சிறுகதை வரலாற்றின் சீர்மிகு முத்திரை

கு. அழகிரிசாமி நூற்றாண்டு நிறைவு சிறப்புக் கட்டுரை

சிறுகதை என்பது வெறும் மகிழ்வூட்டற் சாதனமாக இல்லாது, படித்து முடிப்பவர் சிந்தனையில் ஒரு சிறந்த கருத்தை, உண்மையை, கையிருப்பாக விட்டுச்செல்ல வேண்டும். கருத்து, அழுகுணிச் சித்தர்களின் அவலக் குரலாகவோ அல்லது நம்பிக்கை வறட்சியின் கரகரப்பாகவோ இருக்கக்கூடாது. மாறாக, வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவுவதாக, உண்மையான மனித வாழ்க்கைக்குப் பாதை காட்டும் மணி விளக்கங்களாக இருக்க வேண்டும். இத்தகைய லட்சணங்களைக் கொண்டவைதான் கு.அழகிரிசாமியின் கதைகள் என்பதற்கு மாறான கருத்து கிடையாது.

பாத்திரங்களைக் கையாளும் முறையிலும் சம்பவங்களை விளக்கும் நகைச்சுவைத் திறனிலும் எதார்த்த வாழ்வின் அடித்தளத்தில் காணப்படும் மனிதநேய நிலைகளை எடுத்துக்காட்டும் சிறப்பிலும் இவருக்கு நிகர் இவரே.

1970இல் முதன்முதலில் ‘அன்பளிப்பு’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகதமி விருது பெற்ற தமிழர் இவரே.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கும் கயத்தாருக்கும் இடையே உள்ள சிற்றூரான இடைச்செவலில் 23.09.1923இல் பிறந்த இவருடைய நூற்றாண்டு நிறைவு இன்று. இவரது ஊரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற பெருமைக்கு உரியவர். தனது 13ஆவது வயதிலேயே கம்பராமாயணம், சிலப்பதிகாரம், நளவெண்பா, பாரதியார் பாடல்கள் ஆகியவற்றைப் படிக்க ஆர்வம் கொண்டார்

முதலில் ஆசிரியராகவும் பிறகு சார் பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தராகவும் 35 ரூபாய் ஊதியத்தில் பணி புரிந்தார். அலுவலகத்தில் நாள்தோறும் பத்திரங்கள் பதிவதில் இவருக்கு ஈடுபாடு இல்லாத காரணத்தால், சென்னைக்கு வந்து சேர்ந்தார். 1943இல் ‘உறக்கம் கொள்ளுமா?’ என்ற சிறுகதை வெளிவந்த ஆனந்தபோதினி என்ற பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த இவரை ஆனந்த போதினி, பிரசண்ட விகடன் இதழ் ஆசிரியரான நாரணத்துரைக் கண்ணன், இவரது எழுத்தாற்றலைப் புரிந்துகொண்டு உதவி ஆசிரியர் பதவியை வழங்கினார். பின்பு, தமிழ்மணி அரசியல் வார இதழில் சேர்ந்தார்.

ஒரே ஊர்க்காரரான கி. ராஜநாராயணன் இவருக்கு ஏழு நாளே மூத்தவர். இவரது பால்யத்திலும் இறுதி வரையிலும் நண்பர். இருவரும் பாரம்பரிய இசையில் பிரியம் தொண்டிருந்தனர்.

சக்தி என்ற பத்திரிகையின் ஆசிரியர் தி.ஜ.ரங்கநாதனுக்குப் பிறகு, கு.அழகிரிசாமி சக்தி பத்திரிக்கையின் ஆசிரியராகப் பதவி ஏற்றார். சோவியத் நாடு, பிரசண்ட விகடன், தமிழ் நேசன் (மலேசியா) ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். 1960ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்து, நவசக்தியில் கடமையாற்றினார்.

பத்திரிகை ஆசிரியர் மட்டுமின்றி, மொழிபெயர்ப்பதிலும் சிறந்து விளங்கினார். இவருக்கு மிகவும் பிடித்த ரஷ்ய எழுத்தாளரான மாக்ஸிம் கார்க்கியின் ‘அமெரிக்காவிலே’ என்ற நூலை மொழிபெயர்ப்பு செய்தார். இது இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல் ஆகும். தனது 20 ஆண்டு காலப் பணியில் 9 நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

ஆரம்பக் காலத்தில் இடதுசாரிச் சிந்தனையாளராக விளங்கிய கு.அழகிரிசாமி, சோவியத் நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்ற உலகப் புகழ்பெற்ற நூல், இவரது இஷ்டமான நூலாகும். கடைசியாக இவர் மொழிபெயர்த்த நூல், ‘அறிவியலின் எல்லை’ என்பதாகும். இந்த நூல் சென்னை அமெரிக்க தூதரகத்தின் சார்பாக மொழிபெயர்க்கப்பட்டது.

காந்தி நினைவு அறக்கட்டளை சார்பிலான பதிப்பகத்தின் துணை ஆசிரியராக இருந்தார். காந்தியின் எழுத்துகளைத் தொகுத்தார். ஆரோக்கியத் திறவுகோல், இயற்கை வைத்தியம், ராம ராம நாமம் போன்ற காந்தியின் நூல்களை வெளியிட்டார். தகவல் ஒளிபரப்புத் துறையின் சார்பாக ராஜேந்திர பிரசாத் சொற்பொழிவுகளை மொழிபெயர்த்தார்.

மலேசியா தமிழ் நேசனில் பணியாற்றியபோது 30 நாடகங்களை எழுதியுள்ளார். 1952 முதல் 1957 வரை ஐந்து ஆண்டுகள் மலேசியாவில் தமிழ் நேசன் என்னும் பத்திரிக்கையின் இலக்கிய ஆசிரியராக இருந்து, தனக்கிருந்த புனைக் கதையாக்கத் திறனாலும் நட்பு சுபாவத்தினாலும் சிறுகதையாக்க மரபை வளர்த்தார்.

கடிதம் எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவரது கடிதங்களைத் தொகுத்து கி.ராஜநாராயணன், ‘கு.அழகிரிசாமி கடிதங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.

ஆழ்ந்த தமிழ் இலக்கிய அறிவுள்ள அழகிரிசாமி, கம்பராமாயணத்தின் முதல் ஐந்து காண்டங்களையும் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தினையும் பதிப்பித்துள்ளார். இலக்கியச் சுவை, இலக்கியத்தேன், இலக்கிய அமுதம், இலக்கிய விருந்து என்ற கட்டுரைத் தொகுதிகள் இவரது தமிழ் அறிவையும் ரசனைச் சிறப்பையும் புலப்படுத்தக்கூடியன.

தான் கூற விரும்புவனவற்றைத் தனது கதைகளின் மூலமே கூறுவது இவரது சிறுகதைகளின் சிறப்பு. கதைப் பொருளான சம்பவத்தையும் சம்பவத்தை விவரிக்கும் முறையிலேயேயும் அழகிரிசாமியின் கதையாடலை அறிந்துகொள்ள முடியும். மனிதநேயப் பண்பினையே கொண்டிருப்பது இவரது கதைகளைப் பலரும் விரும்புவதற்கு முக்கியக் காரணமாகும். ஒன்றிற்கொன்று கருத்தாலும் பண்பாலும் மாறுபட்ட இதழ்களான தாமரை, கலைக்கதிர், கல்கி, எழுத்து ஆகியன இவரது கதைகளை வேண்டிப் பெற்றுப் பிரசுரிப்பது வழக்கம்.

மணிக்கொடியின் கடைசிக் கொழுந்துகளில் ஒருவரான கு. அழகிரிசாமியின் கதைகள், தமிழ்ச் சிறுகதையின் வளத்தைக் காட்டுவனாகவே இருக்கின்றன. சிறுகதையின் முக்கியப் பண்பு மனித நிலையைச் சிறப்புறக் காட்டுவது. இந்த அடிப்படையில் கு.அழகிரிசாமியின் சிறுகதைகள், தரத்திலும் வடிவத்திலும் மகத்தான இலக்கியமாகத் திகழ்கின்றன.

  • அக்ரி பரத்வாஜ்


Comment (1)


Rasal

சிறப்பான கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *