கவிதை

என்னைப் புதிதாக உணர்கிறேன்
ஏனென்று புரியவில்லையானாலும்
உங்கள் மீதான அன்பு குறைந்ததில்லை

மிகவும் அழகாகத் திகழும்
இரவுப் பயணங்களுக்குப் பின் நிகழும்
விடியல் போலவே உள்ளது
இந்தச் சமநிலை

விடிந்த பின்னரும்
சில கதைகளும்
சில பயணங்களும்
மனதிலிருந்து மறைவதில்லை

நானும் நீங்களும்
தொலைதூரத்தில் இருந்தாலும்
நாம் சந்தித்த நாட்களையெல்லாம்
நினைவுப் பூக்களாகவோ
முட்களாகவோ உணரச் செய்யும்
இனிவரும் இரவுகள்

காலம்
விரைவில் பதில் சொல்வதில்லை
இது கனவா? காதலா? நட்பா? எனும்
குழப்பத்திலேயே முடிந்துவிடாது
நம் கதை

இப்பொழுதாவது
இதைத் திறந்து படித்துப் பாருங்கள்
காகிதத்தின் உணர்வை
உங்கள் மூச்சு சுவாசிக்கும்

நான் கிளம்புவதற்கான நேரம்
நெருங்கிக்கொண்டுள்ளது
உங்களுடன்
ஒரு மிடறு தேநீர் அருந்தவோ
புகைப்படம் எடுக்கவோ
ஆசைதான்
காலமும் காத்திருக்கிறது

மீண்டுமொரு முறை
நாம் சந்திக்கும் நாட்களுக்காய்
இவ்விடத்திலிருந்து
புன்னகையுடன் பிரிகிறேன்
ஏதோவொன்றை உங்களிடம் விட்டு..

  • நா. மு. அஜித்குமார்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *