சொல்லணு குண்டுகள்

கவிதை

எங்கள் கவிதை வரிகளே
எங்கள் வெடிகுண்டுத் தொழிற்சாலையிலிருந்து
வெளி வருகின்ற அணுகுண்டுக் காவியங்களே

நாங்கள் உங்களை வெளியே வீசும்போது
அன்று யூரோசீமாவில் வீசப்பட்ட
ஐன்ஸ்டீன் உருவாக்கிய
அணுகுண்டுகளைப் போல் அழிவுகள்
உருவாகப்போவதில்லை

அந்த அணுகுண்டு
சுரண்டுவோன் சுரண்டப்படுவோன் என்று
எவரையும் மிச்சம் வைக்காமல்
தன் தீ வாயினுள் வைத்துப்
பொசுக்கி உண்டு ஜீரணித்துவிட்டது

ஆனால், இன்று நீங்களோ
ஏழைகளைச் சுரண்டியதால் தங்கள் வாழ்க்கையை
சொர்க்கமாக மாற்றிக்கொண்டிருக்கும்
சூழ்ச்சிக்காரர்களின் உல்லாச உப்பரிகைகளை
வேரோடு தரைமட்டமாக்கி
இந்நாள் வரையில் சுரண்டப்பட்டு
ஏழ்மைக் குவியல்களில் வாழ்கின்ற
முதுகுத் தண்டுகளுக்குப் புதிய பாதை
சமைக்கப் போகின்றீர்கள்

இந்த சமுதாய ஜீவநதியைத்
தனது நச்சுக் கருத்துக்களால்
சாக்கடை நீராக்கி, சகதிக் குளமாக்கி
ஓட முடியாமல் தேங்கும்
தடைகளைக் களைவதற்கு
எங்கள் உடலிலிருந்து ஒவ்வொரு செல்லையும்
அழித்து உருவாக்கும் எங்கள்
அருமைக் கவிதைகளே

நீங்கள் வெளியே பாய்ந்து வருவது
அந்தச் சாக்கடையில் சங்கமாவதற்கு அல்ல
உங்களுள் இருக்கின்ற சொல்லணுக்களால்
அதிலே இருக்கின்ற கிருமிகளையும்
கிளர்ச்சி செய்து போரிட்டு அழித்து ஒழித்துவிட்டு
புதிய ரத்த ஓட்டத்தை உருவாக்கவே
நீங்கள் புறப்பட்டுச் செல்கின்றீர்கள்

நீங்கள்
வரிசை வரிசையாய்
ஏட்டில் வந்து படியும்போதெல்லாம்
எங்களது கண்களில்
தொழிலாளி வர்க்கம்
வரிசை வரிசையாக வந்து
ஓரணியில் திரண்டு கூக்குரல் இடுகின்ற
காட்சிகள்தான் தென்படுகின்றன

தான் உண்ட உணவை ஜீரணிக்க
தன்னைச் சுற்றிக் கூடு கட்டிக்கொண்டிருக்கும்
கூட்டுப் புழுக்கள் அல்ல நீங்கள்
இந்தச் சமுதாயத்திலுள்ள கொடுங்கோலர்களைக்
கொட்டுவதற்காகப் பறந்து செல்லும்
குளவிப் பூச்சிகள்

இந்தச் சமுதாயத்தில் நீச்சலடிக்க முடியாமல்
தத்தளிக்கும் ஏழை மக்களுக்கு நீங்கள்
கட்டுமரங்களாகவும் கலங்கரை விளக்கமாகவும்
விளங்க வேண்டுமென்றே
எங்கள் சிந்தனைத் தேரோட்டத்திலிருந்து
செதுக்கப்பட்டுப் புறப்படுகின்றீர்கள்

எங்கள் சோதனைக் குழாயிலிருந்து
வெளி வருகின்ற நீங்கள் குழந்தைகள் அல்ல
திராவக ஆவிகள்

உங்களை உருவாக்கும் பிரம்மா
பின்புறம் கையை வைத்து
உங்கள் தலையெழுத்தை எழுதவில்லை
முன்னே வைத்து
தீர்க்க தரிசனப் பார்வையோடு
இரும்புச் சூட்டு எழுத்துக்களால் எழுதுகிறான்

