சிறுகதை வரலாற்றின் சீர்மிகு முத்திரை

சிறுகதை வரலாற்றின் சீர்மிகு முத்திரை

கு. அழகிரிசாமி நூற்றாண்டு நிறைவு சிறப்புக் கட்டுரை சிறுகதை என்பது வெறும் மகிழ்வூட்டற் சாதனமாக இல்லாது, படித்து முடிப்பவர் சிந்தனையில் ஒரு சிறந்த கருத்தை, உண்மையை, கையிருப்பாக விட்டுச்செல்ல வேண்டும். கருத்து, அழுகுணிச் சித்தர்களின் அவலக் குரலாகவோ அல்லது நம்பிக்கை வறட்சியின் கரகரப்பாகவோ இருக்கக்கூடாது. மாறாக, வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவுவதாக, உண்மையான மனித வாழ்க்கைக்குப் பாதை காட்டும் மணி விளக்கங்களாக இருக்க வேண்டும். இத்தகைய லட்சணங்களைக் கொண்டவைதான் கு.அழகிரிசாமியின் கதைகள் என்பதற்கு மாறான கருத்து கிடையாது. பாத்திரங்களைக் கையாளும் முறையிலும் சம்பவங்களை விளக்கும் நகைச்சுவைத் திறனிலும் எதார்த்த வாழ்வின் அடித்தளத்தில் காணப்படும் மனிதநேய நிலைகளை எடுத்துக்காட்டும் சிறப்பிலும் இவருக்கு நிகர் இவரே. 1970இல் முதன்முதலில் ‘அன்பளிப்பு’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகதமி விருது பெற்ற தமிழர் இவரே. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கும் கயத்தாருக்கும் இடையே உள்ள சிற்றூரான இடைச்செவலில் 23.09.1923இல் பிறந்த இவருடைய நூற்றாண்டு நிறைவு இன்று. இவரது ஊரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற பெருமைக்கு உரியவர். தனது 13ஆவது வயதிலேயே கம்பராமாயணம், சிலப்பதிகாரம், நளவெண்பா, பாரதியார் பாடல்கள் ஆகியவற்றைப் படிக்க ஆர்வம் கொண்டார் முதலில் ஆசிரியராகவும் பிறகு சார் பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தராகவும் 35 ரூபாய் ஊதியத்தில் பணி புரிந்தார். அலுவலகத்தில் நாள்தோறும் பத்திரங்கள் பதிவதில் இவருக்கு ஈடுபாடு இல்லாத காரணத்தால், சென்னைக்கு வந்து சேர்ந்தார். 1943இல் ‘உறக்கம் கொள்ளுமா?’ என்ற சிறுகதை வெளிவந்த ஆனந்தபோதினி என்ற பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த இவரை ஆனந்த போதினி, பிரசண்ட விகடன் இதழ் ஆசிரியரான நாரணத்துரைக் கண்ணன், இவரது எழுத்தாற்றலைப் புரிந்துகொண்டு உதவி ஆசிரியர் பதவியை வழங்கினார். பின்பு, தமிழ்மணி அரசியல் வார இதழில் சேர்ந்தார். ஒரே ஊர்க்காரரான கி. ராஜநாராயணன் இவருக்கு ஏழு நாளே மூத்தவர். இவரது பால்யத்திலும் இறுதி வரையிலும் நண்பர். இருவரும் பாரம்பரிய இசையில் பிரியம் தொண்டிருந்தனர். சக்தி என்ற பத்திரிகையின் ஆசிரியர் தி.ஜ.ரங்கநாதனுக்குப் பிறகு, கு.அழகிரிசாமி சக்தி பத்திரிக்கையின் ஆசிரியராகப் பதவி ஏற்றார். சோவியத் நாடு, பிரசண்ட விகடன், தமிழ் நேசன் (மலேசியா) ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். 1960ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்து, நவசக்தியில் கடமையாற்றினார். பத்திரிகை ஆசிரியர் மட்டுமின்றி, மொழிபெயர்ப்பதிலும் சிறந்து விளங்கினார். இவருக்கு மிகவும் பிடித்த ரஷ்ய எழுத்தாளரான மாக்ஸிம் கார்க்கியின் ‘அமெரிக்காவிலே’ என்ற நூலை மொழிபெயர்ப்பு செய்தார். இது இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல் ஆகும். தனது 20 ஆண்டு காலப் பணியில் 9 நூல்களை மொழிபெயர்த்துள்ளார். ஆரம்பக் காலத்தில் இடதுசாரிச் சிந்தனையாளராக விளங்கிய கு.அழகிரிசாமி, சோவியத் நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்ற உலகப் புகழ்பெற்ற நூல், இவரது இஷ்டமான நூலாகும். கடைசியாக இவர் மொழிபெயர்த்த நூல், ‘அறிவியலின் எல்லை’ என்பதாகும். இந்த நூல் சென்னை அமெரிக்க தூதரகத்தின் சார்பாக மொழிபெயர்க்கப்பட்டது. காந்தி நினைவு அறக்கட்டளை சார்பிலான பதிப்பகத்தின் துணை ஆசிரியராக இருந்தார். காந்தியின் எழுத்துகளைத் தொகுத்தார். ஆரோக்கியத் திறவுகோல், இயற்கை வைத்தியம், ராம ராம நாமம் போன்ற காந்தியின் நூல்களை வெளியிட்டார். தகவல் ஒளிபரப்புத் துறையின் சார்பாக ராஜேந்திர பிரசாத் சொற்பொழிவுகளை மொழிபெயர்த்தார். மலேசியா தமிழ் நேசனில் பணியாற்றியபோது 30 நாடகங்களை எழுதியுள்ளார். 1952 முதல் 1957 வரை ஐந்து ஆண்டுகள் மலேசியாவில் தமிழ் நேசன் என்னும் பத்திரிக்கையின் இலக்கிய ஆசிரியராக இருந்து, தனக்கிருந்த புனைக் கதையாக்கத் திறனாலும் நட்பு சுபாவத்தினாலும் சிறுகதையாக்க மரபை வளர்த்தார். கடிதம் எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவரது கடிதங்களைத் தொகுத்து கி.ராஜநாராயணன், ‘கு.அழகிரிசாமி கடிதங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். ஆழ்ந்த தமிழ் இலக்கிய அறிவுள்ள அழகிரிசாமி, கம்பராமாயணத்தின் முதல் ஐந்து காண்டங்களையும் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தினையும் பதிப்பித்துள்ளார். இலக்கியச் சுவை, இலக்கியத்தேன், இலக்கிய அமுதம், இலக்கிய விருந்து என்ற கட்டுரைத் தொகுதிகள் இவரது தமிழ் அறிவையும் ரசனைச் சிறப்பையும் புலப்படுத்தக்கூடியன. தான் கூற விரும்புவனவற்றைத் தனது கதைகளின் மூலமே கூறுவது இவரது சிறுகதைகளின் சிறப்பு. கதைப் பொருளான சம்பவத்தையும் சம்பவத்தை விவரிக்கும் முறையிலேயேயும் அழகிரிசாமியின் கதையாடலை அறிந்துகொள்ள முடியும். மனிதநேயப் பண்பினையே கொண்டிருப்பது இவரது கதைகளைப் பலரும் விரும்புவதற்கு முக்கியக் காரணமாகும். ஒன்றிற்கொன்று கருத்தாலும் பண்பாலும் மாறுபட்ட இதழ்களான தாமரை, கலைக்கதிர், கல்கி, எழுத்து ஆகியன இவரது கதைகளை வேண்டிப் பெற்றுப் பிரசுரிப்பது வழக்கம். மணிக்கொடியின் கடைசிக் கொழுந்துகளில் ஒருவரான கு. அழகிரிசாமியின் கதைகள், தமிழ்ச் சிறுகதையின் வளத்தைக் காட்டுவனாகவே இருக்கின்றன. சிறுகதையின் முக்கியப் பண்பு மனித நிலையைச் சிறப்புறக் காட்டுவது. இந்த அடிப்படையில் கு.அழகிரிசாமியின் சிறுகதைகள், தரத்திலும் வடிவத்திலும் மகத்தான இலக்கியமாகத் திகழ்கின்றன. –

கரிசல் இலக்கியக் கதாநாயகன்

கரிசல் இலக்கியக் கதாநாயகன்

கி.ரா. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை கி.ரா. என்று பிரியமாய் அழைக்கப்படுகிற கி. ராஜநாராயணன் அவர்கள் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அறியப்பட்டவர். இவரது முழுப்பெயர் ராயங்குல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் என்பதாகும். எதனால் தனக்கு இவ்வளவு நீளமான பெயர் வந்தது என்பதைக்கூட எள்ளல் நடையுடன் எழுத இவரால் மட்டுமே முடியும். அது என்ன என்பதை கட்டுரையின் இறுதியில் சொல்கிறேன். இவரது காலம் செப்டம்பர் 16, 1922 முதல் மே 17, 2021 வரை. கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 98 ஆண்டுகள் வாழ்ந்த கி. ரா, இந்தியாவை சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் கண்டவர். இதனால்தான் இவரால் இன்றைய அறிவியல் முன்னேற்றங்களைக் காணாத, கல்வியறிவு இல்லாத அசல் கிராமங்களைப் பற்றி எழுத முடிந்திருக்கிறது. கி. ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று கூறும் கி.ரா., இந்திய சுதந்திரத்திற்கு முன்பு எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுத் தாளில் ஸ்ரீராமஜெயத்திற்கு பதில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதியதால் தேர்வில் தோற்றுப் போனார். பிறகு அப்படியே தன் படிப்பை நிறுத்திக்கொண்டார். பள்ளிப் படிப்பு மட்டுமே படிப்பல்ல; அனுபவம் கற்றுக் கொடுக்கும் கல்வி அளப்பரியது என்பதைத் தன் எழுத்தின் வழி நிரூபித்த கி.ரா., 1991ஆம் ஆண்டில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வருகை தரும் சிறப்புப் பேராசியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். சாகித்ய அகாடமி விருது, இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற கி.ரா. தனது இறுதிக் காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்தார். தமிழ் இலக்கியத்தில் கி.ரா.வின் பங்களிப்பு இன்றியமையாதது. தமிழ் எழுத்துலகில் முதன்முதலில் வட்டார வழக்கில் எழுதியவர் இவர்தான். பேச்சு வழக்கு ஒருபுறம் இருக்க, எழுதினால் அது தூய தமிழில்தான் இருக்க வேண்டும் என்ற விதியை நம் எழுத்தாளர்கள் கடைபிடித்து வந்தார்கள். அந்த முறைமையை மாற்றி, தன் முதல் நாவலான ‘கோபல்ல கிராம’த்தை வித்தியாசமான முறையில் எழுதி ஒரு நாவல் போட்டிக்கு அனுப்பியிருக்கிறார் கி.ரா. அதை வாசித்துப் பார்த்த நடுவர்களுக்கு ஆச்சரியம் ஒருபுறம் இருந்தாலும் இதை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்ற தயக்கம் இருந்ததாம். ஏனெனில், வட்டார வழக்கில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருந்ததால் அவர்களுக்கு அப்படி ஒரு தயக்கம் வந்திருக்கிறது. பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு, கோபல்ல கிராமத்துக்கே முதல் பரிசு என்று அறிவித்தார்கள். இதை நாவல் என்றே சொல்ல முடியாது என்று கோபல்ல கிராமத்தை ஏற்க மறுத்த சுந்தர ராமசாமி அவர்கள்கூட, பின்னாளில் கி.ரா.வின் எழுத்துகளில் திளைத்து அவற்றை ரசிக்கத் தொடங்கிவிட்டார். வட்டார வழக்கில் எழுவதுவதைப் பற்றிக் கூறும்போது, “அப்படி எழுதும்போது நம் முன்னோர்களின் மொழியை நாம் ஆவணப்படுத்துகிறோம்” என்கிறார் கி.ரா. இதற்காகவே இவர் பல எழுத்தாளத் தோழமைகள் துணையுடன், “கரிசல் காட்டு வட்டாரச் சொல் அகராதி”யை உருவாக்கினார். இது தமிழுக்கு அவர் செய்த மிகப் பெரிய பங்களிப்பாகும். கி.ரா.வின் எழுத்துக்களில், அது கதையோ அல்லது கட்டுரையோ எதுவாக இருந்தாலும் நாலு பத்திக்குள் ஒரு சொலவடை வந்துவிடும். இந்தச் சொலவடைகளே, பாட்டிமார்கள் நமக்கு அருகில் அமர்ந்து கதை சொல்லும் உணர்வை ஏற்படுத்திவிடும். கி.ரா.வின் படைப்புலகம் பெரும்பாலும் கிராமங்களை மையமாகக் கொண்டே இருக்கும். பாம்படக் கிழவிகள் வாயில் ஊரும் வெற்றிலையோடு கலந்திருக்கும் கதைகளின் குரல் பதிவாகவே இருக்கும், அவரின் எழுத்துக்கள். எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் கதை சொல்லும் இவரின் பாங்கு அலாதியானது. அதைக் கேட்கும்போது எனக்கு, எங்கள் ஆச்சி அவ்வையார் விரதத்திற்குக் கதை சொல்வது ஞாபகம் வரும். ‘இப்படித்தான் ஒரு ராஜா இருந்தாராம்..’ என்று நீளும் கதை சொல்பவர்களாலேயே இந்தக் கதைகளுக்குக் கால் முளைத்து நம் மனத்திற்குள் காலடி பதிக்கும். இவர் எழுத்துக்களில் இழையோடும் நையாண்டியும் நகைச்சுவை உணர்வும் நமக்கு இவர் படைப்புகளை வாசிக்கும்போதெல்லாம் ஒரு ஆசுவாசத்தை ஏற்படுத்திவிடும். இன்று காப்பி/ டீ கடைகள் இல்லாத ஊர்களைப் பார்க்க முடியாது. ஆனால் அந்த நாட்களில் காப்பி/டீ என்றால் என்ன என்பதுகூட மக்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் காட்டுக்குப் போகும் முன்பு கொஞ்சம் நீராகாரம் குடிக்கவேண்டும் என்பது மட்டுமே. இப்படி இருந்த மக்களை எப்படி காப்பி / டீ பருக வைத்து அதற்கு அடிமையாக்கினார்கள் என்பதையும், முதன்முதலில் தான் ஒரு கும்பா நிறைய தேநீர் குடித்த அனுபவத்தையும் அழகாகச் சொல்லியிருக்கிறார் கி.ரா. இதேபோல, முதல் ரயிலைப் பார்த்து மக்கள் நெடுஞ்சாண் கிடையாக விழுந்ததையெல்லாம் இவர் எழுத்தில் வாசிக்கும்போது நமக்கும் சிரிப்பாணி பொத்துக்கொள்ளும். கி.ரா. நாவல்கள் வகைமையில் மிகச் சொற்பமாகவே எழுதியிருக்கிறார். அவை, கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் மற்றும் அந்தமான் நாயக்கர் என்ற மூன்று நாவல்கள் மட்டுமே. மற்றவை அனைத்தும் குறுங்கதைகளே. மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றே கூறலாம். அந்தமான் நாயக்கர் சினிமாவுக்காக எழுதப்பட்ட கதையாம். மன்னராட்சிக் காலத்தில் நாயக்கர் சமூகத்து மக்கள் தங்கள் பெண்டுகளைப் பாதுகாக்க, பிற மாநிலங்களில் (ஆந்திரா மற்றும் கர்நாடகா) இருந்து புலம் பெயர்ந்து தமிழ்நாட்டிற்குக் குடிவந்ததை ஒரு வயதான கிழவியின் வாய்மொழியில் விவரிக்கிறது கோபல்ல கிராமம். அதன் தொடர்ச்சியாக, புலம் பெயர்ந்து ஒரு கிராமமாய் வாழும் சம்சாரிகளின் வாழ்க்கைப் பாடுகளையும் அவர்கள் சமூகத்தோடு எப்படி மற்ற சமூகத்தினர் ஒன்று கலந்து ஒரு கிரமமமாய் உருவானார்கள் என்பதையும் ஒரு அழகான சேலையை நெய்வதைப் போல எளிமையான நடையில் விவரிக்கிறார். சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமான கிராம மக்களின் எழுச்சி, காந்தியின் பேரில் மக்களுக்கு இருந்த கோபம் என்று பல விஷயங்களை நுட்பமாகவும் ஆழமாகவும் விவரிக்கிறது கோபல்லபுரத்து மக்கள். இதில் ஆசிந்துலு கிட்டப்பன் காதல் சேலையில் அழகாய்ச் சேர்த்து நெய்த ஜரிகை போலக் கூடுதல் மனோகரத்துடன் மிளிரும். இந்தியக் கொடியை ஏற்றியதால் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனைக்குப் பிறகு ஊர் திரும்பும் அழகிரி, அந்தமான் நாயக்கர் ஆகிறார். அவர் ஊருக்குள் நுழையும்போது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. அவரின் மனநிலையையும் சுதந்திரத்திற்குப் பிறகு வந்த அதிகாரிகளின் ஏதேச்சதிகாரப் போக்கையும் அதனால் சம்சாரிகளின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களையும் அக புற அழுத்தங்களையும் விரிவாக ஆராய்கிறது இந்த நாவல். கி.ரா.வின் நாயகிகள் எல்லாம் புற அழகையும் தாண்டித் தங்கள் உழைப்பால் நம் மனத்தில் நிலைபெறுபவர்கள். பெண்களின் உணர்வுகளைத் தன் படைப்புகளில் மிக நுட்பமாகக் கி.ரா. கையாண்டிருக்கிறார். ‘பேதை’ என்கிற சிறுகதையில் மனநலம் பிறழ்ந்த நிலையில் உள்ள ஒரு பெண், யாரால் தான் ஏமாற்றப்பட்டோம் என்று அறியாமல் கர்ப்பமாகிவிடுவதையும் அவள் குழந்தையின் மேல் அவளுக்குக் கரை காணாத அன்பு பீறிடுவதையும் ஒருகட்டத்தில் குழந்தை இறந்துபோகும்போது அந்தப் பெண்ணின் தவிப்பையும் அவர் எழுத்தில் வாசிக்கும்போது நம்மையும் அறியாமல் நம் மனம் பதைக்கும்; விழிகளில் நீர் கோர்த்துவிடும். இந்தக் கதையில் யார் அவளை அப்படி ஒரு நிலைக்குத் தள்ளியது என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், அந்தப் பெண்ணின் தாய்மை உணர்வை எழுதிய விதத்தில் கி.ரா. முத்திரை பதிக்கிறார். ‘கன்னிமை’ கதையில் வரும் நாச்சியாரும் நம்மை வெகுவாக ஈர்ப்பாள். இந்தக் கதையைப்போல இயல்பாகப் பெண்ணியம் பேசும் கதைகளை இவ்வளவு வருடங்களுக்குப் பிறகுகூட யாராலும் எழுதிவிட முடியவில்லை என்றே தோன்றுகிறது. ‘கோமதி’ என்கிற கதையில் திருநங்கையாக மாறிக்கொண்டிருக்கும் ஒரு ஆணின் நினைவுகளை அசைபோடுகிறார். அறுபதுகளில் எழுதப்பட்ட இந்தக் கதை நமக்குக் கடத்தும் உணர்வுகள் அற்புதமானவை; மிகவும் துல்லியமானவை. ‘இந்த இவள்’ என்கிற குறுங்கதையில் அந்த இவளுக்கு என்ன பேர் என்பதைக் கடைசிவரை கூறியிருக்க மாட்டார். ஆனால் வயதானவரை மணமுடித்து விதவையாகிப்போன அவளின் கரை காண முடியாத காம உணர்வுகளையும் அதை வெல்ல அவள் எப்படித் தன்னை மடை மாற்றிக்கொள்கிறாள் என்பதையும் மிக நாசூக்காகச் சொல்லியிருப்பார். இந்தக் கதையில் ஒரு சிறப்பம்சம் உண்டு. புத்தகத்தின் இடப்புறம் கி.ரா.வின் கையெழுத்திலும் வலப்புறம் அச்செழுத்திலும் இருக்கும் விதத்தில் இந்த நூலை வடிவமைத்திருப்பார்கள். அநேகமாகத் தமிழில் இது முதல் முயற்சி என்றும் சொல்லலாம். 90 வயதைத் தாண்டியிருப்பினும் நடுக்கமில்லாத தெளிவான கையெழுத்து கி.ரா.வினுடையது. மனத்திற்குள் புகமுடியாத முதுமையால், பேனா பிடிக்கும் அந்த விரல்களுக்குள் மட்டும் புகுந்துவிட முடியுமா என்ன?! காதல் இவர் மொழியில் எப்படிக் கையாளபட்டிருக்கும் என்று வாசிக்க எனக்கு மிகுந்த ஆவல் வந்தது. கோபல்லபுரத்து மக்களில் காதல் மெல்லிய நீரோடையாய் ஓடும். ஆனால் ‘கனிவு’ என்கிற சிறுகதை மூலம் இயல்பான கிராமத்துக் காதல் உலகத்தைக் காட்டி இருக்கிறார் கி.ரா. கிராமங்களில் புதிதாய் மணமான தம்பதிகளுக்கெல்லாம் சினிமாக்களில் காட்டுவதுபோல அன்று இரவே முதல் இரவாக அமைந்துவிடுவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் வாக்கப்பட்டுப் போகும்போது பல விஷயங்களை ஒரு பெண் கடக்க வேண்டியது இருக்கிறது. அது அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தையும் காதலையும் கனிய வைக்கும் என்பதை வெகு நாசூக்காகச் சொல்லி இருப்பார். காதலன் காதலியை ரசித்தான் என்பதைக்கூட இவர் நேரடியாக எழுதாமல், “பால் பீச்சும்போது அவள் பாத நுனியில் பல்லியின் வயிற்றில் முட்டை இருப்பது தெரிவதுபோல மனித ரத்தத்தின் சிவப்பு நிறம் தெரிந்தது. அதை அவன் பார்த்தான்” என்று எழுதுகிறார். ‘கதவு’ கதையைப் போன்ற அழுத்தமான ஒரு சிறுகதையை இதற்கு முன்பும் பின்பும் யாரும் எழுதியிருக்க முடியாது. குழந்தைகளின் பார்வை வழியாகவே அந்தக் கதவு பறிபோன வேதனையும் துக்கமும் மிக நுட்பமாக நமக்குக் கடத்தப்பட்டிருக்கும். ‘ஒரு சம்சாரியின் கதை’யில் சம்சாரி படும் இன்னல்கள், அது சார்ந்த அரசியல் என்று அனைத்தும் அழகாகப் பின்னப்பட்டிருக்கும். நாற்காலி, மின்னல் இன்னும் எத்தனையோ கதைகளில் கி.ரா.வின் குறும்பும் அக்கறையும் வெளிப்பட்டிருக்கும். சிறுகதைகள், குறுங்கதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று எல்லாவற்றையும் கனக் கச்சிதமாக எழுதக்கூடிய மனிதர், பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காதவர் என்று சொன்னால் நம்பவா முடிகிறது?! இவர் படைப்புகளில் இவருக்கு இயற்கை சார்ந்த ஆழமான அறிவு இருப்பது புலப்படும். பிஞ்சுகளில் பறவைகளின் வகைகள், அவை இடும் முட்டைகளின் வடிவங்கள்,தேன் சிட்டின் உடல் எந்த நிறத்தில் இருக்கும், வால்குருவி எப்படிச் சத்தமிடும் என்பதையெல்லாம்