ஈசனின் நிர்வாணம்

ஏதோவொரு தெருக்கூத்து நாடகத்தை போல
இந்த சூரியப்பகலில் நடந்துக் கொண்டிருக்கிறேன்

ஈசனின் நிர்வாணத்தை மறைக்கும்
சாம்பலின் நிறத்தில்
எங்கோ எரியும் காட்டுத்தீயின் புகையை
மேகமாக்கி என்னிடம் இழுத்து வருகிறாய்

சலங்கை கட்டி ஆடும் கிளைகளும்
தூரத்து மண் வாசமும்
கொல்லையில் ஓயாது கத்தும் கன்றும்
ரசனையற்றவளின் கண்களில் காட்சிகளாய் விரிக்கிறாய்

பிணத்திற்கு முன்னால் ஓங்கி ஓங்கி
ஒப்பாரி வைக்கும்
ரேடியோ பெட்டியைப்போல
கேட்பாரற்று ஓரமாய் கிடக்கிறேன்

அனுமானங்களை என்னுள் நிரப்பி
வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு வியர்வையை துளிர்க்க விடுகிறாய்

முதிர்கன்னியின் மரணத்திற்கு
வயிற்றுவலிப் புனைக்கதைக் கேட்கும்
பிணத்தைப் போல
நடுவீதியில் படுத்துறங்கும் என்னுள்ளே வீசுகிறது
மரணத்திற்கான சிறு ஓலம்.

  • பவித்ரா பாண்டியராஜு

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *