தீராக் காதல்

தீராக் காதல்

திரை விமர்சனம் நிறைவேறாத காதலின் நாயகன் கௌதமுக்கு வந்தனாவுடன் திருமணமாகி, ஐந்து வயதில் ஆர்த்தி என்கிற மகள் இருக்கிறாள். நாயகி ஆரண்யா, பிரகாஷ் என்பவனுக்கு மனைவியாக இருக்கிறாள். எதிர்பாராதவிதமாக, கௌதம் – ஆரண்யா சந்திப்பு பாலக்காடு சந்திப்பில் நிகழ்கிறது. நீருபூத்த நெருப்பாக இருந்த பழைய காதல் நினைவுகளை அச்சந்திப்பு விசிறிவிட, மீண்டும் காதல் உணர்வு தீப்பற்றிக்கொள்கிறது. விளைவு என்ன ஆனது என்பதுதான், ஜி.ஆர்.சுரேந்திரநாத்துடன் இணைந்து ரோகின் வெங்கடேசன் எழுதி இயக்கி, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள  ‘தீராக் காதல்’ தமிழ்த் திரைப்படத்தின் மொத்தக் கதை. கதை பழையது. என்ன.. அமைந்த அமைதியான வாழ்க்கையில், நிறைவேறாத காதலை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்ணை, காதலன் துரத்துவதாக இல்லாமல்,  உல்டாவாக அப்படியான ஒரு ஆணை, காதலி துரத்துவதான ‘புதுமை’.   ஆரண்யாவுக்கு வாழ்க்கை என்று இல்லாமல் போனதற்குக் காரணம், சாடிஸ்ட் கணவன் பிரகாஷ். ஆனால் அமைதியான வாழ்க்கைக்குச் சொந்தக்காரன் கௌதம். இந்நிலையில், ‘வந்தனாவை விட்டுவிட்டு வந்துவிடு’ என்று ஆரண்யா அவனைக் கேட்பதில் என்ன நியாயமோ?! “ஆரண்யா இப்ப பிரச்சனயில இருக்கா. அவ சாயறத்துக்கு ஒரு தோள் வேணும். தேவையே இல்லாம நீ பிரச்சனயில மாட்டிக்காத” என்று நண்பன் அருண் அறிவுறுத்தியும், “இங்க நடந்தத இங்கேயே மறந்துடுங்க. அதுதான் நம்ம ரெண்டுபேருக்கும் நல்லது” என்று கௌதமே ஒரு கட்டத்தில் ஆரண்யாவிடம் கூறும் தெளிவிருந்தும், அவளது பேச்சிலும் செயலிலும் அவ்வப்போது சரிந்துபோகும் பரிதாப நிலையையும் வந்தனா மற்றும் குழந்தை ஆர்த்தி மீதான பாசத்தால் குமைந்துபோவதையும் கௌதமாக வரும் ஜெய்,  தன் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். ஒருபக்கம் வாழ்ந்தும் வாழாத வாழ்க்கை, மறுபக்கம் எதிர்பாராத சந்திப்பால் அடிமனத்தில் அமிழ்ந்துபோய் மீண்டும் துளிர்த்த காதல் நினைவுகள் ஊடே சிக்கித் தவிக்கும் ஆரண்யா பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மாறுபட்ட நடிப்பை வழங்கி, அப்பாத்திரத்தையே மெருகூட்டியுள்ளது சிறப்பு. மேம்போக்கில் ‘வொர்க்காலிக்’காகத் தெரியும் வந்தனா, கணவன் கௌதம் மீதும் மகள் ஆர்த்தி மீதும் அளவில்லாத அன்பைக் கொண்டுள்ள நிலையில், அவன் வெளிப்பட்டு நிற்கும்போது, “நீங்க எல்லா பொறுக்கித்தனமும் பண்ணுவீங்க. அப்புறம் வந்து ‘சாரி’ கேட்ட உடனே, நாங்க எல்லாத்தையும் தொடச்சி எறிஞ்சிட்டு, ‘ஈ’ன்னு இளிச்சுட்டு வந்துடணும்… இதே தப்ப நான் பண்ணி இருந்தா?” என்று கொதித்து வெடிப்பதும் குழந்தை காணாமல் போகும்போது பதைத்துப் போவதுமாக, வந்தனவாக வரும் ஷிவதா நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். கௌதமின் நண்பன் அருணாக வரும் அப்துல் லீ,  “என்னடா, எரியற பல்ப முழுசா முழுங்குன மாதிரி முகம் எல்லாம் பிரகாசமா இருக்கே!” என்று சூழலைக் கலகலப்பாக வைத்திருப்பதுடன், “ஒரே வழிதான் இருக்கு. வந்தனாகிட்ட போய் உண்மையைச் சொல்லி, அவ கால்ல விழுந்துரு” என்று இடையிடையே கருத்துள்ள ஆலோசனையும் வழங்கி, மிகையில்லாத நடிப்பைத் தந்திருப்பது அருமை. ஆரண்யாவின் கணவன் பிரகாஷை, ஒரு கட்டத்தில் ஆரண்யா அறையும்போதுதான், ஓரளவுக்கு ரசிகர்கள் ஆறுதல் அடைகிற வகையில், சேடிசத்தை வெளிப்படுத்தும் கணவன் பாத்திரத்தில் அம்ஜத்கான் சோபித்துள்ளார். குழந்தை ஆர்த்தியும் (வ்ருத்தி விஷால்) இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். “என்னடா.. இந்தக் காலத்துல ஹஸ்பண்ட் வைஃப்புங்கள்லாம் நல்லவங்களா மாறிட்டாங்களோன்னு பார்த்தேன்..” (கௌதம்) “புடிச்சவங்களோட ஒரு இடத்துல இருக்கும்போது அந்த இடம் இன்னும் ரொம்ப அழகா ஆயிடுது இல்ல..?!” (கௌதம்) “என்ன மோசமான உலகம் இது கௌதம்?! சேந்து வாழ வேண்டியவங்கள எல்லாம் பிரிச்சு வெக்கறாங்க; பிரிஞ்சி வாழ விரும்பறவங்கள எல்லாம் சேத்து வெக்றாங்க” (ஆரண்யா) “என்ன பண்றது.. வேலை நடக்கணும்னா பிளைட், வேலை முடிஞ்சுச்சுடுச்சுனா ட்ரெய்ன்னு..” (கௌதம்) “எல்லாக் கம்பெனியும் ஒரே மாதிரியாதான் இருக்காங்க” (ஆரண்யா) “இங்க வந்தா ஒன்னரை மணி நேரம் முன்னாடியே உன்ன பாக்கலாமில்ல..” (ஆரண்யா) போன்ற ஜி.ஆர்.சுரேந்திரநாத்தின் வசனங்கள் அருமை. மங்களூர், மும்பை, சென்னை நகரங்களில் இரவு பகலாக வலம்வந்து அழகை வாரி இறைத்த ரவிவர்மன் நீலமேகனின் ஒளிப்பதிவு, கண்களுக்கு விருந்து. சித்து குமாரின் பின்னணி இசை அருமை. ஜி.கே.பிரசன்னாவின் படத்தொகுப்பு நிறைவு. கதையில் புதுமை இல்லை என்றாலும் கத்தி முனையில் நடக்கும் கதைக் கருவை, கீறல் இல்லாமல்  வழங்கிய விதமும் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் அர்ப்பணிப்பான பங்களிப்பும்  ரோகின் வெங்கடேசன் இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன. மதிப்பெண் : 6.5/10

மர(ற)ப்பேனா?

மர(ற)ப்பேனா?

சிறுகதை அனைத்து வலிகளையும் பொறுத்துக்கொண்டுதான் பிரசவிக்கிறாள் பெண். பெற்றெடுத்த குழந்தையின் பிஞ்சு முகத்தில் விழித்துப் பார்க்கும் அந்தக் கண்களில்தான் தன் அத்தனை வேதனைகளையும் ஒளித்து வைத்துக்கொண்டு பூரிப்பு அடைக்கிறாள். அக்குழந்தையின் முதல் சிணுங்கலில் அவளின் உணர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை ஒரு ஆண் உணர வேண்டுமென்றால், அவனும் ஒரு படைப்பாளியாக இருந்தால் மட்டுமே முடியும். படைப்பாளர்கள் தங்கள் படைப்பை எழுதி முடித்தபின் ஏற்படும் மனநிலையை ஒத்தது அந்தத் தாயின் மனது. உணர்வுகளுக்கும் மூளையின் எண்ணங்களுக்கும் இடையில் விரல்கள் படும்பாட்டை அவ்வளவு எளிதில் எந்த எழுத்தாளனாலும் கூறிவிடமுடியாது. அப்படி ஒரு மனநிலையில்தான் இருந்தேன். எழுதும்போது நான் நினைக்காத சிலவற்றையும் என் விரல்கள் எழுதியதாக உணர்ந்தேன். விரல்களும் படைப்பாளிகள்தானே! தொடுதிரை, தட்டச்சு என வந்துவிட்டாலும், மை சிந்தும் பேனா முனையும் காகிதமும் முத்தமிடும்போது வரும் நறுமணம், நாசியில் ஏறி மூளையைக் கிளறி, பற்றி எரியவிட்டு, மனத்தைக் குளிர்விக்கும். அந்த போதையை வென்ற ஒரு “….” இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. எழுதிமுடித்தபின் அந்தப் பேனா முனையைப் பார்த்துப் பொறாமைப் பட்டுக்கொண்டிருந்தேன். இந்தப் பேனா எனக்கு அவள் கொடுத்தது. அவளுக்குத் தெரியாது நான் ஒரு எழுத்தாளன் ஆவேன் என்று. இந்தப் பேனாவுக்கும்கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என் வாழ்க்கையில் பரிசாகக் கிடைத்த இரண்டாவது பேனா இது. அதன்பின் நான் யார் பேனா கொடுத்தாலும் வாங்கிக்கொள்வதில்லை. சிலரின் அன்பைத் தட்டமுடியாமல் பெற்றாலும் அதை யாருக்காவது கொடுத்துவிடுவேன்; பயன்படுத்துவது கிடையாது. இந்த இரண்டாவது பேனாவை அவளிடம் இருந்து பெற்றதற்கு ஒரு காரணம் உண்டு. இதுவும் அந்த முதல் பேனா போன்றே மரத்தாலான பேனா. என் முதல் பேனாவின் கதை எனக்குக் கோர்வையாக ஞாபகம் இல்லை. அப்போதுதான் பலப்பக் குச்சியில் இருந்து பென்சிலுக்கு மாறியிருந்தேன். ஔவையார் ஆரம்பப் பாடசாலையில் மூன்றாம் வகுப்பு. கடற்கரையை ஒட்டிய வீடு என்பதால் உப்புக் காற்றால் கறுத்துப்போன நிறம் எனக்கு. என் அம்மாவும் இதே பள்ளியில் படித்தவர் என்பதாலும் என் ஆசிரியை அவர் பள்ளிக்கால நண்பர் என்பதாலும் சற்று கவனிப்பு அதிகம்தான், எல்லாவற்றிலும். அன்று கடன் வாங்கிக் கழிப்பது பற்றிப் பாடம் எடுத்துக்கொண்டு இருக்க, அவள் தன் தந்தையோடு வந்து சேர்ந்தாள். அகண்டு விரிந்த கண்கள் அவளுக்கு. இப்போதும் நான் கண்களை மூடி அவளை நினைக்கும்போது அந்தக் கண்களை மட்டும் அப்படியே என் மனக் கண்களால் பார்க்கமுடிகிறது. ஆசிரியர் அவள் பெயரைக் கேட்க, அவளின் விரிந்த கண்கள் குளமாகிக்கொண்டிருந்தன. அவளின் தந்தைதான் ‘செண்பகம்’ என்றார். நான் இப்போது வைத்திருக்கும் இந்தப் பேனாவை எனக்குக் கொடுத்தவளை நினைத்துப் பார்த்தால், அவளின் கண்கள் என்மீது கோபத்தைக் கொட்டியதுதான் நினைவுக்கு வருகிறது. அதுவும் கல்லூரி முடித்துப் பத்து வருடங்களுக்குப் பின் ஒருநாள், வங்கி ஒன்றில் சந்திக்கும்போது தற்செயலாகப் பார்த்தேன். சலான் எழுதப் பேனா இல்லாமல் அருகில் நிற்கும் அவளிடம் கேட்கும்போதுதான் அவளைப் பார்த்தேன். மகிழ்ச்சியையும் ஆச்சிரியத்தையும் அரை விநாடி தேக்கிவைத்த அந்தக் கண்கள், கொஞ்சம் கொஞ்சமாகச் சிவந்து தீயாய் எரிவதை அமைதியாய்ப் பார்த்து ரசித்துக்கொண்டே நின்றேன். “சாந்தி… பேனா குடு; எழுதிட்டுத் தந்துடுறேன்” எனச் சொல்லும்போதே சிரித்துவிட்டேன். செண்பகம் கண்களைத் துடைத்தவாறு நான் பார்க்கும் தூரத்தில் அமர்ந்தாள். அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தாள். அருகில் போய் ஆறுதல் சொல்லி, கண்களைத் துடைத்துவிட வேண்டும் எனத் தோன்றியது. பின் ஒருநாள் அம்மாச்சி கொடுத்த மூனு பைசாவில் மதியம் சுட்ட பனங்கிழங்கு வாங்கி அவளுக்கும் கொடுத்தேன். ‘வேண்டாம்’ என்றவள், பின் வாங்கி அதை உரித்துத் தின்னத் தெரியாமல் முழித்தாள். உரித்து நார் எடுத்துக் கொடுத்தேன். ஒருநாள் வகுப்பு முடிந்து வீட்டுக்குப் போகும்போது அவளின் தந்தை எப்போதும் போல சைக்கிளில் அவளை அழைத்துப்போக வந்திருந்தார். என்னையும் ஏற்றிக்கொண்டு வீட்டில் இறக்கிவிட்டார். அப்போதுதான் தெரிந்தது, அவள் வீடு என் வீட்டுக்குப் பின்னால்தான் இருக்கிறது என்று. என் அம்மாச்சி என்றாலே ஊரில் அனைவருக்கும் பயம். எனக்கு விவரம் தெரியும்போதே என் தாத்தாவுக்குக் கண்பார்வை குறைந்துவிட்டது. ஐந்து குழந்தைகளையும் படிக்கவைத்து, வளர்த்து, கல்யாணம் செய்துவைத்து என, மொத்தக் குடும்பத்தையும் பார்த்துகொண்டு தாத்தாவையும் பார்த்துக்கொண்டாள். படிப்பறிவு இல்லாததால் யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என எல்லோரிடமும் சண்டைக்கு நின்று, பின்னர் அதுவே அவளின் குணமாகி இருக்கும் என்பதை என்னால் இப்போது உணர முடிகிறது. எங்கள் வீட்டின் பின்புறம் மல்லிகைத் தோட்டம் இருக்கும். தென்னை, வாழை, கொய்யா, எலுமிச்சை, முருங்கை என பலவகை மரங்களும் இருக்கும். அதைப் பறித்து பக்கத்தில் இருப்பவர்களுக்கு அஞ்சு காசு, பத்து காசு என விற்பதுதான் பிரதானத் தொழில் என் அம்மாச்சிக்கு. முருங்கைக்காய், கருவேப்பிலை எல்லாம் நானும் பலமுறை பறித்துக் கொடுத்திருக்கிறேன். செண்பகமும் நானும் அந்த மல்லிகைத் தோட்டத்துக்குள் கோவில் கட்டி விளையாடுவது என்பது எல்லா விடுமுறை நாட்களிலும் நடக்கும். ஒருநாள் விளையாட்டாகக் கற்களை அவள்மீது எறிய, அவள் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வீட்டில் அனைவரும் கூடிவிட்டார்கள். எனக்கு பயத்தில் உடல் நடுங்கி வியர்த்துக் கொட்டியது. அதுபோலத்தான் அன்று சாந்தியின் முகமெல்லாம் வியர்க்கத் தொடங்கியது. கோபத்தை அடக்கமுடியாமல் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள். அன்று வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லாருக்கும் முன் என்னை அறைந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. கல்லூரி படிக்கும்போது எனது இறுதி ஆண்டு வகுப்பறையின் பக்கத்தில்தான் இளங்கலை ஆங்கிலம் முதலாம் வருட வகுப்பறை. என் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்தான் அந்த ஜன்னலின் வழியே அவளைப் பார்த்தேன். என்னைப் பார்த்து, அருகில் இருக்கும் அவளின் தோழியிடம் ஏதோ சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் வகுப்பறையில் ஆசிரியரும் அப்போது இல்லை. ராகிங் செய்யும் எண்ணத்தில் நேரே உள்ளே சென்று அவளின் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். சாந்தி என எழுதி இருந்தாள். “சாந்தி… பேனா குடு.. எழுதிட்டுத் தாரேன்” என்றேன். அவள் திருதிருவென முழித்துக்கொண்டு நின்றாள். என் அம்மாச்சி, செண்பகத்தின் அப்பா, அம்மா, மாமா என இன்னும் பலர் கூடி நிற்க, நான் திருதிருவென முழித்துக்கொண்டு நின்றேன். அப்போது செண்பகம் வாதாம் மரத்தைக் காட்டி, யாரோ இந்தக் காயை அடித்துப் பறிக்கக் கல் எறிந்துவிட்டு ஓடிவிட்டதாகக் கூறி அழுதாள். நானும் அழ ஆரம்பித்தேன். அம்மாச்சியும் இன்னும் சிலரும் அசிங்க அசிங்கமாகக் கல் எறிந்தவனைத் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வார்த்தைகளுக்குள் எனக்கு மட்டும் அவர்களே தெரிந்தார்கள். இன்றுவரை அவள் மண்டையை நான்தான் உடைத்தேன் என நானும் யாரிடமும் சொல்லவே இல்லை. அவள் தலையில் மஞ்சள் தூளும் காப்பித்தூளும் வைத்து அமுக்கினார்கள் என் அம்மாவும் சித்தியும். அவளின் அப்பா சைக்கிளில் அமரவைத்து மருத்துவமனைக்குப் பறந்தார். அடுத்தநாள் சுட்ட பனம்பழத்தை அவளுக்காகப் பத்திரமாக வைத்திருந்து கொடுத்தேன். “வெட்டி நார் உரித்துக் கொடேன்” என்றாள். அதை இப்போது நினைத்தாலும் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன். சாந்தியிடம் “சாந்தி.. சாந்தி..” என முணுமுணுத்தபடி வங்கியில் சுற்றியும் கூட்டம் இருக்கிறது என்பதை உணர்த்தித் தப்பித்தேன். சாந்தி கொஞ்சம் சாந்தியடைந்ததாகத் தெரிந்தது. கண்களை ஒருமுறை மூடித் திறந்தவள், வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள், பழைய நினைவுகளையும் சேர்த்தே. தன் கைப்பையிலிருந்து மரப்பேனா ஒன்றை எடுத்து என் கையில் திணித்துவிட்டு யாரையோ தேடினாள். அந்த வகுப்பில் அனைவரும் எங்களையே பார்க்க அவள் அந்த டப்பாவைப் பல்லால் கடித்துத் திறந்து, பேனாவை எடுத்து என்னிடம் நீட்டினாள். இப்படித்தான் நிகழ்ந்தது எங்களின் முதல் சந்திப்பு. பின் அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் பேனாவைக் கேட்பாள். அல்லது, அந்தப் பேனாவைக் கேட்பதற்காகவே பார்ப்பாள். நான் ‘வா, போ’வில் இருந்து வாடி போடி வரைக்கும் வளர்ந்துவிட்டேன். ஆனால் அவள் மரியாதையைக் குறைத்து என்னைப் பெயர் சொல்லிக்கூட அழைத்ததில்லை. எங்கள் கல்லூரி இறுதி நாளும் வந்தது. சாந்தியின் கண்கள் பட்டாம்பூச்சிபோலப் படபடக்க, என் முன் வந்து நின்றாள். அவள் என்னிடம் ஏதோ சொல்ல முயன்றுகொண்டு இருந்தாள். வார்த்தைகளைத் தேடுவதைக் கண்கள் காட்டிக் கொடுத்தன. சில வார்த்தைகளை விழுங்குவதை அவள் சங்குக் கழுத்து படம்பிடித்துக் காட்டியது. ஒரு வழியாக வார்த்தைகளைக் கோர்த்து வாக்கியங்களாக்கி என்னைப் பார்த்துக் கொட்டிவிட இதழ் திறந்தாள். “இந்தா.. நீ கேட்ட உன் ராசியான பேனா..” என அவளின் கைகளில் திணித்தேன். அவள் கண்கள் சிவக்க ஏதோ சொல்லவந்தாள். செண்பகம் எதுவும் சொல்லாமல் என்னைக் காப்பாற்றினாள் என்பதாலேயே அவளை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அவளுக்கு அழிரப்பர் வைத்த பென்சில் ஒன்றைப் பரிசளித்தேன். ஒருமுறை அழகான மரப்பேனா ஒன்றை என்னிடம் கொடுத்தாள். அதில் அவள் பெயரை எழுதி முகர்ந்து பார்த்திருக்கிறேன். செண்பக வாசனை அதிலும் வந்தது. அன்று அவர்கள் மாற்றலாகி வேறு ஊர் செல்ல, அழுதபடி கை அசைத்தாள். அப்போது அவளின் அப்பா என் அருகில் வந்து, “இந்தப் பேனா எனக்கு ராசியானது. உனக்கு எப்படிக் கிடைத்தது?” எனக் கூறி, பறித்துச் சென்றுவிட்டார். அவள் தன் அப்பாவுக்குத் தெரியாமல் என்னிடம் கொடுத்திருக்கிறாள் என்பதை என்னால் அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்துகொள்ள முடியாததுதான் வாழ்க்கை. சாந்தியிடம் அன்று பேனாவைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். மீண்டும் பார்ப்பேன் என நினைக்கவே இல்லை. அன்று அவள் கடைசியாகச் சொல்ல வந்த வார்த்தையை இப்போது கொட்டப்போகிறாள் என்பது மட்டும் புரிந்தது. “டேய்… இந்தப் பேனாவாவது உன்கிட்டயே இருக்கட்டும்” என்றாள். நான் அவளையே பார்த்து நின்றுகொண்டிருக்க, நான்கு கண்களிலிருந்தும் நீர் சுரந்தது. அதன் சுவை உப்பா? இனிப்பா?

புதிய நான்

புதிய நான்

கவிதை என்னைப் புதிதாக உணர்கிறேன்ஏனென்று புரியவில்லையானாலும்உங்கள் மீதான அன்பு குறைந்ததில்லை மிகவும் அழகாகத் திகழும்இரவுப் பயணங்களுக்குப் பின் நிகழும்விடியல் போலவே உள்ளதுஇந்தச் சமநிலை விடிந்த பின்னரும் சில கதைகளும்சில பயணங்களும்மனதிலிருந்து மறைவதில்லை நானும் நீங்களும்தொலைதூரத்தில் இருந்தாலும்நாம் சந்தித்த நாட்களையெல்லாம்நினைவுப் பூக்களாகவோமுட்களாகவோ உணரச் செய்யும்இனிவரும் இரவுகள் காலம்விரைவில் பதில் சொல்வதில்லைஇது கனவா? காதலா? நட்பா? எனும்குழப்பத்திலேயே முடிந்துவிடாதுநம் கதை இப்பொழுதாவதுஇதைத் திறந்து படித்துப் பாருங்கள்காகிதத்தின் உணர்வைஉங்கள் மூச்சு சுவாசிக்கும் நான் கிளம்புவதற்கான நேரம்நெருங்கிக்கொண்டுள்ளதுஉங்களுடன்ஒரு மிடறு தேநீர் அருந்தவோபுகைப்படம் எடுக்கவோஆசைதான்காலமும் காத்திருக்கிறது மீண்டுமொரு முறைநாம் சந்திக்கும் நாட்களுக்காய்இவ்விடத்திலிருந்துபுன்னகையுடன் பிரிகிறேன்ஏதோவொன்றை உங்களிடம் விட்டு..

பாதி ஆப்பிள் விளைவு

பாதி ஆப்பிள் விளைவு

காதல் எனப்படுவது யாதெனின்.. ஒளி வீசிக்கொண்டிருந்த ஆதவன் கார்மேகக் கூந்தலுக்குள் மறைந்துகொண்டான். ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருந்த கிளைகளும் உரசி உரக்க உரையாடிக்கொண்டிருந்த இலைகளும் தங்களின் அசைவுகளை நிறுத்திக்கொண்டன. மின்கம்பங்களுக்கு இடையே தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பிகளில் கொஞ்சிக்கொண்டிருந்த காகங்கள் இரண்டு சட்டென்று சிறகை விரிந்துப் பறக்க, ஈர்ப்புவிசை மாறுதலால் துள்ளி எழும்பிக் குதித்து ஆடின மின்கம்பிகள். தன் வாலைப் பின்னங்கால்களுக்குள் உள்ளிழுத்துக்கொண்டு சாலையோரத்தில் படுத்துக்கொண்டது தெருநாய் ஒன்று. என் மனதோ விழித்துக்கொண்டது. திடீரென ஏற்படும் காலமாற்றமும் தென்றலின் தீண்டலும் வீணை நரம்புகளின் மீட்டலும் அவளின் வருகைக்கான சமிக்ஞைகளே. கருவிழிக்குள் அவளின் பிம்பம் குவியும்போதெல்லாம் என் உடலின் ஒவ்வொரு அணுவும் கனவுலகில் சஞ்சாரிக்கிறது. புத்திக்கும் மனத்திற்கும் மட்டுமல்ல, என் உடல் அணுக்களுக்கும் கனவுகாணும் சக்தியைக் கற்றுக்கொடுக்கும் வல்லமை அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் உண்டு. அவளை நினைக்கும்போதெல்லாம் உடலெங்கும் புல்லரிப்பதும் அதனால்தானே. இதனை விஞ்ஞானம் என்பதா அல்லது என் மெய்ஞானம் என்பதா? இது உன்மீது நான் கொண்ட காதலா? அல்லது என் பருவ வயதின் காமமா? குயில்கள் கூவுவதும் மயில்கள் தோகையை விரித்தாடுவதும் மலர்கள் மலர்ந்து மணம் பரப்புவதும் தன் இணையைக் காமத்திற்கு அழைக்கும் காதலன்றி வேறேது? இந்தக் காதல் என்னும் ரசாயன மாற்றம் மனிதர்களுக்கு மட்டுமானதா என்ன?   அவளின் சுவாச ஒலி என் செவிகளுக்குள் புது ராகம் பாடியது. அவளின் வாசம் என் சுவாச மலர்களை மலரச் செய்தது. தடையின்றிச் சுரந்த உமிழ் நீரை முழுவதுமாய் விழுங்கமுடியவில்லை. அது தொண்டைக்குள் உருளும் உருண்டைக்குள் சிக்கிக்கொண்டது. முதலாம் புலனுறுப்பான என் விழிகள் அவள் வரும் திசையைத் தேடின. அவளின் நெளிந்து சுருண்டு காற்றில் ஆடும் காதோரத்துக் கூந்தலோ, இடது வில் புருவத்தின்மீது தவம் செய்யும் மச்சமோ, குவிந்த செவ்விதழ்களின்மீது தீட்டிய ஓவியத்தை ஒத்த ரேகைகளோ, சங்குக் கழுத்தினில் தொங்கியபடி ஊஞ்சலாடும் முத்து மாலையோ, ஏதோ ஒன்று எந்தன் பித்தம் தலைக்கேற்றும் வித்தையைக் கற்றறிந்திருக்கிறது. அன்பு, பாசம், நேசம், விருப்பம், நட்பு எனப் பல சொற்கள் தமிழில் இருந்தாலும் காதல் என்ற சொல் புதிதாய் ஏன் வந்திருக்கும்? பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ இல்லாத ஒரு உணர்வு மனிதர்களுக்கு மட்டுமா உள்ளது? மனிதனைத் தவிர மற்றவற்றுக்குக் காமம் என்பது பசியைப்போல, உறக்கத்தைப் போல எப்போதாவது ஏற்படும் உடலின் தேவைதானே.. பசி வரும்போது வேட்டையாடுவதைப்போல, காமமும் உணர்வெழுச்சியின்போது மட்டுமே. அவை அனைத்து நேரங்களிலும் காமத்தைத் தூக்கிச் சுமப்பதில்லை, நம்மைப்போல. மொட்டுகள் மலர்வது வண்டினங்களுக்குத் தெரிந்துவிடும்தானே.! அவளை நான் உணர்வதும் அதுபோலத்தான். வண்டினங்களின் பசிதான் மலர்களில் தேன் உண்பதெனில், அதில் காமம் ஏது? காதல்தான் ஏது? மலர்கள் உணவுதானெனில் அவளை நான் மலரோடு பொருத்திப் பார்ப்பது தவறல்லவா? காம உணர்வு மனிதனை மட்டும் எல்லா நேரத்திலும் ஆட்கொள்வது ஏன்? மனிதன் ஆடைகொண்டு தேகத்தை மறைக்கவேண்டியதும் அதனால்தான் தோன்றியதாம். பருவம் வந்ததும் நம் மூளையில் எப்போதுமே காமச் சுரபிகள் சுரந்துகொண்டேதான் இருக்கின்றன. பசி, தூக்கம் மறந்தும் காமத்தில் திளைத்திருக்க நம்மால் முடிகிறது. காமத்தை மறைக்கும் ஆடையை நெய்வதென்பது மனிதனால் முடியாத ஒன்றாய் இருக்கிறது. உலகில் இருக்கும் அனைத்தும் நமக்காகத்தான் என அபகரித்த மனிதனால், சக மனிதனை அபகரிக்க முடியவில்லை. பசிக்கு உணவு கிடைப்பதுபோல காமப்பசியை எளிதில் தீர்த்துக்கொள்ள முடியாது தவிக்கிறான். பலம்கொண்ட வர்க்கம், பலம் குறைந்த வர்க்கத்தை அடிமையாக்கக் கற்றுக்கொண்டது. இருவரும் ஒருவருக்கொருவர் காமப் பசியைப் பகிர்ந்துகொள்ள இந்த ஆண்டான் அடிமை உறவு கைகொடுக்கவில்லை. காமம் என்னும் கட்டில் முற்களாலும் பாறைகளாலும் செய்யப்பட்டிருந்தன. வலியும் வேதனையும்தான் புணர்வு தருமெனில் அதை ஏன் மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டே இருக்கிறான்? இவை அனைத்திற்கும் பதில் தேடும் முயற்சிதான் காதல். காதல் எனப்படுவது.. காதல் என்பது ஓர் கற்பனை ஒழுங்குவாதம். புணர்தலையும் புணர்வுச் சிந்தனையையும் மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றவே காதல் என்ற ஒன்றை நம்பவேண்டியிருக்கிறது. காதலும் கடவுளும் ஒன்றுதான் போல. நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கு சில வரைமுறைகளை வகுத்துக்கொள்ளத்தான் கடவுள் நம்பிக்கை என்னும் கற்பனை ஒழுங்குவாதம் தேவைப்படுகிறது. அதுபோல, காமத்திற்குக் காதல் தேவைப்படுகிறது. இதோ கார்மேகங்களின் புணர்வில் முதல் துளி மண் சேர, மண் வாசம் மணக்கத் தொடங்கிவிட்டது. அவளை ஆரவாரமாய் வரவேற்கத் தொடங்கிவிட்டது. என் இதயமும் படபடக்க, சாரல் மழை என் மேனி நனைக்க, உள்ளுக்குள்ளும் நனையத் தொடங்குகிறேன். என் இமைகள் பட்டாம்பூச்சியாய்த் துடிக்கின்றன, அவளின் கடைக்கண் பார்வைக்காக. எளிய மொழியில் சொன்னால், காதல் என்பது உருட்டு மட்டுமே. உருட்டுவதாலேயே காதல் உயிர்வாழ்கிறது. எல்லாம் ஏவாள் கடித்துக் கொடுத்த பாதி ஆப்பிளின் விளைவு என்ற உருட்டைப்போலவே.

சாகாவரம் தேடு

சாகாவரம் தேடு

என் மனதுள் நுழையமுனைந்து முனைந்து என்னால்விரட்டப்படாமல்வாசலில் நிற்பவனே!! உனது அன்பின் ஆழம்மாவலி கங்கையின் நீளத்திலும்நீளமானதுஅறிவேன் நன்கு. என் விழிகளில் விழி நுழைத்துமுகம் புகழ்ந்துபருவத்தின் மீது புராணம் பாடிபாதச்சுவடுகளின் மீதுலவுகிறாய் என் செய்வேன்?உன் மீதுபரிதாபம் மட்டுமேபட முடிகிறது உலகம் நானென்கிறாய் – உலகவிந்தை நானென்கிறாய்கவிதைகளும் காட்சிகளும்அனைத்தின்பமும் நானென்கிறாய்எத்தனை பொய்!!! பகலின் இரவுகளில்நாடு கடத்தப்பட்டுகாடுகளின் சுதந்திரச் சிறைகளில்மனித இயந்திரங்களாய்இருநூறாண்டுகள் இருளுக்குள் உழலும் மக்கள்கூட்டத்திலிருந்துஎழுந்து வந்தவன் நீநினைவுகளை ஞாபகத்திற்கழை. எவனெவன் வாழ்வுக்கோ உதிரம் சிந்திஉழைத்து மரிக்கும்அறியாமைகளுக்குஉனை விட்டால் ஒளிப்பிழம்பு யார்? உலக விழிகளால்மறுதலிக்கப்பட்ட அந்த உலகம்உன்னிடம் எதையெதையோபார்த்திருக்கிறது!!! அதன்காய்ந்து வறண்டதொண்டைகளில்தாகம் ஏக்கம்பசி கனவு! விழிகளுக்கு மிக அருகாமையில்விழித்து நிற்கும்பொறுப்புகள் கடமைகள் துறந்துமேல் வர்க்க இளைஞனாய்வாலிபத்தைசல்லாபத்தி லிடுகிறாய். எத்தனைத் துயரேற்றாள்உன் தாய் உனை ஈன; உனை வளர்க்க??எத்தனை இடர் கடந்தார்உன் தந்தை நீ பள்ளி செல்ல??எத்தனை துன்பமுற்றமக்கள் கூட்டம் உன் மண்ணில்?? விருப்பமில்லா விடுமுறையில் உன்ஏழையூர் விரைகையில்அம் மலையக மனிதரின் விழிகளில்இல்லாமையும் இயலாமையும்இணைத்திசைக்கும்துயர கீதங்களைக்கேட்டிருக்கிறாயா? ஒழுகும் கூரைகளின் கீழ்உறக்கங்களை வழியவிட்டஇரவுகளின் அழுகையொலிகள்எட்டியிருக்கறதா உன் செவிகளுக்கு? பசுமை அடர்ந்த உயர்ந்த மண்ணில்தாழ்வுடைய வறண்டவாழ்வின் சுமைகளைத்தராசிலிட்டிருக்கிறாயா? இனத்தால் பொருளால்சாதியால் நிறத்தால்விலக்கப்பட்டவர்களுக்குவிடுதலைக்காய் முழங்கப்போகும்குரல் யாருடையது?? பரம்பரையைப் பரிசளித்து வளர்த்தமண்ணை மூழ்கடிக்கும்அதிகாரங்களுக்கெதிராய்நிமிர்வது யார்??விடைகாணா வினாக்கள்ஆயிரமிருக்க நீயோ…..வலிமையை இளமையைஎன் நடைபாதையெங்கும்பூக்கள் விரிக்கச் சிந்திக் கொண்டிருக்கிறாய் இளமையின் சுகிப்பைவியர்வையூரியகருப்பு மண்தந்த எழுத்துக்களால்அலங்காரப்படுத்துகிறாய். எப்போது அவர்களின்அழுகை தடுக்கும்ஆயுதம் செய்ய உன் அறிவைக்கருவாக்கப் போகிறாய்??? இங்கு உன்னையும் என்னையும்இணைத்த இப்பெரும்பல்கலைகழக மெனும்அறிவாலயம்மனிதர்களுக்கான மனிதர்களைஉரு செய்யவே உழைக்கிறது. இங்கு மனிதனாவது சாதரணம்!மனிதர்களுக்கான மனிதராவதேசாகாவரம். நீசாகாவரம் பெறுஅப்போதுஉன் காதல்மறுபரிசீலனைக்குட்படலாம்!! ஏனெனில்நான் நம் மண்ணையும் மக்களையுமேசிந்தித்துக் கொண்டிருக்கிறேன் எஸ்தர், மலையகம், இலங்கை

பிர்ச்மரக் காடுகள்

பிர்ச்மரக் காடுகள்

குளிர்காலச் சிறுவெயிலின் கதகதப்பான காலையில் நீயும் நானுமாய் கைகோர்த்துச் செல்லும் நடைகளிலே பேசித்தீர்க்கும் கணங்களும்  பின் மௌனமாய் உன் தோள் சாய்ந்து நடக்கும்  அழகான நேரங்களும்  நமது பாதையை நீளச்செய்ய இதோ இங்கே வலிமையாய் உயர்ந்திருப்பவை  பிர்ச் மரங்கள் மட்டுமல்ல – வலுவாய்நம் நேசமும்தான்…! கவிதை & ஓவியம்: அனிதாராஜ்

ஜீவன் சந்தியா

ஜீவன் சந்தியா

திரை விமர்சனம் அங்கிங்கு என்று இல்லாமல், இந்தியச் சமூகத்தில் எங்குமே எப்போதுமே நிலவும் ஒன்றுதான், ‘காதல் கசக்குதையா’. ஜீவன் அபயங்கர், சந்தியா ஜோஷி விஷயத்திலும் அதே நிலைதான். அவரவர் குடும்பங்கள் அவர்களது நட்புக்கு, காதலுக்கு, வாழ்க்கைக்கு, தோழமைக்கு குறுக்கே நிற்கின்றன. தடைகளைத் தாண்டி, அவர்கள் இணைந்தார்களா? வாழ்ந்தார்களா? என்கிற கேள்விகளுக்கு விடைதான், தீபக் பிரபாகர் மாண்டே எழுதி இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள மராத்தி மொழி குடும்பச் சித்திரம்,  ஜீவன் சந்தியா. காதலுக்குக் கண்ணில்லை என்பது மட்டும் இல்லை, வயதும் இல்லை; தேவை மட்டுமே உண்டு. என்ன ஒன்று, ஜீவன் அபயங்கர் (அசோக் சரப்) சந்தியா ஜோஷி (கிஷோரி சஹானே) ஜோடி, அவர்களின் தேவையை உணரும்போது கொஞ்சம் வயதாகி விடுகிறது;  அறுபதுகளில்தான் அவர்களிடத்தில் காதல் வாய்க்கிறது. அதனால் ஒன்றும் அது சுலபமாகி விடவில்லை. வாழ்க்கையில் போராட்டமாகவும், போராட்டமே வாழ்க்கையாகவும் தொடர்கிறது, பரஸ்பரம் கைத்தலம் பற்றியே என்பதால், சுமையும் சுகமுமாக. மர்ம முடிச்சுகள் இல்லை. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. கிளுகிளுப்பான காட்சிகள் இல்லை. சண்டை சர்க்கஸ் இல்லை. கிளாமருக்கு இடமில்லை. விரசம் இல்லை. காமெடி டிராக் இல்லை. இத்தனை ‘இல்லை’ என்றாலும், நிறைவும் இல்லாமல் இல்லை. நடுங்கும் கையைப் பற்றிக் கொண்டு, “மிஸ்டர் அபயங்கர், எனக்கு நீங்க கைய கொடுக்கறீங்களா? இல்ல, பிடிமானத்துக்காக என் கைய  புடிச்சுக்கிறீங்களா?” எனக் கேட்கும் சந்தியாவிடம், “கைய நீ கொடுத்தாலும், நான் கொடுத்தாலும் இந்த வயசுல நம்ம ரெண்டு பேருக்குமே பிடிமானம் தேவைப்படுதே, மிஸஸ் அபயங்கர்” என்பதும்,  ஆட்டோவில் அவர்களுக்குள் ஏற்படும் அறிமுகம், ரெஸ்டாரண்டில் ஜோஷியின் அழகை ஆராதித்து, ஜீவன் அபயங்கர் வண்ணத்துப்பூச்சியை வாழ்க்கைக்கு ஒப்பீடு செய்தலும், சந்தியா மகளிடம் பேச முனையும்போது முடியாமல் போவதும், பின்னர் மகள் பேச முனையும்போது பேச்சை முடித்து விடுவதும், பூங்காவில் அபயங்கர், ஜோஷி பூவைச் சூடிக் கொள்ளச் சம்மதிக்க அந்த மலர் பற்றி எடுத்து விளக்குவதும், கண்ணாடியைப் பார்க்கச் சொல்ல, அவள் பார்ப்பதும், நட்பு காதலாகித் திருமணத்தில் வந்து நிற்கும் நிலையில், பூங்காவில் அவர்களுக்குள்ளான உரையாடலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அபயங்கரோடு சந்தியாவின் பேச்சும், அப்பாவின் வாழ்க்கை குறித்து எடுத்த முடிவை மகன் அங்கூர் சொல்ல, “உன்னுடைய சந்தோஷத்துக்காக வேண்டுமானால் அந்த பேப்பரில் கையெழுத்துப் போடுகிறேன். ஆனா ஒரு விஷயம் ஞாபகத்தில வெச்சுக்கோ, பேப்பர்ல போடற கையெழுத்து நாங்க ஒருத்தர ஒருத்தர் விரும்புறத நிறுத்தப் போறதில்ல” என்று சொல்வதும், நர்ஸ் மமதா கரே வாக அபயங்கர் குடும்பத்தினருடன் அளவளாவதும், ரசிக்கத்தக்க  நயமான காட்சிகள். தொலைபேசியிலோ செல்பேசியிலோ அனைத்துப் பாத்திரங்களும் ஒரு முறை பேசி விடுகிற காட்சி தவறாமல் இடம் பெற்றிருக்கிறது. சந்தியா ஜோஷியை சந்திக்கக்கூட மறுக்கும் அளவிற்கு, மகன் அங்கூர் அபயங்கரின் அதீத வெறுப்புக்கு வலுவான காரணம் இல்லை. பாத்திரத்தின் தன்மையால் அசோக் சரப்பும், கிஷோரி சஹானாவால் பாத்திரமும் மெருகேறி நிற்பது சிறப்பு. ஜீவன் அபயங்கராக முற்பகுதி நடிப்பில் இருந்த இயல்பு, பிற்பகுதியில் சற்று தொய்வடைந்து விடுகிறது. சந்தியா ஜோஷியாக  ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொடர்கிறது நடிப்பில் சரிவே இல்லாத செறிவு. சமீர் தர்மாதிகாரி (அங்கூர் அபயங்கர்),  பிரதீபா அபயங்கர் (ருசிதா ஜாதவ்), ரவீந்திர மக்கானி (டாக்டர் தாமலே), ரமேஷ் தியோ (சந்தீப்), சீமா தியோ (சினேகா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பை, ஏற்ற பாத்திரங்களுக்குப் பழுதில்லாமல்  வழங்கியுள்ளனர். அதுல் பாலச்சந்திர ஜோஷியின் இசையில் இனிமையான  பாடல்களும், பின்னணி இசையும், மங்கேஷ் அஷோக் கடேக்கர் கண்கவர் ஒளிப்பதிவும் மனதைக் கவர்கின்றன. மஹந்தேஷ்வர் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். இரண்டு மணி 15 நிமிடங்கள் ஓடும் படத்தின் நீளத்தை, இயக்குனர் உடன் இணைந்து பேசி, இருபது நிமிடங்களைக் குறைத்திருந்தால், இன்னும் நிறைவாக இருந்திருக்கும். காதல் என்பது எதுவரை என்கிற கேள்விக்கு, இறுதிச் சுவாசம் உள்ளவரை என்கிற பதிலை, அறுபது வயதிற்கு மேற்பட்டவருக்கு என்று இல்லாமல், எல்லா வயதினர் மனதிலும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது, ‘ஜீவன் சந்தியா’. மதிப்பெண்: 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்