பிழைத்துச் செத்தவன்

அண்டம் என்னும் எலும்பொடு சதை

நரம்புதிரமும் அடங்கிய

உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம்

ஏந்தி வந்தேன் அய்யனே என்னய்யனே……..’ என செல்போன் ஒலித்தது வெளிவாசலில்  உட்கார்ந்திருந்த எனக்கு சன்னமாய்க் கேட்டது. எழுந்து போய்ப் பார்த்தேன். ஊரிலிருந்து மாதவன் அழைத்திருந்தான்.

“சொல்லுடா மாதவா” சுவாரஸ்யமின்றிக் கேட்டேன்.

“திருநா செத்துட்டான்டா….  உடனே கிளம்பி வா” பதற்றத்துடன் ஒலித்தது மாதவன் குரல்

“ஏன்டா…?? என்னாச்சு?”

“நேர்ல வா பேசிக்கலாம்”  போனைத் துண்டித்துவிட்டான். உடனே பேண்டை மாட்டிக் கொண்டு பஸ்ஸ்டாண்ட் கிளம்பி விட்டேன்.

திருநா என்னும் திருநாவுக்கரசு. எங்கள் செட்டிலேயே கல்லூரி வரை சென்றவன். எதற்கும் அஞ்சாதவன். எல்லோர்க்கும் உதவும் குணம் கொண்டவன். பிறந்த ஊரில் பிழைக்க வழியிருந்தும் அதிக வருமானம் தேடி வேறு ஊருக்குச் செல்லாதவன். நேற்று வரை விவசாயம் மட்டுமே செய்து வந்தவன். `உனக்கெல்லம் சாவே வராதுடா` என்னும் சொல்லுக்குப் பொருத்தமானவன். அப்படிப் பல முறை சாவின் விளிம்பு வரை சென்று திரும்பியவன், செத்துட்டான் என்ற செய்தியை இன்னும் கூட என்னால் முழுமையாய் நம்ப முடியவில்லை.  ஆனாலும் என்ன? செத்தவன் இனித் திரும்பப் போவதில்லை.

அருகிலிருந்து பார்க்கும் சாவுகளை விடத் தொலைவிலிருந்து கேட்கும் சாவுகள் அதிக துக்கத்தைக் கொடுக்கும். அருகிலிருப்ப வனுக்குப் பிணத்தைப் பார்த்தோ,  உறவினரைப் பார்த்தோ உடனே அழுதிட முடியும். துக்கம் கொஞ்சமேனும் தூரப்போகும்.  தூரத்திலிருப்ப வனுக்கு சாவு வீடு வரை துக்கம் நெஞ்சுக் கூட்டுக்குள்ளேயே இருக்கும். இழப்பை நினைத்து நினைத்து மனது விம்மியழத் துடிக்கும். புறச்சூழல் அழுகையைத் தடுக்கும். மௌனம் மனதைப் பிசையும். அழுவதா, அழுகையை அடக்குவதா என்ற எண்ணம் போராட்டத்துக்குள்ளாகும். முடிவில் துக்கமே மேலோங்கும்.

துக்கத்தைத் தொலைக்கத் தெரியாதவனாய் எனக்குரிய பஸ்ஸில் ஏறினேன். என் மனமெங்கும் திருநாவைப் பற்றிய நினைவுகளே வியாபித்திருந்தன. இன்னும் நான்கு மணி நேரப் பயணம் போக வேண்டும். ஜன்னலோர இருக்கையைத் தேடி அமர்ந்தேன்.  பேருந்துக்கு வெளியே வீசிய குளிர் காற்று என் மீது தெளித்த இனிமையை அனுபவிக்க முடியவில்லை.

இதைப் போன்றதொரு குளிர்ந்த காற்று வீசிய மத்தியான வேளையில் மொசக் கண்ணி கட்ட காடுகாடாய் நானும் அவனும் அலைந்தோம், மொசக் கண்ணி கட்டுவதில்  திருநா திறமை சாலி. இரண்டு காடுகளுக்கிடையில் இருக்கும் கிலுவமுள் வேலியின் அடிப்பகுதியில், முயல் தான் கடப்பதற்காக வழி ஏற்படுத்தி வைத் திருக்கும். அதில் கெட்டியான கிலுவங்கட்டையில் இரும்புக் கம்பியின் ஒரு முனையைக் கட்டி. மறு முனையில் சுருக்கு வைத்துக் கட்டிவிட வேண்டும். அதுதான் `மொசக் கண்ணி’. கம்பி கட்டிய மொசக் கடவு வழியே கடக்கும் முயல், கண்ணியில் சிக்கிக் கொள்ளும்.  கம்பியில் வைக்கும் சுருக்கு, சுருக்கில்  சிக்கிய முயல் தப்பிவிடாமல் இருக்க முள்ளில் கம்பியைக் கட்டும் பாங்கு, இவற்றைப் பிசிறில்லாமல் செய்வதில் திருநா கில்லாடி.

அப்படி ஒரு கடவில் கம்பியைக் கட்டும் போதுதான், வேலிக்குள் இருந்த பாம்பொன்று அவனைக் காலில் கடித்து விட்டது. கடித்த பாம்பை அடித்தபின்தான் தெரிந்தது அது விரியன் பாம்பென்று. ‘அய்யோ… விதி முடிந்தவர்களுக்குத்தான் விரியன் பாம்பு கடிக்கும் என்பார்களே!’. கடித்தது விரியன் பாம்பென்று உறுதி செய்தபின், கைகள் நடுங்கின, கால்கள் தடுமாறின. வார்த்தை குழறியது இவையெல்லாம் எனக்குத்தான் நடந்தது. ஆனால், கடிவாங்கிய திருநா எந்தச் சலனமுமின்றி  இருந்தான். கண்ணி கட்டக் கொண்டு வந்திருந்த கம்பியில் கடிவாயிலிருந்து அரையடி தள்ளி காலில் இறுகக் கட்டினான். என்னையே பாம்பு கடித்த மாதிரி இருந்த என்னைத் தேற்றினான். எப்படியும் ஊரிலிருந்து காடு வழியாகவே ஏழெட்டு மைல் வந்திருப்போம். திரும்பி ஊருக்குச் செல்ல நடந்தேதான் செல்ல வேண்டும். விதி வீதி வழியே வராமல் காடு வழியே வந்திருக்கிறது. காடு வரை கூட வந்தவன், கடைசி வரை கூட இருந்தவன் நான்தானே! நினைத்தவுடன் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.

ரோட்டை அடைந்த பின், அவனை ரோட்டோர பாலத்தின்  கைப்பிடிச் சுவரில் உட்கார வைத்து விட்டு, ஏதாவது வண்டி வருகிறதா எனப் பார்த்தேன். எங்கள் நேரத்திற்கு சைக்கிள் தான் ஒன்று வந்தது. அவரிடம்  சைக்கிளையாவது கேட்கலாம் என நான் சைக்கிளைக் குறுக் காட்டினேன். குறுக்காட்டிய மறுகணம் திருநா அவரிடம்   சாதாரணமாய்ப் பேசியது எனக்கு அந்த வேதனையிலும் வியப்பைத் தந்தது. ஒரு வழியாக சைக்கிள்காரரின் உதவியோடு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று ஒரு வார காலப் போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைக்க வைத்தோம்.

எமனின் எல்லைவரை சென்றவன் தனது மன உறுதியினால் மட்டுமே எல்லைக் கோட்டைத் தொட்டு எமனை அவுட்டாக்கித் திரும்பினான். மருத்துவமனையிலிருந்து வந்தவனின் தலையில் பாதி முடியைக் காண வில்லை. யாராவது கேட்டால் “உட்ரா உட்ரா.. உசுருக்கு வந்தது மசுரோட போச்சு”  என்பான்.

“சார் எந்த ஊருக்குப் போகணும்?” நடத்து நரின் குரல் என் நினைவை நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தது. வழிந்த கண்ணீரை அவருக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டு டிக்கெட் வாங்கினேன். என் கண்ணீர் பஸ்ஸிலிருந்த யாருக்கும் தெரியக்கூடாதென பார்வையை ஜன்னலுக்கு வெளியே, வானத்தை நோக்கித் திருப்பினேன். வானத்தில் போருக்குத் தயாராகும் யானைக் கூட்டங்கள் போல கருமேகங்கள் திரண்டிருந்தன.

இப்படியொரு கருமேகங்கள் திரண்டு, இடியுடன் மழை பெய்த நாளில்தானே, இன்னொரு முறை சாவிலிருந்து தப்பினான் திருநா! அன்று அவர்கள் வீட்டு எருமையொன்று கன்று ஈனத் தயாரான நிலையில் இருந்தது. தொண்டுப்பட்டியில் இரவுக் காவலனாய்த் திருநா இருந்தான். அன்றைய இரவுக் காட்சி சினிமாவுக்குச் செல்வது எங்களின் திட்டம். அதுவும் திருநாவுக்குப் பிடித்த `குஷ்பு’ நடித்த படம். என்ன சொல்லியும் அவன் சினிமாவிற்கு வரவில்லை. எருமைக் காவலுக்கு, எருமைக்கு அருகிலேயே கட்டிலை விரித்துப் படுத்து விட்டான். அவனை விட்டுவிட்டு நாங்கள் சினிமாவிற்குச் சென்று விட்டோம். இடைவேளையின் போதுதான் தெரிந்தது, கடும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. சினிமா முடிந்து ஊர் திரும்பிய போது திருநாவின் தொண்டுப்பட்டியில் ஊரே கூடியிருந்தது. கும்பலை விலக்கிவிட்டு உள்ளே சென்றோம். அங்கே நாங்கள் கண்ட காட்சி எங்களை உறைய வைத்துவிட்டது. மின்னல்  தாக்கி எருமை இறந்திருந்தது. பத்தடி தூரத்தில் படுத் திருந்த திருநாவுக்கு ஒன்றுமே ஆகவில்லை.

“பையன ஊட்டுக்குக் கூட்டிட்டுப் போயி சுத்திப் போடு செல்லாத்தா “

“இன்னியோட இவனப் புடிச்ச கெட்ட கெரகமெல்லாம் தீந்துது”

“இந்தச் செம்மத்துல இவுனுக்குச் சாவே வராது.”

“இவுங்க பாட்டன், பூட்டன், அப்பாரய்ய னெல்லாம் பண்ணுன புண்ணியந்தா இவனக் காப்பாத்திருக்கு. “

“அவுங்க மட்டுமா, ஊருல எதுனாலும் இவந்தான் முன்னால நின்னு இழுத்துப் போட்டுகிட்டுச் செய்யறான். அந்த செல்லாத்தா காப்பாத்தாம உட்ருமா”

கூட்டம் பலவாறாப் பேசியது. இந்த முறை வந்த எமன் தன் வாகனத்தை மட்டும் ஓட்டிக் கொண்டு போய்விட்டான் போலும். பயல் சாவுக்குப் பத்தடி தூரத்தில் இருந்து தப்பித்திருந் திருக்கிறான்.

வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில், தூரமாக இருப்பது, அருகே இருப்பது போன்றும். அருகே இருப்பது தூரமாக இருப்பது போன்றும் தோன்றும். இது உறவுகள் மத்தியில் அடிக்கடி  ஏற்படும் சாதாரண தூரங்கள். திருநாவுக்கான இந்தப் பத்தடி தூரம் ஒரு ஜென்மம் எடுப்பதன் கால அளவாகிப் போனது.

கரடுமுரடான திருநாவுக்குள்ளும் காதல் கண்சிமிட்டிய பொழுதுகள் இருந்தன. இரண்டு முறை செத்துப் பிழைத்தவன் வாழ்வில்  வசந்தம் வீசிய நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறின. எங்கள் ஊரிலிருந்து கல்லூரிக் குள் கால் வைத்த பெண்களின் பட்டியலைக் கை விரல் கொண்டு எண்ணிவிடலாம். அந்த எண்ணிக்கையில் ஒரு விரலாய் இருந்தவள் சுதா. தினமும் காலையில் பஸ்பிடித்து கல்லூரிக்குச் சென்றுவிட்டு மாலையில் பஸ்ஸிலேயே வீடு திரும்புவாள். அவள் இவனை வசீகரித்தது எந்தப் புள்ளியில் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. சுதாவைப் பார்க்க, பார்த்துச் சிரிக்க, பார்த்துச் சிரித்துப் பேச இரண்டு முறை பஸ்ஸ்டாண்ட் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது திருநாவுக்கு. ஒரே நேரத்தில் இரண்டு பஸ்களுக்கு மேல் நிற்காத ஊருக்கு பத்து பழக்கடைகளும், கார் மற்றும் டெம்போ நிறுத்து மிடமே பஸ்ஸ்டாண்ட் ஆனது. பஸ்ஸ்டாண்ட் போக வேண்டியதின் அவசியம் காரணமாகவே ஒரு டெம்போ வாங்கி அதற்கு டிரைவரும் ஆனான். ஓனர் கம் டிரைவர் என்ற அந்தஸ்துடன் வலம்வரத் துவங்கினான். அவனது டெம்போவுக்கு சுவாமி விவேகானந்தா எனப் பெயரிட்டான். பெயரின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் சற்றே பெரியதாக வேறு கலரில் இருக்கும். மற்றவர்களுக்கு  விவேகானந்தரின் மேல் கொண்ட பற்றுதல் காரணமாகத் தெரிந்த டெம்போவின் பெயர்,  எங்களுக்கு மட்டுமே சுதாவின் மேல் கொண்ட பற்றாகத் தெரிந்தது. இப்படியே  மூன்றாண்டுகள் ஓடியதே தெரியாமல் காதலும், டெம்போவும் ஓடின.

காதல் சினிமாக்களில் மட்டுமல்ல `வாழ்க்கை யிலும் சந்தோச முகத்தையும் காட்டும், கோர முகத்தையும் காட்டும். மூன்றாம் ஆண்டு கல்லூரி முடியும் முன்பே சுதாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். இரண்டு மணி நேரப் பேச்சும், ஒரு கர்ச்சீப் நனையு மளவுக்கான கண்ணீரும் கலந்து திருநாவுடனான காதலுக்கு விடை கொடுத்து விட்டாள். இவன் அழுகவில்லையே ஒழிய ஒடிந்துவிட்டான். அதன்பின் யாருடனும் கலகலப்பாய்ப் பேசவில்லை.

ஒரு சுபயோக சுபதினத்தில் நடந்த சுதாவின் திருமணத்தன்று கடலைச் செடிக்கு அடித்து விட்டு மிச்சம் வைத்திருந்த `டெமக்ரானை’  எடுத்துக் குடித்து விட்டான்.  ஊரே சுதா திருமணத்தில்.  இவனை மட்டும் காணவில்லை.  நானும் மாதவனும் தேடித் தேடிக் களைத்து தென்னை மரங்களுக்கிடையில் அவன் டெம்போவைக் கண்டோம். எந்த சுதாவின் பொருட்டு டெம்போ வாங்கினானோ, அதே சுதாவின் பொருட்டு பூச்சி மருந்தைக் குடித்துவிட்டுக் கிடந்தான். நாங்கள் போகும் போது, அவனிடம் எந்த அசைவும் இல்லை. பக்கத்தில் இருந்த ‘டெமக்ரான்’ பாட்டில்  எங்களுக்கு எல்லாம் சொல்லியது.

உடனே டெம்போவில் அவனைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனை செல்ல, அங்கே ஒரு அறுவை சிகிச்சையின் அவசரத் தினூடே வந்து இவனைப் பரிசோதித்த டாக்டர், “உயிர் போய்விட்டது, ஜி.எச்சுக்குப் போயிருங்க” என்றார். கண்ணில் நீர் பெருக ஊருக்குத் தகவல் சொல்லி, காவல்நிலையத்துக்கு தகவல் சொல்லி அரசு மருத்துவ மனையில் போஸ்ட்மார்ட்டம் பகுதியில் அவனைக் கிடத்தினோம். கிடத்தும்போது அவனது ஒருகை எனது சுண்டுவிரலைப் பிடித்தது.  உயிர் அணுவினும் சிறியதாய், மலரினும் மெல்லியதாய்  அவன் உடம்பில் ஒட்டியிருப்பது தெரிந்தது.  நான் டாக்டர் எனக் கத்திய கத்தல் பக்கத்துத் தெருவில் இருக்கும் டாக்டருக்குக் கூடக் கேட்டிருக்கும். விரைந்து வந்த டாக்டர்கள் குழுவொன்று போராடி மருத்துவத்தின் சாம, தான, பேத, தண்டங்கள் அனைத்தையும் பிரயோகித்து அவனைக் காப்பாற்றியே விட்டது. இனியொரு விதி செய்யப் பிறந்தவனோ எனும்படியாக எழுந்தே விட்டான்.

அதன் பிறகு பழைய திருநாவை எங்களால் பார்க்க இயலவில்லை. அதற்காக அவன் செயல்படாமலும் இருக்கவில்லை. டெம்போவை விற்றுவிட்டு, முழுநேர விவசாயி ஆனான். அவனது வாழ்க்கையில் வசந்தம்  வீசவில்லையேயன்றி, குறையொன்றுமில்லா மலேயே நகர்ந்தது.

தொடர்ந்து சொந்த ஊரில் கொட்ட முடியாத குப்பையை, வெளியூரில் கொட்டிச் சம்பாதிக்க நான் கிளம்பிவிட்டேன். செல்போனில்  தொடர்ந்த பேச்சுகள், மெதுவாய்க் குறைந்து, தேவையிருப்பின் ஏற்படும் அழைப்பானது. எப்போதும் சுற்றித்திரிந்த ஊருக்கு எப்போதாவது போவேன். அப்படிப்  போகும் போதெல்லாம் மறக்காமல் நான் பார்க்கும் நபர்கள் திருநா மற்றும் மாதவன் மட்டுமே. இரண்டு ஆண்டு களுக்கு முன்பு சென்ற போதுதான் தெரிந்தது திருநாவுக்கு குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டது. அது சுதாவின் பொருட்டோ அல்லது  சுதாரிக்க முடியாமல் போனதன் பொருட்டோ எனத் தெரியவில்லை. நான் ஆராயவுமில்லை. “கொஞ்சங் கொஞ்சமா கொறச்சுக்க மாப்ள. உங்கிட்டச் சொல்ல வேறொண்ணுமில்ல”  எனச் சொல்லிவிட்டு வந்தேன்.

நினைவுகள் முழுவதும் சோகம் அப்பியிருக்க சொந்த ஊருக்குப் போகும் உற்சாகமின்றி கடந்த சாலைகள் என்னை ஊரில் கொண்டு வந்து சேர்த்தன. சாலைகளுக்குத் தெரியா தல்லவா? சோகப் பயணம் மற்றும் சுகப் பயணத்தின் வேறுபாடுகள்.

நல்ல வேளை  பஸ்நிறுத்தத்திற்கு மாதவன் வந்திருந்தான். அவனுடைய  டூவீலரில்  அமர்ந்தவாறு கேட்டேன்.

“என்னடா ஆச்சு……”

“எந்நேரமும் தண்ணீலேயே கெடந்தா என்னாகுமோ அதாயிருச்சு….”

“யாருமே ஒண்ணுஞ் சொல்லலியா…….”

“ஏஞ் சொல்லாம? ஊரே சொல்லுச்சுடா. இவங் கேட்டாத்தானே”

பேசியபடியே திருநாவின் வீட்டை அடைந்தோம்.

சாவு நிகழ்ந்ததற்கான அனைத்து அறிகுறி களுடன் காணப்பட்டது வீடு. ஆனால் சாவினால் துக்கப்பட்ட முகங்கள் மிகக் குறை வாகவே இருந்தன. திருநாவின் அப்பாவைப் பார்த்தேன், பிள்ளையைப் பறிகொடுத்து விட்ட  ஆற்றாத சோகம் அவர் முகத்தில் தெரிந்தது. தந்தை இருக்க பிள்ளை இறப்பது ஆகப் பெரிய சோகங்களில் மிகக் கொடியது. அவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையின்றி அமர்ந்தேன்.

“எவஞ் சொல்லி அவங் கேட்டான். கடேசியா நாஞ் சொன்ன மாதிரிதானே ஆச்சு”

தன் தீர்க்க தரிசனத்தைச் சொல்லியபடி ஒருவரும்,

“இந்த கவுருமெண்டு மூலைக்கு மூல கடயத் தொறந்து உட்டா குடிக்காதவங் கூட குடிப்பானுங்க”

அரசின் மீதான குற்றச்சாட்டாக இச்சாவைக் கொண்டு சென்ற ஒருவரும்,

“நா அவுனுக்குச் சொன்ன புத்திமதிய ஒரு கருங்கல்லுக்குச் சொல்லிருந்தா அது மகாத்மாவா மாறி நடந்திருக்கும்.”

என இன்னொருவரும்,

“இதுதாங் கடசின்னான். நெசமாலுமே கடசியாயிருச்சு”  

என மற்றொருவருமாக, ஊர் நாலுவிதமாகப் பேசியது.

“ஏனுங்க. சவத்த எடுக்கப் போறாங்க” சின்னானின் குரலுக்கு அனைவரும் அமைதி யானார்கள்.

பலமுறை சாவுடன் சண்டையிட்டுச் ஜெயித்தவன் செத்துப் பிணமாய்ப் போகிறான். அன்று பாட்டன், பூட்டன் செய்த புண்ணியம் என்ற ஊர், இன்று வேறு மாதிரி பேசுகிறது.  இறப்பு கெட்டவனை நல்லவனாகவும்,  நல்லவனைக் கெட்டவனாகவும் மாற்றிவிடுகிறது. பாட்டன், பூட்டன் செய்த புண்ணியங்களை மீறியும், நம் நடத்தை வழியும் நம்மைப் பார்க்கிறது இவ்வுலகம். இருக்கும் போது மட்டுமல்ல, இறந்த பிறகும் கூட.

இறப்புக்குப்  பின்னும்  இருக்கிறது  இப்படியான பெயரில் ஒரு வாழ்வு. 


Comment (1)


Thanjikumar
Thanjikumar
April 20, 2021

சாதாரணனின் ‘பிழைத்துச்செத்தவன்’ அருமையான கதை.யதார்த்தமான நடை.
-தஞ்சிகுமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *