ஆடி மாதம்
கவிதை
வானமே கூரையென
வாழ்ந்திருந்த சாமிகள்
மூன்று பிரகாரங்கள் கொண்ட
கான்கிரீட் கட்டடத்துக்குள்
அடைக்கப்பட்டனர்
கோயில்கள் எல்லாம்
ஆலயங்கள் ஆகிவிட்டன
பேச்சியம்மனுக்கும் முண்டகக்கண்ணிக்கும்கூட
ஸ்ரீ என்ற முன்னொட்டு சேர்ந்துகொண்டுவிட்டது
எல்லாத் தெருக்களிலும்
எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்கொண்டிருக்கிறார்
எல்.ஈ.டி. அலங்காரக் கட் அவுட்டிலிருந்து
அருள்பாலிக்கிறார்கள் அம்மன்கள்
முளைப்பாரி சுமந்துவரும்
ஆறு பேருக்கு முன்பாக
எட்டுப் பேர் வருகிறார்கள்
கொட்டு அடித்தபடி
பொங்கல் வைப்பவர்கள் ஒருபக்கம்
கூழ் ஊற்றுபவர்கள் மறுபக்கம்
பொங்கிப் பெருக்கெடுக்கிறது
நாள் முவழுதும் பக்திப் பரவசம்
மாலையில் தொடங்குகிறது
தீ மிதிக்கும் நிகழ்வு
ஆத்தாவின் சக்தியில் ஐயம் கொண்டு
அருகே நிறுத்தப்படுகிறது ஆம்புலன்ஸ்
முன்னிரவில் களை கட்டும்
இசைக் கச்சேரியும் ஆடலும் பாடலும்
கூடவே, கூழ் வார்த்த களைப்பு நீங்க
டாஸ்மாக் பழரசத்தின் பரவசம்
ஆலயத்தின் முன் அனைவரும் திரண்டிருக்க
எதிர்த்திசையில் சிலர்
மாரத்தான் ஓடிக்கொண்டிருந்தனர்
தலைவிரி கோலமாய்
இடைமறித்து நிகழ்த்தப்பட்ட விசாரணையில்
அம்பலமானது செய்தி
ஒலிபெருக்கியின் ஓலம் தாங்காமல்
ஓடிக்கொண்டிருந்தார்கள் அம்மன்கள்
- நல்லு இரா. லிங்கம்
ம. செ. மோகன் ராஜா
August 10, 2023///ஆத்தாவின் சக்தியில் ஐயம் கொண்டு///😂😂😂
.. சிந்தனையை தூண்டும் கவித்துவமிக்க கவிதை. ❤️
N.Paneer Selvam
August 11, 2023வாழ்த்துகள்..அர்த்தராத்திரியில் அம்மன் தங்களுக்கு காட்சி காணும் பாக்கியம் பெற்றவர் நீங்கள் .. அம்மன் இருக்கிறார் என்று நிரூபித்துள்ளீர்கள். ஆகா..அற்புதம்