும் எமிஸ் (EMIS – Education Management Information System): அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களது நிலையையும் பார்க்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பல தொடர்ச்சியான பணிச்சுமைகளுக்கு ஆசிரியர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். EMIS (Education Management Information System) என்ற கல்வி மேலாண்மைத் தகவல் முறையைக் கையாளும் நபர்களாக ஆசிரியர்களாக நடத்தப்படுகின்றனர். மாணவர் விபரங்களை நாள்தோறும் சேகரித்து, இந்த EMIS செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இது மட்டுமல்ல, எண்ணிறைந்த பணிகளான, வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, தேர்தல் வந்துவிட்டால் வாக்குச் சீட்டை வீடுவீடாகத் தேடிச்சென்று கொடுத்துக் கையெழுத்து வாங்குவது, முதியோர் கல்வி வளர்ப்பது, இது போதாதென்று இல்லம் தேடிக் கல்வி என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதையெல்லாம் ஆசிரியர்களின் பணிகளாகத் தருகிறார்கள். ஆசிரியர்கள் எந்தவொரு பணியும் இல்லாமல் வெறுமனே அமர்ந்து இருப்பதைப்போல நினைத்து மற்ற பணிகளை எல்லாம் வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் பள்ளிகளில் மாணவர்களைத் தொடர்ச்சியாக நாள்தோறும் சந்திக்கக்கூடிய வாய்ப்பையே இன்றைய ஆசிரியர்கள் பெற முடியாத ஒரு சூழல்தான் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாகப் பள்ளிக்குச் செல்ல விரும்பக்கூடிய ஆசிரியர்கள், மாணவர்கட்குக் கற்றுத் தர ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அங்கே மாணவர்களைத் தொடர்ச்சியாக சென்று பார்ப்பது, அவர்களோடு இருப்பது என்ற நிலையே இல்லாத ஒரு சூழலை உருவாக்கிவிட்டார்கள். இதுதான் இன்று அரசுப் பள்ளிகளிலே நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம் தனியார் பள்ளிகளை எடுத்துக்கொண்டால், அங்கே கடுமையான பணிச்சுமையை ஆசிரியர்களுக்கு வழங்கி, 8 மணி நேரம் என்பதெல்லாம் தாண்டி, 10 மணி நேரம், 12 மணி நேரம் என்று பள்ளிகளிலேயே இருந்து அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு மிகவும் களைப்பாக வீடுகளுக்குச் செல்லும் நிலைமையில், எந்தவிதமான பணிச்சுமை குறித்தும் கேள்வி கேட்க முடியாமல் ஒரு அடிமை நிலையில்தான் ஆசிரியர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஆசிரியர்களைப் பற்றியோ அவர்கள் பணிச்சூழல் பற்றியோ தேசிய கல்விக் கொள்கை 2020 ஆவணமோ அல்லது NCFFS ஆவணமோ வாயே திறக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த ஆவணத்தின் அனைத்து அம்சங்களையும் தொடர்ச்சியாக வாசித்தால் ஆங்கிலத்தில் Rosy Picture என்று ஒன்றைச் சொல்வார்கள். அதாவது மிகவும் அருமையாகப் படம் காட்டுவது. அதுபோலத்தான் இவர்களும் ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர்களுக்கு என்னவெல்லாம் வசதி வாய்ப்புகள் இருக்க வேண்டும்? இதையெல்லாம் தாண்டி மாணவர்களுக்கு எப்படியெல்லாம் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்? என்று மிகவும் அழகான காட்சியை இந்த ஆவணத்தில் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் அரசுப் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பார்த்தோமானால் அங்கே அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் மாணவர்கள் தத்தளித்துக்கொண்டிருப்பதும் கடுமையான பணிச் சுமையில் ஆசிரியர்கள் வைக்கப்பட்டிருப்பதும் அப்படியே நேர் எதிரான ஒரு நிலையை – கிட்டத்தட்ட அடிமைத்தனமான ஒரு நிலையை அங்கே நாம் காணமுடிகிறது. இதைப்பற்றியெல்லாம் இந்த அறிக்கைகள் வாயைத் திறக்க மறுப்பது ஏன் என்ற கேள்விதான் இங்கு எழுகிறது. மொழிக் கொள்கை: மொழிக்கல்வி குறித்து NCFFS என்ன கூற வருகிறது மற்றும் மாணவர்களுக்கு எண்களைக் அறிவித்தல் குறித்தும் எழுத்தை அறிவித்தல் குறித்தும் எப்படிப்பட்ட இலக்கை அது நிர்ணயித்திருக்கிறது என்பதை அடுத்து காணலாம். இங்கு ஏற்கனவே நம்மிடையே அறிமுக உரையாற்றிய பேராசிரியர் சிவக்குமார் அவர்கள், இந்த ஆவணத்தில் கூறப்பட்டிருக்கும் L1, L2, L3 குறித்துப் பேசினார். அதென்ன L1 , L2, L3? ஒரு குழந்தை, தான் வாழக்கூடிய வீட்டில் தனது பெற்றோர்கள் எந்த மொழியைப் பேசுகிறார்களோ அதைத்தான் அவர்கள் L1 என்று கூறுகிறார்கள். அதைத்தான் வீட்டு மொழி (Home Language) அல்லது தாய் மொழி (Mother tongue) அல்லது Familiar Language என்று சொல்கிறார்கள். இங்கே ஒரு உதாரணத்திற்காக, வீட்டிலே பேசுவதைத் தாய்மொழி என்று வைத்துக்கொண்டால், அதையே அவர்கள் L1 என்கின்றனர். பிறகு ஏன் அதை Home Language என்று சொல்ல வேண்டும்? அல்லது Familiar Language என்று சொல்ல வேண்டும்? என்று அதை நாமாகச் சற்று யூகித்துத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை அவர்கள் வேற்று மாநிலத்திலிருந்து வந்து பிறிதொரு மாநிலத்தில் வாழக்கூடியச் சூழலிலே, அங்கே அந்தத் தாய்மொழியை எழுத்து வடிவிலோ அல்லது வாசித்தல், எழுதுதல் போன்ற விஷயங்களைச் செய்யமுடியாத ஒரு சூழலிலே, அந்த மொழி என்பது அங்கே வீட்டில் பேச்சில் வழங்கக்கூடிய மொழியாக மட்டும்தான் இருக்கிறது. ஆனால் பள்ளிக்குச் சென்றால் அந்த மொழி என்பது அங்கே இருக்காது. இது வேற்று மாநிலங்களிலிருந்து வந்து ஒரு மாநிலத்தில் குடியேறியவர்களின் நிலையாக இருக்கும் என்று யூகிக்கத் தோன்றுகிறது. இதைத்தான் அவர்கள் L1 என்று சொல்கிறார்கள். ஆகவே L1 என்ற, வீட்டில் பேசப்படும் இந்த மொழியை மாணவர்களுக்கு உகந்த மொழியாக அறிவித்து, அந்த வகையிலே பள்ளிகளில் அந்த மொழியைப் பிரதானமாக சொல்லித் தரவும் அதன்மூலமாக மற்ற பாடங்களை மாணவர்களுக்குப் போதிக்கவும், அதாவது பயிற்று மொழியாக L1 என்ற அந்த மொழியைப் பயன்படுத்தவும் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு L1 மொழியைப் பாடங்களைச் சொல்லித்தரக்கூடிய மொழியாகக் கூறுகிறார்கள். அடிப்படையில் தர்க்கரீதியாக இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கிறது. அடுத்து L2, L3 என்று சொல்லக்கூடிய மொழிகளைப்பற்றி எடுத்துக்கொண்டால், மாணவர்கள் ஒரே நேரத்தில் தாய் மொழியையோ வீட்டிலே வழங்கப்படும் மொழியையோ பள்ளிகளில் கற்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி, அங்கே கற்க வேண்டும் என்று முதலாவதாகக் கூறிவிட்டு, இரண்டாவதாக, ஒரு குழந்தை – அதாவது முதல் வயதிலிருந்து எட்டு வயது வரை அதிகப்படியான மொழிகளைக் கற்றுத் தேறக்கூடிய வாய்ப்பை அக்குழந்தையினுடைய மூளையின் வளர்ச்சி வழங்குகிறது என்று கூறுகிறார்கள். தர்க்கரீதியில் யோசித்துப் பார்த்தால் உண்மைதான். ஆரம்பக் காலகட்டத்தில், ஒரு குழந்தை தனது எட்டு வயது வரை பல மொழிகளைக் கற்கக்கூடிய மிகச் சிறந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. அத்தகைய மூளை வளர்ச்சி அங்கே நடக்கிறது என்பது விஞ்ஞான ரீதியில் உண்மையாக இருக்கலாம். ஆனால் இங்கு எழக்கூடிய கேள்வி என்னவென்றால், அதற்காக நடைமுறையில் ஒரு குழந்தையால் எத்தனை மொழிகளைக் கற்க முடியும்? ஒரு குழந்தையைச் சுற்றி எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன என்பதுதான் அடிப்படைக் கேள்வியாக இருக்கிறது. ஒரு குழந்தையைச் சுற்றி அக்குழந்தை தெரிந்துகொள்வதற்காக இயற்கையாக அத்தனை மொழிகள் பேசப்படுகின்றனவா? அது இல்லை என்று சொன்னால், வகுப்பறையிலே இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி, நான்கு, ஐந்து என்று பல மொழிகளை போதனையின் மூலம் சொல்லித் தர முடியுமா என்றால், நடைமுறையில் அதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன. இவர்களே பல இடங்களில் இந்த ஆவணத்தில் கூறுவதுபோல, ஒரு குழந்தை இயற்கையாகத்தான் மொழிகளைக் கற்றுக்கொள்ளும். குழந்தையின் மூளை வளர்ச்சி என்பது ஒன்று முதல் எட்டு வயது வரை படுவேகமாக இருந்தாலும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறன் இயற்கையான முறையில்தான் நடக்கும் என அவர்களே கூறிவிட்டு, ஆனால் பள்ளிகளில் இரண்டாவது மொழி, மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவர்கள் சொல்வது அவர்களுடைய தர்கத்திற்கே புறம்பாகச் செல்வதைக் காட்டுகிறது. ஆகவே, ஒரு குழந்தை இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி எல்லாம் கற்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று பார்த்தால் தர்க்கரீதியில் அது இல்லை என்பதே பதில். ஏனென்றால் அது இயற்கையாக நடக்க வேண்டும். அப்படி என்றால் ஒரு குழந்தை வேறு மொழிகளே கற்றுக்கொள்ளக்கூடாது என்று நாம் சொல்கிறோமா? நிச்சயமாகக் கிடையாது. ஒரு குழந்தை, வாய்ப்பு இருந்தால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் கற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவது – இயற்கைச் சூழலுக்கு மாறாக நடந்துகொள்வது என்பதைத்தான் நாம் மறுக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, ஒரு குழந்தை எதார்த்தமாகத் தனது தாய் மொழியை தன் வழக்கத்திலிருக்கக்கூடிய மொழியைக் கற்றுக்கொள்வது, அதன்மூலமாகப் பிற அறிவைப் பெறுவது என்பதுதான் எதார்த்தமாக இருக்க முடியும். இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி என்பதெல்லாம் அந்தக் குழந்தைக்கு அந்த வயதில் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு வர வேண்டுமா என்றால், தேவையில்லை என்பதே நாம் கூற வருவது. ஒரு குழந்தைக்கு ஆறு வயதுக்குப் பின்னர், தாய்மொழி மட்டுமல்லாது பிறிதொரு மொழியையும் சொல்லித் தரக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்பதை நாம் கூறுகிறோம். இதே புத்தகத்திலே L 1, L 2, L 3 என்று கூறிவிட்டு, பிறிதொரு இடத்தில் R 1, R 2, R 3 என்று கூறுகிறார்கள். இவற்றுக்கிடையில் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது. எந்த மொழியை வீட்டில் வழங்குகிறார்களோ அந்த மொழியை ட1 என்று வைத்துக் கொண்டால், அந்த மொழியை ஒரு குழந்தை எழுத்து வடிவிலோ அல்லது வாசிப்பதிலோ கற்க முடிந்தால் அதை R1 என்கின்றனர். R என்றால் இங்கே Read and Write என்று குறிப்பிடுகிறார்கள். எனவே எந்த மொழியில் பேசுகிறதோ அதை எழுத்து வடிவில் எழுதினாலும் படித்தாலும் அதை R1, R2, R3 என்று சொல்கிறார்கள். ஆகவே L1, L2, L3 என்பதும் R1, R2, R3 என்பதும் ஒன்றுதான். ஆனால் ஒரு சில நேரங்களில் வீட்டில் பேசக்கூடிய மொழி ஒன்றாகவும் பள்ளிகளில் சென்று படிக்கக் கூடிய மொழி வேறாகவும் இருக்கலாம். வேற்று மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து பிறிதொரு மாநிலத்தில் வசிப்பவராக இருந்தால் அவர்களுடைய குழந்தைகளுக்கு அந்தச் சூழல் ஏற்படலாம். இப்போது மற்றொரு விசயத்தையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. என்னவென்றால், ஒரு குழந்தை வீட்டில் பேசக்கூடிய L1 மொழி, அது தாய்மொழியாக இருக்கும் பட்சத்தில், அந்தத் தாய் மொழியில் நல்ல பயிற்சியைப் பெற்றுவிட்ட பின்பு, L2 L3 என்ற அடுத்தடுத்த மொழிகளையும் அந்தக் குழந்தை கற்றுத் தேர்ச்சி பெற பள்ளி வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரு வாதத்திற்காக அது சரி என்று நாம் வைத்துக்கொண்டால்கூட, இங்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்று பார்த்தால், L2 அல்லது

