காஞ்சியில் உதித்த கதிரொளி

காஞ்சியில் உதித்த கதிரொளி

காஞ்சியில் விடிந்த காலைப்பொழுதேபெரியார் கைபிடித்த கதிரொளியேசாதியக் கைமுறித்த தமிழ்வேலேதமிழ்க்கொடி யேற்றிய அறிஞனே நாவிரித்தால் தமிழும் ஆங்கிலமும்காவிரியாய்க் கரைபுரளும் நானிலமேபாவிரித்துப் பரணிபாடும் நின்புகழ்நீவிரித்த விரல்வழி தேடியோடும் ஒன்றேகுலம் ஒன்றேதேவன் – உன்வாக்குநன்றேகுலம் நன்மைசெயல் – உன்வாழ்வுகுன்றேயுயர் குணமேகொளல் -உன்வாய்மைநன்றேதமிழ் கொண்டதேவன் – நீயேஅண்ணா இறைவன் எங்குமில்லை என்றாய்இருப்பினுமவன் ஏழை சிரிப்பிலென்றாய்சாதிசமயம் மூடங்க ளென்றாய்சாதிப்போம் வாவாதம்பி யென்றாய் நீதிதேவனையே நீயாரென்று கேட்டாய்நாடாளுமன்ற நர்த்தனம் புரிந்தாய்முதலமைச்சாய் ஆளவும் செய்தாய்முடியாச்சோகம் ஆழ்த்தியே சென்றாய் நீயிருந்த காலம் பரிதியும் சிரித்ததுநீயில்லாக் காலம் புழுதியாகிப் போனதுநீயிருந்த காலம் பசியும் பறந்ததுநின்நாமம் அன்றோ நெஞ்சில் நிலைத்தது வாழிய வாழிய நின்புகழ் வாழியவேவாழிய வாழிய நின்கொள்கை வாழியவேவாழிய வாழிய எம்வழிகாட்டி வாழியவேவாழிய வாழிய அண்ணா வாழியவே!

அடித்தட்டு மக்களின் அரசியல் ஆளுமை

அடித்தட்டு மக்களின் அரசியல் ஆளுமை

அண்ணா பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை சின்ன காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை, போற்றத்தக்க ஆட்சியாளராக, அறிவார்ந்த கருத்துக் கரூவூலமாகத் திகழ்ந்தவர் என்று, தமிழ் கூறும் நல்லுலகம் அவரை அன்போடும் வாஞ்சையோடும் நினைவு கூர்கிறது. அவரிடமிருந்து பொங்கிப் பிரவாகம் எடுத்த தமிழ் ஊற்றுதான் அரசியல் வானில் விஸ்வரூபமாக எழுந்து நின்று, பேரறிஞர் அண்ணா என்று அனைவர் மனத்திலும் பதிய வைப்பதற்குக் காரணமாக இருந்தது. சொல் புதிது, பொருள் புதிது எனத் தமிழ் மொழியின் புதிய அடையாளமாகத் திகழ்ந்தார். மேடைத் தமிழுக்கு மகுடம் சூட்டினார். நல்ல தமிழ் அறிஞராக, நாவன்மைமிக்க நாவுக்கரசராக, ஆங்கிலத்தில் நாவாடுகிற பாங்கைக் கண்டு ஆங்கிலேயர்களே வியந்த வித்தகராக, வற்றாத ஊற்றெடுக்கும் எழுத்து வன்மை மிக்க ஒரு எழுத்துக்காரராக, நாடக ஆசிரியராக, நடிப்பின் மெய்ப்பாடுகளை எடுத்துரைக்கும் கலைஞனாக, அரசியலில் உச்சம் தொட்ட ஆளுமையாக, காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சராக என்று விரிந்து பரந்துகொண்டே செல்கின்றன அவரைப் பற்றிய நினைவுகள். தமிழ்த்தாயின் தலைமகனாய், தமிழினத்தின் தனித் தலைவராய், திராவிட அரசியலின் பெருந்தலைவராய்த் திகழ்ந்த அண்ணாவிடமிருந்து உதித்த சொல், செயல் அனைத்திலும் தமிழ்தான் இரண்டறக் கலந்திருந்தது. மொழிக்கும் இனத்திற்கும் அவர் காட்டிய பாதை, ஒரு சிறந்த வழித்தடத்தை ஏற்படுத்தியது. ஆகவேதான், உரிமையோடு ‘அண்ணா’ என்று அழைத்த அனைவரும் அவரது உடன்பிறப்புக்களாயினர். அண்ணாவின் அறிவு, விசாலமானது; செறிவு மிக்க உறுதிப்பாடு உடையது. ஆகவேதான், அவரைப் பேரறிஞர் என்று எல்லாரும் வழிமொழிந்தார்கள். அறிவியல், பொருளியல், உளவியல், அரசியல், வரலாறு, தத்துவம், இலக்கியம் எனப் பன்முகப் புலமை பெற்றவர். அதனால்தான், தமிழகத்தின் 20ஆம் நூற்றாண்டை அறிவு யுகமாக அவர் மாற்றிக் காட்டினார். அண்ணாவின் இலக்கிய வளத்தால், இவ்வையகம் தழைத்தது, திளைத்தது. சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை தனது எழுத்துக்களின்மூலமாக எடுத்து வைக்கும், ஒரு புதிய உத்தியை அவர் கண்டறிந்தார். அதுவே, ‘தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்’. இக்கடிதங்களை, தேநீர்க் கடைகளில் ஒருவர் படிக்க, பெரும் கூட்டமாக நின்று கேட்கும் பழக்கம் அக்காலகட்டத்தில் மிகப் பிரபலமாகும். அண்ணாவின் கடிதங்களைப் படிக்கும்வரை, சாப்பிடாமல் இருந்தவர்கள் ஏராளம் உண்டு. இவற்றோடு மாத்திரம் இல்லாமல், அண்ணாவின் நாடகங்கள், சிறுகதைகள், புதினங்கள், தமிழக மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. சௌமியன், சமதர்மன், பரதன், நக்கீரன், குறிப்போன், ஒற்றன், வீரன் என்னும் புனைப் பெயர்களில் இவரது படைப்புகள் வெளிவந்தன. பொழுதுபோக்கிற்காக இலக்கியங்கள் படித்தவர்கள் மத்தியில், சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களுக்காகவும் படிக்கும் சூழ்நிலையை இவர் உருவாக்கிக் காட்டினார். சமூகத்தில் நிலவிய மூடப் பழக்கவழக்கங்கள் மீதான சாடல், பெண்ணுரிமை, முதலாளித்துவ எதிர்ப்பு போன்றவற்றை வித்தாக, மூலக்கருத்தாக இவரது கதைகள் தூக்கிச் சுமந்தன. இவரது எழுத்துகள் எத்தகைய அழகுணர்ச்சி கொண்டவையாக எதுகையும் மோனையும் கொஞ்சி விளையாடியனவோ அதற்கேற்ப, இவரது பேச்சு ஒரு புதிய வடிவத்தோடு அனைவரையும் வசீகரித்தது. தமிழ்நாட்டு மக்களின் மாசுகளை அகற்றுவதற்காக, அவர்கள்தம் வாழ்வில் மறுமலர்ச்சியை வித்திடுவதற்காக, மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று, விடுதலை வேட்கை ஆகியவை தமிழ் மக்களிடத்தில் செழித்திடவும் செம்மாந்து நிலைத்திடவும், அவர்கள் வாழ்வு சிறந்திடவும் எத்தகைய எதிர்ப்புகளையும் கண்டு அஞ்சாது செயலாற்றி, ‘மக்கள் பணியே, மகேசன் பணி’ எனப் புதிய முழக்கத்தை நாளெல்லாம் பறை சாற்றினார். இதழ் தோறும் இதழ் உரை, கட்டுரை, மடல், ஆய்வுரை, சிறுகதை, புதினம், சிறுநாடகம், நாடகம், கவிதை, ஊரார் உரையாடல், வரலாறு, நந்திக் கலம்பகம் எனும் வடிவங்களில் மக்கள் விரும்பிச் சுவைக்கும் சுவையான கருத்துக்களை வரைந்தார். ஏனென்றால், அவரே ஒரு முறை சொல்லுகிறபோது, “நந்திக்கலம்பகம் புது முறைத் தொடராக அளிக்க எண்ணியிருக்கிறேன். கோடுகள் தயாராகிவிட்டன. விரைவில் வண்ணமும் கூட்டிட இயலும்” என்று வர்ணித்துள்ளார். இவையெல்லாம் எப்போது நிகழ்ந்தன, எப்படி நிகழ்ந்தன என எண்ணிப் பார்த்தால், நமக்கு வியப்புத்தான் மேலிடும். பிறமொழி ஆதிக்கத்தால், தமிழ்நாடு இருள் சூழ்ந்த நிலையில் இருந்தபோது, அறிஞர் அண்ணாவின் தமிழ் மொழியின் ஆற்றலால், இவையெல்லாம் நிகழ்ந்தன. ஒருமுறை விழுப்புரத்தில் அண்ணா பேசச் சென்றிருந்தார். தேர்தல் நேரம் என்பதால் பல கூட்டங்களில் பேசிவிட்டு இரவு பத்து மணிக்குத்தான் அங்கு அவரால் வர முடிந்தது. மக்கள் கண்களில் தூக்கம் தொற்றிக்கொண்டது. மேடையேறிய அண்ணா, “மாதமோ சித்திரை; மணியோ பத்தரை; மக்களுக்கோ நித்திரை; வழங்குவீர் எங்கள் சின்னத்தில் உங்கள் முத்திரை” எனப் பேச ஆரம்பித்தவுடன் மக்களின் தூக்கம் கலைந்தது. எழுந்த கரவொலி அடங்க வெகுநேரம் ஆயிற்று என்ற செய்தியைப் பலரும் அறிந்திருக்கலாம். இதுபோலவே, தென்மாவட்டத்தில் ஒரு கூட்டத்திற்குப் பேச சென்றார். அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ், அண்ணா பேசும் மேடைக்கு எதிரே, ஒரு பெண் கையில் விளக்குமாறு வைத்திருப்பதாக உள்ள படத்தை மாட்டியிருந்தனர். அதைக் கண்ட தொண்டர்கள் ஆதங்கப்பட்டனர். அவர்களை அமைதிப்படுத்திய அண்ணா இப்படிச் சொன்னார். “அவர்கள் ஒன்றும் தவறாக வைக்கவில்லை. அவர்கள் செய்யும் ஊழல்களை என்னை நன்கு விளக்குமாறு பணித்திருக்கிறார்கள்” என்றார். இதைக் கேட்ட எதிர் முகாமினர் வெட்கித் தலைகுனிந்தனர். இப்படி எண்ணற்ற அனுபவங்களை நாம் சொல்லிக்கொண்டே செல்லலாம். ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள், அண்ணாவைப் பரிகசிப்பதற்காக அவரிடம், ஏனென்றால் (Because) என்ற வார்த்தை மூன்று முறை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா? என்று கேட்டனர். அதற்கு அவர், “No sentence can begin with because, because, because is a conjunction” என்று உடனே பதிலளித்தார். இவ்வாறாக, பேச்சாற்றலில் அனைவரையும் வியக்க வைத்தவர் அண்ணா. ஆகவேதான், அவருடைய மேடைப் பேச்சுகளை, மாலைநேரக் கல்லூரிகள் என்றும் கட்டடம் இல்லாத கல்லூரிகள் என்றும் வரலாற்று வகுப்பறைகள் என்றும் புகழாரம் சூட்டினார்கள். இவை ஏதோ சில பொருள்களைத் தரும் சாதாரண சொற்றொடர்கள் அல்ல. ஒரு சமுதாயத்தை விழிக்கச் செய்து, மறுமலர்ச்சி பெறச் செய்து, புது உணர்வுகளைத் தாண்டி புதிய சமுதாயமாக ஆக்கிய ஆற்றல்மிக்க வரிகள். இவையெல்லாம் அண்ணா உதிர்த்த முத்துக்கள்; பின்னாளில் தமிழகத்தின் சொத்துக்களாயின. இந்தச் சொற்றொடர்கள் ஒவ்வொன்றும் மனோதத்துவ ஆய்வாளர்களால் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய இலக்கியக் குறியீடுகள்; மனித வாழ்விற்கு அடிப்படை இலக்கணங்கள்; தமிழக வரலாற்று அத்தியாயங்களின் தலைப்புகள்; இருபதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் அறிஞர் அண்ணாவின் இதயத் துடிப்புக்கள்; தமிழ்த் தாயின் தலைமகனின் இலட்சிய விளக்கங்கள்; தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிகரற்ற வழிகாட்டியின் வரலாற்றை விளக்கும் அடையாளங்கள்; அவருடைய வாழ்க்கை நெறிகள். ஆம், அரசியல் என்பது மற்றவர்களின் வாழ்க்கையைப் பணயம் வைத்து ஆடும் சூதாட்டமல்ல. ஆழ்ந்த அன்பும் இணையற்ற பாசமும் நிறைந்த, சகோதர உணர்வும் மனிதாபிமானமும் கலந்த ஒரு வாழ்க்கை முறை என்பதை உலகுக்கு உணர்த்திய ஒரு மாபெரும் சிந்தனையாளர் அண்ணா. தமிழ்நாட்டின் ஆறாவது முதலமைச்சரான அண்ணா, குறுகிய காலமே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே புரட்டிப் போட்டவர். அரசியல் மேடைகளைத் தமிழ் வளர்க்கும் அரங்கமாக மாற்றிக் காட்டினார். தமிழ் உள்ளத்தோடும் உணர்வோடும் ஆட்சிக்கு வந்ததால் தம் ஆட்சிக் காலத்தில் என்றுமில்லாத அளவுக்குத் தமிழை முன்னிலைப்படுத்தியே ஆட்சியை நடத்தினார். சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கி, தனது திராவிடப் பற்றை வலுப்படுத்தினார். இரு மொழிச் சட்டத்தை உருவாக்கினார். மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை, தமிழ்நாடு என்று பெயர் மாற்றி, தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். உலக வரலாற்றிலேயே, பொது வாழ்க்கைக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட ஒரு தலைவனுக்கு, அறிஞர் அண்ணாவிற்கு ஏற்பட்டது போன்ற துயரம் மிகுந்த அனுபவம் ஏற்பட்டிருக்காது. இதயத்தைத் தூளாக்கும் சொற்கள், இழிமொழிகள், வசைகள், ரத்தத்தைச் சூடேற்றும் நாராச – நரகல் நடைப் பேச்சுக்கள், அழித்து ஒழிப்பதற்கான இடைவிடாத தாக்குதல்கள், தன்னை ஆளாக்கிய தலைவனிடமிருந்து, தான் ஆளாக்கிய அன்புத் தம்பிகளிடமிருந்து எப்போதும் எதிர்க்கும் எதிரிகளிடமிருந்து என்று, அனைத்து தரப்பினருடைய தாக்குதல்களையும் தாங்கிக்கொண்டார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று பொறுமை காத்தார். மறப்போம், மன்னிப்போம் என்றார். இழைத்த கொடுமைகளை மறந்தார், மன்னித்தார். வீழ்த்த முயன்றவர்களும் வெறி பிடித்துத் தாக்குதல் தொடுத்தவர்களும் வெட்கித் தலைகுனிந்தனர். தாக்குதலையும் தழுவுதலையும் ஒன்றாகக் கருதினார். எதிர் முகாம்களில் இருக்கும் பண்பாளர்கள், தியாக உள்ளம் படைத்தவர்கள், திறமையாளர்கள், நல்லவர்கள், நாட்டுக்கு உழைத்த வித்தகர்கள், எங்கிருந்தாலும் எந்த முகாமில் இருந்தாலும் பாராட்டுகிற பண்பை வளர்த்தார். பகை, பழி, வெறுப்பு என்ற அநாகரிக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த, திராவிடத்தின் தொடக்கப் புள்ளியான அண்ணாவின் கனிவும் அவர் பிறரைக் கனியச் செய்யும் முறையும் நாம் கற்க வேண்டிய பாடங்களாகும்.  (சுவடு பதிப்பகத்தின் முதல் வெளியீடான திராவிடச் சுவடுகள் நூலில், மேனாள் அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன் எழுதியுள்ள கட்டுரை. கட்டுரைக்கான முகப்போவியம் : சுந்தரம் முருகேசன். நூல் அட்டை வடிவமைப்பு: நாநா)

புனைவுகளால் நாம் வாழ்கிறோம்

புனைவுகளால் நாம் வாழ்கிறோம்

கதை சொல்பவர்களாகிய நாம் வெளியே சென்று நம் இதயம் விரும்பும் இரையைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். இங்கே எல்லாம் உள்ளது; எல்லாம் உண்மை; பூமி நம் காலடியில் ஒரு சிறிய தூசி மட்டுமே.    இதைச் சொன்னவர், 1923ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் யீட்ஸ். அவருடைய பிறந்தநாள் இன்று. இவர் தனது நாட்டில் Abbey என்ற நாடக அரங்கு ஒன்றையும் நிறுவியுள்ளார். நாடக ஆசிரியராகவும் விளங்கி இவர், கலையின் பயன்பாட்டை மக்கள் குறைவாகப் பயன்படுத்துவதாக வருந்தினார். ‘இலக்கியம் என்றால் என்ன?’ என்ற பெரும்பாலானவர்களின் கேள்விக்கு, “எழுத்துக்களின் வழியே, குறியீடுகளின் மூலமும் சம்பவங்களின் மூலமும் மனிதர்களின் மனநிலையைக் கொண்டுசெல்வதைத் தவிர இலக்கியம் என்பது வேறென்ன?!“ என்பதே இவரின் பதிலாக இருந்தது. இவருக்கு நோபல் பரிசை வழங்கியதற்கான காரணம், “ஒட்டு மொத்த நாட்டு மக்களின் மனநிலையை, கலை வடிவில், எப்போதும் ஈர்க்கக்கூடிய அளவில் அமைந்த இவரது கவிதைகள்” என்று நோபல் கமிட்டி குறிப்பிட்டது. “எல்லா உன்னதமான விஷயங்களும் போரின் விளைவுகள் என்று நான் நினைக்கிறேன். பெரிய தேசங்கள் மற்றும் பிரிவுகள் காணக்கிடைக்கும் உலகில், சிறந்த கவிதை மற்றும் தத்துவம் என்பது கண்ணுக்குத் தெரியாத போர்” என்கிறார் யீட்ஸ். டிசம்பர் 10, 1923 அன்று ஸ்டாக்ஹோம் கிராண்ட் ஹோட்டலில் நடந்த நோபல் விருந்தில் வில்லியம் பட்லர் யீட்ஸ் ஆற்றிய உரையில், நான் ஐரிஷ் நாடக இயக்கத்தை எனது கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்துள்ளேன், ஏனென்றால், நீங்கள் எனக்கு வழங்கிய பெரிய மரியாதையை நான் நினைவில் கொள்ளும்போது, தெரிந்த மற்றும் தெரியாத பலரை என்னால் மறக்க முடியாது. நான் நாடகங்கள் எழுதாமல் இருந்திருந்தால், வியத்தகு விமர்சனங்களை எழுதாமல் இருந்திருந்தால், எனது கவிதைகள் மேடையில் பேசும் தரத்தில் இல்லாதிருந்தால், ஒருவேளை ஆங்கிலக் குழுக்கள் எனது பெயரை உங்களுக்கு அனுப்பியிருக்காது. இது அவர்களின் திட்டமிட்ட சிந்தனையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்றாலும், எனது இயக்கத்தின் அடையாளம் இல்லாமல் இது இல்லை. இப்போது நீங்கள் எனக்கு இந்தப் பெரிய கவுரவத்தை அளித்துள்ளீர்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பல ஐரிஷ் எழுத்தாளர்கள் ஒன்றாகச் சந்தித்து தங்கள் நாட்டின் இலக்கியம் குறித்த விமர்சனத்தைத் தொடங்கினர். மாகாணவாதத்திலிருந்து இலக்கியத்தை விடுவிப்பதன் மூலம் ஐரோப்பிய அங்கீகாரத்தைப் பெறலாம் என்பது அவர்களின் கனவாக இருந்தது. அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன், அவர்கள் இல்லையென்றால் ஒருபோதும் நான் இந்தத் தகுதியைப் பெற்றிருக்க முடியாது என்பது என் மனத்துக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டார். ‘ஒரு ஐரிஷ் விமானஓட்டுனர் அவரது மரணத்தை முன்னறிவிக்கிறார்’ என்ற தலைப்பில் ஒரு போர்ச் சூழலில் யீட்ஸ் எழுதிய கவிதை இது. மேகங்களின் மத்தியில் எங்கோஎன் விதியைச் சந்திப்பேன் என்று எனக்குத் தெரியும்நான் போராடுபவர்களை வெறுக்கவில்லைநான் அவர்களை நேசிக்காமல் காவல் காக்கிறேன்என் நாடு கில்டார்டன் கிராஸ்என் நாட்டு மக்கள் கில்டார்டரின் ஏழைகள்முன்பைவிட அவர்களை மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்எந்த முடிவும் அவர்களுக்கு வேண்டியதைக் கொண்டுவரவே முடியாதுசட்டமோ கடமையோ என்னை போராடத் தூண்டவில்லை தனிமையின் தூண்டுதல் மேகங்களில்இந்த ஆரவாரத்தில் விமானம் ஓட்டுகிறேன்பொது மனிதரோ அல்லது கோபமான கூட்டமோஅனைத்தையும் மனதில் கொண்டு சமன்செய்தேன்வரவிருக்கும் ஆண்டுகள் மூச்சுத்திணறல் போலத் தோன்றியதுபல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மூச்சுச்திணறல் வாழ்க்கையுடன்மரணம் சமநிலை செய்கிறது. ‘எந்தவொரு புத்தகத்திலிருந்தும் நான் கற்றுக்கொள்வதற்கு முன்பு, ஒரு கலை அல்லது கைவினை பற்றிய யோசனையை, பண்டைய தொழில்நுட்பங்கள் மற்றும் மர்மங்களைக் கொண்ட ஒரு வழிபாட்டு யோசனையிலிருந்து பிரிக்கமுடியாது என்பதை நான் மக்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்’ என்கிறார்  பெரும்பாலும் இவரது கவிதைகள், பிரபலமான தருணங்கள், மற்றவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிப்பவையாக உள்ளன. நாட்டின் செனட் சபை உறுப்பினராகவும் அவர் இருமுறை பணியாற்றியுள்ளார். கலை, இலக்கியத்தின் பயன்பாடு மக்களிடம் கணிசமாக இருக்கவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்துள்ளது.

பேசாத காரியம்

பேசாத காரியம்

பாரதியார் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை பாரதியை எத்தனைமுறை எழுதிப்பார்த்தாலும் சலிக்காது. இன்று அவனது நூற்றுநாற்பதாவது பிறந்தநாளில் அவனுடைய குருமணி நிவேதிதா தேவியுடனும் பாரதியார் கவிதைத் தொகுப்புகளில் காணக் கிடைக்காத அவனுடைய பாடல் ஒன்றுடனும் பாரதியைக் கண்டு மகிழ்வோமா? சகோதரி நிவேதிதா அயர்லாந்து தேசத்துப் பெண்மணி. சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக ஆளுமையால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தவர். பெண்களுக்கான கல்வி நிறுவனம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்ட விவேகானந்தரின் முயற்சிக்கு உதவியாக இருப்பதற்காக விவேகானந்தரால் அழைக்கப்பட்டு இந்தியா வந்தார். 1902இல் விவேகானந்தரின் மறைவுக்குப்பிறகு தேச விடுதலைக்கான புரட்சிகர ரகசிய இயக்கங்களில் அவர் ஈடுபட்டிருந்தார். 1905இல் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இந்த நிகழ்ச்சி வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் தேச பக்தர்களை ஆவேசத்தில் தள்ளியது. சுதேசி இயக்கம் வங்கத்தில் தொடங்கி தேசம் முழுவதும் பரவியது. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தளபதியாக வ.உ.சி.யும் இயக்கத்தின் பரப்புரையாளனாக மகாகவி பாரதியும் விளங்கினர். 1905 டிசம்பரில் காசி நகரில் நடந்த காங்கிரசுக்குத் தமிழ்நாட்டிலிருந்து தேசபக்தனாகவும் பத்திரிகையாளனாகவும் பாரதி சென்றிருந்தான். திரும்பும்வழியில் கல்கத்தாவில் டம்டம் பகுதிக்கு வந்திருந்த நிவேதிதாவை முதன்முதலாகச் சந்தித்தான். இந்த நிகழ்ச்சியை பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் தங்கள் படைப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பாரதி தனது வாழ்நாளில், தானே அச்சிட்டு வெளியிட்ட நூல்களில் முதல் நான்கு நூல்களை நிவேதிதா தேவிக்கே சமர்ப்பணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியார் வரலாற்றை ‘பாரதியார் சரித்திரம்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் அவரது மனைவி செல்லம்மா பாரதி. தமது குருமணியாக பாரதியார் வரித்துக்கொண்ட சகோதரி நிவேதிதாவைப்பற்றியும் அவரை பாரதி சந்தித்த வரலாற்றையும் சொல்லவந்த செல்லம்மா பாரதி அந்தக் கட்டுரைக்கு ‘குரு உபதேசம்’ என்று தலைப்பிட்டதோடு அக்கட்டுரையின் முடிவில், அந்தச் சந்திப்பை ‘ஆனந்தக் களிப்பு மெட்டில்’ பாரதியார் பாடியிருப்பதாகச் சொல்லி இந்தக் கவிதையை நமக்குத் தந்துள்ளார். ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன் – எனைச்சூதாய் தனிக்கவே சும்மா யிருத்திமுன்னே ஏதுமில்லாதே – சுகமுற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார்பற்றிய பற்றற ஒன்றே – தன்னைப்பற்றச் சொன்னார்; பற்றிப் பார்த்தவிடத்தேபெற்றதை ஏதென்று சொல்வேன் – சற்றும்பேசாத காரியம் பேசினார் தோழி’ செல்லம்மா பாரதி எழுதிய ‘பாரதியார் சரித்திரம்’ நூலில் அவர் தந்திருக்கிற இந்தக் கவிதை, பெரும்பாலான பாரதியார் கவிதைத் தொகுப்புகளில் காணக்கிடைக்கவில்லை. ஒருவேளை நம் கவனத்திற்கு வராத தொகுப்பு வேறெதிலும் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை.   இந்தக் கவிதையில் ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன்?’ என்று செல்லம்மாவிடம் வியப்போடு தொடங்குகிற பாரதி, ‘பெற்றதை ஏதென்று சொல்வேன்?’ என்ற மர்மத்துடன் தொடர்ந்து, ‘பேசாத காரியம் பேசினார் தோழி’ என்று முடிக்கிற அழகைப்பாருங்கள். மனைவியைத் ‘தோழி’ என்றழைக்கிற சமத்துவப் பாங்கினை பாரதியார் கற்ற இடம் சகோதரி நிவேதிதாவின் சந்நதியில்தான். காரியம் என்ற சொல்லுக்குச் செயல் என்றோ வேலை என்றோ பொருள் கொள்கிறோம். ‘பேசாத காரியம்’ என்பதும் அந்தச் சொல்லாடலைப் ‘பேசினார்’ என்று முடிப்பதும் எங்ஙனம்? தனது ‘ஸ்வதேச கீதங்கள்’ நூலை (1909 ஜனவரி) சமர்ப்பணம் செய்கிறவேளையில் அந்தப் ‘பேசாத காரிய’த்தின் சாயல் தொனிக்க பாரதி எழுதுவதைப் பார்க்கலாம். ‘எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு’ என்று எழுதுகிறார். ‘பேசாத காரியம்’ எதுவென்று மேற்கண்ட வரிகளில் நமக்குப் புலனாகிவிடுகிறது. அது ‘சொல்லாமல் உணர்த்துவதாம்’. மீண்டும் செல்லம்மா பாரதியிடம் வருவோம். பாரதியார் நிவேதிதா தேவியிடத்து என்ன உபதேசம் பெற்றார் என்பதைத் தன்னிடம் ‘ரொம்பவும் உணர்ச்சியுடன்’ விவரித்ததாகவும் ஆனால் அச்சம்பவத்தைத் தன்னால் ‘விரித்துக்கூற முடியவில்லை’ என்றும் செல்லம்மா எழுதியிருக்கிறார். நிவேதிதாவிடம் பாரதி பெற்ற உபதேசம் எத்தகையது என்றும் அவரது வாக்கின் மூலமாகவே அறியலாம். 1908 ஜனவரியில் தனது முதல் நூலை வெளியிட்டு, அதனைச் சகோதரி நிவேதிதா தேவிக்குச் சமர்ப்பிக்கிறபோது, ‘ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதற்கொப்ப, எனக்கு பாரத தேவியின் சம்பூர்ண ரூபத்தைக்காட்டி ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குரு’ என்று உணர்ச்சி பொங்க எழுதுகிறார். நாம் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் கவிதையில், ‘முன்னே ஏதுமில்லாதே – சுக முற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார். பற்றிய பற்றற ஒன்றே – தன்னைப் பற்றச் சொன்னார்; பற்றிப் பார்த்தவிடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற வரிகளில் அடங்கியிருக்கும் உணர்ச்சிப் பிரவாகத்தின் பொருளை இப்போது தெரிந்துகொள்ளமுடிகிறது. பாரதி, தனது குருமணி சந்திப்பின் வருணிப்பில் அதைக் கீதைக் காட்சியுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கும் ‘பாரத மாதாவின் சம்பூர்ண ருபத்தைக் காட்டி’ என்ற சொல்லாட்சியையும் நாம் தேர்ந்துகொண்ட கவிதையின் ‘பார்த்த விடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற சொற்றொடரையும் இணைத்துப் பார்க்குமிடத்து அந்தக் காட்சி எவ்வாறு இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றிவிடுகிறது. அந்தச் சந்திப்பை, பாரதியார் பற்றிய ஆய்வு நூல்களில் ஆங்காங்கே பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் எடுத்தாண்டிருக்கிற செய்திகளின் அடிப்படையில் நாம் இந்த கட்டுரைக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கவிதை வரிகளின் பேசுபொருளைத் தாண்டிவிடாத எல்லைக்குள் நின்றுகொண்டு சுவைத்துப் பார்க்கலாம். சமூகப் பிரக்ஞைமிக்க கவிஞன், தான் வாழ்ந்தகாலத்தின் பிரதியைத் தனது படைப்புகளில் பதிந்துவைக்கின்றான். தனது காலத்தில், தான் இயங்கும் கருத்துவெளியில் துலங்கித்தெரிந்த தன் சமகால ஆளுமையான சகோதரி நிவேதிதாவால் பாரதி ஆகர்சிக்கப்பட்டிருந்ததை இந்தக் கவிதையும் நிவேதிதாவுக்கு பாரதியின் ஆக்கங்களில் செய்யப்பட்டிருக்கும் சமர்ப்பணங்களும் அறுதியிட்டுக் கூறுகின்றன. இந்தக் கவிதை, உள்ளடக்கத்தில் ஒரு சம்பவத்தை விவரிப்பதுபோலத் தோன்றுவதைத் தாண்டி, பாரதி என்ற ஆளுமை செதுக்கப்பட்டதின் வரலாற்றையே பிணைத்துக்கொண்டுள்ள கதையை பாரதியே சொல்வதாகும்.  அது என்ன? 1903லேயே தேசபக்த இயக்கத்திற்கு பாரதி வந்துவிட்டதை அவன் வார்த்தைகளாலேயே அறிகிறோம். 1909இல் தான் வெளியிட்ட ‘ஜென்ம பூமி’ நூலுக்கு அவன் எழுதிய முகவுரையில் ‘சென்ற சுபகிருது வருஷத்திலே’ தேசபக்தி என்ற நவீன மார்க்கம் தோன்றியதாகவும் தான் அதில் ஈடுபட்டதாகவும்’ கூறுகிறான். சென்ற சுபகிருது வருஷம் என்று அவன் குறிப்பிடுவது 1902 ஏப்ரல் முதல் 1903 மார்ச்வரையிலான காலமாகும். இந்தக் காலத்தில் 1902 ஜனவரிவரை பாரதி காசியில் இருந்தார். ஆகவே இந்த நவீனமார்க்கத்தில் 1903 முதலே ஈடுபட்டிருந்த தேசபக்தன் பாரதி, 1905இல் வங்கத்தில் தொடங்கிய சுதேசிய இயக்கத்தில் ஈடுபட்டிருந்த விவேகானந்தரின் சீடர்கள் உள்ளிட்ட பல தேசபக்தத் தலைவர்களை நேரடியாகவும் பத்திரிகையாளனாகவும் அறிந்திருந்தான். தமிழகத்தில் அந்த சுதேசிய இயக்கத்தின் பரப்புரையாளனாக பாரதி மாறியிருந்த காலத்தில் வங்கத்தில் அந்தத் தலைவர்களில் ஒருவராக இயங்கிய நிவேதிதா தேவியை ஆர்வமுடன் சந்தித்திருக்கிறான். அந்தச் சந்திப்புபற்றி செல்லம்மா பாரதியின் கருத்துக்களை ஒட்டியே பாரதியார் வரலாற்றை எழுதிய இரா.அ.பத்மநாபன் தனது ‘சித்திர பாரதி’யில் குறிப்பிடுகிறார். பாரதியே தம்மிடம் சொன்னதாக திரு.வி.எஸ்.குஞ்சிதபாதம் என்ற பாரதி அன்பர், பாரதி – நிவேதிதா சந்திப்பை ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். இவரது கட்டுரை திரு.கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவர்கள் பதிப்பித்த ‘பாரதி விஜயம்’ தொகுப்பில் படிக்கக்கிடைக்கிறது. 1905 காசிக் காங்கிரசிலும் 1906 கல்கத்தா காங்கிரசிலும் சகோதரி நிவேதிதா அழைக்கப்பட்டு பார்வையாளராகக் கலந்துகொண்டிருக்கிறார். ஏனெனில் தீவிர இரகசிய இயக்கங்களில் ஈடுபட்டிருந்த தலைவர்களுக்கு காங்கிரசில் நேரடிப் பங்கேற்பு அக்காலத்தில் அனுமதிக்கப்படவில்லை. டம்டம் நகரில் ஒரு மாளிகையில் இரகசியக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்குச் சகோதரி நிவேதிதாவும் வந்திருந்து பேசுகிறார். பாரதியும் அவரது நண்பர்களும் அவரைச் சந்திக்கின்றனர். பாரதி சில பாடல்களைப் பாடுகிறார்.  நிவேதிதாவும் பாரதியும் உரையாடுகின்றனர். பாரதி திருமணமானவர் என்று தெரிந்துகொண்டதும் மனைவியை அழைத்து வராததன் காரணத்தைக் கேட்கிறார் நிவேதிதா. ‘அவ்விதம் பொது இடங்களில் சரிசமமாக மனைவியை அழைத்துவரும் வழக்கம் இல்லை’ என்றும் அவ்வாறு ‘மனைவியைக் காங்கிரசுக்கு அழைத்துவருவதால் பயன் என்ன கிடைக்கப்போகிறது?’ என்றும் பாரதி மிக இயல்பாகப் பதிலளிக்கிறார்.  சகோதரி நிவேதிதா கொதித்துப்போகிறார். ‘சமூகத்தில் பாதியான பெண்களை அடிமையாக வைத்துக்கொண்டே மறுபாதிமட்டும் விடுதலைபெறமுடியாது. உன்னைப்போன்ற படித்தவர்களே பெண்களோடு சமத்துவம் பேணவில்லையெனில் எப்படி இந்தத் தேசத்தில் சமூகச் சீர்திருத்தங்கள் மலரும்? பெண்களும் ஆண்களுக்கு நிகராகப் பொது இயக்கங்களில் வராதவரை இந்தத் தேசத்தின் விடுதலை சித்திக்கப் போவதில்லை’ என்றெல்லாம் பாரதியைக் கண்டித்துப் பேசுகிறார். ‘இனியேனும் மனைவியை உன் இடதுகையெனக் கருது. மனத்தில் அவளைத் தெய்வமெனப் போற்றி வா’ என்கிறார். இதைத்தான் பாரதி, ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன்’ என்று குறிப்பிடுகிறார். பிறகு நடந்ததை திரு.குஞ்சிதபாதம், பாரதி தம்மிடம் கூறியதாகத் தாம் எழுதிய கட்டுரையில் விவரிக்கிறார். ஒரு தருணத்தில் பாரதியைக் கைப்பிடித்து மாளிகைக்கு வெளியே தனியே அழைத்து வந்த நிவேதிதா, பாரதியை அங்கிருந்த ஒரு ஆலமரத்தடியில் நிறுத்தி பாரதியிடம், ‘அதோபார், பாரதமாதாவின் அற்புத தரிசனத்தை’ என்றாராம். பாரதியார் அவர் காட்டிய திசையில் பார்க்கிறார். நிவேதிதாவின் வார்த்தைகள் அத்தனைச் சக்தி மிக்கவையா என்ன! பாரதி பாரதமாதாவின் சம்பூர்ண ரூபத்தைக் காண்பதாகப் பிரமை கொள்கிறார். ‘எனைச் சூதாய் தனிக்கவே சும்மா யிருத்தி முன்னே ஏதுமில்லாதே –  சுக முற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார்.’ ‘பார்த்தவிடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற சொல்லாடல் இந்த ஆவேசப் பரவசத்தையே நம் கண்முன் நிறுத்துகிறது. ‘பாரத மாதாவின் ஆணையைக் கேட்டுக்கொள். உன் கவியாற்றலை அன்னையின் சேவைக்கே அர்ப்பணிப்பாயாக’ என்ற நிவேதிதாவின் குரல் பாரதியின் உள்ளத்தின் உள்ளே ஒலிக்கிறது. சகோதரி நிவேதிதா பாரதியைத் தொட்டுப் பிரமை கலைக்கிறார். அந்த ஆலமரத்தின் இலை ஒன்றைப் பறித்து பாரதியிடம் கையளித்தார். தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் பாரததேவியின் தொண்டிற்கே என்ற சங்கல்பம் போல பாரதி அதை வாங்கிக்கொண்டார். அந்த ஆலிலைப் பிரசாதத்தை வெகுகாலம் பாரதி பொக்கிஷம்போல் பாதுகாத்துவந்தார் என்று செல்லம்மா கூறுகிறார். ‘சற்றும் பேசாத காரியம் பேசினார் தோழி’ என்ற சொற்றொடரால் பாரதி ‘குருமணியின் தரிசன’த்தைப் பேசுகிறார். ‘அதன்பிறகு தம் உள்ளத்திலிருந்து தேசபக்தி ததும்பிக்கனிந்த பாடல்கள் வெள்ளமாய்க் கொட்டலாயிற்று’ என்றாராம் பாரதியார். நிவேதிதா தேவியுடனான சந்திப்புக்குப்பிறகு மகாகவி பாரதி தனது பாடல்களிலும் கட்டுரைகளிலும் பெண்ணியக் கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பேசிவந்தார். 1906இல் அவர் பேசியதன் வீச்சு பின்னாளில் 1920களில் பெரியாரியத்தில் பூரணம்பெற்றது என்பதை அறிகிறோம். சாதி மறுப்பு மற்றும் பெண்ணியக் கருத்துகளின் ஆரம்பம் இந்தச் சந்திப்பு என்பதை இந்தத் தருணத்தில் சிந்தித்துப் பார்க்கலாம்.

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

வ. உ. சி. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை ‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?’என்று மகாகவி பாரதி தன் கவிதையில் வ.உ.சி.யின் சிறைக் கொடுமையைப் பதிவு செய்திருக்கிறான். சமகால விடுதலை இயக்கத் தலைவனுக்குத் தமிழால் சாகாவரம் தருகிறான். அது மட்டுமல்ல, ‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்மன்னனென மீண்டான் என்றேகேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மைக் கோவே!’என்று வ.உ.சி.க்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஆறுதலாக உரைக்கின்றான். தேசத்தின் விடுதலை இயக்க வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்ற கருதுகோள், கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் மட்டுமல்ல, இந்திய தேசிய காங்கிரஸ் காலத்தில் திலகர் யுகத்திலும், தொடர்ந்த காந்தி யுகத்திலும், எம் தமிழ்நிலத்தின் பங்கே பிரதானமாக இருந்ததில் நிலை கொண்டுள்ளது.  அது இரட்டை ஆயுள்தண்டனை பெற்ற இந்தத் தியாகத் திருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் (1872-1936) வரலாற்றால் தவிர்க்க முடியாத நிரந்தரமான சான்றாக அமைந்து விடுகிறது. செப்டெம்பர் 5 என்றால் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களோடு, வ.உ.சி. பிறந்தநாள் என்பதால் அவர் பற்றியும் பள்ளிக் குழந்தைகளுக்கு அறியத் தருதல் வேண்டும். வ.உ.சி.யும் பாரதியும் மனமொப்பிய நண்பர்கள். அவர்கள் நட்பை ஆராய்கிற பாங்கில் ‘நான் கண்ட பாரதி’ என்று சிறு நூலை வ. உ. சி. எழுதியிருக்கிறார். பாரதி சுதேசிய இயக்கப் பரப்புரையாளன். தூத்துக்குடி செய்திகளைத் தனது ‘இந்தியா’ பத்திரிகையில் தொடர்ந்து எழுதுகிறான். வ.உ.சி.யின் 151-வது பிறந்த நாளில் அந்தச் செய்திகளைப் பகிர விரும்புகிறேன். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று, சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப் பெற்றது. 1882-ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டப்படி எண் 85, கிரேட் காட்டன் சாலை, தூத்துக்குடி என்ற முகவரியைப் பதிவு அலுவலகமாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் பதிவு எண் 13 of 1906. அதற்கு முன்பு, ‘சுதேசிய ஸ்டீம் கப்பல் கம்பெனி’ என்ற பெயரில் பம்பாய் ஷலைன் ஸ்டீம் கப்பல்  கம்பெனியாரிடம் இருந்து கப்பல்களை வாடகைக்கு வாங்கி இயக்கி வந்தனர். ஆங்கில அரசாங்கம் வெள்ளைக்காரர் கப்பல் கம்பெனிகளுக்குச் சார்பாக இருந்து, சுதேசிய கம்பெனி கப்பல்களுக்கு இடையூறு விளைவித்தனர். 1906 ஜூலை 7-ஆம் தேதியிட்ட ‘இந்தியா’ இதழில், ‘சுதேசிய ஸ்டீம் கப்பல் கம்பெனி’ என்ற தலைப்பில் நிருபர் செய்தி என்ற கோதாவில் பாரதி தருகிற செய்தியின் சாரம்: தூத்துக்குடியிலே அஸிஸ்டெண்ட் போலீஸ் தலைவர் மிஸ்டர் ராமசாமி நாயுடு, ஸ்டேஷன் ஆபீஸர் குருநாதய்யர், இருவரும் மாதக் கணக்கில் விடுப்பு கேட்கிறார்களாம். ஏன்? அதே ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி நாயுடுவும் சப் மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் மோஹிதீன் கான் லோடி என்பவரும் வேறு ஊருக்குப் பணி மாறுதல் கேட்கிறார்களாம். அதுவும் ஏன்? தூத்துக்குடி அஸிஸ்டெண்ட் மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் வாலர் என்பவர் வெள்ளைக் கப்பல் கம்பெனி பக்கம் சேர்ந்து கொண்டு, சுதேசிக் கப்பல் கம்பெனிக்குத் தொந்தரவு கொடுக்கிறாராம். அதனால் மேற்படி அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்ய முடியவில்லையாம். இதையெல்லாம் சொல்லிவிட்டு மேற்படி அதிகாரிகள் வாலருக்கு அஞ்சிவிடாமல் தாம் நியாயமாகப் பணிபுரிய வேண்டும் என்று அறிவூட்டுகிறார் அந்த நிருபர். மீண்டும் ஜூலை 21 இதழில் மிஸ்டர் வாலரின் சுதேசிக் கம்பெனிக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவாக எழுதுகிறார் பாரதி. ஆகஸ்டு 11 இதழில் ‘தூத்துக்குடியில் சுதேசியம்’ என்ற தலைப்பில், சுதேசிய முயற்சிகள் பலப்பட்டு வருவதை எழுதுகிறார். அதே இதழில், தென் இந்திய இரயில்வே கம்பெனியார் வெள்ளைக் கப்பல் கம்பெனியில் வர்த்தகம் செய்ய வரும் வணிகர்களுக்குக் கட்டணச் சலுகை அளித்திருப்பதை எழுதி, சீர்காழி வர்த்தகர்கள் இந்த வெள்ளைக் கம்பெனிகளின் கூட்டுச் சதியில் ஏமாறாமல் சுதேசிக் கம்பெனியுடனேயே வர்த்தகம் நடத்தியிருப்பதைப் பாராட்டுகிறார் பாரதி. செப்டெம்பர் 11 இதழில் புதிய கப்பல் கம்பெனி கனவு நிறைவேறப் போவதைத் தெரிவிக்கிறார். இந்தப் ‘புதிய சுதேசிய புகைக் கப்பல் கம்பெனி’யின் பாகஸ்தர்கள் லீகல் அட்வைசர்கள் காரியதரிசிகள் யார் யார்? என்றெல்லாம் விரிவான விவரங்களைத் தருகிறார் பாரதி. தூத்துக்குடி சுதேசிய இயக்கத்தில் வ.உ.சி.தலைவன் என்றால் பாரதி மகத்தான பரப்புரையாளன். செப்டெம்பர் 5-இல் வ.உ.சி.க்குப் பிறந்த நாள் வருகிறதென்றால், செப்டெம்பர் 11 பாரதியின் நினைவுநாள் ஆகும். இருவரையும் நினைவு கூர்வோம். இரா.கோமதிசங்கர், திருநெல்வேலி

உண்மையான சமூகநீதி நாள்

உண்மையான சமூகநீதி நாள்

பெரியார் பிறந்த செப்.17-ஆம் தேதி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பெரியார் விரும்பிய சமூக நீதி எது? அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதா? வெறும் உறுதிமொழி மட்டும் ஏற்பதா? பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பினர் இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டைப் பெற முடிந்தது. இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்தவர்களும் இன்று தங்களுக்குத் தாங்களே இட ஒதுக்கீடு வழங்கிக்கொண்டுள்ளார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டால் பலன் அடைந்தவர்கள் வேற்றுகிரகவாசிகளைப் போல நடந்துகொள்ளும் அளவிற்கு அதன் வரலாறு தெரியாமல் இருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் ஒன்றிய அரசின் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகியுள்ளது என்பது சமூகநீதித் தளத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, சமூக நீதி என்பது கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதோடு முடிந்துவிட்டதா? இதனைக் கடந்து அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டாமா? ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? மக்கள் தொகையில் சரிபாதி அளவில் உள்ள பெண்களுக்கான இடப் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? எப்போது கட்சிப் பதவிகளில் வாரிசு அரசியல் ஒழிந்து, தலைமைப் பொறுப்புகள் அனைவருக்கும் சாத்தியமாகும்? எப்போது ‘கல்வியும் மருத்துவமும் விற்பனைக்கு’ என்ற நிலை மாறி அனைவருக்கும் சமமான கல்வியும் மருத்துவமும் கிடைக்கும்? இட ஒதுக்கீட்டின் பலன் எப்போது அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும்? மிக முக்கியமாக, எப்போது பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமையாகும்? இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் தலைமுறை, “நான் இப்போது பேசுவதைக் காட்டிலும் முற்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று விரும்பிய பெரியாரின் கனவு நனவாகும் நாளே உண்மையான சமூக நீதி நாளாகும். அப்படியான ஒரு நாள் உருவாகும் வகையில், இளைய தலைமுறையை வழிநடத்துவோம் என்று உறுதியேற்றுச் செயல்படுவதே உண்மையான சமூகநீதியை நோக்கிய பயணத்தில் மற்றொரு மைல் கல்லாக இருக்கும்.