கொரோனா அயலகத் தமிழர்கள் எதிர்கொண்டது எப்படி?

எங்கள் நாட்டில் சூரியனே மறைவதில்லை” என்ற ஆங்கிலேய ஒற்றை ஆட்சித் தலைமையின் ஆணவச் சொற்றொடர் உலகப் புகழ்பெற்றது. இன்றும்கூட ஒட்டுமொத்த உலகத்தையும் ஒற்றைக் குடையின் கீழ் கொண்டுவந்து ஆட்டிப் படைத்துக்கொண்டுள்ளது கண்ணுக்குத் தெரியாத நுண்ணி ஒன்று. ஆம், கொரோனா என்னும் பிணி இன்று உலக நாடுகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மனித குலத்துக்கே சவாலாக விளங்கிவருகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னதாகவே உலகம் முழுக்கப் பரந்து கிடந்த இனம்தான் தமிழினம். அத்தகைய பழம்பெருமைக்குச் சொந்தக்காரர்களான நம் தமிழர்கள் இன்றளவும் உலகின் பல்வேறு நாடுகளில் வசித்துவருகிறார்கள். தமிழ்நாட்டில் தினந்தோறும் ஆயிரக்கணக் கானவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருவது உறுதி செய்யப்பட்டுவரும் இந்தச் சூழலில் அயலகத் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள சூழலையும், கொரோனாவை அந்த நாடுகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் முறைகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

 சீனா:

கொரோனாவின் வருகை சீனாவிலிருந்து துவங்கியது என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்தக் கொரோனா வைரஸ் பல பத்தாண்டுகள் முன்பே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுதான். அந்த வைரசின் பல்வேறு பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றே வந்துள்ளன. 2019 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட, தற்போதைய வீரியத்தோடு தாக்கும் வைரசுக்கு கோவிட்-19 என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வைரசின் தோற்றுவாயான சீனாவிலிருந்து தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார், அங்குள்ள பன்னாட்டுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை வகுப்புக் கணித ஆசிரியையாகப் பணியாற்றும் உஷா கிரிதரன். சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த இவர் சீனாவில், கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய வூகான் நகரத்திலிருந்து சிலமணிநேரப் பயணத் தொலைவில் உள்ள ஜெஜியாங் மாநிலம், ஹேங்ஜோ நகரில் வசிக்கிறார்.

“2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் சீனாவில் இந்த வைரஸ் பரவத் துவங்கி உலகமெங்கும் இந்த வைரஸ் பரவியிருந்தாலும், சீனா மீது உலக நாடுகள் பலவும் பலவாறு குற்றம் சாட்டினாலும், வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சீனா அதிக முனைப்புடன் செயலாற்றி, தற்போது ஏறத்தாழ 80% இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது..

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனா, கொரானாவின் பிறப்பிடமாக இருந்தும் ஒரு இலட்சம் என்ற எண்ணிக்கைக்கும் குறைவாகவே பரவலைக் கட்டுப்படுத்திவிட்டது. தொழில்நுட்ப வசதிகளில் பன்மடங்கு முன்னேற்றம் கண்டுள்ள இந்நாடு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு வடிவங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. சட்டங்கள் கடுமையானவை என்பது ஒருபுறம் இருந்தாலும், விதிமுறைகளைப் பின்பற்றுவதில் சீனர்கள் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்கள்.

அலைபேசி கையில் இல்லாமல் யாரும் வெளியே செல்ல முடியாது. நம் ஊரில், சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என்று மண்டலங்களைப் பிரித்ததுபோல் இங்கும் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் QR Code அலைபேசி வழியே கொடுத்துள்ளார்கள். மண்டல விதிகளுக்கும் ஏற்ப அந்த கியூ ஆர் கோடு காட்டினால்தான் மக்கள் கடைகள், வணிக வளாகங்கள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட எந்த இடத்துக்கும் செல்ல முடியும். 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடல் வெப்பநிலையைக் கண்காணித்து, கொரோனா அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கிறார்கள். சமூக இடைவெளி மக்களால் பொறுப்புடன் கடைபிடிக்கப்படுகிறது.

பெரும்பாலும் பணமில்லாப் பரிவர்த்தனைக்கு சீனா மாறிவிட்டதால், மக்களுக்கான உதவிகளை இ-வவுச்சர் (E Voucher) மூலம் வழங்கினார்கள். அதனைத் தேவையான பொருட்களை வாங்க மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்தாத வவுச்சர்கள் தானாகவே காலாவதியாகிவிடும். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா 100 யுவான்களை (ரூபாய் மதிப்பில் சுமார் 1000) அரசுக்கு நிதியாக வழங்கியுள்ளார்கள்.

யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், மொபைல் போனில் உள்ள அப்ளிகேசன் மூலம் அவர்கள் பயணம் செய்த விவரங்களைச் சேகரித்து அவர்கள் சென்ற இடங்கள், தொடர்புகொண்ட ஆட்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளார்கள். இதனால் தொற்றுப் பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டது. வெளிநாட்டினருக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் உண்டு. வெளிநாட்டிலிருந்து சீனா திரும்பியவர்களில், தங்கள் பயண வழித்தடத்தை மறைத்து, பொய்யான தகவல் தந்தவர்களைக் கண்டுபிடித்து சிறையில் அடைத்துள்ளார்கள். இங்கே வாழ்வதில் பாதுகாப்பு தொடர்பான எந்தச் சிக்கலும் இல்லை. குறைவான எண்ணிக்கையிலான நபர்கள் பாதிக்கப்பட்டபோதே, அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து பரவலைக் கட்டுப்படுத்திவிட்டதால் அச்சமின்றி இங்கே வாழ்கிறோம் என்கிறார் உஷா.

 இங்கிலாந்து:

இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஒரே நேரத்தில்தான் லாக்-டவுன் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த அந்த நேரத்தில், இங்கிலாந்தில் தொற்று எண்ணிக்கை ஏறத்தாழ 2000 ஆக இருந்தது, தற்போது மூன்று இலட்சத்தை எட்டியுள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40000ஐக் கடந்துவிட்டது. இங்கிலாந்தில் கொரோனா லாக் டவுன் மற்றும் பாதிப்புகள் குறித்து, மன்னார்குடி பெருகவாழ்ந்தானைச் சேர்ந்த, இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றும்  க.தமிழன் நம்மோடு செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

“லாக் டவுன் அறிவிப்பு மிகுந்த தாமதம், இத்தாலியில் கொரோனா   பரவல் தீவிரமாக இருந்ததை அறிந்தும் அரசு மெத்தனமாக இருந்தது,  வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள் மூலமாகக் கொரோனா இறக்குமதியாகிவிட்டது என்று பலவாறு இந்நாட்டின் எதிர்க்கட்சிகள் அரசைக் குற்றம் சாட்டுகின்றன. லாக் டவுன் அறிவிப்பு வெளியிட்டதும், பொருட்களை வாங்குவதில் மக்களிடையே பதற்றம் நிலவியது. அத்தியாவசியப் பொருட்கள் மொத்தமாக அள்ளிச் செல்லப்பட்டன. முதல் சில வாரங்கள் ஆன்லைன் டெலிவரி கிடைப்பது சிரமமாக இருந்தது. உணவகங்களில் Take Away இல்லை. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு டெலிவரியில் முன்னுரிமை வழங்கப்ப்பட்டது.

முதல் சில வாரங்கள் மக்கள் பொதுமுடக்கத்தை ஓரளவு முழுமையாகவே பின்பற்றினார்கள். மிகச் சிலரே விதிகளை மீறினார்கள். ஆனால், தளர்வுக்குப் பின்பு மக்கள் வெளியில் நடமாடத் துவங்கிவிட்டார்கள். ஆனாலும் சுயகட்டுப்பாட்டுடன், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கிறார்கள். பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது நோயின் தீவிரம் மக்களுக்குப் புரிந்தது. இங்குள்ள பிரதமரும் அமைச்சர்களும் மக்களோடு நெருங்கிப் பழகுகிறார்கள்.

வேலையிழந்தோருக்கு 80% ஊதியத்தை அரசு வழங்குகிறது. சுயதொழில் செய்யும் நபர்களுக்கு £10000 வரையும், நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு £25000 வரை அரசு இலவச உதவித்தொகை வழங்கியது. பதிவு செய்த நிறுவனங்களுக்கு £50000 பவுண்டுகள் வரை 2.5% வட்டியில் கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு வங்கியில் நடப்புக்கணக்கு இருந்தாலே போதுமானது. கடனுக்கான செக்யூரிட்டியை அரசே வழங்குகிறது. முதல் 12 மாதங்கள் கடன் தவணை செலுத்த வேண்டியதில்லை.

மருத்துவ வசதிகளைப் பொறுத்தவரை, படுக்கைகள் பற்றாக்குறை, மாஸ்க் மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்புக் கருவிகள் உள்ளிட்டவற்றுக்கான பற்றாக்குறை துவக்கத்தில் நிலவியது. சாதாரண அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டனர். அதிகம் பாதிப்புக்கு உள்ளானவர் களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப் படுகிறது. துவக்க்கத்தில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததால் மக்களிடம் அச்சம் இருந்தது. நாளடைவில் மக்கள் அச்சம் நீங்கி இயல்பு வாழ்வுக்குத் திரும்பி விட்டனர்” என்கிறார் தமிழன்.

  சிங்கப்பூர்:

சீனாவிற்கு நெருக்கமான, நம் சென்னயை விடச் சிறிய நாடான சிங்கப்பூர் கொரோனா தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை, சிங்கப்பூர் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பொறியியல் மேலாளராகப் பணிபுரியும் ராஜபாளையம், தொம்பக்குளதைச் சேர்ந்த ஜெயமோகன் விவரிக்கிறார்.

சீனாவில் கொரோனா தொற்று பரவத் துவங்கியதிலிருந்து சிங்கப்பூர் அரசு அதை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கி ஜனவரி முதல் வாரத்திலிருந்தே அனைத்து விமானப் பயணிகளைக் கண்காணிக்கத் துவங்கியது. அனைத்து மருத்துவநிலையங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டது. சார்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டபோது அதற்கென்று உருவாக்கப்பட்ட National Centre for Infectious Diseases (NCID) மிகத் திறம்பட செயலாற்றியது. அனைத்து நிறுவனங்கள், பள்ளிகள், கடைகளில் சேனிடைசர் பயன்பாடும் உடல் வெப்பப் பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டது. அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் சேனிடைசர் இலவசமாக அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் அதிபர், அமைச்சர்கள் மக்களிடையே உரையாற்றினார்கள். வாய்ப்புள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அரசு கேட்டுக்கொண்டது. தனிமனித இடைவெளி கட்டாயம், அனைத்துக் கடைகள், வளாகங்கள்  மூடல், உணவகங்களில் டேக்அவே மட்டும், காய்கறிச் சந்தைகளில் அடையாள அட்டையுடன் வரிசைப்படி தான் காய்கறிகள் வாங்க முடியும் எனக் கடுமையான கட்டுபாடுகள் மூலம் நோய்த் தாக்கம் குறைக்கப்பட்டது.

இடைகால பட்ஜெட் தாக்கல் செய்து பொதுமக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் $650,உணவகங்களுக்கு வாடகை ரத்து, சிறு குறு பெரு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் என 20 மில்லியன் டாலர் மதிப்பில் பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டன. அதிமான பரிசோதனைகள் மூலம் நோய்த்தொற்று கண்டறியப்பட்டு அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை 20 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு இணையாக இலவச சிகிச்சை, சத்தான உணவுகள், நோய்எதிர்ப்பு மருந்துகள்,  வீட்டில் உள்ளவர்களுடன் பேச இலவச இணைய சேவை 50 GB, $750 உதவித் தொகை என அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டன. மனநலம் சார்ந்த ஆலோசனைகள் பல்வேறு குழுக்கள் மூலம் வழங்கப்பட்டது. ஊழியர்கள் சொகுசு கப்பல்கள் மற்றும் ஆடம்பர விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு தேவையான பராமரிப்பினை அரசு வழங்கியது. மூன்று கட்டங்களாக $500 மில்லியன் வரையில் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பல்வேறு வரிச்சலுகைகளையும் நிதி ஆதாரங்களையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. மக்களின் துயர் நீங்குவது போலவே கிருமித் தொற்றும் படிப்படியாகக் குறைந்து சிங்கப்பூர் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

அடுத்த இதழில் இன்னும்
சில நாடுகளிலிருந்து

+++++++++++++


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *