மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி
திரை விமர்சனம்: மது ராஜேந்திரன்
பெயர் அன்விதா ரவாலி ஷெட்டி. வயது 38. வேலை ஸ்டார் ஹோட்டலில் சீப் செஃப். பிடித்தது அம்மா அம்மா மட்டுமே. பிடிக்காதது காதல், உறவு, கல்யாணம். விருப்பம் குழந்தை – குழந்தை மட்டுமே. பிரச்சினை, கல்யாணம் இல்லாது அதை அடைவது. அதை அவள் அடைவதற்கு என்னென்ன செய்தாள், இறுதியில் அடைந்தாளா என்பதுதான், காதல், நகைச்சுவை கலந்தும் உணர்வுப்பூர்வமானதாகவும் திரைக்கதையாக்கி, மகேஷ் பாபு இயக்கி, தமிழ் வசனங்களுடன் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ தெலுங்குத் திரைப்படத்தின் மொத்தக் கதை.
அன்விதாவாக வரும் அனுஷ்கா ஷெட்டியைச் சுற்றியே கதை சுழல்கிறது. காதல், திருமணம், உறவு குறித்து அம்மா(ஜெயசுதா)விடம் விவாதிக்கும்போதும் அம்மா இல்லாத தனிமையை உணரும்போதும் வியாவிடம் (சோனியா தீப்தி) உணவகத்தில் வெள்ளந்தியாகப் பேசும்போதும் மருத்துவரிடம் (ஹர்ஷவர்தன்) ஆலோசிக்கும்போதும் ‘ஸ்பேர்ம் டோனர்’ பற்றி ஆய்வு செய்யும்போதும் சித்துவை (நவீன் பொலிஷெட்டி) முழுதுமாக அறியும் பொருட்டு நெருக்கத்தைத் தொடரும்போதும் அவர்களுக்கான உறவு மேலும் கீழுமாகப் பயணிக்கும் போதும் இறுதியில் சித்து இல்லாததை உணர்ந்து வருந்தும்போதும் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் பல்வேறு பரிமாணங்களில் மின்னுகிறார். அவரது அழகும் உடல்வாகும் கூடுதல் சிறப்பு.






சித்து பொலிஷிட்டியாக, ஸ்டாண்ட் அப் காமெடியனாக, அம்மாவுக்குச் செல்லப் பிள்ளையாக, அன்வித்தாவுடன் காதல் வயப்படும் இளைஞனாக, அவளது நோக்கத்தை அறிந்த நிலையில் ஆடிப்போனவனாக, ஒருகட்டத்தில் அவனை உணர்ந்த அவளைப் புரிந்து உருகுபவனாக அனுஷ்காவுக்கு ஈடு கொடுத்து நடிப்பில் திறமையைக் காட்டி இருக்கிறார், நவீன் பொலிஷெட்டி.
பாசமுள்ள அம்மாக்களாக ஜெயசுதாவும் துளசியும், கண்டிப்பான அதே நேரத்தில் அக்கறை கொண்ட அப்பாவாக முரளி ஷர்மா, அன்விதா குறித்துப் பெருமிதம் கொள்ளும் லண்டன் ஹோட்டலில் தலைவராக நாசர், சித்துவின் நண்பன் ராகுலாக அபிநவ் கோமடம், காவியாவாக சோனியா தீப்தி, டாக்டராக ஹர்ஷர்வர்த்தன் போன்ற துணைப் பாத்திரங்களும் நடிப்பில் அவர்களது பங்களிப்பைச் சிறப்புற வழங்கியுள்ளனர்.



“என் கண்ட்ரோல்ல இருக்கற லைஃப இந்த மாதிரி காதல், கல்யாணம், ரிலேஷன்ஷிப்புன்னு என் கையவிட்டுப் போற நிலைமை எனக்கு வேண்டாம்” (அன்விதா)
“அப்படின்னா கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க எல்லாரும் பிரிஞ்சு போயிடுறாங்களா?” (அம்மா)
“நீ பிரிஞ்சிட்ட இல்ல?” (அன்விதா)
“போகப்போற நம் உசிர, போகாமப் பிடிச்சுக்கறதுக்கு எல்லாருக்கும் ஒரு கை தேவைப்படும். நீ நம்பற துணை உனக்குக் கிடைக்கும்போது நீ கை விட்றாதே” (அம்மா)
“இது விஷயம் இல்லடி, விசேஷம்!” (காவியா)
“அம்மா ஆகணும்னா ‘பிரக்னன்ட்’டானா போதாதா, ஏன் மேரேஜ் ஆகணும்?” (அன்விதா)
“டெஸ்ட் மூலமா டோனரோட ஸ்பேர்ம் குவாலிட்டிய கண்டுபிடிக்கலாம். ஆனா, டெஸ்ட் பண்ணி டோனரோட குவாலிட்டிய கண்டுபிடிக்க முடியாதுமா” (டாக்டர்)
“அவரும் ஸ்டாண்ட் அப் காமெடியனா?” (அன்விதா)
“இல்லங்க, அவருக்கு ஸ்டேபிள் இன்கம் வருது” (சித்து)
“அவங்க எல்லாரும் சக்ஸஸ் பீப்பிள் அதான்” (பனிந்திரா)
“இதே சின்சியாரிட்டிய வேலயில காட்டிருந்தா, இந்நேரம் கல்யாணம் ஆகிக் குழந்தை பொறந்திருக்கும்” (பனிந்திரன்)
“அந்த வேலயாதான் போயிட்டு இருக்கேன்” (சித்து)
“உனக்குச் சம்பந்தப்பட்ட சின்ன விஷயமா இருந்தாலும் சரி, என்னோடதா இருக்கணும்னு ஆசைப்படறேன்…. மேரேஜுக்கு முன்ன டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்துப் போட்றா மாதிரி இருக்கு, அன்விதா” (சித்து)
“இங்கு நடக்கறது ஹோமம் இல்ல, காமம்…. பொறக்கப் போற குழந்தைக்கு உன் ஜாடையே இருக்காது, இவ ஜாடைதான் இருக்கும்” (சித்து)
“வெளியே காரியத்தால வேல நடக்குதுன்னா, இங்க வீரியத்தால வேல நடக்கும்” (டாக்டர் ஹர்ஷவர்தன்)
“நான் அம்மா ஆகறதுக்கும் அனாதையா மிஞ்சிப் போறதுக்கும் இடையில இருக்கேன்….” (அன்விதா)
“நாளைக்கு உனக்கு ஒரு பொண்ணோ பையனோ பொறந்ததுக்கு அப்புறம், ‘எங்க அப்பா யாருன்னு கேட்டா, யாருன்னு தெரியாத ஒரு ‘ஸ்பெர்ம் டோனர்’னு சொல்லாம, அவங்க அம்மாவ லவ் பண்ண ஒருத்தன்னு சொன்னா போதும்” (சித்து)
“எனக்கு நீ வேணும்னு சொன்னியே தவிர, உனக்கு நான் இருக்கேன்னு எப்போவாவது சொன்னியா? நேரா போய் அவ நம்பிக்கைய ஜெயிக்கிறதுக்கு ஃபன் பண்ணு”
இவை இயக்குநரே எழுதியுள்ள வசனங்களில் நினைவை ஈர்க்கும் சில.
அழகான லண்டனையும் ஹைதராபாத்தை அழகாகவும் காட்டி இருப்பதுடன், கலைநயமான ‘ப்ரேம்’களையும் வைத்து, கண்களுக்குக் குளுமை சேர்த்துள்ளார், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா. பாடல்களுக்கு ராதனின் இசை இனிமை. கோபி சுந்தரின் பின்னணி இசை அருமை. படத்தொகுப்பு கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ். குறைவில்லை என்றாலும் சற்று சோர்வு தரும் ஒரே மாதிரியான காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவதைத் தவிர்த்து, நீளத்தை குறைத்திருந்தால், சிறப்பாக இருந்திருக்கும்.
பாலுறவு பற்றி எல்லாம் மேடையிலே கதைக்கும், ஐடி கம்பெனியில் பணிபுரியும் நவீன உலகின் இன்றைய இளைஞனுக்கு, செயற்கை முறையில் கருத்தரிக்கும் மருத்துவமுறை பற்றித் தகவலாகக்கூட அறிந்திருக்கவில்லை என்பதுதான், நெருடலான ஒன்று !
கொடையாளி யார் என்பதைத் தெரிவிப்பது, இந்த இந்தப் பிரச்சனைகள் எழும் என்பதால் சட்டத்திற்குப் புறம்பானது எனில், கொடையாளியைத் தானம் பெறுபவரே அழைத்துவரும்போது, என்னதான் ஒப்பந்தம் செய்துகொண்டாலும், அடையாளம் தெரிவதால் எழும் பிரச்சனைகள் எழாது என்பதும் அது சட்டத்திற்குப் புறம்பானது இல்லை என்பதும் எவ்விதத்தில் நியாயமாகுமோ!
இந்தக் ‘கரு’வைச் சுற்றிப் பின்னப்பட்ட திரைக்கதை புதுமையானது. சொன்ன விதமும் சுவையானது. நிலவும் சமூகச் சூழலில், கொஞ்சம் சறுக்கினாலும் அருவருப்பாக நெளியவைத்துவிடும், கத்தி மேல் நடக்கக்கூடிய சவாலை, கலகலப்பாகவும் நெகிழ்வை ஏற்படுத்தியும் எதிர்கொண்டு, இயக்குநர் மகேஷ் பாபு வெற்றியும் பெற்றுவிடுகிறார்.
மதிப்பெண்: 7/10
- மது ராஜேந்திரன்

Comments (0)