திரை விமர்சனம்

நிறைவேறாத காதலின் நாயகன் கௌதமுக்கு வந்தனாவுடன் திருமணமாகி, ஐந்து வயதில் ஆர்த்தி என்கிற மகள் இருக்கிறாள். நாயகி ஆரண்யா, பிரகாஷ் என்பவனுக்கு மனைவியாக இருக்கிறாள். எதிர்பாராதவிதமாக, கௌதம் – ஆரண்யா சந்திப்பு பாலக்காடு சந்திப்பில் நிகழ்கிறது. நீருபூத்த நெருப்பாக இருந்த பழைய காதல் நினைவுகளை அச்சந்திப்பு விசிறிவிட, மீண்டும் காதல் உணர்வு தீப்பற்றிக்கொள்கிறது. விளைவு என்ன ஆனது என்பதுதான், ஜி.ஆர்.சுரேந்திரநாத்துடன் இணைந்து ரோகின் வெங்கடேசன் எழுதி இயக்கி, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள  ‘தீராக் காதல்’ தமிழ்த் திரைப்படத்தின் மொத்தக் கதை.

கதை பழையது. என்ன.. அமைந்த அமைதியான வாழ்க்கையில், நிறைவேறாத காதலை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்ணை, காதலன் துரத்துவதாக இல்லாமல்,  உல்டாவாக அப்படியான ஒரு ஆணை, காதலி துரத்துவதான ‘புதுமை’.  

ஆரண்யாவுக்கு வாழ்க்கை என்று இல்லாமல் போனதற்குக் காரணம், சாடிஸ்ட் கணவன் பிரகாஷ். ஆனால் அமைதியான வாழ்க்கைக்குச் சொந்தக்காரன் கௌதம். இந்நிலையில், ‘வந்தனாவை விட்டுவிட்டு வந்துவிடு’ என்று ஆரண்யா அவனைக் கேட்பதில் என்ன நியாயமோ?!

“ஆரண்யா இப்ப பிரச்சனயில இருக்கா. அவ சாயறத்துக்கு ஒரு தோள் வேணும். தேவையே இல்லாம நீ பிரச்சனயில மாட்டிக்காத” என்று நண்பன் அருண் அறிவுறுத்தியும்,

“இங்க நடந்தத இங்கேயே மறந்துடுங்க. அதுதான் நம்ம ரெண்டுபேருக்கும் நல்லது” என்று கௌதமே ஒரு கட்டத்தில் ஆரண்யாவிடம் கூறும் தெளிவிருந்தும்,

அவளது பேச்சிலும் செயலிலும் அவ்வப்போது சரிந்துபோகும் பரிதாப நிலையையும் வந்தனா மற்றும் குழந்தை ஆர்த்தி மீதான பாசத்தால் குமைந்துபோவதையும் கௌதமாக வரும் ஜெய்,  தன் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

ஒருபக்கம் வாழ்ந்தும் வாழாத வாழ்க்கை, மறுபக்கம் எதிர்பாராத சந்திப்பால் அடிமனத்தில் அமிழ்ந்துபோய் மீண்டும் துளிர்த்த காதல் நினைவுகள் ஊடே சிக்கித் தவிக்கும் ஆரண்யா பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மாறுபட்ட நடிப்பை வழங்கி, அப்பாத்திரத்தையே மெருகூட்டியுள்ளது சிறப்பு.

மேம்போக்கில் ‘வொர்க்காலிக்’காகத் தெரியும் வந்தனா, கணவன் கௌதம் மீதும் மகள் ஆர்த்தி மீதும் அளவில்லாத அன்பைக் கொண்டுள்ள நிலையில், அவன் வெளிப்பட்டு நிற்கும்போது,

“நீங்க எல்லா பொறுக்கித்தனமும் பண்ணுவீங்க. அப்புறம் வந்து ‘சாரி’ கேட்ட உடனே, நாங்க எல்லாத்தையும் தொடச்சி எறிஞ்சிட்டு, ‘ஈ’ன்னு இளிச்சுட்டு வந்துடணும்… இதே தப்ப நான் பண்ணி இருந்தா?” என்று கொதித்து வெடிப்பதும் குழந்தை காணாமல் போகும்போது பதைத்துப் போவதுமாக, வந்தனவாக வரும் ஷிவதா நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார்.

கௌதமின் நண்பன் அருணாக வரும் அப்துல் லீ,  “என்னடா, எரியற பல்ப முழுசா முழுங்குன மாதிரி முகம் எல்லாம் பிரகாசமா இருக்கே!” என்று சூழலைக் கலகலப்பாக வைத்திருப்பதுடன், “ஒரே வழிதான் இருக்கு. வந்தனாகிட்ட போய் உண்மையைச் சொல்லி, அவ கால்ல விழுந்துரு” என்று இடையிடையே கருத்துள்ள ஆலோசனையும் வழங்கி, மிகையில்லாத நடிப்பைத் தந்திருப்பது அருமை.

ஆரண்யாவின் கணவன் பிரகாஷை, ஒரு கட்டத்தில் ஆரண்யா அறையும்போதுதான், ஓரளவுக்கு ரசிகர்கள் ஆறுதல் அடைகிற வகையில், சேடிசத்தை வெளிப்படுத்தும் கணவன் பாத்திரத்தில் அம்ஜத்கான் சோபித்துள்ளார். குழந்தை ஆர்த்தியும் (வ்ருத்தி விஷால்) இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்.

“என்னடா.. இந்தக் காலத்துல ஹஸ்பண்ட் வைஃப்புங்கள்லாம் நல்லவங்களா மாறிட்டாங்களோன்னு பார்த்தேன்..” (கௌதம்)

“புடிச்சவங்களோட ஒரு இடத்துல இருக்கும்போது அந்த இடம் இன்னும் ரொம்ப அழகா ஆயிடுது இல்ல..?!” (கௌதம்)

“என்ன மோசமான உலகம் இது கௌதம்?! சேந்து வாழ வேண்டியவங்கள எல்லாம் பிரிச்சு வெக்கறாங்க; பிரிஞ்சி வாழ விரும்பறவங்கள எல்லாம் சேத்து வெக்றாங்க” (ஆரண்யா)

“என்ன பண்றது.. வேலை நடக்கணும்னா பிளைட், வேலை முடிஞ்சுச்சுடுச்சுனா ட்ரெய்ன்னு..” (கௌதம்)

“எல்லாக் கம்பெனியும் ஒரே மாதிரியாதான் இருக்காங்க” (ஆரண்யா)

“இங்க வந்தா ஒன்னரை மணி நேரம் முன்னாடியே உன்ன பாக்கலாமில்ல..” (ஆரண்யா) போன்ற ஜி.ஆர்.சுரேந்திரநாத்தின் வசனங்கள் அருமை.

மங்களூர், மும்பை, சென்னை நகரங்களில் இரவு பகலாக வலம்வந்து அழகை வாரி இறைத்த ரவிவர்மன் நீலமேகனின் ஒளிப்பதிவு, கண்களுக்கு விருந்து. சித்து குமாரின் பின்னணி இசை அருமை. ஜி.கே.பிரசன்னாவின் படத்தொகுப்பு நிறைவு.

கதையில் புதுமை இல்லை என்றாலும் கத்தி முனையில் நடக்கும் கதைக் கருவை, கீறல் இல்லாமல்  வழங்கிய விதமும் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் அர்ப்பணிப்பான பங்களிப்பும்  ரோகின் வெங்கடேசன் இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன.

மதிப்பெண் : 6.5/10

  • மது ராஜேந்திரன்

Comment (1)


இராசாமணி
இராசாமணி
July 1, 2023

திரைக்கதை, அதை விமர்சனமாக உருவகப்படுத்தி, கதைக்கான பாத்திரங்களையும், கருத்தான, நெகிழும்வகையிலான வசனங்களையும் குறிப்பிட்டு, படம் பார்த்த உணர்வுகளை வெளிப்படுத்தும் திரை அலசல். மனதை தொட்டு விட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *