தமிழ் உள்ளவரை….
உ.வே.சா. அவர்களின் பிறந்த நாள் கட்டுரை..
இன்று உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாள்.
‘பொதியமலைப் பிறந்தமொழி
வாழ்வறியும் காலமெல்லாம்
புலவோர் வாயில்துதியறிவாய்¸
அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்குவாயே!’
என்று உ.வே.சா. பற்றி மகாகவி பாரதியார்புகழ்ந்துரைக்கிறார்.. மகாகவி சொன்னது போல் அவர் இறப்பின்றி துலங்குகிறார்.
அரிய தமிழ் நூல்களைத் தேடியெடுத்துச் செம்மையாகப் பதிப்பித்த உ.வே.சா. எழுதிய ‘என் சரித்திரம்’ நூலுக்கு நவீனத் தமிழில் தனி இடம் உண்டு.” என்கிறார் உ.வே.சா. பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றில் திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி.
உ.வே.சா. அவர்கள் தமிழ்த் தொண்டில் பழுத்த பழம். அவர் எழுதிய சுயசரிதையை சுயவரலாற்று நூலாகவும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பதிப்பு வேட்கையின் ஆவணமாகவும் மதிப்பிடலாம்.
திரு.உ.வே.சா. 20.02.1855 இல் பிறந்தார். முதல் இந்திய சுதந்திரப் போர் என்ற எழுச்சிக்கு (1857)இரண்டாண்டுகளுக்கு முன்பு. அதாவது பிரிட்டிஷ் இந்தியா உருவாகும் தருவாயில்..
அவர் மறைந்த வருடம் 1942.. வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த ஆண்டு.. அதாவது விடுதலை இந்தியா உருவாகும் தருணம் உந்தியபோது.. இடைப்பட்ட எண்பத்தேழுஆண்டுகளில் நிறைவாழ்வு வாழ்ந்த இந்தப் பெரியவர் உ.வே.சாமிநாதய்யர் தமிழின் தொன்மையை அச்சில் கொணர்ந்து தமிழுணர்வு பேணுபவர்க்கெல்லாம் தமிழின் பெருமை பேச வாய்ப்புத் தந்தார்.
உ.வே.சா. என்ற இந்த மனிதர் பகலிரவு பாராமல், கண்துஞ்சாமல்,கிடைத்த வாகனத்தில் அலைந்து, கிடைக்காவிட்டால் நடந்தே சென்று, தேடித் தேடி எடுத்த தமிழ்ச் சுவடிகளை, அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, அச்சில் கொணர்ந்த பணியைச் செய்யாவிட்டால், தமிழின் தொன்மை எப்போது தெரிந்திருக்குமோ..? அல்லது
தெரியாமலும் போயிருக்கக் கூடுமோ…?
classical tamil என்று ஆங்கிலத்தில் அறைகூவுகிறோம் அல்லவா.. அந்தச் “செவ்வியல் அல்லது செந்தகுதி”க்கு உரிய பழந்தமிழ் பனுவல்களை அவர் பதிப்பித்துள்ளார்.
தமிழ் செம்மொழி அங்கீகாரத்தைப் பெறக் காரணமாய் இருக்கும் பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் இவர் பதிப்பித்தவை.
சீவக சிந்தாமணியில் தொடங்குகிறது அவர் பதிப்புப்பணி…மணிமேகலை அடுத்த சவால்..
ஆச்சரியம் என்னவெனில்..ஏட்டில் கண்டேன்…அச்சில் தந்தேன் என்றில்லாமல்..ஏட்டில் கண்டதை ஆராய்கிறார்..கிடைத்த பல சுவடிகளில் பதர்களையும் போலிகளையும், அவை பெரும்பாடுபட்டு அவர் சேகரித்திருந்ததாயினும், புறக்கணித்து விட்டு உண்மைப் பாடத்தை துருவித் தர கடுமையாய் உழைத்திருக்கிறார்.
அவர் சுவடி தேடிய வரலாறு சொற்களால் அளவிடக் கூடியன அல்ல. கிடைத்தால் உற்றப் பெருமகிழ்ச்சி.. இல்லையேல் அடைந்த ஏமாற்றம்….அதனால் உருவான சோர்வை அவர் வெல்லப் படும்பாடு…பதிப்பின்போது அவர் அடைந்த சவால்கள்…போட்டிகள், பொறாமைகள்..
அப்புறம் அவரது பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை…எளிமையும் ரசனையும் மிக்கது.. ஒரு சான்று பார்க்கலாமா.
“எங்கள் ஊரைச் சுற்றிப் பல வாய்க்கால்கள் உண்டு. குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து வரும் பெரிய வாய்க்கால் ஒன்று முக்கியமானது. பெரியவர்கள்,
விடியற் காலையில் எழுந்து குடமுருட்டி யாற்றுக்குப்போய் நீராடி வருவார்கள். அங்கே போக முடியாதவர்கள் வாய்க்காலிலாவது குளத்திலாவது ஸ்நானம் செய்வார்கள். அந்நதி ஊருக்கு வடக்கே ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது. அதற்கு ஒற்றையடிப் பாதையிற்போகவேண்டும்; வயல்களின் வரப்புக்களில் ஏறி இறங்கவேண்டும்.”
தமிழ்த் தாத்தா என்று முதன்முதலில் இவரை அழைத்தவர் திரு.கல்கி அவர்கள்.
மகாமகோபாத்தியாய முதலான மேன்மைமிகு பட்டங்கள் பல இருந்தாலும் தமிழ் தாத்தாவே பலரும் அறியும்படி நிலைத்துவிட்டது..அதற்கு கல்கி தன் பாணியில் மூன்று காரணங்கள் சொன்னாராம்.
.1.வயது முதிர்வு. 2. தாத்தாவில் நடுமெய்யை எடுத்துவிட்டால், தமிழ்த் தாதா..அதாவது தமிழ் வள்ளல்…இவரைப் போல யார் தமிழுக்கு தந்திருக்க முடியும்..சரிதானே. 3.தமிழ், இவரைப் பார்த்து இன்னும் தா..தா..என்று கேட்குமாம்.. ஆம். அவர்வாழ்ந்த காலம் முழுதும் தமிழுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தார் என்றால் அது மிகையல்ல.
தில்லையில் கரையான் சூழ்ந்து சுவடித் துகள்களுக்கிடையில் தப்பித்தவற்றை சேகரித்து நம்பியாண்டார் நம்பி பத்தாம் நூற்றாண்டில் தேவாரப் பாடல்களைத் தொகுத்ததாய் வரலாறு சொல்கிறது. அப்போது இந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா. போன்ற சிரத்தையாளர்
இருந்திருந்தால் மீதியும் தேடிக் கொணர்ந்திருப்பாரோ என்று எனக்குத் தோன்றியது.
அவர் பிறந்த ஊர் அன்றைய தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில், “உத்தம தான புரம்” என்ற கிராமம் ஆகும்.
உ.வே.சா. அவர்கள் தமது பரம்பரை பற்றி “என் சரித்திரம்” நூலில் தரும்போது தமிழ்நாட்டு வரலாற்றையும் பின்னி எழுதுகிறார். அந்த நடை
வித்தியாசமானது. தன்வரலாறு சொல்லும்போதே தான் வாழும் சமூகத்தின், பிரதேசத்தின் வரலாற்றையும் ஒத்திசைத்து சொல்கிறார். பத்தாம் – பதினோராம் நூற்றாண்டுகளின் சோழப் பேரரசின் காலத்தில் வட நாட்டிலிருந்து பிராமணர்கள் கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டில் குடியேறிய வரலாற்றோடு உ.வே.சா. தனது பரம்பரை வரலாற்றைச் சொல்கிறார்.
சோழநாட்டில் குடியேறிய,”எண்ணாயிரத்தார்” என்ற பிராமணர்கள் குடியேற்றம் சோழர் வரலாற்றில் பதிவான செய்தியாகும். அந்த எண்ணாயிரவர் சந்ததியில் வந்தவராம்
உ.வே.சா.வின் பாட்டனார். உ.வே.சா.வின் தந்தையார் பெயர், வேங்கட சுப்பிரமணிய ஐயர். உத்தமதானபுரம் வேங்கட சுப்பிரமணியன் சாமிநாதன்தான் நமது உ.வே.சா.
“அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும்.” – உ.வே.சா.
கங்கை கொண்ட சோழபுரத்து சிவாலயத்தில் கைங்கர்யம் செய்து வந்த
கிருஷ்ண சாஸ்திரிகளின் மூன்று புதல்விகளில் மூன்றாம் பெண்ணாகிய “சரஸ்வதி” என்பாரே உ.வே.சா.அவர்களை மணிவயிறு வாய்த்த தாயார்.
உ.வே.சா. வின் குரு திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
உ.வே.சா தனது வாழ்நாளில்,”என் சரித்திரம்” தவிர்த்து மேலும் மூன்று வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒனறு, தன் குருநாதர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின்வரலாறாகும்.
உ.வே.சா. பிள்ளையவர்களிடம் மாணாக்கராகச் சேரும் முன்பு அவரைப் பற்றி தன் ஆசிரியர்கள்மூலம் நிறைய கேள்வியுற்றிருந்தார். அவரைச் சேர்ந்து தமிழ்ப் பாடம் கற்கும் வேளையை தவம் செய்து வந்தார் அந்த நாளும் வந்தது. அப்போது மீ.சு.பிள்ளை
மாயூரத்தில் (மயிலாடுதுறை) இருந்தார். இப்படி ஒரு மாணவர், இனிமேல்தான் தனக்கு பயிற்றுவிக்கப் போகும் ஆசிரியரைச் சந்தித்த தருணத்தை,”என் சரித்திர”த்தில் உ.வே.சா. பதிவு செய்வது மிக அழகு.
“பல காலமாகத் தவம்புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாஸகனைப் போல நான் இருந்தேன். அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம்போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உத்ஸாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது அத்துளி இடையிடையே அப்புலவர்பிரானுடைய தோற்றத்தை மறைத்தது. சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் விலக்கிவிட்டு அவரது திருமேனியில் உலவிய என் கண்கள் அவர் முகத்திலே பதிந்துவிட்டன.”
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் தமிழ்நாட்டில் குரு குல வாசம் செய்தே கற்கும் வழக்கம் இருந்தது. உ.வே.சா. காலத்தில் தமிழ்ப் புலவர்கள் சைவ மடங்களைச் சாரந்திருக்கும் படியான நிலையில் இருந்தது. பிள்ளை திருவாவடுதுறை ஆதினத்தின் ஆஸ்தான
வித்துவான்..! இதன்பிறகு உ.வே.சா. என்ற மேதையை, தமிழகத்தின் சிறந்த பதிப்பாசிரியரை உருவாக்கியது பிள்ளையும், திருவாவடுதுறை சைவ மட ஆதினமும்தான்.
1871 முதல் 1876 இல் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மறையும் வரையில் உ.வே.சா.அவருடன் இருந்து தமிழ் கற்றார். 1880 வரை அவர்வகித்த திருவாவடுதுறை மடத்தின் ஆஸ்தான வித்துவான் பதவியிலும் இருந்தார்.
அப்போது ஒருநாள்..
திரு. தியாகராசச் செட்டியார் மடத்துக்கு வந்தார். திரு.செட்டியார் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர்..அவரும் மகாவித்வானின் மாணவராய் இருந்தவர். இத்தகைய தியாகராசச் செட்டியார் மடத்துககு வந்து மடத்துத் தலைவர்,சுப்பிரமணிய தேசிகரைச் சந்தித்து, உ.வே.சா.வை தன்னுடன் அனுப்புமாறும், தான் ஓய்வுபெற இருப்பதால் தன் தமிழாசிரியர் பதவிக்கு இவரை அமர்த்திட விரும்புவதாகவும் விண்ணப்பித்தார்.
அக்காலத்தில் தான் வகித்த பொறுப்புக்கு தானே
தகுதியாளர் ஒருவரைத் தேர்வு செய்து கல்லூரி முதல்வரும், சக ஆசிரியர்களும் அத்தேர்வை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்… எப்படி…!