எங்கே போகிறது கல்வி?  பகுதி 2

எங்கே போகிறது கல்வி? பகுதி 2

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி (நேற்றைய முதல் பகுதியின் தொடர்ச்சி) ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை அமுல்படுத்துகிற அபாயமான நடவடிக்கைகள் குறித்து, அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி நடத்திய இரண்டாவது விழிப்புணர்வுக் கூட்டம் குறித்த கட்டுரைத் தொகுப்பு இது. அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர் கூட்டத்தில், பேராசிரியர் சிவகுமார் ஆற்றிய உரையை முந்தைய பகுதியில் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக பேராசியர் ஹோசிமின் திலகர் அவர்கள் நிகழ்த்திய உரையின் தொகுப்பைப் பார்க்கலாம். அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு சிறப்புரை: பேரா. சீ. ஹோசிமின் திலகர் நமது அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் சார்பாக NEP 2020இன் முன்மொழிவாக இருக்கக்கூடிய, அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற ஆவணத்தைப் பற்றிய ஆய்வின் இரண்டாவது கூட்டத்தில் இணைந்திருக்கிறோம். இதில் மொழிக்கல்வி குறித்த அணுகுமுறையும் கல்வி அறிவும் (அத்தியாயம்-3), பாடத்திட்ட முறைமை (அத்தியாயம்- 4) ஆகியவை குறித்து எனது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புத் தந்தமைக்கு மிக்க நன்றி. முதல் இரண்டு அத்தியாயங்களின் சாராம்சம்: இந்தியாவின் பாரம்பரியத்தையும் இந்தியாவின் அரசியல் சாசன மதிப்புகளையும் அதனுடைய அடிப்படைக் கடமைகளையும் பெறக்கூடிய வகையில், ஒரு சிறந்த கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்கான நோக்கத்தை NEP 2020 கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்துவதற்காக ECCE – அதாவது, குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு எப்படிப்பட்ட கல்வியை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF) குறிப்பாகச் சொல்லவருவது இந்தியப் பாரம்பரியத்தில் கல்வி வேர் விட்டுள்ளது (It is rootedness in Indian traditions) என்பதாகும். அதாவது, முன்பருவ மழலையர் கல்வியானது இந்தியாவின் பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு குழந்தை, கல்வி பெறும் போக்கில் அடையும் வளர்ச்சியில் அந்தக் குழந்தைக்கு உள்ளேயும் வெளியேயும் எப்படிப்பட்ட ஆழமான இந்தியக் கருத்தாக்கத்தைத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஒருபுறம் இந்தியப் பாரம்பரியத்தைப் பேசும் இந்த NCFFS ஆவணம், மறுபுறம் குழந்தையின் உள்ளேயும் வெளியேயும் இந்தியாவின் கருத்தாக்கம், இந்தியாவின் பார்வை குழந்தைக்குள் செல்ல வேண்டும் என்று விரும்புகிறது. இங்கேதான் அடிப்படையான ஒரு கேள்வி எழுகிறது. கல்வியின் நோக்கம் என்பது முதலில் எழுத்தை அறிவித்தல், எண்களை அறிவித்தலில் தொடங்க வேண்டும் என்பதை அறிவோம். ஆனால், இந்தியாவின் பாரம்பரியத்தையும் இந்தியாவின் பார்வை, அதனுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், இந்தியா எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதையெல்லாம், ஒரு குழந்தை தனக்கு உள்ளேயும் வெளியேயும் பார்க்க வேண்டும் என்று சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அத்தியாயம் : 3 – மொழிக்கல்வி குறித்த அணுகுமுறையும் கல்வி அறிவும் தேசிய கல்விக் கொள்கை 2020 குழந்தைப் பருவக் கல்வியில் இரண்டு கட்டங்கள் அமைய வேண்டும் என்று கூறுகிறது. முதலில் 3 வயது முதல் 6 வயது வரை ஒரு கட்டமாகவும் பிறகு 6 வயது முதல் எட்டு வயது வரை மற்றொரு கட்டமாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. உலகில் எந்தவொரு நாட்டிலும் மூன்று வயதில் கல்வி என்பது கட்டாயமாக இருக்க வேண்டும் என்று எந்தவொரு கல்வி அமைப்பும் கூறியதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், முதன்முதலாக இந்தியாவில், தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரிலே மூன்று வயதுக் குழந்தை கல்வி அமைப்புக்குள் வர வேண்டும் என்று ஒரு கல்விக் கொள்கை கூறியிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர்கள் ECCE-இல் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னால், அங்கன்வாடிகள் அல்லது பால்வாடிகள் அல்லது முன் பருவ மழலையர் கல்வி (Pre-schools) என்று வரையறுக்கிறார்கள். அதாவது 3 வயது முதல் 6 வயது வரை நிச்சயமாக ஒரு குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஏற்கனவே அங்கன்வாடிகளும் பால்வாடிகளும் நம் நாடு முழுவதும் இருக்கின்றன. இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதைக் கல்வி அமைப்புக்குள் வரையறுப்பதுதான் இங்கே புதிதாக இருக்கிறது. அதுதான் இங்கே பல நெருடல்களை ஏற்படுத்துகிறது. ஆரம்பகாலக் கல்வி இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் இந்த அறிக்கை, ஒரு குழந்தை ஆறு வயது முடிந்த பிறகுதான் முதலாவது வகுப்பு செல்ல வேண்டும் என்று NCFFS வரையறுக்கிறது. ஆறிலிருந்து ஏழு வயது வரை முதலாம் வகுப்பும் ஏழு வயது முதல் எட்டு வயது வரை இரண்டாம் வகுப்பு என்று அது வரையறுத்துள்ளது. இப்போது இன்னொரு கேள்வி எழுகிறது. ஒரு குழந்தை மூன்று வயது முதல் ஆறு வயது வரை படிக்காமல் விட்டுவிட்டால், அதாவது அங்கன்வாடிக்குச் செல்லாமல் இருந்துவிட்டால் என்ன நேரும் என்பதற்கு இந்த அறிக்கையில் எந்த பதிலும் கிடையாது. நாம் யூகித்துதான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிகிறது. ஒருவேளை அதுபோன்று ஒரு குழந்தை 3 வயது முதல் 6 வயது வரை அங்கன்வாடிப் பள்ளிகளுக்குச் செல்லாமல் விட்டுவிட்டால் நேரடியாக, ஆறு வயதுக்குப் பின்பாக முதலாம் வகுப்பில்தான் சேர முடியும் என்று தோன்றுகிறது. இதுவும் மிகவும் ஒரு புதிரான விஷயம்தான். ஏனெனில், ஒரு பெற்றோரோ ஒரு குழந்தையோ பள்ளிக்கு முன்பருவக் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். குழந்தை தீர்மானிக்க முடியாவிட்டாலும்கூட, அதன் பெற்றோருக்குத்தான் தீர்மானிக்கும் பொறுப்பை வழங்க வேண்டும். அப்படியிருக்கும்போது, நிச்சயமாக மூன்று வயதிலே சேர்த்தே ஆக வேண்டும் என்பதெல்லாம் மிகவும் வேடிக்கையாகவும் புதிராகவும் இருக்கிறது. மேலும் அதைக் கட்டாயப்படுத்துவதென்பது, மிகவும் ஒரு ஆரோக்கியமற்ற போக்காக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இப்போது ECCE குறித்து நாம் மேலும் ஆழமாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் பள்ளிகளின் நிலையும் கல்வியின் நிலையும் மாணவர்கள் நிலையும் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். அரசுப் பள்ளிகள் மூடலும் வேகமெடுக்கும் தனியார்மயமும் தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை 58,897ஆக இருக்கிறது. இதில் 35,621 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும் 9392 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் 5788 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 8,096 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை 24,310 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் 7,024, அதே போல உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 3,135 ஆக இருக்கின்றன. 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 பள்ளிகள் இருக்கின்றன. தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என்று மொத்தம் 12,382 பள்ளிகள் இருக்கின்றன. அதேபோன்று அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று பார்த்தால், தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி மேல்நிலைப் பள்ளிகள் வரை 8,328 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆசிரியர்கள் விபரங்களைப் பார்தோமானால், 5.6 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 2.27 லட்சம் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளிலும் 77 ஆயிரம் ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 2.53 லட்சம் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். மற்ற பிரிவுகளில் 4,552 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மொத்தம் 37,579 பள்ளிகளில், அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்கள்தான் பணிபுரிகின்றனர். ஆனால் 12, 382 தனியார் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதை எதைக் காட்டுகிறது என்று சொன்னால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்கிறது. ஆனால் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாக இருக்கிறது. அடுத்ததாக, கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு மேலாக, தேசிய கல்விக் கொள்கை 1986 நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பின்னால் – அதற்கு முன்பாகவும் தனியார் பள்ளிகள் வளர்ந்து வந்தாலும் – தமிழ்நாட்டில் பள்ளிகள் தனியார்மயம் என்பது படுவேகமாக நடந்திருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாணவ மாணவிகளைப் பொறுத்தவரை ஒரு கணக்கெடுப்பு செய்தால், அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவர்கள் பயில்கின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 22,25,308 மாணவர்களும் தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவர்களும் மற்ற பள்ளிகளில் 83,755 மாணவர்களும் படிக்கின்றனர். 35,579 பள்ளிகள் கொண்ட அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவர்கள்தான் பயில்கின்றனர். ஆனால், வெறும் 12,382 எண்ணிக்கையே உள்ள தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவர்கள் பயில்கின்றனர். (புள்ளி விவரங்கள் உதவி: 2022 மே மாதம் 28 அன்று தினமணியில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை, முன்னாள் கல்வி அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன் எழுதியது). இது மீண்டும் எதைக் காட்டுகிறது என்றால், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவது மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் கடுமையாகக் குறைந்துள்ளது. பள்ளிகளில் தனியார்மயம் என்பது மிக வேகமாக நடைபெறுகிறது. கல்வியை மறுக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009 இப்போது சில அடிப்படையான கேள்விகள் நம் முன் எழுகின்றன. அவை என்னவென்றால், நாம் தேசிய கல்விக் கொள்கை 1986ஐ எடுத்துப் பார்த்தாலும் சரி, தேசிய கல்விக் கொள்கை 2020ஐ எடுத்துப் பார்த்தாலும் சரி, சமுதாயத்தில் வாழும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கல்வி உரிமைச் சட்டம் 2009, 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கூறியதை நாம் அறிவோம். அது உண்மையென்று சொன்னால், அரசுப் பள்ளிகளின் நிலை ஏன் இப்படிச் செல்கிறது? அரசுப் பள்ளிகளிலிருந்து விலகி, தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் ஏன் செல்கின்றனர் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடவேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக அனைவருக்குமான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE-2009) என்ன சொல்கிறது என்றால், அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் போய்ச் சேர்ந்து கொள்ளலாம். தனியார் பள்ளிகளின் மொத்த மாணவர்களில் 25% மாணவர்கள் இதுபோல் சேர்ந்து படிக்க அரசே முன்வந்து வாய்ப்பளிக்கும். அவர்கள் கட்டவேண்டிய கல்விக் கட்டணத்தையும் அரசே கட்டும் எனச் சொல்கிறது. இந்தக் கல்வி உரிமைச் சட்டம் குறித்தும் 25% தனியார் பள்ளிச் சேர்க்கைக்கு அரசாங்கமே நிதி வழங்குவது குறித்தும் SRM கல்வி நிறுவன மாணவர்

எங்கே போகிறது கல்வி?

எங்கே போகிறது கல்வி?

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி நாடாளுமன்ற விவாதம் ஏதுமின்றி, கடந்த 2020ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிற நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் அடிப்படைப் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு அகில இந்தியா கல்விப் பாதுகாப்புக் கமிட்டி (AISEC) தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் முதலாவது அமர்வில் பேராசியரியர் யோகராஜன் ஆற்றிய உரையின் தொகுப்பை முன்பு சுவடு இதழில் வெளியிட்டிருந்தோம். அடுத்ததாக, அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து அலசுவதற்காக அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் கூட்டத்தில் பேராசியர் ஹோசிமின் திலகர் சிறப்புரை ஆற்றிய நிகழ்வின் முழுத் தொகுப்பை தொடராக சுவடு வெளியிடுகிறது. அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) மெய்நிகர்க் கூட்டத்தைத் தொகுத்தளித்த தோழர் ரெங்கையா முருகன் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி குறித்த ஓர் அறிமுகத்துடன் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். 1986ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கைக் குறித்து, அதன் நன்மை தீமைகளை ஆய்வு செய்யும் பொருட்டு ஒரு அமைப்பு உருவானது. உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் இந்த அமைப்பின் தலைவராகவும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுஷில் குமார் முகர்ஜி உள்ளிட்ட சிலரும் இணைந்து அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியை உருவாக்கினர். இதன் தமிழ்நாடு பிரிவும் அப்போதிருந்தே செயல்பட்டு வந்தது. 1986இல், அக்கல்விக் கொள்கை குறித்து MIDS (Madras Institute of Development Studies) நிறுவனரும் உலகப் புகழ்பெற்ற கல்வியாளருமான மால்கம் ஆதிசேஷய்யா, யோஜனாவில் மிகச் சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதினார். “அய்யோ… அதனை ஒரு முனைப்படுத்தாதீர்” என்ற கட்டுரைதான் அது. அதாவது, ‘நீங்கள் டெல்லியில் உட்கார்ந்துகொண்டு தமிழ்நாட்டில் இருக்கும் வேலூருக்குத் தேவையான கல்வித் திட்டத்தை வகுக்காதீர்கள்’ என்றார். அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்குத் தேவையானவற்றை உள்ளடக்கிய கல்வியைப் பரவலாக்க வேண்டும் என்றார். ‘கல்வி என்பது வேறு, கல்வி முறை என்பது வேறு. கல்வி என்பது கற்கின்ற செயலை அடிப்படையாகக் கொண்டிருப்பது எனவும் கல்வி முறை என்பது ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நூலகங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கிய தொகுப்பு என்றும் அவர் கூறினார். ஆனால் தற்போது நடைமுறையிலிருக்கும் கல்விக் கொள்கையை யார் வகுக்கின்றனர் என்றால், ஆளும் அரசுதான் வகுக்கிறது. இன்றுள்ள பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறும் இந்த அபிவிருத்திக்குத் தகுந்தவாறும் உருவாக்கப்பட்டுள்ளதே தேசிய கல்விக் கொள்கை 2020. இதன் அபாயங்கள் குறித்தும் கல்வி வணிகப் பண்டமாக மாறப்போவதையும் இந்தியா பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும்போது எவ்வாறு ஓரிடத்தில் அமர்ந்து கல்விக் கொள்கையை உருவாக்க முடியும் என்றும் அப்போதே ஆதிசேஷயா தனது கட்டுரையில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக உரை: பேராசிரியர் சிவக்குமார் 1986இல் அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (AlSEC) அமைப்பு எனக்கு அறிமுகமாயிற்று. மாநிலக் கல்லூரியில் இயற்பியல் துறைப் பேராசிரியராக நான் இருந்தேன். 1986இல் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, கல்விக் கொள்கை குறித்து ஒரு அருமையான தொகுப்பை வெளியிட்டது. அந்த வரலாற்றை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 1986இலிருந்து இந்தக் கல்விக் கொள்கைகள் எவ்வாறு கல்வியை வணிகமயத்துக்கு, கார்ப்பரேட் மயத்துக்குக் கொண்டுசெல்கிற அளவுக்கு வளர்ந்திருக்கின்றன என்று நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். எந்த ஒரு கல்விக் கொள்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. ராஜீவ் காந்தி கல்விக் கொள்கை, பிர்லா – அம்பானி கல்விக் கொள்கை, தற்போது அமலாகிக்கொண்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020 உள்ளிட்ட அனைத்துமே தமிழ்நாட்டின் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் திறன் மேம்பாடு (Skill Development) என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்துகிற கார்ப்பரேட் கல்விக் கொள்கையாகத்தான் உருவாகியுள்ளன. முந்தைய மெய்நிகர்க் கூட்டத்தில் பழம்பெருமை, பாரம்பரியம் இரண்டையும் எவ்வாறு பாஜக அரசு கையிலெடுத்து மிக நாசூக்காக வேலை செய்துகொண்டுள்ளது என்று பேராசிரியர் யோகராஜன் மிக அருமையாக எடுத்துரைத்தார். NCF குறித்த விவரங்களை AISEC அமைப்பு தமிழில் வெளிக்கொண்டு வருகிறது. பள்ளிக் கல்வி, உயர்கல்வி என எல்லாவற்றிலும் மிக அழகாகத் திட்டமிட்டு, பாஜகவினர் செயல்படுத்திக்கொண்டுள்ளனர் என்பதை அதன்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. ஹிட்லர் உயிரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். எதற்காக என்றால், கண், இமை, முடி இவற்றையெல்லாம் வைத்து ஒரு பாசிச வெறியை, வெறுப்புணர்வை யூதர்கள் மேல் வைத்து, அவர்களைக் கொலை செய்யும் அளவிற்குத் தூண்டும் வகையில் உயிரியல் பாடம் கற்பிக்கப்பட்டது. நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று ஜெர்மானியர்களுக்குப் போதிக்கப்பட்டது. முந்தைய கூட்டத்தில் யோகராஜன் அவர்கள் ஆற்றிய உரையை நாம் மிகச் சாதராணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. NCFஇன் அடிப்படை என்பது மிகவும் ஆபத்தானது. அத்தியாயம் 3இல் மொழிக்கொள்கை பற்றியும் அத்தியாயம் 4இல் கல்வியியல் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ஹோசிமின் திலகர், இன்று நம்மிடையே அவற்றின் பின்னணியையும் பேசவுள்ளார். நான் இதை வாசிக்கும்போது மூன்றாம் அத்தியாயத்தில் ஒரு ஆபத்தான சொல்லாடலைக் கையாள்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்டேன். காந்தியடிகள், தாகூர் போன்றவர்களெல்லாம் தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்தியது பற்றி நமக்குத் தெரியும். 1966 கோத்தாரி கல்விக் கொள்கை குறித்து யோகராஜன் தனது உரையில் குறிப்பிட்டார். அக்கோத்தாரிக் குழு அறிக்கையில் தாய்மொழி வழிக் கல்வி குறித்து வலியுறுத்தப்பட்டது. தாய்மொழி வழிக்கல்வி என்று சொன்னார்களே தவிர, வீட்டு மொழி (Home Language) என்று அங்கே சொல்லப்படவில்லை. தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கோத்தாரி கூறினார். கல்லூரி வரையிலும் – பட்ட வகுப்புகள் வரை அது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 1970களில் பட்ட வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று அது முடங்கிப் போயிருக்கிறது. நான் தமிழ் வழியிலேயே இயற்பியல் பாடம் கற்பித்தேன். தமிழ் வழியிலேயே முதுநிலை வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்கள் எல்லாம் எழுபதுகளில் இருந்தன. இன்று எல்லாமே வணிகமயமாகவும் தாய்மொழிக் கல்வியைப் புறந்தள்ளும் நிலைக்கும் மாறியுள்ளன. NCFஐ உற்றுநோக்கினால், இதன் அடிப்படையாக மூன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் உள்ள குழந்தைகளுக்கு என்ன சொல்லிக்கொடுக்க வேண்டும், எவ்வாறு உருவாக்க வேண்டும், பிறந்த உடனேயே அந்தக் குழந்தைகள் எதைச் சொல்ல வேண்டும், எதை உச்சரிக்க வேண்டும்? எந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்? என்று அழுத்தம் கொடுக்கப்பட இருக்கிறது. இவை குறித்தெல்லாம் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. மூன்று வயதிலிருந்தே பள்ளிக்கூடம், வகுப்புகள், பாடமுறை என்று பேசுவதைக் குழந்தைகள் மீதான வன்முறையாகப் பார்க்கிறேன். முக்கியமாக, மொழியைப் பொறுத்தவரை L1, L2, L3 என்று பிரிக்கிறார்கள். Home Language, Mother tongue பின்பு Familiar language என்று குறிப்பிடுவது விந்தையாக உள்ளது. Home Language என்பதை ஹிந்தி என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறிவிடலாம். தாய்மொழிக்கு இரண்டாமிடம் கொடுக்கிறார்கள். இந்த மூன்று மொழிகளையும் கற்றுக் கொடுக்கக்கூடிய அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டுமென்று மூன்றாவது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. இதற்காகப் பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகிறார்கள். அடுத்து, கல்வியியல் திட்டங்கள், அவற்றின் அமலாக்கங்கள், கலைத் திட்டங்கள் குறித்தும் பேசப்படுகிறது. நாம் மிக ஆபத்தான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 1986 கல்விக் கொள்கை தொடங்கி, தனியார்மயத்துக்கு எதிராகப் போராடிய அமைப்பு கல்விப் பாதுகாப்புக் கமிட்டி. Delinking degree from job என்பதைப்பற்றி அன்று நாம் விரிவாகப் பேசியிருக்கின்றோம். ஹோசிமின் திலகர், யோகராஜன், சுதாகர் மற்றும் மூத்த தோழர்களுக்கெல்லாம் நன்கு தெரியும். அந்த Delinking degree from job இப்போது நடந்துவிட்டது. திறன் மேம்பாட்டுப் பாடம் (Skill Development Course) இல்லாத, பரவாத, வேரூன்றாத இடமே இல்லை. மக்கள் கல்விக் கூட்டியக்க மாநாடு குறித்துப் பேச நாங்கள் இரண்டு கல்லூரிகளுக்குச் சென்றோம். இரண்டுமே அரசுக் கல்லூரிகள். அதில் ஒரு கல்லூரிப் பேராசிரியர் எங்களிடம் குறைபட்டுக்கொண்டார். அது கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறது. பொதுப் பாடத்திட்டத்தை மக்கள் கல்விக் கூட்டியக்கம் எதிர்த்தது. அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியும் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தது. பொதுப் பாடத்திட்டத்தைக் கலை அறிவியல் கல்லூரிகளில் அமல்படுத்தியுள்ளார்கள். அவர் கூறியது என்னவென்றால், ‘தனியார் தன்னாட்சிக் கல்லூரிகளெல்லாம் அவர்கள் விருப்பம்போல் பாடத்திட்டத்தை அமைத்துக்கொள்ளலாம்’ என்று அமைச்சர் சொன்னபடி அமைத்துக் கொண்டுவிட்டார்கள். ஆனால் அரசுக் கல்லூரிகளில் இது வலிந்து புகுத்தப்படுகிறது. குறிப்பாக, முதல்நிலைப் பாடத்தில் 4 கோர் (Core) பாடங்கள், உதாரணமாக அறிவியல் பாடத்தை எடுத்துக்கொண்டால் 4 பாடங்கள் வெளியேற்றப்பட்டு திறன் மேம்பாட்டுப் பாடங்கள் உள்ளே நுழைக்கப்பட்டுள்ளன. ஒன்று தெளிவாக இருக்கிறது. ஆளுகின்ற அரசு வேலையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் கல்வியையும் பாடங்களையும் பிரித்தல் (Delink degree from job, Delink Subject from Society) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சமூகத்தைவிட்டு இந்தப் பாடங்கள் விலகி இருக்க வேண்டும். சமூக உணர்வையோ சிந்தையையோ உருவாக்குகின்ற வகையில் பாடங்கள் இருக்கக்கூடாது என்று கருதுகிறது. இயற்பியலைக் கற்பிக்கும்போது நீ செய்ய வேண்டியதெல்லாம், அவர்களுக்கு அணுகுண்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமே தவிர, அணு சோதனைகள் பற்றியோ அது குறித்து ஐன்ஸ்ட்டீன் பின்னாளில் வருந்தி வெளியிட்ட அறிக்கை குறித்தோ சொல்லக் கூடாது. இவற்றைப் பேசுவதற்கு வகுப்பறைகளில் இடம் இருக்கக்கூடாது. திறன், திறன் (Skill, skill) என்றுதான் பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை வந்தபோது நாம் கூட்டம் போட்டிருக்கின்றோம். அதற்கு முன்னால் கஸ்தூரி ரங்கன் அறிக்கை வந்தபோதும் கூட்டம் நடத்தியுள்ளோம். 2016இல் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அறிக்கை வந்தபோதும் கூட்டம் போட்டுள்ளோம். அந்தத் திட்டங்களை ஒவ்வொன்றாக அமுலாக்குவதற்கான மறைமுகமான சட்டங்கள்தான் இந்தக் கட்டமைப்பு (Frame Work) என்றுகூட நான் சொல்வேன். இந்த ஒன்றிய அரசின் பல திட்டங்களை எதிர்ப்பதாக மாநில அரசாங்கம் இப்போது தமிழ்நாட்டை ஆண்டுகொண்டுள்ள திராவிட அரசாங்கம் சொல்கிறது. அவர்கள் சனாதனத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு நமது முந்தைய கூட்டத்தில் யோகராஜன் அவர்கள் பேசிய அந்தப் பாரம்பரியத்தைப் பற்றித் தெரியுமா என்றால், நாம்தான் சொல்லவேண்டியிருக்கிறது. மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறுகிறார்கள். அதுபற்றித்தான் மூன்றாவது

பழம்பெருமை பேசுவதுதான் கல்வியா?

பழம்பெருமை பேசுவதுதான் கல்வியா?

தொடக்கக் கல்வியில் நுழைந்துள்ள NCFFS ஆபத்து குறித்து AISEC அமைப்பு முன்னெடுத்துள்ள தொடர் உரையாடலின் முதல் அமர்வின் நிறைவுப் பகுதி;   NCFFSஇன் பல்வேறு இடங்களில் பண்டைய (ancient) என்ற சொற்பயன்பாடு குறித்தும் அதன்வழியே தொடக்கக் கல்வியைப் பின்னுக்கு இழுக்கும் முயற்சி குறித்தும் முந்தைய பகுதியில் பார்த்தோம். நடைமுறையில் இருக்கும் சில புதிய தேசிய கல்விக் கொள்கையின் திட்டங்கள் மற்றும் கல்வியின் நோக்கம் குறித்து இதில் கூறப்பட்டுள்ளவை குறித்த உரையாடலைத் தொடர்கிறார் பேராசிரியர் யோகராஜன். (NIPUN) National Initiative for proficiency in Reading with Understanding and Numeracy) நிபுன் பாரத் திட்டம் என்ற இந்தத் திட்டம்தான் NEP 2020இன் திட்டம். அதைத்தான் நமது தமிழக அரசு எண்ணும் எழுத்தும் திட்டம் என்று கூறி நடைமுறைப்படுத்தி வருகிறது. வித்யா பிரவேஷ் (Vidya Pravesh) – கல்விக்குள் நுழையும் குழந்தைகளுக்கு 4 மாத காலத்திற்கு ஓரியண்டேஷன் தரும் திட்டம். இதற்கான கலைத் திட்டங்களை NCERT உருவாக்கியிருப்பதாகக் கூறியுள்ளனர். பாலவாடிகா (Balvatika) – இத்திட்டம் 5 வயதுள்ள குழந்தைகளுக்கு ECCE தகுதியுள்ள ஆசிரியர்களை வைத்துக் கற்பிப்பதாகக் கூறுகின்றனர். இதை நம் தமிழகம் 2020இல் எல்லாப் பள்ளிகளிலும் அவசர அவசரமாகக் கொண்டுவரும்படி கட்டாயமாக்கி, முழு வீச்சில் நடத்தியது. அதன்பிறகு அது கவனிக்கப்படவில்லை என்பதும் உண்மை. மேலே சொன்ன பல்வகைத் திட்டங்களை, இந்தக் கல்வித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மிகச் சிறந்த வழி விளையாட்டுகள் என்கின்றனர். விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும்  விளையாட்டுகளின் வகைகள் குறித்து மிக மிக நுட்பமாக விளக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஆசிரியர்களை வலியுறுத்தும் விதமாகவும்  விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கொள்கை என்னவோ நாம் முன்னர் பார்த்ததுதான்.  இதுவரை சொல்லப்பட்ட யாவும் வெறும் முன்னுரை மற்றும் நோக்கங்கள்தான். இனி இதன் இரண்டாவது பகுதியான பாடத்திட்ட இலக்குகள் மற்றும் கற்றல் விளைவுகள் குறித்து NCFFS கூறுவதைப் பார்ப்போம்.   ஏற்கனவே நாம் பார்த்த நோக்கங்களையும் ஒவ்வொரு (domain) துறையிலும் உடற்கல்வி, மொழிக் கல்வி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கக்கூடிய உடற்தகுதி என, அந்தத் துறையில் இந்த நோக்கத்தை பிரயோகித்து Manifesto உருவாக்கி, அதற்கேற்றவாறு அதிலிருந்து, கற்றல் இலக்குகள் Curricular Goalஐ உருவாக்கி, அந்தக் கற்றல் இலக்குகள்  நிறைவேறினால் அந்த மனிதரிடம் என்ன திறன் அல்லது வல்லமை வரும் என்று (Competency) பார்த்து வரிசைப்படுத்தி, அந்தத் திறன் இருப்பதை உறுதிப்படுத்த, Check list உருவாக்குகின்றனர். வல்லமை ஒரே நாளில் தோன்ற முடியாது. சிறிது சிறிதாக வளரும்.. அந்தச் சிறு பகுதிகளை learning outcome (கற்றல் அடைவுகள்) என்று வரிசைப்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு, பேசுதல் திறன். இத்திறன் ஒருவரிடம் இருப்பதற்கு என்னென்ன காரணிகள் இருக்க வேண்டும் என்று ஒரு கடினமான கட்டமைப்புக்குள் (rigid frame work) கொண்டுவந்துவிடுகின்றனர். இந்த இடத்தில்தான் உண்மையான பயம் உருவாகிறது. Aims – Curricular goals – Competency – Learning Outcome இதுதான் முறை. இந்தக் கற்றல் அடைவுகள் என்ன வேண்டுமோ அதற்கேற்றபடிதான் கலைத்திட்டம் இருக்க வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, இந்த முறைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கான கல்வியை அமைத்துக்கொள்ளலாம் என்கிறது. ஆனால், உண்மையில் என்ன நடக்கிறதென்றால், இந்த முறைப்படி  ‘கலைத் திட்ட (Curriculum & Syllabus) உருவாக்கும் பணியை NCERT வசம் கொடுத்துவிட்டது. NEP சொல்வதோ, பள்ளிக் கல்வியில் என்ன மதிப்பெண் பெற்றாலும் அதற்கு முக்கியத்துவம் இல்லை. மேலும் அது அந்தளவிற்குத் தேர்வு முறையே இலகுவாக இருக்க வேண்டும் என்கிறது. ஆனால், சாதாரண மக்கள், தேர்வு என்றால் பரீட்சை, குழந்தைகளுக்கு அறிவு இருக்கின்றதா எனச் சோதிக்கிறார்கள் என அவர்கள் நினைப்பார்கள். ஆனால் கற்றல் – கற்பித்தல் பணியில்  ஈடுபடுவோர்க்கும் கல்வியாளர்களுக்கும், தேர்வு என்பது கற்றல் கற்பித்தல் நிகழ்முறைப் போக்கை நாமே பரிசோதனை செய்துகொள்வது என்பது தெரியும். ஒரு தேர்வின்  மதிப்பீட்டு முறை எதற்காக என்றால், அது இல்லையேல் கற்றலும் கற்பித்தலும்  நடந்ததா என்று நமக்குத் தெரியாது. ஆனால் இப்போது தேர்வையே  மிக எளிமையாக்க வேண்டும் என்கின்றனர். அந்தத் தேர்வில் மாணவன் பெறும் மதிப்பெண்ணுக்கு  முக்கியத்துவம்  இல்லை. ஏனென்றால், இந்தியாவில் பன்னிரண்டாம், பத்தாம் வகுப்பு முடித்த அத்தனை பேரும்  உயர் கல்விக்குச்  செல்ல வேண்டும் என்றால், அந்த மதிப்பெண் இனிமேல் தகுதியாக இருக்க முடியாது. அதற்குப் பதிலாக (NTA ) என்ற அகில இந்திய அளவில் ஒரு அமைப்பு உருவாக்கி இருக்கின்றனர். National Testing Agency. இது வைக்கும் தேர்வு, மிகவும் கடினமாக இருக்கும். அந்த National Testing Agency என்ன தேர்வு வைக்கிறதோ, அதில் யார் தேர்ச்சி பெறுகிறாரோ, அவர்கள்தான் இனிமேல் கல்லூரிகளுக்கே செல்ல முடியும். இதுதான் NEP 2020 சொல்லக்கூடிய விசயம். இந்தக் கற்றல் அடைவுகள் (learning outcome) என்னவென்பதை NCERT  புத்தகங்கள் தீர்மானிக்க ஆரம்பித்தால், இந்த NTA வைக்கக்கூடிய தேர்வுகளில் NCERTஇன் புத்தகங்களே அடிப்படையாக இருக்கும். அதாவது இந்த learning Outcome உருவாக்கும் முறையை எல்லா மாநிலங்களும் பின்பற்றித்தான் ஆக வேண்டும்  என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எந்த மாநில அரசாவது NCERT பாடத்திட்டத்திற்கு மாறாக, வேறு சிலபஸை வைத்திருக்க முடியுமா? என்ன பெயரில் வேறு சிலபஸ் வைத்திருந்தாலும் அதனுடைய கற்றல் விளைவுகளும் NCERTஇன் கற்றல் விளைவுகளும்  ஒரே மாதிரிதான் இருக்கும்; இருக்க வேண்டும். இவர்கள் சொல்லக்கூடிய  aim – அதிலிருந்து உருவாக்கப்படும் Curricular goal – அந்த Curricular goal இலிருந்து உருவாக்கப்பட்ட Competency – அதிலிருந்து உருவாக்கப்பட்ட learning outcome – இந்த learning Outcome குழந்தைகளுக்குக் கிடைப்பதற்குத் தேவையான Curriculum and சிலபஸ் – இப்படியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஒரு சிக்கலான அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர். இறுதியில் இவர்கள் சொல்வது, எதிக்ஸ் வேல்யூஸ் – நெறிமுறைகளுக்கு மதிப்பாளிக்க வேண்டும் என்கின்றனர். அதில் பலவற்றைக் கூறினாலும் முக்கிய இடம் தந்திருப்பது இந்தியப் பண்டைய பெருமையே. எந்தவிதப் பெருமைவாதத்துக்கும் இடம் தராமல், உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா மனிதர்களையும் இனம், சாதி, மதம், மொழி, பால் பேதமின்றி அனைவரையும் சமமாகப் பார்ப்பதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் பெருமைவாதத்தையே தொடர்ந்து பேசுகின்றனர்; வழியுறுத்துகின்றனர். அடுத்த அமர்வில், NCFFSஇல் கூறப்பட்டுள்ள அடுத்த சில பிரிவுகள் குறித்து உரையாடுவோம். உரையாடல் தொடரும்.

தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து – AISEC உரையாடல் – பகுதி 2

தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து – AISEC உரையாடல் – பகுதி 2

அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி நடத்திய மெய்நிகர் உரையாடலில், NCFFSஇன் முதல் இரண்டு அத்தியாயங்கள் குறித்துப் பேராசிரியர் யோகராஜன் விளக்கிப் பேசிய ஆய்வுரையின் தொடர்ச்சி: எந்தவொரு கொள்கையும் காரணமில்லாமல் எழுதப்படுவதில்லை. ஒரு கொள்கை எழுதுவதற்குக் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் காரணத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? அதற்கு அறிவியல் நமக்கு ஒரு வழியைக் கற்றுக் கொடுக்கிறது. அந்த நிகழ்வை நீங்கள் அதன் இயக்கத்தில் பார்க்க வேண்டும். எந்த நடைமுறையில் (Process), கல்வி எப்படி இயங்கிக் கொண்டுள்ளது, எந்த இயக்கத்திலிருந்து இந்தக் கொள்கை வந்துள்ளது, அப்படியெனில் அதன் நோக்கம் என்ன, என்பனவற்றையெல்லாம் பார்க்க வேண்டும் என்று அறிவியல் சொல்லித் தருகிறது. அடுத்ததாக அதனுடைய பின்னணியைப் பார்க்க வேண்டும் என்கிறது. சமூக, பொருளாதாரப் பின்னணியில் அந்தக் கொள்கையை நாம் அணுக வேண்டும் என்றும்  அறிவியல் சொல்கிறது. இந்த இயக்கத்திலும், இந்தப்  பின்னணியிலும் ஒரு கொள்கையைப் பார்க்கும்போதுதான் அந்தக் கொள்கையை நாம் மதிப்பீடு செய்ய முடியும்.  அதனோடு (relevance) தொடர்புடையவைகளைப் புரிந்துகொள்ள முடியும். கொள்கையினுடைய சாதக, பாதக, ஆபத்தான அம்சங்களையோ அல்லது நல்ல அம்சங்களையோகூட புரிந்துகொள்ள வேண்டுமெனில் அதன் இயக்கத்தில் இதைப் பார்க்க முயற்சிக்க வேண்டும். கல்வியை அதன் பிராசஸில் (Process) பார்க்க வேண்டும் என்பதன் பொருள், இன்றுள்ள கல்விச்சூழல் கடந்த காலங்களில் எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும். கல்விக் கொள்கை 1986இல் எப்படி இருந்தது, அதற்கு முன்பு எப்படி இருந்தது, 1986இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 1992இல் அதையே செறிவூட்டி (Enrich) மறுபடியும் வெளியிட்டனர். அதற்குப் பெயரும் அந்த நேரத்தில் NEP தான். NEP 1986, NEP 1992, அதன் பிறகு, பிர்லா அம்பானியின் கமிட்டி, அதற்குப் பிறகு மிக முக்கியமான இது போன்ற கமிட்டி என்று சொன்னால் சாம் பிட்ரோவின் நேஷனல் நாலெட்ஜ் கமிஷன். இந்தப் போக்கில் இன்று எங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்றால் 2019இல் வெளியிட்ட வரைவுக் கொள்கை, அதன் பிறகு கொரோனா காலத்தில் பாராளுமன்றத்தில் எந்த விவாதத்திற்கும் உட்படுத்தாமல் கொண்டுவரப்பட்ட  NEP 2020.   இந்த NCF 2023இல் 10 அத்தியாயங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதலிரண்டு அத்தியாயங்களையே இப்போது நாம் பார்க்கப் போகிறோம். நாட்டு மக்களின் பொருளாதார நிலையை முழுமையாகப் புரிந்துகொள்ள, World inequality database எனும் தகவல் தளம் மூலம் Stats of India எனும் அமைப்பு உருவாக்கிய வரைபடம் இங்கே  கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் X அச்சு நாட்டின் 140 கோடி மக்களையும் Y அச்சு அவர்களது  வருமானத்தையும் காட்டுகிறது. இந்தப் படம் சொல்லும் செய்தி என்னவெனில், இந்த நாட்டில் ஏறத்தாழ 90% மக்க‍ளின் (சுமார் 125 கோடிப் பேர்) அதிகபட்ச மாத வருமானம் ரூ.20000 மட்டுமே.  பொருளாதார அடித்தட்டு நிலையில் உள்ள 10%, அதாவது சுமார் 14 கோடி இந்திய மக்களுக்கு வருமானம் என்ற ஒன்று ஏறத்தாழ இல்லவே இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அடுத்து உள்ள சுமார் 14 கோடி (11-20%) மக்களால் ஒரு மாதத்திற்கு 4600 ரூபாய்க்கும் குறைவான வரையே வருமானமே ஈட்ட முடிகிற சூழலைப் பார்க்கிறோம். அடுத்த 20%, அதாவது சுமார் 28 கோடி மக்களின் வருவாய், 4600 ரூபாய்க்கும் 6700 ரூபாய்க்கும் இடையில் உள்ளது. இதன் சராசரி 5650 ரூபாய். அதற்கடுத்த 20%, 28 கோடி மக்களின் வருவாய் 6700க்கும் 9500 க்கும் இடையில் உள்ளது. அதாவது சராசரி மாதவருவாய் சுமார் 8100 ரூபாய். அதற்கடுத்த 20% -28 கோடி மக்களின் வருவாய் 9500 க்கும் 14900க்கும் இடையே உள்ளது. அதன் சராசரி 12200 ரூபாய். 81 முதல் 90 வரையுள்ள மக்களின் வருவாய் 25000 க்கும் குறைவாக (சராசரி 19950) உள்ளது. 20000க்கும் அதிகமான மாத வருவாய் உள்ள மக்கள் வெறும் 10% பேர் மட்டுமே. மாதம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வருவாய் உள்ள மக்கள் நாட்டில் வெறும் 3% பேர் மட்டுமே. இந்த அறிக்கையைக் கொடுத்து அந்தக் கமிட்டி சொல்வது யாதெனில், உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் இப்படியொரு ஏற்றத்தாழ்வை நாங்கள் கண்டதில்லை என்பதே. ஏற்றத் தாழ்வுகளின் உட்சபட்சமாக நமது இந்தியா உள்ளது. வேறு சில தரவுகளையும் இப்போது பார்ப்போம். இந்தியாவில் இருக்கக்கூடிய முதல் பத்து செல்வந்தர்களின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 57 லட்சம் கோடி ரூபாய். வெறும் 1% பணக்காரர்கள் இந்தியாவின் 73% பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். 99% மக்களால் மீதமுள்ள 27% பொருளாதாரப் பங்களிப்பு பகிரப்படுகிறது. இந்தியாவில் வாழும் மிகப் பெரிய பணக்காரர்களான அம்பானி, அதானி போன்றவர்களின் வருமானத்தைப் பார்த்தால், நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவில் இருக்கிறது. அம்பானியின் வருமானம் ஒரு மணி நேரத்திற்கு ஏறத்தாழ 90 கோடி. அதானியின் வருமானம் ஒரு மணி நேரத்துக்கு 75 கோடி. ஆனால் 40 கோடி மக்களால் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்கூட சம்பாதிக்க முடியவில்லை. இவை அனைத்தும் 2022 கணக்கீடுகளின்படியான தகவல்களே. 2022ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கடைசி இரண்டு வருடங்களில் சுமார் 12 கோடி மக்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் சுமார் 7000 இந்தியர்கள் பசியால் இறந்து போகின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 10000 பேர் மருத்துவ வசதியில்லாமல் இறந்து போகின்றனர். 2019ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 9.6 கோடி  எண்ணிக்கையில் இருந்த நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கை தற்போது 6.3 கோடியாகக் குறைந்துவிட்டது. நடுத்தர வர்க்கத்தினர் வேகமாகத் தேய்ந்துகொண்டே போகின்றனர். மேலும், இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாகப் புகார் (report) செய்யப்படுகிறது. இதில் கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு தகவல், இந்தியாவில் சுமார் 72% பாலியல் வன்கொடுமைகளில் புகார் செய்யப்படுவதே இல்லை என்பது. இதுதான் இன்றைய இந்தியாவின் சூழல். அதேபோலத் தமிழகத்தின் சூழலும் பெரிய அளவில் இதிலிருந்து மாறுபட வாய்ப்பில்லை. குறிப்பாக, இந்தச் சூழல்கள்தான் கல்விக்கான சூழலை உருவாக்குகின்றன. சான்றாக, 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த பொதுத்தேர்வில் மட்டும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஏறக்குறைய ஒரு லட்சத்துப் பதினைந்தாயிரம் (1,15,000)  பேர் தேர்வு எழுதவில்லை. ஆனால் இந்த எண்ணிக்கையான 1,15,000 என்பது நிச்சயமாகத் தற்செயலாக இல்லை. இது ஒரு மிகப்பெரிய எண்ணிக்கை. இத்தனைக் குடும்பங்களில் மிகப்பெரிய பிரச்சனைகள் அந்த நேரத்தில் தோன்றியிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில், இவ்வளவு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிற சூழலில், ஒரு கல்விக் கொள்கை கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்விக் கொள்கை குறித்துத்தான் நாம் உரையாடப் போகிறோம். நாம் இயற்கையாக என்ன எதிர்பார்ப்போம் என்றால், இந்தக் கல்விக் கொள்கைக்கும் நாம் பேசிய இத்தனை விஷயங்களுக்கும் தொடர்பிருக்கிறதா? இந்தக் கல்விக் கொள்கை இந்திய எதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறதா? இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கணக்கில்கொண்டு திட்டங்கள் ஏதேனும் அறிவியல் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறதா? என்றெல்லாம்தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாம் அப்படிப்பட்ட எந்த ஒரு விஷயத்தையும் இதில் பார்க்க முடியவில்லை. முற்றிலும் வேறு விதமான நோக்கம், வேறு விதமான லட்சியம் ஆகியவற்றையே நாம் அதில் காண்கிறோம். யார் மிகப் பாதுகாப்பான நிலையில் இருக்கிறார்களோ, இவை அனைத்திலும் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அவர்கள் எதை லட்சியம் என நினைக்கிறார்களோ, அவர்கள் எதைக் கனவு என்று நினைக்கிறார்களோ, அந்தக் கனவைப் பூர்த்தி செய்ய மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் எப்படி யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அப்படிப்பட்ட யோசனைகளைத்தான் இந்தக் கொள்கை வெளிப்படுத்துகிறது. இந்தக் கொள்கையை உண்மையில் நீங்கள் கவனித்துப் படித்தால் இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள முடியும். எந்தெந்த மாநிலத்தில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன, தொடக்க, உயர்நிலை, மேல்நிலை மற்றும் உயர்கல்வியில் இத்தகைய பிரச்சனைகள் இருக்கின்றன என்பன போன்ற எந்தவிதமான ஆய்வுகளையோ அல்லது எந்தவிதமான புள்ளி விவரங்களையோ இதில் நாம் பார்க்க முடியாது. இது முற்றிலும் வேறு ஒரு தளத்திற்கு நம்மை விவாதத்திற்கு இழுத்துச் செல்கிறது. Glorious unity and diversity of India. இப்படிப்பட்ட வார்த்தைகள் இந்தக் கல்விக் கொள்கையில் திரும்பத் திரும்ப வருவதை நாம் பார்க்கலாம். இந்த NCF 2023 ஆசிரியர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. என்ன காரணம் எனில், ஆசிரியர்களை இந்த NCF நோக்கத்துக்காக, திரும்பத் திரும்பப் பேச வைக்கப் போகின்றனர். ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரப் போகின்றனர், வேறு சில யுக்திகளும் கைவசம் வைத்துள்ளனர், அதன் வழியாகவும் இந்தக் கருத்துகளை  மாணவர்களுக்குக் கொண்டுசெல்ல முயல்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்தபின்னர், கல்வியைவிட்டு வெளியேறுகின்றனர். இந்தக் கொள்கை மட்டும் பாதிப்பான கொள்கையாக இருந்தால், ஒவ்வொரு வருடமும் பத்து லட்சம் மாணவர்கள் என்ற அளவில் 5 வருடங்களில் 50 லட்சம் மாணவர்கள், பத்து வருடங்களில் ஒரு கோடிப் பேர் வெளியேறிவிடுவார்கள். இந்தியா முழுவதும் கணக்கெடுத்தால், அவ்வாறாக வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். தேசம் எந்த நிலைமைக்குப் போகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும். NCFஇன் அறிமுகத்தில் அவர்கள் சொல்வது, இந்தியப் பாரம்பரியங்கள் மற்றும் இந்தியப் பண்டைய பெருமைகளில் இந்த Framework வேரூன்றியுள்ளது என்பதுதான். பொதுவாக எந்தக் கல்வியாளரிடம் பேசினாலும் இந்த மாதிரியான Indian Tradional இல் வேரூன்றி இருக்கிறது என்று பேச மாட்டார்கள். பொதுவாக எப்படிப் பேசுவோம் என்றால், கல்வி என்பது மனிதர்களை மாண்புற வைக்க வேண்டும்; கல்வி என்பது ஜனநாயக மாண்புகளை மக்களிடம் உருவாக்க வேண்டும்; மற்றவரை மதிக்கும் குணங்களை உருவாக்க வேண்டும்; சமதர்ம குணங்களை உருவாக்க வேண்டும் என்றுதான் பலவிதமான வழிகளில் பேசுவோம்; எதிர்பார்ப்போம். ஆனால் இந்தக் கொள்கை திரும்பத் திரும்ப பேசுவது, Rootedness in Indian Tradition என்பதுதான். இது வெறும் வார்த்தைகளுக்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல. நாம் நன்கு கவனித்துப் பார்த்தால் தெரியும், இதுபோல தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் பலவற்றையும் வெறும் வார்த்தைகளாக இவர்கள் கூறவில்லை. அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளில்தான் ஈடுபட்டு வருகின்றனர், அதற்காகத்தான் இதைப் பேசுகின்றனர். எதைப் பற்றிப் பேசுகின்றனர் என்றால், அது பண்டைய இந்தியப்

தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து – AISEC நடத்தும் உரையாடல்

தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து – AISEC நடத்தும் உரையாடல்

புதிய தேசிய கல்விக் கொள்கை, நீட் போன்றவற்றைப் பற்றிப் பொதுமக்களிடம் முழுமையான புரிதல் இல்லாவிட்டாலும்கூட ஓரளவுக்கேனும் அவை குறித்த அறிமுகமும் செய்திகளும் அவர்களைச் சென்று சேர்ந்திருக்கின்றன. ஆனால், ஒன்றிய அரசு கல்வித்துறையில் செய்துவரும் பரவலான மாற்றங்கள் குறித்த முழுமையான புரிதல் பெரும்பாலான கல்வியாளர்களிடம் கூட இல்லை என்பதே கசப்பான உண்மை. மாற்றங்கள் என்பவை மாறாதவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்த மாற்றங்கள் எதை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன என்பதுதான் நம்முன் நிற்கும் முக்கியக் கேள்வி. இந்தச் சூழலில் குழந்தை பிறந்தது முதலே கல்வி என்ற நடைமுறையைப் புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதோடு, அதற்கான செயல்திட்டங்களும் வெளியாகிவருகின்றன. தொடக்கக் கல்விக்கான NCFFS (National Curriculum Framework For Foundational Stage) என்ற கலைத்திட்டம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதைக்குறித்து பொதுத்தளத்தில் ஒரு புரிதலை உருவாக்கும் நோக்கில், அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, மெய்நிகர் உரையாடல்களை நடத்தி வருகிறது. இந்த உரையாடலின் தொடக்கமாக நடைபெற்ற முதல் கூட்டத்தில் NCFFSஇன் முதல் இரண்டு அத்தியாயங்கள் விரிவாக விளக்கப்பட்டன. அந்தப் புரிதலை அனைவருக்கும் எடுத்துச் செல்லும் வகையில் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பை வெளியிடுகிறோம். நிகழ்வை ஒருங்கிணைத்த தோழர் சுதாகர், இந்த உரையாடலின் நோக்கம் குறித்து நிகழ்த்திய உரை:   சென்ற வாரம் செய்தி ஊடகங்களில் +2 பொதுத் தேர்வு பற்றிய செய்தி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் பெரிதும் உற்று நோக்கப்பட்டது. NCFஇன் பரிந்துரைப்படி இனிமேல் +1, +2 வகுப்புகளுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். (இந்த நடைமுறைக்கு  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழும் என்பதால்) நடத்தப்படும் இரண்டு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனரோ அதை அந்தக் கல்வியாண்டின் மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் செய்தி வெளியிடப்பட்டது. 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்தத் திட்டம் என்பது, 9 முதல் 12ஆம் வகுப்புகள் வரை செமஸ்டர் முறையை அறிமுகப்படுத்த வலியுறுத்தும் NEP 2020இன் வழிகாட்டுதலின் தொடக்கப் படிதான் என்று நன்கு தெரியும். NEP 2020 பற்றிப் பலரும் பரவலாக அறிந்திருந்தாலும் NCF (National Curriculum Framework) என்றால் என்ன? NEP – NCF இரண்டிற்கும் உள்ள வேறுபாடு மற்றும் தொடர்பு என்ன? என்பன போன்ற பல கேள்விகள், சந்தேகங்கள் இருக்கின்றன. இந்தச் செய்தி வருவதற்கு முன்பாகவே, NCF என்கிற நாசகாரக் கட்டமைப்புப் பற்றி நன்கு அறிந்து, அதனை மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி மீது அக்கறை கொண்டவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ‘அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி’ திட்டமிட்டிருந்தது. எனவே ஒரு விரிவான ஆய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துவது எனத் திட்டமிட்டு, முதல் மெய்நிகர் கூட்டம் 30.08.2023 அன்று நடைபெற்றது.   தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை 2019ஆம் ஆண்டு சற்றேறக் குரிய 400க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஆவணமாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கை 2020 மத்திய அரசாங்கத்தால் எந்தவித விவாதமும் இல்லாமல் தன்னிச்சையாகக் கொண்டு வரப்பட்டு, அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை நாம் அறிவோம். NEP 2020, இங்குள்ள கல்வி அமைப்பைப் பல படிநிலைகளாகப் பிரிக்கிறது. உதாரணமாக, பள்ளிக் கல்வியை 5+3+3+4 எனப் பிரிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தேவையான கலைத் திட்டங்களை (NCE) உருவாக்க மத்திய அரசு National Steering Committee என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு NCFFS  (National Curriculum Framework For Foundational Stage) என்ற கலைத் திட்டத்தை, 3 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான கல்வி ஆவணமாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Women and Child Development) உருவாக்கப்பட்டு, அதாவது பிறந்த குழந்தையிலிருந்து மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ECCE இன் (Early Childhood Care and Education) என்ற திட்டத்தின் தொடர்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளது. இது பிறந்த குழந்தைகளின் கற்றல் தூண்டுதல்களுக்கான வழிமுறைகளைப் பற்றியும் பிற வளர்ச்சிகளைப் பற்றியும் குறிப்பிடுவதுடன், சமூகப் பொருளாதார நெறிமுறைகள் மேம்பாடு (Socio Economical Ethical Development) குறித்தும் போதனைகளைப் பற்றியும் வழிவகுக்கிறது. அப்படி வழிவகுத்தவற்றைப் பெற்றோர்களிடமும் தன்னார்வலர்களிடமும் (Community members – volunteers) கொடுக்கின்றனர். யார் அந்தத் தன்னார்வலர்கள் என்று நம் எல்லாருக்கும் தெரியும். பிறந்த குழந்தைக்குக் கல்வி முறை என்பது உலகில் எந்த நாட்டிலும் இல்லை. நம் நாட்டில் மட்டும்தான் இதைக் கொண்டு வந்துள்ளனர். பலதரப்பட்ட சமூகக் கட்டமைப்புகளைக் கொண்ட நம் நாட்டில், மத்திய சமூக வளர்ச்சி அமைச்சகம் கூறும் விளக்கம் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. அதே போல NCFSE (National Curriculum Framework For School Education) என்ற கலைத் திட்டத்திற்கான ஆவணத்தையும் பள்ளி மாணவர்களுக்காக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. அதேபோல, NHEQF (National Higher Education Qualification Framework) என்ற கலைத் திட்டத்திற்கான ஆவணத்தை உயர் கல்வி மாணவர்களுக்காக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள் எதுவும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியிடப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கை 2020 வெளியிடப்பட்டபோது தமிழ் மொழியிலோ மற்ற மாநில மொழிகளிலோ வெளியிடவில்லை. அதேபோல இந்த ஆவணங்களும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படவில்லை. மொழிப் பற்றாளர்களிடமிருந்தும் எந்தக் குரலும் இதுவரை எழுப்பப்படவில்லை. அதாவது இதன் முக்கியத்துவம் இன்னும் உணரப்படவில்லை என்று அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டி பதிவு செய்கிறது. இதன் காரணமாக, இதைப் பற்றிய தெளிவான புரிதலை மக்கள் மத்தியிலும் குறிப்பாக கல்வியாளர்கள் மத்தியிலும் பெற்றோர், ஆசிரியர், மாணவர் மத்தியிலும் உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த உரையாடலை நாம் தொடங்கியிருக்கிறோம்.  சிறப்பு அழைப்பாளர் ஊடகவியலாளர் சரவணபாரதி அவர்களின் வாழ்த்து: நீங்கள் எடுத்துள்ள இந்த அற்புதமான முயற்சி, சாதாரணப் பொதுமக்களுக்கும் சென்று சேர வேண்டியது. கருத்தரங்கில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இந்தக் கருத்தரங்கில் நடைபெற்றதை உங்கள் எழுத்தின் வாயிலாகவும் உரையின் வாயிலாகவும் வீடியோ வாயிலாகவும் பல மக்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு நல்ல முன்னெடுப்பை அனைவரும் எடுக்க வேண்டும். NCFFSஇன் முதல் இரண்டு அத்தியாயங்கள் குறித்து பேராசிரியர் யோகராஜன் விளக்கிப் பேசிய ஆய்வுரை: என் முன்னே இருக்கக்கூடிய பணி, எளிய பணி என்று என்னால் கருத இயலவில்லை. இதுவொரு மிக நுட்பமான பணி. ஏனெனில், இப்போது நாம் பேசக்கூடிய இந்தப் பொருண்மையானது, பல ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கக்கூடிய பல தத்துவங்களுக்கு இடையில் நிலவும் போராட்டங்களுடைய வெளிப்பாடு ஆகும். அதனை இப்போது கல்வித் தளத்திற்குக் கொண்டுவந்துள்ளனர். இதுவரை அரசியல், சமூகம், கலாச்சாரத் தளங்கள் என வெவ்வேறு தளங்களில் இப்பிரச்சனைகள் நிலவிவந்தன. அப்பிரச்சனைகளின் மையமாக இன்று கல்வி மாறிவிட்டது. கல்விக் கொள்கை (Educational Policy) என்பது  என்ன? கலைத் திட்டம் (Curriculam Framework) என்பது என்ன? என்பனவற்றை நாம் அடிப்படையிலிருந்து அறிந்துகொள்ள வேண்டும். கல்வித்திட்டம் என்பது அடிப்படையில் கொள்கை முடிவு ஆகும். கற்பித்தல் முறைகள் (Pedagogy) எப்படி இருக்க வேண்டும், கல்வி எப்படி இருக்க வேண்டும், ஆரம்பக் கல்வி எப்படி இருக்க வேண்டும், கல்வியை நிர்வகிக்கும் அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று கல்விக் கொள்கைகள் வரையறுக்கின்றன. இக்கொள்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதற்கு ஒரு திட்ட வரைபடம் (Blue Print) வேண்டும். உதாரணமாக, ஒரு கட்டடம் கட்ட வேண்டுமென்றால் அதன் வடிவமைப்புக்கென ஒரு வரைபடம் உருவாக்கப்படுவதுபோல, கல்வியில் பாடத்திட்டம், வகுப்பறைகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், கற்பித்தல் முறைகள், இன்னும் பலப்பல வழிமுறைகள், செயல்முறைகள் உள்ளிட்டவற்றைக் குறித்த திட்ட வரைபடம்தான் NCF. இந்தத் திட்ட வரைபடம் நான்கு அடுக்குகளில் வந்துள்ளது. எனவே இந்த நான்கு படிநிலைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த உரையாடலில் நாம் ஆரம்பக் கல்விக்கான வரையறையையும் பள்ளிக் கல்விக்கான வரையறையையும் கையில் எடுத்துள்ளோம். தொடர்ச்சி நாளை வெளியாகும்.