தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து – AISEC நடத்தும் உரையாடல்
புதிய தேசிய கல்விக் கொள்கை, நீட் போன்றவற்றைப் பற்றிப் பொதுமக்களிடம் முழுமையான புரிதல் இல்லாவிட்டாலும்கூட ஓரளவுக்கேனும் அவை குறித்த அறிமுகமும் செய்திகளும் அவர்களைச் சென்று சேர்ந்திருக்கின்றன. ஆனால், ஒன்றிய அரசு கல்வித்துறையில் செய்துவரும் பரவலான மாற்றங்கள் குறித்த முழுமையான புரிதல் பெரும்பாலான கல்வியாளர்களிடம் கூட இல்லை என்பதே கசப்பான உண்மை.
மாற்றங்கள் என்பவை மாறாதவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்த மாற்றங்கள் எதை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன என்பதுதான் நம்முன் நிற்கும் முக்கியக் கேள்வி. இந்தச் சூழலில் குழந்தை பிறந்தது முதலே கல்வி என்ற நடைமுறையைப் புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதோடு, அதற்கான செயல்திட்டங்களும் வெளியாகிவருகின்றன. தொடக்கக் கல்விக்கான NCFFS (National Curriculum Framework For Foundational Stage) என்ற கலைத்திட்டம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதைக்குறித்து பொதுத்தளத்தில் ஒரு புரிதலை உருவாக்கும் நோக்கில், அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, மெய்நிகர் உரையாடல்களை நடத்தி வருகிறது. இந்த உரையாடலின் தொடக்கமாக நடைபெற்ற முதல் கூட்டத்தில் NCFFSஇன் முதல் இரண்டு அத்தியாயங்கள் விரிவாக விளக்கப்பட்டன. அந்தப் புரிதலை அனைவருக்கும் எடுத்துச் செல்லும் வகையில் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பை வெளியிடுகிறோம்.
நிகழ்வை ஒருங்கிணைத்த தோழர் சுதாகர், இந்த உரையாடலின் நோக்கம் குறித்து நிகழ்த்திய உரை:
சென்ற வாரம் செய்தி ஊடகங்களில் +2 பொதுத் தேர்வு பற்றிய செய்தி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் பெரிதும் உற்று நோக்கப்பட்டது. NCFஇன் பரிந்துரைப்படி இனிமேல் +1, +2 வகுப்புகளுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். (இந்த நடைமுறைக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழும் என்பதால்) நடத்தப்படும் இரண்டு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனரோ அதை அந்தக் கல்வியாண்டின் மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் செய்தி வெளியிடப்பட்டது. 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்தத் திட்டம் என்பது, 9 முதல் 12ஆம் வகுப்புகள் வரை செமஸ்டர் முறையை அறிமுகப்படுத்த வலியுறுத்தும் NEP 2020இன் வழிகாட்டுதலின் தொடக்கப் படிதான் என்று நன்கு தெரியும்.
NEP 2020 பற்றிப் பலரும் பரவலாக அறிந்திருந்தாலும் NCF (National Curriculum Framework) என்றால் என்ன? NEP – NCF இரண்டிற்கும் உள்ள வேறுபாடு மற்றும் தொடர்பு என்ன? என்பன போன்ற பல கேள்விகள், சந்தேகங்கள் இருக்கின்றன. இந்தச் செய்தி வருவதற்கு முன்பாகவே, NCF என்கிற நாசகாரக் கட்டமைப்புப் பற்றி நன்கு அறிந்து, அதனை மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி மீது அக்கறை கொண்டவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ‘அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி’ திட்டமிட்டிருந்தது. எனவே ஒரு விரிவான ஆய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துவது எனத் திட்டமிட்டு, முதல் மெய்நிகர் கூட்டம் 30.08.2023 அன்று நடைபெற்றது.
தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை 2019ஆம் ஆண்டு சற்றேறக் குரிய 400க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஆவணமாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கை 2020 மத்திய அரசாங்கத்தால் எந்தவித விவாதமும் இல்லாமல் தன்னிச்சையாகக் கொண்டு வரப்பட்டு, அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை நாம் அறிவோம்.
NEP 2020, இங்குள்ள கல்வி அமைப்பைப் பல படிநிலைகளாகப் பிரிக்கிறது. உதாரணமாக, பள்ளிக் கல்வியை 5+3+3+4 எனப் பிரிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தேவையான கலைத் திட்டங்களை (NCE) உருவாக்க மத்திய அரசு National Steering Committee என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு NCFFS (National Curriculum Framework For Foundational Stage) என்ற கலைத் திட்டத்தை, 3 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான கல்வி ஆவணமாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Women and Child Development) உருவாக்கப்பட்டு, அதாவது பிறந்த குழந்தையிலிருந்து மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ECCE இன் (Early Childhood Care and Education) என்ற திட்டத்தின் தொடர்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளது.
இது பிறந்த குழந்தைகளின் கற்றல் தூண்டுதல்களுக்கான வழிமுறைகளைப் பற்றியும் பிற வளர்ச்சிகளைப் பற்றியும் குறிப்பிடுவதுடன், சமூகப் பொருளாதார நெறிமுறைகள் மேம்பாடு (Socio Economical Ethical Development) குறித்தும் போதனைகளைப் பற்றியும் வழிவகுக்கிறது. அப்படி வழிவகுத்தவற்றைப் பெற்றோர்களிடமும் தன்னார்வலர்களிடமும் (Community members – volunteers) கொடுக்கின்றனர். யார் அந்தத் தன்னார்வலர்கள் என்று நம் எல்லாருக்கும் தெரியும்.
பிறந்த குழந்தைக்குக் கல்வி முறை என்பது உலகில் எந்த நாட்டிலும் இல்லை. நம் நாட்டில் மட்டும்தான் இதைக் கொண்டு வந்துள்ளனர். பலதரப்பட்ட சமூகக் கட்டமைப்புகளைக் கொண்ட நம் நாட்டில், மத்திய சமூக வளர்ச்சி அமைச்சகம் கூறும் விளக்கம் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. அதே போல NCFSE (National Curriculum Framework For School Education) என்ற கலைத் திட்டத்திற்கான ஆவணத்தையும் பள்ளி மாணவர்களுக்காக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. அதேபோல, NHEQF (National Higher Education Qualification Framework) என்ற கலைத் திட்டத்திற்கான ஆவணத்தை உயர் கல்வி மாணவர்களுக்காக வடிவமைத்து வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் எதுவும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியிடப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கை 2020 வெளியிடப்பட்டபோது தமிழ் மொழியிலோ மற்ற மாநில மொழிகளிலோ வெளியிடவில்லை. அதேபோல இந்த ஆவணங்களும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படவில்லை. மொழிப் பற்றாளர்களிடமிருந்தும் எந்தக் குரலும் இதுவரை எழுப்பப்படவில்லை. அதாவது இதன் முக்கியத்துவம் இன்னும் உணரப்படவில்லை என்று அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டி பதிவு செய்கிறது. இதன் காரணமாக, இதைப் பற்றிய தெளிவான புரிதலை மக்கள் மத்தியிலும் குறிப்பாக கல்வியாளர்கள் மத்தியிலும் பெற்றோர், ஆசிரியர், மாணவர் மத்தியிலும் உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த உரையாடலை நாம் தொடங்கியிருக்கிறோம்.
சிறப்பு அழைப்பாளர் ஊடகவியலாளர் சரவணபாரதி அவர்களின் வாழ்த்து:
நீங்கள் எடுத்துள்ள இந்த அற்புதமான முயற்சி, சாதாரணப் பொதுமக்களுக்கும் சென்று சேர வேண்டியது. கருத்தரங்கில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இந்தக் கருத்தரங்கில் நடைபெற்றதை உங்கள் எழுத்தின் வாயிலாகவும் உரையின் வாயிலாகவும் வீடியோ வாயிலாகவும் பல மக்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு நல்ல முன்னெடுப்பை அனைவரும் எடுக்க வேண்டும்.
NCFFSஇன் முதல் இரண்டு அத்தியாயங்கள் குறித்து பேராசிரியர் யோகராஜன் விளக்கிப் பேசிய ஆய்வுரை:
என் முன்னே இருக்கக்கூடிய பணி, எளிய பணி என்று என்னால் கருத இயலவில்லை. இதுவொரு மிக நுட்பமான பணி. ஏனெனில், இப்போது நாம் பேசக்கூடிய இந்தப் பொருண்மையானது, பல ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கக்கூடிய பல தத்துவங்களுக்கு இடையில் நிலவும் போராட்டங்களுடைய வெளிப்பாடு ஆகும். அதனை இப்போது கல்வித் தளத்திற்குக் கொண்டுவந்துள்ளனர். இதுவரை அரசியல், சமூகம், கலாச்சாரத் தளங்கள் என வெவ்வேறு தளங்களில் இப்பிரச்சனைகள் நிலவிவந்தன. அப்பிரச்சனைகளின் மையமாக இன்று கல்வி மாறிவிட்டது.
கல்விக் கொள்கை (Educational Policy) என்பது என்ன? கலைத் திட்டம் (Curriculam Framework) என்பது என்ன? என்பனவற்றை நாம் அடிப்படையிலிருந்து அறிந்துகொள்ள வேண்டும். கல்வித்திட்டம் என்பது அடிப்படையில் கொள்கை முடிவு ஆகும். கற்பித்தல் முறைகள் (Pedagogy) எப்படி இருக்க வேண்டும், கல்வி எப்படி இருக்க வேண்டும், ஆரம்பக் கல்வி எப்படி இருக்க வேண்டும், கல்வியை நிர்வகிக்கும் அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று கல்விக் கொள்கைகள் வரையறுக்கின்றன. இக்கொள்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதற்கு ஒரு திட்ட வரைபடம் (Blue Print) வேண்டும். உதாரணமாக, ஒரு கட்டடம் கட்ட வேண்டுமென்றால் அதன் வடிவமைப்புக்கென ஒரு வரைபடம் உருவாக்கப்படுவதுபோல, கல்வியில் பாடத்திட்டம், வகுப்பறைகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், கற்பித்தல் முறைகள், இன்னும் பலப்பல வழிமுறைகள், செயல்முறைகள் உள்ளிட்டவற்றைக் குறித்த திட்ட வரைபடம்தான் NCF. இந்தத் திட்ட வரைபடம் நான்கு அடுக்குகளில் வந்துள்ளது.
- பிறந்த குழந்தையிலிருந்து எட்டு வயது வரை – NCFFE (National Curriculam Framework For Foundation Education)
- பள்ளிக் கல்வி – இது எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயது வரை -அதாவது மூன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை – NCFSE (National Curriculam Framework For School Education)
- உயர் கல்வி – கல்லூரிக் கல்வி – NHEQF (National Higher Education Qualification Framework)
- ஆய்வுகள் – NRF (National Research Foundation) இதுவரை கூறியது போல Framework என்பதற்குள் இதைக் கொண்டுவர முடியாது. ஆகவே ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த நான்கு படிநிலைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த உரையாடலில் நாம் ஆரம்பக் கல்விக்கான வரையறையையும் பள்ளிக் கல்விக்கான வரையறையையும் கையில் எடுத்துள்ளோம்.
தொடர்ச்சி நாளை வெளியாகும்.
- தொகுப்பு: உமா மகேஸ்வரி, கல்விச் செயற்பாட்டாளர்

Comments (0)