பேனா வீரர் பிரேம்சந்த்

பேனா வீரர் பிரேம்சந்த்

வாழ்வாவது மாயம் என்று எழுதியவர்களும் எழுத்தாளர்கள்தான்; வாழ்க்கை வாழ்வதற்கே என்று முழங்கியவர்களும் எழுத்தாளர்கள் தான்; இரண்டும் கெட்டானாக, வெந்ததைத் தின்று விதி முடிந்தால் சாவோம் என்ற தோரணையிலே வளவளா சித்தாந்தங்களை வழங்கியவர்களும் எழுத்தாளர்கள்தான். இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் வாழ்ந்த உலகிலேதான் பிரேம்சந்த் – அன்பு நிலவன் என்ற எழுத்தாளரும் வாழ்ந்தார். மானுடத்தை உயர்த்துவது இலக்கியம்தான் என்று கருதிய இவர், நோய்வாய்ப்பட்ட காலத்தை, வெளியூர்ப் பயணம் மேற்கொண்டிருந்த காலத்தைத் தவிர மற்ற நேரங்களில், ஒவ்வொரு நாளும் எழுதுவதை ஒரு தவமாகக் கொண்டு தனது இறுதிக் காலம் வரை எழுதிக்கொண்டே இருந்தார். ஒருமுறை அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, எழுதுவதை நிறுத்துமாறு வேண்டியபோது, “நான் எப்படி எழுதாமல் இருக்கமுடியும்? நான் ஒரு தொழிலாளி; எனக்குத் தொழில் எழுதுவது; உழைக்காமல் உண்ண எனக்கு உரிமை இல்லை” எனக் கூறியதோடு, தன்னைப் ‘பேனா பிடிக்கும் சிப்பாய்’ என்று சொல்லிப் பெருமிதம் கொண்டவர். ‘எங்கெல்லாம் அநீதியும் அநியாயமும் தலை தூக்குகின்றதோ அங்கெல்லாம் அவற்றிற்கெதிராக மனிதநேய உணர்வை வலுப்படுத்திப் போரிடச் செய்வதுதான் இலக்கியத்தின் லட்சியமாகும் என்று உரக்கக்கூறிய எழுத்தாளர் பிரேம்சந்த். தன்பத்ராய் ஸ்ரீ வத்சவா என்பது பிரேம்சந்தின் இயற்பெயர். உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி என்ற காசிக்கு அருகில் உள்ள லாம்கி என்ற இடத்தில் 31.07.1880இல் பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1895இல் முதல் திருமணம் செய்துகொண்டார். 1905இல் சிவ்ராணி தேவி என்ற இளம் விதவையை மணந்துகொண்டார். பிரேம் சந்தின் தந்தை அஜா யப் லால், ஓர் அரசுப் பணியாளர். பிரேம் சந்தின் எட்டாவது வயதில் அவரது தாய் காலமானார். இவர்களது குடும்பம் ஒரு பெரிய கூட்டுக் குடும்பமாகும். தந்தை மறுமணம் செய்துகொண்டார். இதனால் மாற்றாந்தாயின் அலட்சியத்திற்கு ஆட்படுத்தப்பட்டார். காசியில் பள்ளியில் படிக்கும்போது, அவரது தந்தை அவருக்குச் செலவிற்குக் கொடுத்த ரூபாய் 5 போதுமானதாக இல்லாததால், ஒரு பையனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டது. 17ஆவது வயதில் இவரது தந்தை மரணமுற்றார். குடும்பச் சுமை இவர் மீது விழுந்தது. உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்தபோது சித்தி, சித்தியின் தம்பி, தனது தம்பி ஆகியோரைக் காப்பாற்றவேண்டிய கட்டாயச் சுமையை ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. மெட்ரிகுலேஷன் தேர்வில் தேறிய இவர், வறுமை காரணமாக கல்லூரியில் சேர பெரும்பாடாய்ப் போயிற்று. அப்போதும் ஒரு பையனுக்குப் பாடம் கற்பிக்கத் தொடங்கினார். தனது 19ஆவது வயதில் ஆசிரியரானார். அதனால் பொருளாதார நிலை சற்று உயர்ந்தது. அவர் உருது மொழியில் படைத்த படைப்புகளுக்குப் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இந்தியில் எழுதத் தொடங்கிய பிறகு வருமானம் அதிகரித்தது. வருமானத்தில் பெரும் பகுதி அச்சகம், பத்திரிக்கை நடத்தச் செலவிடப்பட்டதால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. புத்தக வெளியீட்டாளர்கள் உரிய பணத்தை தராமல் மோசம் செய்ததால் அச்சகத்தை மூடினார். பாதி அச்சடிக்கப்பட்ட அவரது புத்தகங்களைப் பாதி விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், வறுமையைத் தனது நித்தியத் தோழி என்று பகடியாக வர்ணிப்பார். உருது, இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் தெரிந்த இவர், அம்மொழிகளில் உள்ள ஏராளமான புத்தகங்களைப் படித்தார். பள்ளிப் பருவத்திலேயே அக்காலத்தில் வந்த பிரபலமான நாவல்களைப் படித்து முடித்துவிட்டார். கணிதம் பயிலக் காசி சென்றபோது, அங்குள்ள நூல்நிலையங்களில் கணிதத்திற்குப் பதிலாகக் கதைப் புத்தகங்களைப் படித்தார். தன் மைத்துனர் மூலமாக அலகாபாத் நூல் நிலையத்திலிருந்து நூல்களைப் பெற்றுப் படித்தார். மூன்று மொழிகளிலும் நிறையப் பத்திரிகைகள் படித்தார். அரசியல், பொருளாதாரம், சமூகவியல் இவற்றிலும் நிறைய புத்தகங்களை படித்தார். அவருடைய வாசிப்புப் பழக்கம் இறுதிவரை இருந்தது. உலகத்தின் கொடுமைகளையும் துன்பங்களையும் பார்த்த அவரால், இவை எல்லாம் கருணைமிக்க ஒரு கடவுளின் படைப்பு என்று ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நாத்திகத்தில் நாட்டம் கொண்டார். இலக்கியத்தின் மூலம் சமூகத்தைச் சீர்திருத்த, மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க ஆரம்பத்தில் முயன்றார். அடிமை நாட்டில் அரசாங்கத்தின் கீழ் பணி செய்வது அவரது மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. காந்தியடிகளின் சொற்பொழிவைக் கேட்டபிறகு, ஒத்துழையாமை இயக்கத்தில் சேர முடிவு செய்து, தனது அரசுப் பணியைத் துறந்தார். அவர் அரசுப் பதவியில் இருந்தபோதே, தூக்கிலிடப்பட்ட தியாகி குதிராம்போசின் உருவப் படத்தைத் தமது அறையில் மாட்டி வைத்திருந்தார். சமகால சமூகப் பிரச்சினைகளை எதார்த்த நோக்கோடு, இயற்கையான பாத்திரங்கள் மூலம் தம் நாவல்களிலும் சிறுகதைகளிலும் கையாண்டு, தற்கால இந்தி, உருது கதை இலக்கியத்திற்கு வித்திட்டார். 12 நாவல்களை உருது அல்லது ஹிந்தியில் எழுதி, அவற்றில் பலவற்றைத் தாமே, தாம் அறிந்த பிற மொழிகளிலும் பெயர்த்தார். 300 சிறுகதைகள், மூன்று நாடகங்கள் எழுதியுள்ளார். பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். தாழ்த்தப்பட்ட, கொடுமைக்குள்ளான, சுரண்டப்பட்ட மனிதன் அல்லது சமூகத்தின் குரலை உயர்த்திப் பிடிப்பது தமது கடமை என்று உறுதிபட நம்பி, அவற்றைத் தமது படைப்புகளில் வெளிப்படுத்தினார். ‘நம் நாட்டில் விவசாயிகளைச் சுரண்டும் ஜமீந்தார்களும் சேட்டுகளும் இருக்கக் கூடாது’ என்பதுதான் என் கம்யூனிசம் என்று உரையாடும்போது கூறியதோடு, அவற்றைத் தமது படைப்புகளில் எழுதினார். மனித நேயத்தின் வெளிப்பாடாக ஒரு நாவலில் குருட்டுப் பிச்சைக்காரனைக் கதாநாயகனாகச் சித்தரித்துள்ளார். வரதட்சணைக் கொடுமை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் பிற அநீதிகளின் காரணமாகப் பெண்கள் விலை மாதர்களாக மாறும் நிர்ப்பந்தத்தை, பொருத்தமற்ற திருமணத்தின் விளைவுகளை, சேவா சதன், நிர்மலா என்ற கதைகளில் எழுதியுள்ளார். அந்நிய ஆட்சிக்கெதிராக மக்களின் சத்யாகிரகம், மதுவிலக்குப் பிரச்சாரம், அந்நியப்பொருள் மறியல், கதர் இயக்கம், தேசபக்தர்கள் போலீஸ் தடியடிக்குள்ளாகிச் சிறை சென்று உயிர்த் தியாகம் செய்வது போன்ற நிகழ்வுகள் இவரது சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன. உபன்யாஸ் சாம்ராட், அதாவது நாவல் சக்கரவர்த்தி என்ற அடைமொழியை பிரேம் சந்திற்கு முதலில் பயன்படுத்தியவர் வங்க இலக்கியவாதி சரத் சந்திரர்.பிரேம்சந்த் சரத் சந்திரரிடம் தனது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதித் தருமாறு வேண்டியபோது, அதற்கு அவர் வங்காளத்தில் ரவீந்திரநாத் தாகூர் எழுதக்கூடிய அளவிற்கு உங்களது கதை உள்ளது. இதற்கு முன்னுரை எழுதும் தகுதி தனக்கில்லை என்றார். இதன் மூலம் பிரேம்சந்த் கதைகள் எந்த அளவிற்கு அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அறிய முடியும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பெரும் புகழ்பெற்ற இந்தி, உருது எழுத்தாளர் மட்டுமல்லாது இந்திய விடுதலைக்காகவும் விவசாயிகளுக்காகவும் தீவிரமாகவும் தீரமாகவும் போராடிய இலக்கியப் போராளி பிரேம்சந்த். 1936இல் உருவான இந்திய முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் தலைவரும் இவரே. இவரது பிறந்த தினம் இன்று.

புரட்சியின் மறுபெயர்

புரட்சியின் மறுபெயர்

இன்றைய இளைஞர்கள் பலரின் டி-சர்ட்களில் பரட்டைத் தலையும் வாயில் சுருட்டும் இதழ்களில் புன்னகையும் தாங்கிய ஒருவரின் படத்தைக் காணலாம். அவர்களில் எத்தனை பேர் அவருடைய வாழ்க்கையை, வரலாற்றை அறிந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறியோம். என் நாடு, என் மக்கள், என் இனம் என்று நம்மில் பலரும் பற்றோடு இருக்கிறோம். ஆனால், ஏகாதிபத்தியமும் சர்வாதிகாரமும் தலை தூக்கிய இடங்களிலெல்லாம் இன்று டி-சர்ட்களில் காணப்படும் தலை உயர்ந்தது. ஆம், அமெரிக்க வல்லாதிக்கத்துக்கு எதிராக, அயல் நாடுகளுக்கும் சென்று ஆயுதம் ஏந்திய புரட்சிகரப் போராளி, அமெரிக்கக் கண்டத்தில் கம்யூனிச விதைகளைத் தூவியவர். கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவின் பொதுவுடமை அரசு வளர்வதற்கு அடித்தளம் அமைத்தவர் என்று பலப்பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான சே குவேராதான் அவர். இன்று சே குவேராவின் பிறந்தநாள். எர்னஸ்டோ சே குவேரா, அர்ஜென்டினாவின் செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் 1928 ஜூன் 14ஆம் தேதி குறைப் பிரசவக் குழந்தையாகப் பிறந்தவர். மருத்துவம் படித்த இவர் டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில் விரும்பினார். கௌதமாலா நாட்டில் நடந்துவந்த ஓர் ஆட்சியை அமெரிக்க அரசாங்கம் தனது சுயநலத்துக்காகத் தூக்கி எறிந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தார். தங்களின் அரசாங்கத்தை அமெரிக்கா தூக்கி எறிந்ததைக் கண்டு பதற்றப்படாத, துணுக்குறாத கௌதமாலா மக்களின் மௌனம் மேலும் சே குவாராவை துடிக்கச் செய்தது. இந்நிகழ்வு அவரைப் புரட்சியின் பக்கம் திருப்பியது. அமெரிக்காவின் இந்த அநியாயத்தை விவரித்து, புரட்சியைத் தூண்டிப் பேசலானார். அதனால் அவருக்கு ஆபத்து வர மெக்ஸிகோவிற்கு தப்பிச் சென்றார். அந்த நேரத்தில், கியூபா நாட்டில் அமெரிக்காவின் ஆதரவில் பொம்மை ஆட்சியை நடத்திவந்த சர்வாதிகாரி பாடிஸ்டாவிற்கு எதிராக, கொரில்லா படை திரட்டிப் போராடி வந்த பிடல் காஸ்ட்ரோவை 1955இல் தனது 27 ஆவது வயதில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இருவருக்கிடையே ஒரு நட்புப் பாலத்தை வளர்த்தது. சேவின் வீரமும் கொரில்லா படை சாகசங்களும் அவரை பிடல் காஸ்ட்ரோவின் தலைமைத் தளபதியாக மாற்றின. கியூபாவை ஆண்ட பாடிஸ்டாவை வீழ்த்தி ஆட்சிப் பொறுப்பை பிடல் காஸ்ட்ராவின் கைகளில் ஒப்படைத்தார். தனது 31ஆவது வயதில் கியூபா தேசிய வங்கியின் தலைவராகி, கியூபாவின் பணத்தாளில் கையெழுத்திட்டார். தனது 33ஆவது வயதில் அமைச்சராக