ஆனால் அப்பெரியவர்கள் தங்களுக்கிட்ட கடமையைச் செய்திட நேர்மையுடன் முனைந்தார்கள்..தியாகராசச் செட்டியார் செய்து கொடுத்த அந்த வேலை, உ.வே.சா.அவர்களை தமிழுலகத்திற்கு தந்துவிட்டது.
மற்ற ஆசிரியர்கள் இவரை சோதனை செய்த படலம் முதலில் நடந்தது…
ஆசிரியர் ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோன்றியபடி கேள்வி கேட்டுத் திருப்தியுற்றனர். அடுத்து கல்லூரி முதல்வரின் சோதனை.. உ.வே.சா. தன் சுயசரிதையில் சொல்கிறார்..
“அவர் ஒரு புஸ்தகத்தை எடுத்துப் பிரித்து என் கையில் அளித்தார். அது கம்ப ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் மந்தரை சூழ்ச்சிப் படலத்தின் ஆரம்பமாக இருந்தது. அப் பகுதியை முதலிலிருந்தே படித்துப் பொருள் சொன்னேன். கேட்ட முதல்வர் கோபால ராவ் திருப்தியுற்றுச் செட்டியாரைப் பார்த்து, “நீங்கள் சொன்னது சரி. நான் ஆக்ஷேபிக்க இடமில்லை; நீங்களும் மற்ற ஆசிரியர்களும் ஏகோபித்துச் சொல்லுவதைக் காட்டிலும் வேறு சாட்சி என்ன வேண்டும்? தங்களுடைய ‘டயம்டேபிளை’ இவரிடம் கொடுத்துவிடுங்கள். வருகிற திங்கட்கிழமை முதல் இவர் காலேஜில் வேலை
பார்க்கட்டும்” என்று சொன்னார். நேரில் சொன்ன அந்த வார்த்தைகளே எனக்குக் கிடைத்த உத்தரவு. நான் விண்ணப்பமெழுதிப் போடாமலே கிடைத்த உத்தரவு அது. எழுதாக் கிளவியாகிய அது பல வருஷங்கள் சென்றும் என் காதில் இன்னும் ஒலிக்கிறது.”
1880 அக்டோபர் 21 ஆம்நாள் உ.வே.சா. திரு. இராமசாமி முதலியார் என்ற பெருமகனைச் சந்தித்தார்.. அச்சந்திப்பு தமிழுக்கு மறுமலர்ச்சி தந்த சந்திப்பாகி விட்டது..
திரு. இராமசாமி முதலியார் அரியலூரில் இருந்து மாற்றலாகி கும்பகோணத்திற்கு முன்சீப்பாக வந்தார். (நீதிபதி). அவரைச் சென்று பார்ப்பது நல்லது என்று திருவாவடுதுறை மடத்திலிருந்து உ.வே.சா.விற்கு சொல்லப்பட அவரும் சென்று பார்த்தார். அவர்களுடைய உரையாடல் நமக்கு அன்றைய தமிழறிஞர்கள் தமிழில் என்ன பழகி வந்தார்கள் என்பதை
விளக்கிவிடுகிறது. சந்திப்பின் முடிவில் உ.வே.சா.விடம் சிந்தாமணிப் பிரதி கொடுக்கப் பட்டபோது தமிழன்னை பெருமகிழ்வு அடைந்திருப்பாள் என்றால் அது மிகை கூற்றல்ல. அதை உ.வே.சா. மொழியில் பார்க்கலாமா..
“அச்சமயம் அரியிலூரிலிருந்து சேலம் இராமசுவாமி முதலியாரென்பவர் கும்பகோணத்துக்கு முன்சீபாக மாற்றப் பெற்று வந்தார். அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டுபோய் விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்க்கையில் ஒரு புதுத் துறை தோன்றியது.தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது.
‘தமிழில் என்ன படித்திருக்கிறீர்கள்’ என்ற முதலியாரின் கேள்விக்கு உ.வே.சா..அந்தாதி¸ கலம்பகம்¸ பெரிய புராணம் கம்பராமாயணம் என்று அடுக்கினார்..முதலியார் திருப்தியுறவில்லை..
“சரி, அவ்வளவு தானே?” என்று கேட்டார். “பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா?”
“நான் சொன்னவற்றில் எவ்வளவோ பழைய நூல்கள் இருக்கின்றனவே!” என்று நான் கேட்டேன். “அவைகளுக்கெல்லாம் மூலமான நூல்களைப் படித்திருக்கிறீர்களா?” என்று அவர் கேட்டபோதுதான் அவரிடம் ஏதோ சரக்கு இருக்கிறதென்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று.
“தாங்கள் எந்த நூல்களைச் சொல்லுகிறீர்களென்று தெரிய வில்லையே?” என்றேன். “சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக் கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?”
அவர் சொன்ன நூல்களை நான் படித்ததில்லை; என்னுடைய ஆசிரியரே படித்ததில்லை. புஸ்தகத்தைக்கூட நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனாலும், ‘இவ்வளவு புஸ்தகங்களைப் படித்ததாகச் சொன்னதை ஒரு பொருட்படுத்தாமல் எவையோ இரண்டு மூன்று நூல்களைப் படிக்கவில்லை என்பதைப் பிரமாதமாகச் சொல்லவந்து விட்டாரே!’ என்ற நினைவோடு பெருமிதமும் சேர்ந்து கொண்டது. “புஸ்தகம் கிடைக்கவில்லை; கிடைத்தால் அவைகளையும் படிக்கும் தைரியமுண்டு” என்று கம்பீரமாகச் சொன்னேன்.
அவர் தம்மிடம் இருந்த சீவகசிந்தாமணிக் கட்டுப் பிரதியை என்னிடம் கொடுத்தார். “இதைப் படித்துப் பாருங்கள். கம்ப ராமாயணத்தின் காவ்ய கதிக்கெல்லாம் இந்தக் காவியமே வழிகாட்டி இதைப் படித்துப் பொருள் செய்து கொண்டு பாடம் சொல்வீர்களானால் உங்களுக்கும் நல்லது; எனக்கும் இன்பம் உண்டாகும்.”
“பிற்பாடு வருகிறேன்; இதைப் படித்துப் பார்த்துக்கொண்டே வருகிறேன்” என்று உத்ஸாகத்தோடு சொன்னேன். சீவக சிந்தாமணியின் முதல் பாடல் கடவுள் வாழ்த்து…படித்துவிட்டு, உ.வே.சா. எழுதுகிறார்.
பாடல் எளிமையாய் இருந்ததாம். ஆனால் முதலடியின் முதல் இரு சொற்களே அவருக்கு பொருள் விளங்கவில்லையாம்..”மூவா முதலா”என்பது அச்சொற்கள்.
திரு.உ.வே.சா. சிந்தாமணியை படிக்கலானார்.. சைவ மரபில் ஒழுகி வந்த இவருக்கு சமணக் காப்பியத்தின் சிந்தனைகள் தெளிவாகவில்லை…
விடுவாரோ உ.வே.சா.. கும்பகோணத்தில் சமணர்களை தேடிச் சென்று நண்பர்களாக்கி கொண்டார்.
சமண சம்பிரதாயங்களை அறிந்து கொண்டு ஆய்வைத் தொடர்ந்தார்.
சீவக சிந்தாமணிக்கு நச்சினார்க்கினியார் உரை எழுதியிருந்தார். அந்த உரையில்
விளக்கத்திற்காக மேற்கோள் காட்டியிருந்த செய்யுட் பகுதிகள் ஏராளம். அவை யாவும் இதுவரை உ.வே.சா. தெரிந்திராதவையாய் இருந்தன. ‘அவை ஒரு புதிய உலகைக் காட்டின. அவற்றின் மொழி இதுவரை பழகாததாகவும், சுவையூட்டுவதாகவும் இருந்தன..’ ஆனால் அவை எந்த நூலில் இருந்து எடுத்தவை என்ற குறிப்பு இல்லை.
நச்சினார்க்கினியார்,”என்றார் பிறரும்” என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.
சீவக சிந்தாமணியின் பாட பேதங்களைப் போக்குவதற்காய் உ.வே.சா. பழஞ்சுவடிகள் இருந்த இடங்களில் தேடி மொத்தம் 23 ஏட்டுப் பிரதிகள் கண்டெடுத்தார்..
அவற்றுடன் கிடைத்த பழஞ்சுவடிக் கட்டொன்றில் “ஏட்டுத்தொகை” என்ற தலைப்பிட்டு ஒரு சுவடிக்கட்டு இருந்தது.. அவற்றுள் கண்ட சிலபாடல்கள் சிந்தாமணி உரையில் மேற்கோளாய் இவர் பார்த்தவை என்று கண்டதும் புதையல் கிடைத்ததாய் மகிழ்ந்தார்.
அந்த ஏட்டுத் தொகை தான் எட்டுத் தொகைச் சுவடிகள்…சிந்தாமணியை பதிப்பிக்க தயாராகுமுன் பாட பேதங்களால் அவர் சிரமமுற்றதை அவர் சொற்களாலேதான் சொல்ல வேண்டும்…!
சிந்தாமணி ஆராய்ச்சி முற்றுப் பெறும் தறுவாயில் இருந்தது. அப்போது திரு. வை.தாமோதரம் பிள்ளை என்பார் உ.வே.சா.வைச் சந்தித்தார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பதிப்புலகத்தில் முக்கிய பாத்திரம் வகித்துக் கொண்டிருந்த திரு.சி.வை.தாமோதரம் பிள்ளைதான் உ.வே.சா.வைச் சந்தித்து சீவக சிந்தாமணி பதிப்பு முயற்சியின் சிரமங்களைச் சொல்லி சிந்தாமணியை தாம் பதிப்பிப்பதாகக் கூறினார்.
உ.வே.சா. மிகவும் வருந்தி, தான் மிகவும் சிரத்தை எடுத்து ஆய்வு செய்த சிந்தாமணியை எத்தனை சிரமம் ஆனாலும் தானே பதிப்பிப்பதாக கூறிவிட்டார். சிந்தாமணி பதிப்புத் தொடங்கியது.. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி அச்சேறியது. தமிழ் பதிப்புலகம் அதுவரை காணாத புதியதோர் பதிப்பு முயற்சியைக் கண்டு பிரமித்தது. பாடபேதம் களைந்த மூலப் பாடல்கள், பொழிப்புரை, விசேட உரை, குறிப்புகள் என மேம்பட்ட வடிவத்துடன் சீவக சிந்தாமணி தமிழ்கூறும் நல்லுலகிற்கு கிடைத்தது.
சீவக சிந்தாமணிப் பதிப்புக்குத் தமிழுலகில் பாராட்டுகள் குவிந்தன.
மற்ற தமிழ்நூல்களும் எம்மையும் பதிப்பியுங்களேன் என்று அவரை உந்தின.
சிந்தாமணி நச்சினினார்க்கினியார் உரைப் பிரதியில் கண்ட மேற்கோள்கள், மற்றும் சில சுவடிகளில் வேறு நூல்களில் தென்பட்டன. அவை சங்க நூல்கள் என்பதை உறுதி செய்த உ.வே.சா. அவைகளைத் தேடும் படலத்தில் இறங்கினார். திருநெல்வேலிச் சீமைக்கு சில பயணங்களை மேற்கொண்டார்..நெல்லைச் சீமையின் கவிராயர்களின் வீடுகளில் தேடினார்.. சலிப்பூட்டும் தேடல்களில் சங்கப் பாடல்களைச் சேகரித்தார்…நெல்லைப் பகுதியே அவருக்கு விஷயதானம் செய்தது..
உ.வே.சா.அவர்கள், பத்துப்பாட்டை பதிப்பித்தார். எட்டுத்தொகையில், இவரது ஆராய்ச்சியுடன் வந்த புறநானூற்று பதிப்பு, பெருங்கதை பதிப்பு, மணிமேகலை பதிப்பு முக்கியமானவை…எல்லாமே பெரிய நூலாய்வுக்குப் பின் வந்தவை..
உ.வே.சா. கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு எழுதிய நூற்றுக் கணக்கான கட்டுரைகளை காலவரிசைப்படி தொகுத்து சமீபத்தில் ப.சரவணன் வெளியிட்டுள்ளார்..
உ.வே.சா. அவர்களின் வரலாற்றை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய பணியாகும். செய்வோம்..
- gom

Comments (0)