உங்களது கதிரொளியால் இங்கு உருவாகப்போவது
பச்சை நிற வயல் வெளிகளல்ல
செஞ்சாத்து நிறத்தின் செங்குருதி
ஆற்றில் மிதக்கக் போகும்
துப்பாக்கிக் கட்டைகள்

நீங்கள் மேடை ஏறியதும்
உங்களுக்கு சூட்டப்படப் போவது
மலர் மாலைகள் அல்ல
இரும்புச் சங்கிலிகளும்
தூக்கு மரச் சுறுக்கு முடிச்சுமே ஆகும்

உங்களை யாரும் தூக்கி வைத்து
குழந்தைப் பாட்டு பாடப்போவதில்லை
உங்களைத் தூக்கி தூக்கி வீசப் போகிறார்கள்
ஏனென்றால் நீங்கள்
அனைத்தும் வெடிகுண்டுகள்

நீங்கள் ஆடப் போவது
ஊர்வசியின் மோகன அடிகளல்ல
தொழிலாளி வர்க்கத்தின் ருத்ர தாண்டவம்

உங்களிடமிருந்து பனி உருகுவதால் நீங்கள்
வால் நட்சத்திரமாய்த் தெரியப் போவதில்லை
அப்போது உருகப்போவது
தனியுடைமைவாதிகளின் ரத்தக் கொழுப்புகள்

உங்கள் அடிகளின் கீழே நசுங்கப்போகும் மாட மாளிகைகள்
சுரண்டியதால் உருவான குடிசைகளை
விண் முட்டும் கோபுரங்களாகக் காட்டப்போகின்றன

நீங்கள் சுவற்றில் எழுதப்படுகின்ற
தேர்தல் கோஷங்கள் அல்ல
இதயத்தில் கீறப்படுகின்ற வறுமை கீதங்கள்

நீங்கள் சிவப்பு விளக்கு போட்டுக்கொண்டு
வெளியே வந்தாலும்
அங்கே நடக்கப்போவது
பாலியல் வன்கொடுமைகள் அல்ல
அங்கே போடப்போவது
பொதுவுடமைப் பூ மஞ்சமும்
அறிவுடைய அன்பு வாழ்வுமே ஆகும்

நீங்கள் வெளியே வரும்போது
கோழி இறகால் உங்களை நாங்கள்
அடைகாக்கப் போவதில்லை
செங்கற்சூலை போட்டு
சுட்டு எடுத்து அடுக்குகிறோம்

உங்களைக் கொண்டு கட்டப் போகும் மாளிகைக்கு
குருதி நீர்தான் தெளிக்கப்பட்டாலும்
அதன் நிறம் இறுதியில்
வெண்மையாகவே மாறப்போகிறது

நீங்கள்
நான்கு சுவர் அறையிலே
பாப் மியூசிக்கோடு கத்தப் போகும்
காட்டுக் கூச்சல் அல்ல
தெருவின் முனையில்
பசியின் கண்களோடும் கிழிந்த உடைகளோடும்
ஆவலோடு எதிர்பார்க்கும்
ஏழைகளின் காதுகளில் விழப் போகும்
பூபாள எழுச்சி ராகங்கள்

நீங்கள்
இந்தத் தனியுடமைக் கடலைத் தாண்டும்போது
எதிர்ப்படுகின்ற முதலாளித்துவ அரக்கிகளின்
வாயிலே புகுந்து காதிலே வரக்கூடாது
உன் அகன்ற தீ வாயிலே
அவர்களை விழுங்கிவிட்டு
பொதுவுடைமை பூமியிலே காலூன்ற வேண்டும்

செல்லுங்கள்
திசை மாறிச் சென்று சோம்பிக் கிடக்காதீர்கள்
உங்களுக்கு
நாங்கள் ‘போ போ’ என்று கட்டளை இடவில்லை
உங்கள் காதுகளிலே ‘போர் போர்’ என்ற
தாரக மந்திரத்தை உச்சரித்து அனுப்புகிறோம்

உங்களுக்காக
ஏழை மக்கள் கோடி கோடியாகக்
காத்துக் கிடக்கின்றனர்
அவர்களின் கைகளிலேயே
உறுதி மிகுந்த அன்புப் பிணைப்பினை ஏற்படுத்துங்கள்
முதலாளித்துவத்தின் தலையிலே
சதிராட்டம் போடுங்கள்

  • மேகலன்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *