கரிசல் இலக்கியக் கதாநாயகன்
கி.ரா. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை
கி.ரா. என்று பிரியமாய் அழைக்கப்படுகிற கி. ராஜநாராயணன் அவர்கள் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அறியப்பட்டவர். இவரது முழுப்பெயர் ராயங்குல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் என்பதாகும். எதனால் தனக்கு இவ்வளவு நீளமான பெயர் வந்தது என்பதைக்கூட எள்ளல் நடையுடன் எழுத இவரால் மட்டுமே முடியும். அது என்ன என்பதை கட்டுரையின் இறுதியில் சொல்கிறேன்.
இவரது காலம் செப்டம்பர் 16, 1922 முதல் மே 17, 2021 வரை. கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 98 ஆண்டுகள் வாழ்ந்த கி. ரா, இந்தியாவை சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் கண்டவர். இதனால்தான் இவரால் இன்றைய அறிவியல் முன்னேற்றங்களைக் காணாத, கல்வியறிவு இல்லாத அசல் கிராமங்களைப் பற்றி எழுத முடிந்திருக்கிறது.
கி. ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று கூறும் கி.ரா., இந்திய சுதந்திரத்திற்கு முன்பு எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுத் தாளில் ஸ்ரீராமஜெயத்திற்கு பதில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதியதால் தேர்வில் தோற்றுப் போனார். பிறகு அப்படியே தன் படிப்பை நிறுத்திக்கொண்டார். பள்ளிப் படிப்பு மட்டுமே படிப்பல்ல; அனுபவம் கற்றுக் கொடுக்கும் கல்வி அளப்பரியது என்பதைத் தன் எழுத்தின் வழி நிரூபித்த கி.ரா., 1991ஆம் ஆண்டில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வருகை தரும் சிறப்புப் பேராசியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
சாகித்ய அகாடமி விருது, இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற கி.ரா. தனது இறுதிக் காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்தார்.
தமிழ் இலக்கியத்தில் கி.ரா.வின் பங்களிப்பு இன்றியமையாதது. தமிழ் எழுத்துலகில் முதன்முதலில் வட்டார வழக்கில் எழுதியவர் இவர்தான். பேச்சு வழக்கு ஒருபுறம் இருக்க, எழுதினால் அது தூய தமிழில்தான் இருக்க வேண்டும் என்ற விதியை நம் எழுத்தாளர்கள் கடைபிடித்து வந்தார்கள். அந்த முறைமையை மாற்றி, தன் முதல் நாவலான ‘கோபல்ல கிராம’த்தை வித்தியாசமான முறையில் எழுதி ஒரு நாவல் போட்டிக்கு அனுப்பியிருக்கிறார் கி.ரா. அதை வாசித்துப் பார்த்த நடுவர்களுக்கு ஆச்சரியம் ஒருபுறம் இருந்தாலும் இதை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்ற தயக்கம் இருந்ததாம். ஏனெனில், வட்டார வழக்கில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருந்ததால் அவர்களுக்கு அப்படி ஒரு தயக்கம் வந்திருக்கிறது. பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு, கோபல்ல கிராமத்துக்கே முதல் பரிசு என்று அறிவித்தார்கள். இதை நாவல் என்றே சொல்ல முடியாது என்று கோபல்ல கிராமத்தை ஏற்க மறுத்த சுந்தர ராமசாமி அவர்கள்கூட, பின்னாளில் கி.ரா.வின் எழுத்துகளில் திளைத்து அவற்றை ரசிக்கத் தொடங்கிவிட்டார்.
