அத்தியாகிரகம்
கவிதை
ஆடையற்ற மேனியோடு
நடக்கும் நங்கையை
கிட்டப் பார்வையில் கண்டதும்
நகையோடு நடக்கும் சுதந்திரத்ததை
தூரப் பார்வையில் கண்ட
கிழவனின் கண்ணாடி
கீழே விழுந்து சிதறியது
அதன் நூற்றாயிரம் துகள்களும்
கோரப் பார்வையோடு
வெறித்தபடி நடக்கும்
கால் நரம்புகளை ஊடுருவி
கண் நரம்புகளைச் சிதைக்கும்
அத்தியாகிரகத்திற்கு
அழைப்பு விடுத்திருக்கின்றன
மெளனச் சாணத்தால்
கிழவனின் கண்ணாடிச் சில்லுகளை
ஒருபோதும் ஒற்றி எடுத்திட முடியாது
நாடே போற்றிய எழுபத்தைந்து
நைந்து போனது
வீதியெங்கும் மூவர்ணம்
பறக்க-விட்டோம்
வீடெங்கும் ஏற்றி வைத்துச்
சிறக்க வைத்தோம்
அதையின்று
உயர் வர்ணம் யாரென்ற
கர்ணத்தில் உடைத்துவிட்டார்கள்
கிழவனின் கண்ணாடிச் சில்லுகளின் மீது
மெளனத்தை அடைகாக்க அனுமதித்தால்
ஆபரணங்களைப் போல
ஆடைகளுக்கும்
வட்டி கட்ட நேரிடும்
- தசாமி

GOMATHI SANKAR RAMANATHAN
August 14, 2023சபாஷ்.
முஸ்தபா.
August 14, 2023சிறப்பான கவிதை,
வாழ்த்துகள்.
Anita Srikanth
August 14, 2023வலிகள் நிறைந்த கவிதை..
//நகையோடு நடக்கும் சுதந்திரத்ததை
தூரப் பார்வையில் கண்ட
கிழவனின் கண்ணாடி
கீழே விழுந்து சிதறியது//
இந்த வரிகள் படிக்கும் போது என்னமோ
பண்ணுது ..
//ஆபரணங்களைப் போல
ஆடைகளுக்கும்
வட்டி கட்ட நேரிடும்//
கவிதையோட கடைசி வரி …வலி…
அழகா எழுதி இருக்கீங்க..
அந்த ஓவியம் கோடி உணர்வுகளை கொட்டுது.
வரைந்தவருக்கு என் வாழ்த்துக்கள் & நன்றிகள்..