ஆடி மாதம்

ஆடி மாதம்

கவிதை வானமே கூரையெனவாழ்ந்திருந்த சாமிகள்மூன்று பிரகாரங்கள் கொண்டகான்கிரீட் கட்டடத்துக்குள்அடைக்கப்பட்டனர் கோயில்கள் எல்லாம்ஆலயங்கள் ஆகிவிட்டனபேச்சியம்மனுக்கும் முண்டகக்கண்ணிக்கும்கூடஸ்ரீ என்ற முன்னொட்டு சேர்ந்துகொண்டுவிட்டது எல்லாத் தெருக்களிலும்எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்கொண்டிருக்கிறார்எல்.ஈ.டி. அலங்காரக் கட் அவுட்டிலிருந்துஅருள்பாலிக்கிறார்கள் அம்மன்கள் முளைப்பாரி சுமந்துவரும்ஆறு பேருக்கு முன்பாகஎட்டுப் பேர் வருகிறார்கள்கொட்டு அடித்தபடி பொங்கல் வைப்பவர்கள் ஒருபக்கம்கூழ் ஊற்றுபவர்கள் மறுபக்கம்பொங்கிப் பெருக்கெடுக்கிறதுநாள் முவழுதும் பக்திப் பரவசம் மாலையில் தொடங்குகிறதுதீ மிதிக்கும் நிகழ்வுஆத்தாவின் சக்தியில் ஐயம் கொண்டுஅருகே நிறுத்தப்படுகிறது ஆம்புலன்ஸ் முன்னிரவில் களை கட்டும்இசைக் கச்சேரியும் ஆடலும் பாடலும்கூடவே, கூழ் வார்த்த களைப்பு நீங்கடாஸ்மாக் பழரசத்தின் பரவசம் ஆலயத்தின் முன் அனைவரும் திரண்டிருக்கஎதிர்த்திசையில் சிலர்மாரத்தான் ஓடிக்கொண்டிருந்தனர்தலைவிரி கோலமாய் இடைமறித்து நிகழ்த்தப்பட்ட விசாரணையில்அம்பலமானது செய்திஒலிபெருக்கியின் ஓலம் தாங்காமல்ஓடிக்கொண்டிருந்தார்கள் அம்மன்கள்

கோயில் காடுகள்

கோயில் காடுகள்

இயற்கையின் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டுமாயின், மனிதர்களால் இயலக்கூடியது பசுமைப் பரப்பினை அதிகரிப்பதும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதும்தான். அன்று முதல் இன்று வரை பசுமைப் பரப்பு தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கிறது. கடந்த நூறாண்டு காலத்தில் தகவமைத்தல் என்பதைத் தாண்டி, அழித்தலில்தான் மனிதர்கள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். நமது முன்னோர்கள் நீர் மேலாண்மை, பாதுகாப்பு போன்றவற்றிற்காக, கோயில்கள்தோறும் குளங்களை வெட்டி நீர் சேமிக்கும் முறையினைப் பின்பற்றி வந்துள்ளனர். தமிழின் நீதி இலக்கியங்களில் ஒன்றான ‘சிறுபஞ்சமூலம்’ இயற்கையின் அறம் மற்றும் சூழலியல் நீதியையும் பல்லாயிரம் வருடத்திற்கு முன்பே போதித்துள்ளது.•குளம் வெட்டுபவர்•மரம் நடுபவர்•நீர் வழிந்தோட வாய்க்கால் வெட்டுபவர்•விளைநிலம் உருவாக்குபவர்•பொதுக் கிணறு அமைப்பவர்ஆகிய ஐந்து செயல்களைச் செய்பவர்கள் பூமியில் நல்லவண்ணம் வாழ்வார்கள் என்றும் சொர்க்க வாழ்வை அடைவார்கள் என்றும் சொல்கிறது. குளம் தொட்டு காவு பதித்து வழி சீத்துஉளம் தொட்டு உழு வயல் ஆக்கி வளம் தொட்டுப்பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான்ஏகும் சுவர்க்கம் இனிது இலக்கியம் சொன்னதற்கேற்ப, நமது முன்னோர்கள் நீர்நிலைகள், பசுமைவெளிகள் என இவ்விரண்டையும் மிகக் கவனமாகப் பாதுகாத்து வந்துள்ளனர். சமதளத்தில் வளர்ந்துள்ள மரங்கள் ஒருங்கே சேர்த்து காடாக மாறிய சூழலில், அதனைக் கோயில் காடுகள் என்று அழைக்கிறோம். அதில் பெரும்பான்மையாக இருக்கும் மரத்தை அந்த ஊர்க் கோயிலின் தல விருட்சமாகக் கருதுகின்றனர். இவ்வாழ்வியலில் சில கலப்புகளும் இடையூறுகளும் ஏற்பட்டபின்னர், இந்த தெய்வத்தின் கோயிலுக்கு இதுதான் தல விருட்சம் என்ற பொதுப்புத்தியும் வளரத் தொடங்கிவிட்டது. கடம்ப மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் மதுரைக்குக் கடம்பவனம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது என்பதை இங்கு நினைவில் கொள்ளலாம். இப்படி மரங்களையும் நீர்நிலைகளையும் உருவாக்கி, போற்றி வளர்த்த மக்கள் காடுகளைப் போற்றுவதையும் தங்கள் வாழ்வியல் முறையாகக் கொண்டிருக்கிறார்கள். தற்போதுள்ள காலகட்டத்தில், கோயில்களை நவீனப்படுத்தி புதுமையாகவும் பெரிதாகவும் புதுப்பித்துக் கட்டுகையில் குளங்கள் தூர்க்கப்பட்டு, மண்ணாலும் கற்களாலும் நிரப்பி மூடப்பட்டுவிடுகின்றன. இடம் விசாலமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், தல விருட்சம் உட்பட்ட மரங்களும் பிடுங்கி எறியப்படுகின்றன. உதாரணமாக, சேலம் மாவட்டம் மேச்சேரியில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் 2000த்திலேயே கோயில் நிலப்பரப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தெப்பக்குளத்தை மூடி, கிணற்றை மட்டும் விட்டுவைத்தனர். அதையும் 2013இல் புணரமைப்பு செய்தபோது மூடிவிட்டனர். தல விருட்சமான வன்னி மரத்தைப் பிடுங்கி எறிந்துவிட்டுக் குடமுழுக்கு நடத்தப்பட்டது. கடந்த பத்தாண்டுகளாக, தல விருட்சமற்ற கோயிலாகத்தான் அந்தக் கோவில் இருந்து வருகிறது. அதே சமயம், கரூர் மாவட்டம் வாங்கல் என்ற ஊரிற்கு அருகிலுள்ள நெரூர் என்ற பகுதியில் அமைந்துள்ள ‘சத்குரு சதாசிவ பிரமேந்திர ஜீவ சமாதியில்’ உள்ள வில்வமரம் பட்டுப்போக (வாட) ஆரம்பித்தபோது, அம்மரத்தினுடைய திசுக்களைக்கொண்டு மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்பட்ட மரக்கன்றுகள் பழைய மரத்துடன் சேர்ந்து அந்த ஆலயத்தில் செழித்து வளர்ந்துள்ளன. இது நிகழ்ந்தது 2002ஆம் ஆண்டில். “என்னாட்டுடைய இயற்கையே போற்றி…!” என்றிருந்த சமுதாயம் தடம்மாற, வழிபாட்டு முறைகளின் பல்வேறு காரணிகளேகூட இடையூறாக இருக்கின்றன. தெய்வ வழிபாட்டு இடங்கள் வழிபாடிற்காக மட்டுமல்லாமல், ஆடம்பரத்தையும் சமூகப் பெருமையையும் பறைசாற்றும் இடங்களாக மாறிவிட்டிருக்கின்றன. கோயில் காடுகள் என்பன, ஊருக்கு வெளியே கிராம தேவதைகளுக்களாக, கிராமத்தைப் பாதுகாக்கும் தெய்வங்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட இயற்கை வனங்கள் ஆகும். அரிய வகை மூலிகைச் செடிகள் முதல் அற்புதமான மரங்கள் வரை பலவிதமான தாவரங்கள் வளரும் இந்தக் காடுகள் சமீபகாலமாக அழிந்துவருகின்றன. அந்தந்தப் பகுதியின் சூழலுக்கு ஏற்ப இயற்கையாகக் காணப்படும் எல்லாவகை மரங்களும் செடி கொடிகளும் புதர்களும் சிறு விலங்குகளும் புழு பூச்சிகளும் அக்காடுகளில் சுதந்திரமாகப் பல்கிப் பெருகின. உயிரியலுடன் பிணைக்கப்பட்ட குட்டிக் காடுகளாகத்தான் அவை காட்சியளித்தன. கற்களால் வடிக்கப்படாத சிலைகளே இங்கு பிரதானம், சுடு மண்ணால் செய்யப்பட்ட கிராம தெய்வங்களின் திருவுருவங்களுடன் காட்சி கொடுத்த ‘கோயில் காட்டுத் தலங்கள்’ தற்போது வேண்டுதல், பிரார்த்தனை, நேர்த்திக் கடன்கள் என்ற பெயர்களில், அங்குள்ள காடுகள் அழிக்கப்பட்டு கட்டடங்களாகப் பெரிதாக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளத்திலும் இதற்குச் சிறப்பான இடம் தரப்பட்டிருந்தது. கோயில் காடுகள் அங்கு ‘காவுகள்’ என்ற பழந்தமிழ்ப் பெயரால் அழைக்கப்படுகின்றன. மேலே கண்ட சிறுபஞ்சமூலப் பாடலில் ‘காவு‘ என்ற சொல் மரம் என்ற பொருளில் வருவதைக் காணலாம். அதனால்தான் கேரளாவின் பல ஊர்களின் பெயரோடு காவு, காவிலை என்ற பெயர்கள் ஒட்டி வரும். வல்லியூர்காவு, கலியக்காவிளை, ஆரியங்காவு, புத்தன்காவு என்று காவுகளைப் பின்னிணைப்பாகக் கொண்ட ஊர்ப்பெயர்கள் இன்றும் விளங்கிவருகின்றன. காவுகள் எனப்படும் இந்தக் ‘கோயில் காடுகள் அழிக்கப்பட்டால் குளங்களில் தண்ணீர் இல்லாமல் போய்விடும்’ என்பது அவர்களின் பழமொழிகளுள் ஒன்றின் பொருளாகும். பல்வேறு நாகரீகங்களில் கோயில் காடுகள் இருப்பதற்கான சான்றுகள் மானுடவியல் ஆராய்சிகள் மூலம் தெரியவருகின்றன. இதனை ஆங்கிலத்தில் Sacred Groves என்று அழைப்பார்கள். அணில், ஓணான், பறவைகள் முதல் குரங்கு வரை எல்லாவிதமான உயிரினங்களும் இங்கு சுதந்திரமாக வாழ்ந்துவருகின்றன. இத்தகைய கோயில் காடுகள், குறிப்பாக எல்லா கிராமங்களிலும் கிராம எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் பிடாரி, வீராசாமி போன்ற கிராம தெய்வங்களுடைய கோயில்களுடன் இணைந்திருக்கும். இந்தக் கோயில் காடுகளில் உள்ள நீர் நிலைகள், அங்குள்ள காடுகள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதால் எப்போதும் வற்றாமல் வருடம் முழுவதும் தண்ணீர் நிறைந்து காணப்படும். இதனால் காடுகளைச் சுற்றிலும் அமைந்திருக்கும் ஊர்களிலும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படாமல் இருந்து வந்தது. பலவகைப் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆலமரத்தைத் தங்கள் இருப்பிடமாகக் கொண்டு வாழும் இயல்புடையவை. இந்தக் கோயில் காடுகளில் ஆல், அரசு, வேம்பு, புளி, மா, தென்னை போன்ற மரங்களும் தாழை, செம்பருத்தி, துளசி, அருகு போன்ற செடி, புல் வகைகளும் காணப்படுகின்றன. இந்தக் காடுகளை ஒட்டி ஒரு சிறிய குளமாவது இருக்கும். அதில் நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்துவரும் வகையில் இவை அமைந்துள்ளன. சி.பி.ராமசாமி ஐயர் சுற்றுச்சூழல் ஆய்வுக் கல்வி மையத்தின் ஆய்வுகளின்படி, இந்தியாவில் மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராட்டிரம் உட்பட எல்லா மாநிலங்களிலும் கோயில் காடுகள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவிலும் இவை சிறப்பாக மக்களுடைய சமூக வாழ்வில் இன்றியமையாத இடம் பெற்றுள்ளன. கிராம எல்லைப் பகுதிகளில் கிராம தெய்வங்களை மையமாகக்கொண்ட இந்தக் கோயில் காடுகள், சி.பி.ராமசாமி ஐயர் ஆய்வு மையத்தின் கணக்கீடுகளின்படி இந்தியாவில் எல்லா மாநிலங்களிலுமாக ஏறத்தாழ 1 முதல் 1.5 லட்சம் வரை உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள கோயில் காடுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவையாகும். இவற்றில் சில கோயில் காடுகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் காப்புக் காடுகளாக (Reserved Forest) வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் குறைந்தபட்சப் பரப்பளவு ஒரு ஏக்கராக உள்ளது. நம் கலாச்சாரத்துடன் இணைந்த கோயில் காடுகளைப் போற்றிப் பேணி, அழியாமல் பாதுகாத்து, அடுத்த தலைமுறையிடம் கொடுப்பது நம் பொறுப்பு ஆகும்.

அதிகாரம் – அன்றும் இன்றும்

அதிகாரம் – அன்றும் இன்றும்

எளிய மக்களைப் பொறுத்தவரை ஆண்டவன் முன்பு அனைவரும் சமம் என்ற நம்பிக்கை இருந்தாலும், ஆண்டவனைவிட ஆட்சியாளர்களே அதிகாரம் மிக்கவர்கள் என்பதை மன்னராட்சிக் காலம் முதற்கொண்டு மக்களாட்சிக் காலம் வரை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். அண்மைக் காலமாக கோவில்கள் தொடர்பாக நடந்து வரும் பிரச்சினைகளில் ஆட்சியாளர்களின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை மன்னராட்சிக் காலத்துடன் ஒப்பிட்டுக் காட்டுகிறது இந்தக் கட்டுரை. (ஆ-ர்.) இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ய, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையிலான குழு கோவிலுக்குச் செல்கிறது. “15 ஆண்டுகளுக்கு முன் தணிக்கை செய்த அறிக்கையை வழங்குங்கள்” என்று அமைச்சர் கேட்கிறார். “தரமுடியாது. இது எங்கள் கோவில். தணிக்கை செய்ய அரசுக்கு அதிகாரமில்லை” என்று தீட்சிதர்கள் பதிலளிக்கிறார்கள். “கோவிலைக் கட்டியது பழங்கால மன்னர்கள். நீங்கள் நிர்வாகம் மட்டுமே செய்கிறீர்கள்” என்கிறார் அமைச்சர். “கொத்தனார் கட்டினார் என்பதற்காக வீடு அவர்களுக்குச் சொந்தமாகிவிடுமா?” என்று தீட்சிதர்கள் கேட்கிறார்கள். “ஓ! அப்படியானால் பணம் செலவு செய்து நீங்கள் கோவில் கட்டினீர்களா? மன்னர்கள் கொத்தனார்களா?” என்று அமைச்சர் கேட்கிறார். வாக்குவாதம் தொடர்கிறது. “உங்கள் நெற்றியில் விபூதி இல்லை. நாங்கள் விபூதி வைத்துவிடவா?” என்று தீட்சிதர்கள் கேட்க, அமைச்சரும் சம்மதித்து விபூதி வைத்துக்கொள்கிறார். பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “கணக்குகளை தீட்சிதர்கள் இந்து அறநிலையத்துறையிடம் சமர்ப்பிப்பதே மனு தர்மம்” என்று அமைச்சர் பேட்டி கொடுத்து விசாரணையை நிறைவு செய்தார். அன்று விக்கிரம பாண்டியனின் ஆட்சிக்காலம். கடலூர் அருகே திருப்பாதிரிப்புலியூரில் சுப்பிரமணியப் பிள்ளையார் கோவில் ஒன்று கட்டப்பட்டது. 2 மா அளவு நிலம் ‘சுவாமி’க்குத் தானமாக அளிக்கப்பட்டது. இது திருப்பாதிரிப் புலியூர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து தரப்பட்டது. அவ்வூரைச் சேர்ந்த பிராமணர்கள், “இது எங்கள் நிலம். எங்களுக்குச் சொந்தமான பிரம்ம ஷேத்திரம். இதனைப் பிள்ளையார் கோவிலுக்குத் தரக்கூடாது” என்று பிரச்சினை செய்தனர். இதனை விசாரிப்பதற்காக பல்லவராயர், அழகிய மணவாளப் பல்லவராயர் ஆகிய இரண்டு அரசு அதிகாரிகள் அவ்வூருக்கு வந்தனர். சோழகுலவல்லி நல்லூர் என்ற ஊரின் பொதுச் சபையில் விசாரணை நடந்தது. விசாரிக்கவே கூடாது என்று கடுமையாக பிராமணர்கள் எதிர்த்தனர். ஒரு பிராமணர், ‘தீக்குளிப்பேன்’ என்று மிரட்டினார். மிரட்டலைப் பொருட்படுத்தாத அரசு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணை தொடங்கியது. “பிராமணர்களே, நீங்கள் உரிமை கோரும் நிலத்துக்குச் சான்று ஏதேனும் உண்டா?” என்று அதிகாரிகள் வினவினர். “இது எங்கள் பிரம்ம ஷேத்திரம். எங்களுக்குச் சொந்தமான நிலம். சான்று காட்டத் தேவை இல்லை” என்று பிராமணர்கள் பதிலளித்தனர். “பல்லாண்டு காலமாக வேளாளர், அளவர், பள்ளிகள், பரம்பர்கள் இந்த நிலத்தை உழுது பயிர் செய்கிறார்கள். இது பிரம்ம க்ஷத்திரம் ஆகாது. கோவிலுக்குச் சொந்தமான திருநாமத்துக் காணி. உங்களின் உரிமை நிலம் என்பதற்குக் கல்வெட்டுச் சான்று இருக்கிறதா? இருந்தால் காட்டுங்கள்”. இது அதிகாரிகள் எனுப்பிய வினா. “அது தேவை இல்லை. இந்த நிலப்பகுதிகளை எங்களுக்குள் விற்பனை செய்தும் ஒத்தி வைத்தும் உள்ளோம். அதற்குச் சான்று உள்ளது. இச்சான்று போதும்” என்பது அவர்களின் பதில். “உங்களுக்குள் நீங்களே விற்பனை செய்த சான்றாவணங்கள் செல்லாது. இவற்றை ஏற்க மாட்டோம்” என்று கெடுபிடி காட்டிய அதிகாரிகள், கோவில் அலுவலர்களை வரவழைத்து விசாரித்தனர். “இது கோவில் நிலம்தானா? பிராமணர்களுக்கு உரியதா? கோவில் நிலம் என்றால் சான்றுகள் இருக்கிறதா?” என்று கோவில் அலுவலர்களிடம் விசாரணை அதிகாரிகள் கேட்டனர். “இது உறுதியாகக் கோவில் நிலம்தான்” என்று கூறி அதற்கான கல்லெழுத்து சாசனங்களை அலுவலர்கள் ஆவணமாகக் காட்டினர். அந்த ஆவணங்களில் பிராமணர்கள் உரிமை கொண்டாடிய அந்நிலப் பகுதி கோவிலுக்குச் சொந்தமானது என்று தெளிவாக எழுதப்பட்டிருந்தது. ‘கோப்பெருஞ்சிங்கர் நாளிலும் விக்ரமபாண்டித்தேவர் காலத்தில் எழுதின திருமுகத்தின்படி திருப்பாதிரிப்புலியூர் கோவிலுக்கு உடலடங்க இறையிலியாக எழுதின ஓலையின்படி இந்நிலம் திருநாமத்துக்காணியாகக் கோவிலுக்குச் சொந்தம்’ என்று எழுதப்பட்டு கல்லிலும் வெட்டப்பட்டது. அதில் பிராமணர்களும் உடன் கூட்டாத்தாரும் கையெழுத்திட்டிருந்தனர். சான்றாவணங்களைப் பார்த்த அதிகிரிகள் பிராமணர்களைக் கண்டித்தார்கள்.உடனடியாக அந்த நிலங்களைக் கோவிலுக்கு ஒப்படைக்கவேண்டும் என்று சாசனம் செய்யப்பட்டு, அதிகாரிகள் கையெழுத்திட்டு விசாரனை முடிவு பெற்றது. நிலமும் பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமானது. ஆதாரம்: தென்னிந்தியர் கல்வெட்டுத் தொகுதி (7-759) மா. மாரிராஜன்