கதை சொல்பவர்களாகிய நாம் வெளியே சென்று நம் இதயம் விரும்பும் இரையைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். இங்கே எல்லாம் உள்ளது; எல்லாம் உண்மை; பூமி நம் காலடியில் ஒரு சிறிய தூசி மட்டுமே.
இதைச் சொன்னவர், 1923ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் யீட்ஸ். அவருடைய பிறந்தநாள் இன்று. இவர் தனது நாட்டில் Abbey என்ற நாடக அரங்கு ஒன்றையும் நிறுவியுள்ளார். நாடக ஆசிரியராகவும் விளங்கி இவர், கலையின் பயன்பாட்டை மக்கள் குறைவாகப் பயன்படுத்துவதாக வருந்தினார்.
‘இலக்கியம் என்றால் என்ன?’ என்ற பெரும்பாலானவர்களின் கேள்விக்கு, “எழுத்துக்களின் வழியே, குறியீடுகளின் மூலமும் சம்பவங்களின் மூலமும் மனிதர்களின் மனநிலையைக் கொண்டுசெல்வதைத் தவிர இலக்கியம் என்பது வேறென்ன?!“ என்பதே இவரின் பதிலாக இருந்தது.

இவருக்கு நோபல் பரிசை வழங்கியதற்கான காரணம், “ஒட்டு மொத்த நாட்டு மக்களின் மனநிலையை, கலை வடிவில், எப்போதும் ஈர்க்கக்கூடிய அளவில் அமைந்த இவரது கவிதைகள்” என்று நோபல் கமிட்டி குறிப்பிட்டது.
“எல்லா உன்னதமான விஷயங்களும் போரின் விளைவுகள் என்று நான் நினைக்கிறேன். பெரிய தேசங்கள் மற்றும் பிரிவுகள் காணக்கிடைக்கும் உலகில், சிறந்த கவிதை மற்றும் தத்துவம் என்பது கண்ணுக்குத் தெரியாத போர்” என்கிறார் யீட்ஸ்.
டிசம்பர் 10, 1923 அன்று ஸ்டாக்ஹோம் கிராண்ட் ஹோட்டலில் நடந்த நோபல் விருந்தில் வில்லியம் பட்லர் யீட்ஸ் ஆற்றிய உரையில்,
நான் ஐரிஷ் நாடக இயக்கத்தை எனது கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்துள்ளேன், ஏனென்றால், நீங்கள் எனக்கு வழங்கிய பெரிய மரியாதையை நான் நினைவில் கொள்ளும்போது, தெரிந்த மற்றும் தெரியாத பலரை என்னால் மறக்க முடியாது. நான் நாடகங்கள் எழுதாமல் இருந்திருந்தால், வியத்தகு விமர்சனங்களை எழுதாமல் இருந்திருந்தால், எனது கவிதைகள் மேடையில் பேசும் தரத்தில் இல்லாதிருந்தால், ஒருவேளை ஆங்கிலக் குழுக்கள் எனது பெயரை உங்களுக்கு அனுப்பியிருக்காது. இது அவர்களின் திட்டமிட்ட சிந்தனையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்றாலும், எனது இயக்கத்தின் அடையாளம் இல்லாமல் இது இல்லை.
இப்போது நீங்கள் எனக்கு இந்தப் பெரிய கவுரவத்தை அளித்துள்ளீர்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பல ஐரிஷ் எழுத்தாளர்கள் ஒன்றாகச் சந்தித்து தங்கள் நாட்டின் இலக்கியம் குறித்த விமர்சனத்தைத் தொடங்கினர். மாகாணவாதத்திலிருந்து இலக்கியத்தை விடுவிப்பதன் மூலம் ஐரோப்பிய அங்கீகாரத்தைப் பெறலாம் என்பது அவர்களின் கனவாக இருந்தது. அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன், அவர்கள் இல்லையென்றால் ஒருபோதும் நான் இந்தத் தகுதியைப் பெற்றிருக்க முடியாது என்பது என் மனத்துக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டார்.
‘ஒரு ஐரிஷ் விமானஓட்டுனர் அவரது மரணத்தை முன்னறிவிக்கிறார்’ என்ற தலைப்பில் ஒரு போர்ச் சூழலில் யீட்ஸ் எழுதிய கவிதை இது.
மேகங்களின் மத்தியில் எங்கோ
என் விதியைச் சந்திப்பேன் என்று எனக்குத் தெரியும்
நான் போராடுபவர்களை வெறுக்கவில்லை
நான் அவர்களை நேசிக்காமல் காவல் காக்கிறேன்
என் நாடு கில்டார்டன் கிராஸ்
என் நாட்டு மக்கள் கில்டார்டரின் ஏழைகள்
முன்பைவிட அவர்களை மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்
எந்த முடிவும் அவர்களுக்கு வேண்டியதைக் கொண்டுவரவே முடியாது
சட்டமோ கடமையோ என்னை போராடத் தூண்டவில்லை
தனிமையின் தூண்டுதல் மேகங்களில்
இந்த ஆரவாரத்தில் விமானம் ஓட்டுகிறேன்
பொது மனிதரோ அல்லது கோபமான கூட்டமோ
அனைத்தையும் மனதில் கொண்டு சமன்செய்தேன்
வரவிருக்கும் ஆண்டுகள் மூச்சுத்திணறல் போலத் தோன்றியது
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மூச்சுச்திணறல் வாழ்க்கையுடன்
மரணம் சமநிலை செய்கிறது.
‘எந்தவொரு புத்தகத்திலிருந்தும் நான் கற்றுக்கொள்வதற்கு முன்பு, ஒரு கலை அல்லது கைவினை பற்றிய யோசனையை, பண்டைய தொழில்நுட்பங்கள் மற்றும் மர்மங்களைக் கொண்ட ஒரு வழிபாட்டு யோசனையிலிருந்து பிரிக்கமுடியாது என்பதை நான் மக்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்’ என்கிறார்
பெரும்பாலும் இவரது கவிதைகள், பிரபலமான தருணங்கள், மற்றவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிப்பவையாக உள்ளன.
நாட்டின் செனட் சபை உறுப்பினராகவும் அவர் இருமுறை பணியாற்றியுள்ளார். கலை, இலக்கியத்தின் பயன்பாடு மக்களிடம் கணிசமாக இருக்கவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்துள்ளது.
- சுதாகரன் எஸ்.
Comments (0)