வட்டார வழக்கில் எழுவதுவதைப் பற்றிக் கூறும்போது, “அப்படி எழுதும்போது நம் முன்னோர்களின் மொழியை நாம் ஆவணப்படுத்துகிறோம்” என்கிறார் கி.ரா. இதற்காகவே இவர் பல எழுத்தாளத் தோழமைகள் துணையுடன், “கரிசல் காட்டு வட்டாரச் சொல் அகராதி”யை உருவாக்கினார். இது தமிழுக்கு அவர் செய்த மிகப் பெரிய பங்களிப்பாகும். கி.ரா.வின் எழுத்துக்களில், அது கதையோ அல்லது கட்டுரையோ எதுவாக இருந்தாலும் நாலு பத்திக்குள் ஒரு சொலவடை வந்துவிடும். இந்தச் சொலவடைகளே, பாட்டிமார்கள் நமக்கு அருகில் அமர்ந்து கதை சொல்லும் உணர்வை ஏற்படுத்திவிடும்.
கி.ரா.வின் படைப்புலகம் பெரும்பாலும் கிராமங்களை மையமாகக் கொண்டே இருக்கும். பாம்படக் கிழவிகள் வாயில் ஊரும் வெற்றிலையோடு கலந்திருக்கும் கதைகளின் குரல் பதிவாகவே இருக்கும், அவரின் எழுத்துக்கள். எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் கதை சொல்லும் இவரின் பாங்கு அலாதியானது. அதைக் கேட்கும்போது எனக்கு, எங்கள் ஆச்சி அவ்வையார் விரதத்திற்குக் கதை சொல்வது ஞாபகம் வரும். ‘இப்படித்தான் ஒரு ராஜா இருந்தாராம்..’ என்று நீளும் கதை சொல்பவர்களாலேயே இந்தக் கதைகளுக்குக் கால் முளைத்து நம் மனத்திற்குள் காலடி பதிக்கும்.
இவர் எழுத்துக்களில் இழையோடும் நையாண்டியும் நகைச்சுவை உணர்வும் நமக்கு இவர் படைப்புகளை வாசிக்கும்போதெல்லாம் ஒரு ஆசுவாசத்தை ஏற்படுத்திவிடும். இன்று காப்பி/ டீ கடைகள் இல்லாத ஊர்களைப் பார்க்க முடியாது. ஆனால் அந்த நாட்களில் காப்பி/டீ என்றால் என்ன என்பதுகூட மக்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் காட்டுக்குப் போகும் முன்பு கொஞ்சம் நீராகாரம் குடிக்கவேண்டும் என்பது மட்டுமே. இப்படி இருந்த மக்களை எப்படி காப்பி / டீ பருக வைத்து அதற்கு அடிமையாக்கினார்கள் என்பதையும், முதன்முதலில் தான் ஒரு கும்பா நிறைய தேநீர் குடித்த அனுபவத்தையும் அழகாகச் சொல்லியிருக்கிறார் கி.ரா.
இதேபோல, முதல் ரயிலைப் பார்த்து மக்கள் நெடுஞ்சாண் கிடையாக விழுந்ததையெல்லாம் இவர் எழுத்தில் வாசிக்கும்போது நமக்கும் சிரிப்பாணி பொத்துக்கொள்ளும்.
கி.ரா. நாவல்கள் வகைமையில் மிகச் சொற்பமாகவே எழுதியிருக்கிறார். அவை, கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் மற்றும் அந்தமான் நாயக்கர் என்ற மூன்று நாவல்கள் மட்டுமே. மற்றவை அனைத்தும் குறுங்கதைகளே. மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றே கூறலாம். அந்தமான் நாயக்கர் சினிமாவுக்காக எழுதப்பட்ட கதையாம். மன்னராட்சிக் காலத்தில் நாயக்கர் சமூகத்து மக்கள் தங்கள் பெண்டுகளைப் பாதுகாக்க, பிற மாநிலங்களில் (ஆந்திரா மற்றும் கர்நாடகா) இருந்து புலம் பெயர்ந்து தமிழ்நாட்டிற்குக் குடிவந்ததை ஒரு வயதான கிழவியின் வாய்மொழியில் விவரிக்கிறது கோபல்ல கிராமம்.
அதன் தொடர்ச்சியாக, புலம் பெயர்ந்து ஒரு கிராமமாய் வாழும் சம்சாரிகளின் வாழ்க்கைப் பாடுகளையும் அவர்கள் சமூகத்தோடு எப்படி மற்ற சமூகத்தினர் ஒன்று கலந்து ஒரு கிரமமமாய் உருவானார்கள் என்பதையும் ஒரு அழகான சேலையை நெய்வதைப் போல எளிமையான நடையில் விவரிக்கிறார். சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமான கிராம மக்களின் எழுச்சி, காந்தியின் பேரில் மக்களுக்கு இருந்த கோபம் என்று பல விஷயங்களை நுட்பமாகவும் ஆழமாகவும் விவரிக்கிறது கோபல்லபுரத்து மக்கள். இதில் ஆசிந்துலு கிட்டப்பன் காதல் சேலையில் அழகாய்ச் சேர்த்து நெய்த ஜரிகை போலக் கூடுதல் மனோகரத்துடன் மிளிரும்.
இந்தியக் கொடியை ஏற்றியதால் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனைக்குப் பிறகு ஊர் திரும்பும் அழகிரி, அந்தமான் நாயக்கர் ஆகிறார். அவர் ஊருக்குள் நுழையும்போது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. அவரின் மனநிலையையும் சுதந்திரத்திற்குப் பிறகு வந்த அதிகாரிகளின் ஏதேச்சதிகாரப் போக்கையும் அதனால் சம்சாரிகளின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களையும் அக புற அழுத்தங்களையும் விரிவாக ஆராய்கிறது இந்த நாவல்.
கி.ரா.வின் நாயகிகள் எல்லாம் புற அழகையும் தாண்டித் தங்கள் உழைப்பால் நம் மனத்தில் நிலைபெறுபவர்கள். பெண்களின் உணர்வுகளைத் தன் படைப்புகளில் மிக நுட்பமாகக் கி.ரா. கையாண்டிருக்கிறார். ‘பேதை’ என்கிற சிறுகதையில் மனநலம் பிறழ்ந்த நிலையில் உள்ள ஒரு பெண், யாரால் தான் ஏமாற்றப்பட்டோம் என்று அறியாமல் கர்ப்பமாகிவிடுவதையும் அவள் குழந்தையின் மேல் அவளுக்குக் கரை காணாத அன்பு பீறிடுவதையும் ஒருகட்டத்தில் குழந்தை இறந்துபோகும்போது அந்தப் பெண்ணின் தவிப்பையும் அவர் எழுத்தில் வாசிக்கும்போது நம்மையும் அறியாமல் நம் மனம் பதைக்கும்; விழிகளில் நீர் கோர்த்துவிடும். இந்தக் கதையில் யார் அவளை அப்படி ஒரு நிலைக்குத் தள்ளியது என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், அந்தப் பெண்ணின் தாய்மை உணர்வை எழுதிய விதத்தில் கி.ரா. முத்திரை பதிக்கிறார்.
‘கன்னிமை’ கதையில் வரும் நாச்சியாரும் நம்மை வெகுவாக ஈர்ப்பாள். இந்தக் கதையைப்போல இயல்பாகப் பெண்ணியம் பேசும் கதைகளை இவ்வளவு வருடங்களுக்குப் பிறகுகூட யாராலும் எழுதிவிட முடியவில்லை என்றே தோன்றுகிறது.
‘கோமதி’ என்கிற கதையில் திருநங்கையாக மாறிக்கொண்டிருக்கும் ஒரு ஆணின் நினைவுகளை அசைபோடுகிறார். அறுபதுகளில் எழுதப்பட்ட இந்தக் கதை நமக்குக் கடத்தும் உணர்வுகள் அற்புதமானவை; மிகவும் துல்லியமானவை.