இருந்தபோதும் கரும்புத் தோட்டத் தொழிலாளியாகப் பல நாட்கள் கரும்பு வெட்டினார். தொழு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார். கியூபாவைப் பன்நெடுங்காலமாகச் சுரண்டிவந்த அமெரிக்க நிறுவனங்களை கியூபாவின் தேச உடமையாக்கினார். கியூபா சார்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பங்கேற்க சே சென்றபோது, பல மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் 36 வயதே ஆன இளந்தலைவரின் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருந்தனர். 1959இல் இந்தியாவிற்கு வந்திருந்த சே, அன்றைய நமது பிரதமர் நேருவுடன் நல்லெண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதை மகிழ்ச்சியுடன் பதிவுசெய்துள்ளார். அதன்பின்னர், விடுதலைக்காகப் போராடிய லத்தீன் அமெரிக்க நாடுகளின்பால் அவரது பார்வை திரும்பியது. அமைச்சர் பொறுப்பை, கட்சிப் பொறுப்பை, கியூபா நாட்டுக் குடியுரிமையை உதறிவிட்டு, காங்கோ மக்களின் விடுதலைக்காக இரண்டு ஆண்டு காலம் பாடுபட்டார். இறுதியாக பொலிவியக் காடுகளில் 16 மாத காலம், அங்கே ஆட்சி செய்துவந்த அமெரிக்காவின் பினாமி அரசாங்கத்திற்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்தினார். அமைச்சராக இருந்த ஒருவர், மீண்டும் போராளியாக மாறி யுத்தம் செய்த வரலாறு சே குவேராவிற்கு மட்டுமே உண்டு. சேகுவேராவால் ஈர்க்கப்பட்ட சின்சினா அவர் மீது காதல் கொண்டார். சே குவேராவும் காதல் வயப்பட்டார். அவர்கள் சந்தித்த போதெல்லாம் புத்தகங்களைப்பற்றிப் பேசியே பொழுதைக் கழித்தனர். சேயின் புரட்சிகர மனநிலையோடு சின்சினா தொடர முடியாத சூழலில், அவர்களது காதல் வாழ்க்கை பிரிவில் முடிந்தது. தன்னுடன் கொரில்லாப் படையில் இணைந்து போராடிய போராளி ஹில்டாவை சே மணந்தார். அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். சேகுவேரா தனக்கு ஒரு மகன் பிறந்தால் விளாடிமிர் இலியச் லெனின் என்று பெயரிட வேண்டும் என்று நினைத்திருந்தார்.ஆனால் பிறந்ததோ பெண் குழந்தை. பின்னர் முதல் மனைவியின் சம்மதத்தோடு அலெய்டா மார்ச்சை மணந்தார். ஒரு ஆண் குழந்தையும் நான்கு பெண் குழந்தைகளும் அத்தம்பதியினருக்குப் பிறந்தன. நான்காவதாகப் பிறந்த மகனுக்கு உமர்கய்யாம் என்று பெயரிட்டார் சே. சே மிகுந்த அன்புள்ளம் கொண்டவர். நாள்தோறும் மக்கள் சுரண்டப்படுவதை, அவர்கள் ரத்தம் உறிஞ்சப்படுவதைக் கண்டு கொதித்தது அவரது மனம். தன்னுயிரைத் தந்து கோடானகோடி மக்களை விடுவிக்க, தன் ரத்தத்தைச் சிந்தியவர். ஏகாதிபத்தியத்தை முற்றிலுமாக முறியடிக்க எதையும் செய்ய வேண்டும் என்ற அசையாத கொள்கை கொண்டவர். மக்களை விடுவிப்பதற்காக நிற்கும் கட்சிகள், கட்சி உறுப்பினர்களுக்குப் போர்ப் பயிற்சி தரவேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. சே குவாராவின் வாழ்க்கை தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையாக வாழப்படவில்லை. அவர் மரணத்திற்கே சவால் விட்டவர். இந்த மாவீரனின் மார்பு தோட்டாக்களால் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டபோதும் அவர் தன் இமைகளை மூடிக்கொள்ளவில்லை. கண்களைத் திறந்தபடியே மரணத்தை எதிர்கொண்டார் சே. சே குவேராவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முக்கியப் பாடம், ஆதிக்கத்தை அதன் எல்லைவரை சென்று எதிர்க்கவேண்டும் என்பதும் அந்த ஆதிக்கம் நம்மீது மட்டுமல்லாமல் எவர்மீது செலுத்தப்பட்டாலும் அங்கே நாம் நிற்க வேண்டும் என்பதுமே.

தமிழ் உள்ளவரை….

தமிழ் உள்ளவரை….

உ.வே.சா. அவர்களின் பிறந்த நாள் கட்டுரை.. இன்று உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாள். ‘பொதியமலைப் பிறந்தமொழிவாழ்வறியும் காலமெல்லாம்புலவோர் வாயில்துதியறிவாய்¸அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே!’ என்று உ.வே.சா. பற்றி மகாகவி பாரதியார்புகழ்ந்துரைக்கிறார்.. மகாகவி சொன்னது போல் அவர் இறப்பின்றி துலங்குகிறார். அரிய தமிழ் நூல்களைத் தேடியெடுத்துச் செம்மையாகப் பதிப்பித்த உ.வே.சா. எழுதிய ‘என் சரித்திரம்’ நூலுக்கு நவீனத் தமிழில் தனி இடம் உண்டு.” என்கிறார் உ.வே.சா. பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றில் திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி. உ.வே.சா. அவர்கள் தமிழ்த் தொண்டில் பழுத்த பழம். அவர் எழுதிய சுயசரிதையை சுயவரலாற்று நூலாகவும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பதிப்பு வேட்கையின் ஆவணமாகவும் மதிப்பிடலாம். திரு.உ.வே.சா. 20.02.1855 இல் பிறந்தார். முதல் இந்திய சுதந்திரப் போர் என்ற எழுச்சிக்கு (1857)இரண்டாண்டுகளுக்கு முன்பு. அதாவது பிரிட்டிஷ் இந்தியா உருவாகும் தருவாயில்..அவர் மறைந்த வருடம் 1942.. வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த ஆண்டு.. அதாவது விடுதலை இந்தியா உருவாகும் தருணம் உந்தியபோது.. இடைப்பட்ட எண்பத்தேழுஆண்டுகளில் நிறைவாழ்வு வாழ்ந்த இந்தப் பெரியவர் உ.வே.சாமிநாதய்யர் தமிழின் தொன்மையை அச்சில் கொணர்ந்து தமிழுணர்வு பேணுபவர்க்கெல்லாம் தமிழின் பெருமை பேச வாய்ப்புத் தந்தார். உ.வே.சா. என்ற இந்த மனிதர் பகலிரவு பாராமல், கண்துஞ்சாமல்,கிடைத்த வாகனத்தில் அலைந்து, கிடைக்காவிட்டால் நடந்தே சென்று, தேடித் தேடி எடுத்த தமிழ்ச் சுவடிகளை, அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, அச்சில் கொணர்ந்த பணியைச் செய்யாவிட்டால், தமிழின் தொன்மை எப்போது தெரிந்திருக்குமோ..? அல்லதுதெரியாமலும் போயிருக்கக் கூடுமோ…?classical tamil என்று ஆங்கிலத்தில் அறைகூவுகிறோம் அல்லவா.. அந்தச் “செவ்வியல் அல்லது செந்தகுதி”க்கு உரிய பழந்தமிழ் பனுவல்களை அவர் பதிப்பித்துள்ளார். தமிழ் செம்மொழி அங்கீகாரத்தைப் பெறக் காரணமாய் இருக்கும் பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் இவர் பதிப்பித்தவை.சீவக சிந்தாமணியில் தொடங்குகிறது அவர் பதிப்புப்பணி…மணிமேகலை அடுத்த சவால்..ஆச்சரியம் என்னவெனில்..ஏட்டில் கண்டேன்…அச்சில் தந்தேன் என்றில்லாமல்..ஏட்டில் கண்டதை ஆராய்கிறார்..கிடைத்த பல சுவடிகளில் பதர்களையும் போலிகளையும், அவை பெரும்பாடுபட்டு அவர் சேகரித்திருந்ததாயினும், புறக்கணித்து விட்டு உண்மைப் பாடத்தை துருவித் தர கடுமையாய் உழைத்திருக்கிறார். அவர் சுவடி தேடிய வரலாறு சொற்களால் அளவிடக் கூடியன அல்ல. கிடைத்தால் உற்றப் பெருமகிழ்ச்சி.. இல்லையேல் அடைந்த ஏமாற்றம்….அதனால் உருவான சோர்வை அவர் வெல்லப் படும்பாடு…பதிப்பின்போது அவர் அடைந்த சவால்கள்…போட்டிகள், பொறாமைகள்.. அப்புறம் அவரது பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை…எளிமையும் ரசனையும் மிக்கது.. ஒரு சான்று பார்க்கலாமா. “எங்கள் ஊரைச் சுற்றிப் பல வாய்க்கால்கள் உண்டு. குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து வரும் பெரிய வாய்க்கால் ஒன்று முக்கியமானது. பெரியவர்கள்,விடியற் காலையில் எழுந்து குடமுருட்டி யாற்றுக்குப்போய் நீராடி வருவார்கள். அங்கே போக முடியாதவர்கள் வாய்க்காலிலாவது குளத்திலாவது ஸ்நானம் செய்வார்கள். அந்நதி ஊருக்கு வடக்கே ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது. அதற்கு ஒற்றையடிப் பாதையிற்போகவேண்டும்; வயல்களின் வரப்புக்களில் ஏறி இறங்கவேண்டும்.” தமிழ்த் தாத்தா என்று முதன்முதலில் இவரை அழைத்தவர் திரு.கல்கி அவர்கள்.மகாமகோபாத்தியாய முதலான மேன்மைமிகு பட்டங்கள் பல இருந்தாலும் தமிழ் தாத்தாவே பலரும் அறியும்படி நிலைத்துவிட்டது..அதற்கு கல்கி தன் பாணியில் மூன்று காரணங்கள் சொன்னாராம்..1.வயது முதிர்வு. 2. தாத்தாவில் நடுமெய்யை எடுத்துவிட்டால், தமிழ்த் தாதா..அதாவது தமிழ் வள்ளல்…இவரைப் போல யார் தமிழுக்கு தந்திருக்க முடியும்..சரிதானே. 3.தமிழ், இவரைப் பார்த்து இன்னும் தா..தா..என்று கேட்குமாம்.. ஆம். அவர்வாழ்ந்த காலம் முழுதும் தமிழுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தார் என்றால் அது மிகையல்ல. தில்லையில் கரையான் சூழ்ந்து சுவடித் துகள்களுக்கிடையில் தப்பித்தவற்றை சேகரித்து நம்பியாண்டார் நம்பி பத்தாம் நூற்றாண்டில் தேவாரப் பாடல்களைத் தொகுத்ததாய் வரலாறு சொல்கிறது. அப்போது இந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா. போன்ற சிரத்தையாளர்இருந்திருந்தால் மீதியும் தேடிக் கொணர்ந்திருப்பாரோ என்று எனக்குத் தோன்றியது. அவர் பிறந்த ஊர் அன்றைய தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில், “உத்தம தான புரம்” என்ற கிராமம் ஆகும்.உ.வே.சா. அவர்கள் தமது பரம்பரை பற்றி “என் சரித்திரம்” நூலில் தரும்போது தமிழ்நாட்டு வரலாற்றையும் பின்னி எழுதுகிறார். அந்த நடைவித்தியாசமானது. தன்வரலாறு சொல்லும்போதே தான் வாழும் சமூகத்தின், பிரதேசத்தின் வரலாற்றையும் ஒத்திசைத்து சொல்கிறார். பத்தாம் – பதினோராம் நூற்றாண்டுகளின் சோழப் பேரரசின் காலத்தில் வட நாட்டிலிருந்து பிராமணர்கள் கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டில் குடியேறிய வரலாற்றோடு உ.வே.சா. தனது பரம்பரை வரலாற்றைச் சொல்கிறார்.சோழநாட்டில் குடியேறிய,”எண்ணாயிரத்தார்” என்ற பிராமணர்கள் குடியேற்றம் சோழர் வரலாற்றில் பதிவான செய்தியாகும். அந்த எண்ணாயிரவர் சந்ததியில் வந்தவராம்உ.வே.சா.வின் பாட்டனார். உ.வே.சா.வின் தந்தையார் பெயர், வேங்கட சுப்பிரமணிய ஐயர். உத்தமதானபுரம் வேங்கட சுப்பிரமணியன் சாமிநாதன்தான் நமது உ.வே.சா. “அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும்.” – உ.வே.சா. கங்கை கொண்ட சோழபுரத்து சிவாலயத்தில் கைங்கர்யம் செய்து வந்தகிருஷ்ண சாஸ்திரிகளின் மூன்று புதல்விகளில் மூன்றாம் பெண்ணாகிய “சரஸ்வதி” என்பாரே உ.வே.சா.அவர்களை மணிவயிறு வாய்த்த தாயார். உ.வே.சா. வின் குரு திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.உ.வே.சா தனது வாழ்நாளில்,”என் சரித்திரம்” தவிர்த்து மேலும் மூன்று வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒனறு, தன் குருநாதர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின்வரலாறாகும்.உ.வே.சா. பிள்ளையவர்களிடம் மாணாக்கராகச் சேரும் முன்பு அவரைப் பற்றி தன் ஆசிரியர்கள்மூலம் நிறைய கேள்வியுற்றிருந்தார். அவரைச் சேர்ந்து தமிழ்ப் பாடம் கற்கும் வேளையை தவம் செய்து வந்தார் அந்த நாளும் வந்தது. அப்போது மீ.சு.பிள்ளைமாயூரத்தில் (மயிலாடுதுறை) இருந்தார். இப்படி ஒரு மாணவர், இனிமேல்தான் தனக்கு பயிற்றுவிக்கப் போகும் ஆசிரியரைச் சந்தித்த தருணத்தை,”என் சரித்திர”த்தில் உ.வே.சா. பதிவு செய்வது மிக அழகு. “பல காலமாகத் தவம்புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாஸகனைப் போல நான் இருந்தேன். அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம்போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உத்ஸாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது அத்துளி இடையிடையே அப்புலவர்பிரானுடைய தோற்றத்தை மறைத்தது. சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் விலக்கிவிட்டு அவரது திருமேனியில் உலவிய என் கண்கள் அவர் முகத்திலே பதிந்துவிட்டன.” பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் தமிழ்நாட்டில் குரு குல வாசம் செய்தே கற்கும் வழக்கம் இருந்தது. உ.வே.சா. காலத்தில் தமிழ்ப் புலவர்கள் சைவ மடங்களைச் சாரந்திருக்கும் படியான நிலையில் இருந்தது. பிள்ளை திருவாவடுதுறை ஆதினத்தின் ஆஸ்தானவித்துவான்..! இதன்பிறகு உ.வே.சா. என்ற மேதையை, தமிழகத்தின் சிறந்த பதிப்பாசிரியரை உருவாக்கியது பிள்ளையும், திருவாவடுதுறை சைவ மட ஆதினமும்தான். 1871 முதல் 1876 இல் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மறையும் வரையில் உ.வே.சா.அவருடன் இருந்து தமிழ் கற்றார். 1880 வரை அவர்வகித்த திருவாவடுதுறை மடத்தின் ஆஸ்தான வித்துவான் பதவியிலும் இருந்தார். அப்போது ஒருநாள்.. திரு. தியாகராசச் செட்டியார் மடத்துக்கு வந்தார். திரு.செட்டியார் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர்..அவரும் மகாவித்வானின் மாணவராய் இருந்தவர். இத்தகைய தியாகராசச் செட்டியார் மடத்துககு வந்து மடத்துத் தலைவர்,சுப்பிரமணிய தேசிகரைச் சந்தித்து, உ.வே.சா.வை தன்னுடன் அனுப்புமாறும், தான் ஓய்வுபெற இருப்பதால் தன் தமிழாசிரியர் பதவிக்கு இவரை அமர்த்திட விரும்புவதாகவும் விண்ணப்பித்தார். அக்காலத்தில் தான் வகித்த பொறுப்புக்கு தானேதகுதியாளர் ஒருவரைத் தேர்வு செய்து கல்லூரி முதல்வரும், சக ஆசிரியர்களும் அத்தேர்வை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்… எப்படி…! ஆனால் அப்பெரியவர்கள் தங்களுக்கிட்ட கடமையைச் செய்திட நேர்மையுடன் முனைந்தார்கள்..தியாகராசச் செட்டியார் செய்து கொடுத்த அந்த வேலை, உ.வே.சா.அவர்களை தமிழுலகத்திற்கு தந்துவிட்டது. மற்ற ஆசிரியர்கள் இவரை சோதனை செய்த படலம் முதலில் நடந்தது…ஆசிரியர் ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோன்றியபடி கேள்வி கேட்டுத் திருப்தியுற்றனர். அடுத்து கல்லூரி முதல்வரின் சோதனை.. உ.வே.சா. தன் சுயசரிதையில் சொல்கிறார்.. “அவர் ஒரு புஸ்தகத்தை எடுத்துப் பிரித்து என் கையில் அளித்தார். அது கம்ப ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் மந்தரை சூழ்ச்சிப் படலத்தின் ஆரம்பமாக இருந்தது. அப் பகுதியை முதலிலிருந்தே படித்துப் பொருள் சொன்னேன். கேட்ட முதல்வர் கோபால ராவ் திருப்தியுற்றுச் செட்டியாரைப் பார்த்து, “நீங்கள் சொன்னது சரி. நான் ஆக்ஷேபிக்க இடமில்லை; நீங்களும் மற்ற ஆசிரியர்களும் ஏகோபித்துச் சொல்லுவதைக் காட்டிலும் வேறு சாட்சி என்ன வேண்டும்? தங்களுடைய ‘டயம்டேபிளை’ இவரிடம் கொடுத்துவிடுங்கள். வருகிற திங்கட்கிழமை முதல் இவர் காலேஜில் வேலைபார்க்கட்டும்” என்று சொன்னார். நேரில் சொன்ன அந்த வார்த்தைகளே எனக்குக் கிடைத்த உத்தரவு. நான் விண்ணப்பமெழுதிப் போடாமலே கிடைத்த உத்தரவு அது. எழுதாக் கிளவியாகிய அது பல வருஷங்கள் சென்றும் என் காதில் இன்னும் ஒலிக்கிறது.” 1880 அக்டோபர் 21 ஆம்நாள் உ.வே.சா. திரு. இராமசாமி முதலியார் என்ற பெருமகனைச் சந்தித்தார்.. அச்சந்திப்பு தமிழுக்கு மறுமலர்ச்சி தந்த சந்திப்பாகி விட்டது..திரு. இராமசாமி முதலியார் அரியலூரில் இருந்து மாற்றலாகி கும்பகோணத்திற்கு முன்சீப்பாக வந்தார். (நீதிபதி). அவரைச் சென்று பார்ப்பது நல்லது என்று திருவாவடுதுறை மடத்திலிருந்து உ.வே.சா.விற்கு சொல்லப்பட அவரும் சென்று பார்த்தார். அவர்களுடைய உரையாடல் நமக்கு அன்றைய தமிழறிஞர்கள் தமிழில் என்ன பழகி வந்தார்கள் என்பதைவிளக்கிவிடுகிறது. சந்திப்பின் முடிவில் உ.வே.சா.விடம் சிந்தாமணிப் பிரதி கொடுக்கப் பட்டபோது தமிழன்னை பெருமகிழ்வு அடைந்திருப்பாள் என்றால் அது மிகை கூற்றல்ல. அதை உ.வே.சா. மொழியில் பார்க்கலாமா.. “அச்சமயம் அரியிலூரிலிருந்து சேலம் இராமசுவாமி முதலியாரென்பவர் கும்பகோணத்துக்கு முன்சீபாக மாற்றப் பெற்று வந்தார். அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டுபோய் விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்க்கையில் ஒரு புதுத் துறை தோன்றியது.தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது. ‘தமிழில் என்ன படித்திருக்கிறீர்கள்’ என்ற முதலியாரின் கேள்விக்கு உ.வே.சா..அந்தாதி¸ கலம்பகம்¸ பெரிய புராணம் கம்பராமாயணம் என்று அடுக்கினார்..முதலியார் திருப்தியுறவில்லை..“சரி, அவ்வளவு தானே?” என்று கேட்டார். “பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா?”“நான் சொன்னவற்றில் எவ்வளவோ பழைய நூல்கள் இருக்கின்றனவே!” என்று நான் கேட்டேன். “அவைகளுக்கெல்லாம் மூலமான நூல்களைப் படித்திருக்கிறீர்களா?” என்று அவர் கேட்டபோதுதான் அவரிடம் ஏதோ சரக்கு இருக்கிறதென்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று.“தாங்கள் எந்த நூல்களைச் சொல்லுகிறீர்களென்று தெரிய வில்லையே?” என்றேன். “சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக் கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?”அவர் சொன்ன நூல்களை நான் படித்ததில்லை; என்னுடைய ஆசிரியரே படித்ததில்லை. புஸ்தகத்தைக்கூட நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனாலும், ‘இவ்வளவு புஸ்தகங்களைப் படித்ததாகச் சொன்னதை ஒரு பொருட்படுத்தாமல் எவையோ இரண்டு மூன்று நூல்களைப்