‘இந்த இவள்’ என்கிற குறுங்கதையில் அந்த இவளுக்கு என்ன பேர் என்பதைக் கடைசிவரை கூறியிருக்க மாட்டார். ஆனால் வயதானவரை மணமுடித்து விதவையாகிப்போன அவளின் கரை காண முடியாத காம உணர்வுகளையும் அதை வெல்ல அவள் எப்படித் தன்னை மடை மாற்றிக்கொள்கிறாள் என்பதையும் மிக நாசூக்காகச் சொல்லியிருப்பார். இந்தக் கதையில் ஒரு சிறப்பம்சம் உண்டு. புத்தகத்தின் இடப்புறம் கி.ரா.வின் கையெழுத்திலும் வலப்புறம் அச்செழுத்திலும் இருக்கும் விதத்தில் இந்த நூலை வடிவமைத்திருப்பார்கள். அநேகமாகத் தமிழில் இது முதல் முயற்சி என்றும் சொல்லலாம். 90 வயதைத் தாண்டியிருப்பினும் நடுக்கமில்லாத தெளிவான கையெழுத்து கி.ரா.வினுடையது. மனத்திற்குள் புகமுடியாத முதுமையால், பேனா பிடிக்கும் அந்த விரல்களுக்குள் மட்டும் புகுந்துவிட முடியுமா என்ன?!
காதல் இவர் மொழியில் எப்படிக் கையாளபட்டிருக்கும் என்று வாசிக்க எனக்கு மிகுந்த ஆவல் வந்தது. கோபல்லபுரத்து மக்களில் காதல் மெல்லிய நீரோடையாய் ஓடும். ஆனால் ‘கனிவு’ என்கிற சிறுகதை மூலம் இயல்பான கிராமத்துக் காதல் உலகத்தைக் காட்டி இருக்கிறார் கி.ரா. கிராமங்களில் புதிதாய் மணமான தம்பதிகளுக்கெல்லாம் சினிமாக்களில் காட்டுவதுபோல அன்று இரவே முதல் இரவாக அமைந்துவிடுவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் வாக்கப்பட்டுப் போகும்போது பல விஷயங்களை ஒரு பெண் கடக்க வேண்டியது இருக்கிறது. அது அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தையும் காதலையும் கனிய வைக்கும் என்பதை வெகு நாசூக்காகச் சொல்லி இருப்பார். காதலன் காதலியை ரசித்தான் என்பதைக்கூட இவர் நேரடியாக எழுதாமல், “பால் பீச்சும்போது அவள் பாத நுனியில் பல்லியின் வயிற்றில் முட்டை இருப்பது தெரிவதுபோல மனித ரத்தத்தின் சிவப்பு நிறம் தெரிந்தது. அதை அவன் பார்த்தான்” என்று எழுதுகிறார்.
‘கதவு’ கதையைப் போன்ற அழுத்தமான ஒரு சிறுகதையை இதற்கு முன்பும் பின்பும் யாரும் எழுதியிருக்க முடியாது. குழந்தைகளின் பார்வை வழியாகவே அந்தக் கதவு பறிபோன வேதனையும் துக்கமும் மிக நுட்பமாக நமக்குக் கடத்தப்பட்டிருக்கும். ‘ஒரு சம்சாரியின் கதை’யில் சம்சாரி படும் இன்னல்கள், அது சார்ந்த அரசியல் என்று அனைத்தும் அழகாகப் பின்னப்பட்டிருக்கும். நாற்காலி, மின்னல் இன்னும் எத்தனையோ கதைகளில் கி.ரா.வின் குறும்பும் அக்கறையும் வெளிப்பட்டிருக்கும்.
சிறுகதைகள், குறுங்கதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று எல்லாவற்றையும் கனக் கச்சிதமாக எழுதக்கூடிய மனிதர், பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காதவர் என்று சொன்னால் நம்பவா முடிகிறது?!
இவர் படைப்புகளில் இவருக்கு இயற்கை சார்ந்த ஆழமான அறிவு இருப்பது புலப்படும். பிஞ்சுகளில் பறவைகளின் வகைகள், அவை இடும் முட்டைகளின் வடிவங்கள்,தேன் சிட்டின் உடல் எந்த நிறத்தில் இருக்கும், வால்குருவி எப்படிச் சத்தமிடும் என்பதையெல்லாம் மிக உன்னிப்பாகக் கவனித்து எழுதியிருப்பார். வாலாட்டிக்குருவி, போர்க்குயில், கருங்குயில், வல்லயத்தான், தேன்கொத்தி, தேன்சிட்டு, தட்டைச்சிட்டு, செஞ்சிட்டு, பூஞ்சிட்டு, பட்டுச்சிட்டு, வேலிச்சிட்டு, முள்சிட்டு, மஞ்சள்சிட்டு, செஞ்சிட்டு கருஞ்சிட்டு, தைலான் பறவை, தாராக்கோழி, தண்ணிக்கோழி, இப்படி நிறைய பறவைகளின் பெயர்களைப் போகிறபோக்கில் அடுக்கிக்கொண்டே போகிறார் கி.ரா. காக்காய் பிடிப்பது என்றால் நிஜத்தில் எவ்வளவு கடினம் என்பதைப் ‘பிஞ்சுகள்’ வாசித்தால் தெரிந்துகொள்ள முடியும். வல்லயத்தான் பறவையை வைத்து வேட்டையாடுவதையும் திருவேதி நாயக்கரின் வாய்வழி அவர் கூறும் பறவைகளைப் பற்றிய தகவல்களும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும்.
கிடை குறுநாவலில் ஆடுகளின் அனைத்து வகைகளையும் விவரித்திருப்பார். இவ்வளவு நுணுக்கமான தகவல்களை அதே வாழ்வியலில் ஊறித் திளைத்தவர்களால்கூடத் தர இயலுமா என்று தெரியவில்லை. இடைக்காடர் சித்தர் கதை, ராமனின் கடைசி நாள் கதை, துரோபதி அம்மன் கதை, லட்சுமணனின் மனைவி ஊர்மிளையின் கதை என்று புராணக் கதைகளையும் இவர் விட்டுவைத்ததில்லை. அவை இதுவரை கேள்விப்படாத புது வகையில் இருப்பது மிகப் பெரிய ஆச்சர்யம்.
கழனியூரான் அவர்களுடன் சேர்ந்து கிராமங்களில் பேசப்பட்ட நாட்டுப்புறக் கதைகள், சொலவடைகள், பாடல்கள், பாலியல் கதைகள் என்று அனைத்தையும் சேகரித்துள்ளார். இவையெல்லாம் அவர் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் தமிழுக்குச் செய்த தொண்டு மட்டுமே. தென்காசி பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்துப் பெண்கள் வாரம் ஒருநாள் தன் பிறந்த வீட்டிற்குச் சென்று ‘சடவாறிட்டு’ வரேன் என்று செல்வார்களாம். அதென்ன சடவாறுவது என்றால், வாரம் ஆறு நாட்கள் புகுந்த வீட்டிக்காகச் செய்யும் வேலையால் களைப்பாகி, ஒருநாள் தன் பெற்றவர்கள் வீட்டிற்குப் போய் அந்தச் சடைப்பை ஆற்றிக்கொள்வதாக ஒரு ஐதீகம். அந்த ஊரில் இதைச் சடவாறுவது என்று கூறுவார்களாம். திருமணமான பெண் சாகும் வரை, எத்தனை வயதானாலும் அவர்களுக்கு இந்த முறைமை பின்பற்றப்படுகிறது.
இந்தத் தகவல்களை எதற்காக நாம் சேகரிக்க வேண்டும், இதிலிருந்து நமக்குத் தெரியப்போவது என்ன என்று கேள்வி எழுப்பியபோது, இந்த முறைமை மூலம் பெண்களுக்கு வாரத்தில் ஒருநாள் சுதந்திரம் தரப்பட்டதைக் குறிப்பிட்டு, இது பெண்ணுரிமைக்கான ஆதாரம் என்றாராம். எப்படி வாழை மரத்தில் அனைத்துப் பகுதிகளையும் நாம் உபயோகப்படுத்துக்கிறோமோ அப்படி, மக்களின் வாய் வழி உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் நாம் சேகரித்து ஆவணப்படுத்த வேண்டும் என்பது கி.ரா.வின் நிலைப்பாடு.
ஒரு பேட்டியின்போது, ‘நீங்கள் எழுத்தாளராக இல்லாமல் இருந்திருந்தால் என்னவாகி இருந்திருப்பீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘நான் ஒரு பாடகனாக ஆகி இருப்பேன்’ என்று கூறியிருக்கிறார். அவரின் கதைகளின் வழி அவரை அனுமானிக்க எண்ணுபவர்கள், அவர் நாட்டுப்புறப் பாடல்கள் மேல் ஆர்வம் கொண்டவர் என்று நினைக்கக்கூடும். ஆனால், நம் கற்பனைகளைத் தகர்த்தெறியும் வகையில் நிஜத்தில் அவர் மிகப் பெரிய கர்நாடக இசைக் கலைஞர். அவருடைய ஆத்ம நண்பரான கு. அழகிரிசாமியுடன் சின்ன வயதிலிருந்து ஒன்றாய் பஜனை மடங்களில் பாடல்கள் பாடி வந்தவர். ஒருகட்டத்தில் இசையின் மேல் இருந்த ஆர்வத்தால், குருமலை பொன்னுச்சாமிப் பிள்ளை அவர்களிடம் முறையாக இசை பயின்றிருக்கிறார். கி.ராவும் கு.அழகிரிசாமியும் ஒன்றாய் இணைந்து தமிழில் சில கீர்த்தனைகளை வடித்திருக்கிறார்கள். ஆனால் அவற்றைக் கர்நாடக இசை உலகம் அங்கீகரிக்கவில்லை. அதைப்பற்றிக் கவலையும் அவர்களுக்கு இல்லை. கர்நாடக இசைக் கலைஞர்களைக் குறித்துக் கி.ரா. எழுதிய அனைத்துக் கட்டுரைகளையும் கழனியூரான் தொகுத்திருக்கிறார். பெரும்பாலும் கி.ரா. ரசிகமணி டி.கே.சி., திருவாவடுதுறை ராஜரத்தினம், காருக்குறிச்சி அருணாச்சலம், விளாத்திகுளம் சுவாமிகள், வில்லிசைக் கலைஞர் பிச்சுக்குட்டி என்று இவர்களின் கச்சேரிகளையும் வாசிப்பையும் பற்றியே நிறைய எழுதியிருக்கிறார்.
கி.ரா.வின் வீட்டில் ஒரு நீண்ட அறை இருந்ததாம் அங்குதான் அவருடைய நண்பர்கள், பாடகர்கள் அனைவருடம் அமர்ந்து கச்சேரிகள் செய்வார்களாம். அந்த இடத்திற்கு சங்கீத மஹால் என்று பெயரிட்டாராம் விளாத்திகுளம் சுவாமிகள். காருக்குறிச்சி அருணாச்சலம் கி.ரா.வின் ஊரில் பெண் எடுத்ததால், அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற கி.ரா. அடிக்கடி அவரை ராகங்களின் வடநாட்டு வடிவங்களை இசைத்துக் காட்டச்சொல்லி ரசித்து மகிழ்வாராம். ஏற்கனவே தெரிந்த ராகங்களைப் பல வித்யாசமான புது வடிவத்தில் வழங்கியவர்கள் என்று மூன்று பேரைக் குறிப்பிடுகிறார் கி.ரா. விளாத்திகுளம் சுவாமிகள், திருவாவடுதுறை ராஜரத்தினம் மற்றும் டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோரே அம்மூவர்.
சுதந்திரத்திற்குப் பின்பான காங்கிரஸ் ஆட்சியின்போது வரி வசூல் செய்வதற்காக சம்சாரிகளின் மாடுகளையெல்லாம் பறிமுதல் செய்து பவுண்டு என்கிற கால்நடைகளுக்கான ஜெயிலில் வைத்திருந்தார்களாம். இதை எதிர்த்துப் பாடப்பட்ட பல வில்லிசைக் கச்சேரிகளில் பானை தாளம் எப்படி அபாரமாக வேலை செய்தது என்பதை அவர் இப்படிக் கூறுகிறார்:
“பானை தாளம், சலங்கை ஒலியோடு மேடையில் இசைக்கத் தொடங்கினால், தெரு வழியாக நடந்துசெல்வோரை நிற்கச் செய்யும். மீறி நடந்துபோகிறவர்கள் அந்தத் தாள லயத்திற்கு ஏற்பத் தப்படிகளை வைக்கச் சொல்லும். நம்முடைய இதயத் துடிப்புகூட இந்தத் தாளத்திற்கு ஏற்பத்தான் அடிக்கும் என்று நான் சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்” என்று ரசனையுடன் பகிர்கிறார் கி.ரா.
தமிழில் ஏன் நிறைய கீர்த்தனைகள் இல்லை? எதைச் செய்தால் தமிழிசையை முன்னேற்றலாம்? போன்ற ஆலோசனைகளைத் தன் இசை சார்ந்த கட்டுரைகளில் தருகிறார். இளையராஜா ராகங்களில் செய்யும் வித்தைகளைப் போற்றுகிறார். பழைய காலத்துக் கிராமபோன் ரெக்கார்டில் இருந்து தொடங்கி, நவீன காலத்து மெமரி கார்ட் வரை அனைத்து சாதனங்களையும் பயன்படுத்திப் பாடல்களைக் கேட்ட பெருமை கி.ரா.வையே சேரும். இறுதிக்காலங்களில் அவர் பயன்படுத்திய கார்வான் இசைக்கருவியைத் தற்போது அவருடைய இடைச்செவல் வீட்டில் காணலாம்.
கி.ரா.வின் எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்துவரும் எந்த வாசகருக்கும் இவர் ஒரு சமூகத்தினரின் வாழ்க்கைப்பாடுகளைப் பற்றி மட்டுமே எழுதியிருப்பதாய்த் தோன்றலாம். ஆனால், இப்படி ஒரு சமூகத்தினரின் பழக்க வழக்கங்கள், உணவு வகைகள், சடங்குகள் என்று அனைத்தையும் தன் படைப்புகளில் ஆவணப்படுத்துவதை இன வரைவியல் என்று கூறுகிறார்கள். இன வரைவியல் (Ethnography) என்பது, கள ஆய்வுகளின் அடிப்படையில், மனித சமூகத் தோற்றப்பாடுகள் தொடர்பான பண்புநிலை விளக்கமாக அமையும் ஒருவகை எழுத்தாக்கம் ஆகும். தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப்பற்றி எழுதுவது இனவரைவியல் எனலாம். தமிழில் இந்த வகையான எழுத்துக்கும் கி.ரா.வே முன்னோடியாகத் திகழ்கிறார்.
தன்னுடைய நீளமான பெயர் குறித்துக் கி.ரா. கூறுவதாவது: “கிறிஸ்தவர்களுக்கு எப்படி ஞானஸ்தானம் என்று இருக்கிறதோ அப்படி வைணவர்களுக்கு முத்திரைத் ஸ்தானம் என்று உண்டாம். அத்தகைய முத்திரைத் ஸ்தானம் பெற்றவர்களின் பெயர்கள் மாற்றப்படும். அவர்கள் முழு வைணவர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள். ஆண்களுக்குப் பெரும்பாலும் ராமானுஜம் என்று முடிகிற பெயர்களைத்தான் வைப்பார்கள். இவர்களை மணிகட்டி வைணவப் பரம்பரை என்றும் கூறுவார்களாம். அதாவது, இரண்டு காதுகளிலும் வெள்ளியில் செய்த சிறு மணியைப் போட்டிருப்பார்கள். யாராவது சிவனைப் பற்றிப் பேசினால் உடனே வேகமாகத் தலையைக் குலுக்க வேண்டும். அப்படிக் குலுக்கும்போது மணிகள் ஒலித்து சிவநாமத்தைக் கேட்க முடியாமல் செய்துவிடுமாம். இப்படி மணிக்கட்டிப் பரம்பரையில் வந்த கி.ரா. அவர்கள் வைணவத்தில் பற்றுடன் இருந்தாரா என்பது பற்றி அதிகக் குறிப்புகள் இல்லை. ஆனால் அவர் எழுத்துக்கள் சம்சாரிகளைச் சுற்றியேதான் இருந்தன. அவர் தன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக இருக்கவே விரும்பினார். முக்கியமாக, எளிய மக்களின் குரலாகத்தான் அவர் கதைகள் வெளிப்பட்டன.
வாசிப்பைத் தொடங்கியிருக்கும் ஆரம்ப வாசகர்களிலிருந்து முதிர்ந்த இலக்கிய மேதைகள் வரை அனைவரும் வியக்கும்படியான, எளிமையான, சுவை குன்றாத எழுத்து நடை கி.ரா.வினுடையது.
கி.ரா.வினுடைய நினைவேந்தல் நிகழ்வில் அவரைப் பற்றிப் பேசிய அனைவருமே, அவரால் மட்டுமே கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் உருவாகியிருப்பதாய்க் கூறினார்கள். இவ்வளவு பெரிய பங்களிப்பை வேறு யாருமே இதுவரை தமிழ் எழுத்துலகில் நிகழ்த்தியிருப்பதாய் நான் அறியவில்லை. கி.ரா. என்பவர் வெறும் எழுத்தாளர் அல்லர். நூறாண்டு காலம் கரிசல் மண்ணில் போராடும் சம்சாரிகளுக்குள் ஒளிந்திருக்கும் இசையை அகழ்ந்தெடுத்து, நமக்கு அழகாகப் பாடிக்காட்டும் அற்புதக் கலைஞர். விருதுகள் இந்தக் கலைஞனுக்கு வழங்கப்பட்டதாலேயே கௌரவத்தை அடைந்தாய்த்தான் எனக்குத் தோன்றுகிறது.
இதுவரை சொன்னவை கொஞ்சம்; சொல்லாதவை ஏராளம். இத்தனைச் சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான கி.ரா. நுழைபுலம் அமர்வில் பங்கேற்றுப் பேசும்போது, அவரை எல்லாரும் ‘ஐயா’ என்று அழைக்க, “ஐயா என்று அழைக்காதீர்கள்; என்னைக் கி.ரா. என்றே அழையுங்கள். அதுவே எனக்கான அங்கீகாரம்” என்று குறிப்பிட்டார். மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்களே!
- இந்து கணேஷ்

Rasal
September 16, 2023கி.ரா அவர்கள் தமிழ் மொழிக்கு கிடைத்த வைரக்கல். அவருடைய சிறுகதைகள் ஆழமான கருத்துக்களையும், அளவில்லாத மகிழ்ச்சியையும் தரக்கூடியவை. கதவு, கன்னிமை, நாற்காலி, மின்னல், கொத்தைப்பருத்தி, குடும்பத்தில் ஒரு நபர் என எண்ணற்ற கதைகள் மிகவும் பிடித்தவை… வாசிக்க இனிமையானவை. நெல்லைத்தமிழ் சீறிப்பாயும் கதைகளில். உண்மையிலேயே மேன்மக்கள்…மேன்மக்களே!!!🌹🌹🌹
ம. செ. மோகன் ராஜா
September 16, 2023அருமையான கட்டுரை. ❤️
பானுரேகா
September 16, 2023அருமையான கட்டுரை இந்து. வாசிப்பை நேசிப்போம் குழு மூலம் அவர் வாழ்ந்த இடங்களை பார்வையிடும் போது அவருடைய படைப்புகள் தான் முன் நின்றன… அதுபோலவே உங்கள் எழுத்தும் அனைத்தையும் நினைவு படுத்துகின்றன வாழ்த்துகள் இந்து 🎈💜
Kulashekar T
September 21, 2023அற்புதம் இந்து. அழைக்கத் தானே பெயர். நீ குறிப்பிட்டு இருக்கிற படைப்புகள் யாவும் அவரின் முத்திரை கதைகள். சிநேகம் படித்துப் பார். காதலின் நுண்மை பிடிக்கும் 🌼